அத்தியாயம் 18 · 18 / 26
அத்தியாயம் 18
Chapter 18
மூல ஸ்கேன் 136–144
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
18
கண்ணனுக்கே கைவலிஎடுத்து களைப்பு மேலிட்ட பிறகே. அவன் சிங்காரத்தை அடிப்பதை நிறுத்தினான்.
சிங்காரத்தின் உதடுகளிலேயிருந்து ரத்தம்கசிந்து கொண்டிருந்தது. காதோரத்தில் ரத்தம் பெருகிவழிந்து கொண்டிருந்தது. கன்னமும் நெற்றியும் மளமளவென உப்பி வீங்கி விட்டன. அசையாமல் நின்றுகொண்டிருந்த அவன் ஒரு சூடான பெருமூச்சால் பூமியில் தூசியைக் கிளப்பிவிட்டு சிறிது நகர்ந்தான். கால்களே ஒரு அடிகூட எடுத்துவைக்கமுடியவில்லை. ஆனால் அந்த சிரமத்தை அவன் அவ்வளவு பேருக்கும் நேராகக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. இதுபோன்ற நெருக்கடி அவனுக்கு எத்தனையோ முறை அவன் தொழிலில் ஏற்பட்டிருக்கிறது
தீச்சட்டி தூக்கி உற்சாகத்தோடு ஆடிக்கொண்டிருக்கும் போது கை கொப்பளித்துவிடும். அனல் பறக்கும். உடல்தகிக்கும். அப்போதெல்லாம் உறுதியோடு சமாளித்துப் பழக்கப்பட்டிருக்கிறான். அதனால் பல்லைக் கடித்துக்கொண்டு அதை விட்டு நடக்கத் தொடங்கினான். கூட்டத்தில் ஒரே அமைதி குடிகொண்டிருந்தது. கற்பூரம்மட்டும் விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தாள். எல்லோருமே அவளுக்கு ஆவேசம் வந்துவிடும் என்று எதிர்பார்த்தார்கள். நல்ல வேலையாக அப்படியொன்றும் ஆகவில்லை.
அமைதியைக் கிழித்துக்கொண்டு சிரஞ்சீவி போட்டசப்தம் மட்டும் பஞ்சாயத்தாரை ஆத்திரத்திற்காளாக்கியது. "மாலை கொண்டாங்க! மாலை கொண்டாங்க! கரகமாடிக் கண்ணனுக்கு ஜேபோடுங்க! செத்தபாம்பை அடிக்கும் வீராதி வீரனுக்கு ஜே! ஜே! ஜே!" என்று சிரஞ்சீவி கத்தி, அதற்குப் பரிசாகத் தந்தையிடம் ஒரு முரட்டுக்குட்டும் தலையில் பெற்றுக் கொண்டான்.
இத்தனை வேதனையான வேடிக்கைகளையும் பார்த்துக்கொண்டிருந்த அறவாழியின் உள்ளம் இயற்கையாகவே சிங்காரத்தின் பின்னால் ஊர்ந்திடத்தொடங்கியது. சிங்காரத்தின் உருவம் சித்தரிக்கிற குணாதிசயமும் அவன் நடவடிக்கை காட்டுகிற குணாதிசயமும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டு அறவாழியைக் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டன. அந்த அதிசயமான மனிதனைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டியது மிக அவசியமென அறவாழி முடிவுசெய்துகொண்டான்
சிங்காரம் தெருக்கோடி திரும்பும்வரையில் காத்திருந்து விட்டு, அவன் திரும்பியதும் அவனைப்பின் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தான். அவன் நேரில்கண்ட விசித்திரமான காட்சிக்கு எப்படியாவது விளக்கம் பெற்றாக வேண்டுமென்ற ஆசை அலை மோதிற்று. சிங்காரமோ தெருவில் எங்கும் நின்றானில்லை. எந்த வீட்டிலும் நுழைந்தானில்லை. எந்த இடத்திலும் உட்காரவும் இல்லை. மெதுவாக எங்கேயோ போய்க்கொண்டிருந்தான். அதேவேகத்தில் அறவாழி அவனைத் தொடரவேண்டியதாயிற்று.
சிங்காரத்தின் இருதயத்திலே எத்துணை பயங்கரமான சுழற்சிகள்! சூறாவளிக்காற்றும்—இடியும் மின்னலும்—பெருமழையும்—பூகம்ப அதிர்ச்சியும்—இவைகளுக்கிடையே ஒரு தாயில்லாக் குழந்தையும் போல—அவன் இருதயம் ஒலியெழுப்பிக் கொண்டிருந்தது. சிணுங்கி அழும்—'வீர், வீர்', எனக்கத்தும்—செறுமும்—'கோ' வெனக்கதறும்—இப்படிப் பலவித அழுகையுடன் அவன் உள்ளம் துடிதுடித்துத் தவித்தது. எந்தத் தங்கையை அவமானகரமான வார்த்தையால் அந்தக் கண்ணன் தீட்டினானோ; அதே தங்கை அதே கண்ணனிடம் தன்னை ஒப்படைத்து விடத் துணிந்து விட்டாள்—துணிந்தது மட்டுமல்ல; அண்ணனைவிட
அந்த அயோக்கியனே பெரியவன் என்று வாதிடவும் தைரியம் பெற்றுவிட்டாள்—அதோடு மட்டுமல்ல; அவனை அண்ணன் அடிக்கக்கூடாது—ஆனால், அண்ணனை அவன் மனம்போனவாறு தாக்கிக் கொல்லவும் செய்யலாம் என்ற அளவுக்குத் தன் மனசைக் கல்லாகவும் மாற்றி சகோதர பாசத்திற்குச் சீட்டுக் கொடுத்து அனுப்பிவிட்டாள். இந்த அநியாயமான மாறுதலை—திடீர் அதிர்ச்சியைத் தீச்சட்டி சிங்காரத்தால் எப்படித் தாங்கிக் கொள்ள இயலும்.
தங்கை கற்பூரத்தைக் கண்போல் காத்தவன் தந்தையும், தாயும் தங்கள் மரணத்தறுவாயில் அவனிடம் பெற்ற வாக்குறுதியே கற்பூரத்திற்கு எந்தவித மனத்தாங்கலும் வராமல் அவள் இஷ்டப்படி நடத்தவேண்டும் என்பதுதான் அதோடு இன்னொரு சத்தியத்தையும் அவன் தந்தை அவனிடம் ரகசியமாகப் பெற்றிருக்கிறார் அதை நினைக்க நினைக்க அவன் நெஞ்சு நெருப்பு பட்ட புண்போல ஆயிற்று. மார்பகத்தை அழுத்திப்பிடித்துக்கொண்டான்—அவனையும் மீறி இதயமும் சுவாசப்பைகளும் காற்று தாங்காத பலூனைப்போல வெடித்துவிடும் பீதி அவனுக்கு
கடைசியில், எங்கேதான் போய் அவனது கால்கள் நிற்கப் போகின்றன? இந்தக் கேள்வியோடு அறவாழி பின்சென்று கொண்டிருந்தான்.
அதோ அந்த வேப்பமரம்! சிங்காரம் அங்கேபோய் நின்றான். அறவாழி, தூர இருந்து கவனித்தான். சிங்காரம், தலையை நிமிர்த்தி மரத்தின் கிளையை அண்ணாந்து பார்த்தான். அவ்வளவுதான்—அவன் இருதயத்தை அழுத்திக் கொண்டிருந்த வேதனை யத்தனையும் மண்ணுக்கடியிலிருந்து எரிதழல் கிளம்பி வழிவதுபோல் பொங்கி வழியத் துவங்கிற்று. "அய்யோ, மைனா!" என்று முகத்தில் அறைந்து கொண்டு 'கோ' எனக் கத்தி அழுதான். சிறு பிள்ளையைப் போல் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான். வேப்பமரத்தின் அடிபாகத்தைத் தழுவிக் கொண்டு புலம்பினான்.
அறவாழிக்கு மேலும் வியப்பு ஏற்பட்டதே தவிர, விளக்கம் கிடைக்கவில்லை. அருகே சென்று தீர விசாரித்துவிடுவது என்று தீர்மானித்தான் மரத்தடிக்கு வந்தான். தன்னையறியாமல் அழுதுகொண்டிருந்த சிங்காரத்திற்குத் தன் தோள்பட்டையில் யாரோ கைவைத்திருப்பது வெகு நேரத்திற்குப் பின்பே தெரிந்தது யார் என்று அறிய திரும்பிப் பார்க்கக் கூட அவன் நினைக்கவில்லை போலும்—கண்ணனாகத்தான் இருக்கும் என அவனே முடிவு கட்டிக் கொண்டானோ—அல்லது அப்படி ஒரு திடீர் உணர்ச்சி அவனை நினைவிழக்கச் செய்ததோ—எப்படியோ 'சரே'லெனத் திரும்பியதும் திரும்பாததுமாக அறவாழியின் கன்னத்தில் ஒரு குத்து விட்டான் அறவாழி, வலி தாங்க முடியாமல் தன் முகத்தைப் பொத்திக்கொண்டு பின்னுக்கு நகர்ந்தான். அதன் பிறகுதான் சிங்காரத்திற்குத் தான் தவறு செய்து விட்டோமென்பது புரிந்தது கண்ணனால் புண்ணாகிவிட்ட அவன் உடல் வேதனை கூட அப்போது மறந்து போயிற்று. அறவாழியின் முகத்தைப் பார்த்துக்கொண்டே நின்றான். அந்தப் பார்வையில் மன்னிப்புக் கேட்கும் ஜாடையிருப்பதை அறவாழி உணராமல் இல்லை.
"கவலைப்படாதே! எனக்கும் இந்த ஊருக்கும் சரியான பொருத்தம்—வந்ததும் வராததுமாக சரியான வரவேற்பு! நல்ல அடி—உதை—குத்து—முட்டு—பிரமாதமான உபசரிப்பு! மகத்தான உபசரிப்பு!" என்று சிரித்துக்கொண்டான் அறவாழி
சிங்காரத்திற்கு முழு விபரமும் புரியாவிட்டாலும், அறவாழி தன்மீது கோபப்படவில்லை என்பதை அவன் பேச்சிலே காணப்பட்ட மென்மையிலும் இனிமையிலும் தெரிந்துகொண்டான். அருகே சென்று அவன் கன்னத்தைத் தடவி கொடுத்து, "தவறுதலாக ஆத்திரத்தில் அடித்து விட்டேன்—மன்னிச்சிடு தம்பி!" என்று தழுதழுத்த குரலில் கெஞ்சினான்.
அறவாழிக்கு விழிகளில் நீர் துளிர்த்தது. அவனும் சிங்காரத்தைத் தழுவியவாறு, வேப்பமரத்து மேடையில் அமர்ந்தான்.
"நீ ஒரு அதிசயமான மனிதன்!" என்றான் அறவாழி.
"என்னைவிட நீதான் தம்பி பெரிய மனுஷன்!" என்று அவனைத் தட்டிக் கொடுத்தான் சிங்காரம்
"ஆமாம்—இதுவரையில் நடந்த விநோதமான நிகழ்ச்சிகளுக்கு நான் காரணம் புரிந்து கொள்ளலாமா?" என்று ஆவலாகக் கேட்டான் அறவாழி. சிங்காரத்தால் பேச முடியவில்லை. ஆனாலும் தன் இருதயச் சுமையை யாரிடமாவது உடனடியாக இறக்கிவிட வேண்டும் போலிருந்தது.
"அந்தத் தெருவிலே நடந்த சண்டை ஆரம்பத்திலே இருந்து நீ என்னைக் கவனித்து வருகிறாயா?"
"ஆமாம்—உன்னைப்பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இன்று நான் கண்ட உன் புதுமையான போக்கிற்கு என்னால் காரணம் கண்டு பிடிக்கவே முடியவில்லை."
"என்னைக் கை வலி யெடுக்கிறவரை தாக்கினானே அவன்தான் கரகமாடிக் கண்ணன்!"
"அவனை எனக்கு நன்றாகத் தெரியும்—அவனைப் பற்றிய கதையை நானே உனக்குச் சொல்வேன்."
"அவன் எனக்குப் பரம விரோதி—என் தாயின் கர்ப்பத்தில் நான் ஜெனிப்பதற்கு முன்பே அவன் வீட்டுக்கும் என் வீட்டுக்கும் செத்தால் வாழ்ந்தால் கிடையாது என்கிற தூரத்துக்கு அவ்வளவு பகை! அவனைப்போயி என் தக்கச்சி கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாளாம் நியாயமா இது? நீயே சொல்!"
"காதலுக்குக் கண்ணில்லையென்பார்கள்!"
"மூளையில்லை—அன்பில்லை—பாசமில்லை—மானமில்லை—ரோஷமில்லை—என்றெல்லாம் கூடச் சொல்லலாம் போலிருக்கிறது என் தங்கச்சியின் காதலைப் பார்க்கும்போது!"
"என்றைக்கோ பகைமை என்பதற்காக அதை எப்போதும் ஊராட்டிக் கொண்டிருக்கலாமா? புலியும் பசுவும்கூட ஒரு குளத்தில் ஒரே துறையில் தண்ணீர் குடித்தன என்று புராணங்களில் படிக்கிறோம்!"
"அட சும்மா இருப்பா! அது நொண்டிப் புலியா இருக்கும்—அதனால்தான் பாயமுடியாம ஆகியிருக்கும்—இல்லேன்னு மாட்டு ரத்தத்தைக் குடிச்சுத்தான் அது தாகம் தணிச்சிகிட்டுப் போயிருக்கும்!"
"அய்யய்யோ ...! நீ என்னு புராணத்தையே மறுத்துப் பேசுகிறியே—அது பாபமாயிற்றே?"
"புராணமாவது மண்ணாங் கட்டியாவது—நான் எல்லாத்தையும் மறுப்பேன்—எல்லாத்தையும் கொண்டாடுவேன்—என் மனசுக்கு எது சரின்னு படுதோ அதைச் சொல்றதுக்குப் பயப்படவே மாட்டேன். நான் ஒண்ணும் பக்தனும் அல்ல!— பரம பாதகனும் அல்ல! என் பிழைப்பே ஊரை ஏமாத்துற பிழைப்பு! ஆனாலும் அந்தப் பிழைப்பு சரியா நடக்கிறதுக்குக் காரணம் கடவுள் அருள்தான்; காளிகாதேவி கருணைதான் அப்படிங்கிறத்திலே எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு. தெய்வம் கொஞ்சம்தான் வழிகாட்டும் அதுக்குமேலே நடந்துபோக வேண்டியது நம்ப கடமைதானே! ஊருக்குப் பாதை காட்டுகிற கைகாட்டி மரம், கூடவே துணைக்கு வருமா என்ன ?"
சிங்காரம் தன் மனதில் உள்ளதை யெல்லாம் கோர்வை யில்லாமல் அடுக்கிக்கொண்டு வருவதைக் கண்ட அறவாழி, அவனோடு மேலும் பேச்சுக் கொடுத்து அவனைப்பற்றிய விபரங்களை அறியலாம் என்ற நம்பிக்கை கொண்டான்
"உன் வாழ்க்கையிலே கடவுள், கைகாட்டி மரமாகவாவது நின்று வழிகாட்டி யிருக்கிறார். ஆனால் பல அனாதைகளுக்கு அவர் தூக்கு மரமாக உருவமெடுத்து மேல் உலகத்திற்குத்தான் வழிகாட்டியிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்!"
அறவாழி, சாவதானமாக இதைச் சொன்னதும் சிங்காரம் குழப்ப மடைந்தான். 'தூக்குமரம்' என்ற வார்த்தை காதில் விழுந்ததும் மைனாவும், அவள் தொங்கிய மரக்கிளையும் தான் அவன் மனக்கண் முன்னே தோன்றி மறைந்தன.
"மைனா!" என்று ஒருமுறை சொல்லிக் கொண்டான்.
"யார் அந்த மைனா? அவளுக்கும் இந்த மரத்திற்கும் என்ன தொடர்பு? ஒருவேளை அவள்...?" என்று கேள்வியைச் சற்று நீட்டினான் அறவாழி.
"அவளா? அவள் தான் என் வாழ்கையிலே முதலாவதாகவும் கடைசியாகவும் பிரவேசித்து என்னை இப்படி நாசமாக்கி விட்டவள்!" என்று மறுபடியும் அழுதிட ஆரம்பித்தான் சிங்காரம்
"அவள் உன் காதலியா?"
"அதைப்பற்றிப்பேசி என்னை இன்னும் அழவிடாதே—நான் போகிறேன்; முடிந்தால் நான்கொஞ்சம் வெறியடங்கியிருக்கும் போது என்னை சந்திக்கவா! இப்போது என்ன பேசுகிறேன் என்று எனக்கே புரியவில்லை. முக்கியமாக என்வாய்பேசுவது என்காதிலே விழவில்லையென்றால் பாரேன்!" என்று சொல்லி விட்டு எழுந்தான் சிங்காரம்
வேதனைக் களமாகிவிட்ட உள்ளம், அவனை நிலைதடுமாறச் செய்கிறது எனப்புரிந்துகொண்ட அறவாழி, அவனைப் போக விடாமல் தடுத்துப் பக்கத்திலேயே உட்காரவைத்துக் கொண்டான்.
"மைனாவைப்பற்றி நான் ஏதும் கேட்கவில்லை! அதைக் கேட்டால் தானே உனக்கு விசாரம்பிடிக்கிறது, அதிமாக! உன் தங்கையைக் கண்ணன் திருமணம்செய்து கொள்வதில் உனக்கென்ன தடை? அதைச்சொல்!" எனக்கேள்வி போட்டான்.
"அவன் எப்படிப்பட்டவன் என்பதை நீயே நேரில்கண்டாய் எந்த அண்ணனாவது இதுபோன்ற ஒரு ஈனப்பிறவிக்கு—கடைந்தெடுத்த அயோக்கியனுக்குத் தன்தங்கையைக் கொடுத்து அவளைப் பாழாக்குவானா?"—சிங்காரம் பதில் இது!
"சரி—உன்னையும் மீறி அவள், அவனையே திருமணம்செய்து கொண்டால்?"
தங்கையின் மனங்கோணாமல் நடக்கவேண்டும் என்ற தகப்பனாரின் வாக்குறுதியைக் காப்பாற்றுவேன்—ஆனால் இதன்
மூலம் அவருக்களித்த இன்னொரு உறுதியைக் காற்றிலே பறக்க விட்டுவிடுவேன் அப்படி பறக்கவிட்ட பிறகு எனக்கேன் வாழ்க்கை? நானும் என் மைனாவுடன் போய்விடுவேன்!"
"அப்படியென்ன தந்தையிடம் உறுதி அளித்திருக்கிறாய்?"
"கரகமாடிக் கண்ணனின் அப்பன்—அது தவறினால் அவன் மகனாகிய இந்தக் கண்ணன்—இருவரில் ஒருவரைக் கரும்புள்ளி செம்புள்ளி குத்திக் கழுதையில் ஏற்றி ஊர்வலம் விடவேண்டும் என்பதே அந்த உறுதி! அவன் அப்பன் தப்பித்துக்கொண்டான்—மகனுக்காவது அந்த விழாவை நடத்தலாம் என்று வெகு நாளாக நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்குள்ளேதான் இப்படி வந்துவிட்டது!"
"ஏ அப்பா—எவ்வளவு பயங்கரமான சபதம்! ஏன் இப்படி யொரு உறுதியெடுக்கவேண்டும்? அப்படி என்ன அவர்கள் குற்றம் செய்துவிட்டார்கள்?"
"அய்யோ— அந்தக் குற்றத்தைச் சொல்வதற்கே நாக்கு கூசுகிறது. தயவுசெய்து என்னைக்கேட்டுத் தொந்திரவு பண்ணவேண்டாம்!"
அறவாழிக்கு ஆவல் அடங்கவில்லை. எடுத்துக்கொண்டிருக்கிறசபதமோ பயங்கரமாயிருக்கிறது; பழிவாங்கவேண்டுமென்ற உணர்ச்சியோ கொந்தளித்துக் கிளம்புகிறது; அதற்கான காரணத்தைமட்டும் புரிந்துகொள்ளாமல் போய்விட முடியுமா என்ன ? தானோ அதிகமாக அறிமுகமாகாதவன் மேலும் வற்புறுத்திக்கேட்கவும் சிறிது பயமாக இருந்தது இருந்தாலும் உடனே தளர்ந்துவிடாமல், "நான் உனக்குப் பழக்கப்பட்டவன் அல்ல; என்றாலும் ஏதோ ஒரு உணர்வு, உன்பால் இழுத்து விட்டது. உன் கதையைக் கேட்கவேண்டும் போலிருக்கிறது. உன் கண்ணீருக்குக் காரணம் அறியவேண்டும்போல் உள்ளம் துடிக்கிறது. உன் சபதத்தை நினைத்தாலே நடுக்கம் பிறக்கிறது? ஆனால் சபதமெழுந்த விதத்தைமட்டும்கூற மறுக்கிறாய்! இது நியாயமல்ல—என்னை நீ நம்பலாம்—தயவுசெய்து சொல்லு—எவ்வளவு பெரிய ரகசியமாக இருந்தாலும் அதைக் காப்பாற்று
வது என் பொறுப்பு!" என்று சொல்லால் அவனை வளைத்து விட்டுத் தீர்மானித்தான் அறவாழி.
சிங்காரம் வாய்திறக்கவில்லை. அறவாழியையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். தூரத்திலிருந்து புல்லாங் குழலின் ஒலி காற்றிலேமிதந்து வந்துகொண்டிருந்தது.
கலைஞர் மு. கருணாநிதி · சுருளிமலை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்