அத்தியாயம் 23 · 23 / 26
அத்தியாயம் 23
Chapter 23
மூல ஸ்கேன் 168–174
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
23
பொன்மணியை சந்தைக்கு அனுப்பிவிட்டுப் பூஞ்சோலையம்மாள் கணவனைக் கவலையோடு கவனிக்க ஆரம்பித்தாள். இரண்டு நாட்களாகவே இருமலும் இழுப்பும் அதிகமாகிவிட்டது பொன்னையாவுக்கு. இரவுபோன உயிர் திரும்பிவந்தது என்று கூறுமளவுக்கு இருமல் அதிகமாகி, உடனடியாக மருத்துவர் வரவழைக்கப்பட்டு சிகிச்சைகள் செய்தே பிறகே பூஞ்சோலைக்கு சிறிது துயரம் குறைந்தது. காலையில் எப்போதும்போல் கலகலப்பாகவே பேசிக்கொண்டிருந்தார் பொன்னையா. பொன்மணி, சந்தையிலே கிடைக்கிற பணத்தைக் கொண்டு வைத்தியர் கூறிய மருந்துப் பொருள்களை வாங்கி வருவாள் என்று இருவருமே நிம்மதியாக இருந்தனர்.
"சந்தைக்குப் போய்விட்டு வருகிறேனப்பா!" என்று பொன்மணி விடை பெற்றுக் கொண்டபோதுகூட அவர் தெம்பாகத்தான் காணப்பட்டார்.
அவள் வீட்டை விட்டுப் புறப்பட்டு சிறிது நேரத்திற்கெல்லாம் வானம் கருத்திட ஆரம்பித்தது பொன்னையாவின் முகமும் கருத்திடத் தொடங்கியது. கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து கொண்டு பூஞ்சோலையிடம் பேசிக் கொண்டிருந்த பொன்னையா இடையிடையே நெஞ்சில் கை வைத்துப் பார்த்துக் கொண்டார்.
பூஞ்சோலை பயத்தோடு "என்ன நெஞ்சிலே அடிக்கடி கைவச்சுப் பாக்கிறீங்க?" என்று கேட்டாள்.
"நெஞ்சாவது ஒண்ணாவது—அது எங்கே இருக்கு? அதைத் தான் கல்யாணம் ஆனவுடனே உனக்கிட்ட கொடுத்துட்டேனே!" என்று சிரித்துக்கொண்டே பதில் சொன்னார் பொன்னையா.
தன் கணவன் அடிக்கடி இதுபோலக் குறும்பாகப் பேசுவார் என்றாலும் வயதான பிறகு இப்படி யெல்லாம் பேசுவதில்லை. இப்போது திடீரென்று இளமை திரும்பி விட்டதே யென்று வியப்பும் மகிழ்ச்சியுமடைந்தாள் பூஞ்சோலை.
அவளது மனத் திரையில் இளமைக் கால நினைவுகள் படக் காட்சிபோல ஓடிக்கொண்டிருந்தன. மாப்பிள்ளை வீட்டார் தன்னைப் பெண் பார்க்க வந்ததும்— அவர்களோடு வந்திருந்த மணமகன் பொன்னையா, கொல்லைப் புறத்து சுவர் மறைவில் ஒளிந்து கொண்டு தன்னைப் பார்ப்பதற்கு முயற்சித்ததும்—அதைத்தான் பார்த்து துள்ளிக் குதித்து வீட்டுக்குள் நுழைந்து கொண்டதும்— மண மன்றத்தில் இருவரும் எதிர்காலத்தை எண்ணியவாறு ஒருவர் முகத்தை ஒருவர் யாரும் பார்க்காத நேரத்தில் பார்த்துக்கொண்டு புன்னகை புரிந்ததும்—முதல் நாள் பள்ளியறையில் யார் முதலில் பேசுவது என்று திகைத்துத் தடுமாறியதும்—போகப் போக இருவரும் ஓய்வு ஒழிச்சலின்றிப் பேசிப் பேசி சரியான வாயாடிகள் என்று பெயரெடுத்ததும்—சில வருடங்களில் இருவரும் பெற்றோராகிவிடவே குடும்பப் பொறுப்பு முழுதும் தலையில் வந்து விழுந்ததும்—அந்தப்<!-- verified source join: scan 169→170 --> பொறுப்பினால் இயல்பாகவே அவர்களிடம் அடக்கமான பண்பு குடி கொண்டதும் — இப்படிப் படிப்படியாக பல மாற்றங்கள் பூஞ்சோலையின் நினைவில் புரண்டு அவள் விழிகளில் நீர்வீழ்ச்சிகளாக்கின. அதைக் காட்டிக் கொள்ளாமல் கணவனின் மார்பகத்தைத் தடவிக் கொடுத்தாள்.
பொன்னையா, தன் அன்பு மனையாளை வைத்த விழி வாங்காமல் கவனித்தார்.
"என்ன அப்படிப் பார்க்கிறீங்க? ஏன்?" என்று நடுக்கத்தோடு அவர் உடலை அசைத்தாள் அவள்.
"ஒன்றுமில்லை! உன்னைப் பார்த்துக்கொண்டே யிருக்கணும் போலிருக்கு!"—பொன்னையா தழு தழுத்த குரலில் பேசினார் அவர் கண்களும் கலங்கியிருந்தன.
"பூஞ்சோலை! எனக்கு ஒரே கவலை. நம்ப பொன்மணிக்கு ஒரு கல்யாணம் செய்து பார்த்து விடணும்னு ரொம்ப நாளா ஆசையை மனசிலே வச்சிகிட்டு மங்குகிறேன். சீக்கிரம் நடக்காதுன்னுதான் எனக்குப்படுது!"
"எல்லாம் நேரம் வந்தால், தானே முடியும். நீங்கள் நிம்மதியா இருங்க!"
"நேரமாவது ஒண்ணாவது—நான் கண் மூடுவதற்குள் அந்த நேரம் வரவா போகுது?"
இடியும் மழையும் காற்றும் பொன்னையாவின் வியாதியை மிகவும் அதிகப்படுத்திவிட்டன போலும். பேசிக்கொண்டே இருந்தவர் பலமாக இருமிட ஆரம்பித்தார்.
"பொன்மணி இப்ப வந்துடுமா?"
"இந்த சுருளிமலை எங்கே?"
பொன்னையா மிகவும் ஆவலுடன் கேட்டார். மழை தாங்க முடியாமல் பொழிந்தது. மின்னல் — இடி — காற்று — அவைகளோடு அவரது இருமலும் சேர்ந்து கொண்டது.
"அப்பாடி! நெஞ்சை வலிக்கிறாப்பல இருக்கு!" என்று பூஞ்சோலையின்மீது சாய்ந்து கொண்டார்.
அவளுக்கும் பெரிய அதிர்ச்சி! "ஐயோ! என்ன சொல்றீங்க?" பூஞ்சோலையின் நாக்கு குழறிற்று. ஆயினும் தைரியத்தைக் கை விடவில்லை. அடுக்களைக்கு ஓடி வெந்நீர் தயாரித்து, அதைக் கணவனது நெஞ்சில் ஒத்தடம் கொடுக்க ஆரம்பித்தாள்.
பொன்னையாவுக்கு வலி பொறுக்க முடியவில்லை. அதிகமாக முனகினார். "அய்யோ, தாங்கவில்லையே!" என்று கதறினார்.
வீட்டிலோ வேறு யாருமில்லை. பொன்மணி இந்த மழையில் எப்படித் திரும்பி வருவாளோ? சுருளிமலை எங்கே போய்விட்டானோ? பூஞ்சோலையின் மனம் தத்தளித்தது. மாங்கல்யத்தை எடுத்துக் கண்களில் ஒத்திக் கொண்டாள். "கடவுளே! என் மஞ்சள் குங்குமத்தைக் காப்பாற்று!" எனப் பிரார்த்தனை செய்தாள்.
பொன்னையாவுக்கு நெஞ்சு வலி தந்த வேதனையைவிட அதிகமான கஷ்டம் பூஞ்சோலையின் முகத்தைப் பார்க்கும்போது ஏற்பட்டது. திடீரெனத்தான் இறந்துவிடுவோமோ என்ற ஐயம் தோன்றியது. அவர் கவலைப்பட்டதெல்லாம் சாவதைப் பற்றியல்ல. தான் செத்துப்போன பிறகு தன் மனைவியும் மக்களும் சோக உருவங்களாகி விடுவார்களே பின் அவர்களை ஆற்றுவாரில்லை; தேற்றுவாரில்லை யென்னும் நிலைமை ஏற்பட்டு விடுமோ — என்ற கவலைதான் அவரை ஆட்டிப் படைத்தது.
பூஞ்சோலை பூவோடும் மஞ்சளோடும் நிறை சுமங்கலியாக காட்சி தருகிறாள். அவள் இல்லாமல் எந்த வீட்டிலும் அந்த ஊரில் நல்லது கெட்டது நடப்பதில்லை. கல்யாண வீடுகளில் மாப்பிள்ளை பெண்ணுக்கு ஆரத்தி எடுப்பதற்கு பூஞ்சோலை வந்தாக வேண்டும். பிறந்த குழந்தைகளை முதலில் பூஞ்சோலையின் மடியில்தான் படுக்க வைக்கவேண்டும். எங்கேயாவது முக்கியமான காரியமாகப் புறப்பட்டால் அப்படிப் புறப்படுகிறவர்கள் தங்கள் லட்சிய சித்திக்காக எதிரே நல்ல சகுனம் எதுவும் வராதா? பூஞ்சோலை வரமாட்டாளா? என்று ஏங்கித் தவிப்பார்கள்.
இப்படியொரு "ராசுராசி"யின் முகராசியை அந்த ஊரார் பரிபூரணமாக மதிக்கிறார்கள். இவ்வளவு எதனால்? மஞ்சள் குங்கும மகிமையினால்!
அது அழிந்து விட்டால் பூஞ்சோலைக்கு மதிப்பு இருக்காது. நல்ல காரியங்களுக்கு அவள் குறுக்கீடே கூடாது என்கிற அளவுக்கு அவள் புறக்கணிக்கப்பட்டு விடுவாள். விதவைச் சகுனம் விஷச்சகுனம் என்று ஆகிவிடும். பூஞ்சோலை மூலையில் முடங்கி விடுவாள்.
அவளுக்கு அப்படியொரு அவமதிப்பு வராமல் இருப்பதற்காகவாவது தான் சாகாமல் இருக்கவேண்டும் என்று பொன்னையா தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். அப்போது அவர் இருதயத்தின் அழுகை சப்தம் பூஞ்சோலையின் காதில் விழவில்லை. அவள் நினைவு முழுவதும் ஆண்டவனிடம் சென்றிருந்தது. பூமியை உருத்தெரியாமல் கரைத்துவிடக் கங்கணம் கட்டிக் கொண்டது போல பெய்து கொண்டிருந்த மழையையும் அவள் பொருட்படுத்தவில்லை. மருத்துவரை அழைப்பதற்குப் புறப்பட்டாள்.
"வேண்டாம் பூஞ்சோலை! இனியொன்றும் பிரயோசனப்படாது!" என்றார் பொன்னையா.
"போகும்போதே தட்டாதீர்கள்—இதோ ஒரு நொடியில் மருத்துவரை அழைத்து வருகிறேன்!"
"மருத்துவரையும் மீறி விட்டது—இன்னும் சிறிது நேரந்தான் ஆகும் பிறகு?"
"ஐயோ அப்படியெல்லாம் சொல்லாதீங்க!"
பூஞ்சோலை தன் கணவனின் காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விம்மி விம்மி அழுதாள்.
"வைத்தியரைக் கூப்பிட நீயும் போய்விட்டால் .... நான் தனியாக இருந்து உயிர் விடணுமா?"
இதற்குப் பூஞ்சோலையால் பதில் கூற முடியவில்லை. கதறிக் கதறி அழுதாள். துடித்தாள். தவித்தாள். தனக்குத் தெரிந்த மருத்துவங்களை யெல்லாம் செய்து பார்த்தாள். வலி அதிகமாகிக் கொண்டே போனது. பூஞ்சோலைக்கு ஒன்றுமே புரியவில்லை. பொன்னையா மெதுவாகப் பேசினார்.
"வேண்டுமானால் போய் வைத்தியரை அழைத்து வா. உன் ஆசையை ஏன் கெடுப்பானேன்?"
பூஞ்சோலை புறப்பட்டாள்; புயலிலும் மழையிலும் பயமின்றி போகும் துணிவு கொண்டாள். அவளை அழைத்து, பொன்னையா தன் படுக்கையின் அடியில் தலையணை ஓரமாக ஒளித்து வைத்திருந்த ஒரு மூடப்பட்ட காகித உறையைக் கொடுத்து "இதைப் படித்துப் பார்த்து இதன்படி நடந்து கொள்ளுங்கள்" என்று கண்டிப்பும் கனிவும் கலந்த குரலில் கூறினார். காகித உறையைப் பூஞ்சோலை மடியில் வைத்துக் கொண்டு மருத்துவர் வீட்டுக்குப் புறப்பட்டாள்.
பொன்னையாவோ "ஆ" என அலறினார். நெஞ்சைப் பிடித்துக் கொண்டார். மயக்கமுற்றுக் கீழே விழுந்தார். அவர் வாயிலேயிருந்து ரத்தம் வழிந்தது. தூக்கி உட்கார வைத்தாள். அவரால் பேச முடியவில்லை அதிகமாக! பூஞ்சோலையின் மடிமீது சாய்ந்து கொண்டார். பூஞ்சோலை இனியும் தாமதிக்கக் கூடாதென்று வெளியே ஓடினாள் மருத்துவர் வீடு நோக்கி!
ஒரு பக்கத்தில் பூஞ்சோலை மழையில் ஓடிக் கொண்டிருக்கிறாள். இன்னொரு பக்கத்தில் பொன்மணியும் அறவாழியும் எதிரே வந்து கொண்டிருக்கிறார்கள். மழையில் களைஞர்களைப்போல ஓடியாடி அறவாழியும் பொன்மணியும் வீடு நோக்கி வருவதைப் பூஞ்சோலை பார்க்கவில்லை. அவர்களும் அவளைப் பார்க்கவில்லை.
"அப்பாடா! தப்பினோம்" என்று கூறிக்கொண்டே மழையை வாழ்த்தியவாறு சற்று வேகமாக நடந்தார்கள்.
வீட்டுக்குள்ளே நனைந்துவிட்ட ஆடைகளுடன் பொன்மணி அடியெடுத்து வைத்தாள். அறவாழி வெளியிலேயே நின்று கொண்டான். அவனையும் பொன்மணி உள்ளே வலிய அழைத்துச் சென்றாள்.
வீட்டுக்குள்ளே யார் நடமாட்டமும் இல்லை. சுற்று முற்றும் பார்த்தாள்.
"அம்மா! அம்மா!!"
—பதில் இல்லை.
கயிற்றுக் கட்டில் பக்கம் சென்றாள்.
"அப்பா தூங்குகிறார்—எழுப்ப வேண்டுமா? வேண்டாம்!"
இறுதியில் ஒரு முடிவுக்கு வருகிறாள்; எழுப்பியே விடுவதென்று!
"அப்பா! அப்பா!!"
—பதில் இல்லை.
ஏதோ ஒரு சந்தேகம்—அப்பாவைத் தொட்டுப் பார்க்கிறாள். உடம்பு ஜில்லிட்டுப் போயிருக்கிறது. மூச்சு நின்று வெகு நேரமாகிறது!
தாய், மருத்துவரை அழைத்துக் கொண்டு வேகமாக உள்ளே ஓடிவருகிறாள். வந்த வேகத்தில் நிலைப்படி தட்டி விடுகிறது. அப்படியே கீழே விழுகிறாள். சரியான அடி! நினைவு இல்லை! இவைகளை யெல்லாம் காணாமல் அந்தக் குடும்பத்துத் தலைவன் நிம்மதியாகக் கண்களை மூடிக் கொள்கிறான்!
கலைஞர் மு. கருணாநிதி · சுருளிமலை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்