பொருளடக்கம்

சுருளிமலை

அத்தியாயம் 15 · 15 / 26

அத்தியாயம் 15

Chapter 15

மூல ஸ்கேன் 113–120

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

15

பூஞ்சோலைக்கு அறவாழி சொன்னகதை வியப்பை அளித்தது என்றாலும் அதில் நம்பிக்கையில்லாமல் போய்விடவில்லை. அறவாழியின் முகமும், மென்மையான பேச்சும் அவளுக்கு அவனிடத்திலே அத்தகைய பற்றுதலையும் பாசத்தையும் ஏற்படுத்தி விட்டது.

பழமை எண்ணங்களுக்குப் பக்தி பூர்வமாகப் பணிவதற்குக் கற்றிருந்தாளே தவிர — பூஞ்சோலை; புதிய கருத்துக்களின் திக்கு நோக்கித் திரும்பியதும்கிடையாது. அத்தகைய மூதாட்டியை அறவாழியின் பேச்சு ஒரேயடியாகத் திருப்பி விடாவிட்டாலும், கரகமாடிக் கண்ணன் ஒரு ஏமாற்றுக்காரன் என்று தீர்மானிக்கிற அளவுக்கு உதவிற்று. மந்திர மாயங்களின் சக்திகள் எல்லாம் உண்மைதான்! ஆனால் கரகமாடிக் கண்ணன் தனக்கு அந்த சக்தியிருப்பதாக நடித்து மக்களை மயக்கியிருக்கிறான் என்ற நிலைக்கே அவளால் இறங்கி வரமுடிந்தது

அறவாழியைக் கோயில்காளை ஏன் துரத்தவேண்டும் என்பதை அறிந்துகொள்ள அவள் மிக ஆவலாக இருந்தாள். அம்மாவைவிட மகளுக்கு அந்தக் கதையைக் கேட்பதிலே ஆர்வம் அதிகம்.

இருக்காதா என்ன! பண்புகொண்ட ஒரு தாயின் உள்ளம் அறவாழியை அன்புக் கயிற்றால் பிணைக்கிறது. பொன்மணியின் இருதயமோ, வேறு எவரும் இருப்பதற்கு இடமின்றி அறவாழியை மட்டும் உள்ளே வைத்துமூடி தாமரை மொக்கு போலக் குவித்துக்கொள்கிறது. அந்தச் செயல்மூலம் அவளுக்கோ எவ்வளவோ பெரிய ஆறுதல்! பெருமூச்சு! வெற்றிகண்டு விட்டதாகவே ஒரு நினைவு! இன்பக்கனவு! ஏற்கனவே ஒளியேறிய விழிகளில் மகிழ்ச்சிக் கண்ணீர் வேறு மெருகேற்றியது. அந்த விழிகளால் அவனை அணு அணுவாக விழுங்கி இதயத்தில் திணித்துக் கொண்டிருந்தாள்.

அவனும் அவளுக்கு முன்பாகத் தன் இதயத்தைத் திறந்து வைத்துக்கொண்டு கண்ணால் வரவேற்புத் தோரணங்கட்டி "வண்ணக்கிளியே! வருக! வருக!" என அழைத்துக் கொண்டிருந்தான்.

"தம்பி! அதெல்லாம் போகட்டும் — அவன் கிடக்கிறான் அந்த மோசக்காரக் கண்ணன்! உங்களைக் கோயில்காளை எப்படித் துரத்துச்சு? அதைச் சொல்லுங்க விபரமா!" என்று கேட்டு அறவாழியின் சிந்தனையை உடனடியாகக் கலைத்தாள் பூஞ்சோலை

"கண்ணன், என்னைப் பழி தீர்த்துக்கொள்ள செய்த ஏற்பாடுதான் அது!" என்று அறவாழி திட்டவட்டமாகக் கூறினான்.

பெட்டி படுக்கைகளைத் தூக்கிக்கொண்டு நான் மட்டும் தெருவிலே வந்துகொண்டிருந்தேன்......பொழுதுவிடியும் நேரம்......ஒன்றிரண்டு சேவற்கோழிகள்கூட அவசரப்பட்டுக் கூவத் தொடங்கின.திடீரென எதிரே கண்ணன் வந்துகொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்த அதேசமயம் அவனும் என்னைப் பார்த்தான். "வாருமய்யா, பகுத்தறிவு! வந்து சேர்ந்தீரா! சபாஷ்! சபாஷ்!!" என்று உரக்கக் கத்தினான். நான் பதட்டமடையாமல் அப்படியே நின்று புன்னகை புரிந்தேன். என்னுடைய புன்சிரிப்பை அவன் பார்த்தானோ என்னமோ தெரியாது—நான் எதிர்பாராதநிலையில் என் தலையை நோக்கி ஓங்கி ஒரு

குத்துவிட்டான். கைகளில் பெட்டி படுக்கையிருந்த காரணத்தால் என்னால் உடனடியாக அதைத் தடுத்துக்கொள்ள முடியவில்லை. கைகளில் உள்ள பொருள்களைக் கீழே வைத்துவிட்டு நான் எதிர்ப்பதற்குத் தயாராவதற்குள் மறுபடியும் ஒரு குத்து நெஞ்சிலே விழுந்தது.........

இதைக்கேட்டதும் "அம்மாடி! என் தங்கம்!" என்று பூஞ்சோலை மனமுருகினாள்.

பொன்மணியின் நெஞ்சிலே ஈட்டிகள் பாய்ந்தது போலிருந்தது... அறவாழியின் மார்பகத்தில் எவ்வளவு வேதனையிருக்குமோ — என எண்ணி நடுக்குற்றாள். அவளையறியாது அவள் கன்னங்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது

அறவாழி சண்டையை வர்ணிக்க ஆரம்பித்துவிட்டான்:

"நெஞ்சிலே குத்துவிழுந்தது நிலை தடுமாறிவிட்டேன். இருந்தாலும் மூச்சைப் பிடித்துக்கொண்டு கண்ணனை எதிர்ப்பதற்குத் தயாரானேன். அவன் என்னோடு நேர்மையான சண்டைக்குவரவில்லை. நான் எதிர்க்கப் போகிறேன் எனக் கண்டதும் ஒரு பெரிய கருங்கல்லைக் கையிலே தூக்கிக்கொண்டு என் தலையை நோக்கி வீசுவதற்குக் குறி பார்த்தான். சுற்று முற்றும் பார்த்தேன் எனக்கு ஒரு ஆயுதமும் கிடைக்கவில்லை. அவனும் கல்லை என்மீது எறியவில்லை. குறிதவறிக் கீழே விழுந்து விட்டால் விழுந்த கல்லை நான் எடுத்துக்கொள்வேன் என்ற பயம் போலும், அவனுக்கு! கல்லோடு என்னைத் துரத்தினான். நான் ஓடுவதைத்தவிர வேறுவழியில்லை. ஒரு மரத்தடிப் பக்கம் ஓடினேன். கோயில்காளை அங்கேதான் படுத்திருந்தது. அங்கே ஒரு சுமைதாங்கியில் யாரோ ஒரு ஆள் படுத்திருப்பது தெரிந்தது. அதைக் கண்ணனும் பார்த்துவிட்டான். திடீரெனக் கல்லை வெகு வேகமாக என்னை நோக்கி வீசினான். நான் குறியினின்று தப்பினேன். ஆனால் அந்தக் கல், காளையின்மீது விழுந்தது. காளை, ஒரு பெரிய சப்தத்துடன் துள்ளியெழுந்தது. கண்ணன் பறந்து விட்டான் அதை விட்டு. அவ்வளவுதான் எனக்குத் தெரியும். காளை என்மீது பாய்ந்தது. ஓடினேன். ஓடினேன். தெருவிலே உருண்டேன். சுமைதாங்கியில் படுத்திருந்த ஆள் ஏதோ சப்தம்

போட்டதுபோல் தெரிந்தது என்ன ஒலியொன்று தெளிவாகக் கேட்கவில்லை காளை, தன்மீது கல்வீசியவன் நான்தான் என்று எண்ணிக்கொண்டு என்னை வெருட்டியது. அதற்குப் பிறகுதான் எல்லாம் உங்களுக்கே தெரியுமே!" என்று நிறுத்தினான் அறவாழி.

"சுமைதாங்கியில் படுத்திருந்தது யார் தெரியுமோ? நான் தான்!" என்று சிரித்துக்கொண்டே சொன்னான், சுருளிமலை.

"என்ன, நீயா? அப்படியானால் ஏதோ சப்தம் போட்டாயே; அது என்ன?" எனக்கேட்டான் அறவாழி.

"விடாதே! கொல்லு! கொல்லு— என்று சப்தம் போட்டேன்" என்று சாதாரணமாகச் சொன்னான் சுருளிமலை.

"அடப்பாவி! அப்படியா சத்தம் போட்டே?" என்று திட்டினாள் பூஞ்சோலை.

"பிறகென்னவாம்-யாரோ என் காளையைக் கடத்திச்செல்ல வந்திருக்கிறார்கள் என்று பயந்தேன்—அதனால் அப்படிச் சொன்னேன்!" என்று கூறிவிட்டு "கடைசியில்தான் காப்பாற்றிவிட்டேனே!" என்று பெருமையும் பட்டுக்கொண்டான் சுருமலை.

அறவாழி, சுருளிமலையை அன்பு ததும்ப, நோக்கி "காளை மாடு உனக்கு நெருங்கிய நண்பனோ?" என்று கேட்டான்

"ஏன்? அது கேவலமா? மனுஷனோட சிநேகிதம் பண்றதைவிட மாடுகளோடு சிநேகிதம் பண்றது எவ்வளவோ மேல்! நன்றிகெட்ட துரோகிகளோட பழகுறதைவிட நாய், கழுதை, குதிரை, மாடு, ஆடு, கோழி, இதுகளோட பழகலாம் என்பது என் அபிப்பிராயம்!"

சுருளிமலையின் பதில் அறவாழிக்குத் திகைப்பையும் நகைப்பையும் உண்டாக்கிறது.

"ஏதேது—பெரிய வேதாந்தி மாதிரி பேசுறியே...." என்று சிரித்துக்கொண்டே கேட்டான் அறவாழி.

"இதுக்கு ஏன் வேதாந்தம் சித்தாந்தம் எல்லாம்!... அனுபவம் போதாது.... அனுபவம்?" என்றான் சுருளிமலை.

"அனுபவமா? உனக்கு இந்த வயதுக்குள்ளே என்ன தம்பி அனுபவம்வந்தது?"

"அனுபவத்துக்கு வயசு முக்கியந்தான் — அதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் வயசானவங்களுக்குக் குழந்தைப்பிள்ளை அனுபவமும்-சின்னப்பிள்ளைகளுக்கு வயசானவங்க அனுபவமும்-இருக்கிறதிலே ஒரு ஆச்சரியமும் இல்லையே! நானும் கோயில் மாடு சிவாவும் என் சிநேகிதம் ஆனோம் — எப்ப சிநேகிதம் ஆனோம் — தெரியுமா உங்களுக்கு ?"

"எனக்கு எப்படித் தெரியும்? அனுபவஸ்தனான நீயே சொல்லேன்!"

"நீங்கள் இந்த ஊர்லதானே இருக்கப் போறீங்க... இன்னுங் கொஞ்ச நாள் கழித்துச்சொல்றேன்!"

"இதற்கு ஏன் தம்பி நாளை ஒத்திவைக்கிறாய்? சும்மா இப்பவே சொல்லு!"

"ஊஹூம் இப்பசொல்லமுடியாது! அப்பறம் சொல்றேன்!"

சுருளிமலை இதைக் கூறியவாறு, எழுந்து வேகமாக வீட்டை விட்டு வெளியேறினான்.

அவன் போவதையே அறவாழி, கவனத்தோடு பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, இறுதியில் பொன்மணியின் பக்கம் திரும்பினான். பொன்மணியை அந்த இடத்தில் காணவில்லை. அவள் எங்கே போய்விட்டாள் என்று அவன் நினைப்பதற்குள் கொல்லைத் தாழ்வாரத்துப் பக்கமிருந்து, "அம்மா! அம்மா! ஓடிவாருங்கள்! ஓடிவாருங்கள்!" என்ற குரல் கேட்டது.

"அய்யோ! என்னடி பொன்மணி!" என்று பூஞ்சோலை ஓடினாள். கொல்லைப் பக்கம் போன பொன்னையாவுக்குத்தான் ஏதோ நேர்ந்துவிட்டது என்று பூஞ்சோலை நடுங்கினாள். நல்ல வேளையாக அப்படி ஒன்றும் ஆகிவிடவில்லை. பொன்மணிக்குக் கை விரலில் தேள் கொட்டிவிட்டது! அடுப்புக்கு வரட்டி எடுக்கப் போயிருக்கிறாள்; அதிலிருந்து தேள் நன்றாக அவள் விரலைப் பதம் பார்த்துவிட்டது. பொன்மணி, துடித்தாள்; துவண்டாள்.

அறவாழியும் மெதுவாக எழுந்து கொல்லைத் தாழ்வாரத்திற்கு பரபரப்போடு வந்து விட்டான்.

"அய்யோ! தேள் கொட்டி விட்டதே பெண்ணுக்கு நான் என்ன செய்வேன்.." என்று பூஞ்சோலை ஒப்பாரி வைத்தாள். ஊருக்கெல்லாம் வைத்தியம் செய்யப் போவாள் — தன் வீட்டிலேயே ஆபத்து என்றதும் எதிலும் புத்தி ஓடவில்லை அவளுக்கு. தட்டுத் தடுமாறி அந்த இடத்திற்கு வந்து விட்ட பொன்னையா, "ஓடிப்போய் கண்ணனை அழைத்து வா—மந்திரம் போட்டு விஷத்தை இறக்கி விடுவான்!" என்று அவசரக் குரல் எழுப்பினார்.

"ஆமாம் கண்ணனாச்சு-மண்ணாச்சு! அவன் வேண்டாம்-அவனுக்கு என்ன தெரியும? அவன் மந்திரத்திலே மாங்காய் விழாது!" என்று சடக்கென்று பதில் சொல்லிவிட்டுத் தொடர்ந்து அழுதாள் பூஞ்சோலை

பொன்மணிக்கோ வலியும் கடுகடுப்பும் தாங்க முடியவில்லை. உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது எதிரே அறவாழி நிற்பதைக்கூடப் பொருட்படுத்தாமல் கூச்சல் போட்டாள் அறவாழி, பூஞ்சோலையை நோக்கி "நான் வைத்தியம் செய்யட்டுமா இதற்கு?" என்று கேட்டான்

"தெரியுமா உங்களுக்கு? எப்படியாவது தேவலையாக்குங்க! கோடி புண்ணியமுண்டு!" என்று கெஞ்சினாள் பூஞ்சோலை

அவ்வளவு வேதனையிலும், வலியிலும், நரம்புகளைச் சுழல வைத்துத் தலையைக் கிறு கிறுக்க வைக்கும் விஷக் கொடுமையிலும் எப்படித்தான் புன்னகை வந்ததோ தெரியவில்லை பொன்மணிக்கு! காதலின் மகத்துவமே மகத்துவம்! அறவாழி, கொல்லைப்பக்கம் போய் வேலியோரத்தில் அவசர அவசரமாக எதையோ தேடினான் பிறகு ஒரு செடியிலேயிருந்து பத்துப் பதினைந்து பச்சிலைகளைப் பறித்துக்கொண்டு வீட்டுக்குள்ளே வந்தான். பறித்த பச்சிலைகளைத் தன் வாயிலே போட்டு மென்றான். பொன்மணியின் அருகே வந்து "காதை இந்தப்

பக்கம் திருப்பு!" என்றான் கருத்தையே அவன் பக்கம் திருப்பியிருந்த அவள், தேளை வாழ்த்திக்கொண்டு காதை திருப்பினாள். பச்சிலையைக் குதப்பியிருக்கும் வாயினால் அவள் காதிலே பலமாக ஊதினான் அவளுக்கு வலி வேறு—காதிலே ஊதப்படும் கூச்சம் வேறு!

"மந்திரம் ஒண்ணும் சொல்லாமல் பச்சிலைக் காற்றை ஊதினால் மட்டும் போதுமா?" என்று ஆச்சரியத்தோடும் அல்லற்படுத்தும் இருமலோடும் கேட்டார் பொன்னையா!

"பச்சிலை விஷத்தை இறக்க! மந்திரம் பணத்தை கறக்க!" என்று சிரித்துக்கொண்டே பதில் சொன்னான் அறவாழி. காதில் பச்சிலை காற்றை ஊத ஊத பொன்மணிக்கு விஷக் கொடுமை சிறிது சிறிதாகத் தணிவது தெரிந்தது. இன்னுங் கொஞ்சம் பச்சிலையை விரலில் வைத்துக் கட்டினான். தேளின் கொடுக்கு பட்ட விரலில் ஏற்பட்ட அந்தப் புதிய ஸ்பரிச உணர்ச்சி, தேகமெங்கும் தென்றல் பட்டதுபோல பரவிற்று.

அரை மணி நேரத்திற்கு மேலாக சிகிச்சை தொடர்ந்து நடைபெற்றது. பொன்மணியின் மேனியில் தோன்றிய வியர்வை வெள்ளம் மறைந்து விட்டது. விஷக் கொடுமை முழுவதுமே தீர்ந்துவிட்டது. கடுகடுப்பே இல்லை வேதனை முற்றிலும் அகன்று விட்டது. அதை அறவாழி நன்றாகப் புரிந்து கொண்டான்.

ஆனாலும் அவளை நோக்கிக் கேட்டான். "இப்போது எப்படி இருக்கிறது?" என்று!

"அப்பப்பா! தாங்க முடியவில்லை... ஆ... அய்யோ!....." என்று துடித்தாள் அவள். அவள் துடித்த வேகத்தில் அவனும் காதில் ஊத ஆரம்பித்தான். அவசரத்திலும் பரபரப்பிலும் அவன் உதடுகள் அவள் காதின் விளிம்பில் ஒருமுறை பட்டு விட்டன. இன்னொருமுறை கன்னத்தின் ஓரத்தையே தொட்டு விட்டன.

"இப்ப எப்படியம்மா இருக்கு?"—சிறிது நேரம் பொறுத்து தாயார் கேட்டாள்.

எப்படியிருக்கு என்பதைத் தாயாரிடம் எவ்வாறு விவரிக்க முடியும்! "மணிக்கட்டு வரையில் கடுக்கிறதம்மா!" என்றாள். ஊதல் சிகிச்சை தொடர்ந்து நடைபெற்றது ஊதல் "சிகிச்சை"யென ஒருமுறை தனக்குத்தானே சொல்லிக்கொண்டான் அறவாழி. ஊதல்—ஊடல்—ஆகிவிட்டால்? அறவாழிக்கே உடம்பில் புல்லரித்தது. அளவில்லா ஆனந்தம்!

"இப்ப எது வரையில் கடுக்கிறது?"—தாய் கேட்டாள்!

"விரல் வரையில்!" என்றாள் மகள்!

"ஊதினான்—ஊதினான்—விடாமல் ஊதினான்!"

"சரியாய்ப் போயிற்றா?" என்றாள் பூஞ்சோலை. அரை மனதாக "ஆம் அம்மா!" என்றாள் பொன்மணி கடைசியில் அந்தத் தேளை அடிக்காமல் விட்டு விட்டோமே என்று தேடத் தொடங்கினாள்; பூஞ்சோலை!

"நல்ல வேளை தப்பியது—நாளைக்கும் வந்து என்னைக் கொட்டாதா?" என ஆவலுடன் உள்ளத்துக்குள் முனகிக் கொண்டாள் பொன்மணி.

கலைஞர் மு. கருணாநிதி · சுருளிமலை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்