அத்தியாயம் 8 · 8 / 26
அத்தியாயம் 8
Chapter 8
மூல ஸ்கேன் 65–72
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
8
சுருளிமலை, வழக்கமான அலட்சியத்தோடு பதில் சொன்னான்; “ஆமாம்; செத்தவளோட வாய் பேசினாலும் பரவாயில்லியே; அவளுடைய முந்தாணியில்ல பேசுச்சாம்!”
பொன்மணி, இன்னும் வியப்போடு “என்னடா தம்பீ என்னென்னமோ சொல்றே—புரியும்படியா சொல்லு!” என்று ஆவலைக் கொட்டினாள்.
“செத்தவங்க, தான் செத்ததும் இல்லாம ஊர்ல இருக்கிறவங்களையும் ஆபத்திலே மாட்டி விட்டுப் போய்ட்டாங்களே!” என்று தனக்குத்தானே கூறிக் கொண்டான் சுருளிமலை.
“நீ விபரமாச் சொல்லப் போறியா இல்லியா?” என்று சற்று செல்லமாகக் கடிந்து கொண்டாள் சகோதரி.
“தூக்கு மாட்டிக்கிட்ட பிரேதத்தை பஞ்சாயத்தார் மூலமா போலீஸ்காரங்க வந்து எடுத்துக்கிட்டுப் போனாங்க! அங்க போயி பிரேதத்தை விசாரணை பண்ணினாங்களாம். அதுக்குப் பேரு பிரேத விசாரணையாம். தற்கொலைதான்னு முடிவு செஞ்சாங்களாம். அந்த சமயம், திடீர்னு பிரேதத்தோட முந்தானையிலே ஒரு முடிச்சு தெரிஞ்சுதாம். அதை அவிழ்த்துப் பார்த்தா அதிலே ஒரு கடிதம் இருந்துதாம். அதைப் படிச்சாங்களாம்.”
“அதிலே, ‘நான் தற்கொலை செய்துகொண்டதற்குக் காரணம்; அந்தப் பாவி தீச்சட்டி சிங்காரந்தான்’—அப்படின்னு எழுதியிருக்குதாம்.”
இதை அவன் சொல்லி முடிப்பதற்குள், பொன்மணிக்கு உடம்பெல்லாம் நடுக்கமெடுத்து நாக்குழறிவிட்டது.
“அய்யய்யோ! இது என்னடா புது வம்பு! தம்பீ, அவர் இங்க நம்பவீட்லதானே இருக்காரு...” என்று பீதியோடு கூறினாள். சுருளிமலை பரபரப்படையாமல் உள்ளே எழுந்து சென்றான்.
அவனைக் கண்டதும் சிங்காரம், “சுருளிமலை! மைனா எங்கே? என் மைனா எங்கே?” என்று கத்தினான்.
“மைனாவாவது—குருவியாவது!” சுருளிமலை முணுமுணுத்தான்.
“ஒண்ணும் சொல்லாதேடா கண்ணு! அண்ணனுக்கு பேய்ச் சேட்டை! தூக்கு மாட்டிக்கிட்டவள் பேயா மாறி அண்ணன் மேல தொத்திகிட்டாள்!” என்று சமாதானம் கூறினாள் கற்பூரம்.
“ஊம்! தொத்திக்கிட்டது மாத்திரமா—உங்க அண்ணனையும் கூடவே அழைச்சிகிட்டு போய்டுவா போலிருக்கு! இவரால்தான் தற்கொலை பண்ணிக்கிட்டேன்னு பழியை இவர்மேல் சுமத்தி கடிதாசு எழுதி வைத்திருக்கிறாளாக்கும்.”
சிங்காரம் திடுக்கிட்டான்.
“ஆ! என்மைனாவின் சாவுக்கு நானா காரணம்? அய்யோ—கடவுளே! நான் ஒரு பாவமும் அறியேனே! மைனா! மைனா!! என்னாலயா நீ செத்தாய்! எனக்கு ஒண்ணுமே புரியலியே! தயவு செய்து என்னை அவிழ்த்து விடுங்களேன்!!”
அவன் அலறலை அடக்கியவாறு, கற்பூரம் “என்னண்ணே உனக்குப் பைத்தியமா? உளறாதே! மைனாவாவது மண்ணாங்கட்டியாவது!... தெய்வமே! தெய்வமே! இப்படி எழுதலாமா எங்க தலையிலே! ஆபத்தில் காப்பாத்தப் போனதுக்கு அவதூறு வந்து சேர்ந்துதே!... அதோட அண்ணன் மூளையும் கெட்டுதே! ஏ, பிசாசே!... எங்க அண்ணனை விட்டுப்போறியா இல்லையா?” என்று தன் கூச்சலை ஆரம்பித்தாள்.
அவளை அடக்குவது பூஞ்சோலைக்குப் பெரிய வேலையாகப் போய்விட்டது. தெருப் பக்கம் நாலைந்து பேர் நடந்துவரும் ஒலி கேட்டு சுருளிமலை வாயிற்புறம் திரும்பினான். கனமான பூட்சுகள் காட்டாந்தரையில் படுவதால் எழும்புகின்ற பயங்கர சப்தமுடன் போலீசார், வீடு நோக்கி வருவதைக் கவனித்தான் அவன். மளமளவென்று தெருவுக்கு வந்து போலீசாரை எதிர்பார்த்து நின்றான்.
போலீசார், சுருளிமலையிடம் “எங்கே அவன்?...” என்று வினவினர்.
“யார்?” என்றான்.
“அவன்தான் தீச்சட்டி சிங்காரம்!”
“சிங்காரமா? அந்த ஆளுக்குப் பிசாசும், பைத்தியமும் சேர்ந்து பிடிச்சு இப்பத்தானே இந்தப் பக்கமா ஓடினாரு. சீக்கிரம் போங்க, பிடிக்கலாம்!” என்று சாதாரணமாகச் சொன்னான் சுருளிமலை.
போலீசார் அவன் காட்டிய திக்கில் விரைந்து சென்றனர். அவர்கள் போனதும், சுருளிமலை உள்ளே சென்று கதவைத் தாழ் போட்டான். அம்மாவையும் அக்காளையும் கூப்பிட்டான்.
“ஆபத்து! ஜாக்ரதை! இவரை வெளியே போகவே விடக் கூடாது. போனால் அவ்வளவுதான்!” என்று எச்சரித்தான்.
பொன்னையாவுக்குப் போலீசாரை ஏமாற்றுவது கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. “லொக் லொக்” என்று இருமிக் கொண்டே சுருளிமலையைக் கூப்பிட்டு, “அடேய்! நமக்கேண்டா இந்த வம்பு வழக்கெல்லாம்!” என்று அதட்டினார். சுருளிமலை, அப்பாவுக்கு பதில் சொல்லவில்லை. அவருடைய பேச்சைக் கணக்கிலே சேர்க்காதவன்போல், கற்பூரத்தைப் பார்த்து—“நீ உன் வீட்டுக்குப் போ! எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்—நீ யாருக்கிட்டேயும் எதையும் உளறாதே! நீயும் வீட்ல இல்லேன்னா போலீசுக்கு சந்தேகம் அதிகரிக்கும்,” என்று அறிவித்தான்.
கற்பூரமும் தான் எதிர்பார்த்தபடி சந்தர்ப்பம் கிடைத்தது என்ற திருப்தியும், எதிர்பாராத குற்றச்சாட்டு அண்ணன் மீது சுமத்தப்படுகிறதே என்ற ஏக்கமும் ஒன்றையொன்று மோதிட, அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு, இஷ்ட தேவதையைப் பிரார்த்தனை செய்து விபூதி எடுத்து அண்ணனின் நெற்றியில் தடவிவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டாள், கொல்லைப்புற வழியாக!
சுருளிமலை சிறிது நேரம் மௌனமாக சிங்காரத்திற்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தான். தன் பேச்சுக்கும் கூச்சலுக்கும் அந்த வீட்டில் மதிப்பில்லாமல் போய் விட்டது என்பதையும், தன் புலம்பலை பேய்க் கூச்சல் என்று அவர்கள் கருதியிருப்பதையும் எண்ணி எண்ணி உள்ளுக்குள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த சிங்காரம், மெதுவாக அன்புடன் சுருளிமலையை “தம்பீ!” என்று அழைத்தான்.
உடனே பூஞ்சோலை பயந்துபோய் சுருளிமலையின் கையைப் பிடித்து “அடடா! நீ இங்கே உட்காராதே! மெதுவா பேசிகிட்டே பிசாசு உன்மேலே பாய்ந்துவிடும்!” என்று இழுத்துக் கொண்டு அடுக்களைப் பக்கம் போய்விட்டாள்.
சிங்காரம் மௌனமானான். அவன் கண்களிலிருந்து நீர் பெருகி, காதோரத்தில் வழிந்தது. கண்ணீரைத் துடைத்துக் கொள்ளவும் கையை அசைக்க முடியாமல் தவித்த அவனது சங்கடத்தைப் பொன்மணி பார்த்துவிட்டு அருகே வந்தாள். தனியாக வருவதற்கு அவளுக்கு அச்சந்தான். இருந்தாலும் அச்சத்தையும் மீறிக்கொண்டு இரக்க சுபாவம் தலையெடுத்தது. “அழாதீங்க!” என்று கூறி அவன் கண்ணீரை ஒரு துணியால் துடைத்து விட்டாள்.
என்ன காரணத்தாலோ, வீட்டுக்குப்போன கற்பூரம் திரும்பி வந்தவள், அந்தக் கண் துடைக்கும் காட்சியைப் பார்த்துவிட்டு உள்ளுக்குள் பேரானந்தமுடன் யாருக்கும் தெரியாமல் மறுபடியும் போய்விட்டாள். அவளுக்கு நம்பிக்கை தோன்றிவிட்டது. பொன்மணிக்கும் சிங்காரத்திற்கும் எப்படியும் நேசம் முற்றிவிடும் என்று அவள் கணக்குப்போட்டு தன் தந்திரத்தைத் தானே பாராட்டிக் கொண்டாள். வாழாவெட்டியான மைனாவுக்குத் தன் அண்ணன் கணவனாகக் கூடாது என்று நினைத்தாள். நினைத்த மறுநாளே மைனா, தன் குடும்ப கௌரவத்தில் குறுக்கிடாமல் இந்த உலகத்தை விட்டே போய்விட்டது அவளுக்குப் பெரிய திருப்தி.
பொன்மணிதான் சிங்காரத்திற்கு மனைவியாக வேண்டுமென்று கற்பூரத்திற்கு ஏன் அவ்வளவு கவலை? பொன்மணி, பேரழகி! அந்த அழகுப் பதுமை தன் தமயனுக்குப் பெண்டாக வேண்டுமென்று நினைத்தாளா? அல்ல—அழகுக்காக அல்ல! பொன்மணி, அருங்குணவதி! குணத்திற்காகத் தன் குடும்பத்து மணப்பெண்ணாக வேண்டும் அவளென்று கருதினாளா? இல்லை—குணத்திற்காக இல்லை! பின் எதற்காக? பொன்மணியை எப்படியாவது தன் அண்ணனுக்கு முடிச்சுப்போட வேண்டும் என்று விரும்பினாளே தவிர, அண்ணனுக்கும்<!-- verified source join: scan 68→69 --> பொன்மணியைத் திருமணம் செய்து வைக்கவேண்டுமென்று அவள் ஆசைப்பட்டதில்லை. சுருக்கமாகச் சொன்னால் அவள் ஆவல் எல்லாம் பொன்மணியின் திருமணத்தைப் பற்றியதானே தவிர, அண்ணன் சிங்காரத்தின் திருமணத்தைப்பற்றியதல்ல!
அண்ணனைவிட அப்படியென்ன ஒரு தோழியிடம் அவ்வளவு அக்கரை அவளுக்கு? பொன்மணியை இன்னொருவன் விரும்புகிறான். அவளுக்காகத் தவங்கிடக்கிறான். அவள் கண் அசைந்துவிட்டால் போதும்; காலடியிலேயே கிடந்து ஆயுள் முழுதும் அடிமை வேலை பார்க்கவும் அவன் தயாராக இருக்கிறான். அவன் பொன்மணியை அடையக்கூடாது என்பது கற்பூரத்தின் எண்ணம். அவனோ, அடைந்தால் பொன்மணியை அடைவேன், இல்லையேல் சாவேன் என்று சபதம் செய்து கொண்டிருக்கிறான். பொன்மணியிடம் அவன் காதல் பிச்சை கேட்ட காட்சியை கற்பூரம் நேரிலேயே கண்டிருக்கிறாள். தான் பொன்மணியிடம் கெஞ்சுவதை யாருமே பார்க்கவில்லையென்றுதான் அவனுக்கு நினைப்பு—ஆனால் இடிந்துபோன மண்டபத்தின் இடுக்கு வழியே இரு விழிகளையும் செலுத்தி கற்பூரம், அந்தக் காதல் யாசகத்தை இமைகொட்டாமல் பார்த்திருக்கிறாள்.
பக்கத்து ஊரிலே சென்று பானை சட்டிகளை விற்று வருவதற்காக அதிகாலையிலேயே வீட்டை விட்டுப் புறப்பட்டாள் பொன்மணி. பெரிய கூடை நிறையப் பானைகளை அடுக்கிக் கொண்டு, ஒரு கையால் தலையிலுள்ள கூடையைப் பிடித்து, இன்னொரு கையை அழகாக அசைத்துக் கொண்டு அவள் நடந்துபோகும் எழிலே அலாதி! வெண்ணீர்ப்பானை முதல் கடுகு வைக்கும் கலயம் வரையில் எல்லாவற்றையும் தட்டிப் பார்த்துவிட்டுக் கடைசியில் ஒரு சட்டியை முக்காலணாவுக்கு வாங்கிக் கொண்டு, கொடுத்த காசில் சந்தேகமுள்ள ஒரு காலணாவைத் தட்டிப் பார்த்தால் “அடியம்மா! செல்லாக் காசாம் தட்டிப் பாக்கிறதைப் பாரு!” என்று கோபித்துக் கொள்ளும் உலகத்திலே எல்லோரிடமும் நல்ல விதமாகவும் ஆனால் கண்ணியம் கெடாமலும் நடந்துகொண்டு பொன்மணி மண்பாண்ட வியாபாரத்தை வெற்றிகரமாகச் செய்து வந்தாள்.
அன்றைக்கும் அதே உற்சாகத்துடன்தான் வியாபாரத்திற்குக் கிளம்பினாள். என்றும்போல் பக்கத்து ஊர் வெள்ளிச் சந்தையில் சரியான வியாபாரம் காசை முடிந்துகொண்டு, களிப்பை அடக்கமுடியாமல், வெறுங் கூடையுடன் ஊருக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தாள்.
என்றுமில்லாத அதிசயமாக அன்றைக்கு வழியிலே அதிக ஜன நடமாட்டமில்லை. பொழுது போவதற்குள் வீட்டிற்குத் திரும்பிவிட வேண்டுமென்று வேகமாக நடந்தாள். பாதி தூரம் வருவதற்குள்ளாகவே வானம் இருண்டது. இடியும் தொடர்ந்து மழைத் தூறலும் தொடர்ந்தன!
பொன்மணி இன்னும் வேகமாக நடந்தாள். மழை கனமாகவே வந்துவிட்டது. பொன்மணியின் உடையெல்லாம் நன்றாக நனைந்து தந்தம் போன்ற அவள் அங்கங்கள் காண்போரைக் கொல்லும் விதத்தில் அழகு சிந்திக்கொண்டிருந்தன. முழங்காலுக்குமேல் ஆடையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு கூடையைத் தலையில் கவிழ்த்தவாறு ஓட்டமும் நடையுமாக மழையைச் சமாளிக்கப் பார்த்தாள்.
அப்போது அவளுக்குப் பின்னே ஒரு வண்டி வரும் ஓசை கேட்கவே சாலையோரத்தில் ஒதுங்கி நின்றாள். வண்டி நின்றது. “பொன்மணி! வண்டியில் ஏறிக்கொள்ளேன். அடடா! நன்றாக நனைஞ்சுட்டியே...” என்று அனுதாபத்துடன் கீழே இறங்கினான் கரகமாடிக் கண்ணன்.
பொன்மணிக்கு வெட்கம் தாங்கவில்லை. கூடையால் முகத்திலிருந்து இடுப்புவரையில் மறைத்துக்கொண்டு பேசாமல் நடந்தாள்.
கண்ணன் அவளைத் தொடர்ந்து, “அடடா! பைத்தியமா இருக்கியே சும்மா வண்டியிலே ஏறிக்க! நான் வேணும்னா கண்ணை மூடிக்கிறேன். நீயேன் வீணா கூடையைக் குடையாயிடிச்சுகிட்டு கஷ்டப்படுறே!” என்றவாறு அவள் கையிலிருந்த கூடையை வாங்கி, வண்டியில் வைத்துக்கொண்டு அவளையும் ஏறிக்கொள் என்ற ஜாடை செய்தான், கண்களை மூடிக் கொண்டதுபோல் பாசாங்கு செய்து!
பொன்மணிக்கு வண்டியில் ஏற இஷ்டமில்லை. சுற்றுமுற்றும் பார்த்தாள். ஒரு பாழடைந்த கோயில் மண்டபம். விர்ரென அந்த மண்டபத்திற்குப் பாய்ந்தோடினாள். பழமையாகிவிட்ட அந்தக் கோயில், ஓரளவு மழையைத் தடுக்க உதவியது. ஆனால் கண்ணன் விடவில்லையே—அவனும் மண்டபத்திற்கு ஓடி வந்தான். இப்போது பொன்மணிக்கு முகம் விகாரமாக மாறிவிட்டது. இதுவரையில் அவனது பேச்சிலும் நடத்தையிலும் கண்டுபிடிக்க முடியாத அர்த்தத்தை இப்போது அவன் மண்டபத்திற்கு வந்ததும் அவள் கண்டுபிடித்து விட்டாள்.
“பொன்மணீ!” என்றான்.
“போதும்! போதும்!! போய் விடுங்கள்; தயவு செய்து!” என்று கடுகடுத்தாள்.
“என்னைப்பத்தி உனக்குத் தெரியாது! அல்லும் பகலும் உன்னையே நினைச்சு நினைச்சு அனலிலே புழு மாதிரி உருகிறேன்—இதோ பாரு; இவ்வளவு மழை பேயுது! இந்த ஈரத்திலே கூட என் உடம்பு கொதிக்குது! எத்தனையோ நாளா தவம் இருக்கிறேன்; உன்னை தரிசனம் பண்ணனும்னு! இன்னைக்குத்தான் தெய்வம் கிருபை பண்ணியிருக்கு...”
“தெய்வத்துப் பேரை அனாவசியமாக இழுக்காதிங்க! எதுவும் பேசாம போய்டுங்க! இதெல்லாம் நல்லா இல்லே!”
“நல்லா இல்லையா? என்னைப் பாரு பொன்மணி! என்னாட்டம் ஆணழகன் இந்த ஊரிலேயே இல்லேங்கிறாங்க... என் அரும்பு மீசை துடிக்கிறதைப்பாரு... இதையெல்லாம் நானே சொன்னா நல்லா இருக்கா? நீயில்ல சொல்லணும்! ஒரு வார்த்தை சொல்லு; உன்னை நான் கல்யாணம் செய்து கிட்டா, தலையிலே கரகத்தையா தூக்கி வச்சுகிட்டு ஆடுவேன்—உன்னையே தூக்கி வச்சுகிட்டு, கங்கையை வச்சுகிட்டு ஆடுற பரமசிவன் மாதிரி ஆடுவேன்!”
“வீண்பேச்சு பேசாதிங்க! அப்புறம் நான் பொல்லாதவளாயிருப்பேன்; ஆமாம்!”
“அடேய்—‘பொல்லாதவளா? என்ன செய்வே?... அற்பப் பதரே!’ என்று என்னைக் கட்டித் தழுவி, கன்னத்தைக் கிள்ளி...”
“சீ! சீ! சீ! நிறுத்துங்க! மரியாதையாப் பேசுங்க!”
“மன்னிச்சுக்க பொன்மணி! என்னை நீதான் காப்பாத்தணும்! செய்தா உன்னைக் கல்யாணம் செய்றது; இல்லேன்னா பிரமச்சாரியாவே இருக்கிறது... இது சத்தியம்! என்ன சொல்றே?”
பொன்மணி, சிறிது நேரம் மௌனமாக ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்; மழை விட்டிருந்தது. சிறிது தூறல் மட்டுமே விழுந்து கொண்டிருந்தது.
“யாருமே இல்லை இங்கு! வெட்கப்படாதே!” என்று அருகே நகர்ந்தான் கண்ணன். அவனுக்குத் தெரியாது, கற்பூரம் மழைக்காக மண்டபத்தில் ஒதுங்கி அந்த நாடகத்தைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த செய்தி!
கண்ணன் அருகே வந்ததும் பொன்மணி அவனை ஆத்திரத்தோடு பார்த்து “கல்யாண விஷயமெல்லாம் என் பெற்றோர்களிடம் பேசுங்க! என்கிட்ட பேசி என்ன புண்யம்!” என்று கூறிவிட்டு வேகமாக ஓட ஆரம்பித்தாள்.
அதற்குமேல் அவளைத் தொடர்ந்து தொல்லை கொடுக்க கண்ணன் விரும்பவில்லை. பொன்மணிக்குத் தன்மீது அன்பு இருக்கிறது; அதைக் காட்டிக் கொள்ளாமல் இருக்கிறாள் என்று எண்ணிப் பூரிப்படைந்தான்.
அவனுடைய வண்டியும் சேறு நிரம்பிய சாலையில் மெதுவாக நகர்ந்தது.
நீண்ட பெருமூச்சோடு, கற்பூரம் மண்டபத்திலிருந்து வெளியே வந்தாள். அப்போதே அவள் தீர்மானம் செய்து விட்டாள்; பொன்மணியை எப்படியாவது கண்ணனுக்குக் கிடைக்காமல் செய்துவிட வேண்டுமென்று! காரணம்; கற்பூரம் அந்தக் கண்ணனின் அழகில் தன் உள்ளத்தைப் பறிகொடுத்திருந்தாள்.
கலைஞர் மு. கருணாநிதி · சுருளிமலை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்