அத்தியாயம் 12 · 12 / 26
அத்தியாயம் 12
Chapter 12
மூல ஸ்கேன் 91–99
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
12
பொன்மணி, பூஞ்சோலை இருவரும் போட்ட கூச்சலில் தூரத்திலேயுள்ள வீடுகளிலே இருந்து ஒரு சிலர் விளக்குகளுடன் ஓடிவந்தனர். அப்போதுதான் வீட்டை விட்டு வெளியேறிய தீச்சட்டி சிங்காரம் சப்தத்தைக் கேட்டுப் பதைப்போடு திரும்பினான். என்றாலும் ஒரு மரத்தடியில் ஒளிந்து நடப்பதைக் கவனித்தான். ஏனெனில் ஒரு வேளை தான் ஓடிவந்ததைத்தான் பூஞ்சோலை தெரிந்துகொண்டு கத்துகிறாளோ என்ற அச்சம் அவனுக்கு. திரும்பி வந்து மீண்டும் அவர்களிடையே சிக்கிக்கொண்டு அவஸ்தைப்பட அவன் தயாராயில்லை.
அதற்குள் பக்கத்துத் தெருவினர் வீட்டு முன்னே கூடிவிட்<!-- verified source join: scan 91→92 --> டனர். காளை தன்னுடைய பாய்ச்சலை நிறுத்தவில்லை. அதன் தாக்குதலுக்கு ஆளான அந்த மனிதன், தரையிலே கிடந்த ஒரு பருமனான மரத்துண்டோடு தன் உடலை மறைத்து ஒட்டிக்கொண்டு கிடந்ததால் காளையின் கொம்புகள் அவன்மீது குத்திட இயலவில்லை. மரத்துண்டின்மீது ஏற்பட்ட பெரிய காயங்கள் அவன் மேனியில் பட்டிருக்குமேயானால் அவன் உருத்தெரியாமல் சின்னா பின்னமாகி யிருப்பான். தெருவினர் ஓடிவந்து எவ்வளவோ கத்தியும் காளை அவனை விட்டுத் திரும்பவில்லை. அவர்களுக்கோ அதனிடம் நெருங்குவதற்குப் பயம். தூர நின்று கல் எறிவதற்கும் அவர்கள் தயாராயில்லை. ஏனெனில் அது கோயில் காளை! ஆண்டவனுக்குக் கோபம் வரும். அதைவிட அதிகமாக அந்தக் காளைக்கே ஆத்திரம் வரக்கூடும். நினைப்பு வைத்துக்கொண்டு அடையாளம் பார்த்துத் தனித் தனியாக ஒவ்வொருவரையும் அது பழி வாங்கிவிடும் என்ற பயம் அவர்களைப் பிடித்துக் குலுக்கியது.
அய்யோ, அந்த ஆள் செத்து விட வேண்டியதுதானா என எண்ணி பொன்மணி கண் கலங்க, “யாராவது ஓடிபோய் காப்பாற்றுங்களேன்!” என்று கெஞ்சினாள். யாரும் துணியவில்லை. கடைசியாக அவளே அந்தக் காளையிடம் ஓடினாள். அதன் எதிர்ப்புக்கு ஆளான மனிதனுக்கு நேரே சென்று காளையை எதிர்த்தாள்.
“நீங்கள் எல்லாம் ஆண் பிள்ளைகள் தானா? அந்தக் காலத்தில் காளைகளை அடக்குகிறவர்களைத்தான் கல்யாணம் செய்துகொள்வோம் என்று பெண்கள் கூறிவிட, அதற்காகப் போட்டிப்போட்டுக்கொண்டு உயிரைத் துரும்பாக மதித்துக் காளைகளுடன் போரிட்ட வீரர்கள் இருந்தார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோமே—உங்களை யெல்லாம் பார்க்கும்போது அதெல்லாம் கட்டுக்கதை போல் தோன்றுகிறது!” என்று பொன்மணி நினைத்துக் கொண்டாளோ என்னவோ தெரியாது. ஆனால் அவள் காளைக்கு எதிரே ஓடிய அந்த வீரச்செயல், அவள் ஊர் மக்களைப் பார்த்து அப்படி நினைத்திருப்பாள் என்றே எடுத்துக்<!-- verified source join: scan 92→93 --> காட்டுவதாக இருந்தது. அவளைக் கண்டதும் காளை, தன் பாய்ச்சலை அவள் பக்கம் திருப்பி பயங்கரமாகப் பார்த்தது.
அதைக் கண்ட பூஞ்சோலை, “அய்யோ! பொன்மணி! பொன்மணி!” என்று அலறிக்கொண்டு மகளிடம் ஓடி வந்தாள். இந்தக் கூச்சலும் குழப்பமும் காளையின் வெறியை அதிகமாக்கி விடவே உதவிற்று. காளை தன் முழு பலத்தையும் கொண்டு மூர்க்கமாகப் பொன்மணியின் மீது பாய எத்தனித்தது.
பூஞ்சோலை, “அய்யய்யோ!” என்று கதறி விட்டாள்.
சிறிது கால்களைப் பின் வாங்கி முன்னால் பாய்வதற்குக் காளை ஆவேசப் பெருமூச்சு விட்டதற்கும் எங்கிருந்தோ புல்லாங்குழலின் ஒலி வருவதற்கும் சரியாக இருந்தது. அந்தக் கொடுமையும் குலை நடுக்கமும் கொண்ட சூழ்நிலையில் குளிர்ச்சியான ஒலி நுழைந்தது மேலும் பயங்கரமாக இருந்தது. ஆனால் அந்த ஒலி கோயில் காளையைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெற்றது என்பதை காளையிடம் திடீரென ஏற்பட்ட மாற்றத்திலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. குழலொலி வந்த திசையைப் பார்த்தவாறு காளை நின்றது. எல்லோருமே அந்த திசையை கவனித்தனர். குழலூதியவாறு இருட்டில் ஒரு சிறுவன் வந்து கொண்டிருந்தான். விளக்கொளிக்கு அருகாமையில் அவன் வர வர சுருளிமலை தான் அவன் என்பது தெளிவாகி விட்டது. காளையிடம் வந்து நின்றான். காளை சாந்தம் பெற்றது. தன் நாக்கால் அவன் கையைத் தடவிக் கொடுத்தது. அவனும் அதன் முதுகில் இரண்டு தட்டு தட்டி ஏறி உட்கார்ந்து கொண்டான்.
காளை அவனைச் சுமந்து கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றது. எல்லோரும் வியப்போடு அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
பூஞ்சோலை, பொன்மணியைக் கட்டிப்பிடித்துகொண்டு “அம்மாடி! நீ பிழைச்சியோ?” என்று உச்சி முகர்ந்தாள். முத்தமிட்டாள். “நான் கும்பிட்ட தெய்வமெல்லாம் நல்ல தெய்வம்”
என்று தன்னுடைய தேர்ந்தெடுக்கும் திறமையைப் பாராட்டிக் கொண்டாள்.
காளையால் முட்டப்பட்டு மரத்துண்டுக் கருகில் சுருண்டு கிடந்தவனைத் தூக்கி உட்கார வைத்தார்கள் தெரு மக்கள். அவன் உடலில் பெரிய காயம் எதுவுமில்லை. காளையின் கொம்புகளுக்கு அவன் இலக்காக வில்லை. ஆகியிருந்தால் வயிறு அல்லது மார்புக்கூடு கிழிக்கப்பட்டிருந்திருக்கும். உடலெங்கும் ஊமைக்காயங்கள்—அதனால் அவன் பேசும் சக்தியிழந்து மயக்கமுற்றிருந்தான்.
ஒருவன் தன் கையிலுள்ள விளக்கை அவன் முகத்திற்கு நேரே பிடித்தான். அமைதி நிறைந்த அழகான முகம் படைத்த வாலிபன்! அரும்பு மீசை... நாகரீகத் தோற்றம் இருபத்தைந்து வயதே யிருக்கலாம் ஏறத்தாழ! விழிகள் மூடியிருந்தன! கிராப்புத் தலையும், மீசையும் இல்லாவிட்டால் கெளதமரைப்போலவே காட்சி தரக்கூடும்; அவ்வளவு சாந்தம் கொஞ்சிக் கொண்டிருந்தது அந்த இளமை ததும்பும் வதனத்தில்.
பொன்மணி, அவசர அவசரமாக ஓடிப்போய் தண்ணீர் கொண்டு வந்தாள். அதை வாங்கி, பூஞ்சோலை அவன் முகத்தில் தெளித்தாள். “மெதுவாக உள்ளே தூக்கிக்கொண்டு வாங்க!” என்று பூஞ்சோலை கேட்டுக் கொண்டதின் பேரில் சிலர் அந்த வாலிபனை வீட்டுக்குள்ளே தூக்கி வந்தனர்.
அவனை எங்கே படுக்க வைப்பது என்று பூஞ்சோலை சுற்றுமுற்றும் பார்க்கும்போது தான் சிங்காரம் தப்பி விட்டான் என்பது அவளுக்குத் தெரிந்தது. “அடிஅம்மா! சந்தடி சாக்கிலே நம்ப கண்ணில் எல்லாம் மண்ணைத் தூவிட்டானே!” என்று ஆச்சரியமும், ஆதங்கமும் கொண்டு சிங்காரம் படுத்திருந்த கட்டிலிலே அந்த வாலிபனையும் படுக்க வைக்கச்சொன்னாள்.
இதையெல்லாம் பார்த்த பொன்னையாவுக்கு பெரும் சங்கடமாகி விட்டது. “அடடா! இது என்னா பெரிய எழவாப்போச்சு! இது வீடுதானா? இல்லை, ஆஸ்பத்திரியா? தெருவில்<!-- verified source join: scan 94→95 --> அடிப்படுகிறவன், உதைப்படுகிறவன் எல்லாரும் இங்கதானா?” என்று முணுமுணுத்தார். நல்ல வேளை; அதற்கு மேல் அவரைப் பேச விடாமல் சரியான சமயத்தில் இருமல் தடை போட்டது. “எக்கேடாவது கெட்டுப்போங்க! எனக்கு என்ன வந்து கிடக்கு?” என்று இருமிக்கொண்டே தன் பேச்சுக்கு முத்தாய்ப்பு வைத்தார் அவர்.
பூஞ்சோலையும், பொன்மணியும் தெருவிலேயுள்ள சிலரும் சேர்ந்து அந்த வாலிபனுக்குத் தேவையான சிகிச்சைகளைச் செய்யத்தொடங்கினர். எல்லாவற்றையும் ஒழுங்காகக் கவனித்துக்கொண்டு ஒளிந்திருந்த சிங்காரம், அதை விட்டுக் கிளம்பி தன் நடையிலே வேகம் காட்டினான். நெடுநேர சிகிச்சைக்குப் பிறகு, மயக்கமுற்றிருந்த வாலிபன், சிறிது கண் திறந்து தன்னைச் சுற்றியிருப்பவர்களையெல்லாம் வியப்போடு பார்த்து விட்டு, புரண்டுப் படுத்துக் கொண்டான். "இனி பயமில்லே — அயர்ந்து தூங்கட்டும்" என்று அனைவரும் பூஞ்சோலை வீட்டை விட்டு வெளியேறினர்.
மங்கலாக எரிந்துகொண்டிருந்த விளக்கு வெளிச்சத்தில் வாலிபனின் முகத்தைப் பார்க்கக்கூடிய தூரத்தில் பொன்மணி உட்கார்ந்திருந்தாள். வாழ்க்கையில் அதுவரையில் பெற்றிராத ஒரு புதிய உணர்ச்சிக்கு அவள் அடிமையாக நேரிட்டது. அவளையுமறியாமல் அவன் முகத்தை அவள் பார்த்துக் கொண்டேயிருந்தாள். தான் ஏதோ தவறு செய்வதாக ஒரு எண்ணம் தோன்றுவதும்,தோன்றிய வேகத்தில் அந்த எண்ணம் மறைவதும்- அவளுக்கு ஒரு புதுமையாக இருந்தது. தன் உள்ளத்தை இது வரையில் யாராலும் பறித்துக்கொள்ள முடியவில்லை. இப்போதோ அவளே வலிய வந்து தன் இருதயத்தை இந்த வாலிபனுக்குப் படைத்திடத் தயாராகிவிட்டாள். தெளிந்த நீரோடையில் மின்னி மிதக்கின்ற கெண்டை மீன்களைக் கொத்திச் செல்ல சாய்வாகவும் - குறி தவறாமலும் பாய்ந்து செல்லும் "கிருட்டிண''ப் பறவைகளைப் போல இவள் கண்கள் அவன் முகத்தை நோக்கி படையெடுத்தன. என்றுமில்லாத ஒரு விளக்க
முடியாத உணர்ச்சி அவளை ஆட்டிப் படைத்தது.
அவன் வலியின் காரணமாக முனகும்போதெல்லாம் அருகேயிருந்து உடம்பைத் தடவிக்கொடுக்கலாம் போலிருந்தது அவளுக்கு. அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு, தன் மெல்லிய விரல்களால் அவனது அழகான நெற்றியை வருடிக்கொண்டேயிருந்தால் அயர்ந்து தூங்குவானே என்று தனக்குத்தானே ஆசையோடு நினைத்து வெட்கப்பட்டுக்கொண்டாள்.
"பொன்மணி! போய்ப் படம்மா !... என்னமோ தெரியிலே ஊரே கெட்டுக் கிடக்கு - இத பாரு . அந்த சிங்காரம் வேற தப்பி ஓடிவிட்டான். ஆவேசம் வந்து ஆபத்துன்னு சொல்லுச்சு! பேயை இங்கு விட்டுட்டு போயிட்டானே என்னமோ ... யார் கண்டது! தெய்வங்களா! குடும்பத்துக்கு ஒரு குறைவும் வராம காப்பாத்துங்க!" என்று உருக்கமான வேண்டுகோளோடு பூஞ்சோலை, பொன்மணியைத் தூங்கச் சொல்லிவிட்டுத்தானும் சற்று கண் அயர்ந்தாள்
பொன்மணிக்குத் தெரியும் அளவில் பொழுதும் விடிந்தது. அலைந்து கொண்டிருந்த அவள் கண்கள், பகல் நேரத்திலே அந்த வாலிபனின் முகத்தைத் தெளிவாகப் பார்க்கப் போகிறோம் என்ற ஆசையோடு அவளைத் தட்டி எழுப்பி கூடத்துப் பக்கம் நடக்கச் செய்தன
பூஞ்சோலையும் அதற்குள் எழுந்து, "தம்பீ! தம்பீ!" என்று அந்த வாலிபனை எழுப்பினாள்.
வாலிபன் கண் விழித்தான், "நான் எங்கிருக்கிறேன்?" என்று கேட்கவில்லை. எங்கேயோ பத்திரமான இடத்தில் இருக்கிறோம்; யாரோ பரிவுமிக்கவர்கள் தன்னைக் காப்பாற்றியிருக்கிறார்கள் என்று மட்டும் புரிந்து கொண்டான்.
"எப்படி யிருக்கிறதப்பா உடம்பு ? " என்று கேட்டாள் பூஞ்சோலை .
"பரவாயில்லே ; ரொம்ப நன்றியம்மா !" என்றான் வாலிபன்.
பொன்மணி, தூண் மறைவில் நின்று கொண்டு அவன் இதழசைவில் தெரிகின்ற எழிலை - குரலில் இழைகின்ற சங்கீதத்தை ரசித்துக் கொண்டிருந்தாள்.
"லொக்! லொக்!';- இருமல் சப்தம் ! பொன்னையா மெதுவாக கூடத்துப் பக்கம் வந்தார்.
"இந்தப் பயல் எங்கே போனான்? உருப்படாதக் கழுதை இப்படி ஊர் சுத்தினால் கடைசியிலே கையிலே திருவோடு எடுக்க வேண்டியதுதான் ! " என்று பொன்னையா கூறி முடிப்பதற்கும் - "அரகர மகாதேவா ! அன்னக்காவடி தர்மம் தாயே! அண்ணாமலைக்கு அரோகரா!" என்று ராகம் போட்ட படி சுருளிமலை உள்ளே நுழைவதற்கும் சரியாக யிருந்தது.
"எங்கேடா போனே? என்னடா நினைச்சுக்கிட்டிருக்கே உன் மனசிலே! ஆயும் அக்காளும் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு போட்டா சப்தம் போடாம சாப்பிட்டுட்டு ஊர் சுத்தலாம்னு திட்டம் போட்டிருக்கியா- சோம்பேறிக் கழுதை! இங்கேதான் சத்திரம், ஆஸ்பத்திரி எல்லாம் நடக்குது - ஒண்ணும் உருப்படாது! ஒண்ணும் உருப்படாது ! எழவெடுத்த வீடு! எழவெடுத்த வீடு! என்ற படி கொல்லைப் பக்கம் போனார் பொன்னையா.
தட்டுத் தடுமாறி நடப்பதைக் கவனித்த சுருளிமலை, "மெள்ள ! மெள்ள ! கோபத்திலே கீழே விழுந்து விடாதிங்க அப்பா! என்று அவர் கையைப் பிடித்துக் கொல்லைப்புறம் அழைத்துப் போனான்.
தன் தந்தையின் பேச்சால் அந்த வாலிபரின் முகத்தில் ஏதோ ஒரு மாற்றத்தைக் கண்ட பொன்மணி மிகவும் கலங்கி விட்டாள். அதிர்ச்சி அடைந்து விட்டாள் பூஞ்சோலைக்கும் சட்டென்று ஒன்றும் சொல்ல முடியவில்லை. ஆனால் சமாளித்து, 'தம்பீ.. எப்போதுமே எங்க வீட்டுக்காரு இப்படித்தான்; ஒரு முசுடு பிடித்த மனுஷன்! மனசு நல்ல மனசு! வாய்தான் சும்மா இருக்காது - லோகத்திலே சில பேரு சக்கரையாட்டம் பேசுவாங்க! காரியத்திலே வேப்பங்காய்தான் - ஆனா எங்க வீட்டுக்காருக்கு மனசுலே கல்மிஷமே இல்லே! வெளியில்தான்
இப்படி ஏதாச்சம் பேசி கிட்டு கெட்ட பேரு எடுப்பாரு ! நாலு பேருக்கு செய்யவோ கொள்ளவோ அவருக்கு ரொம்ப ஆசை தம்பீ ! நீங்க ஒண்ணும் நினைச்சுக்காதிங்க தம்பீ!" என்று அவள் சமாதானப்படுத்தினாள்.
"பரவாயில்லே! பரவாயில்லே ! உங்க உபகாரத்துக்கு நான் ரொம்ப கடமைப்பட்டிருக்கிறேன். மெதுவா என்னால் வெளியே போய்விட முடியும் - எனக்கு உத்திரவு கொடுங்கள்!" என்றான் அந்த வாலிபன்
அதற்குள், அங்கே சுருளிமலையும் வந்துவிட்டான்
உடனே பூஞ்சோலை,அவனுக்கு சுருளிமலையை அறிமுகப்படுத்திவைத்து, "இது தான் என் மகன் - அதோ நிக்கிற பெண்ணுக்கு இளையவன்!" என்றாள் பூஞ்சோலையம்மாள்.
வாலிபன், திரும்பிப் பார்த்தான் .விழிகளைத் திருப்பி எடுக்க மிகவும் கஷ்டப்பட்டுப் போனான்.
பூஞ்சோலை தொடர்ந்து."இவன்தான் தம்பி உங்களைக் காப்பாத்தினான், இவன் இல்லாவிட்டால் நீங்களும் என் பெண்ணும் அந்த கோயில் காளையோட கொம்புக்குப் பலியாக வேண்டியதுதான்!" என்று கூறினாள்.
"அப்படியா?" என்று ஆச்சரியப்பட்டான் வாலிபன்.
"ஆமாம் - உங்களை காளை முட்டித் தள்ளி நீங்க மூச்சு பேச்சு இல்லாம விழுந்து கிடந்திங்க. ஊர் ஜனங்கள் ஓடியாந்தாங்களே தவிர ஒருத்தரும் கிட்ட நெருங்கலே ! அப்ப என் மகள் பொன்மணிதான் தைரியமா ஓடியாந்து காளையை எதிர்த்து நின்றாள்! காளை,என் மகளையும் கொன்னுடப் பாத்துது ! அப்ப வந்து சேர்ந்தான் என் பிள்ளையாண்டான் சுருளிமலை ! தம்பீ - நீங்க நம்பமாட்டீங்க; புல்லாங்குழலை எடுத்து ஊதினானோ இல்லையோ; காளைமாடு அப்படியே அவனுக்கிட்ட மயங்கி மண்டியிட்டு விட்டது தம்பீ !"
"அப்படியே குழலோசை கேட்டு கேட்டுப் பழகியிருக்கிற மாடு ! பையனுக்குப் பழக்கமான மாடுதான்- இல்லையா?-
என்றவாறு அந்த வாலிபன் சுருளிமலையையும் பொன்மணியையும் மாறி மாறிப் பார்த்தான்.
சுருளிமலை, எதுவும் பேசாமல் நின்றான். பொன்மணியோ கண்களால் பேசிவிட்டு, தன்னைத் தூணில் மறைத்துக்கொண்டாள். அந்த வாலிபனுக்கு எங்கேயோ கேட்ட நிலவுப்பாட்டு ஞாபகத்திற்கு வந்தது.
"நீலவான ஆடைக்குள் உடல் மறைத்து நிலவென்று காட்டுகிறாய் ஒளி முகத்தை ! கோல முழுதும் காட்டி விட்டால் உலகம் காதற் கொள்ளையிலே சாமோ?"- என்ற பாட்டை முணு முணுத்துக் கொண்டான்.
பூஞ்சோலை பேச்சை நிறுத்தவில்லை. "தங்கமானபிள்ளையா தெரியிறீங்களே - நீங்க யாரு தம்பீ ? எந்த ஊரு ?" என வினவினாள்.
"நான் ஒரு ஆரம்ப ஆசிரியன் - என் பெயர் அறவாழி! எனக்கு இந்த ஊர் பள்ளிக்கூடத்துக்கு மாற்றலாகியிருக்கு — இதுவரையிலே சேலம் ஜில்லாவிலே ஒரு கிராமத்திலே இருந்தேன்!" என்றான் வாலிபன்.
"உங்களை ஏன் இங்க மாற்றிட்டாங்க?" என்று கேட்டாள் பூஞ்சோலை.
"எனக்காகத்தான் மாற்றியிருப்பார்கள் !" என்று தனக்குள்ளே பதில் சொல்லிக்கொண்டாள் பொன்மணி.
கலைஞர் மு. கருணாநிதி · சுருளிமலை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்