அத்தியாயம் 24 · 24 / 26
அத்தியாயம் 24
Chapter 24
மூல ஸ்கேன் 174–181
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
24
உடம்பிலே உயிர் ஒட்டிக்கொண்டிருக்கும் வரையில்தான் மனிதனுக்குக் கவலைகள் — ஆசைகள் — ஆட்ட பாட்டங்கள் எல்லாமே! தூங்குகையில் வாங்குகிற மூச்சு சுழிமாறிப் போனாலும் போச்சு என்று பெரியவர்கள் சும்மாவா பாடினார்கள்? பெண்டுபிள்ளை நட்புசுற்றம் எதுதான் மனிதனுக்குப் பின்னால் வருகிறது? இருக்கிறவரையில் எல்லா சுகமும் உடல் சாய்ந்து விட்டால் பிறகு சாம்பல் கூட மிச்சப்படுவதில்லை. உயிர் இருக்கும் வரையில் பிறருக்கு வீட்டுத் திண்ணையில்கூட இடம் கொடுக்க மனிதன் மறுக்கிறான். செத்துவிட்டாலே, நொறுங்கிப்போன தன் எலும்புச் சாம்பலின் மீது ஆயிரம் பிணங்களை அடுக்கடுக்காகப் படுக்க வைத்தாலும் அவன் மறுப்பதில்லை.
அடடா; உயிர் உள்ளவரையில் என்னென்ன போட்டி—எவ்வளவு வம்பு—எத்தனை திமிர்! பிணமாகிவிட்டால்
எறும்புகூட அவன் கண்களைப் பிடுங்கித் தின்றுவிடுகிறது. இருதயக் கூட்டில் புழுமேய்கிறது. யார் யாரை எப்படி அழிக்கலாம் என்று திட்டம் போடுகிறவர்கள் கொஞ்சம் அமைதியாக உட்கார்ந்து தங்களுக்கும் சாவுவரும் என்பதை ஆழ்ந்து சிந்தித்தால் உலகத்தில் கலகமேயிருக்காது எல்லோரும் சந்தோஷமாகவே இருப்பார்கள் ஆனால் மனிதன் அதை நினைப்பதே யில்லையே! யார்வீட்டு உழைப்பிலாவது வாழவேண்டும்—யார் கொட்டுகிற வியர்வையிலாவது உல்லாசம் பெறவேண்டும்—யார் சிந்தும் இரத்தத்திலாவது வாழ்க்கைத் தோணியை மிதக்க விடவேண்டும்—என்றல்லவா திட்டம்போட்டுத் திரிகிறான்! காற்றடைத்த பைபோன்ற இந்த சரீரம் ஒருநாள் படீரென்று வெடித்துப் பஸ்பமாகிவிடும் என்பதை என்றைக்காவது தானே அவன் நினைத்து உடனே மறந்துவிடுகிறான்.
"அய்யோ—யார் யார் மனம் நோகப் பேசிவிட்டோம்—எவர் எவர் குடியையெல்லாம் கெடுத்து விட்டோம்—நல்லவனைப் போல வெளிவேஷம் போட்டு நாம் குட்டிச் சுவராக்கிய குடும்பங்கள் எத்தனை!.. இந்தக் கணக்குகளெல்லாம் மரணப்படுக்கை கிடக்கும் மனிதன் சரியாகப்போடும் மனக் கணக்குகளாகி விட்டனவே தவிர, உயிரோடிருப்பவனின் உள்ளத்துப் போராட்டமாயிருப்பதில்லையே!"
—சாவு வீடுகளில் வாழ்க்கையில் அலுத்து சலித்த பெரியவர்கள் துக்கம் விசாரித்துவிட்டு இதுபோல தான் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வார்கள்.
பொன்னையாவின் மரணச்செய்தி கேட்டுக் கூடியவர்களும் இத்தகைய தத்துவங்களைப் பேசிடத்தவறவில்லை. பொதுவாக வாழ்க்கைத் தத்துவ ஆராய்ச்சி பெரும்பாலும் சாவு வீடுகளில்தான் மிகத்தீவிரமாக நடைபெறும். துக்கம் விசாரிக்க வந்த ஒவ்வொரு எதிர்காலப் பிணமும், வாழ்வின் நிலையாமை—வாழ்வில் இனிமேலாவது கடைப்பிடிக்கவேண்டிய முறைகள்—எல்லாவற்றையும்பற்றி சிந்திக்கவோ அல்லது பேசிடவோ தவறுவதில்லை. ஆனால் இடுகாட்டிலிருந்து திரும்பியதும் அனைத்துமே மறந்துபோய் விடுகின்றன உயிர் விடும்போது தன் தவறு<!-- verified source join: scan 175→176 -->களுக்காக வருந்திக் கண்ணீர்விட்டவன் கூட, தற்செயலாக இடுகாட்டில் உயிர் பெற்றுத் திரும்பி வீட்டுக்கு வந்துவிட்டால் கூட, சாகும்போது நினைத்தவற்றை யெல்லாம் நிச்சயம் மறந்தே விடுவான் அதற்காக உலக வழக்கமாகிவிட்ட சாவு வீட்டுப் பேச்சு நின்று விடுகிறதா? இல்லவே இல்லை.
பொன்னையாவின் உடலைத் தழுவிக்கொண்டு பூஞ்சோலை கதறினாள்.
பொட்டும் மஞ்சளும் பூவும் தாலியும் போய் விட்டதேயென்று தான் கணவனையிழந்த பெண்கள் கதறுவார்கள். "அவைகளை யெல்லாம் இழந்துவிடு! உன் கணவனை தருகிறேன்" என்று யாராவது சொன்னால் அப்போது மஞ்சளையும் தாலியையுமா பிடித்துக் கொண்டிருப்பார்கள்? மஞ்சள் குங்குமம் போனாலும் பரவாயில்லை, மணாளன் உயிர் பெற்றால் போதும் என்றுதான் கூறுவார்கள்.
பூஞ்சோலைக்குத் தன் கணவனின் உயிர் மீண்டும் வந்து விடாதா என்ற ஆவலே அதிகமாக இருந்தது. உடலைக் குளிப்பாட்டிப் பல்லக்கிலே வைக்கும் வரையில் அவள் அப்படித்தான் எதிர்பார்த்தாள்.
பொன்மணி தந்தையின் கால்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, "அய்யோ அப்பா! இனி எனக்கு யாரப்பா துணையிருக்கிறார்கள்? எங்களை யெல்லாம் அனாதைகளாய் விட்டு விட்டு இப்படி அசையாமல் படுத்திருக்கிறீர்களே அப்பா!" எனப் புலம்பினாள்.
சுருளிமலையின் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது. அப்படியே ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தான்.
தீச்சட்டி சிங்காரம் ஆகவேண்டிய காரியங்களை அக்கறையோடு கவனித்தான்.
கற்பூரம் பெண்கள் பகுதியில் தலைமை வகித்துக் காரியங்களை செய்தாள்.
கண்ணனும் சிங்காரத்துடன் போட்டி போட்டுக்கொண்டு அங்குமிங்கும் ஓடினான்.
சவத்தின் நெற்றியிலே சிங்காரம் விபூதியைப் பூசுவான்; உடனே கண்ணன் அதன்மீது சந்தனப் பொட்டை வைப்பான்!
சடலத்தைப் பல்லக்கில் கிடத்த தலைப்பக்கம் பிடிப்பான் சிங்காரம்; கால் பக்கம் தாங்கிக் கொள்வான் கண்ணன்!
சுருளிமலையைக் குளிப்பாட்டி, அவனது கையிலே கொள்ளிச் சட்டியைக் கொடுத்து, அதைத் தன் கையிலே வாங்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தான் சிங்காரம். கண்ணன் பல்லக்கின் ஒரு பகுதிக்குத் தோள் கொடுத்துத் தூக்கிக்கொண்டான். இவைகளை யெல்லாம் அறவாழி கவனித்தவாறு, பிரேத ஊர்வலத்தின் பின்னே மெதுவாக நடந்து சென்றான்.
மனைவி மக்களை, மாடு மனைகளைப் பிரிந்து பொன்னையா, திரும்பிவராத பயணம் புறப்பட்டு விட்டார் வீட்டை விட்டுப் புறப்பட்டு விட்டால் பிறகென்ன? ஓட்டமும் நடையுமாக அனைவரும் இடுகாட்டை அடைந்தனர்.
"நமக்கும் இதுதான் கதி!" எனச்சொல்லிப் பொன்னையாவின் மேனியைச் சிதையில் வைத்து நெருப்பு மூட்டினார்கள்.
"விளக்கின் மேலேயுள்ள கண்ணாடியைத் தொட மனிதன் பயப்படுகிறான் சுட்டுவிடுமென்று! இதோ, நெருப்பிலேயே இப்போது குளிக்கிறான்!" என்று முணு முணுத்தவாறு எல்லோரும் வாய்க்காலில் குளித்துக் கரையேறினார்கள். அதற்குள் மயானத்துத் தொழிலாளர்களுக்குத் தரவேண்டிய ஊதியம், படி, முதலிய கணக்கு வழக்குகளைத் தீர்ப்பதில் சிங்காரமும் கண்ணனும் ஒருவரை மிஞ்சி ஒருவர் தீவிரம் காட்டினர்.
ஊருக்குள் திரும்பும் வழியில் பொன்னையா குடும்பத்தின் எதிர்காலம் பற்றிய பேச்சு பலமாக எழுந்தது.
"அந்தப் பெண்ணை யார் தலையிலாவது கட்டியிருந்தால் நல்லா யிருந்திருக்கும்!"
"செத்ததுதான் செத்தான்; அந்தப் பெண்ணுக்கு ஒரு கல்யாணத்தை முடித்துவிட்டுச் சாகக்கூடாதா மனுஷன்?"
"கல்யாணம் பண்ணிவைக்கிறதுன்னா சாமான்யமா இருக்குதா? பணம் காசுவேண்டாமா? நல்ல மாப்பிள்ளை கிடைக்கவேண்டாமா?"
—இப்படி ஆரம்பமான பேச்சினூடே கரகமாடிக் கண்ணனும் கலந்துகொண்டான்.
"பொன்னையா மாமா மேலே ஒரு குற்றமும் இல்லை. குற்றமெல்லாம் என் மேலே தான்!"
—கண்ணனின் பேச்சு கேட்டு எல்லோரும் வியப்படைந்தனர்.
"உன் மேல் என்ன குற்றம்?" — ஒரு பெரியார் கேட்டார்.
"பொன்மணியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று என்னைப் படாதபாடு படுத்தினார். நான் தான் நாளைத் தள்ளிப்போட்டுக் கொண்டே காலங் கடத்தி விட்டேன்!"
கண்ணன் மிக அலட்சியமான முகபாவத்தோடு சர்வ சாதாரணமாக இதைச் சொல்லியவாறு நடந்தான்.
"கற்பூரத்தைக் கட்டிக்கப் போறேன்னு ஊரெல்லாம் ரகளைப்படுது! நீ எங்க பொன்மணியைக் கல்யாணம் பண்ணிக்கிறது?"
—இன்னொருவர் சந்தேகம் கிளப்பினார்.
"கற்பூரமாவது சூடனாவது? அந்தப் பயல் வீட்டில் யார் பெண் கட்டுவார்கள்? அவள் என்னமோ என் காலில் வந்து விழுகிறாள். அவளை நான் ஏற்றுக்கொள்ள வில்லையென்று தானே சில பேருக்கு ஆத்திரம் மீசை துடிக்குது!" என்றவாறு கண்ணன் சிங்காரத்தை ஜாடையாக நோக்கினான்.
சிங்காரமும் கனல் தெறிக்கக் கண்ணனை உற்றுப் பார்த்து விட்டு வேறு பக்கம் திரும்பிக் கொண்டான்.
"கண்ணனுக்கும் பொன்மணிக்கும் பொருத்தம்தான். கடவுள் கிருபையினாலே சீக்கிரம் கல்யாணம் முடிஞ்சா பொன்னையாவோட ஆத்மாவும் சாந்தி அடையும்!" — ஒரு கிழவனார் கூனிக்கூனி நடந்தவாறு பொக்கை வாய் திறந்து இந்தப் பொன்மொழிகளைக் கொட்டினார்.
"சரிஞான்; சும்மா வாங்க சாவு வீட்டிலே என்ன கல்யாணப் பேச்சு?" — தீச்சட்டி சிங்காரம் உரக்கக் கத்தினான் பயங்கரமான குரலில்.
சிறிது நேரம் கூட்டத்தில் பேச்சில்லை எல்லோரும் அமைதியாக நடந்தார்கள். கண்ணன் பேச ஆரம்பித்தான். அவன் குரலில் இறுமாப்பும் தைரியமும் இருந்தது.
"கல்யாணப் பேச்சு பேசினால் யாருக்கென்ன நஷ்டம்? நமக்குக் கிடைக்கவில்லையே என்று நாக்கைத் தட்டிக் கொண்டிருப்பவர்களுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும்—பாவம்!" என்று நகைத்தான்.
"எனக்கு எதற்கு கல்யாணம்? நான் நினைத்தால் ஆயிரம் பெண் வரும்!" — சிங்காரம் கத்தினான்.
"வரும்! வரும்! வந்து தூக்கு மாட்டிக் கொள்ளும்!"
"அவனை மரியாதையாகப் பேசச் சொல்லுங்கள்!"
"கல்யாணம் வேண்டாம் என்கிறவன் என் கல்யாணத்தில் எதற்காகத் தலையிட வேண்டும்?"
"பொன்மணிக்காக வாதாட எனக்கு உரிமை யுண்டு!"
"வருங்காலக் கணவனாகிய எனக்கு இல்லாத உரிமை இவனுக்கு எப்படி வந்தது?"
"கணவன்! உனக்கு மாலையிடத்தான் துடிக்கிறாளோ?"
"பிறகென்ன—உனக்காக மாலையிடப் போகிறாள்?"
இருவரும் ஒருவரை யொருவர் கடித்து விழுங்கி விடுவதைப் போல எதிர் எதிரே நெருங்கி விட்டனர். யாரும் அவர்களை விலக்கிடத் துணியவில்லை.
அறவாழி, தீச்சட்டி சிங்காரத்தின் கையைப் பிடித்து தனியே அழைத்தான். அதற்குள், கண்ணன் பெருங் கூச்சலிட்டு அறவாழியின் கன்னத்தில் "பளார், பளார்" என அறைந்து விட்டான். அவ்வளவுத்தான்; சிங்காரம் கண்ணன் மீது பாய்ந்தான். இருவரும் தெருவில் கட்டிப் புரண்டார்கள்.
பொன்னையாவின் சாவுகூட பறந்து போய்விட்டது அவர்களை சமாதானப்படுத்துவதுதான் ஊராருக்குப் பெரிய தலை வேதனையாகிவிட்டது.
நெடுநேரம் ஒருவருக்கொருவர் சளைக்காமல் சண்டையிட்டு, இறுதியில் இருவரும் எழுந்து நின்று புலியைப் போல் உறுமினார்கள். "உன் உயிரை எடுக்கிறேன் பார்!" என்று இருவரும் ஏக காலத்தில் கத்தினார்கள்.
பஞ்சாயத்தார் பரமசிவத்துக்கு செய்தி எட்டி அவர் அங்கே ஓடோடி வந்தார் நடந்ததை விசாரித்தார்.
"பொன்மணி என் மனைவி" என்று முழங்கினான் கண்ணன்.
அறவாழிக்கு இருதயம் கனத்தது. தன்னைத் தானே அமைதிப்படுத்திக் கொண்டான். தனக்கும் தன் காதலி பொன்மணிக்கும் அந்த ஊரில் ஒரே ஒரு துணைசிங்காரம் தான் என்பதை அவன் உணர்ந்திருந்தான்.
"பொன்மணி உன் மனைவியல்ல!" — சிங்காரம் ஆங்காரமாகப் பதில் சொன்னான்.
"யார் எதிர்த்தாலும் சரி—அவள் எனக்குத்தான் சொந்தம்!"—கண்ணன் கர்ச்சித்தான்.
"கனவு காணாதே! அவள் எனக்குத்தான் சொந்தம்!"—என்று சிங்காரம் ஆவேசக்குரல் எழுப்பினான்.
சிங்காரத்தின் குரலைக் கேட்ட அறவாழிக்குத் தலையில் இடி விழுந்தது போலிருந்தது. அப்படியே மரம்போல் நின்று விட்டான். தந்தையை இழந்த துக்கத்தில் வந்துகொண்டிருந்த சுருளிமலை அவர்களுக்கு எதிரே வந்து நின்றான். அவன் கண்கள் சிவந்திருந்தன.
"என் அக்காளைப் பற்றி தெருவிலே பேசி சண்டைபோட உங்களுக்கு என்ன யோக்யதை இருக்கிறது? எங்கள் வீட்டில் பெண்கட்ட வேண்டுமானால் ஒரு நிபந்தனை யிருக்கிறது!" என்றான் நிதானமாக!<!-- verified source join: scan 180→181 --> "என்ன நிபந்தனை?"—பஞ்சாயத்தார் கேட்டார்.
"கோயில் காளை சிவாவை யார் அடக்குகிறார்களோ அவனுக்குத்தான் என் அக்கா மாலையிடுவாள்!"
"ப்பூ! இதுவா பிரமாதம்? நான் அடக்குகிறேன் அந்தக் காளையை! எனக்கேதான் பொன்மணி!"—கண்ணன் வெற்றிச் சிரிப்பு சிரித்தான்.
"சுருளிமலை! உன் நிபந்தனைக்கு நான் கட்டுப்படுகிறேன். ஆனால் ஒன்று; பஞ்சாயத்தார் அவர்களே! காளையை அடக்குகிறவனுக்குப் பொன்மணி! அடக்காமல் தோற்று விட்டால் அவன் கரும்புள்ளி செம்புள்ளி குத்திக்கொண்டு கழுதைமீது ஊர்வலம் வரவேண்டும்!" என்று கண்டிப்பாகக் கூறினான் சிங்காரம்.
"ஓ, நான் தயார்!" என்றான் கண்ணன்.
அறவாழிக்கு இருதயம் நின்றுவிடும் போலிருந்தது. யார் கண்ணிலும் படாமல் வேகமாகப் பள்ளிக்கூடம் நோக்கிப் புறப்பட்டான்.
கலைஞர் மு. கருணாநிதி · சுருளிமலை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்