பொருளடக்கம்

சுருளிமலை

அத்தியாயம் 13 · 13 / 26

அத்தியாயம் 13

Chapter 13

மூல ஸ்கேன் 99–106

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

13

"நான் இருந்தால் அந்தக் கிராமத்துக்கே ஆபத்து ஏற்பட்டுவிடுமாம். அதற்காக அவசர அவசரமாக என்னை வேறு ஊருக்கு மாற்றியாகவேண்டும் என்று அதிகாரிகள் தீர்மானித்து விட்டார்!" என்றான் அறவாழி.

"பார்த்தா—பிள்ளே, பசுபோல இருக்குது! உங்களால் என்ன தம்பி ஊருக்கு ஆபத்து?" - ஆவலோடு கேட்டாள் பூஞ்சோலை .

"ஊரிலே இருக்கிற ஜனங்களெல்லாம் புத்திசாலிகளாய் இருக்கவேண்டுமென்று நான் கூறினேன். அது,மிகவும் தவறான காரியமாம். சம்பாதிக்கிற பணத்தை வீணே செலவு செய்யாமல் சிக்கனமாக வாழ்க்கை நடத்துங்கள் என்று சொன்னேன் ; அது குற்றமாம். எல்லோரும் நாகரீகமாகவும், சுகாதாரமாகவும் நடந்து கொள்ளவேண்டுமென்று பாடுபட்டேன் ; அது பாபமாம் அதற்காக என்னை விரட்டி விட்டார்கள் !"

"அய்யோ! இதெல்லாம் சொன்னா என்ன தப்பு?...அப்படி என்ன தம்பி அந்த ஊருக்காரங்க செலவு பண்ராங்க? குடி ஜாஸ்தியோ?"

"குடியைவிட மோசமான செலவெல்லாம் செய்கிறார்கள். எவனாவது வந்து எதையாவது சொல்லி ஏமாற்றிப் பணம் பறித்துக்கொண்டு போய்விடுவான். ஒரு நாளைக்கு ஒரு கும்பாபிஷேகம் பண்ணுவார்கள். இரண்டு திருவிழா நடத்துவார்கள்!"

"தம்பீ, தம்பீ, என்னது? கும்பாபிஷேகம் பண்றதும், திருவிழா நடத்துறதும் மோசமான செலவா? என்ன தம்பீ இப்படி சொல்றீங்க? இப்பவுல்ல தெரியுது அந்த ஊர்க்காரன் ஏன் விரட்டினான்னு ! அய்யய்யோ ...... நீங்க சாமிக்கு எதிரியா? அதான் நம்ப கோயில் காளைகூட உங்களை விரட்டியிருக்கு !"

"நான் சாமிக்கு எதிரியில்லம்மா; நான் தான் உண்மையான பக்தன்! சாமி பேரைச்சொல்லி ஊரை ஏமாத்துறானே அவனுக்குத்தான் நான் எதிரி ! சாமிக்கு என்மேல் கோபம் கிடையாது.சாமியை வைத்துக்கொண்டு பிழைக்கிறானே அவனுக்குத்தான் என்மீது ஆத்திரம் ! உங்க ஊர் கோயில் காளை என்னை ஏன் விரட்டியது? வந்ததும் வராததுமாக அதற்கு என்னைப்பற்றித் தெரிந்துவிட்டதா என்ன ?"

"ஏன் தம்பி தெரியாது? அது சாமியோட காளையாச்சே! அதுக்கு எல்லாமே தெரியும்!'

" கோயில் காளை என்னை முட்டித் தள்ளியதற்கும், உங்க ஊரிலே இருக்கிறானே, கரகமாடிக் கண்ணன் - அவனுக்கும் நிறைய சம்பந்தமிருக்கிறது."

"யாரு; கரகமாடிக் கண்ணனா? அவனுக்கு என்ன வந்துச்சு உங்கமேல கோபம்? ஓகோ ...சரிதான் ! கண்ணன் பெரிய கரகமாடி!...அதோட அவனுக்குத் தெரியாத தெய்வமே கிடையாது பெரிய மந்திரவாதியாச்சே அவன்! அவனுகிட்ட போயி நீங்க தகராறு பண்ணலாமோ? அதான் அவன் கோயில் காளைக்கு மந்திரம் போட்டு ஏவி விட்டிருக்கான்".

"அவனுடைய மந்திரமும் தந்திரமும்! எல்லாம் ஏமாற்று வித்தையென்று எங்கள் ஊரிலே நிரூபித்துக் காட்டிவிட்டேன். அதிலே அவனுக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு வந்ததும் வராததுமாக பழிவாங்கிக் கொள்ளப்பார்த்தான் அவ்வளவுதான்!" என்று அறவாழி சற்று நிமிர்ந்து உட்கார்ந்து பொன்மணியிருந்த திக்கை நோக்கினான். அவள் அங்கேதான் அசையாமல் நின்று கொண்டிருந்தாள்."

அவனுக்குக்கூட தன்னை அந்த ஊரிலிருந்து மாற்றியது நல்லதாகத்தான் போயிற்று என்ற எண்ணம் மின்னி மறைந்தது. அவன் தன்னைப் பார்த்ததும் அவன்மீது படர விட்டிருந்த தன் பார்வையைத் திடீரென்று தரைக்குத் திருப்பிக்கொண்டாள் பொன்மணி, அதையும் அவன் கவனிக்காமல் இல்லை. இன்னும் ஏதாவது பேசிக்கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. அவனது உடல் வலியெல்லாங்கூட ஒதுங்கிக் கொண்டது போன்ற உணர்ச்சி! பூஞ்சோலையம்மாள் புதிய கேள்விகள் எதுவும் போடமாட்டாளா என்று ஆவலோடு எதிர்பார்த்தான்.

பூஞ்சோலைக்கோ சற்றுக் குழப்பம் ஏற்பட்டது. இவன் என்னமோ புரியாததும், புதியதும், இதுவரை நம்பிவந்த பழமைக்கு விரோதமானதுமான கருத்துக்களைப் பேசுகிறானே என்ற ஆச்சரியத்தில் ஏற்பட்ட குழப்பமே அது. இருந்தாலும் அவளுக்கு அறவாழியின்மீது வெறுப்பு ஏற்பட்டு விடவில்லை. என்னமோ சின்னப்பிள்ளை - ரத்தத் துடிப்பில் எதுவோ பேசுகிறான் என்று அவனை மன்னித்துவிடத் தயாராக இருந்தாள். அவனது அன்பு ததும்பிய முகம், பூஞ்சோலையம்மாளுக்கு அவன்மீது ஒரு புதிய பாசத்தை ஏற்படுத்தியது.

சுருளிமலை, வழக்கமான அலட்சியத்தோடு அறவாழியின் பேச்சைக் கேட்டானாயினும், அந்தப் பேச்சினிடையே எதையோ ஒரு விஷயத்தை எதிர்பார்ப்பவனைப்போலக் காணப்பட்டான். இப்படி அவர்கள் எல்லாம் அறவாழியைப்பற்றி சிந்தித்துக் கொண்டு மௌனமாக இருந்தார்களே தவிர, புதிய கேள்வி எதையும் போட்டு அவன் பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுக்க வில்லை. அறவாழியும் சிறிது நேரம் காத்திருந்தான். பிறகு அவனே தன் பேச்சைத் தொடரத் தொடங்கிவிட்டான்.

"உங்கள் ஊர் கண்ணனை எங்கள் ஊரில் அவமானப் படுத்தி விட்டேன் என்றேனே - அதையெப்படியென்று யாருமே கேட்கவில்லையே ; இதோ நானே சொல்லுகிறேன் கேளுங்கள்!" என்று உதட்டில் புன்னகையை வரவழைத்துக்கொண்டு மூவரையும் மாறிமாறிப் பார்த்தான் அறவாழி.

பொன்மணியின் பார்வையிலே ஆவல் நிறைந்திருந்தது. பூஞ்சோலையம்மாள் அவனைப்பார்த்து. "என்னமோ தம்பீ - நீங்க சொல்கிறது அதிசயமா இருக்கு ! கண்ணன் பெரிய மந்திரவாதி - அவனைப் போயி நீங்க இப்படிச் சொல்றதுன்னா..." என்று பேச்சை இழுத்தாள்

"எங்கள் ஊர் ஜனங்களும் இப்படித்தான் அவனைப்பற்றித் தப்புக்கணக்குப் போட்டிருந்தார்கள். நான்கூட அவனைப் பார்த்ததும் இவன் ஏமாற்றுக்காரனாய் இருக்கமாட்டான்; தான் செய்கிற தந்திரங்களை மக்களிடம் விளக்கமாக எடுத்துச் சொல்லித் தன் திறமையை வெளிக்காட்டி ஊதியம் பெறுபவனாகவே இருப்பான் என்று எண்ணினேன். ஆனால் அவன் என்னையும் சேர்த்து ஏமாற்றிவிடப் பார்த்தான்" என்று அறவாழி கூறியதும், பொன்மணிக்கு உற்சாகம் தாங்கவில்லை. கரகமாடிக் கண்ணனைப்பற்றித் தான் கொண்டிருக்கும் அபிப்பிராயத்தையே அறவாழியும் கொண்டிருப்பது அவளுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. கண்ணன் தன் பிரியத்துக்குரிய அறவாழியிடம் எப்படி அகப்பட்டுக் கொண்டான் என்பதை அறிய அவள் துடித்தாள். அதே சமயம் அவளுக்கு வேறொரு பயமும் வந்து

விட்டது. தனக்கும் அறவாழிக்கும் குறுக்கே கரகமாடிக் கண்ணன் வெறும் காமாந்தகாரனாக மட்டுமல்ல; அறவாழியைப் பழிவாங்க நேரம் பார்த்திருக்கும் பகைவனாகவும் நின்று கொண்டிருக்கிறானே யென்பதுதான் அந்தப் பயம்.

அறவாழி, கண்ணனைப்பற்றிய கதையைத் தொடர்ந்தான் :

"எங்கள் ஊருக்கு கரகமாடிக் கண்ணன் வரப்போகிறான் என்று பத்துநாட்களாகவே ஒரே பரபரப்பாக இருந்தது. அவனைப்போலக் கரகமாட யாராலும் முடியாது என்று அந்தப் பகுதியிலேயே ஒரேபேச்சு! கிராமத்து மாரியம்மன் கோயிலில் பெரியதிருவிழா! திருவிழாவின் கடைசிநாள் தான் கண்ணனின் கரக ஆட்டம் ! உள்ளூர் பெரியமனிதர் ஒருவர் - மாரியம்மன் கோயில் தர்மகர்த்தா மட்டுமல்ல; ஊரிலேயே அவர் வைத்தது தான் சட்டம்! அந்த அதிகாரத்தின்படி கண்ணனுக்குத் தங்குவதற்கான இடவசதி எங்கள் பள்ளிக்கூடக் கட்டிடத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நானும் பள்ளிக்கூடக் கட்டிடத்திலேயே ஓர் அறையில் தங்கியிருந்தேன் காரணம்,அந்த ஊரில் வேறு வீட்டுவசதியில்லை. தப்பித்தவறி ஒன்றிரண்டு வீடு இருந்தாலும் அவர்கள் கல்யாணமாகாதவர்களுக்கு வீடு தருவதில்லையென்று கூறிவிட்டார்கள். அதனால் நான் பள்ளியிலேயே தங்கிடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது.'

'ஓகோ ! உங்களுக்கு இன்னம் கல்யாணமாகலியா தம்பீ ?" என்று இடைமறித்தாள் பூஞ்சோலை பொன்மணிக்கு பூரிப்பு பொங்கியது.

அவன், "இல்லை!" என்று அவள்பக்கம் திரும்பிக்கூறி விட்டு மேலே தொடர்ந்தான்.

"ஊரார் எதிர்பார்த்து ஏங்கியிருந்த கரகமாடிக் கண்ணன், குறிப்பிட்ட தினத்தன்று அதிகாலையிலேயே எங்கள் பள்ளிக் கூடத்தில் வந்து இறங்கினான். அவனது தோற்றம் அவன்மீது எனக்கு வெறுப்பை ஏற்படுத்தவில்லை. நடையுடை பாவனைகளில் கிராமியமிருந்தது. பேசும்தோரணையிலும் கிராமியக் கனிவு தென்பட்டது.சாயங்காலந்தான் அவனுக்குக் கரக ஆட்டம்

அதுவரையில் அவன் பள்ளிக்கூடத்தில்தான் தங்கியிருந்தான். ஊரிலே திருவிழா என்றால் பள்ளிக்கூடம் இருக்கலாமா? அதனால் எனக்கும் நல்ல ஓய்வு ! பகற்பொழுதில் நானும் கண்ணனும் பேசிப்பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. பேச ஆரம்பித்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் நான் அவன் எப்படிப்பட்டவன் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டேன் மாலையில் கரக ஆட்டத்திற்கு என்னை அவசியம்வரவேண்டுமென்று அழைத்தான் 'அது ஒரு கலைதானே ; வந்துபார்க்கிறேன்' என்றேன் நான். 'என்ன அப்படிச் சொல்லிவிட்டீர்கள்? கலையாவது மண்ணாவது எல்லாம் கடவுள் சக்தி' என்று வாதிட்டான் அவன்.

"மாலையில் நானும் போனேன் விழா வேடிக்கை பார்க்க ! ஊர்மக்கள் அனைவரும் கூறியதுபோலவே அதி அற்புதமாக கரகக்கலையை அவன் கற்றிருந்தான். தலையில் கரகத்தை வைத்துக்கொண்டு அவன் பம்பரம்போல் சுற்றி ஆடியதை இப்போதும் நான் பாராட்டத் தயாராய் இருக்கிறேன்."

"சுருள்கம்பி சுற்றிக்கொண்டு ஆடினான். மண்டியிட்டுத் தவழ்ந்து தலையிலேயுள்ள கரகத்தை மட்டும் கிறு கிறுவென்று சுற்றிக்காட்டினான்.'

'முனை மழுங்கிய கத்திதான் ; ஆனாலும் அதன் விளிம்பின் மீது நின்றுகொண்டு போட்டி போட்டு முழங்கிய பம்பைக்கும் உடுக்கும் வாத்தியத்திற்கும் அறைகூவல் விடுத்து அவன் ஆடிய ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது. இன்னும் கண்ணை விட்டகலாத காட்சி!"

"இத்துணை சிறப்புவாய்ந்த கலை விருந்தை அளித்தவன் திடீரென்று ஊர்மக்களை தெய்வசக்திக்குப் பலியிடத் தொடங்கிய போதுதான் எனக்கும் அவனுக்கும் இவ்வளவு பெரிய பகை மூள்வதற்கான சூழ்நிலை உருவாயிற்று!

-இதைச்சொல்லிவிட்டு அறவாழி ஒரு பெருமூச்சுவிட்டுக் கொண்டான். அவன் கூறிய வார்த்தைகளில் உள்ள ஆழ்ந்த பொருளை உணர்ந்து கொள்ளாவிட்டாலும் கதை கேட்பதுபோல பூஞ்சோலையும் பொன்மணியும் சுருளிமலையும் அவன் பேச்சைக் கேட்டனர்

அறவாழிக்கே கூட சந்தேகம் தோன்றியது - யாரோ தன்னையொத்த விஷயமுணர்ந்த பேர்வழிகளிடம் பேசுவது போல் பேசுகிறோமே; புரியுமா என்று ! இயல்பாக அவனுக்கு எழும் ஆர்வத்தின் விளைவாகவே அந்தப் பேச்சு அமைந்தது.

"ம! அப்பறம்?" என்றாள் பூஞ்சோலை.

அடேடே ஆவலாகத்தானே கேட்கிறார்கள் என்று விட்ட இடத்திலிருந்து தொடங்கினான் அறவாழி :

''கரகமாடிக் கொண்டிருந்த கண்ணன்" கடைசியாகக் கோயில் வாசல் வந்ததும் திடீரென தெய்வ ஆவேசம் வந்து ஆடினான் தர்மகர்த்தாவும் ஊர்ப்பிரமுகர்களும் அருகேபோய் வரம் கேட்டனர் கண்ணன்,'எல்லோருக்கும் கேட்ட காரியம் சித்தி அடையும்' என்றும் கூறிவிட்டு, இறுதியாக ஒரு பெரிய குண்டுபோட்டது போன்ற பயங்கரமான செய்தியை ஊர்மக்களுக்கு நடுவே சொன்னான்.

"இந்த ஊருக்குப்பெரிய கெடுதி செய்யவேண்டுமென்று மலையாள மந்திரவாதியொருவன் நாலுதிசையிலும் தகடு புதைத்திருக்கிறான் அதை உடனே எடுக்காவிட்டால் ஊரே அழிந்து விடும்!"- இப்படிக் கத்தினான் அவன்.

"உடனே ஊரார் அலறி அடித்துக்கொண்டு எப்படியாவது தகட்டை எடுத்து எங்களைக் காப்பாற்று தாயே!" என்று பிரார்த்தனை செய்தனர்." பிறகு சாமி மலையேறியது.

" கரகமாடிக் கண்ணன், மலையாள மாந்திரீகர்கள் புதைத்திருக்கும் தகடுகளைத் தானே மந்திரம் போட்டு எடுத்துவிடுவதாக உறுதிகூறி அதற்குக் காணிக்கையாக நூறு ரூபாய் வேண்டுமென்றும் கேட்டான். தர்மகர்த்தாவும் காணிக்கை தருவதற்கு சம்மதம் தந்தார். மறுநாள் காலையில் தகடு எடுப்பது என்று முடிவாயிற்று!"

"கண்ணன், பள்ளிக்கூடத்தில் வந்து படுத்துக்கொண்டான். கரக ஆட்டத்தைப்பற்றி என்னிடம் விமர்சனங்கூட கேட்டான். நான் மிகவும் புகழ்ந்தேன். அவனுக்கு ஒரே மகிழ்ச்சி! பிறகு தூக்கம் வருகிறது என்று சொல்லி என்னை என் அறைக்கு

அனுப்பிவிட்டான். நானும் அறையில் வந்து படுத்தவன் ஏதேதோ நினைத்துக் குழம்பியபடியே தூங்கிவிட்டேன். இரவு இரண்டு மணியிருக்கும் திடுக்கென விழித்துக்கொண்டேன் பிறகு தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன் என் அறைப்பக்கம் யாரோ வந்ததுபோல் தெரிந்தது. அசையாமல் படுத்துக்கொண்டேன்"

வாத்தியாரே!" - என்று ஒரு குரல்! அது கண்ணனின் குரல்தான் ! பேசாமல் படுத்திருந்தேன். கண்ணன் அறையை விட்டு நகர்ந்தான். நான் மெதுவாக எழுந்து வெளியே வந்தேன் கண்ணனைக் காணவில்லை அவன் படுக்கையில் போய்ப் பார்த்தேன். படுக்கை காலியாக இருந்தது.தெருப் பக்கம் வந்தேன். கண்ணன் தெருவில் போய்க்கொண்டிருந்தான்... எனக்கு அவனைத் தொடர்ந்து செல்லவேண்டும்- போலிருந்தது. அதனால் தொடர்ந்தேன் ...

கலைஞர் மு. கருணாநிதி · சுருளிமலை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்