அத்தியாயம் 5 · 5 / 26
அத்தியாயம் 5
Chapter 5
மூல ஸ்கேன் 44–64
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
5
“இதைக்கூட நான் சாப்பிடக்கூடாது என்றுதானே உப்பைக் கொட்டிவிட்டாய்? பரவாயில்லை—‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்று பழமொழி—நான் எப்போதும் உன்னை நினைத்துக் கொண்டேயிருப்பேன்” என்று குத்தலாகவும் குறும்பாகவும் பீதாம்பரம் பேசிக் கொண்டே போனார். இந்த இக்கட்டான நிலைமையைச் எப்படி சமாளிப்பதென்றே மைனாவுக்குப் புரியவில்லை.
“ஏன் எரு மாதிரி முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறாய்? எத்தனையோ நாட்களுக்குப் பிறகு கணவன் வந்திருக்கிறேன்; வாயெல்லாம் பல்லாக என்னை வரவேற்க வேண்டாமோ?” என்றார் பீதாம்பரம்.
அதற்கு அவள், அவளையறியாமலே வெடுக்கென்று பதில் கூறிவிட்டாள்.
“வாயிலே பல் இருந்தாவுல்ல அப்படி வரவேற்கலாம்!” என்று!
பீதாம்பரம், அவள் நினைப்பதைப் புரிந்து கொண்டார். ஆனாலும் அதை வெளிக் காட்டிக்கொள்ளாமல் “உனக்கா பல் இல்லை? அடுக்கு முல்லை போல அழகாக இருக்கிறதே!” என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.
“இதெல்லாம் போலிப் பல்! ஊரை ஏமாற்றுவதற்காகக் கடையிலே வாங்கியது!” என்றாள் மைனா—கோபமாக!
எப்படியோ அவள் பேச ஆரம்பித்தால் போதும் என்று எதிர்பார்த்த பீதாம்பரம் மகிழ்ச்சியடைந்தார். இருவரிடையே உரையாடல் வளரலாயிற்று.
“நீ நளாயினி நாடகம் பார்த்திருக்கிறாயா மைனா?”
“இல்லை—நான் அல்லி அர்ச்சுன நாடகம் மட்டுமே பார்த்து ஏமாந்திருக்கிறேன்!”
“அல்லி அர்ச்சுனு, காதல் கதை! நளாயினிதான் உண்மையான பதிபக்தியை விளக்கும் கதை!”
“நீங்கள் வள்ளித் திருமணம் நாடகம் நடத்தியிருக்கீங்களா?”
“இல்ல ...”
“பொய் சொல்றீங்க! நீங்கதான் வள்ளித் திருமணம் நாடகத்தை தலைகீழே நடத்தியிருக்கீங்களே?”
“தலைகீழவா? எப்போதா? எங்கே?”
“எப்போதா? மறந்தா விட்டீங்க? உங்க வாழ்க்கையில்தான் நடத்தியிருக்கீங்க, பழைய வள்ளித் திருமணத்திலே வேலன் விருத்தனா வருவான் நீங்க நடத்தினதிலே விருத்தன், வேலனா வந்திருக்கான்—இல்லியா?”
“மைனா! முருகப் பெருமான், வள்ளியை நேரடியாக வந்து திருமணம் செய்து கொள்ளாமல் விருத்தனைப் போல வேஷம் போட்டு வந்தானே; எதற்காக? மனித வாழ்வின் உண்மையை விளக்கும் தத்துவமாக்கும் அது! வாலிபம் என்றைக்கு மிருக்காது—ஒரு நாளைக்கு மனிதனைக் கிழட்டுத்தனம் சூழ்ந்து கொள்ளும் என்பதை எடுத்துக் காட்டி வள்ளியின் மனசை உறுதிப்படுத்துவதற்காகவே விருத்தன் வேடம்!”
“என்னைக்காவது ஒருநாள் வாலிபம் மறையத்தானே போகுதுன்னு நினைச்சு வள்ளி அந்த முருகனைக் கிழவனாகவே இருக்கச் சொல்லவில்லையே—வாலிபனாக வந்த பிறகுதானே கல்யாணம் செய்து கொண்டாள்!”
“அவர் கடவுள்—அதனால் விருத்தன், வேலனாக மாறி விட்டார்!”
“அப்படின்னா கடவுள் கதையைச் சொல்லி சாதாரண மனுஷாளுக்கு உதாரணம் காட்டாதீங்க!”
“சுற்றி வளைப்பானே ... மைனா—நீ சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவந்ததற்குக் காரணம் என்ன?”
“இதை நான் சொல்லாமலே நீங்கள் தெரிந்து கொண்டிருக்க வேணும்!”
“நீ தான் எனக்குக் கடிதம் எழுதினாய். என்மீது ஆசை கொண்டு விட்டதாகவும் அதை மாற்றிக் கொள்ள முடியாதென்றும் கெஞ்சியிருந்தாய் உன் படத்தை வேறு அனுப்பி என்னை மயக்கினாய் உன் இஷ்டப்படி கல்யாணம் நடந்த பிறகு ஓடிவந்து விடுவதென்றால் இது நியாயமா?”
“பசும்புல் தரையென்று நினைச்சு, படுகுழியிலே விழுந்த யானை எப்படியாவது தப்பிக்க மாட்டோமான்னுதானே தவிக்குது! அது மாதிரிதான் என் கதையும்!”
“மைனா! உன் கழுத்திலே கிடக்கிற மாங்கல்யத்துக்காவது மதிப்பு கொடுத்துப் பேசு நான் மானம் அவமானத்தை விட்டுட்டு உனக்கிட்ட பிச்சை கேட்க வந்திருக்கிறேன். பீதாம்பரமென்றால் ஊரெல்லாம் பேரு—புகழ்! அதை கெடுத்து விடாதே! பீதாம்பரம் பெண்சாதி, யாருடனோ ஓடிவிட்டாள் என்று ஊர் ஜனங்கள் பேசினால் அதைவிட நான் தூக்கு மாட்டிக் கொண்டு செத்துப் போகலாம்!”
“மன்னிச்சுக்கிங்க! என்னை மறந்துடுங்க!”
“முடியவே முடியாது! உன்னை என்னால் மறக்கவே முடியாது! பாலைவனமாக இருந்த என்னுடைய நாடக வாழ்க்கையை நினைத்து நினைத்து அழுது புலம்பியிருக்கேன் ஆனால் அது எல்லாம் மறந்து போகிற அளவுக்கு உனக்கும் எனக்கும் கல்யாணம் நடந்தது. மைனா! திருமணத்தன்று நீ மகிழ்ச்சியாகத்தான் இருந்திருப்பாய். ஏனென்றால் அப்போதெல்லாம் நீ என்னை மன்மதன் என்றல்லவா நினைத்துக்கொண்டிருக்கிறாய்! உன் மகிழ்ச்சியெல்லாம் அப்போது நான் கொண்ட மகிழ்ச்சியோடு போட்டி போட்டிருக்கவே முடியாது! எட்டாத பழம் நொண்டிக்குக் கிடைத்துவிட்டது என்று பெருமைப்பட்டுக் கொண்டேன். எப்படியும் விஷயம் வெளிச்சமாகி விடும்—பிறகு நீயும் என்ன இருந்தாலும் நம் கணவர்தானேயென்று சமாதானமாகி விடுவாய் என்று ஒரு நம்பிக்கையிருந்தது எனக்கு. அந்த நம்பிக்கையிலும் ஆனந்தத்திலும் மண்ணைப் போட்டு விட்டாய் இப்போது!”
“என்னைக் குற்றவாளியாக்கி நீங்கள் தப்பித்துக்கொள்ளப் பாக்கிறீங்களா? நீங்களும் முன்னொரு காலத்திலே நல்ல வாலிபரா இருந்திருப்பீங்களே; அதை நினைச்சுப்பாருங்க! வெட்கத்தை விட்டுவிட்டுக் கேக்கிறேன்—அதைப் போல இள வயசுக்கார ஒரு பெண்ணுக்கு என்னென்ன எண்ணங்கள் தோணும்! அதுக்கெல்லாம் நீங்க தகுதியானவர்தானா? யோசித்துச் சொல்லுங்க!”
“யோசிப்பதென்ன? குருடனுக்கிட்ட கேட்டாலும் நான் தகுதியல்ல என்றுதான் சொல்லுவான், மைனா! தகுதி—தரம்—இதெல்லாம்பற்றிப் பேசி உன்னை இணங்க வைக்க வரவில்லை நான்! என்னை நீயேவந்து கல்யாணம் செய்து கொண்டாய். நீயே இப்போது கைவிட்டுவிட்டாய்! இது நியாயமா—என்றுதான் உன்னிடம் மன்றாடிக் கேட்டு மீண்டும் உன்னை அழைத்துப் போக வந்திருக்கிறேன்!”
“எனக்கும் உங்களுக்கும் கல்யாணம் என்று ஒரு நிகழ்ச்சியே நடக்கலேன்னு நினைச்சுக்கிட்டு இருந்துடுங்க!”
“மருந்து சாப்பிடும்போது குரங்கை நினைத்துக் கொள்ளாதேயென்று யாரோ ஒரு மருத்துவன் சொன்னானாம்; அது போல்தானிருக்கிறது இதுவும்!”
“வீணாப் பேசிகிட்டு இருக்கிறதில என்ன பிரயோஜனம்?”
“அதான் நானும் சொல்றேன்; உடனே என்னோடு புறப்படு!”
“முடியாது! முடியாது! என் உயிர் போனாலும் சரி; உங்களோட இனி வாழ முடியாது!”
“வாழ வேண்டாம்! சும்மா என் வீட்டிலே வந்து இரு. ஊர் வாயையாவது மூடுவதற்கு உதவியாக இருக்கட்டும்”
“இதுவரைக்கும் ஊர்வாய், அடங்கியா இருக்கும்? இந்நேரம் என்னைப்பத்தி எவ்வளவோ பேசியிருப்பாங்க. இனி மேல்தானா பேசப் போறாங்க!”
“நீ சிங்காநல்லூருக்குப் போயிருக்கிறாய் என்றுதான் ஊரிலே பிரஸ்தாபம்! கல்யாணம் பண்ணின நேரம் நல்ல நேரம் இல்லை. அதனால் சொந்த ஊருக்குப் போய்விட்டு ரெண்டுமாசம் கழித்து வருவாய் என்றுதான் கேட்டவருக்கெல்லாம் சொல்லி வைத்திருக்கிறேன்!”
“நான் சொல்றதைக் கேளுங்க புருஷனோடு வாழ திருப்தியில்லைன்னு மனைவி சொல்லும்போது. மேலும் மேலும் பிடிவாதம் பண்றதிலே என்னங்க லாபம்?”
“திருப்தியோடு வாழ வேண்டாம். அதிருப்தியோடு வாழ! எப்படியோ நீ என் வீட்டிலே இருந்தா போதும்!”
“பொம்மை மாதிரி உங்கவீட்ல இருக்கணுமா?”
“ராணி மாதிரி இரு!”
“பிராணி மாதிரிதான் இருக்கலாம்! பிராணிக்குக்கூட என்னைப் போல கஷ்டகாலம் வராது!”
“உன்னை எங்க வீட்டு எஜமானி மாதிரி நடத்துறோம். என்னை உன் அடிமை மாதிரியே நடத்து! இதைவிட நான் இன்னும் என்ன சொல்றது மைனா?”
“வீட்ல வந்து எல்லாவற்றையும் ஆட்டிப் படைச்சு அரசாட்சி பண்ணனும்னா நினைக்கிறேன்? பிச்சைக்காரியா திரிவேன்—உங்க வீட்டு வேலைக்காரியாக்கூட இருப்பேன்—ஆனா மனசுக்குத் திருப்தியில்லாம எதுக்காக எனக்கு எஜமானி உத்தியோகம்?”
“உன் மனசுக்குத் திருப்தியாத்தானே இருக்கணும். இதோ இப்பவே சத்தியம் செய்து கொடுக்கிறேன், என் குலதெய்வத்தின்மேல் ஆணை! என் தொழில்மீது ஆணை! உன்னை நான் தொடுவதே இல்லை. என் மகளைப் போலவே நடத்துகிறேன் போதுமா?”
“மகளைப் போல நடத்துவது உண்மையானால், இப்போதே என்னை மகளைப் போல நடத்துங்கள். மகளுக்குக் கல்யாணமாகி மாப்பிள்ளை வீட்டுக்கு வந்திருக்கிறாள். அப்பா—<!-- verified source join: scan 48→49 -->—நீங்கள் மகளைப் பார்க்க வந்திருக்கிறீர்கள் என்று கற்பனை செய்துகிட்டு, நீங்க மாத்திரம் ஊருக்குப் போங்க!”
“மைனா! நீ என் மகள் தான்—என்னை மன்னித்துவிடு!”
மைனா, சற்றும் எதிர்பாராத நிலையில் பீதாம்பரம் அவள் காலில் விழுந்துவிட்டார்; அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை மீண்டும் அசைவற்றுப் போனாள். பீதாம்பரம் தன் காலில் விழுந்து கெஞ்சுவதாகவே அவளுக்குத் தோன்றவில்லை தன் கணவன் பயங்கர விசுவரூபம் எடுத்து, காய்ச்சிய இரும்பாலான கரத்தால் தன்னை அலக்காகத் தூக்கி நரநர வென்று பிழிவது போலவும், தன் விலா எலும்புகள் நொறுங்கி, இருதயம் நசுங்கி, ரத்தம் பீறிட்டெழுவது போலவும், அவளுக்குத் தோன்றியது. அவன் அவளை அடித்திருக்கலாம். வெட்டியிருக்கலாம். மண்டையை உடைத்திருக்கலாம். அதையெல்லாங்கூட அவளால் தாங்கிக் கொண்டிருந்திருக்கக் கூடும். காலடியில் அவன் சுருண்டு கிடப்பதை அவளால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை கண்ணீர் அவளையறியாது பெருகிற்று. மெல்லிய குரலில் “எழுந்திருங்கள்!” என்று அவரது தோள்பட்டையைப் பிடித்துத் தூக்கினாள்.
“உண்மைதான் மைனா! உன்னை என் மகளாகவே நடத்துவேன். நம்முடைய கல்யாணத்தை மறக்கச் சொன்னாயே; நிச்சயம் மறந்துவிடுகிறேன். நீயும் மறந்துவிடு. மகளும் தந்தையுமாக வாழ்வோம் இன்னும் சொல்கிறேன்; மகளே! உனக்கேற்ற ஒரு வாலிபனையும் திருமணம் செய்து வைக்கிறேன்!”
அழுதபடி பீதாம்பரம் இதைச் சொல்லி முடிப்பதற்குள், மைனா அவரது கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு “அய்யோ! என்னை மன்னித்து விடுங்கள்: இப்படியெல்லாம் சொல்லாதீர்கள்!” என்று கதறித் துடித்தாள். பீதாம்பரத்தின் முகத்தைப் பார்க்கவே இப்போது அவள் அஞ்சி நடுங்கினாள். தன்னை உயிரோடுவைத்து அணு அணுவாகச் சித்திரவதை செய்யும் பேய் என்று யாரைக் கருதினாளோ; அந்தப்பேய்<!-- verified source join: scan 49→50 --> அவள் எதிரே நின்று கெஞ்சும் தோரணையில் அவள் உயிரை யாசிப்பதுபோல் ஒரு சமயம் தோன்றியது. அடுத்தக்கணம்; அன்பின் அரவணைப்பில் அந்தப் பேயை அறியாமலே அதன் கொடிய கூரிய நகங்கள் அவள் நெஞ்சைக் கிழித்து இருதயத்தைப் பொத்தலாக்கி விட்டதுபோலவும் இருந்தது. முதல் நாள் இரவு அவள் உள்ளம், உடல் எல்லாம் பாழ்பட்டு விட்டதை எண்ணிக் கொண்டாள். வியர்வை கொட்டியது. மீளாத பாபக் குழியில் விழுந்து விட்டோம் என்ற ஒரு பய உணர்ச்சி மேலும் அவளை ஆட்டிப்படைத்தது. பித்தம் கொண்டவள் போல் ஆனாள்.
“என்னைத் தொடாதீர்கள்—நான் பாபி—நான் பாபி!” என்று கத்தினாள்.
“மைனா! மைனா!” பீதாம்பரம் அழைத்தார்.
மைனா, வெறி கொண்டவள்போல ஓடத் தொடங்கினாள். பீதாம்பரம் பின் தொடர்ந்தார். ஆனால் அவரது பருவம், அவள் ஓட்டத்தைத் தடுக்க உதவி செய்யவில்லை. மைனா, நேராகக் கோயில் நிர்வாகி வீட்டுக்குள் ஓடினாள். அங்கே நிர்வாகி மட்டுமே இருந்தார். “தீச்சட்டி சிங்காரம் இருக்கிறாரா?” என்று பரபரப்போடு கேட்டாள். நிர்வாகி, ஒரு விநாடி தாமதித்தார், பதில் சொல்ல! பிறகு அவர், “சிங்காரம் தானே? உள்ளேயிருக்கிறார்!” என்று கூறினார். மைனா வீட்டுக்குள்ளே ஓடினாள். வீட்டுக்குள் யாருமே காணப்படவில்லை. ஒரே அமைதியாக இருந்தது. திருப்பி வாயிற்புறம் ஓடிவந்தாள். வாயிற்கதவு தாள் போடப்பட்டிருந்தது. எப்படி வெளியே போவது? விழித்தாள்! கடகடவென சிரித்துக் கொண்டே, கோயில் நிர்வாகி அவளை நெருங்கினார். மைனா பெருத்த கூச்சல் போட்டாள்.
அந்தக் கூச்சல் யார் காதிலும் விழவில்லை. நிர்வாகியின் கைகளில் மைனா சிக்கினாள். எத்தனையோ நாளாக நிர்வாகியின் நெஞ்சில் மூண்டுகொண்டிருந்த நெருப்பு அப்போதுதான் அணைந்தது. மூன்றாவது முறையாக அவள் கற்பு களங்கப்படுத்தப்பட்டது!
கோயில் நிர்வாகி அவளைப் பார்த்து வெற்றிப் புன்னகை புரிந்தார். அவளும் சிரித்தாள். நிர்வாகி, கூடத்திலேயிருந்த பெரிய மரப்பெட்டியைத் திறந்தார். அதற்குள்ளே அழகான செல்லப் பெட்டியொன்றிருந்தது. அதிலேயிருந்து இரண்டு ஐந்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து மைனாவிடம் நீட்டினார். அவள் “போதாது” என்பதுபோல் தலையசைத்தாள்.
நிர்வாகி மீண்டும் சென்று பெட்டியைத் திறந்தார். மைனா, எதிர்பார்த்த சமயம் கிடைத்து விட்டது. அருகேயிருந்த எண்ணெய் வழியும் குத்துவிளக்கை அவசர அவசரமாகத் தூக்கினாள். தூக்கிய வேகத்தில் நிர்வாகியின் பிடரிமீது ஓங்கி அடித்தாள். நிர்வாகி “அய்யோ” என்று கத்திய சப்தம்கூட வெளியே கேட்கவில்லை. செத்தானா, பிழைத்தானா அந்தச்சண்டாளன் என்று அவள் பார்த்துக்கொண்டிருக்கவில்லை. கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடிவந்தாள். வீட்டு வாயிற்புறத்திலிருந்து வெறிக்கப் பார்த்தாள். பீதாம்பர பாகவதர் தன் பிரியத்துக்குரிய பூனைக்குட்டியைத் தூக்கிக் கொண்டு தூரத்தில் போய்க் கொண்டிருப்பது தெரிந்தது. பின்னாலேயே ஓடினாள். அவரோ திரும்பாமல் நடந்துகொண்டிருந்தார்.
ஓடியவள் ஏதோ ஒரு நினைவில் நின்றாள். அவரைப் பின் தொடர அவளுக்கு இஷ்டமில்லை. வெறிபிடித்தவள்போல எதிரேயுள்ள பரந்த வெளியை உற்று நோக்கினாள். உடம்பெல்லாம் எரிவது போலவும் உள்ளத்தில் தழலைக் கொட்டியது போலவும் உணர்ச்சி அவளை ஆட்டிப் படைத்தது. அவளாகவே “பாபி! பாபி!” என்று பெருமூச்சோடு கலந்து முணுமுணுத்துக் கொண்டாள். வாழ்க்கை முகப்பில் எவ்வளவோ உற்சாகத்தோடு காலெடுத்து வைக்கிறோம் என்ற மகிழ்ச்சியில் கர்வத்தோடு நுழைந்த காரிகை, கசங்கிய மலராய்—கருகிய தளிராய் சூன்யமாகத் தோன்றும் எதிர்காலத்தை நீர் மல்கிய கண்களோடு வரவேற்க வேண்டிய நிலைபெற்று விட்டாள்.
இனி அவளுக்கு யார் துணை? தீச்சட்டி சிங்காரம்தானா? அவனிடம் சென்று எப்படித் தன் நிலையை விவரிப்பது? “கணவனை வெறுத்தேன். காதலனாய் உன்னைப் பெற்றேன். காமுகன் ஒருவனின் ஆசைக்கும் உடன்பட்டேன்” என்ற செய்தியை அவனிடம் போய்க் கூறுவதா? சே! சே! அதைவிட உயிரை விட்டு விடலாமே—அதுதான் சரியான முடிவு! ஆனால் சாவதற்குள் ஒருமுறை சிங்காரத்தைப் பார்க்கக் கொடுத்து வைக்காதா? அவனைப் பார்த்த ஆறுதலுடனாவது சாகக்கூடாதா? அதற்கு வழி? அவள் தீர்மானம் செய்து விட்டாள். அவனைப் பார்த்தே தீருவதென்று!
சிற்றூர் நோக்கி அவள் கால்கள் நகர்ந்தன. கல்லும் முள்ளும் கரடுமுரடான பாதையும் அவளை என்ன செய்யும்? சாவதற்கு முடிவு கட்டியாகி விட்டது—இனி இந்த சரீரம் என்ன ஆனால்தான் என்ன? முள் கிழித்துத் தோள்பட்டைப் பக்கம் ரத்தம் கசிகிறது. அதோ கோயில் நிர்வாகியின் பல் பட்டு அவள் கன்னத்திலே ரத்தம் கட்டியிருக்கிறது. முள் உண்டாக்கிய காயத்திலிருந்து கசியும் ரத்தத்தில் எந்தக்களங்கமும் இல்லை. பிரசித்தி பெற்ற ரத்தம் ஆராய்ச்சி நிபுணர்கள் பரிசோதித்துப் பார்த்தாலும் அது தூய்மையான ரத்தமென்றே கூறுவர்.
ஆனால் வெளிப்படாமல் கன்னத்தில் கட்டிக்கொண்டிருக்கிறதே ரத்தம்—கோயில் நிர்வாகியின் பல்லால் ஏற்பட்ட வினை—அந்த ரத்தம் பயங்கரக் கிருமிகளை உற்பத்தி செய்யக்கூடிய சாக்கடைத் தண்ணீராக ஆகிவிட்டது. அதனால்தான் அவள் முள் கிழித்து ஒழுகும் குருதியைப்பற்றிக் கவலைப்படாமல் நடந்தாள்.
பூனையின் பாதத்தைவிட மிருதுவான அவள் பாதத்தில் பருக்கை கற்கள் குத்துவது அவள் கண்களில் வெளிப்படும் கலக்கத்திலிருந்து நன்றாப் புலப்படுகிறது. அதையும் அவள் லட்சியம் செய்யவில்லை. இந்த உடம்பு எப்படிக் கெட்டால் என்ன? நாளைக் காலையில் சுட்டுப்பொசுக்கி சாம்பலாக்கி விடுவார்கள். தற்கொலைப் பிணம் என்பதற்காக டாக்டர்கள் அறுத்துப் பார்ப்பார்கள். பிரேத விசாரணை செய்யும் அந்த டாக்டர்களுக்குத் திறமையிருக்குமேயானால் கைக் கெடிகாரம் ஓடுகிறதா என்று பார்ப்பதற்குக் காதிலே வைத்துக் கவனிப்பதுபோல பிரேத விசாரணையின் போது இருதயத்தையும் எடுத்துக் காதிலே வைத்துக் கேட்டால் தற்கொலைக்கான உண்மைக் காரணத்தை அது அவர்களிடம் நிச்சயம் சொல்லிவிடக்கூடும். தங்கம், பொன், மலர், மாணிக்கம் என்றெல்லாம் வர்ணிக்கிற உடலை, மண்மீது கிடத்தி, வரட்டியை அடுக்கி, நெருப்பையும் மூட்டி, இருந்த இடம் தெரியாமல் ஆக்கி விடுவார்கள். அதற்குள் எவ்வளவு கல் குத்தினால் என்ன? முள் கிழித்தால் என்ன? சரீரம் முழுவதுமே புண்பட்டுப் போனாலும் கவலையில்லை. சிங்காரத்தைக் கடைசித் தடவையாகப் பார்ப்பதற்குக் கண்கள் மட்டும் மிச்சமிருந்தால் போதும் அவளுக்கு!
எண்ணங்கள், பெருமூச்சுக்கள்—எதிரேயுள்ள எந்தத் தடையைப்பற்றியும் கவலைப்படாத தைரியம்—எல்லாம் சேர்ந்து அவளைச் சிற்றூருக்குக் கொண்டுவந்துவிட்டன.
சிற்றூரின் எல்லையிலுள்ள ஒரு பிள்ளையார் கோயில் மண்டபத்துக்கு அவள் வந்து சேர்ந்தாள். மண்டபத்திலிருந்து யாரோ பாடுவது அவள் காதில் விழுந்தது;
“சாலையிலே ரெண்டு மரம் சர்க்காரு வச்ச மரம் ஓங்கி வளர்ந்த மரம்—தங்கரத்தினமே! உனக்கேத்த தூக்கு மரம்—என் பொன்னுரத்தினமே!”
இந்தப் பாடலைத் திருப்பித் திருப்பி ஒரு குரல் பாடிக் கொண்டிருந்தது. மைனா அந்தப் பாடலில் தன் உள்ளத்தைப் பறிகொடுத்து நின்றாள். உடனே இன்னொரு பாடல்!
“யாரடீ கள்ளி நீ...? கூறடி கொள்ளிக்காய்ப் பிசாசே!” என்று உரக்கப் பாடியபடி அவளெதிரே வந்து நின்றான் பஞ்சாயத்தார் பரமசிவத்தின் செல்வத் திருமகன். அவனுக்கு பைத்தியமென்ற விபரம் அவளுக்கு எப்படித் தெரியும்? அவளே தான் இப்போது முக்கால் பைத்தியமாக ஆகிவிட்டிருக்கிறாளே!
“இதுதானே சிற்றூர் என்பது”—அவனைப் பார்த்து மைனா மெதுவாகக் கேட்டாள்.
“ஆமாம்! இதுதான் சிற்றூர்! நான் தான் பஞ்சாயத்தார் மகன்! என் பெயர் சிரஞ்சீவி! உனக்கு என்ன வேண்டும்?”
பைத்தியம், உளற ஆரம்பித்தது. அவளுக்கோ அது புரியவில்லை.
“தீச்சட்டி சிங்காரத்தின் வீடு எங்கேயிருக்கிறது?”—ஆவலோடு கேட்டாள்.
“இந்த ஊரில்தான் இருக்கிறது. தீச்சட்டி சிங்காரத்தின் ஊரும் இந்த ஊர்தான். என் ஊரும் இந்த ஊர்தான். சிங்காரத்தோட பெண்டாட்டி ஊரும் இந்த ஊர்தான்!”
பைத்தியத்தின் பதில் அவளுக்குத் தூக்கிவாரிப்போட்டது. “என்ன? சிங்காரத்துக்குக் கல்யாணமாயிட்டுதா?”
“ஏன்—நீ கல்யாணம் பண்ணிக்கலாம்னு பாக்கிறியா? அதான் முடியாது. சிங்காரத்துக்குக் கல்யாணம் ஆகி ஒரு பிள்ளை கூட பிறக்கப்போவுது.”
“நிஜமாவா? உண்மைதான நீ சொல்றது?”
“அரிச்சந்திரனோட மகனாக்கும் நான். உனக்கிட்ட ஏன் பொய் சொல்றேன். சிங்காரத்துக்குக் கல்யாணம் ஆயிட்டுது. இனிமேல் கருமாதிதான் பாக்கி!”
“அப்படியா? அட தெய்வமே!”
“தெய்வம் வேணுமா உனக்கு? இதோ கோயிலுக்குள்ளேயிருக்கு. போயி பேசிகிட்டு இரு. நான் போறேன்.”
“போறேன்டி போறேன்டி கட்ட பொம்மு! போருக்குப் போறேன்டி கட்ட பொம்மு! போகவிடை தாயேண்டி வெள்ளையம்மா! போனால் திரும்ப மாட்டேண்டி வெள்ளையம்மா!”<!-- verified source join: scan 54→55 --> பாடிக்கொண்டே சிரஞ்சீவி அதைவிட்டு ஓட்டம் பிடித்தான்.
மைனாவுக்கு ஏமாற்றத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி தாங்க முடியவில்லை. சாவதற்கு முன்பு யாரைக் கடைசி முறையாகக் காணவேண்டுமென்று ஓடோடி வந்தாளோ, அவன் தன்னை ஏமாற்றி விட்ட எத்தன் என்று முடிவுகட்டிக் கொண்டாள்.
பைத்தியத்தின் உளறல் அவள் நெஞ்சில் பெரியதோர் குமுறலை உண்டாக்கியது. சிங்காரத்தை இனி எதற்காகக் காண வேண்டும்? மைனாவின் மனம் மரத்துப்போய் விட்டது. எவ்வளவு நேரம் அந்த மண்டபத்திலேயே உட்காந்திருந்தாள் என்று அவளுக்கே தெரியாது. உலகம் இருட்ட ஆரம்பித்தது. இருட்டிப்போன தன் வாழ்விலும் ஒரு நள்ளிரவு அமைதியை விரைவிலே ஏற்படுத்த அவள் அவசரப்பட்டாள்.
தனக்காக இந்த உலகத்தில் ஒருவன் கவலைப்படுவான்—தன் பிணத்தின்மீது கண்ணீர் கொட்டுவான் என்று எதிர்பார்த்தாள்; அந்தச் சிங்காரமும் இப்போது துரோகியாகி விட்டான் அவளுக்கு. மனங்கொண்ட மட்டும் அவனை சபித்தாள். ஏதோ கண்ட இடத்தில் பசியை அடக்கிக்கொள்ளத் தன்னைக் கடைப்பொருளாக மதித்துவிட்ட கயவன் என்று அவனை விமர்சனம் செய்தாள்.
அவள் அவனைச் சபித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில்தான், சிங்காரம் தன் தங்கை கற்பூரத்துடன் ஊர் சுற்றும் பயணத்தைப்பற்றி விவரித்துக்கொண்டிருந்தான். எல்லா ஊர்களிலும் அவனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு உபசாரங்களையும், பரிசுகளையும் பற்றி ஆனந்தம் பொங்கத் தங்கையிடம் அளவளாவிக் கொண்டிருந்தான். அவனது ஆனந்தத்திற்கே அடிப்படையாக அமைந்தது மைனாவின் சந்திப்பல்லவா? அந்தச் சந்திப்பையும், சந்திப்பில் ஏற்பட்ட தீர்மானத்தையும் எப்படித் தங்கையிடம் கூறுவது என்று அவனுக்குப் புரியவில்லை.
அவள், தீச்சட்டி உடைந்ததுபற்றி மிகவும் கவலைப்பட்டாள். “மறுநாளே தீச்சட்டி வாங்கினால்தான் குடும்பத்துக்கு நல்லது; இல்லாவிட்டால் மிகவும் பாபம் சம்பவிக்கும்!” என்று அண்ணனிடம் பயமுறுத்தினாள்.
எப்படியாவது பேச்சோடு பேச்சாக மைனாவைப்பற்றிக் கூறி, அவளோடு குடித்தனம் நடத்துவதற்குக் கற்பூரத்திடம் சம்மதம் பெற்றுவிடவேண்டுமென்று துடித்தான் சிங்காரம். மெதுவாகப் பேச்சையும் ஆரம்பித்தான். கற்பூரத்தின் கல்யாணத்திலிருந்து பேச்சைத் தொடங்குவதே நல்லது என்று கருத்தினான் போலும்.
“வயது ஆகிக்கொண்டே போகிறது. சீக்கிரம் இந்த வருஷமாவது உனக்குக் கல்யாணத்தை முடிக்கவேண்டாமா?” என்று தொடங்கினான்.
“ஆரம்பிச்சுட்டியா கல்யாணப் பேச்சை! சரிதான் வாயை மூடு!” என்று வெடுக்கென்று பதில் சொல்லிவிட்டு, “எனக்கென்ன அவசரம்! முதலில் நீ கல்யாணம் செய்துகொள்ள சம்மதம் கொடு—நான் ஒரு அழகான பெண்ணு பார்த்து வச்சிருக்கேன்!” என்று சிரித்துக்கொண்டே கூறினாள் கற்பூரம்.
“பெண்ணு நீ பார்ப்பதா? கற்பூரம். உனக்கு அந்தச் சிரமம் இல்லாம நானே பார்த்துட்டேன்!” என்றான் சிங்காரம்.
அவள் விருப்பப்படியே பேச்சு தொடர்ந்தது.
“எங்கே யண்ணே பார்த்திருக்கிறே? எந்த ஊர்? யார் பெண்ணு?”
“சுற்றுப்பயணத்திலே தான் பார்த்தேன். ரொம்ப அழகான பெண்ணு. தங்கமான குணம். பெயரு மைனா!”
“தாயார் தகப்பனார் யாரு?”
“தாயார் தகப்பனார் இல்லை!”
“அண்ணன்..... தம்பீ?”
“யாருமில்லை!”
“பிறகு? அனாதைப் பெண்ணா?”
“ஆமாம்—அனாதை மாதிரிதான்! கணவன் இருந்தான்—அவனும் இப்ப இல்லை.”
“என்னாது?”
“ஆமாம்! அவள் கல்யாணமானவள்!”
“ஆ! வாழாவெட்டியா!”
கற்பூரம், உணர்ச்சி வசப்பட்டுவிட்டாள். உணர்ச்சிவசப்படும்பொழுது வழக்கமாக வரும் ஆவேசம் வந்துவிட்டது அவளுக்கு! சாமியாட ஆரம்பித்துவிட்டாள். கற்பூரத்துக்கு ஆவேசம் வந்தால் அவ்வளவுதான், வீட்டு உத்திரம் வரையில் எழும்பிக் குதிப்பாள். பரணியில் ஏறி உட்கார்ந்து கொள்வாள். பத்திரகாளியின் ஆவேசம் என்று ஊரார் கூறுவார்கள். குறி கேட்க ஓடிவருவார்கள். சிங்காரத்துக்கு கற்பூரத்தை எப்படி சமாளிப்பது என்பது பெரிய பிரச்னையாகி விட்டது. ஊர் மக்கள் கூடிவிட்டால் என்ன செய்வது? எல்லோரிடமும் தன் ரகசியத்தை அவள் கூறிவிட்டால் சங்கடமாகி விடும்—அதற்காகக் கதவை இழுத்து சாத்திக்கொண்டு, கற்பூரத்தை நோக்கி கரங்குவித்து, “அம்மா, தாயே! பத்ரகாளி! என்னை மன்னிச்சுடு!” என்று மன்றாடினான்.
“மன்னிக்கிறேன்! அடேய்—அவளை மறந்துடுறியா? மறந்துடுறியா?” என்று கற்பூரம் கத்தினாள். கத்திக்கொண்டே சிறிது நேரங் கழித்து மயங்கிக் கீழே விழுந்தாள்.
சாமி, மலையேறி விட்டது! சிங்காரத்திற்கு சிறிது சங்கடம் விட்டது. வழக்கம்போல அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிவித்தான். கற்பூரம் கண்களைக் கசக்கிக்கொண்டே எதிரேயிருந்த அண்ணனைப் பார்த்தாள். அவள் கண்களிலிருந்து நீர் வழிந்தது. “அழாதே கற்பூரம்!” என்றான் பரிவோடு சிங்காரம்.
“அண்ணா! அந்த வாழாவெட்டியை மறந்துடு. அதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஆகாது. நான் உனக்கு அருமையான பெண்ணு பாத்து வச்சிருக்கேன்!” என்று தழுதழுத்த குரலில் கூறினாள் கற்பூரம்.
“யார் அப்படிப்பட்ட அதிசயப் பெண்ணு?” என்று வெறும் போடு கேட்டான் சிங்காரம்.
“நம்ப பூஞ்சோலையம்மா மகள் பொன்மணி!” என்றாள் பூரிப்போடு கற்பூரம்.
“பொன்னும் வேண்டாம்; மணியும் வேண்டாம்; எனக்கு என் மைனாதான் வேண்டும்!” என்று வேகமாக வெளியே நடந்தான் சிங்காரம்.
“அப்படியா? உன் இஷ்டம்—நான் உயிரோடு இருந்து உன் பெண்டாட்டியைப் பார்க்கமாட்டேன்; அது மாத்திரம் சத்தியம்!” என்று கூச்சலிட்டாள் கற்பூரம்!
சிங்காரம், மன உளைச்சலைத் தணித்துக் கொள்ள கொஞ்சம் மருந்து தேடலாம் என்று பக்கத்துத் தெரு நோக்கி நடந்தான்.
மைனாவுடன் வாழ்க்கை தொடங்குவதற்குத் தன் சகோதரியே முதல் தடையாக முளைத்து விட்டதை நினைத்து நினைத்து வரண்டுபோன நெஞ்சத்தை புளித்துப்போன மதுபானத்தால் நனைத்து ஈரமாக்கி விட முடியும் என்று சிங்காரம் நம்பினான். நிலை மறக்கும் வரையில் நன்றாகக் குடித்தான். போதை தெளிந்த பிறகு மீண்டும் வேதனைகள் மூலை முடுக்குகளிலேயிருந்து தலைநீட்டி மூளையைக் குடையும் என்பதை சிங்காரம் மட்டுமல்ல; மதுபானத்தைக் கவலை தீர்க்கும் மருந்து எனக்கருதும் அனைவருமே மறந்து விடுகிறார்கள்.
பொழுது விடிய விடிய போதையும் குறைந்தது. இரவு தன் தங்கை கற்பூரத்திடம் மைனாவைப் பற்றிக் கூறியதும் அதற்கு அவள் கூறிய பதிலும் அவன் நினைவுக்குத் திரும்பின. மைனாமீது அவன் கொண்டு விட்ட மையல், தங்கையின் தடைகளையெல்லாம் உடைத்தெறியக் கூடிய வலிமை வாய்ந்தது என்ற உணர்ச்சி மேலோங்கி, அவனை நிமிர்ந்து நிற்கச் செய்தது.
எப்படியும் மைனாவுடன் சிற்றூர் குடும்ப வாழ்க்கையை சிங்காரமாக ஆரம்பிக்க வேண்டும். அதற்கு எந்தப் பக்கமிருந்து எதிர்ப்பு வந்தாலும், எதிர்ப்பவர்கள் யாராயிருந்தாலும் கவலைப்படப் போவதில்லை. மைனா அழகான பெண் மாத்திரமல்ல; அன்பும் நல்ல பண்பும் கொண்டவள்—வாழ்க்கையிலே எதிர்பாராத ஏமாற்றத்தால் திடுக்கிட்டுப் போயிருப்பவள். அவளுக்குத் தன் ஒருவனைத் தவிர வேறு ஆதரவே இல்லை. தானும் கைவிட்டு விட்டால் அவள் பைத்தியமாக மாறி விடுவாள். உடனே குடித்தனத்திற்கான ஏற்பாடுகளைக் கவனித்தே தீர வேண்டும் என்றெல்லாம் தீவிரமாக யோசித்து முடிவெடுக்கலானான் சிங்காரம்.
இரவு அவன் நன்றாகக் குடித்திருந்தபோது மைனாவை நினைத்து மயான காண்ட மெட்டிலே காதல் கீதமே பாட ஆரம்பித்துவிட்டான். அவனுடைய கூட்டாளிகள் தடுத்திராவிட்டால் தள்ளாடித் தள்ளாடி நடந்தாவது தப்பித்தவறி வேப்பமரத்தடிப்பக்கம் போயிருப்பான்.
தற்கொலைக்குத் தயாராகி விட்ட மைனாவைப் பார்த்திருப்பான். மைனா, அவன்மீது கொண்ட சந்தேகம் நிவர்த்தியாகியிருக்கும். கோவில் நிர்வாகியின் கோணல் சேட்டையை அவள் கூறியிருப்பாள். சிங்காரத்தின் ஆத்திரம் நிர்வாகியின் மீது திரும்பி அது பல விபரீத விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும். இப்படி எதுவுமே நடக்காமல் அவனை முடக்கிவிட்டது மயக்க உணர்ச்சி! வேம்பில் கரும்பு தொங்குவது போல் அவள் தொங்கி விட்டாள். சிங்காநல்லூரில் பிறந்தாள். சிந்தை மணக்கும் சீரானவாழ்வு எய்தியதாகப் பெருமகிழ்வுகொண்டு வாழ்க்கையின் முதற்படியில் கால் வைத்தாள்.
பாசி பிடித்த அப்படியிலிருந்து வழுக்கித் தலைகுப்புறவிழுந்து மூர்ச்சையானாள். பின் கண்திறந்து பார்க்கும்போது வரண்டுபோன நாவில் ஒரு துளி தேன் விழுந்ததுபோல சிங்காரம் வந்தான். தேன் துளிமீது தேள் விஷம் கொட்டியது போல் கோயில் நிர்வாகி குறுக்கிட்டான். மைனா மனம் அடியோடு பாழ்படுத்தப்பட்டு விட்டாள். அவளுக்கு இனிமேல் உலகத்திலே ஆதரவு அந்த கனமான வேப்பமரக் கிளைதான். அவளுக்கும் உலகத்திற்கும் உள்ள தொடர்பு, அந்த இரண்டு முழக் கயிறோடு முடிந்து விட்டது. அந்த இருட்டில் அவள் எவ்வளவு துணிச்சலாக வேப்பமரத்தின் மீது ஏறினாள்!
அவள் எதற்காகப் பயப்பட வேண்டும்? தவறிக் கீழே விழுந்துவிட்டால் என்ன செய்வது என்று அஞ்சவேண்டுமா என்ன? அப்படி விழுந்தாலும் அவள் விரும்பியபடி உயிர் போய்விடப் போகிறது. ஆகவே மளமளவென்று மரக் கிளையில் தொத்தினாள். கயிற்றை கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்டு மரக்கிளையில் இணைத்தாள். “அப்பா!” என்று விம்மும் குரலில் ஒருமுறை கூவினாள். அந்த ஒரு வார்த்தையில்தான் எவ்வளவு சதை அடங்கியிருக்கிறது. மகளின் சந்தோஷம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அவள் தந்தை எவ்வளவு கஷ்டப்பட்டார்! மகளின் மனதுக்குப் பிடித்த மணவாளனைத் தேர்ந்தெடுத்தோம் என்பதிலே அவருக்கு எவ்வளவு மகிழ்ச்சி! நல்லவேளை; அவர் இந்தக் கொடுமையையெல்லாம் பார்க்காமலே கண்களை மூடிவிட்டார் என்ற ஆறுதல் கலந்த பெருமூச்சு வெளிப்பட்டது. அதுதான் அழகி மைனாவின் கடைசி மூச்சு போலும்!
அடுத்த கணம் கிளையிலிருந்து குதித்து கயிற்றிலே ஊசலாடினாள். சில விநாடிகள் உயிர்த் துடிப்புக்குப் பிறகு மைனா அமைதி பெற்றாள்.
இப்போது அவள் நெஞ்சிலே துயரமில்லை. பீதாம்பர பாகவதரின் உருவம் அவள் கண் எதிரே வந்து மிரட்டுவது இனி முடியாது. கோயில் நிர்வாகியின் பயங்கர உருவத்தை நினைத்து நினைத்துப் பயப்படும் அவள் மனக்கண் அறவே மங்கி விட்டது!
தீச்சட்டி சிங்காரத்தைப் பற்றிய நினைவு அலைகள் எழுவதற்கு இனி இடமே இல்லை. அவள் தன்னை விடுவித்துக் கொண்டாள். ஆனால் சிங்காரத்தைத் துடிக்க வைத்துவிட்டுப் போய்விட்டாள். அவளை விட்டுப் பிரிந்து வந்தது முதல் அவளது பெயரையே மந்திரம்போல் உச்சரித்துக் கொண்டிருந்த அவனுக்கு தலையிலே இடி விழுந்தது போலாயிற்று அந்தக் காட்சி. குடித்தனம் நடத்துவதற்கு அவன் போட்ட திட்டங்கள் எல்லாம் சுக்கல் சுக்கலாக உடைந்து சிதறிவிட்டன.
நினைவிழந்து விழுந்த அவனை அருகாமையில் யார் வீட்டுக்காவது உடனே தூக்கிக் கொண்டு போகும்படி பஞ்சாயத்தார் பரமசிவம் அவசரப்பட்டார். மருத்துவரை அழைக்க ஒரு ஆள் ஓடினான். அதற்குள் சிங்காரத்தை பூஞ்சோலையின் வீட்டுக்குத் தூக்கிக்கொண்டு போய் படுக்க வைத்தார்கள். பூஞ்சோலையம்மாள் பதறிப் போய் அவன் மயக்கம் தீர்வதற்காக ஏதேதோ சிகிச்சைகள் செய்தாள். ஒன்றும் பயன்படவில்லை. அண்ணனுக்கு ஏற்பட்ட ஆபத்தைக் கேள்விப்பட்ட கற்பூரம் பூஞ்சோலை வீட்டுக்கு ஓடினாள். அங்கே சிங்காரம் அசைவற்று வீழ்ந்து கிடக்கும் காட்சியைப் பார்த்ததுதான் தாமதம்; உணர்ச்சி வசப்பட்டு விட்டாள். ஆவேசம் வந்து விட்டது.
அவளைக் கவனிக்கும் வேலை பெரிதாகிவிட்டது, பூஞ்சோலைக்கும் பொன்மணிக்கும்!
“ஆஹோய்! ஏ, மக்களா! இது தெய்வத்தோட குத்தம்! தெய்வத்தோட குத்தம்! இந்த ஜீவனுக்கு ஒரு குறைவும் வராது; பயப்படாதிங்க! பயப்படாதிங்க!” என்று கத்த ஆரம்பித்தாள் கற்பூரம்.
கிழவர் பொன்னையா, “லொக், லொக்” என்று இருமிக் கொண்டே மெதுவாக எழுந்து மாடத்திலுள்ள விபூதிக் கிண்ணத்தை கற்பூரத்திடம் நீட்டினார். கற்பூரம், விபூதியை வாரியிறைத்து சிங்காரத்தின் தலையிலும் இரண்டு மூன்று பலமான அடிகள் கொடுத்து விட்டுப் பிறகு ஆவேசம் ஆயாசமாக மாறவே, அப்படியே ஓர் இடத்தில் உட்கார்ந்து கொண்டாள்.
அதற்குள் மருத்துவர் வந்து விட்டார். மயக்கம் தீர்வதற்கான மருந்துப் புகை சிங்காரத்தின் மூக்கு வழியாகப் பிரயோகிக்கப்பட்டது.
இந்தச் சமயம், கற்பூரத்திற்கும் ஆவேச உணர்ச்சி அறவே தணிந்துவிட்டது. ஆயினும் அவள் அசைவற்று உட்கார்ந்திருந்தாள். அவள் மூளை பலமாக வேலை செய்தது. தனக்கு வரும் ஆவேசத்தை ஒரு நல்லகாரியத்திற்குப் பயன்படுத்தலாம் என்று திட்டமிட்டாள். இதுவரையில் அவளுக்கு ஆவேசம் வருவது அவளையறியாமலேயே வந்துவிடும் திடுக்கிடும் நிகழ்ச்சி. அதிகப் பயங்கரமான செய்தி—இவைகளால் அவள் நிலையிழந்து விடுவாள். சாமியாடத் தொடங்குவாள். இப்போதோ அவள் வேண்டுமென்றே தந்திரமாக சாமியாட முடிவு செய்தாள்.
இரவு தனக்கும் தன் அண்ணனுக்கும் நடைபெற்ற வாக்குவாதம் அவள் ஞாபகத்தில் இருந்தது. அதிலிருந்து அவள், தூக்கு மாட்டிக் கொண்டது அந்த மைனாவாகத்தானிருக்குமென்று யூகித்துக் கொண்டாள். அண்ணனுக்கும் பொன்மணிக்கும் முடிச்சு போடவேண்டும் என்று கற்பூரத்திற்கு ஆசையல்லவா? அதற்கான ஒரு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டுமென்று அவள் தீர்மானித்தாள்.
மருத்துவர் முயற்சியால் சிங்காரம் மெதுவாகக் கண்களைத் திறப்பதற்கும், மறுபடியும் கற்பூரம், “ஹோய்” என்று கத்திக் கொண்டு சாமி ஆட ஆரம்பிப்பதற்கும் சரியாக இருந்தது.
“ஏ மக்களே! கேளுங்க—இந்த ஜீவனுக்கு ஏற்பட்டிருக்கிற ஆபத்து, சாதாரண ஆபத்தல்ல! வேப்ப மரத்தடியிலே தூக்கு மாட்டிக்கிட்டாளே... அவளோட உயிரு பேயா மாறி இந்த ஜீவனைத் தொத்திக்கிட்டுது!...” என்று கற்பூரம் கூச்சல் போட்டாள்.
அதுகேட்ட, சிங்காரம் “ஆமாம்! ஆமாம்! என்னைத்தான் தொத்திகிட்டுது! என் மைனாகிட்ட என்னை விடுங்க! மைனா! மைனா!!” என்று அலறியவாறு எழுந்து ஓட முயன்றான். அவனை மற்றவர்கள் விடவில்லை. பிடித்துப் படுக்க வைத்தார்கள். கற்பூரம் தொடர்ந்தாள்.
“பார்த்தீங்களா, பார்த்தீங்களா, பேய்ச் சேட்டையை! மக்களே! இந்த ஜீவனை வெளியே விடக்கூடாது! பத்து நாளைக்கு இந்த வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது இந்த ஜீவன்! அப்படி வெளியே போனால், இந்த ஜீவன் மேலிருக்கிற பேய், இந்த வீட்ல இருக்கிற யார் மேலாவது தொத்திக் கொள்ளும்... பத்து நாளைக்கு இங்கேயே படுக்க வைத்து மந்திரம்—தந்திரம்—மருத்துவம் செய்து பேயை அணு அணுவாகக் கொல்ல வேண்டும். அப்பத்தான் இந்த ஜீவனும் பிழைக்கும்! வீட்ல இருக்கிறவங்களும் தப்ப முடியும்!”
கற்பூரம், சாமியாடிக் கீழே விழுந்தாள். சாமி, மலையேறி விட்டது ஒரு விதமாக!
பூஞ்சோலைக்குத் திகில் பிடித்துக் கொண்டது. சிங்காரம் வெளியே போனால் வீட்டிலிருப்பவரைப் பேய் பிடித்துக் கொள்ளுமே என்ற பீதி அந்த அம்மாளை ஆட்டிப்படைத்தது.
மலையேறிய கற்பூரமோ, ஒன்றுமறியாதவள் போல பூஞ்சோலையிடம் தாவிச் சென்று, “அய்யோ! எங்க அண்ணனுக்கு என்னா?” என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள்.
சிங்காரம், “மைனா! மைனா!” என்று எழுவதும் சுற்றியிருப்போர் அவனைப் பிடித்துப் படுக்க வைப்பதும் பெரிய வேலையாகி விட்டது.
கற்பூரம், அண்ணனை வீட்டுக்கு அழைத்துப்போக வேண்டுமென்று பிடிவாதம் செய்தாள். பூஞ்சோலை முடியவே முடியாது என்று மறுத்து, குலதெய்வம் கூறியதுபோல பத்து நாளைக்குத் தன் வீட்டிலேயே இருந்து சிங்காரம் சிகிச்சை செய்து கொள்ள வேண்டுமென்று கண்டிப்பாகக் கூறிவிட்டாள்.
கற்பூரத்திற்கு உள்ளுக்குள்ளே மகிழ்ச்சி. அண்ணனும் பொன்மணியும் நெருங்கிப் பழக சந்தர்ப்பம் ஏற்படுமென்றும் அதிலிருந்து இருவரும் ஒருவரையொருவர் நேசித்து திருமணத்திற்குத் தயாராகி விடுவார்கள் என்றும் கற்பூரம் வகுத்த திட்டத்தின் முதற் கட்டத்திற்கு அமோக வெற்றி கிடைத்துவிட்டது. அவளையறியாமல் வரும் ஆவேசம் இதுவரை அவளுக்குப் பெருத்த வேதனையாக இருந்தது. இப்போதோ அதைத் தன் நன்மைக்காகப் பயன்படுத்திக் கொண்டோம் என்ற பூரிப்பு ஏற்பட்டது அவளுக்கு.
சிங்காரம், தன்னை வெளியே விடும்படிக் கெஞ்சினான். அழுதான். புலம்பினான். யாரும் கேட்கவில்லை. மிரட்டிப் பார்த்தான். திட்டினான்—திமிறினான். அதெல்லாம் பேய் சேட்டையென்று தங்கள் முடிவுக்கு ஆதாரமாக்கிக் கொண்டார்கள் சுற்றிருந்தோர்!
சிங்காரத்தின் கோபம், அதிகரித்தது. துள்ளியெழுந்து தடுத்து நிறுத்தியவர்களைத் தாக்கிவிட்டு வெளியே ஓட எத்தனித்தான். அவனுக்குத் தடை பலமாயிற்று. எல்லோருமாகச் சேர்ந்து, அவன் கையையும் காலையும் கட்டிப் போட்டார்கள். ஒரு கயிற்றுக் கட்டிலில் அவன் கிடத்தப்பட்டான். அண்ணனை இம்சிப்பது பார்ப்பதற்குக் கஷ்டமாக இருந்தாலும், அதன் பலனை நினைத்து உள்ளுக்குள்ளே மகிழ்ச்சியடைந்தாள் கற்பூரம். இனி, எதுவும் முடியாது என்று தெரிந்துகொண்ட சிங்காரம், அமைதியாகப் படுத்துவிட்டான். தன் தங்கைமீது வருகிற ஆவேசத்தை முதன் முறையாக இப்போதுதான் அவன் சபித்தான்.
சிங்காரம் அமைதி பெற்றதும் ஒவ்வொருவராகப் புறப்பட்டனர். நாளைக்கு நல்ல மந்திரவாதியாக அழைத்து வந்து சிங்காரத்தின் பேயை ஓட்டி விடலாம் என்று சிலர் உறுதியளித்துச் சென்றனர். கரகமாடிக் கண்ணன் பேய் ஓட்டுவதில் வல்லவன்; அவன் பார்த்தால் பேய் பறந்துவிடும் என்று ஒரு அபிப்பிராயம் கூறப்பட்டது.
அந்தச் சேதி காதிலே விழுந்ததும் சிங்காரம், “ஹா! என்ன சொன்னாய்?” என்று அலறினான், ஆத்திரமாக! கண்ணனுக்கும் தன் வீட்டுக்கும் உள்ள பரம்பரைப் பகையை நினைத்து, சிங்காரம் அப்படிக் கத்தினான்.
ஆனால் மற்றவர்கள், “அது பேயின் குணம்” என்று தீர்மானம் செய்துகொண்டனர். கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கலைந்தது. கற்பூரம் மாத்திரம் அண்ணனுக்குப் பக்கத்தில் முகத்தைத் தொங்கவிட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். பூஞ்சோலையும், பொன்மணியும் திகிலடைந்தவர்களாய்க் காணப்பட்டார்கள். பொன்னையாவுக்கு எல்லாம் புதுமையாய்த் தோன்றின போலும்; “ம்... ஈஸ்வரா!... ஈஸ்வரா!” என்று முனகிக்கொண்டார்.
வீட்டுக்கு வெளியே குழலோசை கேட்டது. சுருளிமலைதான் வருகிறான் என்று பொன்மணி ஆவலோடு எதிர்பார்த்தாள். சுருளிமலை, எதைப்பற்றியும் கவலைப்படாத நிலையில் அநாயாசமாகக் குழலை ஊதியபடி திண்ணையில் உட்கார்ந்தான்.
பொன்மணி ஓடிவந்து, “தம்பீ! என்ன ஆச்சு?” என்று கேட்டாள்.
“என்ன ஆச்சு? செத்தவள் பிழைத்துக் கொண்டாள்!” என்றான் சுருளிமலை.
“ஆ! பிழைத்துக் கொண்டாளா?”—பொன்மணி ஆச்சரியத்தால் வாய் பிளந்தாள்!
கலைஞர் மு. கருணாநிதி · சுருளிமலை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்