பொருளடக்கம்

சுருளிமலை

அத்தியாயம் 20 · 20 / 26

அத்தியாயம் 20

Chapter 20

மூல ஸ்கேன் 151–156

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

20

அறவாழியினால் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை. எந்த ஒரு சந்திப்பை நினைத்து நினைத்து நெஞ்சத்தைத் தேனில் நனைத்துக் கொண்டிருந்தானோ; அந்தச் சந்திப்பு கடைசியில் பெரும் ஏமாற்றத்தில் முடிந்தது கண்டு திகைத்தான். அவன் படித்த எத்தனையோ காதல் கதைகளில் கூட இதுபோன்ற ஒரு அதிர்ச்சி தரக்கூடிய சம்பவத்தை அவன் கண்டதில்லை. காதலர்களைத் தங்கள் பேனா முனையினால் சிருஷ்டிக்கும் எழுத்தாளர்கள் கூட கொஞ்ச நாளைக்கு அவர்களை கொஞ்சி மகிழ வைத்து, அதற்குப்பிறகே இருவரிடையே பிளவு—பிரிவு—ஏக்கம்—வேதனை—வாட்டம்—இதுபோன்ற நிகழ்ச்சிகளை நுழைய விடுவார்கள்.

அறவாழியோ, தன் கதை முற்றிலும் புதிதாக அமைந்து விட்டதை எண்ணிச் சோர்ந்து போனான் ஊரை விட்டுத் தன்னை மாற்ற வேண்டுமென்பதற்கு அவள் ஏன் ஒப்பமளிக்க வேண்டும்? புரியாத புதிராக இருந்தது! ஒருவேளை, முதல் நாள் சந்திப்பில் விதைக்கப்பட்ட காதல் சிறிது சிறிதாக செடியாகி, மரமாகி தன் தலையிலேயே விழுந்து விடும் என்று பயந்து முளையிலேயே கிள்ளி யெறியலாம் என்று அந்த முடிவுக்கு வந்திருப்பாளோ? அறவாழிக்குப் பதில் சொல்ல அங்கே யார் இருக்கிறார்கள் ஆலோசனையோ, ஆறுதலோ கூறுவதற்கு யாருமில்லை. சுருளிமலை மட்டுமேயிருந்தான். அவனும் அறவாழியின் உள்ளத்துப்புகைச்சலை உணர்ந்து கொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை

மகஜர் தாளை சுருளிமலையிடம் கொடுத்து விட்டு அறவாழி அந்த இடத்தை விட்டு வேகமாகப் புறப்பட்டான்.

"என்ன ஒண்ணும் சொல்லாமல் போறீங்க?" என்று கூவினான் சுருளிமலை.

"சொல்ல என்னப்பா இருக்கிறது? உங்க வீடே எனக்கு எதிரி யென்றால் இனிமேல் இந்த ஊரில் எனக்கென்ன வேலை?" என்று கூறிவிட்டு அறவாழி அதை விட்டகன்றான்.

சுருளிமலை அறவாழி போவதையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுப் பிறகு தன் வாகனத்தைத் தட்டிவிட்டான் நேரே பஞ்சாயத்தார் பரமசிவம் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தான். திண்ணையில் உட்கார்ந்திருந்த பஞ்சாயத்தார், "என்னப்பா! உங்க வீட்டுக் கையெழுத்து வாங்கிட்டு வந்துட்டியா?" என்று கேட்டதும், சுருளிமலை மகஜரை அவரிடம் நீட்டினான்.

அவர் அதைப் பார்த்துவிட்டு "பேஷ்! பேஷ்! அநேகமாக எல்லோருடைய கையெழுத்தும் ஆகிவிட்டது! இதை நீயே கொண்டுபோய் தபாலில் சேர்த்துவிடவேண்டும்!" என்று சுருளிமலைக்கு உத்தரவு போட்டார்.

கரகமாடிக்கண்ணனும், பஞ்சாயத்தார் பரமசிவமும் அறவாழியின் மீதுள்ள வெறுப்பை உடனடியாகக் காட்டிக் கொண்டு, அவசர அவசரமாக ஊராரிடம் கோள் மூட்டி, மகஜரைத் தயாரித்து விட்டனர். சிங்காரம்—கண்ணன் இருவரின் சண்டையைக் காண வந்தவர்களிடமே அநேகமாக மகஜருக்கு வேண்டிய கையொப்பங்களை வாங்கிச் சேர்த்துவிட்டார்கள். மிச்சமுள்ள ஒன்றிரண்டு கையெழுத்துக்களும் சுருளிமலை பொறுப்பில் விடப்பட்டன அவனும் தன் வீட்டார் உட்பட மிச்சக் கையெழுத்துக்களைப் பெற்று வந்து தந்து விட்டான். மகஜரை அனுப்பவேண்டிய பொறுப்பும் அவன் தலையிலேயே கட்டப்பட்டதும் மிக்க மகிழ்ச்சியுடன் புறப்பட்டான். அவனுக்கு நன்றாகத்தெரியும், மகஜர் அனுப்பப்பட்டதும் அறவாழிக்குத் தொந்தரவு ஏற்படும் என்று! இந்தச் செய்தியை வீட்டிலே சொல்லி கையெழுத்து வாங்கச் சென்றபோது அவன் தாய் ஒத்துக்கொள்ளவில்லை. தமக்கையும் இஷ்டப்படவில்லை. அப்போது சுருளிமலை தந்த விளக்கத்தால் அவர்கள் இறுதியில் இணங்கிவந்தார்கள்.

ஊரில் முக்கால்வாசிப்பேர் கையெழுத்துப் போட்டு விட்டார்கள். இனி, பூஞ்சோலைவீட்டார் போட்டாலும் போடாவிட்டாலும் நடக்கப்போகிறகாரியம் நடக்கத்தான் போகிறது. போடாமல் கெட்டபெயர் வாங்கிக்கொள்வதைவிட்டு, நல்லபெயர்

வாங்கிக்கொள்ளலாமே—என்பதே அவன்வாதம். அதன் பிறகும் கவலைப்பட்ட தாயாரிடமும் அக்காளிடமும் அவன் சொன்ன சமாதானம்; எப்படியும் அந்த மகஜா தபாலில் அனுப்பப்படாமல் இங்கேயே தன்னால் கிழித்தெறியப்படும் என்பதாகும். மகஜர் போய்ச்சேராதவழிக்கு சுருளிமலை தந்திரம் கையாளுகிறான் எனக்கண்ட பொன்மணிக்குத் தாங்க முடியாத பூரிப்பு! பஞ்சாயத்தாரையும் மற்றவர்களையும் ஏமாற்றி மகஜரை அவன் கைக்குவரும்படிச் செய்துகொண்டானே தம்பி என்று அவனை வாழ்த்தினாள் பொன்மணி. அந்த வாழ்த்துதலைப்பெற்று பஞ்சாயத்தார் வீட்டுக்குப் போகிற வழியிலேதான் அவன் அறவாழியைச் சந்தித்தான். இதுவரையில் அவன் எண்ணியபடி எல்லாமே நடந்துவிட்டது. இறுதியாக மகஜரை நாசப்படுத்தி விட்டு, தபாலில் சேர்த்துவிட்டதாகப் பொய்யும் சொல்லலாமென்ற துணிவும் அவனுக்கு ஏற்பட்டுவிட்டது.

ஆனால் பாவம்; அவனும் அவன் வாகனமும் பஞ்சாயத்தார் வீட்டைவிட்டு கொஞ்சதூரம் நகருவதற்குள், அவசர அவசரமாகக் கரகமாடிக் கண்ணன் அங்கே வந்து சேர்ந்தான். அவனே, சுருளிமலையிடமுள்ள அந்த மகஜரைக் கொடுக்கும் படியும், தானே கொண்டுபோய் அஞ்சலில் சேர்த்துவிடுவதாகவும் கூறினான். பஞ்சாயத்தாரும் அதை ஒத்துக்கொண்டார். சுருளிமலை எதுவும் பேச முடியவில்லை. தானே எடுத்துச்சென்று அதைக் குப்பையில் போட்டுவிட எண்ணியிருந்தான் ஆனால் நிலைமை மாறிவிட்டது. மகஜர் கரகமாடிக் கண்ணன் கையிலே சிக்கிவிட்டது அன்றைக்கே அது தபாலிலும் அனுப்பப்பட்டது.

இந்தச் செய்தியை பொன்மணியிடம் சுருளிமலை கூறியதும் அவளுக்கு நெருப்பிலே விழுந்ததுபோல இருந்தது. தன் கையெழுத்தையும் அறவாழி பார்த்துவிட்டான் என்பதைத் தம்பி மூலமே தெரிந்துகொண்டு மிக மிக வருந்தினாள்.

எப்படியாவது அறவாழியைப்பார்த்து, தான் செய்த தவறுதலுக்கு மன்னிப்பு கேட்கவேண்டுமென முடிவுசெய்தாள். இரண்டு மூன்று நாட்கள் முயன்றாள்; முடியவில்லை. இரண்டு

நாட்கள் கழிந்தபின் ஒருநாள், சந்தைக்குச் செல்வதற்காகப் பானைசட்டிகளைக் கூடையில் அடுக்கிக்கொண்டு புறப்பட்டாள் பொன்மணி! போகும் வழியிலேதான் அந்தப்பள்ளிக்கூடம்! எவ்வளவோ நாட்கள் அதன் வழியே சந்தைக்குச் சென்றிருக்கிறாள் அன்று மட்டும் ஏதோ ஒரு காந்தசக்தி அவளை இழுத்து நிறுத்தியது!

காலைநேரம் ... பள்ளியின் சுற்றுப்புறங்களைச் சீர்படுத்தும் வேலையில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தார்கள் அவர்கள் எப்போது அந்த இடத்தைவிட்டு நகருவது? பிறகு, அவர்களுக்குத் தெரியாமல் எப்போது அறவாழியைப்போய் சந்திப்பது? இப்படி எண்ணமிட்டவாறு அங்குமிங்கும் நடை பழகிக்கொண்டிருந்தாள். அறவாழியைச் சந்திக்காமல் போவதில்லையென்ற திடமான முடிவுடனேயே சமயத்தை எதிர்பார்த்திருந்தாள்.

ஒரு ஆண்மகனுடன் வலியச்சென்று பேசுவது கிராமீயப் பெண்களின் இலக்கணத்திற்கு ஒத்ததல்ல என்பதை அவள் புரிந்துகொண்டிருந்தாலும், தன்னைப்பற்றி அறவாழி கொண்டிருக்கும் தவறான எண்ணத்தை எப்படியாவது மாற்றியாக வேண்டும்—அதற்கு ஒரேவழி அவனோடு மனம்விட்டுப் பேசுவதுதான் என்பதைப் போராடிக்கொண்டிருக்கும் அவள் உள்ளத்திற்கு அறிவுறுத்தினாள். பள்ளிக்கூடத்து ஒதுக்குப்புற அறை யொன்றில் அறவாழி நடமாடுவது அவளுக்குத் தெரிந்தது.

ஆனால், அவன் அவளைக் கவனிக்கவில்லை. பொன்மணி அந்த அறையைப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தாள். அறவாழி வேறுபுறம் திரும்பி உட்கார்ந்துகொண்டான். காலையில் எழுந்ததும் வழக்கமாக அவன் பாடுகிற

"உலகமிசை உணர்வெழுப்பி உதித்துவிட்டான் செங்கதிரோன்"

என்ற பாடலை உரக்கப் பாடினான். பாடியவன் தனக்குத்தானே வெட்கப்பட்டுக்கொண்டான்.

காரணம்; அவன் பாடிய சமயத்தில் கிழக்கே செங்கதிர் இல்லை. வானம் இருண்டிருந்தது. மழை வருவதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. சிறிது நேரத்தில் மழைத் தூறலும் விழ ஆரம்பித்தது அறவாழி ஜன்னல் கதவுகளைச் சாத்திவிட்டு மறுபடியும் உட்கார்ந்து கொண்டு திருக்குறளை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தான்.

எத்தனையோ நாட்கள் அவன் அதிகாலையில் திருக்குறளை எடுத்துப் படித்திருக்கிறான் அப்போதெல்லாம் நூலைப் புரட்டும் போது அறத்துப்பால் — பொருட்பால் — என்ற பகுதிகள் கண்ணிலே படும் அன்றைக்கு என்னவோ சொல்லிவைத்தது போல மூன்றாவது பால்தான் அவன் கண்ணெதிரே வந்து நின்றது.

"காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலைமலரும் இந்நோய்!"

—நாலைந்து தடவை திருப்பித்திருப்பி அந்தக் குறளை மனப் பாடம் செய்வதுபோல படித்தான்

அடுத்தக் குறளில் அவன் விழி தாவிற்று. தெருவிலே தொழிலாளிகள் மழைத் தூறலைக் கண்டதும் அவசர அவசரமாக வேலையை முடித்து விட்டுக் கரையேறியது பொன்மணிக்கு சௌகரியமாகப் போயிற்று பானை சட்டிகளைக் கீழே இறக்கி வைத்தாள். மெல்ல மெல்ல நடந்து அறைப்பக்கம் போனாள் பொன்மணியின் வருகை கண்ட அறவாழிக்குத் தூக்கி வாரிப் போட்டது.

"யார்? நீயா?" என்றான் ஆச்சரியத்தோடு!

"ஆமாம்!" என்றாள் அவள் நாணத்தோடு!

"தடால்..."

"படபட!" என்று தெருவிலே ஒலி கேட்டது பானைகள் உடைந்த சப்தம்தான் அது! பொன்மணி, தெருப்பக்கம் ஓடிப்போய்ப் பார்த்தாள்

வாசலில் நின்ற தென்னை மரத்திலேயிருந்து ஒரு பெரிய மட்டை கீழே விழுந்து, பானைகளை சுக்கல் சுக்கலாக உடைத்தெறிந்துவிட்டது

கலைஞர் மு. கருணாநிதி · சுருளிமலை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்