அத்தியாயம் 17 · 17 / 26
அத்தியாயம் 17
Chapter 17
மூல ஸ்கேன் 127–136
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
17
சிங்காரத்தின்மீது எப்படியாவது பழிவந்து சேரவேண்டும்; அவனைப்போலீசார் மிரட்ட வேண்டும்; அவன் தவிக்க வேண்டும்; ஊரார் சிங்காரத்தைப் பார்க்கும்போது வெறுப்பும் அலட்சியமும்
கொள்ளவேண்டும்; அதையெல்லாம் பார்த்து மகிழ்ச்சியடைய வேண்டும்—எனகோட்டை கட்டிக்கொண்டிருந்த கண்ணனுக்கு சிங்காரம் பழியிலிருந்து மீண்டசெய்தி மிகுந்த வருத்தத்தை அளித்ததில் ஆச்சரியமில்லை
பொதுவாக நேரில்கண்டு குலவிக்கொள்கிறவர்களே காணாத இடத்தில் கதைகள் கட்டிப்புறம் பேசுவது சமுதாயத்தில் புரையோடி வரும் வழக்கமாக இருந்துவரும் காலத்தில் ஜென்மப்பகையாளி என்று ஆகிவிட்ட கண்ணன். சிங்காரத்தைப்பற்றி அவதூறுகள் பேசாமலிருப்பானா என்ன! செய்தி கேள்விப்பட்டதும் முதலில் பஞ்சாயத்தார் வீட்டுக்குத்தான் போனான்.
கண்ணன் வந்தாலே ஏதாவது சிங்காரத்தோடு தகராறு இருக்கும் என்று முடிவுகட்டிக்கொண்டு பேச்சை ஆரம்பிக்கப் பழக்கப்படுத்திக்கொண்ட பஞ்சாயத்தார் "வாப்பா கண்ணா! ஊர்ல ஒண்ணும் வம்பு, துப்பு இல்லியே?" என்று கேட்டார்.
"ஏனுங்க இல்லை? இருக்கிறவம்பும் பெரிசாகும்போல இருக்கு—போதாததுக்குப் புதுவம்பு ஒண்ணு வரும்போல இருக்கு அநேகமாக அதுவும் வந்துட்டுது என்றே சொல்லலாம்!"
"என்னப்பா திடீர்க்குண்டுகளாய்த் தூக்கிப் போடுறே? கொஞ்சம் விபரமாகவே சொல்லு!"
"போலீஸ்காரவங்களுக்கு லஞ்சம் கொடுக்கிற அளவுக்கு சிங்காரம் பெரிய மனுஷனா ஆயிட்டான்!"
"என்னாது? என்னாது?"
"ஆமாங்க! அந்தப்பிணத்தோட முந்தானியிலே மடிஞ்சிருந்த கடுதாசுக்கும் சிங்காரத்துக்கும் சம்பந்தமில்லேன்னு போலீசிலே தீர்மானிச்சுட்டாங்க! எப்படிங்க நியாயம் போற போக்கு?"
"சரி, விட்டுத்தள்ளு—நீ இதைப் பேசுவானேன்—அவன் சிங்காரம் ஆத்திரப்படுவானேன்—மேல மேல சண்டையை வளத்துகிட்டுப் போகாதிங்க!"
"என்ன மோங்க—நான் வீண்வம்புக்குப் போகக்கூடாதுன்னுதான் இருக்கேன்—ஆனா மனசுகேக்குதா? அநியாயம்
அக்கிரமம் நடந்தா என்னால் தாங்கமுடியிலே இதபாருங்க—பக்தி வழிந்தோடுகிற நம்பஊருக்கு ஒரு பாவிப்பயல் வாத்தியாரா வந்திருக்கான்..."
"யாரு—வாத்தியாரு வந்தாச்சா? இன்னும் வந்துசேரலேன்னு சொன்னாங்களே..."
"அவன் வந்துரெண்டு நாள் ஆச்சு! அவனுக்குப்பேரு அறவாழியாம்—ஒரே அதர்மம் பேசுகிறான்—நாஸ்திகப்பயல்! அவன் வரும்போதே அபசகுனம்! ஆண்டவனுக்கே அவன் நம்ப ஊருக்கு வர்ரது பொறுக்கவில்லை. கோயில் காளையை விட்டு முட்டச்சொல்லியிருக்காரு—சரியான அடி வந்ததும் வராததுமாய்! அப்பறம் நம்ப பூஞ்சோலை—அதுதான் ஊருக்கு ஒரு புண்ணியவதி யிருக்கே—அந்த அம்மா வீட்லதான் ரெண்டு நாளா தங்கி உடம்புக்குப் பத்து போட்டுகிட்டு இருக்கிறானாம்..."
"நீ சொல்றது வேடிக்கையாயிருக்கே—பிள்ளைகளுக்கு நல்ல வழியை சொல்லிக் கொடுக்கவேண்டிய வாத்தியார், நாஸ்திகம் பேசுறாரா?"
"ஆமாங்க—இப்ப வர்ற வாலிப வாத்தியார்கள் நூத்துக்குத்தொண்ணூறுபேர் அப்படிப்பட்ட ஆளுகளாய்த்தான் வர்றாங்க... பகுத்தறிவாம் பகுத்தறிவு... பள்ளிக்கூடமெல்லாம் பாழாகுதுங்க!"
"ம்...நம்ப வாத்தியாருபோக்கு எப்படியிருக்குன்னு கொஞ்சம் கொஞ்சமாப் பார்ப்போம்..."
"இதுக்கொல்லாம் காலம் கணிக்கக்கூடாதுங்க—மூளையிலேயே கிள்ளி எறியவேண்டிய சங்கதிங்க!"
"இப்பதானே என் காதிலே போட்டிருக்கிற சேதியை! நான்கவனிக்க ஆரம்பிக்கிறேன்!"
கண்ணனுக்குக் கொஞ்சம் திருப்தி! சிரங்கைச் சொரிந்து விடும்போது ஏற்படுகிற இன்பத்தைப்பெற்றான். சற்றுநேரத்திற்கெல்லாம், சிரங்கின் அரிப்பு மறைந்து எரிச்சல் கிளம்புவது போல அவன் உள்ளத்திலும் வெறுப்பு நெருப்பென மூண்டது.
அறவாழிக்குத் தான் கொடுத்ததண்டனை போதாதென அவனுக்குப்பெரியகுறை. ஊர் முழுவதும் அறவாழியைப் பற்றிய பிரச்சாரம் செய்து ஊரிலுள்ள பக்தி வெறியர்களுக்கும் அவனுக்கும் பெரிய போராட்டத்தை உண்டுபண்ணி ஆளுக்கு ஆள் அவனைத் துரத்தி அடிக்கவேண்டுமெனத் திட்டம் போட்டான் தன் ஏற்பாடுகளுக்குப் பிள்ளையார் சுழிபோடுவது போலப் பஞ்சாயத்தார் பரமசிவத்திடம் முதலில் படையெடுத்தான். தான் சொல்வதை அப்படியே எல்லோரும் நம்பிவிடுவார்கள் என்றுதான் அண்டப்புளுகன்கூட எண்ணிக்கொண்டு அழுகல் சரக்குகளை அவிழ்த்துக் கொட்டுகிறான். அந்த நம்பிக்கையில் அவனுக்கு ஒரு பெரிய திருப்தி. அந்த திருப்தியிலேயே வாழ்க்கைச் சக்கரம் சுழலுகிறது அவனுக்கு அதுபோலவே கண்ணனும் தான் சிங்காரத்தைப்பற்றிப் பரப்பும் கருத்துக்களை ஊரார் அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள் என எண்ணிக்கொண்டிருப்பவன்—இப்போது அறவாழியையும் எதிரி எண் இரண்டாக ஆக்கிக்கொண்டு தன்வேலையைத் துவக்கினான். குட்டையைக் குழப்புவது பெரிய காரியமல்லவே—கேவலம்; எருமைமாடுகூடச் செய்துவிட்டுப் போய்விடும். குட்டையைச் சீர்செய்து, தெளிந்த நீரை—தூய்மையான நீரைக் கட்டிக் காத்து அனைவரும் பயனடையச் செய்வதுதானே சற்று சிரமமான காரியம்—இதில் முதல் செய்கையைத் தட்டின்றிச் செய்வதில் மிகவும் கெட்டிக்காரன் கண்ணன்.
பஞ்சாயத்தார் காதில் இரண்டு பெரிய விஷயங்களைப் போட்டு விட்டோம்—மேலும் ஆகவேண்டியதைக் கவனிப்போம் என்ற உற்சாகத்தோடு கண்ணன் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டான்! அப்போது பஞ்சாயத்தார் மகன் சிரஞ்சீவி, "எப்போ! நம்ப ஊருக்கு வாத்தியார் வந்திருக்கார் அப்போ! அவரு உன்னைப் பார்க்க வந்திருக்கார் அப்போ!" என்று கத்திக்கொண்டு உள்ளே ஓடிவந்தான் மகனைப் பார்த்த பஞ்சாயத்தார், அவன் முகமெல்லாம் கரிக்கோடுகள் இருப்பதைக் கண்டு, "இது என்னடா கர்மம்—முகமெல்லாம் கரி!" என்று முணு முணுத்துக் கொண்டார்.
"அந்த வாத்தியார்தான என் முகத்திலே கரி பூசி விட்டாரு—ரொம்ப நல்லவருப்பா!" என்று குதித்தான் சிரஞ்சீவி.
வாத்தியார் வந்திருக்கிறார் என்றதும் ஆவலுடன் அவரைப் பார்க்க எண்ணிய பஞ்சாயத்தாருக்கு மகன் முகத்தில் அவர்தான் கரிபூசினார் என்றதும் ஒரு தடுமாற்றம் ஏற்பட்டது.
"சரிதான்—ஆளு விஷமக்காரன் தான் போலிருக்கு வரச்சொல்லு! வரச்சொல்லு!" என்று வரட்டுக் குரலில் உத்தரவிட்டார். சிரஞ்சீவி குதித்துக்கொண்டு வெளியே ஓடினான்.
உடனே கண்ணன் ‘பார்த்தீங்களா? இதோ கண்ணனுக்கு நேராகவே சாட்சி—நான் சொன்னதுக்கு என்ன—அவன் செஞ்சத்துக்கு என்ன—ஊர்லே ஒரே ஒரு பெரிய மனுஷன் நீங்க, ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ மாதிரி! உங்க மகனுக்கிட்ட குறும்புத்தனம் பண்ணி கரி பூசுகிற அளவுக்கு நெஞ்சழுத்தம் இருந்தா அவன் வேற என்னதான் செய்யமாட்டான்?" என்று தூபம் போட்டுவிட்டு வெளியே கிளம்பினான்.
அவனுக்கு எதிரே உள்ளே நுழைந்த அறவாழி கண்ணனைப் பார்த்ததும் பார்க்காததுபோல பஞ்சாயத்தாருக்கு வணக்கம் தெரிவித்தான். பஞ்சாயத்தார் வெகு அலட்சியமாக அறவாழியைப் பார்த்துவிட்டு "யாருப்பா—நீதான் புதுசா வந்திருக்கிற வாத்தியாரோட மகனா?" என்று கேட்டார்.
அறவாழி சிரித்துக் கொண்டே, "இல்லிங்க பெரியவரே! நானேதான் ஆசிரியர்—பெயர் அறவாழி!" என்றான்.
"ஓகோ பள்ளிக்கூடத்திலே படிக்கிற புள்ளை மாதிரி இருக்கே—உனக்கு என்ன உலக அனுபவம் தெரியும்? நீ என்னத்த சொல்லிக் கொடுத்து கிழிக்கப் போறே?" என்றார், கொஞ்சம் துடுக்காகப் பஞ்சாயத்தார்.
அறவாழியின் முகத்தில் அந்த வார்த்தைகள் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை கல்லோ—கம்போ—தூசியோ தும்போ விழுந்தால் தானே தொட்டியில் உள்ள நீர் கலங்கும். ஒரு பொருளின் நிழல்விழுவதால் நீர் கலங்குவதில்லையல்லவா! பஞ்சாயத்தாரின் பேச்சை நீர்மேல்விழுந்த நிழலாகவே
கருதினான் அறவாழி அவமானமான முறையில் பேசுகிறார்—ஆயினும் பொறுத்துக் கொள்வோம் என்ற நினைப்புகூட வராமலே அவன் அமைதியாக இருந்தான்.
"சின்னப் பிள்ளைங்கிறத்துக்கு சரியா, வந்ததும் வராததுமாக என்மகன் முகத்துலே கரியைப்பூசிட்டியே!" என்று மேலும் தொடர்ந்தார் பரமசிவம்.
"கரிபூசினேனா? நானா? இல்லவே இல்லையே—தம்பி முகத்திலே இருந்த கரிக்கோடுகளை அழிக்கப்பார்த்தேன்—தம்பி இணங்கவில்லை—இதோபாருங்கள்; அழித்ததில் எனக்கூட கருப்பாகிவிட்டது!" என்று கைகளை விரித்துக்காட்டினான் அறவாழி.
"கையென்னுங்க; ஆளுமனசுகூட கருப்புதான்—பகுத்தறிவுக்காரருபாருங்க!" என்று கேலிச்சிரிப்பு சிரித்தான் கரகமாடிக் கண்ணன்.
"நீ இன்னும் போகவில்லையா?" என்றார் பரமசிவம்.
"எப்படிங்க போகமனசு வரும்? பெரியமேதாவி வந்திருக்காரு—அவரைப் பார்த்துக்கிட்டே இருக்கலாம் போலிருக்கே!" என்று கூறிவிட்டு கண்ணன் அறவாழியை ஒருமுறை முறைத்து விட்டு, 'தூ!' எனச்சொல்லிக் கொண்டே இரண்டாம் தடவையாக வெளியே சென்றான். அவன் வெளியில் சென்ற சில விநாடிகளுக்கெல்லாம் சிரஞ்சீவி, "அப்போ! அப்பா" என்று கூறிக் கொண்டு குதித்தோடிவந்து பஞ்சாயத்தாரைக் கட்டிப்பிடித்துக்கொண்டான். அவர் திணறினார். அந்த விசித்திரமான வீட்டைப்பார்க்க அறவாழிக்கு ஆச்சரியமாக இருந்தது.
"என்னடா நடந்தது?" என்றார் தந்தை.
"அப்போ! தெருவிலே பெரியசண்டை வரப்போறது—யானைசேனை குதிரைப் படையெல்லாம் வரப்போறது! கப்பல் சண்டை—பீரங்கிச் சண்டை! அப்பறம் சாவு—கொலை! அப்பறம் அமைதி—சுடுகாடு—மண்ணாங்கட்டி—அரோகரா—கோவிந்தா—கோவிந்தா!" இப்படி சிரஞ்சீவி ஆட்டபாட்டத்தோடு கத்த ஆரம்பித்தான்.
"ஏதாவது நடக்காமல் இவன் உளறமாட்டான்" என்று கூறிக்கொண்டே பஞ்சாயத்தார் வெளியே வந்தார். வந்ததும் சிரஞ்சீவி சொன்னது உண்மையாகி விட்டதை நேரில் கண்டார். கப்பல், பீரங்கி, விமானங்கள் இல்லாவிட்டாலும், அதைவிடக் கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்து கண்ணனும் சிங்காரமும் சொற்போர் நடத்திக் கொண்டிருந்தார்கள்.
"அடேய் அயோக்கியப் பதரே! என்னைப்பற்றி நீ ஏண்டா தப்புப் பிரச்சாரம் செய்யவேண்டும்?.. உனக்கும் எனக்கும்தான் செத்தால் வாழ்ந்தால்கூடக் கிடையாது—உறவு அற்றும் போச்சு! என் பேச்சு பேசாவிட்டால் தூக்கம் வராதா உனக்கு?"
"என்னடா மிரட்டுகிறாய்? நெருப்பு மாதிரி வார்த்தைகளைக் கொட்டுறியே; என்ன சங்கதி? அதெல்லாம் உன் தீச்சட்டியோட வச்சுக்க!"
"தொழிலைப்பற்றிப் பேசாதேடா முண்டமே! என் பேச்சைப் பேசுனத்துக்கு மரியாதையா பதில் சொல்லு! இல்லேன்னு மன்னிப்புக் கேட்டுக்க—நான் இப்ப உன்னை சும்மா விடமாட்டேன்!"
"மன்னிப்பு கேட்கணுமா? அது இந்த ஜென்மத்திலே இல்லே! நீ என்ன மகா மனுஷன்—உனகிட்டே நான் மன்னிப்புக் கேட்க? ஊரிலே அக்ரமம் பண்றே—பாவம்; யாரோ அனாதைப் பெண்ணு—படுபாவிப் பயல் உன்னாலே தூக்கு மாட்டிகிட்டு உசிரை விட்டிருக்கு—அதைக் கண்டிச்சுப் பேசினா உனக்குக் கோபம் பொத்துக்கிட்டு வருதோ? வரட்டும்; வரட்டும் எனக்கொன்னும் பயமில்லை! என்ன வேணுமானாலும் செய்யி!" கண்ணன் வரிந்து கட்டிக்கொண்டு, கை முஷ்டியை மடக்கியவாறு சண்டைக்குத் தயாராக நின்று கொண்டான். தெருமக்கள் கூடிவிட்டார்கள்.
பஞ்சாயத்தார் "டே டே டே! நிறுத்துங்க பேச்சை!" என்று கூச்சல் போட்டார்.
"ஆமாம்; பேச்சை நிறுத்திட்டு—சண்டையை ஆரம்பிங்கோ; சண்டை நடக்கட்டும்—உலகம் அழியட்டும்!" என்று கை கொட்டியவாறு கத்தினான் சிரஞ்சீவி.
அவன் தலையில் ஓர் அறை கொடுத்துவிட்டுப் பஞ்சாயத்தார், சிங்காரத்தைப் போய்ப் பிடித்து நிறுத்தினார். சிங்காரம், பஞ்சாயத்தாருக்குப் பணிந்து நின்ற சமயத்தில், கண்ணன் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து சிங்காரத்தின் நெற்றியில் பலமாக ஒரு குத்து விட்டான் அதற்குமேல் சிங்காரம் பஞ்சாயத்தாரின் பிடிக்குள் இருக்க முடியவில்லை கையிலிருந்த கம்பைக் கீழே போட்டுவிட்டு கண்ணன்மீது பாய்ந்தான். இருவரிடையே சரமாரியாகக் குத்துக்கள் விழுந்தன. தெருவினரும் பஞ்சாயத்தாரும் குறுக்கிட்டு இருவரையும் திமிர விடாமல் அமுக்கிப்பிடித்துக் கொண்டனர். பஞ்சாயத்தார் வீட்டுக்கு நேரே நடைபெறும் ரகளையை அறவாழியும் வியப்போடு பார்த்துக்கொண்டு நின்றான்.
"நான் போலீசுக்கு லஞ்சம் கொடுத்தேன்—தப்பித்துக் கொண்டேன் என்று ஊரெல்லாம் தண்டோரா போடுகிறானே, இவனால் நிரூபிக்க முடியுமா?" என்று கத்தினான் உதட்டில் வழியும் ரத்தத்தைத் துடைத்துக்கொண்டே சிங்காரம்!
"லஞ்சம் மாத்திரமா கொடுத்தாய்? போலீஸ் அதற்கு மாத்திரம் வளையுமா? அழகான தங்கச்சியைக்கூட......" என்று கண்ணன் சொன்னதுதான் தாமதம்; சிங்காரத்திற்கு எங்கிருந்து அந்த வேகம் வந்ததோ தெரியாது; "என்ன சொன்னாய்?" என்று ஒரே பாய்ச்சல்; புலி பாய்வதுபோல! அவ்வளவுதான்; கண்ணன் தரையிலே சாய்ந்துவிட்டான். சிங்காரம் அவன் மார்பிலே உட்கார்ந்து கொண்டு மாறி மாறிக் குத்திக்கொண்டேயிருந்தான், அவன் ஆத்திரம் தணியுமட்டும்! தெருவினர்கூட சில வினாடிகள் அப்படியே அயர்ந்து போய் நின்றுவிட்டனர். கண்ணன், சிங்காரத்தின் தங்கையை பேச்சின் நடுவே மிகவும் கேவலமான வகையில் இழுத்துப் பேசியது யாருக்கும் பொறுக்கவில்லை. அதனால் சிங்காரத்திற்கு சிறிது நேரம் அவன் கோபத்தைத் தணித்துக்கொள்ள சந்தர்ப்பம் அளித்து ஒதுங்கிக்கொண்டனர்.
கண்ணன், "அய்யோ அய்யோ" என்று அலறினான்.
அப்போது "ஓ" என்று கதறிக்கொண்டு அங்கே கற்பூரம் பிரவேசித்தாள். அண்ணனின் கையைப் பிடித்துக்கொண்டு "நிறுத்து! நிறுத்து!" என்று கூச்சலிட்டாள்
"தங்கச்சீ! நீ குறுக்கிடாதே போ!" என்று சீறிய சிங்காரம்—திடுமென ஏதோ உணர்ச்சி வசப்பட்டு "அய்யோ கற்பூரம்! உன்னைப்பற்றி...உன்னைப்பற்றி" என்று சொல்ல வாயெடுத்து, சொல்ல முடியாமல் விம்மி அழுது மீண்டும் கண்ணன் முகத்தில் குத்துக்களைப் பொழியத் தொடங்கினான்.
"விடு அவரை! ஒன்றும் செய்யாதே! விடு! விடு!" என்று கத்தினாள் கற்பூரம். சிங்காரம் கேட்கவில்லை. கற்பூரம் அண்ணனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, கண்ணன்மீது அடிகள் விழாதபடி தடுத்தாள்.
சிங்காரம், கற்பூரத்தை இழுத்துத் தள்ளி, "கற்பூரம்! போ வீட்டுக்கு!" என்று உத்திரவிட்டான், கடுமையாக!
"முடியாது! நீ அவரை அடிக்கக்கூடாது!"
"அடிப்பதா? அவனைக் கொல்லுவேன்!"
"சொன்னால் கேள் அண்ணேன்—அவரை ஒன்றும் செய்யாதே—அவ்வளவுதான் சொல்வேன்!"
"அவனுக்கு நீ வக்காலத்து வாங்குகிறாயே?... ... போ, மரியாதையாக வீட்டுக்கு!"
"அப்படின்னா என்னையும் இங்கேயே கொல்லு!"
"கற்பூரம் நீ என்ன சொல்றே?"
"எதுக்காக மறைக்கணும்—நான் அவரைக் கல்யாணம் பண்ணிக்கப் போகிறேன்—நான் அவருக்கு மனைவி... எனக்குக் கணவனைவிட அண்ணன் பெரிசு இல்லே!"
கற்பூரம் ஆத்திரமாகப் பேசி அழுதாள். சிங்காரத்தின் எல்லா நாடிகளும் ஒடுங்கிவிட்டன. பிரேதம் போலாகிவிட்டான். முகம் வெளுத்துவிட்டது. "ஆ" என்ற ஒரே சப்தம்—அப்படியே
சிலைபோல நின்றுவிட்டான் கண்ணன் எழுந்தான். சிங்காரத்தைப் பலங்கொண்ட மட்டும் தாக்கினான். சிங்காரம் எதிர்த்து ஒரு அடி கூடத் திருப்பித் தரவில்லை. எல்லா அடிகளையும் மெளனமாக வாங்கிக்கொண்டான்.
கற்பூரம் குறுக்கே வந்து, "அண்ணா! அண்ணா!!" என்று கத்தினாள் அவளையும் இழுத்துத் தள்ளிவிட்டுக் கண்ணன் சிங்காரத்தை மேலும் தாக்கினான். சிங்காரம் அசையாமலே நின்றான்.
கலைஞர் மு. கருணாநிதி · சுருளிமலை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்