அத்தியாயம் 11 · 11 / 26
அத்தியாயம் 11
Chapter 11
மூல ஸ்கேன் 85–91
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
11
வழக்கமாக வரும் ஆவேசம் வந்து விடவே கற்பூரம் என்றைக்குமில்லாத படபடப்போடு சாமியாடத் தொடங்கினாள். “அடே பாவி! பழிகாரா! உன்னை என்ன பாடு படுத்துகிறேன் பார்! நம்பியவளுக்கு துரோகம் செய்த உன்னை சபிக்கிறேன். நீ நாசமாய் போக! அடேய்! இந்த ஜீவனோட மனசை அறியாமல் பாப வார்த்தை பேசிவிட்டாய்! ஆய்! ஊய்!” என்று அவள் கத்திக்கொண்டே தலைவிரி கோலமாய்த் தாண்டவமாடுவதைக் கண்டு கண்ணன் சற்று மிரண்டுவிட்டான்.
உடனே அவன் சமாளித்துக் கொண்டு, “தாயே! மன்னித்து விடு... தேவி! மன்னித்து விடு! அபச்சாரம்......... அபச்சாரம்” என்று கன்னத்தில் போட்டுக்கொண்டான்.
ஒருவழியாக கற்பூரத்தின் மீது வந்த சாமி, மலையேறியது. கண்ணன் அவளை ஆசுவாசப்படுத்தி “பெரிய பைத்தியமாயிருக்கியே—சும்மா உன்னை வேடிக்கை பாக்கிறதுக்காக விளையாட்டு காட்டினா—நீ ஒரே அடியா உண்மைன்னு நம்பிக்கிட்டு குதிக்கிறியே! எந்தக் காதலனாவது தன் காதலிக்கிட்ட வந்து இன்னொரு பெண்ணுக்கு தூதுபோகச் சொல்லுவானா? உன் மனசை அறியிறத்துக்காக ஒரு போடு போட்டேன். அதுக்குள்ள அந்த அவசரகார சாமி ஓடியாந்துட்டுதே!” என்று கேலி செய்தான்.
கற்பூரத்திற்கு சந்தேகம் தீரவில்லை. விழிகளை வினாக்குறிகளாக்கி அவன் மீது வீசியெறிந்தாள். “கண்ணே! கோபிக்காதே கற்பூரம்! என்னை சத்தியமாக நம்பு! வேண்டுமென்றே தான் விளையாடினேன். நீ பயந்துட்டே! பயப்படாதே தங்கம்!”—கண்ணன் சமாதான வார்த்தைகளைக் குவித்துக் கற்பூரத்தை மறுபடியும் தன் தோள்மீது சாய்த்துக் கொண்டான். அவளும் அவனை நம்பிவிட்டாள்.
“நமது தொடர்பை உங்க அண்ணன் சிங்காரம் ஏற்றுக் கொள்வானா? ஊஹூம்; ஏற்றுக் கொள்ளவே மாட்டான். அவன் மகா முரட்டு மனுசன். அவனை மீறி நாம் எப்படித்தான் ஒண்ணாகப் போகிறமோ; தெரியவில்லை!” யென்று கண்ணன் அங்கலாய்த்துக் கொண்டதைப் பார்த்து கற்பூரம், “கவலைப்படாதீங்க—எங்க அண்ணன் மனசைத் திருப்புறது என் வேலை” என்று உறுதிக்கொடுத்தாள்.
மனக்கதவை விரியத் திறந்து வைத்துக்கொண்டு பொன்மணியின் பிரவேசத்திற்காகக் காத்திருக்கும் கண்ணனுக்கு கற்பூரத்தின் உள்ளத்திலிருந்து வெளிப்படும் ஆசை நிறைந்த வார்த்தைகள் எதுவும் சுவைக்கவில்லை.
கிட்டாத ஒன்றிற்காக எட்டி எட்டிப் பார்ப்பதும், கடினமின்றிக் கிடைத்ததை அலட்சியமாகக் கருதுவதும் சிலரது பண்பல்லவா? கிட்டாத பழத்தைப் புளிக்கும் என்று சொல்லுகிற தந்திரம் கூட கடைசி முயற்சியின் தோல்விக்குப் பிறகுதானே தோன்றுகிறது! அதனால் கண்ணன் இன்னும் தான் களைத்து விடவில்லையென்று உறுதி பூண்டிருந்தான். எப்படியும் பொன்மணியைத் தன் ஆசைக்குப் பணிய வைத்து, அவள் கழுத்தில் ஒரு கயிற்றையும் கட்டிவிட வேண்டுமென்று அவன் கட்டிய கோட்டை நிச்சயம் இடிந்து விழாது எனும் தைரியம் கொண்டிருந்தான்.
கற்பூரம் அவனது இலட்சிய முகடு அல்ல! பாலைவனத்துப் பயணத்தில் கிடைத்த பேரீச்சை மர நிழல்! அவ்வளவுதான்! அந்த அளவே அவன் அவளிடம் ஆசை காட்டினான்.
சிங்காரத்தையும் கண்ணனையும் அருகருகே நிற்க வைத்துப் பார்க்கிறவர்கள், சிங்காரத்தை மிகக் கொடியவனாகவும், கண்ணனை உத்தமனாகவும் வர்ணிப்பர். சிங்காரத்தின் தோற்றமும், பயங்கரக் குமிழ் விழிகளும் அவனை ஒரு முரடனாகவே சித்தரித்துக் காட்டும். அழகில் ஆபத்து ஒளிந்திருக்கும் என்பதற்குக் கரகமாடி கண்ணன் எடுத்துக்காட்டு! அதைத்தான் கற்பூரத்திடம் அவன் காட்டிய களங்கம் மண்டிய அன்பு எதிரொலித்துக் கொண்டிருந்தது. மனித சமுதாயத்தில் சர்வ சாதாரணமாகக் காணப்படுகிற இரு குணச் சித்திரங்கள்தான் சிங்காரமும் கண்ணனும்!
நாடகங்களில், கதைகளில், படக் காட்சிகளில் வருகின்ற வில்லன்கள் பார்ப்பதற்கே நடுக்கம் தரும் விதத்தில் இருப்பார்கள். கதாநாயகர்களான நல்ல பாத்திரங்களோ அழகானவர்களாகக் காட்சி தருவார்கள். ஆனால் சிற்றூரில் சிங்காரமும் கண்ணனும் அந்தக் கற்பனையாளர்களுக்கு நேர்மாறான வகையில் உலாவிக்கொண்டிருந்தார்கள்.
அந்த இரு குணமுடையோருக்கும் இடையில் தனிக்குணம் கொண்டவளாய் கற்பூரம் திகழ்ந்தாள். அவனிடத்தில் அன்பு கொழிக்கும் நெஞ்சமும் இருந்தது. அதே சமயம் அந்த நெஞ்சு நஞ்சு கொட்டுவதாகவும் மாறிக்கொண்டது. காதலுக்காகத் தவறு செய்வதை அவள் குற்றமாகக் கருதவில்லை. அத்தவறின் விளைவாகத்தான் தனக்குக் கண்ணன் கிடைத்தான் என்று பூரித்துப் போயிருப்பவளுக்கு அவனது மனதில் சுற்றிக்கொண்டிருக்கும் மலைப்பாம்பின் வடிவம் எப்படித் தெரிய முடியும்!
மறுபடியும் சந்திப்பதாக வாக்களித்துக் கண்ணன் கற்பூரத்தை விட்டுப் பிரிந்து போனான். அவளுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. தான் கண்டதும் அனுபவித்ததும் கனவா—என்ற ஐயம் எழுகிற அளவுக்குக் கற்பூரம் மெய்மறந்து நின்றாள்.
மஞ்சள் பத்தையும் மீறிக்கொண்டு கிளம்பிய வலியைப் பொறுக்கமாட்டாமல் படுக்கையில் முனகியவாறு மெதுவாகப் புரண்டு கொண்டிருந்தான் சிங்காரம். எங்கேயோ போன பிள்ளை இன்னும் வீட்டுக்கு வரக்காணோம் என்று வாய்க்குள்ளேயே கூறிக்கொண்டு பூஞ்சோலையம்மாள் படுத்தவள்தான், நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிவிட்டாள். பொன்னையாவையும் இருமல் தொந்தரவு படுத்தாததால் அவரும் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தார்.
பொன்மணி, கூடத்தையொட்டியே அறைக்குள்ளே படுத்து ஏதோ குரு குருவென்று யோசனை செய்து கொண்டிருந்தாள். எவ்வளவோ முயன்றும் அவளுக்குத் தூக்கம் வரவில்லை. முனகிக்கொண்டிருந்த சிங்காரத்தின் நிலைமை அவளுக்குப் பெருங் குழப்பத்தை உண்டுபண்ணியது. கற்பூரத்தின் சூசக<!-- verified source join: scan 87→88 --> மான பேச்சுகளைத் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்துப் பெருமூச்சு விட்டாள். சிங்காரம் தன் வீட்டில் வைக்கப்பட்டிருப்பதே கற்பூரத்தின் ஏற்பாடுதானோ என்ற சந்தேகம் எழும். உடனே மூட நம்பிக்கை குறுக்கிடும். பேய் பூதத்தை நம்பி கற்பூரத்தின்மீது நினைத்த குற்றச்சாட்டைத் திரும்பப் பெற்றுக் கொள்வாள். ஆனாலும் கடைசிவரையில் மூட நம்பிக்கை வென்றிடவில்லை. பேய் பிடித்திருக்கலாம்; நியாயம்—அதற்காக சிங்காரம் தன் வீட்டில் ஏன் இருக்க வேண்டும்? இருந்து விட்டுப் போகட்டும்; ஒருவருக்கு உதவி செய்வதால் பாபம் வந்து விடாது! ஆனால் இரண்டு வித ஆபத்துக்கள் அல்லவா படையெடுத்து முற்றுகையிட்டிருக்கின்றன!
கற்பூரம், இந்த சாக்கில் தன் அண்ணனுக்குப் பெண் பார்க்கிறாள். அவள் போகும் போக்கைப் பார்த்தால் ஊரிலே கதை கட்டி விட்டாலும் விட்டு விடுவாள். சிங்காரம்—பொன்மணி சங்கதி தெரியுமா என்று ஊரார் பேச ஆரம்பித்து விடுவார்கள். அதை வைத்துக் கொண்டு கற்பூரம், தன் அண்ணன் திருமணத்தைத் தன் இஷ்டப்படி முடித்துக்கொள்வாள். இதோடு போகிறதா—அந்தக் கரகமாடி கண்ணன் வேறு இந்தச் சாக்கில் பேய் ஓட்டுபவனைப்போல வந்து வீடெங்கும் விழியோட்டுகிறான். அவன் அடிக்கடி வீட்டுக்கு வருவது பெரிய ஆபத்து—எந்த சமயத்தில் எப்படி நடந்து கொள்வானோ தெரியாது—இது போன்ற குழப்பமான எண்ணங்கள் பொன்மணியின் இதயத்தைக் கனமாக்கின. எல்லாவற்றுக்கும் பரிகாரம், எப்படியாவது சிங்காரம் வீட்டை விட்டுப் போய் விடுவதுதான்! தெய்வத்தின் கட்டளை—தேவதை ஆவேசம் வந்து கூறியதே என்ற பயம் சிறிது நேரம் தலைக்காட்டியது. கற்பூரத்தின் மீது இருந்த கோபத்தில் அந்தப் பயமெல்லாம் நீடித்து நிற்கவில்லை.
அவள் சிந்தனையைக் கலைக்கும் வகையில் சிங்காரம் “தண்ணீ! தண்ணீ!” என்று சப்தம் போட்டான்.
பொன்மணிக்கு என்னசெய்வதென்று புரியவில்லை. “அம்மா! அம்மா!”—கூப்பிட்டுப் பார்த்தாள். குறட்டை ஒலி கொஞ்சம்
நின்று மீண்டும் துவங்கியது. முன்னைவிட பலமாக! எழுந்து அம்மாவிடம் சென்றாள். அதிக சப்தம் போட்டு எழுப்பினால், நோயாளியான அப்பா விழித்துக்கொண்டு விடியமட்டும் தொந்திரவு பொறுக்காமல் கஷ்டப்படுவாரே என்று சங்கடப்பட்டாள். ஈன சுரத்தில் “அம்மா!” என்றாள்.
அதற்குள் “பொன்மணி!” என்று சிங்காரம் மெல்ல அழைத்தான். அவளுக்குத் தூக்கி வாரிப்போட்டது. தண்ணீர் கேட்கத்தான் அவன் அழைக்கிறானா—அல்லது தவறான எண்ணத்தோடு அழைக்கிறானா? அவளுக்கு நெஞ்சு படபடத்தது. மௌனமாகவே இருந்தாள்.
மறுபடியும் “பொன்மணீ!” என அழைத்தான். அவள் பேசவில்லை.
“தயவு செய்து கிட்டவா தங்கச்சீ!” என்றான். அந்த அழைப்பில் அன்பு இழைந்தது. பரிதாபம் தலை காட்டியது. கெஞ்சுதல் மிஞ்சியிருந்தது. பொன்மணிக்கு அவளையறியாமல் ஒரு மன எழுச்சி! “தங்கச்சீ!” என்ற சொல்லில் பொதிந்திருக்கும் உறவையும் உண்மை அன்பையும் அவள் மதிக்கத் தவறவில்லை.
“என்னாண்ணே வேண்டும்?” எனக் கேட்டபடி அருகே சென்றாள்.
“தங்கச்சீ! என் நிலைமையை நீயாவது யோசித்துப் பாரும்மா! எனக்குப் பேயும் பிடிக்கலே; மண்ணும் பிடிக்கலே! எல்லாம் அக்கப்போர். என் தங்கை கற்பூரத்திற்கு வர்ர ஆவேசத்தினால் வந்த வினை இதெல்லாம். என்னைத் தப்பா நினைக்காதே—இதுதான் சமயம்—கட்டுகளையெல்லாம் அவிழ்த்து விட்டுட்டு கதவையும் திறந்து விடு. நான் ஓடிப்போறேன். முதல்ல கொஞ்சம் தண்ணி கொடு!”
சிங்காரத்தின் வேண்டுகோளில் இருந்த பரிவைக் கண்டு மனமுருகினாள் அவள். தண்ணீர் கொண்டுவந்து தந்தாள். அதைக் குடித்த சிங்காரம் “ஒரு டிராம் சாராயம் அகப்பட்<!-- verified source join: scan 89→90 --> டதுன்னா இந்த உடம்பு வலி தீரும்” என்று தனக்குத்தானே கூறிக்கொண்டான்.
பொன்மணி எதுவும் பேசவில்லை. பிறகு அவளைப் பார்த்து சிங்காரம், “தயவு செய்து என்னை விட்டு விடு தங்கச்சீ—எனக்கு பேயுமில்லை; ஒண்ணுமில்லை!” என்று மறுபடியும் மறுபடியும் கெஞ்சினான் சிங்காரம்.
“நீங்க உள்ளபடியே என்னைத் தங்கச்சியாகத்தானே நினைக்கிறீங்க?”—பொன்மணி நடுங்கிக்கொண்டே கேட்டாள்.
“ஆமாம்—அதிலே ஏன் உனக்கு சந்தேகம்?” என்றான் அவன்.
“இல்லே...... உங்க தங்கச்சி கற்பூரம் இருக்காளே; அவள் உங்களைப்பத்தி எங்கிட்டே சொன்னது வேற விதம்!”
“என்னா விதம்? சொல்லும்மா; சொல்லு!”
“நீங்கள் கல்யாணம் செய்து கொள்ள.....”
“ஓகோ......... உன்னைக் கல்யாணம் செய்துக்க விரும்புறேன்னு சொன்னதா என் தங்கச்சி?... பொன்மணீ! அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. நான் உன்னை எப்போதும் என் தங்கச்சியாகத்தான் நினைக்கிறேன்!”
“அப்பாடா! என் மனசு நிம்மதியாச்சு...!” என்றவாறு அவனது கட்டுக்களை அவிழ்த்து விட்டாள் பொன்மணி.
அவனும் சிரமத்தோடு எழுந்து உட்கார்ந்து, “உனக்கு ரொம்ப நன்றி தங்கச்சீ! தெருக்கதவையும் அப்படியே திறந்து விடு!” என்று கேட்டுக்கொண்டான்.
அவள், அவனை மெதுவாகக் கைபிடித்து அழைத்துக் கொண்டே “அண்ணா! நான் தான் உங்களை வெளியே அனுப்பினேன்னு யாருகிட்டயும் சொல்லிவிடக் கூடாது!” என்று கேட்டுக்கொண்டாள். அவனும் அதற்கு தலையசைத்துச் சம்மதம் தந்தான்.<!-- verified source join: scan 90→91 --> தெருக்கதவு திறக்கப்பட்டது. சிங்காரம் நன்றியோடு பொன்மணியைப் பார்த்து விட்டு வீட்டை விட்டு வெளியேறினான். பொன்மணி, கதவைத் தாளிட்டுவிட்டு தன் இடத்திற்கு வந்து படுத்தாள்.
அவள் படுப்பதற்குள் தெருப்பக்கத்தில் பயங்கரமான சப்தம்!
“அய்யோ!” என்ற பெருங்கூச்சல்!
பொன்மணி திடுக்கிட்டெழுந்தாள்; “அம்மா! அப்பா!” என்று அவளையுமறியாமல் அலறியபடி!
பூஞ்சோலை, பொன்னையா—இருவரும் விழித்துக்கொண்டார்கள்.
பொன்மணி, ஓடிபோய்த் தெருக் கதவைத் திறந்தாள்!
அவள் வீட்டுக்கு எதிரே ஒரு முரட்டுக் காளை—அதன் கொம்புகளுக்கு நேரே ஒரு ஆள்! அந்த ஆள் தெருவிலே கிடந்தான்! அவனை சரியாக அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை! பந்துபோல் உருண்டு கிடந்த அவனிடமிருந்து இப்போது ஒலியில்லை! காளை மட்டும் மூர்க்கமாக அவனை முட்டித்தள்ளி தெருவில் உருட்டிக்கொண்டே யிருந்தது!
கலைஞர் மு. கருணாநிதி · சுருளிமலை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்