அத்தியாயம் 19 · 19 / 26
அத்தியாயம் 19
Chapter 19
மூல ஸ்கேன் 144–151
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
19
"அதோ கேட்கிறதே புல்லாங்குழல் சப்தம்—காதில் விழுகிறதா? அது யார் தெரியுமா? அவன்தான் இந்த ஊருக்குக் கிருஷ்ணன்—சுருளிமலை யென்று ஒரு சுட்டிப் பயல்!" என்றான் சிங்காரம்.
"பார்த்தேன்—பார்த்தேன்—தெரியும் அந்தப் பையனை!" என்று அறவாழி கூறிக்கொண்டே தன்முகத்தில் ஏற்பட்ட உணர்ச்சியின் சாயலை சிங்காரம் பார்த்துவிடுவானே எனப் பயந்து வேறுபக்கம் திரும்பிக்கொண்டான்.
சுருளிமலை யென்றதும் அவனுக்குப் பொன்மணியின் உருவமே விழிகளில் சதிராடத் தொடங்கியது. அவள் வீட்டுக்குச் செல்ல நேரிட்டதும்—அவள் தாய் தந்தஅன்பு உபசரணைகளுக்கு ஆளானதும்—அனைத்தையும்விட தேள் கொட்டிய நிகழ்ச்சியில் பெற்ற ஆனந்தமும்—அவன் உள்ளத்தை இனிப்பாக்கிக் கொண்டிருந்தன.
அந்த இன்பநினைவுகளைக் கலைக்கும் வகையில் சிங்காரம் பேச்சுக் கொடுத்தான்.
"இந்தப் பயலுக்கு ஒரு அக்காள் உண்டு—அழகான பொண்ணு! ரொம்பநல்லகுணம்! பொன்மணியென்றால் பொன்மணியேதான்! பெயருக்கேத்த பெண்ணு! அவளை எனக்குக் கல்யாணம்செய்து வைக்கணுமனு என் தங்கச்சிக்கு அபாரமான ஆசை!"
அறவாழியின் முகம் திடீரெனமாறியது. அந்த மாற்றம் வெளியேதெரியாமல் இருக்க அவன்பெரிதும் கஷ்டப்பட்டான். மிக அலட்சியமாக அந்தச்சேதியைக் கவனிப்பதுபோல் பாசாங்கு செய்தான்.
"ஏன்; நல்ல பெண் என்றால் தங்கச்சி இஷ்டப்படி கல்யாணம் செய்து கொள்வது தானே?" என்று கேட்டும் வைத்தான். அதைக் கேட்கும் போது அவனுக்கு ஒரே பயம். எங்கே, 'ஆமாம்; அப்படித்தான் நினைத்திருக்கிறேன்' என்று அவன் சொல்லி விட்டால் என்ன செய்வது என்று!
நல்ல வேளையாக சிங்காரம் அப்படி யொன்றும் அதிர்ச்சி தாக்கூடிய பதிலை அளிக்கவில்லை. "என்னுடைய இரண்டாவது தங்கச்சியாகப் பொன்மணியை நான் நினைத்திருக்கிறேன்!"
சிங்காரத்தின் இருதயத்து ஆழத்திலேயிருந்து அந்த வார்த்தைகள் பீறிட்டு வெளிக் கிளம்பியதை அறவாழி உணர்ந்து கொண்டான். ஆயினும் தன் உணர்ச்சிகளை அங்கே கொட்டி விடாமல் தன்னை நிதானப்படுத்திக் கொண்டான்.
"என் தங்கச்சி கற்பூரம் இருக்கிறதே, அது அசல் கற்பூரமேதான்! நெருப்புக் குச்சி பட்டால் பற்றிக் கொள்ளும். 'திடீர், திடீர்' என ஆவேசம் வந்து ஆடும். அதைப் போலவே கோபமும் வந்துவிடும்—ஒருவர்மீது அன்பும் வந்து விடும்! பாரேன்; ஒரு வேடிக்கையை! அந்தப் பொன்மணி மீது ஒரு கண்ணை வைத்துக் கொண்டு சுற்றி அலைகிறான் அந்தக் கண்ணன். இந்த விஷயம் புரியாமல் அவன் மீது ஆசை கொண்டு திரிகிறாள் என் தங்கை! அவளோட காதலன் தேடியலையும் பெண்ணை என் மனைவியாகப் போகிறாளாம். என் குடும்பத்துப் பரம விரோதியை அவள் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாளாம்—எப்படியப்பா என் தங்கச்சியின் பைத்தியக்காரத் தனம்!" என சிங்காரம் ஆயாசத்தோடு கேட்டான், அறவாழியைப் பார்த்து.
அறவாழிக்கோ, கண்ணன் தன் காதல் விவகாரத்திலும் பகைவனாக வந்து முளைத்து விடுவான் போலிருக்கிறதே யென்ற பயம் தோன்றியது.
இருப்பினும் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக. பெண்வீட்டாருக்குக் கண்ணனுக்குக் கொடுக்க சம்மதம் தானே?" என்று ஆவலாக வினாவினான்.
அதெல்லாம் ஒண்ணுமில்லை அப்படியே அவுங்க சம்மதித்தாலும் நான் அந்தக் கல்யாணம் நடக்க விடமாட்டேன். கண்ணனுக்குப் பெண்ணு கொடுக்கிறதைவிட கடலில் கட்டி மிதக்க விடலாம்!"
இப்படி ஆவேசமாகப் பேசினான் சிங்காரம். தன்னுயிர்ப் பொருளைக் காப்பாற்றிடும் வேலைக்கு இன்னொரு துணை வலுவில் கிடைத்திருப்பதை யெண்ணி யெண்ணி மகிழ்ந்தான் அறவாழி, அவனுக்கு சிங்காரத்திடம் இன்னும் நெருங்கி உறவு கொள்ள வேண்டும் போலிருந்தது.
"நாமிருவரும் ஒருநாள் பழக்கத்திலேயே எவ்வளவோ பேசிவிட்டோம். ஆனால்—உன் மனசிலேஉள்ள சுமை எதையும் என்னிடம் இறக்கவில்லை!" என்று வருத்தப்பட்டுக் கொண்டான்.
"கவலைகள் துன்பங்கள் எல்லாம் என்னோடு இருக்கட்டும். நீவேற அதையெல்லாம்கேட்டு வீணு மனதை அலட்டிக் கொள்ளாதே தம்பீ!"—சிங்காரம் கண்களை மூடிக்கொண்டான் அவன் விழிகள் குளமாகியிருப்பதை மறைக்கவே அப்படிச் செய்தான். ஆனால் அவன் நினைத்தற்கு மாறாக, இமைகள் வழியே நீர்த் துளிகள் முட்டி மோதிக்கொண்டு அவன் கன்னத்தை நனைத்தன.
"பழி தீர்த்துக் கொள்ள சமயம் பார்த்திருக்கிறேன். அந்தப் பாதகன் குடும்பத்திலேயே சம்பந்தம் செய்யத் துடிக்கிறாளே; என் தங்கை! அய்யோ! அப்பா! நான் என்ன செய்வேன்? உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை எப்படி நிறைவேற்றுவேன்?" என்று வாய்விட்டு அலறினான் சிங்காரம்.
முகத்தைக் கையால் பொத்திக்கொண்டு மீண்டும் அழத் தொடங்கினான்.
"மகனே! நீ செய்து முடிப்பாய் என்று நம்பித்தான் நான் மகிழ்ச்சியோடு சாகிறேன். அந்தக் குடும்பம் பூண்டற்றுப் போய் விட வேண்டும். குழந்தை குட்டிகள் இருக்கிறார்களே என்று கொஞ்சமும் கருணை காட்டாதே! ஊரார் தூற்றுவார்களே யென்று ஒரு கணமும் தயங்காதே! சட்டம் தடுக்குமே யென்று
அஞ்சாதே! ஊரையும் ஊராளும் சட்டத்தையும் விடப் பெரியது தந்தையின் சொல் என்பதை மறவாதே! நீ செய்யப் போகும் காரியத்தை யார் தடுத்தாலும் கவலைப்படாதே! மகனே! நானே ஒரு சமயம் மீண்டும் உயிர்பெற்று வந்து உன்னைத் தடுத்தால்கூட நீ கேட்கக்கூடாது! கரும்புள்ளி! செம்புள்ளி! கழுதை ஊர்வலம்! அந்தக் காட்சியை ஊரார் காணவேண்டும் அதன் விளைவு கொலையாக இருந்தாலும் சரி; எதுவாக இருந்தாலும் சரி; உனக்கு ஆயுள் தண்டனை—தூக்குமேடையே கிடைத்தாலும் சரி; கொஞ்சமும் அஞ்சாதே! உயிருக்குத் துணிந்து என் கட்டளையை நிறைவேற்று! இதோ, உன் தங்கை—இவளுக்கு நீ வாழ்வளித்தால் போதும். உன் வாழ்வைப்பற்றிக் கவலைப் படாதே! இவள் வயிற்றில் தோன்றும் குலக்கொடி நம் குடும்பப் பெருமையை பல தலைமுறைகளுக்கு நீட்டிச் சொல்லட்டும்—நீ அதை யெண்ணி உன் வாழ்க்கையை என் கட்டளைக்காக தியாகம் செய்து விடு! எந்த அப்பனும் தன் மகனுக்கு இப்படியொரு கடுமையான தண்டனையைத் தரமாட்டான்—ஆனால் நான் தருகிறேன்! காரணமில்லாமல் தரவில்லையடா என் கண்ணே! பழி யுணர்ச்சிக்குக் காரணம் முழுதும் உனக்குக் தெரியும்! எந்தப் பாவியும் செய்யத் துணியாத படுபாதகச் செயலைச் செய்த குடும்பம் அது! அந்தக் குடும்பம் வாழலாமா? அதற்குப் பெருமை இருக்கலாமா? ஊரார் அந்தக் குடும்பத்தின் ஊழலைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கலாமா? ஆகவே பழிவாங்கு மகனே—பழி வாங்கு! பதிலுக்குப் பதில்! பழிக்குப் பழி! என் கட்டளையை நிறைவேற்றிவிட்டு அதன் பிறகு என் சமாதியை வந்துபார்! அதுவரையில் என் சமாதியை நீ தூர இருந்தும் பார்க்கக்கூடாது! எந்தக் காரணத்திற்காகவாவது நீ என் கட்டளையை நிறைவேற்றாமற் போய் விட்டால்...... நீ என் சமாதி மீது காரி உமிழ்ந்ததாக அர்த்தம்! என் சமாதிக்கு எருக்கம்பூ மாலை சாத்தியதாக அர்த்தம்!"
—மரணப்படுக்கையில் தந்தை கூறிய அந்த வாசகங்கள், சிங்காரத்தை அணு அணுவாகக் கூறு போட்டுச் சித்திரவதை செய்தன. தந்தையின் கட்டளையை நிறைவேற்றுமற் போய் விட்டால்...?
அய்யோ ... தந்தை சொன்ன கடுமையான மொழிகளை நினைக்கவே நெஞ்சு தகிக்கிறதே யெனப் புலம்பி அழுதான்
"யார் தடுத்தாலும் கவலைப்படாதே!"—இது தந்தையின் வீர உரை!
இப்போது தடுத்து நிற்பதோ தங்கை! அந்தத் தங்கைக்கோ நல்வாழ்வு அளிக்கவேண்டுமென்று தந்தையின் கட்டளை! இந்த விசித்திரமான சூழ்நிலையை அவன் யாரிடம் சொல்லிப் பரிகாரம் தேடமுடியுமா? கடற்கரையில், ஒரு அலைகொண்டு வந்து எறிந்தபொருளை, இன்னொரு பெரிய அலைவந்து இழுத்துக் கொண்டுபோய், மீண்டும் ஒரு அலை அதைக் கரைக்குக் கொணர்ந்து, மற்றொரு அலை கடலுக்கே எடுத்தேகி—இப்படி மாறி மாறி ஆட்டிவைப்பதுபோல், தந்தையின் உத்தரவு அவனை அலைக்கழித்தது. மனப்போராட்டத்தில் மிகுந்த அவஸ்தைப்படுகிறான் என்பதை அறிந்த அறவாழி, மேலும் அவனை வேதனைப்படுத்த விரும்பாமல் மௌனமாகவே உட்கார்ந்திருந்தான்.
"ஏன் தம்பி மௌனமாகிவிட்டாய்! ஏதாவது பேசேன்" என்று கண்களைத் துடைத்துக் கொண்டான் சிங்காரம்.
"இப்போது ஒன்றும் பேசவேண்டாம். நாளைக்கு எனக்குப் பள்ளிக்கூடம் விடுமுறை. எங்கும் போகாமல் பள்ளியிலேயே உட்கார்ந்திருக்கிறேன். தயவு செய்து நீ அங்கு வந்தால்..." என இழுத்தான் அறவாழி.
"கட்டாயம் வருகிறேன்—அவசியம் வருகிறேன்!" என எழுந்தான் சிங்காரம்.
எழுந்தவன் மரத்தைப் பார்த்து "மைனா" என ஒருமுறை கூறினான். பிறகு, அதைவிட்டு நகரத் தொடங்கினான். அறவாழி, அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு ஆழ்ந்த சிந்தனையுடன் திரும்பினான். கோயில் காளைமீது சவாரி செய்துகொண்டு சுருளிமலை வந்தான். அவனைக் கண்டதும் அறவாழிக்கு ஏதோ ஒரு விவரிக்க வொண்ணா மகிழ்ச்சிப் பெருக்கு!
"என்னு தம்பி சுகமா? வீட்டிலே அப்பா, அம்மா, எல்லோரும் சுகமா?" எனக் கேட்டான்.
"அக்காள் சுகமா?" என்று கேட்கவில்லை அப்பா அம்மாவைப்பற்றிக் கேட்டதெல்லாம் வெறும் உபசாரத்திற்கு 'அக்காள் சுகமா?' என்றுதான் அவன் கேட்டிருக்க வேண்டும் அதைக் கேட்க அவனுக்கே ஒரு வெட்கம்!
சுருளிமலையோ சாதாரணமாகப் பதில் சொன்னான்; "அக்காள் உட்பட அனைவரும் சுகம்!" என்று!
சுருளிமலை இந்தப் பதில் வேண்டுமென்றே—கிண்டலாகவோ சொல்லவில்லை. அக்காள் இருப்பதை அறவாழி மறந்து விட்டானே யென்று கருதி அவன் அப்படி விடையளித்தான். ஆனால் அறவாழிக்கு அது சுருக்கென்று தைத்தது. குற்றமுள்ள நெஞ்சல்லவா?
"ஆமாம்—எப்ப பார்த்தாலும் கோயில் காளை—புல்லாங்குழல் இப்படி—ஊர்சுற்றுகிறாயே; படிப்பதில் உனக்கு ஆசையே கிடையாதா?"—அறவாழியின் கேள்விக்கு சுருளிமலை பதில் கூறவில்லை. அறவாழி தொடர்ந்தான்.
"நான் சொல்வதைக் கேள். ஒரு நாளைக்குக் கொஞ்ச நேரமாவது படி!"
பதில் இல்லை. சிரித்தான் சுருளிமலை.
"நாளையிலே யிருந்து படிக்கிறாயா?"
இதற்கும் மௌனம்தான்!
"படிப்பு என்றால் உனக்குப் பிடிக்காதா?"
சுருளிமலை அறவாழியையே உற்றுப் பார்த்தான்.
"இளமையில் கல் என்பது முதுமொழி தம்பி! இந்த வயதிலே படித்தால்தான் நல்லது. ஐந்தில் வளையாதது பிறகு ஐம்பதில் வளையாது! எண்ணும் எழுத்தும் கண் எனத்தகும். படிப்பு மிகவும் அவசியம்! மிகவும் அவசியம்! சொல்வது புரிகிறதா தம்பி!"
சுருளிமலை இன்னும் உன்னிப்பாக அறவாழியைக் கவனித்தான் பதில் கூறவில்லை.
"என்ன விழிக்கிறாய்? நான் சொல்வது ஏதோ பைத்தியக் காரன் உளறல்போல இருக்கிறதா? அப்படியெல்லாம் நினைக்காதே படித்தால்தான் உலக விஷயம் தெரியும். அறிவு பிரகாசமடையும். அலட்சியமாய் நினைக்காதே தம்பி!"
இப்போது சுருளிமலை, கலகலவென நகைத்தான். அறவாழிக்கு ஒன்றும் புரியவில்லை. திகைத்தான். பின் சுருளிமலை தன் மடியிலிருந்து ஒரு காகிதச் சுருளை யெடுத்து அறவாழியிடம் கொடுத்தான். அறவாழி, அதை ஆவலாக வாங்கிப் பிரித்துப் பார்த்தான். அவனை உடனடியாக அந்த ஊரைவிட்டு வேறு ஊர் பள்ளிக்கூடத்திற்கு மாற்ற வேண்டுமென்று ஊர்மக்கள் கையெழுத்திட்ட மகஜர் அது!
மகஜரைப் பார்த்ததும் அறவாழி அவ்வளவு திடுக்கிடவில்லை. அவன் எதிர்பார்த்ததுதான். அதில் எழுதப்பட்டிருந்த குற்றச் சாட்டுக்களும் அவனைக் கலக்கிடவில்லை. ஐந்தாறு தாள்கள் இணைக்கப்பட்டிருந்த அந்த மகஜரில் முதல் தாளில் அறவாழியை மாற்றிட வேண்டும் என்பதற்கான காரணங்கள் எழுதப்பட்டிருந்தன. மரியாதை யில்லாதவன்; ஊராரிடம் ஆணவமாக நடந்து கொள்கிறான்; எல்லாம் தெரிந்தவனைப்போல் மற்றவர்களுக்குப் புத்தி சொல்கிறான்; ஒழுங்காகப் பாடம் நடத்துவதில்லை; பிள்ளைகளை உருப்பட வைக்கமாட்டான்; வீண் கதை பேசுவதே பள்ளிக்கூடத்தில் வேலை—இப்படிப்பட்ட குற்றச் சாட்டுக்கள் முதல் பக்கம் முழுதும் நிரப்பிவிட்டு, அடுத்த தாள்களில் ஊர்மக்கள் தங்கள் கையெழுத்துக்களை நிரப்பியிருந்தார்கள்.
பஞ்சாயத்தார் பரமசிவத்தின் கையெழுத்தே முதல் கையெழுத்து! யார் யார் கையொப்பமிட்டிருக்கிறார்கள் என்று வரிசையாகப் பார்த்து வந்த அறவாழி, இதயத்தில் சம்மட்டியடி விழுந்ததுபோல் திடுக்கிட்டான்—வேதனைப்பட்டான்.
காரணம்; கையெழுத்து வரிசையின் கடைசியில் பொன்மணியின் கையெழுத்தும் இருந்தது!
கலைஞர் மு. கருணாநிதி · சுருளிமலை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்