பொருளடக்கம்

சுருளிமலை

அத்தியாயம் 10 · 10 / 26

அத்தியாயம் 10

Chapter 10

மூல ஸ்கேன் 78–85

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

10

எவ்வளவோ காலமாக ஒருவர் முகத்தில் ஒருவர் விழிப்பது கூட பாவம் என்று கூறி, பகையை வளர்த்து வந்த இரண்டு குடும்பங்களும் இந்தச் சம்பவத்தின் மூலமாகவாவது உறவு கொண்டாடிவிட்டது என்று மகிழ்ச்சியடைந்தாள் பூஞ்சோலையம்மாள். ஆனால், அவளுக்கு சிங்காரம் படுகின்ற வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளையறியாமல் கண்கள் கலங்கிவிட்டன. கணவன் பொன்னையா வேறு இதையெல்லாம் விலைக்கு வாங்கப்பட்ட வம்பாகக் கருதி முகத்தை சிடுசிடு என்று வைத்துக் கொண்டிருப்பது அவளுக்குப் பெரிய சங்கடமாகி விட்டது.

கற்பூரம், கன்னத்தில் கைவைத்தவாறு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிவிட்டாள். தானே உண்டாக்கிக் கொண்ட சிக்கலான பிரச்னையிலிருந்து தன்னை எப்படி விடுவித்துக் கொள்வது என்பதே அவளது தீராத கவலையாகிவிட்டது.

பொன்னையா, “லொக், லொக்” என இருமிக்கொண்டே சங்கடத்தையும் மன எரிச்சலையும் எதிரொலிக்கும் பெருமூச்சுக்களை இடையே விட்டுக்கொண்டிருந்தார்.

சிங்காரமோ, ஆத்திரமும் உடல்வலியும் பொறுக்கமாட்டாமல் உறுமியவாறு படுத்திருந்தான்.

கண்ணனின் பேயோட்டும் பூஜை நடைபெறும் வரையில் அடுக்களைப் பக்கம் ஒளிந்திருந்த பொன்மணி, பிறகு மெதுவாக வெளியே தலை நீட்டினாள். கற்பூரம் அவளையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

பூஞ்சோலை, கற்பூரத்தைப் பார்த்து “ஏண்டியம்மா கவலை புடிச்சிப் போயி உட்கார்ந்திருக்கே! அந்தப் புள்ளையாண்டான் உடம்பெல்லாம் புளியம்பழம் மாதிரி தடிச்சுக் கிடக்கு... கொஞ்சம் உள்ளே போயி மஞ்சப்பத்து அறைச்சுகிட்டு வாயேன். வீக்கத்திலே போடலாம்!” என்று கூறவும் கற்பூரம் எழுந்து எதிரே வந்த பொன்மணியையும் துணைக்கு அழைத்துக் கொண்டு அடுக்களைக்குள் பிரவேசித்தாள்.

பொன்மணியே மஞ்சளைப் பொறுக்கி எடுத்து அறைக்க ஆரம்பித்தாள். அவளருகே கற்பூரம் உட்கார்ந்து கொண்டு பேச்சுக்கொடுக்க நேரத்தை எதிர்பார்த்திருந்தாள். பொன்மணி மஞ்சளை அறைத்து முடித்துவிட்டு அதை அம்மியிலிருந்து வழிப்பதற்காகக் குழவிக்கல்லைத் தூக்கும்போது அது அவள் கையிலே விழுந்து சிறு காயத்தை உண்டாக்கி விட்டது. அவசர அவசரமாக அவள் கையைப் பிடித்துவிட்டு தண்ணீர் கொட்டி சிகிச்சை செய்து, “அய்யோ பாவம் எங்களாலே உனக்கெல்லாம் எவ்வளவு கஷ்டம்!” என்று நொந்து கொண்டாள் கற்பூரம்.

“இதிலென்னா பெரிய கஷ்டம்! ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்றது உலக சகஜந்தானே!” என்று புன்னகை புரிந்தாள் பொன்மணி.

“அதிருக்கட்டும்—அந்தக் கண்ணன் உள்ளே வந்ததும் நீ எங்கேயோ பதுங்கிக்கிட்டியே; ஏன் பொன்மணி?” என்று ஆவலோடு ஒரு கேள்வியைப் போட்டாள் கற்பூரம். அதற்குப் பொன்மணி பதில் கூறவில்லை.

பதிலை வரவழைப்பதற்குக் கற்பூரமே முயன்றாள். “வெட்கமா?” எனக் கேட்டாள். பதில் இல்லை.

“ஏதாவது கோபமா?” என்று வினாவினாள். பதில் இல்லை.

“ஓகோ, ஒரு சமயம் கல்யாணப் பேச்சு கீச்சு அடிபடுகிறதோ?” என்று கேட்டதும், “இந்தா! அதெல்லாம் பேசாதே! வேற ஏதாவது பேசு!” என்று வெடுக்கென்று பதிலுரைத்து, மஞ்சளை அடுப்பில் சூடு காட்டக் கிளம்பினாள் பொன்மணி.

“அடாடாடா! எங்க அண்ணனுக்கு வேலை செய்றதிலே எனக்குக்கூட இவ்வளவு பதட்டமில்லை! உனக்கில்லே ஒரே துடிப்பா இருக்குது!” எனக் கிண்டலாகக் கற்பூரம் கூறி, பொன்மணியின் முகக் குறிப்பை அவசர அவசரமாகக் கவனித்தாள்.

“என்னா இது; இப்படியெல்லாம் பேசுறே—நம்ப விஷயத்துக்கு ஆம்பளைங்க பேரையெல்லாம் இழுக்கிறியே; ஏன்?” என்று கடிந்து கொண்டாள் பொன்மணி.<!-- verified source join: scan 79→80 --> “நல்லா இருக்கு போ! ஆம்பளையில்லாம பொம்பளை வாழ்ந்துட முடியுமா? ஏதோ நல்லதோ கெட்டதோ; ஆம்பளைக்கு ஒரு பொம்பளை; பொம்பளைக்கு ஒரு ஆம்பளைன்னு அன்னைக்கே ஆண்டவன் தலையிலே எழுதித்தானே அனுப்புறான்!”—இப்படி வேதாந்த விசாரணையில் இறங்கினாள் கற்பூரம்.

பொன்மணி, அதற்குப் பதில் கூறாமல், மஞ்சள் சூடாகிறதா என்பதை கவனித்துக் கொண்டிருந்தாள்.

“என்ன பொன்மணி; நான் பேசுறது உனக்குப் பிடிக்கலியா? ஒரேயடியா மௌனம் சாதிக்கிறியே! கல்யாண விஷயம், ஒரு பாட்டியும் ஒரு வயசுப்பெண்ணும் பேசும்போதுதான் வயசுப் பெண்ணுக்குப் பிடிக்காதது மாதிரி பேச்சு அமையும். நம்ப ரெண்டு பேருமே வயசுப்பெண்கள்; மனம் விட்டுப் பேசலாமே...” என்றாள் கற்பூரம்.

“மனம் விட்டுப் பேசறது அப்பறம் இருக்கட்டும்; முதல்ல மஞ்சப்பத்தைத் தயார் பண்ணலாம்!”—பொன்மணி அலட்சியமாக விடையளித்துக் காரியத்தை கவனித்தாள்.

“ம்... புரியுது; புரியுது! புரியுதும்மா புரியுது! கண்ணாலயும் வாயாலயும் பதில் சொல்லமாட்டேன்; காரியத்திலே காட்டுறேன் பார்; என் மனசை! அப்படிங்கிறாப்லே இருக்கு உன் செய்கை!” என்று கூறி கேலியாகச் சிரித்த கற்பூரத்தின் உள்ளத்தை சரிவரப் புரிந்துகொள்ள முடியாமல், “இப்ப என்ன சொல்றே? கொஞ்சம் புரியும்படியா சொல்லு!” என்று முகத்தைக் கோணிக் கொண்டாள் பொன்மணி.

“சொல்லுவானேன்? போகப் போகத் தெரியுது” என்றாள் கற்பூரம்.

“கிடக்கட்டும்! யார் அவள் தூக்கு மாட்டிக்கொண்டவள்? அவள் என்னமோ உங்க அண்ணன் மேலே பழியைப் போட்டிருக்காளே; என்ன சமாச்சாரம்? விபரமாச் சொல்லேன்!” என்று பொன்மணி கேட்டதும், கற்பூரம், “உம்...! அப்படிக் கேளு! என் ராஜாத்தி; அப்படிக்கேளு! நீ கேட்பாய்ன்னு எனக்கு முன்னமே தெரியும். எப்படிடா கேக்கிறதுன்னு<!-- verified source join: scan 80→81 --> இத்தனை நாழி வெட்கப்பட்டுக்கிட்டு இருந்தே; இப்ப கேட்டு விட்டே! பரவாயில்லை! அதைப்பத்திக் கவலைப்படாதே! எப்படியோ சனியன் ஒழிஞ்சுது!” என்று சற்று நடுக்கத்தோடு கூறினாள். பொன்மணியிடமிருந்து எதிர்பார்ப்பதற்கு மாறாக ஏதாவது பதில் சூடாக வந்து விடுமோ என்ற அச்சம் வேறு அவளுக்கு.

“நான் கேக்கிற கேள்விக்கும் நீ சொல்ற பதிலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?” என்று பொன்மணி எழுந்தாள்.

“இரு இரு” என அவள் கையைப் பிடித்து உட்கார வைத்து, கற்பூரம், “சம்பந்தம் நிறைய இருக்கு! அதாவது உனக்கு ஏற்பட இருந்த போட்டி ஒழிந்து விட்டது!” என்றாள்.

“போட்டியா? எனக்கா?”—பொன்மணி ஆச்சரியப்பட்டாள்.

“ஆமாம்; தூக்கு மாட்டிக் கொண்டவள், என் அண்ணனைக் கல்யாணம் செய்துகொள்ளத் துடியாய்த் துடித்தாளாம்! அண்ணன் அவளைப் பார்த்து ‘என்னை மறந்துடு! எனக்காக வேறோரு இடத்திலே பெண் பிறந்திருக்குது’ என்றாராம்!”

“என்னாது? இப்பதான் பெண் பிறந்திருக்குதா? அப்ப உங்க அண்ணனுக்கு எத்தனை வயசிலே கல்யாணம்?”

“ஓகோ... குறும்பு வேறயா உனக்கு? பெண் பிறந்து ரொம்ப நாள் ஆகுது? மூக்கும் முழியும் கடைஞ்சு வச்ச சிலை மாதிரி! எங்க அண்ணனுக்கு ஏத்த அழகு—குணம் குடும்பம் எல்லாமே ஏகப் பொருத்தமா அமைஞ்சிருக்கு!”

“அப்படியா? அப்பேற்பட்ட இடம் எது?”

“பயப்படாதே! உனக்குப் போட்டியா ஒருத்தியும் வரமாட்டாள். சாட்சாத் நீயேதான்!”

இந்த வார்த்தைகள் காதில் விழுந்ததும், பொன்மணி சடக்கென்று அதை விட்டு எழுந்தாள். கையிலிருந்த மஞ்சளைக் கொண்டுபோய் தாயாரிடம் கொடுத்து, “இந்தாம்மா! இதைப் போடு!” என்று கூறிவிட்டு வேறு பக்கம் போய்விட்டாள்.

அடுக்களையிலிருந்து வந்த கற்பூரம், கூடத்தில் பொன்மணியைக் காணாமல் சிறிது கலவரமடைந்து அண்ணனிடம் வந்து சேர்ந்தாள். அவனுடைய வீக்கங்களுக்கு அவளும் பூஞ்சோலையுமாகச் சேர்ந்து மஞ்சள் பத்து போடத் தொடங்கினார்கள். உடலில் கை படுவதையும் சிங்காரத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒருவாறு பத்து போட்டு முடித்துவிட்டு பூஞ்சோலையம்மாள் பெருமூச்சு விட்டாள். கற்பூரம் தன் கைகளை நன்றாகக் கழுவிக்கொண்டு, சுற்று முற்றும் விழியோட்டி, பொன்மணியைத் தேடிப் பார்த்தாள். அவள் கிடைக்கவில்லை.

பிறகு அவள் பூஞ்சோலையிடம் விடை பெற்றுக் கொண்டு வீட்டுக்குப் போய் ஆடுமாடுகளுக்குத் தீனியைக் கவனித்துவிட்டு வருவதாகப் புறப்பட்டாள். அவள் உள்ளத்திலே பெருங் குழப்பம்! தான் எண்ணியபடி ஏதாவது நடக்குமா? அல்லது எல்லாம் தலைகீழாக மாறிவிடுமா? இப்படி மனப் போராட்டம்! எவ்வளவு பெரிய சுமையை அவளாகத் தூக்கித் தலையிலே வைத்துக் கொண்டாள்; பாபம்!

கண்ணன், பொன்மணியை மறக்கவேண்டும்; பொன்மணி தன் அண்ணனை மணக்கவேண்டும்; இந்த விளைவால் தனக்குக் கண்ணன் கிடைக்க வேண்டும்—இப்படிச் சிக்கலான ஏற்பாடு ஒன்றிற்காக அவள் தன் தலையை உடைத்துக்கொண்டாள். அவளையறியாமல் அவளுக்கு ஒரு நம்பிக்கை மட்டும் உதித்தது. அந்த நம்பிக்கை ஏற்பட்ட அற்பத் துணிவோடு அவள் வீடு நோக்கி நடை போட்டாள். எதிர்காலக் கனவுகளில் ஆழ்ந்திருந்த அவள், தன்னை கண்ணன் கவனித்துக்கொண்டு பூவரசு மரத்தடியில் நிற்பதைப் பார்க்கவில்லை.

அவள் பார்க்காதவரைக்கும் நல்லது என எண்ணி, அவளைப் பின் தொடர்ந்து நடந்தான் அவன். கற்பூரம் வீட்டுக்குள் நுழையும்போது தற்செயலாகத் தெருப் பக்கம் திரும்ப, கண்ணன் நிற்பதைப் பார்த்துவிட்டு ஆச்சரியத்தால் மெய் மறந்தாள். தேடியலைந்த செல்வம், வாசல் தேடி வந்து விட்டதாகத் தீர்மானித்துப் பூரிப்பு கொண்டாள். அவளால் பேச முடியவில்லை.

கன்னம் சிவந்துவிட்டது, தலை தானே கீழே குனிந்துகொண்டது. தட்டுத் தடுமாறி “வாருங்கள்!” என அழைத்து உள்ளே சென்றாள்.

அவனும் வீட்டுக்குள் சென்றான். பரபரப்போடு பட்டுப் பாயை எடுத்துக் கூடத்தில் விரித்தாள். கையும் ஓடாமல் காலும் ஓடாமல் அங்குமிங்கும் தேடி வெற்றிலைத் தட்டை எடுத்து எதிரே வைத்தாள்.

“என்ன கற்பூரம், இப்ப எப்படியிருக்கிறது, சிங்காரத்துக்கு?” என்று பேச்சைத் தொடங்கினான் கண்ணன்.

“நீங்க பார்த்த பிறகு சௌகரியம் ஆகாம இருக்குமா?”—தழுதழுத்த குரலில் தந்தாள் அவள்.

“அது என்னா பேயி, அதிசயமான பேய்! எங்கேருந்து பிடிச்சுது அது... வேடிக்கையான பேய்!”

“உங்களுக்குத் தெரியாதா என்னா? எப்படியோ நீங்கதான் அண்ணனைப் பூரணமா குணப்படுத்தனும். நான் உங்களைத்தான் நம்பிக்கிட்டு இருக்கேன்!”

“அப்படியா? நானும்கூட உன்னைத்தான் நம்பிக்கிட்டு இருக்கேன் கற்பூரம்!”

“நம்பினவளை நீங்கள் நட்டாற்றில் விடாமல் இருந்தால் போதும்!”—இதைச் சொல்லும்போது கற்பூரத்தின் குரல் கம்மியது.

“நான் யாருக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்யமாட்டேன்!”

“நீங்கள் மகா உத்தம புருஷர்! இல்லாவிட்டால் அவ்வளவு பெரிய பகையை மறந்துவிட்டு நான் அழைத்தவுடன் ஓடி வருவீர்களா?”

“கற்பூரம்! நான் ஏன் ஓடி வந்தேன்? எதற்காகப் பகையை மறந்தேன்? அதை நீ புரிந்து கொண்டிருக்க முடியாது!”

“ஓரளவுக்குப் புரியாமல் இல்லை. உங்கள் மனசில் இப்படி ஒரு நினைப்பு இருப்பது எனக்கு இத்தனை நாளும் தெரியாமல் போச்சேயென்றுதான் கவலைப்படுகிறேன்!”

“கற்பூரம்!”

“நெருப்பில்லாமல் கற்பூரம் எரியுங்களா?...”

கற்பூரம் அதன் பிறகு பேசவில்லை. அசைவற்று இருந்தாள். அவளையே விழுங்கிவிடுவதுபோல் பார்த்தான் கண்ணன். பிறகு அவனே சென்று கதவைத் தாளிட்டான்.

கதவைத் தாளிட்டு அவன் திரும்பியதும் திடீரென்று அவன் காலடியில் விழுந்து, “என்னை மறந்துவிடாதீர்கள்! என் உயிர், உடமை எல்லாம் உங்களுக்கே அடைக்கலம்” என்று கெஞ்சியழுதாள் கற்பூரம். அவளைத் தூக்கித் தோள்மீது சாய்த்துக் கொண்டு ஆறுதல் கூறினான். அவளது அழகிய கன்னங்களில் உருண்டு வரும் கண்ணீர் முத்துக்களைத் தன் சூடான உதடுகளால் ஒத்தி எடுத்தான்.

கற்பூரம், தன்னை அவனிடம் ஒப்படைத்துவிட்டாள். அவள் உள்ளத்திலே பொங்கியெழுந்த இன்ப வெள்ளத்தை வர்ணிக்க இயலாது. “கனவு பலித்தது கடவுளே!” என்று கடவுளை வாழ்த்தினாள். சிரமத்திற்கிடையேதான் வகுத்த திட்டம் இவ்வளவு விரைவில்—இத்துணை வெற்றிகரமாக முடியுமென்று அவள் எதிர்பார்க்கவில்லைதான்.

நெடு நேரம் இன்ப வாரிதியில் திளைத்திருந்த அவர்கள் மௌனத்தில் தனி உற்சாகம் கண்டனர். நீண்ட பொழுதிற்குப் பின் உலகம் ஒன்றிருப்பதை உணர்ந்தனர். “என்னை மறக்கமாட்டீங்களே?” என்று இதழசைத்தாள் அவள்.

“நிச்சயமா மறக்க மாட்டேன். ஆனா ஒண்ணு! எனக்காக நீ ஒரு உதவி செய்யணும் கற்பூரம்!” என்றான் கண்ணன்.

“என்ன உதவி? சொல்லுங்க... என் உயிரையே உங்களுக்காகக் கொடுக்கிறேன்” என்றாள்.

“சாத்தியமா?” என்று கேட்டான், அவளைத் தழுவிக் கொண்டு.

“உங்கள் மேல் ஆணையாக!” என்றாள்.

“எப்படியாவது, அந்தப் பூஞ்சோலை மகள் பொன்மணியை எனக்கு சம்மதிக்க வைக்க வேண்டும்—அது உன்னால்தான் முடியும்!” என்று கண்ணன் அவள் கூந்தலைக் கோதிக் கொண்டே கூறினான்.

“ஷு!”

கற்பூரம் அலறினாள்! அவள் திடீரென உணர்ச்சி வசப்பட்டால் என்ன ஆகும்.

கலைஞர் மு. கருணாநிதி · சுருளிமலை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்