பொருளடக்கம்

சுருளிமலை

அத்தியாயம் 9 · 9 / 26

அத்தியாயம் 9

Chapter 9

மூல ஸ்கேன் 73–77

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

9

கண்ணனுக்குத் தன்மீது காதலும் மோகமும் கரை புரண்ட வெள்ளமெனத் தோன்றிட வேண்டுமானால் இடையே பொன்மணி தடையாக நிற்கக்கூடாது. அவளைப் பற்றிக் கண்ணன் நினைக்காத அளவுக்கு அவள் வேறொருவனுக்குச் சொந்தமாகி விடவேண்டும். அப்படிப்பட்ட கண்ணைக் கவரும் கட்டழகி, தன் சகோதரனுக்குத்தான் மனைவியாகி விடட்டுமேயென்று கற்பூரம் கொண்ட எண்ணத்திலும் தவறில்லை. கண்ணன்மீது அவள் வைத்திருக்கும் ஆசை அளவிலடங்காது. அவனது கம்பீரத் தோற்றத்திற்குத் தன்னையே காணிக்கையாக்கத் தவமிருந்த கற்பூரத்திற்கு ஒரு புதிய நம்பிக்கையும் உதயமாயிற்று.

அண்ணனுக்குப் பிடித்துள்ள பேயை விரட்ட ஊரார் சிலர் சொன்ன யோசனை, அவளது உள்ளத்தைக் குடையலாயிற்று. கரகமாடிக் கண்ணனை அழைத்துவந்து பேயோட்டினால் சிங்காரம் சுகம் பெறுவான் என்று எழுப்பப்பட்ட யோசனைதான் அது.

“கண்ணன் குடும்பத்திற்கும் தன் குடும்பத்திற்கும் எவ்வளவு காலமாகப் பகை—போய் அழைத்தால் அவன் பேயோட்டுவதற்கு வருவானா?” என்ற கேள்விகளும் தொடர்ந்து கிளம்பின.

அவன் அப்படி வராமலிருக்க வேண்டுமென்பதையே அவள் விரும்பினாள். காரணம்; பொன்மணியும் அவனும் வீட்டிலேயே சந்தித்துவிடக் கூடாதே என்பதுதான்! ஆனால் அண்ணனுக்குப் பேய் பிடித்திருப்பதாகச் சொல்லப்படும் சாக்கில் கண்ணனை ஒரு முறை பார்த்துப் பேசுவதற்குத் தனக்கு சந்தர்ப்பம் ஏற்படுமேயென்று ஆழ்ந்து சிந்தித்து முடிவு கண்டாள். அவள் முடிவு சரியானது என்ற தெளிவும் திருப்தியும் பெற்றாள்.

அண்ணனுக்குப் பேயுமில்லை; மண்ணாங்கட்டியுமில்லை. பேயோட்ட அழைத்தாலும் கண்ணன் வரப்போவதில்லை. ஆகவே, தான் போய் கண்ணனைத் தாராளமாக அழைக்கலாம். அந்தப் பெயரில் அவனோடு பேசுவதற்கு இடம் ஏற்படும்.

கற்பூரத்தின் தீர்மானம் உடனடியாக அமுலாக்கவும் பட்டது. பூஞ்சோலை வீட்டிலிருந்து கிளம்பியவள், நேராக கண்ணன் வீடு நோக்கி நடந்தாள். தன் தந்தையர் காலத்திலேயே இரண்டு

வீடுகளுக்கும் பேச்சு வார்த்தை இல்லை. இப்போதோ அணை போடமுடியாத அன்பு வெள்ளம், பரம்பரைப் பகையை அறவே மறந்திடச் செய்தது.

வீட்டுத் திண்ணையிலே மாரியம்மன் தாலாட்டுப் படித்துக் கொண்டு உட்கார்ந்திருந்த கண்ணனுக்குக் கற்பூரம் தன் வீடு நோக்கி வருவது ஆச்சரியமாக இருந்தது. தன் வீட்டுக்கு வர மாட்டாள் என்ற தைரியமும் பிறந்தது. அவளை ஏன் கவனிப்பானேன் என்ற அலட்சியத்தோடு புத்தகத்தைப் பார்ப்பது போல பாசாங்கு செய்து ஓரக்கண்ணை தெருப்பக்கம் வீசினான். கற்பூரம், தங்கு தடையின்றி கண்ணன் வீட்டு வாயிற்படியை மிதித்து, திண்ணைப் பக்கம் வந்தாள். அதற்குமேல் கண்ணனால் சும்மாயிருக்க முடியவில்லை. அவளைப் பரபரப்புடன் வெறிக்கப் பார்த்தான். உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது அவனுக்கு. மீண்டும் தலையைத் திருப்பிக்கொண்டு புத்தகத்திற்குள் விழிகளை நுழைத்துக் கொள்ளப் பெருமுயற்சி செய்தான். ஆனால் முடியவில்லை. கற்பூரமே பேச ஆரம்பித்து விட்டாள்.

“வந்தவுங்களை வான்னு கூப்பிடக் கூடாதா? ஏன்னு கேட்கக்கூடாதா?”

கண்ணனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. கற்பூரமா அப்படிப் பேசுகிறாள்? நம்பமுடியவில்லை அவனால்; மௌனமாயிருந்தான்.

“பெரிய ஆபத்து! எங்க அண்ணனுக்குப் பேய்ச் சேட்டை ரொம்ப முத்திப் போயிட்டுது...”

“இது என்ன வம்பெழவு! யாருக்குப் பேய் பிடிச்சா எனக்கென்ன?”

“ஆயிரம் விரோதமிருந்தாலும் ஆபத்திலே உதவக் கூடாதா? ஆபத்துக்குப் பாவம் இல்லேன்னு சொல்வாங்களே!”

“நல்லாயிருக்கு நியாயம்—வெட்கம், மானம் இருக்கவேண்டாமா உங்களுக்கு? என்னைக் கூப்பிடுவதற்கு எந்த முகத்தோடு வந்தாய்?”

“இதோ, இந்த முகத்தோடுதான்! ஏன்; இந்த முகம் பிடிக்கலியா உங்களுக்கு?”

கற்பூரம், பேச்சின் போக்கை தனக்குச் சாதகமாக இழுத்துக் கொள்ள முயன்றாள். பேச்சின் உட்கருத்தைப் புரிந்துகொள்ள அக்கறை எடுத்துக் கொள்ளாமலே கண்ணன் விடையளித்தான்.

“யாரோ ஒரு அப்பாவிப் பெண்ணைக் கொன்னு தூக்கு மாட்டினான்; சண்டாளன் அதற்குப் பலனை அனுபவிக்கிறான். போலீஸ் ஸ்டேஷனில் கிடக்கிற பயலுக்கு பேயோட்டுறத்துக்கு நீ என்னைக் கூப்பிட வந்துட்டே—தூ! வெட்க...?”

“போலீஸ் ஸ்டேஷன்லியா?... இல்லை... இல்லை. அண்ணன் பூஞ்சோலையம்மா வீட்டிலேதான் இருக்கார். இதை யாருகிட்டயும் சொல்லிடாதிங்க! உங்களுகிட்ட மாத்திரம்தான் இந்த ரகசியத்தைச் சொல்லியிருக்கேன். ஏன்னா; உங்கமேல எனக்கு நிறைய நம்பிக்கை!”

சிங்காரம் பூஞ்சோலையம்மாள் வீட்டிலே இருக்கிறான் என்ற செய்தி காதில் விழுந்ததும் கண்ணனுக்குப் பொன்மணியின் நினைவுதான் பறந்து வந்தது. இப்போது அவனுக்கு சிங்காரத்திற்கு பேயோட்டுவதற்கு சம்மதம் தரலாம் என்ற எண்ணம் தோன்றி விட்டது. அப்போதுதானே அந்த வீட்டில் இருக்கும் பொன்மணியைக் கண் குளிரக் காணலாம்—முடிந்தால் பேசலாம்—நெருங்கலாம்—ஏன்; திருமணத்தையே முடித்தும் விடலாம்—மளமளவென்று மனமாளிகையைக் கட்டிவிட்டான்.

கற்பூரத்தைப் பார்த்து, “ம்! என்ன செய்வது? தீமை செஞ்சவுங்களுக்கும் நன்மையே செய்யின்னு பெரியவங்க சொல்வாங்க! சரி, சரி வந்து பேயோட்டுறேன்!” என்று கூறினான்.

கற்பூரத்திற்குப் பூரிப்பு ஏற்படவில்லை. ஆனாலும் சந்தோஷம் படுவதுபோல் காட்டிக் கொண்டாள். அவன் வரமாட்டான்—வராமலிருப்பதே நல்லது என நினைத்திருக்க அவளுக்கு கண்ணனின் தீர்மானம் கலக்கத்தை உண்டுபண்ணியது—என்<!-- verified source join: scan 75→76 --> செய்வது; இனிமேல் “வராதே!” என்று தடுக்க முடியுமா? சமாளித்துக் கொண்டாள் கற்பூரம். நன்றி தெரிவிக்குப் பாணியில் தன் இருதயத்தைத் திறந்து காட்டி நாணம் குழைத்து கண்ணனிடம் பேசினாள்.

“நான் நம்பவே இல்லை நீங்க சம்மதம் தருவீங்கண்ணு! ஆகா... ‘சம்மதம்’ என்ற ஒரு வார்த்தைக்காக நான் எவ்வளவு தவி தவித்தேன் தெரியுமா?”

அவளது வார்த்தைகளைக் காதில் வாங்க அவனுக்கு நிதானமில்லை. தன் விருப்பத்துக்குரியவளை வீட்டிலேயே சென்று பார்க்கக்கூடிய வாய்ப்பு வலுவிலே வந்திருக்கிறது. அதைத் தவறவிடாமல் உடனே செல்லவேண்டும் என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தான். வீட்டுக்குள்ளே ஓடி, உடை மாற்றிக் கொண்டான். உடுக்கு எடுத்துக் கொண்டான். பொன்மணியின் வீடு நோக்கிப் புறப்பட்டு விட்டான்.

கற்பூரத்தோடு வரும் கண்ணனை சுருளிமலை வரவேற்று உள்ளே அழைத்துக் கொண்டு சென்றான். கண்ணன் வீட்டுக்குள்ளே தன் விழிகளை அலையவிட்டு பொன்மணியைத் தேடினான். அவள் எங்கேயோ மறைந்து கொண்டாள். அதில் கற்பூரத்திற்கு ஒரு திருப்தி!

சிங்காரம் படுத்திருக்கும் இடத்திற்குக் கண்ணன் வந்ததுதான் தாமதம்; எங்கிருந்து அந்தப் புதிய பலம் பெற்றானோ தெரியவில்லை; சிங்காரம் தூள் தூளாகக் கைக் கட்டுகளை அறுத்தெறிந்துவிட்டு ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தான். ஆனால் கால்கட்டு அவனை மேலே விடவில்லை.

“அடே துரோகி! இங்கே எங்க வந்தே? பேய் ஓட்டுவதற்கா? எனக்குப் பிடிச்ச பேயை உன்னால் ஓட்ட முடியுமா? நீ என்ன பெரிய மந்திரவாதியா? மாயா ஜாலக்காரனா? மடையன் முட்டாள் நிற்காதே! ஓடிப்போ!!” என்று கத்த ஆரம்பித்தான் சிங்காரம்.

நிலையைத் தந்திரமாக தனக்குச் சாதகமாக்கிக்கொள்ளத் துணிந்த கண்ணன், “ஏ அப்பா! இது பெரிய பிசாசுதான்! எல்லோருமா சேர்ந்து முதல்ல இதைக் கட்டிப்போடுவோம்—பிறகு என்னுடைய வேலையை ஆரம்பிக்கிறேன்!” என்று கூறவே, சிங்காரம் பதைபதைப்போடு தன் காலிலுள்ள கட்டுகளை அவிழ்க்கத் தொடங்கினான்.

ஆனால் அதற்குள், கண்ணன் அவனைப்பிடித்துக் கட்டிலோடு சேர்த்து இறுக்கக் கட்டிவிட்டான். சிங்காரத்தின் மீதுள்ள ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள இதுதான் தருணமென்று பெரிய பிரம்பொன்றை கையிலே எடுத்து சிங்காரத்தின் உடல் முழுமையும் காயப்படுத்தினான். “வீர், விர்” என்று பிரம்பு அடிகளின் ஒலி முழங்கியது. சிங்காரம் துவண்டு போனான்.

கற்பூரத்தால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவள் கட்டிய கற்பனைக் கோட்டையால் தன் அண்ணன் படும் வேதனையை நினைத்துக் கண்ணீர் விட்டாள்.

“நிறுத்துங்க! அடிக்காதிங்க! அவர் இனிமேல் தாங்க மாட்டார்!” என்று கற்பூரம் ஓடிப்போய் கண்ணனின் கையைப் பிடித்துக்கொண்ட பிறகே பிரம்படிகள் நின்றன.

அதன் பிறகு, கண்ணன் பூஜையை ஆரம்பித்தான். பூஜை முடிவதற்குள் எப்படியாவது பொன்மணியைப் பார்த்துவிட வேண்டுமென்று துடித்தான்; முடியவில்லை. முடியாதது மட்டுமல்ல; அவனுக்கு சிங்காரத்தின்மீதும் சந்தேகம் முளைத்து விட்டது. சிங்காரம் அங்கேயே இருந்தால் ஒருவேளை பொன்மணியை அவன் மயக்கி விடுவானோ என்ற பயம் வேறு ஏற்பட்டது அவனுக்கு.

பூஜை முடிந்ததும் மறுநாள் வந்து பூஜை வைப்பதாகச் சொல்லி கண்ணன் விடை பெற்றுக்கொண்டான். ஆனால் அவன் நேராகச் சென்ற இடம் வீடல்ல; ‘அவுட் போஸ்ட்’ போலீஸ் ஸ்டேஷனுக்கு வேகமாகச் சென்றான். அங்குள்ள அதிகாரியிடம், சிங்காரம் பூஞ்சோலை வீட்டிலிருக்கிற தகவலைத் தந்த பிறகே அவனுக்குத் தூக்கம் வந்தது.

கலைஞர் மு. கருணாநிதி · சுருளிமலை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்