பொருளடக்கம்

சுருளிமலை

அத்தியாயம் 14 · 14 / 26

அத்தியாயம் 14

Chapter 14

மூல ஸ்கேன் 106–113

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

14

"கீழத்தெருவைத் தாண்டி தூரத்திலே இடிந்து காணப்படும் ஒரு மண்டபத்தின் பக்கம் கண்ணன் நடந்துகொண்டிருந்தான் . அந்த மண்டபத்தைத் தன் அழுத்தமான வேர்க்கரங்களால் சுக்கல் சுக்கலாகப் பிளந்து வெற்றிச் சிரிப்பு சிரித்துக் கொண்டு நிற்கும் அரச மரமும், அதனை யொட்டி இடிந்தும் இடியாமலும் இருக்கிற பலி பீடமும் இரவு நேரங்களில் அந்தப் பக்கம் போவோர் வருவோரை பயமுறுத்துவதுண்டு."

"அந்தப் பலி பீடத்திலே பாயச முனி என்று ஒரு பயங்கரமான முனி வாசம் செய்கிறதாம். அந்த முனிக்கு காட்டேரியம்மன் என்று ஒரு வைப்பாட்டி உண்டாம். அந்தக் காட்டேரி, ரத்தவெறி பிடித்தவளாம். மனித ரத்தமென்றால் விடமாட்டாளாம் ..

"ஒருநாள் அவள் ரத்தப் பசிகொண்டு, ஆள் ஒருவரும் கிடைக்காமல் கடைசியாகத் தனக்குப் பூஜை செய்யும் பூசாரி முத்தண்ணனையே அடித்து ரத்தம் குடித்து விட்டாளாம் பலிபீடத்தின் முன்னேயே பிணமாகக் கிடந்த பூசாரியை மறுநாள் காலையிலே கண்ட ஊர் மக்கள் காட்டேரிமீதுதான் பழியைப் போட்டார்கள் .

''இரண்டொரு நாள் கழித்து சிலர் இப்படியும் பேசிக் கொண்டார்கள். அதாவது, பூசாரிக்கும் அடுத்த ஊரிலேயுள்ள ஒரு பயில்வானுக்கும் ஏதோ தகராறு ! அந்த பயில்வான் பூசாரியை கொலை செய்து விடுகிறேன் என்று சபதம் போட்டான் பூசாரியும் எதிர் சபதம் போட்டார். ஒருநாள் பயில்வான் பூசாரியைக் கொல்வதற்காக கத்தியின் உதவியை நாடாமல் புத்தியின் உதவியை நாடிவிட்டான் இரவு நேரத்தில், பூசாரி பலி பீடத்திற்கு பூஜை செய்துவிட்டுத் திரும்பும்போது மண்டபத்திலேயிருந்து கருஞ்சேலை கட்டிய பயங்கர உருவமொன்று காலில் சதங்கை கட்டிக்கொண்டு "கோ!" என்று கூச்சலிட்டது. பூசாரி அலறினார். அவ்வளவுதான் மூக்கிலும் வாயிலும் ரத்தம் வழிந்தது. தீர்ந்துவிட்டது மூச்சு! அடித்தோ, குத்தியோ கொன்றால் கொலை வழக்காகிவிடும்; இப்படிக் காட்டேரியின் பெயரால் கொன்று விடுவதே தனக்குப் பாதுகாப்பு என்று கருதிய அடுத்த ஊர்ப் பயில்வானின் நாடகம்தான் அது ''

"அப்படிப்பட்ட காட்டேரியும், பாயச முனியும் வாழுகின்ற பாழ் மண்டபத்தை நோக்கித்தான் கண்ணன் நடந்தான். நானும் விடவில்லை. மறைந்து மறைந்து பின்னால் சென்றேன் பலி பீடத்தருகே போய் கண்ணன் நின்று சுற்றுமுற்றும் பார்த்தான் . பிறகு கீழே உட்கார்ந்து பீடத்தின் கீழேயுள்ள கற்கள் இரண்டைப் பெயர்த்தான் சில நிமிஷ நேரம் ஏதோ வேலையில் ஈடுபட்டான் நான் நன்றாக ஒளிந்துகொண்டு நடப்பதை கவனித்தேன். பிறகு கண்ணன் அதைவிட்டுப் புறப்பட்டான்."

அவன் போனதும் பலிபீடத்தின் பக்கம்போய் உற்றுப் பார்த்தேன். கண்ணன் அங்கே சிறு குழி தோண்டி எதையோ புதைத்திருக்கிறான் எனக் கண்டு கொண்டேன் சந்தேகப்பட்ட இடத்தைத் தோண்டிப் பார்த்தேன். ஒரு பழைய தகடு - ஒரு மஞ்சள் துண்டு - சிறிய எலும்பு ஒன்று - இன்னும் ஏதேதோ குப்பைகள் இருந்தன அவைகளை யெடுத்து வெகு தூரம் வீசியெறிந்தேன் குழியை முன் இருந்ததுபோல வித்தியாசமில்லாமல் மூடி வைத்துவிட்டு, அவசர அவசரமாகக் கண்ணனைப் பின் தொடர்ந்தேன் அவன் தெற்கு வீதியைக் கடந்து

காளவாய்க்கரைப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்தான். நானும் மெதுவாக அவனை விடாது தொடர்ந்தேன்."

அங்கே ஓர் அய்யனார் கோயில் ! மிகவும் பிரசித்தி பெற்ற கோயில். சபரி மலை அய்யப்ப சாமியின் சித்தப்பா பிள்ளையாம் அந்த ஊரிலே உள்ள அய்யனார் சாமி! அவருக்குப் பிரார்த்தனை செய்துகொண்டு பலபேர் குதிரைகள் செய்து கோயில் வாசலிலே நிறுத்தியிருந்தனர். குதிரைப் பந்தயத்தில் மற்ற குதிரைகளை ஓட்டுகிற 'ஜாக்கி' களுக்கு லஞ்சம் கொடுத்துத் தன் குதிரையை ஜெயித்ததாக அறிவிக்கச் செய்து ஒரே சமயம் பத்து லட்ச ரூபாய் சம்பாதித்த பதஞ்சலிப் பிள்ளை என்ற சூதாடியொருவர் மஞ்ச கல்யாணிக் குதிரை யொன்றை அந்தக் கோயில் வாசலில் பொம்மையாகச் செய்து வைத்து பிரார்த்தனையை செலுத்திக் கொண்டார் அய்யனார், இரவு நேரங்களில் அந்த மண் குதிரைகள் ஒன்றில் ஏறிக்கொண்டு ஆற்றையெல்லாம் கடப்பாராம்."

அப்படிப்பட்ட கோயில் வாசலில் உள்ள குதிரைகளில் ஒன்றின் காலுக்குக் கீழே கண்ணன், தன் வேலையைத் தொடங்கினான் அவன் அதைவிட்டுப் போனதும் நான் அதே இடத்தில் என் ஆராய்ச்சியை நடத்தினேன். பலிபீடத்தருகே இருந்தது போன்ற பழைய பொருள்களேதான்! அவைகளை யெடுத்து காளவாய் நெருப்பில் வீசிவிட்டு முன்போலக் குழியை மூடிவிட்டுத் திரும்பினேன்."

"பின்னர், மேலத் திசையில் உள்ள ஒரு பாலத்தின் கீழே தன் வேலையை நடத்தினான் கண்ணன். நான் என் வேலையை நடத்தினேன்."

"கடைசியாக, வடக்குத் திசையில் வாய்க்கால் ஓரத்தில் வானுற ஓங்கி வளர்ந்திருக்கும் இரு கிளை முளைத்த தென்னமரத்தடியில் கண்ணன் போய் அமர்ந்தான். நானும் சற்றுத் தொலைவிலிருந்து கவனித்தேன். அவன் கீழே குழி தோண்டுகிறானா என்று கவனித்தேன். பேசாமல் உட்கார்ந்து சுற்று முற்றும் பார்த்தான். பிறகு எழுந்தான். எனக்கொன்றும் புரியவில்லை. மளமளவென்று தென்னை மரத்தில் ஏறினான். அடியிலேயே இரு கிளையாய்ப் பிரிந்து வளர்ந்திருக்கும் அந்த மரத்தில் ஒருகிளையில்

ஏறி உச்சிக்குப் போனான். சிறிது நேரத்திற்குப் பிறகு கீழே இறங்கினான். தன் மடியிலிருந்து எதையோ எடுத்தான் மரத்தில் தடவினான் பிறகு போய்விட்டான். நான் புரிந்து கொண்டேன் தகட்டை மரத்தின் உச்சியில் மறைத்திருக்கிறான் என்பதை! என்ன செய்வதென்று புரியவில்லை ஏனென்றால் எனக்கு மரம் ஏறத் தெரியாது. ஆழ்ந்த யோசனையுடன் மரத்தினிடம் சென்று கவனித்தேன். படியிலிருந்து ஏதோ எடுத்து தடவினானே; என்ன என்று பார்த்தேன் புரிந்து விட்டது. அவன் ஏறித் தகடு வைத்த கிளையைச் சரியாக அடையாளம் வைத்துக்கொள்வதற்காகக் கொஞ்சம் சுண்ணாம்பு தடவியிருக்கிறான். ஈரத்துடனேயே அந்த சுண்ணாம்பை விரலால் வழித்து அடுத்த கிளையில் தடவி விட்டு — முதலில் தடவப்பட்டிருந்த இடத்தில் சிறிதும் வெள்ளை தெரியாமல் அழித்து விட்டேன். பிறகு அவசர அவசரமாகக் கண்ணனைத் தொடர்ந்தேன்."

"அவன் பள்ளிக் கூடத்திற்குத் திரும்பிவிட்டான். அவன் என்னைப் பார்த்து விடக்கூடாதே என்பதற்காக எப்படியெப்படியோ ஒளிந்து உள்ளே சென்றேன். அப்போதுதான் கண்ணன் நான் படுத்திருந்த இடத்தில் இல்லாததைக் கண்டு திரும்புகிறான். நானும் போய் விட்டேன். 'எங்க வாத்தியாரே போனீங்க? தூக்கமே வரமாட்டேன்னுது... நீங்க தூங்காம இருந்தால் பேசிகிட்டு இருக்கலாம்னு வந்தேன்' என்று சமாளித்தான் கண்ணன்."

"நானும் அவனை விட ஒரு படி அதிகமாகவே போய், 'அப்படியா சேதி! நான் ஆனந்தமாகத் தூங்கினேன். இப்பத்தான் தெருப்பக்கம் எழுந்து போனேன்... அந்த சமயத்தில் நீ என்னை எழுப்ப வந்திருக்கிறாய்!' என்று ஒரு பொய்யை மெய்யாக்கினேன்."

"பிறகு இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம், 'இந்த ஊரில் கிளை முளைத்த தென்னைமரம் இருக்குதாமே?' என்று தெரியாதவனைப் போலக் கேட்டான் கண்ணன். நானும் அவனைப் புரிந்து கொள்ளாதவனைப் போல 'ஆமாம் — ஆச்சரியமான தென்னைமரம் அது! அந்த தேங்காய்கள் கூட எல்லாக் காய்களையும்விட அதிக விலை!' என்று கூறினேன்."

"இந்த ஊர்லே எவ்வளவு நாளா இப்படிக் கஷ்டமாயிருக்கு?" என்று அடுத்தபடியாகக் கேட்டான்.

"கஷ்டமா? என்ன கஷ்டம்? யாருக்கு?" என்றேன்.

"அதான் ஊரிலே நோய், நொடி, சாக்காடு — வறுமை சிறுமை — இப்படி யெல்லாம் இருக்கே — அது எத்தனை நாளா இருக்குன்னு கேக்கிறேன்" என்று விசாரித்தான் கண்ணன்.

"அது பல நாளாய் இருக்கு!" என்று அலட்சியமாகச் சொன்னேன் நான்.

"நாளையிலிருந்து இந்த ஊரைப் பிடிச்ச பீடை தொலையுது!" என்றான்.

"ஏன்? நீ ஊருக்குப்போகிறாயோ?" என்றேன். அந்தக் கிண்டலை அவன் புரிந்துகொள்ளவில்லை. "தகடு எடுக்கப் போகிறேன்; தகடு!" என்றான் கம்பீரமாக! நேரம் அதிகமாகி விட்டது. சிறிதுநேரம் தூங்கலாம் என்று விடியற்காலை கண்ணை மூடினோம்."

"மறுநாள் ஊரே அமர்க்களப்பட்டது. கரகமாடிக் கண்ணன் மலையாள மாந்திரீகன் புதைத்த தகட்டை எடுக்கப் போகிறான் என்ற சேதி காட்டுத் தீ போல் பரவிவிட்டது. ஆயிரக் கணக்கான மக்கள் அந்தச் சிறிய கிராமத்தில் கூடிவிட்டார்கள் கரக ஆட்டத்திற்கு வந்ததைவிட நாலு மடங்கு அதிகமான கூட்டம்! எல்லோரும் பீதியோடு வியப்போடும் தகடு எடுக்கும் சம்பவம்பற்றி பேசிக் கொண்டார்கள். தகடு எடுக்கும்போது மலையாள தேவதை அதிக பலத்தோடு சண்டை போட்டு கண்ணன் விடும் தேவதையை விரட்டிவிட்டால் அதே இடத்தில் கண்ணன் சாக வேண்டியதுதான் வாயாலும் மூக்காலும் ரத்தங் கொட்டிப் பிணமாகி விடுவான்; பாவம்—என்றெல்லாம் அனுதாப உணர்ச்சியோடு குழுமினர் பாவம்—அழகான வாலிபன்! இவனுக்கேன் இப்படிப்பட்ட துணிச்சல்? இவன் ஏன் மலையாள தேவதையிடம் தன் கைவரிசையைக் காட்டப்போகிறான்?" என்று செல்லமாகக் கண்டனம் தெரிவித்துக் கூறினர் பலர்."

"காலையில் கண்ணன் நன்றாகக் குளித்து முழுகி உடம்பெல்லாம் சந்தனம் பூசி, அகலமான குங்குமப் பொட்டு ஒன்றை

நெற்றியிலே இட்டு, செவந்திப்பூ மாலையொன்றைக் கழுத்திலே குறுக்கே போட்டுக்கொண்டு, ஒரு கட்டை வண்டியிலே ஏறி நின்று கொண்டான். வண்டியும் அழகாகச் சிங்காரிக்கப்பட்டு வாழைக் கன்றுகள் சுற்றிலும் கட்டப்பட்டு, சாம்பிராணி தூபம் புகையை எங்கும் பரப்பிவிட, காண்பவரைக் கவரும் வகையில் ஏற்பாடாகி யிருந்தது. தாரை, தப்பட்டை, கொம்பு முதலிய வாத்தியங்கள் முழங்க கரகமாடிக் கண்ணன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டான். அவன் கண்களை மூடிக்கொண்டு, கையை உயரத் தூக்கி 'ஹே காளிகா தேவி! மாரியம்மா! தாயே! சக்தி! சக்தி!' என்று கத்திக்கொண்டே வந்தான். அந்த வேடத்தைக் கண்டு யாருமே ஏமாந்து விடுவார்கள்."

"அதோ... கீழத்தெரு பாயச முனி மண்டபத்துக்கு விடு!" என்று கூச்சலிட்டான்! வண்டி, மண்டபத்திற்குச் சென்றது. 'இதோ! இந்தப் பலிபீடத்துக்குக் கீழேதான் மலையாள மாந்திரீகன் முதல் தகட்டைப் புதைத்திருக்கிறான்—ஹே காளி! ஹே மாரீ! உன் சக்தியால் அந்தத் தகட்டை எடுத்துத் தூளாக்குகிறேன் பார்!' என்று பலிபீடத்துக்குக் கீழே பரபரவென்று தோண்டினான். அங்கேதான் தகடு இல்லையே... அதைத்தான் நான் அப்போதே எடுத்து விட்டேனே....."

என்று அறவாழி, புன்னகையோடு பூஞ்சோலையிடம் கூறிக் கொண்டே பொன்மணி பக்கம் திரும்பினான் அவள் சிலையாக இருந்தாள். சிலை சிரிக்குமா? இந்தக் கேள்வி அறவாழியைக் குடைந்தது!

"ம் அப்புறம்? ... கண்ணன், நாலு திசையிலும் தேடிப் பாத்து ஏமாந்துட்டானா? அட பாவமே! நீங்க ரொம்ப குறும்புக்காரப் புள்ளை தம்பி அப்புறம் என்னா நடந்துச்சு? சொல்லுங்க?" என்று பூஞ்சோலை கேட்டாள்

அறவாழி பதில் சொன்னான்......

"எல்லா இடங்களிலும் கண்ணன் ஏமாந்து, அவனை நம்பிய மக்களும் ஏமாந்து, இறுதியில் கிளை முளைத்த தென்னை மரப் பக்கம் வந்தார்கள். கண்ணன் தானிட்டிருந்த அடையாளத்தைக்

கவனித்தான். அது மாற்றப்பட்டது அவனுக்கு எப்படித் தெரியும்? பாவம்-மளமளவென்று ஏறினான். அய்யோ, பரிதாபம்- ஏமாற்றத்தோடு திரும்பினான் கூட்டத்தில் பல வகையான பேச்சுக்கள்! கண்ணனின் தலை தானாகவே குனிந்து கொண்டது இருந்தாலும் தந்திரத்தை விடவில்லை... ஆவேசம் பிடித்தது போல் முரட்டுத்தனமாகப் பல்லைக்கடித்துக் கொண்டு கத்தினான் 'ஹே மலையாள பகவதீ! நீ என்னை ஏமாற்ற முடியாது! இருக்கட்டும்-நாளை காலையிலே உன் கொட்டத்தை அடக்குகிறேன்"...என்று சபதம் செய்தான்.

உடனே, நான் குறுக்கிட்டு, 'நான் இப்போதே உன் கொட்டத்தை அடக்குகிறேன்!' என்று கூறினேன் கண்ணன் உட்பட அனைவரும் என்னையே அதிசயமாக நோக்கினர்.

"முதல்நாள் இரவு நடந்த ரகசியம் முழுவதையும் எல்லோர் முன்னிலையிலும் விளக்கினேன். கண்ணன் தகடு வைத்திருந்த சரியான கிளையைக் காட்டி 'இதோ இந்தக் கிளையில் இருக்கிறது; தகடு! எடுங்கள்!' என்றேன்

"ஒருவன், மரத்திலேறி நான் சொன்னபடி தகட்டை எடுத்து வந்தான் ஊரார் கோபம் கண்ணன்மீது திரும்பியது. அவனை அங்கேயே அடித்துக் கொன்றிருப்பார்கள் நான் மாத்திரம் தடுக்காவிட்டால்! கடைசியாக, தகடு எடுக்கும் விழா பார்க்கவந்த பொதுமக்கள் என்னுடைய பிரசங்கத்தைக் கேட்டு வீடு திரும்பினார்கள்.

"கண்ணன், என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு அதை விட்டு அகன்றான். அந்தப் பார்வையின் 'அர்த்தம் பழிக்குப்பழி!' என்பதுதான்! எனக்கு சிற்றூருக்கு மாற்றல் ஆனதுமே கண்ணனின் ஞாபகம்தான் வந்தது. அதோடு, அவனுடைய பார்வையின் நினைவும் எழுந்தது. இருப்பினும் பரவாயில்லையென்று புறப்பட்டேன். ஊரைவிட்டுப் புறப்பட்ட நான் ரயில், கார் முதலிய வாகனங்களைக் கடந்து கடைசியில் கட்டை வண்டி யொன்றில் ஏறி ஊருக்குள் வந்து கொண்டிருந்தேன் இரவெல்லாம் ஒரே பிரயாணக் களைப்பு—விடியற்காலை நாலு மணிக்குத்

தான் இந்த ஊரை அடைய முடியும் என்று திட்டமிட்டு என் பயணம் துவங்கியது. அதன்படி ஊருக்குள் நுழைந்தேன் ஊர் கோடியில் வண்டிமாடுகள் படுத்துக்கொண்டு எழவே முடியாதென மறுத்துவிட்டன பிறகு வண்டிக்காரனுக்கு கூலியைக் கொடுத்துவிட்டு பெட்டி படுக்கைகளை நானே தூக்கிக்கொண்டு நடந்தே வந்துகொண்டிருந்தேன்.

"அப்போதுதான் திடீரென கண்ணனை சந்திக்க நேர்ந்தது! கண்ணனை மட்டுமல்ல .... கண்ணனின் 'உதவியால்' .... உங்களைப் போன்ற நல்லவர்களையும் .... " என்று பேச்சை இழுத்து இழுத்து நிறுத்த முடியாமல் விழிகளை மட்டும் பொன்மணியின் பக்கம் விடுத்தான் அறவாழி!

கலைஞர் மு. கருணாநிதி · சுருளிமலை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்