பொருளடக்கம்

சுருளிமலை

அத்தியாயம் 21 · 21 / 26

அத்தியாயம் 21

Chapter 21

மூல ஸ்கேன் 156–160

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

21

சிதறிவிட்ட பானைகளைப் பார்த்தவாறு அப்படியே அயர்ந்துபோய் திகைத்து அசைவற்று நின்றாள் பொன்மணி. அறவாழியும் வாயிற்புறம் வந்து அனுதாபத்தோடு அவளை உற்று நோக்கினான். "த்ச்! த்ச்! எல்லாப் பானைகளுமே உடைந்துவிட்டதா?"... அவனது அனுதாப வார்த்தைகள் அவளுக்கு ஆறுதலாக இருந்தன. எத்தனை பானைகள் உடைந்தால் என்ன; தன்னைப்பற்றி அறவாழியின் உள்ளத்திலே முதல் நாள் தோன்றிய அன்பு அரண் உடைந்து விடாமல் இருந்தால் அதுபோதும் அவளுக்கு!

ஆனால் ஒன்று உடைந்து சிதறிக் கிடக்கும் பானையோடுகள் ஒவ்வொன்றிலும் அவளது தந்தை பொன்னையாவின் உருவமும், தாயார் பூஞ்சோலையின் வடிவமும் வேதனைக் கோலத்தில் விழிநீர் பெருகியவாறு நிற்பதுபோல் தோன்றியது அவளுக்கு

அந்தப் பானைகளை அன்று சந்தையில் விற்றுவரக் கூடிய காசில்தான் அப்பாவுக்கு வைத்தியர் சொன்ன மிக முக்கியமான மருந்தொன்றைத் தயாரிக்க முடியும் அதை நினைத்ததும் அவளையும் மீறி ஆறெனப் பெருகிவிட்டது கண்ணீர்.

தாயார் மாலையில் தன் வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருப்பார்களே—தந்தையும் அருந்தப் போகும் மருந்தை நினைத்து நோயைப்பற்றிய கவலையிலிருந்து ஒரு சிறிது விடுபட்டிருப்பாரே—ஆனால் இப்போது எல்லாம் தூள் தூளாகிவிட்டதே —என் செய்வது—என ஏங்கினாள் அந்த ஏந்திழை. உடற் கட்டுக்கு நேரெழில் அழகு தருவதுபோல் ஒரு ஆழ்ந்த பெருமூச்சு! அப்பப்பா—அதிலே எத்துணை சோகம்! வேதனை! விசாரம்! பெருமூச்சின் அர்த்தத்தை கவனிக்க முடியவில்லை அறவாழிக்கு! பானைகளை உடைத்து விட்டதற்கு வீட்டில் திட்டுவார்கள் என்று பயப்படுகிறாள் பொன்மணி யென்றே அவன் கருதினான்.

"பயப்படாதே! வீட்டில் திட்டுவார்கள் என்றுதானே இவ்வளவு கவலை?..."

பொன்மணி பதில் கூறவில்லை. உடைந்த பானைகளைப் பொறுக்கிச் சேர்த்தாள். ஒரே ஒரு அழகிய வேலைப்பாடமைந்த சிறு கலயம் மட்டும் மிஞ்சியிருந்தது. அதைக் கையிலே எடுத்தாள். அறவாழி, அருகே சென்று கலயத்தை வாங்க முயன்றான். அவளும் அவனிடம் அதைக் கொடுத்துவிட்டாள்.

"ஆகா! ரொம்ப அழகான கலயம் என்ன அருமையான வேலைப்பாடு! இதை நான் எடுத்துக் கொள்கிறேன்—இதன் விலை என்ன?"

பொன்மணி பதில் பேசவில்லை. அறவாழி அவளைப் பேச வைக்க முயன்றான். "எல்லாப் பானைகளும் உடைந்துவிட்டதே—இவைகளின் விலை என்ன இருக்கும் ?" என்று கேட்டான் அறவாழி. "சந்தையில் விற்றால் ஏழெட்டு ரூபாய் கிடைக்கும்." என்றாள் பொன்மணி.

"இருக்கட்டும்—இந்தக் கலயத்தின் விலையைச் சொல்லு!" என்றான் அவன்.

"இல்லை! இதற்கு நான் ஒரு விலை நிச்சயித்திருக்கிறேன். இதன் விலை பத்து ரூபாய்! இன்னும் கூட அதிகவிலை மதிப்பிடலாம்—ஆனால் ஆரம்ப ஆசிரியன் ஒருவன் போடக்கூடிய மதிப்பு இந்த நிலையில் இவ்வளவுதான்!"

"உங்களுக்கு எதற்காக இந்த மண்கலயம்!"

"இது தெரியாதா உனக்கு? எனக்கு ஆசிரியர் வேலை அரோகரா' ஆகப்போகிறது! அதன் பிறகு இதை வைத்துக் கொண்டுதானே நாலுவீடு சோறுகஞ்சி வாங்கிச் சாப்பிடணும்—அதுக்காகத்தான் எனது வருங்காலத் தொழிலுக்கு அடிப்படையான இந்தக் கருவியை வாங்குகிறேன் நான்!"

அறவாழி விஷமப் புன்னகையுடன் இந்த வார்த்தைகளைக் கூறும்போது பொன்மணியின் முகம் முன்னிலும் கவலைபடர்ந்த நிலையில் மாறிவிட்டது. அறவாழி, தன்னைப்பற்றி தவறான கணக்கு போட்டிருக்கக்கூடும் என்பதையும் அவள் புரிந்து கொண்டாள்.

"அதைப்பற்றி உங்களிடம் விபரம் தரவே உங்களைத் தேடி வந்தேன்" என்று கூறியபடி பொன்மணி, கண்களில் சிந்தும் முத்துக்களைக் கன்னங்களில் உருளவிடாமல் துடைத்துக் கொண்டாள்.

மழையும் சற்று அதிகமாகப் பெய்யத் தொடங்கவே, அறவாழி அவளை உள்ளே வருமாறு அழைத்தான். அவளும் அறைக்குள்ளே சென்றாள். காற்றும் சற்று பலமாக வீச ஆரம்பித்தது சிறியதுண்டு ஒன்றைக் கொடுத்து மழைத்தூறல்களால் நனைந்துவிட்ட முகத்தைத் துடைத்துக்கொள்ளச் சொன்னான். பொன்மணிக்கு அந்த உபசாரங்கள் முழுத்திருப்தியை ஏற்படுத்தவில்லை தன்னிடம் பெருங்குறையொன்றைக் கண்டுவிட்ட வேறுபட்ட உள்ளத்தோடுதான் அவன் தன்னிடம் பழகுகிறான் என்று அவள் எண்ணி ஏங்கினாள். எதையும் மனம் விட்டுப் பேசக்கூடிய அளவுக்கு இருவரும் பழகிவிடவும் இல்லை. ஒரு நாள் சந்திப்பு—அதிலே அர்த்தம் பொதிந்த பார்வை—அவ்வளவு தானே தவிர இருவர் இதயங்களையும் உராய்ந்துவிட வைத்து அதிலே கிளம்பும் காதலெனும் தீப்பொறியை எதிர்ப்பு எனும் பஞ்சுப்பொதிகளின்மீது வீசிடவில்லை! அதனால் அவள் தயங்கினாள். ஆனாலும் தன் மீதுள்ள தவறான எண்ணத்தைப் போக்கியே தீர வேண்டுமெனத் துணிவு கொண்டாள்.

"ஊரிலே ஒரு மகஜர் அனுப்பியிருக்கிறார்களே"... என்று ஆரம்பித்தாள்.

"ஆமாம்—கேள்விப்பட்டேன். அதில் கையெழுத்திட்ட அனைவருக்கும் என் நன்றி!" என்றான் அவன்.

பொன்மணி, அதற்கு மேல் பேச முடியாமல் தவித்தாள். அறவாழியே பேச்சைத் தொடர்ந்தான்.

"இந்த ஊரிலே இருந்துமட்டுமல்ல; இந்த வேலையிலே இருந்துகூட என்னை விடுதலை செய்துவிடுவார்களேயானால் மிகவும் சந்தோஷப்படுவேன்!"

"நான்கூட அதில்......" என இழுத்தாள் பொன்மணி.

"நீ கூட?... நீ கூட...?... என்ன? என்ன? புரியும்படிச் சொல்!" எனக் குறும்பாகக் கேட்டான் அறவாழி.

"எல்லோரும் கையெழுத்துப் போட்டான பிறகு நாங்கள் இரண்டு மூணு பேர் போட்டாலும் போடாவிட்டாலும் அந்த மகஜருக்கு உயிர் வரத்தான் போகிறது அப்படியிருக்கும்போது ஊர்க் கட்டுப்பாட்டை ஏன் மீறவேண்டும் என்று பயந்துதான் எங்கள் வீட்டில் அதில் கையெழுத்துப் போட்டோம். அதைத் தவிர உங்கள் மேல் எந்த விதமான விரோதமும் இல்லை!"

"சேசே! அப்படி யார் சொன்னது? இந்த ஊரில் யார்தான் எனக்கு விரோதி? எல்லோரும் ஊர் க்ஷேமமாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தானே என்னை விரட்டியடிக்க விரும்புகிறார்கள்?..."

"நீங்கள் அப்படிச் சொல்லக்கூடாது. எங்கள் செய்கைக்கு மாசு கற்பிக்காதீர்கள். ஊரே ஒன்று கூடிவிட்ட பிறகு நமக்கு மட்டுமென்ன என்று வீட்டில் நினைத்து விட்டார்கள். அதுமட்டுமல்ல; அந்த மகஜர் தபாலில் சேராத வழிக்கு அதைக் கிழித்து கொளுத்தி விட நானும் தம்பியும் முடிவு செய்திருந்தோம். அந்த நம்பிக்கையில் மகஜர் தம்பியின் கையில் வரும் என்பதனாலேயே பயமில்லாமல் அதில் கையெழுத்தும் போட்டேன்."

"அதனால் என்ன; பரவாயில்லை—அதற்காக என்னைத் தேடிக்கொண்டா வரவேண்டும்? இது அற்ப விஷயம்!"

"உங்களுக்கு அற்ப விஷயம்! ஆனால் எனக்கு?"

"உனக்கும் அப்படித்தான்!"

"எனக்கு அப்படியிருந்தால் இங்கே ஏன் வரப்போகிறேன்!"

—இதைக் கூறிவிட்டு அவள் தலையைக் குனிந்துகொண்டாள். அறவாழிக்கும் அவள் வாக்குமூலம் சரியென்றே தோன்றியது. எத்தனையோ ஆண்டுகளாக ஊர்க்கட்டுப்பாட்டுக்குள் அடங்கியிருந்துவிட்டு திடீரென ஒருநாள் அறிமுகமான தனக்காக ஊராரை விரோதித்துக் கொள்ளக்கூடிய சூழ்நிலையைப் பொன்மணியின் குடும்பத்தார் உருவாக்கிக்கொள்ள வேண்டியதில்லையென்றே அவனும் நினைத்தான்.

அனால் அந்த ஊர் ஒற்றுமையையும் பொருட்படுத்தாமல் பொன்மணி தன்மீது கொண்ட பிரியத்தை செயல் மூலம் காட்டி தன்னிருப்பிடத்திற்கே வந்துவிட்டதையெண்ணிப் புதிய மகிழ்ச்சி கொண்டான் ஆவலும் அன்பும் பேச்சு உருப்பெற்றன.

"இப்படியொரு விசித்திரமான கிராமத்தை நான் கண்டதேயில்லை. வந்ததும் வராததுமாக என்னைக் கண்டு வெறுப்பவரும்—விரட்ட எண்ணுபவரும்—விருப்பங் காட்டுபவரும்—எல்லோரையும் சில தினங்களில் சந்தித்து விட்டேன்!"

"எல்லோரையும் பற்றி தனித் தனியே ஒரு தீர்மானத்திற்கு வந்திருப்பீர்கள்!"

"நிச்சயமாக!... உனக்கு யாரைப் பற்றிய என் தீர்மானம் தெரிய வேண்டும்?"

அவள் நாணினாள். "என்னைப் பற்றிக் கட்டியிருக்கும் முடிவு என்ன என்று......"

"உன்னைப் பற்றியா?......"

அவள் அவனையே பார்த்தாள். அவனும் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். மழை மிகவும் கனமாகப் பெய்தது—காற்றும் வரவரக் கடுமையாயிற்று—புயல் வீசுவதற்கான அறிகுறிகள் தென்பட்டன! வானத்தைவிடப் பெரும் புரட்சி—இங்கே இருவர் உள்ளங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

கலைஞர் மு. கருணாநிதி · சுருளிமலை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்