அத்தியாயம் 16 · 16 / 26
அத்தியாயம் 16
Chapter 16
மூல ஸ்கேன் 120–127
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
16
பூஞ்சோலையின் வீட்டிலிருந்து வெளியேறிய தீச்சட்டி சிங்காரத்திற்கு நேரே எங்குபோவது என்று புரியவில்லை. தற்கொலை செய்து கொண்ட மைனா, பழியைத் தன்மீது சுமத்திய தற்குக்காரணம் என்னவாயிருக்கும் என்ற கேள்விவேறு அவனைக் குடைந்து கொண்டேயிருந்தது. எதற்கும் போலீஸ் அதிகாரிகளிடம் தானே நேரில்சென்று விபரம் அறிவதும், விஷயத்தை அவர்களுக்கு விளக்குவதும்தான் நல்லது என்று தீர்மானித்தான் நாம் நடப்பதை ஒழுங்காக நடந்துகொண்டால் அதற்குமேல் சரியா தவறா நடப்பது நடக்கட்டும் என்ற துணிவு ஏற்பட்டது அவனுக்கு.
போலீஸ் அதிகாரிகள் மைனாவின் சேலை முந்தானையில் முடிந்திருந்த கடிதத்தை அவனிடத்திலே காட்டினார்கள். கடிதத்தில் அவள் கையெழுத்தில்லை. சிங்காரத்திற்கு சந்தேகம் எழுந்தது; கையெழுத்தில்லாமல் கடிதம் எழுதுவாளா என்று! அவனுக்கு அவளது எழுத்தும் அடையாளம்புரியாது. அதிகாரிகள் அவனைக் கேட்டனர்: "இது அவளது கையெழுத்துத்தானே?" என்று! சிங்காரம் நிலைமையைச் சிறிது விளக்கினான். மைனாவைப்பற்றிய விபரங்களைப் போலீசாருக்கு ஓரளவாவது தெரிவிக்க வேண்டுமென்று விரும்பினான். அந்த விளக்கம், தன்னை வீண் பழியிலிருந்து விடுவிக்காதா என்ற ஆவல் வேறு அவனுக்கு! மைனாவின் சவத்தைப் படம் பிடித்து வைத்திருந்தார்கள் போலீசார் அதைப் பார்த்துச் சிங்காரம் வடித்த கண்ணீர் அவர்களுக்கே ஆச்சரியத்தை உண்டாக்கியது. மைனாவின் கையெழுத்தை அடையாளம் கண்டுபிடித்து இது மைனாவின் கடிதமல்லவென்று முடிவு கூறப்பட்டுவிட்டால் தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம், மாசு நீங்குமே யென்று அவன் துடி துடித்தான். மைனாவுக்கு ஒரு கணவன் இருப்பதை அறிவித்து, பேரூர் பீதாம்பர பாகவதர் என்ற முகவரியையும் போலீசாருக்கு அவனே தந்தான் அவனே போலீசாரிடம் மன்றாடிக் கேட்டுக் கொண்டதின் பேரில் ஒரு அதிகாரி, அவனுடன் பேரூருக்குச் சென்று பீதாம்பர பாகவதரிடம் விபரமறியப் புறப்பட்டார். எப்படியாவது தான் களங்கமற்றவன் என்பதை நிரூபித்தாக வேண்டுமே—அதனால் சிங்காரம் மிகுந்த சிரமம் எடுத்துக் கொண்டான்.
திடுமெனப் போலீஸ் அதிகாரி, தன் வீட்டுக்கு வந்ததைக் கண்ட பீதாம்பரம் நடு நடுங்கிப் போனார். பயப்பட வேண்டாமென அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு, மைனாவின் போட்டோ படத்தை எடுத்துக் காட்டி, "இந்தப் பெண்ணை உங்களுக்குத் தெரியுமா?" என்று அதிகாரி கேட்டார்
"யாரது? என் மைனாபோல இருக்கே!... அய்யோ, இது என்ன படம்? மைனா செத்து விட்டாளா?" என்று அலறினார் பாகவதர். சிங்காரம், விழி கலங்க நின்று கொண்டிருந்தான்.
"மைனா என்பது யார்? உங்களுக்கு என்ன உறவு?"—அதிகாரி கேட்டார்
"அவள் என்....."
"மனைவி" என்று கூற நினைத்தார் பாகவதர். ஆனால் வார்த்தை வெளிப்படவில்லை அவளை இனி மகளாகவே கருதுவதாக அவளிடமே வாக்களித்திருக்கிறாரே!
அதிகாரி விடவில்லை. "மைனா உங்கள் மனைவிதானே...?" என்றார்
பாகவதர் மறுக்கவில்லை. ஒத்துக்கொண்டு தலையை மட்டும் அசைத்தார்.
"மைனா, தற்கொலை செய்துகொண்டாள்..."—அதிகாரி முடிப்பதற்குள் "எனக்கு முன்பே தெரியும்; அவளுக்கு அதைத் தவிர வேறு வழியில்லை. என்னைப் போன்ற பாவிக்கு வாழ்க்கைப் பட்டால் ஒரு பெண்ணுக்கு இதுதான் முடிவாக இருக்கமுடியும்..." என்று கண்கலங்க, நாக்குழறப் பேசினார் பீதாம்பரம். அதோடு நிறுத்தவில்லை அவர் அதிகாரியிடம் தன் உள்ளத்தை அப்படியே திறந்து காட்டிவிட விரும்பினார் மைனாவுக்கும் தனக்கும் நடைபெற்ற திருமணம் — இருவரிடையே ஏற்பட்ட ஏமாற்றம் — ஏக்கம் — பிரிவு — இறுதியாக மைனாவை சந்தித்தது— எல்லாவற்றையும் கூறிவிட்டு நடிகர் தேம்பித் தேம்பி அழுதார். சிங்காரத்தின் இருதயத்திலே நூற்றுக்கணக்கான சம்மட்டியடிகள் விழுந்து கொண்டே யிருந்தன. மைனா இந்த சோகக் கதையைத் தன்னிடம் சொன்னபோதே அவளைத் திருத்திக் கணவன் வீட்டுக்கு அனுப்பியிருக்க வேண்டியதல்லவா தன்னுடைய கடமை என்று எண்ணி வேதனைப்பட்டான் ஆனால், அடுத்த கணம் அவனே தன்னைத் தேற்றிக் கொண்டான். மைனா கணவன் வீட்டில் என்ன சுகங் காணப் போகிறாள் அவள் இளமைக் கனவுகள் பலித்திட அங்கென்ன மார்க்கமிருக்கிறது... ஆகவே தான் செய்ததும் ஒரு விதத்தில் சரியென்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டான்.
ஒரு கணவன், தன்னுடைய மனைவியின் மனநிலைகளை இவ்வளவு அப்பட்டமாக வர்ணிப்பதையும், தான் செய்த தவறுகளைத் தானே உணர்ந்து அதற்காகக் கலங்குவதையும் கண்ட அதிகாரி, உண்மையிலேயே மனமுருகினார்
"ஏன்? என் மனைவி தற்கொலை செய்துகொண்டதற்காக என்மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கச் சட்டமிருக்கிறதா? இருந்தால் கொடுக்கிற தண்டனையை நான் ஏற்றுக் கொள்கிறேன். என் கதையெல்லாம் கேட்டீர்கள் எனக்கும் என் மைனாவுக்கும் எவ்வளவு தொடர்பு என்பதையும் புரிந்து கொண்டீர்கள் அவள் என்னைவிட்டுத் தனிமையில் வேறு ஊரில் வாழ்ந்ததையும் அந்த ஊரில் யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். அதற்கு மேலும் ஏதாவது என்மீது குற்றம் சுமத்த வழியிருந்தால் தாராளமாக அதை ஒத்துக்கொண்டு அடங்கி நடக்க சித்தமாயிருக்கிறேன்" என்று பீதாம்பரம் தழுதழுத்த குரலில் மொழிந்தார்.
"அப்படியெல்லாம் நீங்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை மைனா எழுதிய கடிதம் ஏதாவது உங்களிடம் இருக்கிறதா? ஒரு கையெழுத்தை ஒப்பிட்டு அடையாளம் பார்ப்பதற்காக அது தேவைப்படுகிறது — இருந்தால் தர முடியுமா?" என்றார் அதிகாரி
பீதாம்பரம் சிறிது நேரம் யோசித்தார். பிறகு, ஏதோ நினைவு வர எழுந்து உள்ளே சென்றார் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை உள்ளே ஏதோ பெட்டி சட்டிகள் உருளுகிற சப்தம் மாத்திரம் கேட்டுக் கொண்டிருந்தது. 'மியாவ்' என்ற ஒலியோடு மைனாவின் பூனைக்குட்டி தெருப்பக்கம் வந்தது. அதைக்கண்ட சிங்காரம், வாரியெடுத்து மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான் மைனாவை அணைத்துக் கொள்வது போலவே ஒரு உணர்ச்சி அவனுக்கு! அவன் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்ததை அதிகாரி கவனிக்கவில்லை. கண்ணை மூடிக்கொண்டான் தீச்சட்டி ஆட்டம் — வீட்டுத் திண்ணையோரத்திலே மைனா — அந்த மோகனப் பார்வை — இரவு சந்திப்பு — இன்ப வெள்ளம் — அன்புப் பிரிவு — அடுக்<!-- verified source join: scan 123→124 --> டுக்காக உள்ளத் திரையில் படக் காட்சியைப்போல் மாறி மாறித் தோன்றின.
"இதோ இருக்கிறது—மைனாவின் கடிதம் அவள் எனக்கு எழுதிய முதல் கடிதமும் கடைசிக் கடிதமும் இதுதான்" என்று கூறிக்கொண்டே பீதாம்பரம் வெளியே வந்தார் தன்னுடைய அழகான உருவப் படத்தையும் வைத்து, மணந்து கொள்ள வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் இணைத்து அவள் அனுப்பிய ஓலை இதுதான் என் மைனா எனக்கு அன்போடு எழுதிய கடிதம் இதுதான்!"
பீதாம்பரம், மேலும் வேதனையோடு கடிதத்தை அதிகாரியிடம் கொடுத்தார். அதை, சிங்காரமும் ஆவலோடு பார்த்தான். பிரேதத்தின் சேலையிலிருந்து எடுக்கப்பட்ட கடிதத்தை அதுடன் ஒப்பிட்டுப் பார்த்தார், அதிகாரி இரண்டுக்கும் நிரம்ப முரண்பாடு.
சிங்காரத்திற்கு ஒரு நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது. "அப்பாடா! தப்பினோம் பெரிய பழியிலிருந்து!" எனத் தனக்குத் தானே கூறிக்கொண்டான். ஆயினும் அவனுக்குத் தற்கொலைக்கான சரியான காரணம் புரியவில்லை பீதாம்பரம் கூறிய விளக்கத்திலிருந்து ஒரு வேளை அவர் அவளை இறுதியாகச் சந்தித்த பிறகு தற்கொலை முடிவை தேர்ந்தெடுத்திருப்பாரோ என்ற சந்தேகம் அவனைச் சூழ்ந்து கொண்டது அதிகாரியை ஊருக்கு அனுப்பிவிட்டு எப்படியாவது பாகவதரிடம் அந்த உண்மையை அறிந்து கொண்டு வரவேண்டுமென அவன் பரபரப்பு கொண்டான்.
அதிகாரிக்கு, சிங்காரத்தின் மீதிருந்த சந்தேகம் நீங்கி விட்ட தென்றாலும், மைனாவின் சேலையில் அந்தக் கடிதத்தை சிங்காரத்திற்கு விரோதமாக முடிந்து வைத்தது யாராக இருக்குமென்ற ஐயப்பாடு பலமாக எழுந்தது அதைக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற ஆவலும் பிறந்தது சிங்காரமும், சிலரைச் சந்தேகப்பட்டானே தவிர, யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல அவன் துணியவில்லை
பீதாம்பரம், மைனாவின் கடிதம் என்றென்றும் ஞாபகத்திற்காக இருக்க வேண்டுமென்று திரும்பக் கேட்டார் அப்போது, தீச்சட்டி சிங்காரத்தைப்பற்றிக் கூறவேண்டிய அவசியம் அதிகாரிக்கு ஏற்பட்டது. "சிங்காரத்தின்மீது போடப்பட்ட பழியை இந்தக் கடிதம்தான் மறுக்கிறது. அதனால் இது சில நாளைக்குப் போலீசாரிடம்தான் இருக்கவேண்டும் பிறகு உங்களிடம் திருப்பித் தந்து விடுகிறோம்" என விளக்கினார்
'தீச்சட்டி சிங்காரத்திற்கு தன்னைப் பற்றிய விபரங்கள் எப்படித் தெரியும்? அவன்மீது பழி எவ்வாறு சுமத்தப்பட்டது?' என்று பீதாம்பரம் அறிய விரும்பினார் ஆனால் அதிகாரியின் முன்னிலையில் அவைகளைக் கேட்க விரும்பவில்லை சிங்காரமும் பீதாம்பரமும் இருவரும் தனியே சந்தித்துப் பேச விரும்பினார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விபரம் தேவைப்பட்டது. அதனால் ஒருவரையறியாமல் ஒருவர், போலீஸ் அதிகாரியை மட்டும் தனியே முதலில் அனுப்பிவிட வேண்டுமென்று தீர்மானித்தனர் ஆனால் அதிகாரி, சிங்காரம் தன்னோடு திரும்பி ஊருக்கு வரவேண்டிய முக்கியத்துவத்தை உணர்த்தி, தற்கொலைக்கும் அவனுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை யென்பதை நிரூபிக்க வேண்டியதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைமையும் எடுத்துக்கூறி அவனையும் அழைத்துக்கொண்டு பீதாம்பரத்திடம் விடைபெற்றுப் புறப்பட்டார். சிங்காரம், அந்தப் பூனைக்குட்டியை மீண்டும் ஒருமுறை ஆவலாகத் தூக்கி முத்தமிட்டு பிறகு அதை பீதாம்பரத்தின் கையிலே கொடுத்துவிட்டுக் கிளம்பினான்.
அண்ணன்மீது சுமத்தப்பட்டிருந்த பழி நீங்கிவிட்டதைக் கேட்டு கற்பூரம் மகிழ்ச்சிக் கடலில் குதித்தாள் ஊராரும் சிங்காரத்தைப் பார்த்துத் தங்கள் சந்தோஷத்தைத் தெரிவித்துக் கொண்டனர் "பயந்தே விட்டேன் அண்ணா! உன்மீது போடப்பட்ட வீண்பழியை நம்பி, எங்கே பொன்மணி உன்மீது தவறான அபிப்பிராயம் கொண்டு விடுகிறாளோ என்று!"—கற்பூரம் மெதுவாகப் பேச்சைத் தொடங்கினாள்.
"பொன்மணியா? அவள் எந்தக் காலத்திலும் என்மீது தவறான அபிப்பிராயம் வைக்க மாட்டாளே!"—சிங்காரம் சிரித்துக் கொண்டே சொன்னான்.
"ஓ, அந்த அளவுக்கு வந்து விட்டதா? நான் இதற்குள் இவ்வளவு எதிர்பார்க்கலியே...
"ஏன், எதிர்பார்க்கல்லே... என்னை விடுதலை செஞ்சி வெளியே அனுப்பியதே அவள தானே!"
"ஓகோகோ...அப்படியா சங்கதி? அண்ணா! எனக்கு அது கூட ஆச்சரியமில்லே—உன் மேல பிடிச்ச பேய்கூட பொன்மணி கிட்ட வந்ததும் ஓடிப்போய் விட்டதே அதான் ஆச்சரியம்!"
"எல்லாம் எனக்குத் தெரியும் கற்பூரம்! எனக்கும் பொன்மணிக்கும் முடிச்சுப் போட நீ ஆடிய நாடகம்தான் அதுன்னு எனக்கு நல்லாத் தெரியும்!"
"ஆ!"
"பயப்படாதே! அண்ணன் மேல உள்ள அன்பிலேதான் அப்படி செஞ்சியே தவிர, வேற தவறாக நீ செய்யவில்லை! ஆனாலும் உன்னைப்போல இருக்கிற பெண்களுக்கு இந்த மாதிரி புத்தியெல்லாம் வரக்கூடாது!"
"நீ எதுவேண்டுமானாலும் என்னைத் திட்டு—கவலையில்லை, அந்த அழகான பச்சைக் கிளி, பொன்மணி, எங்க அண்ணனுக்குக் கிடைச்சா அதுவே போதும்!"
"நானும் பொன்மணியும் ஒப்பந்தம் செய்துகொண்டோமே; உனக்குத் தெரியுமா?"
"அடேடே...... ஒப்பந்தங்கூட ரகசியமாக ஆகிவிட்டதா? அடீ கற்பூரம்! நீ கெட்டிக்காரிடி—கெட்டிக்காரி! அண்ணா! என்ன ஒப்பந்தம் அது?"
"இனிமேல் எப்போதும் நான் அண்ணன்—பொன்மணி என் அன்புத் தங்கச்சி! இதுதான் ஒப்பந்தம்!"
"விளையாடாதே அண்ணே!"
"விளையாட்டு ஒண்ணுமில்லை கற்பூரம்! இனிமேல் இந்த சிங்காரத்துக்குக் கல்யாணமே கிடையாது! ஒரு வேளை, மைனா மறுபடியும் உயிர் பிழைச்சு வந்தாதான் குடும்ப வாழ்க்கை! இல்லாவிட்டால் இதே நிலைமைதான் எப்போதும்! உலகத்திலே பிறந்திருக்கிற பெண்கள் முழுவதும் எனக்குத் தாய்கள், தங்கைகள், அக்காள்கள்! ஒரே ஒருத்தி எனக்கு மனைவியாகப் பிறந்தால்—அவள் மாண்டுவிட்டாள்! மாண்டுவிட்டாள்!" இதைக் கூறிவிட்டு சிங்காரம் 'கோ' வென்று அழ ஆரம்பித்தான்.
கற்பூரம் எதுவும் பதில் பேச முடியாமல் நின்றாள்.
அப்போதுதான் அவள் வீட்டிலே நுழைந்த அடுத்தத்தெரு அகிலாண்டம், "அடி கற்பூரம்—கேட்டியா சேதியை! உங்க அண்ணன், போலீசுக்கு லஞ்சம் கொடுத்துக் குற்றத்திலே இருந்து தப்பிச்சுக்கிட்டான்னு நம்ப கரகமாடிக் கண்ணன் ஊரெல்லாம் பிரச்சாரம் செய்துகிட்டிருக்கிறான்!" என்று நீட்டி முழக்கினாள்.
இந்த வார்த்தைகள் காதில் விழுந்ததுதான் தாமதம் "ஆ! அவன் வாயை மூடிக்கிட்டு இருக்கமாட்டானா? பார்க்கிறேன் ஒரு கை, அவனை! ஒண்ணு இந்த ஊர்ல நான் ஒழியணும்—இல்லே அவன் ஒழியணும்!" என்று உறுமிக்கொண்டு பாய்ந்தான் சிங்காரம்.
கற்பூரம், "அண்ணா, அண்ணா! நில்லு!" என்று பதைபதைப்போடு அவனைத் தடுத்தாள். அவன் கேட்பதாயில்லை; வீட்டு மூலைக்குஓடினான். முரட்டுக்கம்பு ஒன்றைக்கையிலே எடுத்துக்கொண்டான். தெருப்பக்கம் வந்தான். கற்பூரம், அவன் காலடியில்விழுந்து தடுத்துப் பார்த்தாள் தங்கையை உதறித் தள்ளிவிட்டுப் புலிபோல ஒலியெழுப்பித் தெருவுக்கு ஓடினான் சிங்காரம்
கலைஞர் மு. கருணாநிதி · சுருளிமலை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்