பொருளடக்கம்

சுருளிமலை

அத்தியாயம் 25 · 25 / 26

அத்தியாயம் 25

Chapter 25

மூல ஸ்கேன் 181–186

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

25

காதல் ஒரு வானவில் என்பார்கள். அதன் வர்ண ஜாலங்களைக் கண்டறிய முடியாது என்பார்கள். ஒரு சிலர் காதல் வற்றாத ஜீவ நதி யென்பர். வேறு சிலர், கைபட்டால் உடைந்து விடும் கண்ணாடிதான் காதல் என விளக்கம் கூறுவர். காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் நோய் என்று செல்லமாகத் திட்டினார் திருவள்ளுவர். காதல் ஒரு கடல்; அதற்குக் கரையே கிடையாது என்பவர்களும், காதல் ஒரு அழுக்குக்குட்டை; கால் வைத்தால் சேற்றில் அமிழ்ந்து விடவேண்டும் என்பவர்களும் உலகத்தில் உண்டு.

காதலைப்பற்றித் தெளிவாகச் சொன்னவர்கள் யாருமே யில்லை. காதல் என்பது இன்னதுதான் என்று மிகத் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், முடிவாக "அது ஒரு குழப்பம்" என்று<!-- verified source join: scan 181→182 --> தான் சொல்ல வேண்டும். அந்தக் குழப்பத்திலே சிக்கி அப்போது தான் விடுபட்ட அறவாழிக்கு மேலும் ஒரு பெருங் குழப்பம் ஏற்பட்டு விட்டது.

தன் காதலுக்கு எதிராகக் கரகமாடிக் கண்ணனும் ஆதரவாகத் தீச்சட்டி சிங்காரமும் இருப்பார்கள் என்றுதான் அவன் கடைசியாகக் கணக்குப் போட்டிருந்தான். இப்போது சிங்காரமும் எதிரியாகி விட்டது போல் அவனுக்குத் தோன்றியது.

ஊரார் தீர்ப்பின்படி இருவரில் ஒருவர் காளையை அடக்கி வெற்றி பெறுவார்கள். பொன்மணி அவர்களில் ஒருவனுக்குத் தான் சொந்தமாகி விடுவாள். இனித் தன் நிலைமை என்ன ஆவது? அறவாழியினால் பதில் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

பொன்மணியின் நிலைமையும் நெருக்கடியாகி விட்டது ஆயினும் அவள் மனதில் மூண்ட வேதனையை வெளிக் காட்டிக்கொள்ளாமல் பொறுமையாக இருந்தாள் கற்பூரத்தின் உள்ளமோ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. கடைசியில் கண்ணன் தன்னை ஏமாற்றி விட்டானே யென்று ஏங்கினாள்.

வீட்டுக்குள்ளேயே அவளுக்கு இரண்டு மூன்றுதடவை ஆவேசம்வந்து தானாகவே அடங்கிவிட்டது. வெளியில் கிளம்பவே அவளுக்கு வெட்கம்! அண்ணன் சிங்காரமும் வீட்டுக்கு வருவதில்லை. அவன் வந்தாலும் அவன் முகத்தில் விழிப்பதற்கு அவளால்முடியாது. அழுது அழுது முகமெல்லாம் வீங்கிவிட்டது.

இப்பொழுது அவளுடைய பிரார்த்தனை யெல்லாம் காளையை அடக்குவதில் சிங்காரம் வெற்றிபெறவேண்டும் என்பதுதான். அவன் வெற்றிபெற்றால் கண்ணன் பொன்மணியை இழந்து விடுவான். இறுதியில் அவன் தன்னை நாடித்தான் ஓடிவர வேண்டும். அப்போது அவனுக்குத் தகுந்த புத்திகள் கற்பித்துத் தன் அடிமையாக ஆக்கிக் கொள்ளலாம்.

இப்படி ஒரு ஆசை அவள் உள்ளத்தில் அலைமோதிக் கொண்டிருந்த காரணத்தால்தான் அவளால் உயிரோடிருக்க முடிந்தது. சுருளிமலை, தன் நண்பன் சிவாவுக்கு மிகுந்த சிரமப்பட்டு சத்துள்ள ஆகாரங்களை யெல்லாம் கொடுத்து வந்தான்.

காளையை இன்னும் வலுவுள்ளதாக ஆக்குவதற்கு என்னென்ன செய்யமுடியுமோ எல்லாம் செய்தான். சிங்காரமும், கண்ணனும் காளையை எதிர்ப்பதற்குத் தங்கள் உடலைத் தயார் படுத்திக் கொண்டிருந்தனர். இதற்குள் பொன்னையாவின் பதினாறாம் நாள் நினைவு விழாவும் வந்துவிட்டது. பூஞ்சோலை, அந்த நாளை சிக்கனமாகவே செய்துமுடிக்க வேண்டியதாயிற்று.

கையிலிருந்த பொருளாதாரத்திற்குத் தக்கவாறு கணவனுக்குச் செய்யவேண்டிய சடங்குகளை அவள் நடத்திவைத்தாள். பஞ்சாயத்தார் பரமசிவம் ஊரிலுள்ள முக்கியமானவர்களை மட்டும் கூட்டிக்கொண்டு பூஞ்சோலையைச் சந்தித்துப் பேசப் புறப்பட்டார். விதவைக் கோலமும் விழியிலே நீரும் கொண்ட பூஞ்சோலை, ஊர்ப் பிரமுகர்களின் வருகைக்கான காரணத்தை முதலில் புரிந்துகொள்ள முடியவில்லை. அவளிடம் சிங்காரம் கண்ணன் இருவரின் மனோ நிலை விளக்கப்பட்டது.

"இருவருமே பொன்மணியைத் திருமணம் செய்து கொள்ளப் போட்டி போடுகிறார்கள். இதை இப்படியே விட்டுக் கொண்டே போனால் திடீரெனப் பொன்மணியின் உயிருக்கோ, அல்லது கற்புக்கோ கூட ஆபத்து ஏற்படலாம். அதனால்தான் ஊரார் எல்லாம்கூடி சுருளிமலை சொன்ன நிபந்தனையின்படி இருவருக்கும் காளையடக்கும் போட்டியை உண்டாக்கித் தந்திருக்கிறோம்" என்று பஞ்சாயத்தார் பூஞ்சோலையிடம் விபரம் கூறினார். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது பொன்மணி குறுக்கே ஓடிவந்து தனக்கு யாரையும் திருமணம் செய்து கொள்ளவே இஷ்டம் இல்லையென்றும் தனக்கு இப்போது திருமணமே தேவையில்லை என்று கூச்சல் போடத்துவங்கினாள்.

அவள் புலம்பல் எதுவும் ஊரார் உபதேசத்தின் முன்னே எடுபடவில்லை. இறுதியாக ஊராரை எதிர்க்க பூஞ்சோலையும் இஷ்டப்படாமல் அவர்கள் முடிவின்படியே விட்டு விட்டாள். அங்கேயே போட்டிக்கு நாள் குறிப்பிடப்பட்டது. அந்த மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று போட்டிக்குத் தேதி தீர்மானித்தார்கள்.

இந்தச் செய்தி ஊரெங்கும் பரவியது. பக்கத்து கிராமங்களுக்கும் எட்டியது. எங்கும் ஒரே பரபரப்பு!

"என்னடா இது; பழையகாலத்திலே கேள்விப்பட்டிருக்கிறோம்; யானையை அடக்கினான்—குதிரையை அடக்கினான்—பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டான் என்று! இப்போது கண் எதிரேயே நடக்கப் போகிறதே!"—எனப்பேசி வியப்பிலாழ்ந்தார்கள் அனைவரும். அமைதியின்றித் தடுமாறிக் கொண்டிருந்த அறவாழியின் முன்னே சிங்காரம் வந்து நின்றான்.

"என்ன அறவாழி! நான் எதிர்பார்க்கும் நேரம் மிக சீக்கிரமே வரப்போகிறது!" என்றான்.

"ஏது? போட்டி நாள்தானே?" என்றான் அறவாழி.

"போட்டி மட்டுமல்ல! போட்டியிலே கண்ணன் தோற்பான். தோற்றதும் அவனுக்குக் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதையிலே ஊர்வலம் விடுவேன். என் தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விடுவேன்!"

"வாக்குறுதியை நிறைவேற்றுவது மட்டுமா? பொன்மணியுமல்லவா கிடைக்கப் போகிறாள்!"—அறவாழி, தன் வேதனையை மறைத்துக் கொண்டு பேசினான்.

"என் தந்தை எனக்கு ஏன் இப்படிக் கட்டளையிட்டார் என்பதை உனக்குச் சொல்லவேண்டுமல்லவா? அதற்காகவே இங்கு வந்தேன்!" என்று பல்லைக் கடித்துக்கொண்டு கூறினான் சிங்காரம். அவ்வளவு ஆத்திரம் அவனுக்கு அந்தக் கண்ணன் குடும்பத்தின்மீது!

"சொல்லுகிறேன் கேள்!" என்று அவன் மடமட வென்று பேச ஆரம்பித்தான்.

அறவாழிக்கு சிங்காரத்தின் கதையைக் கேட்க நேரமும் இல்லை; நினைப்பும் இல்லை. "இப்போது எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கிறது" என்று சொல்லி அவனிடமிருந்து மெதுவாக நழுவிவிட்டான்.

சிங்காரத்திட மிருந்து விடுபட்ட அறவாழி, எதிரே சுருளிமலையைச் சந்திக்க வேண்டியதாயிற்று.

சுருளிமலையும் காளைப் போட்டியைப் பற்றியே அவனிடம் பேச ஆரம்பித்தான். அறவாழிக்கு அதைக் காது கொடுத்துக் கேட்க மனமில்லை. போட்டியில் தன் காளையின் உயிருக்கு எந்த விதமான ஆபத்தும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பது சுருளிமலைக்குப் பெருங் கவலை. ஏன் திடீரென்று ஆத்திரத்தில் இப்படியொரு போட்டியைப்பற்றிச் சொன்னோம் என்று அவன் தனக்குள்ளாகவே மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தான். தானும் கோயில் காளை சிவாவும் எப்படி சிநேகிதமானோம் என்பதை அறவாழியிடம் கூறவே அவன் வந்தான்.

அறவாழி அதை லட்சியம் செய்யாமல் அவனிடமிருந்து பிரிந்து சென்று விட்டான். அறவாழி, சிறிதும் சஞ்சலமின்றி நேரே பொன்மணி வீட்டுக்கே சென்றான். அங்கே பூஞ்சோலை மட்டுமே இருந்தாள். அவளிடம் பேசியதிலிருந்து பொன்மணி சந்தைக்குப் போயிருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டான். தந்தை இறந்த பிறகு பொன்மணி அவனை சந்திக்கவே யில்லை.

சிங்காரம்—கண்ணன் தகராறுகளையும் காளைமாட்டுப் போட்டிச் செய்திகளையும் கேள்விப்பட்டு அறவாழி எவ்வளவு மனமுடைந்திருக்கிறாரோ; எப்படி அவரை சந்திப்பது என்று அவள் மனக்கிலேசம் கொண்டிருந்தாள். அதேபோல் எண்ணமிட்டிருந்த அறவாழியும் அவளைச் சந்திக்க விரும்பாமல்தான் இருந்தான்.

போட்டி நாள் நெருங்க நெருங்க அவனுக்குப் பொன்மணியைப் பார்த்துவிட வேண்டும் போலிருந்தது. சந்தை கூடுமிடத்தை நோக்கிப் புறப்பட்டான். சந்தை முடிந்து மக்கள் வழியில் திரும்பிக் கொண்டிருந்தார்கள். அந்தி மயங்கும் வேளை... அறவாழி பொன்மணியின் வருகையை எதிர்பார்த்தவாறு போய்க்கொண்டே யிருந்தான். அவளும் பானைகளை விற்று விட்டு வெறுங் கூடை யொன்றை மட்டும் தூக்கிக் கொண்டு எதிரே வந்தாள். இருவரும் சந்தித்தனர். ஒருவரோடொருவர் பேசாமல் நின்றனர். இருவர் கண்களிலும் நீர் வீழ்ச்சியெனக் கண்ணீர் கொட்டியது.

பொன்மணி எதுவும் பேசாமல் வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். அறவாழியும் அவளோடு வந்துகொண்டே யிருந்தான். ஊர்க் கோடியில் உள்ள ஒரு பாழுங் கிணற்றினருகே வந்ததும் பொன்மணி நின்றாள். அவனும் நின்றான். அவள் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறு அவனையே பார்த்தாள். அதுவரையில் பேசாமல் வந்த அவள் அவனிடம் இரண்டொரு வார்த்தைகள் கூறினாள்.

"எதுவும் முழுகிப் போய் விடவில்லை...உங்கள் பொன்மணி உங்களைத் தவிர வேறு யாருக்கும் சொந்தமில்லை. இந்தப் பேச்சு தவறுமேயானால் என்னை எங்கும் தேடவேண்டாம்; இந்தக் கிணற்றுக்குள்ளே தான் கிடப்பேன்!" என்று கூறிவிட்டு அவன் பதில் சொல்வதைக் கேட்பதற்கு ஒரு விநாடிகூட நிற்காமல் மிக வேகமாக அதைவிட்டு அகன்றாள்.

அறவாழி, அவள் போவதையே பார்த்துக்கொண்டு அப்படியே நின்றான். அவன் நிலைமை அவனுக்கே வேடிக்கையாக இருந்தது. அசைவற்று நின்று கொண்டிருந்த அவன் முதுகில் யாரோ ஓங்கித் தட்டவே திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். பஞ்சாயத்தாரின் மகன் பைத்தியக்கார சிரஞ்சீவி இளித்துக் கொண்டே அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டான்.

"ஓ...உங்க ரெண்டு பேருக்கும் இப்படி நடக்குதா விஷயம்? இப்பவே போயி எங்கப்பா கிட்ட சொல்றேன் பாரு!" என்று கத்தினான்.

அறவாழிக்கு மேலும் வேதனை! பைத்தியம் அந்த இடத்தை விட்டு ஒரே ஓட்டமாக ஓட ஆரம்பித்தது!

கலைஞர் மு. கருணாநிதி · சுருளிமலை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்