அத்தியாயம் 22 · 22 / 26
அத்தியாயம் 22
Chapter 22
மூல ஸ்கேன் 160–168
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
22
இடி முழக்கமும் காற்றின் அலறலும் பொன்மணி, அறவாழி இருவரையும் மேலும் மௌனத்தில் ஆழ்த்தின. பெருமழையைக் காற்று வாரிவந்து பள்ளிக்கூடத்தினுள்ளே ஊற்றிக் களித்தது. அவள் அப்படியே அசைவற்று நின்றுகொண்டிருந்தாள். அள்ளியிறைத்ததுபோல் அவள் மேலெல்லாம் மழைநீர்; பாதிக்குமேல் நனைந்துவிட்டாள். அறவாழி அவளருகே ஓடி, "அடடா" என அனுதாபம் தெரிவித்தான்.
அவள்; அவனை ஒரு முறை விழுங்கி விடுவது போல் பார்த்தாள். "நான் போய் வருகிறேன்" என்று கூறிவிட்டு அவசரமாக வெளியே கிளம்பினாள்.
"என்னது? இந்த மழையிலா?" என எதிர்வந்து தடுத்தான் அறவாழி.
"இல்லை! நான் போய் ஆகவேண்டும். அம்மா மழையைக் கண்டதும் ரொம்ப கவலைப்படுவார்கள். தேடிக்கொண்டு புறப்பட்டு விடுவார்கள்!"
"நீ என்ன பச்சைக் குழந்தையா? பாப்பாவா? மழைக் காற்றில் ஒரு இடத்தில் பாதுகாப்பாக ஒதுங்கக் கூடவா தெரியாது?"
இந்தக் கேலியைக் கேட்டதும் அவள் சிரித்துவிட்டாள். ஆனால் அந்த சிரிப்பைத் தொடர்ந்து கண்ணீரும் எட்டிப் பார்த்தது.
"ஆகா! மின்னலைப்போல் சிரித்தாய்! உடனே மழையைப் போல் கண்ணீர் சிந்துகிறாய்! நன்றாயிருக்கிறது இதுவும்!"—மேலும் கேலி செய்தான் அறவாழி.
"சரி. நான் வருகிறேன். குடையிருந்தால் கொஞ்சம் கிடைக்குமா? தம்பியிடம் கொடுத்து அனுப்பிவிடுகிறேன்!"—கண்களைத் துடைத்துக்கொண்டே கேட்டாள் பொன்மணி.
"குடையா? இருக்கிறது! கொடுக்கவும் தடையில்லை. அதைத் திருப்பி நீயே கொண்டு வந்து தருவதாயிருந்தால் கொடுக்கிறேன்."
"விளையாடாதீர்கள், இருந்தால் கொடுங்கள். இல்லாவிட்டால் பரவாயில்லை. நான் வருகிறேன்."—வாயிற் புறத்தை நோக்கி நடந்த பொன்மணியின் கரம்பற்றி இழுத்து, "என்ன இது, பிடிவாதம்?" என செல்லமாகக் கண்டித்தான் அறவாழி. பொன்மணி எதுவும் பேசவில்லை. கையை அவனிடமிருந்து விடுவித்துக் கொள்ளவும் இல்லை.
அறவாழி அருகே நெருங்கினான். பற்றிய அவள் கரத்தை நெற்றியில் ஒத்திக்கொண்டான். மழை நீரால் நனைந்திருந்த அந்தக் கரம் சூடாக இருப்பதை உணர்ந்தான்.
"பொன்மணி! நான் உனக்கு ஏதாவது தவறு செய்து விட்டேனா? ஏனிப்படி ஓடுகிறாய்—இந்த மழையில்?"
"நான்தான் பெரிய தவறு செய்து விட்டேன். நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று இந்தக் குற்றத்திற்கு மன்னிப்பே கிடையாது என்பதைப் புரிந்து கொண்ட பிறகுதான் எனக்கு நிம்மதியில்லாமல் போய் விட்டது!"
"அழாதே பொன்மணி! அழாதே! நீ செய்ததை இப்போது நான் குற்றமாகவே கருதவில்லை. உன்னையும் உன் குடும்பத்தாரின் பெருந்தன்மையையும் உணர்ந்துகொண்டேன்!"
"உண்மையிலேயே அப்படிச் சொல்கிறீர்களா? அல்லது என்மன சமாதானத்திற்காகவா?"
"பொன்மணி! இந்த ஊருக்கு வரும்போது என் நினைவெல்லாம் கரகமாடிக் கண்ணனைப் பற்றியே இருந்தது. பழிவாங்கக் காத்திருப்பானே என்று எண்ணினேன். அதன் முதற்கட்டமும் நிறைவேறிவிட்டது. அடுத்தடுத்து அவனால் வர இருக்கிற எல்லாத் தொல்லைகளையும் உன்னை நினைத்தே சமாளிப்பது என்ற புதிய துணிவை நான் பெற்றிருக்கிறேன். இதிலிருந்து புரிந்துகொள்; உன்னை நான் எவ்வாறு கருதுகிறேன் என்று! நீதான் என் வாழ்வுக்கு விளக்கு! என் நெஞ்சத்தில் நிறைந்திருக்கும் தெய்வமே நீதான் கண்ணே!"
"எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அதோ பயங்கரமாக உறுமிக்கொண்டு "சோ" வெனக் கொட்டுகிற மழையில் மரம் செடிகள் ஆடுவதுபோல என்மனமும் அலைக்கழிக்கிறது. நான் சிறுமி—நீங்கள் உலகம் தெரிந்தவர். நான் ஏதாவது தவறு செய்தால் என்னைத் திருத்துங்கள். நீங்களும் என்னோடு சேர்ந்துகொண்டு என்னைப் பாழ்படுத்தி விடாதீர்கள்!"
"பொன்மணி! பைத்தியம்!"
"ஊஹும்! இதுசரியில்லை! ஆமாம்; இதுசரியில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. என் அப்பாவும் அம்மாவும் என்னைமிகவும் ஒழுங்கான பெண் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களுக்குத் துரோகம் செய்ய மாட்டேன்!"
"நீயாருக்கும் துரோகம் செய்யவில்லை. இருவரின் நெஞ்சமும் ஒன்றுபட்டது. இயற்கைவகுத்த நெறிதானே தவிர அதற்கு முரண்பட்ட வழியல்ல இது! வெறும் ஆவேசத்திற்கும் உணர்ச்சிகளுக்கும் அடிமைப்பட்டு உன்னை அழித்துவிட ஒரு கணமும் துணியமாட்டேன். இளமை வழங்கும் காதல் பாஷையை இலக்கணவரம்பு வழுவாது பயிலவே நான் விரும்புகிறேன். பெண்களுடைய உயிரினும் மேலான கற்பு நெறிக்குக் களங்கம் விளைவித்து அவர்கள் வாழ்வோடு விளையாடும் வரம்பு கெட்டவர்களின் பாதையிலே— நான் கண்ணிழந்த கபோதியாகி விட்டாலும்— காலெடுத்து வைக்கமாட்டேன். என்னை நீ தைரியமாக நம்பலாம் பொன்மணீ!"
"உங்கள்மீது நம்பிக்கையில்லையென்று நான் கூறவில்லையே! நீங்கள் என்னை நட்டாற்றில் தவிக்க விட்டுவிடுவீர்கள் என்றும் சொல்லவில்லையே! சிறுபிள்ளைத்தனமாக ஏதாவது தவறு செய்துவிட்டு பிறகு நமக்கு நாமே வருந்தக்கூடாது என்று தானே சொல்லவந்தேன்!"
"அதோ, பெருமழையில் தெருவிலே ஓடுகிறதே ஆறுபோல் தண்ணீர்— அந்த நீரில் நான்தான் கப்பல்கள் செய்து மிதக்க விடுவதுண்டு; சிறுவனாயிருக்கும்போது! சதுரமான ஒரு தாளை நான்காக மடித்து, அதில் ஒரு முனையை மடக்கி, தோணிபோல ஆக்கி தெருவிலோடும் தண்ணீரில் மிதக்கவிடுவேன். அந்தக் கப்பலைப் பார்த்துக்கொண்டே மழையில் நெடுந்தூரம் நடந்து செல்வேன். உடம்பெல்லாம் நனைந்துவிடும். அன்றிரவு காய்ச்சலும் வந்துவிடும். தாய் தந்தையர் கஷ்டப்படுவார்கள். நான் ஏறிச் செல்ல முடியாத கப்பலை நான் செய்வானேன்? அது போகிற அழகைப் பார்த்துக்கொண்டு மழையில் நனைவானேன்? பிறகு அது மழை நீரில் அமிழ்ந்துவிடுவது கண்டு வருந்துவா<!-- verified source join: scan 163→164 --> னேன்? இப்போது கேள்விகள் எழுகின்றன ஆனால் இளம் பிராயத்தில் இந்தக் கேள்விகள் எழுவதில்லை ஆனால் நிச்சயமாகச் சொல்வேன்; இப்போது அப்படி ஒரு கப்பலைச் செய்யமாட்டேன். அதன் பின்னால் மழையில் ஓடவும் மாட்டேன். இப்போது நான் கட்டுகிற கப்பல் வாழ்க்கைக் கப்பல் அதில் நானும் என் ராணியும் ஏறிக்கொள்வோம். புரிகிறதா பொன்மணி! இந்தக் கப்பல் கட்டும் வேலை சிறுபிள்ளைத்தனமானது அல்ல என்பதை தயவு செய்து தெரிந்துகொள்!"
"பெரியவர்கள் கட்டுகிற கப்பலும் சமயத்தில் மூழ்கிவிடுகிறதல்லவா?"
"உலகம்கூடத்தான் ஒரு காலத்தில் சிதறிப்போய் விடும் என்கிறார்கள். சூரியன்கூட ஒரு காலத்தில் உடைந்த கண்ணாடித் துண்டுகள் போல தூள் தூளாகப் போய்விடக்கூடும் அதை யெல்லாம் நினைத்தால் மனிதர்கள் வாழவே முடியாது!"
"உங்கள் படிப்புக்கு நான் எம்மாத்திரம்? எதைச் சொன்னாலும் நம்ப வேண்டியதுதானே?"
"அய்யோ—இந்தக் காலத்தில் படித்தவன்தான் ஊரை அதிகமாக ஏமாற்றுகிறான். அதனால்தான் எல்லோரும் படிக்க வேண்டுமென்று அறிஞர்கள் கூறுகிறார்கள்!"
"ஏன்? எல்லோரும் சேர்ந்து ஊரை ஏமாற்றவா?"
"இல்லை! எல்லோரும் படித்துத் தேர்ந்து விட்டால் பிறகு யாரும் யாரையும் ஏமாற்ற முடியாதல்லவா?"
"உங்கள் ஊரில் வந்து தகடு எடுப்பதாகச் சொல்லி எல்லோரையும் ஏமாற்றிய எங்கள் ஊர் கண்ணன் பெரிய படிப்பாளியா?"
"பழைய கால புராணங்களையாவது படித்திருக்கிறான் அல்லவா? அதிருக்கட்டும்—நமது ஆராய்ச்சி எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது..!" எனப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, பொன்மணியை அன்போடு தழுவிக்கொண்டான் அறவாழி.
"உஸ்!" எனக் கண்டிக்கும் பாவனையில் பொன்மணி அவனைவிட்டு விலகுவதற்குப் பயங்கரமான இடிகள் ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாக ஒலிப்பதற்கும் சரியாக இருந்தது
"வீர்!" எனக் கத்திக்கொண்டு அவள், அவனை ஓடித் தழுவிக்கொண்டாள். அவள் மேனி கிடுகிடுவென நடுங்கிற்று. "பயப்படாதே! அர்ச்சுனா! அர்ச்சுனா! என்று மந்திரம் சொல்லு! இடி ஓடிவிடும்!" என சிரித்துக் கொண்டே அவளை இறுக அணைத்துக் கொண்டான்.
"நான் ஏன் அவன் பெயரைச் சொல்லவேண்டும்?" என்று குறும்பாக அறவாழியைப் பார்த்துக்கொண்டே தன் மெல்லிய கரங்களால் அவன் கழுத்தைப் பின்னிக்கொண்டாள்.
"மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்! என இருவரும் பாடுவோமா?" என்று கேட்டான் அறவாழி.
அவள் பாசத்தோடு அவன் முகவாய்க்கட்டையில் தன்னுடைய கன்னத்தை ஒத்திக்கொண்டு கண்களை மெய்மறந்து சாத்திக் கொண்டாள். இன்ப ஸ்பரிசத்திலே உணர்விழந்திருந்த அறவாழியின் கண்கள் மேசைமீது திரும்பின. மேசையில் இருந்த கலித்தொகைப் புத்தகத்தில் மழை நீர் சொட்டி முழுவதுமே நனைந்து போயிருந்தது. ஓடிப்போய் புத்தகத்தை எடுத்தான். நூலின் மேலட்டை கையோடு வந்துவிட்டது. எல்லா பக்கங்களும் நனைந்து கையோடு வந்துவிட்டன. நெய்தற்கலியே எஞ்சியிருந்தது. அதில் "வாடை தூக்க வணங்கிய தாழை!" என்ற அருமையான வரி அவன் கண்களில் தென்பட்டது. அந்த வரியின் பொருளை அவன் சுவைத்தான். அவளுக்கும் மெல்ல மெல்ல சுற்றுக் கொடுக்க வேண்டும் என்று தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டு மகிழ்ந்தான்.
"இந்தப்புத்தகம் முழுதும் என்ன இருக்கிறது, தெரியுமா?" எனக்கேட்டான்.
"மழைத் தண்ணீர்." என்று வெடுக்கெனப் பதில் சொன்னாள்.
"மழைதான்! அத்தனையும் முத்துமழை! சர்க்கரை மழை! தேன் மழை! தெவிட்டாத இன்ப மழை! கண்ணே! கலித் தொகை யென்று இதற்குப் பெயர். எல்லாம் காதலைப்பற்றியது தான்! பால் விற்கும் ஆயர்பாடிப்பாவையின் காதல்! மீன் பிடிக்கும் மீனவக் கொடியின் காதல்!...அடடா...."
"அப்ப...பானை சட்டி விற்கும் பெண்ணின் காதல்... இதில் கிடையாதா?"
"எல்லாம் இருக்கிறது! தமிழ் நாட்டுப் பெண்களின் காதல் உள்ளத்திற்கு இந்தப் புத்தகம் ஒரு கண்ணாடி!"
"அது கிடக்கட்டும்—நேரமாகிறது—நான் போக வேண்டுமே"
"அப்படியொரு நினைப்புக்கூட உனக்கு வருகிறதா?"
"பார்த்தீர்களா? இப்பத்தானே சொன்னீர்கள் ; உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு விடக்கூடாது என்று ! உலகத்தையே மறந்துவிடலாமா? தாய் தந்தை குடும்பம் இவைகளை யெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிடலாமா?"
"உண்மைதான் பொன்மணி—தாய், தந்தை குடும்பம், மட்டுமல்ல—எல்லாவற்றையும்விட மேலான நாடு—இவைகளுக்குக் குந்தகம் ஏற்பட்டால், இந்தப் பாசங்களே அதிகப்படுத்தக் கூடிய உணர்வுதான் காதல் என்பதை நான் மறந்துவிட மாட்டேன். நீ போகலாம். நான் தடைசொல்லவில்லை ஆனால் ஒன்று; நாம் பேசவேண்டியதை யெல்லாம்பேசி முடித்து விட்டோமா?"
"இனிமேல் சந்திக்கவே மாட்டோமா?"
"நீ விரும்பினால்—மனம்வைத்தால்— எப்போதும் சந்திக்கலாம்— மழையும் காற்றும் தாங்கவில்லை. நானே உன்னைக் கொண்டுவந்து வீட்டில் விட்டு வருகிறேனே!"
"நாம் இருவரும் சென்றால் ஊரார் பார்த்து என்ன சொல்வார்கள்?"
"இந்த மழையில் யாரும்வெளியே கிளம்ப மாட்டார்கள். நாமிருவருந்தான் ஒரே குடையின் கீழே தெருவிலே முழங்காலைத் தொட்டுக்கொண்டு ஓடும் தண்ணீரில் நடந்து செல்லப் போகிறோம். நமக்குத் திருமணம் ஆனபிறகு இப்படி ஒரு அருமையான வாய்ப்பை இந்த மழை விரைவிலே அளிக்குமோ என்னவோ—அதனால் இப்போதே அந்த இன்பத்தை சுவைக்கலாம்; புறப்படு!" என்று குடையை எடுத்து விரித்தான் அறவாழி. குடைக்குள்ளேயிருந்து ஒரு தேள் கீழே விழுந்து ஓட இடம் பார்த்தது தேளைப் பார்த்ததும் பொன்மணியின் விழிகள் அவளையறியாமலே அறவாழியின் விழிகளோடு மோதிக் குறும்பு புரிந்தன.
"தேளைப் பிடித்துத் தருகிறேன்; கையில் கொட்டிக் கொள்கிறாயா?" என்றான் அவன்
"வேண்டாம்—வேண்டாம்! முன்பு நீங்கள் என் காதில் போட்ட மந்திரம்தான் என்னை இந்த கதிக்குக் கொண்டுவந்து விட்டது மறுபடியும் காதில் ஊதி ஊதி என் இருதயத்தை பலூன் மாதிரி பெருக்க வைத்து வெடித்தும் போகும்படிச் செய்து விடாதீர்கள்!" எனக் கூறி அவன் தோளில் முகத்தைச் சாய்த்துக் கொண்டு ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள் பொன்மணி.
காற்றின் வேகம் அதிகமானதே தவிர குறையவில்லை, மழையும் கொட்டிக் கொண்டேயிருந்தது எப்படியும் வீடு போய்ச் சேரவேண்டும் என்ற துடிப்பு பொன்மணிக்கு அதிகமாகிவிட்ட காரணத்தால் அறவாழி புறப்பட்டான். காற்றை எதிர்த்து, கதவைத்திறந்து கொண்டு வெளிக்கிளம்பினார்கள். அறவாழி குடையை மிகவும் பலமாகப் பிடித்துக் கொள்ள வேண்டியிருந்தது. அவனோடு நெருங்கி பொன்மணி குடையின் கீழே நடந்தாள். வானமே இருண்டு, பூமியையும் இருளடையச் செய்திருந்தது. கண் தெரிய முடியாத அளவுக்கு ஒரே மழை! மழைத்<!-- verified source join: scan 167→168 --> துளிகளைக் கற்கள் போல மேலே வீசியடித்தது காற்று! எந்த நேரத்தில் மேலே விழுமோ என்று பயங்காட்டிக் கொண்டிருந்தன தெருவோரத்திலேயிருந்த மரங்கள்! அறவாழியும் பொன்மணியும் வெளியே கிளம்பியது தவறு என்று அஞ்சி நடுங்கினார்கள். பத்திரமாக வீடு போய்ச் சேர முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை இடையிடையே நெஞ்சை உலுக்கும் பயங்கர இடி முழக்கம்—கண்ணைப் பறிக்கும் மின்னல். எதைப் பற்றியும் கவலைப்படாமல் அறவாழி பொன்மணியை இறுக அணைத்துக்கொண்டு, மேலும் மேலும் நடக்கலானான். காற்றின் வேகத்தில் அவன் கையிலேயிருந்த குடை பறக்க ஆரம்பித்தது. குடையைப் பறிகொடுத்துவிட்டு இருவரும் ஒரு மரத்தடியில் ஒதுங்கினார்கள். அவர்கள் கண்ணுக்கு நேரே, அவர்கள் ஒதுங்கிய மரத்திற்குப் பக்கத்து மரமொன்று கீழே விழுந்தது. மரத்தடியில் நிற்கவும் பயம் தோன்றியது. என்ன ஆனாலும் சரி; வீட்டுக்குப் போய்விடுவது என்று இருவரும் உறுதியெடுத்துக்கொண்டு ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு நீர்வீழ்ச்சிபோல் கொட்டும் மழைக்கிடையே நடந்தனர்.
கலைஞர் மு. கருணாநிதி · சுருளிமலை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்