அத்தியாயம் 4 · 4 / 26
அத்தியாயம் 4
Chapter 4
மூல ஸ்கேன் 37–44
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
4
“கல்யாணத்துக்கு மறு நாளே வீட்டில் ஏற்பட்ட அசம்பாவிதமான சாவுச் செய்தியால் உறவினர்கள் எல்லாம் அங்கலாய்த்துக் கொண்டனர். மாப்பிள்ளை குடும்பத்துக்கு ஆகாத ஒன்று நடந்து விட்டதாக ஒருவருக்கொருவர் முணு முணுத்துக் கொண்டனர். கல்யாணத்துக்கு வந்திருந்த என் சொந்தக்காரர்கள் சிலரைத் தவிர மற்றயாவருமே என்னைச் சுற்று வெறுப்போடுதான் பார்த்தார்கள். அப்பாவின் பிணத்தின் மீது விழுந்து அலறினேன். என் சோகம் இரட்டிப்புப் பங்காக மாறுவதற்குக் காரணம் இருந்ததைத்தான் நீங்கள் அறிவீர்களே, இப்போது! நல்ல வேளையாக நான் திக்குத் தெரியாத காட்டில் அகப்பட்டுக்கொண்டு திகைப்பதை என் தந்தை அறிந்து வேதனைப்படாமலேயே போய்விட்டார் என்ற திருப்தி ஏற்பட்டது எனக்கு. சாயங்காலத்திற்குள் அப்பாவின் தகனக் கிரியை எல்லாம் முடிந்துவிட்டது.
“இருள் வேகமாகப் பரவிக்கொண்டிருந்தது. என் வாழ்க்கையில் அதற்கு முன்பே இருள் மூடிக்கொண்டது. நானாகத் தேடிக்கொண்ட வேதனையை நினைத்து நினைத்து அழுதேன். என் கணவர் உட்பட்ட அனைவருமே அப்பாவை நினைத்துத்தான் அழுது புலம்புகிறேன் என்று எண்ணிக்கொண்டு ஆறுதல் சொல்ல ஆரம்பித்தார்கள். வீட்டில் துக்கமெல்லாம் கொண்டாடி பத்து நாட்கள் கழித்த பிறகு மறுபடியும் என் கணவரைத்<!-- verified source join: scan 37→38 --> தனியறையில் சந்திக்க வேண்டிய பயங்கரமான நேரம் நிச்சயம் வருமே—அய்யோ; அதை நினைத்தாலே எனக்குத் தலைசுற்ற ஆரம்பித்துவிட்டது. பத்து நாள் கழித்துத்தானே அந்த நெருக்கடி வரப்போகிறது; அதுவரையில் அவர் வீட்டிலேயே இருந்து சமாளித்துப் பார்ப்போமே—என்று முதலில் நினைத்தேன். ஆனால் வேறொரு பயம் வந்து என்னைச் சூழ்ந்து கொண்டது. அந்தப் பத்து நாளில் அவர் என்னோடு பழகு வழியில் என்னிடம் மிகுந்த அன்பையும் பிரியத்தையும் காட்டி, ஒரு கணவனிடத்தில் ஒரு பெண்ணுக்கு ஏற்படுகிற பாசம் இல்லாவிட்டாலும், ஒரு வயதான பெரியவரிடத்தில், தகப்பனிடத்தில், பாட்டனிடத்தில் ஏற்படுகிற பற்றோ பாசமோ எனக்கு அவர்மீது ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது என்று சந்தேகப்பட்டேன். மிகவும் பயந்தேன்.
நான் நினைத்தது போலவே அவர் என்னிடம் தந்தை இறந்ததுபற்றிக் கவலைப்படாதேயென்று ஆறுதல் சொல்ல முன்வந்தார். நாடகத்திற்காக மனப்பாடம் செய்திருப்பாரோ என்னவோ தெரியவில்லை; ‘ஆண்டாண்டுதோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ?’ என்று பாடலெல்லாம் சொல்லிக்காட்டி எனக்குத் தேறுதல் கூறினார்.
நான் முடிவு செய்துவிட்டேன்; இனி ஒருக்கணமும் அவரோடு வாழ்வதில்லையென்று! இந்த முடிவு பெரிய மனப் போராட்டத்திற்குப் பிறகு தான் தோன்றியது என்பதையும் நீங்கள் உணரவேண்டும்.
“அவர் உன் கணவராயிற்றே—அவருக்குத் துரோகம் செய்யலாமா?” என உபதேசம் செய்தது மனம். பிறகு அதே மனம், செய்தால் என்ன? அவர்மட்டும் வெளி வேஷத்தால் உன்னை மயக்கித் துரோகம் செய்யவில்லையா? என்று சமாதானமும் கூறியது.
“அடிமுட்டாளே! அவரா உன்னிடம் வந்து என்னைக் கல்யாணம் செய்துகொள் என்று கேட்டார். நீதானே தேடிப் போனாய்! இப்போது அவரைக் குற்றம் சுமத்துவது முறையா?” என்ற ஒரு கேள்வி என் நெஞ்சில் தோன்றும். உடனே; அதற்குப் பதிலும் உதயமாகிவிடும்.
“தேடிப்போனது உண்மை என்றாலும், அந்தக் கிழவர், தான் யார் என்ற சுய உருவத்தைக் காட்டியிருப்பாரேயானால் இப்படி ஒரு ஏமாற்றமும், ஏக்கமும் பிறந்திருக்காதல்லவா? அதனால் அவரே குற்றவாளி!
“ஆமாம்; இதுதான் நானே வழக்காடி, நானே வழங்கிக் கொண்ட தீர்ப்பு! தீர்ப்பின்படி நான் அவரைவிட்டு உடனடியாக வெளியேறிவிடவேண்டும்.
“அன்றிரவே என் பயணத்திற்கு ஆயத்தமாகி விட்டேன். எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவர் அறைக்குள்ளே படுத்திருந்தார். எனக்கு எப்படித் தூக்கம் வரும்? மெதுவாக எழுந்தேன். என் தந்தையின் பிணம் காலையில் வைக்கப்பட்டிருந்த கூடத்தில் மினுக் மினுக் என எரிந்து கொண்டிருந்த விளக்கிற்கு ஒரு கும்பிடு போட்டேன். கொல்லைப்புறக் கதவைத் திறந்துகொண்டு வெளியே புறப்பட்டேன். அது வரையில் கதவண்டை உட்கார்ந்து வெளியே போவதற்கு வழி பார்த்திருந்த இந்தப் பூனையும் என் பின்னால் வெளியே வந்தது. தனியாகப் போவானேன் என்று என் கணவர் வீட்டுச் சொத்தான பூனையையும் தூக்கிக்கொண்டேன்.
“அடுத்த கேள்வி, எங்கே போவது என்று! சிங்காநல்லூருக்கே போய் விடுவோம் என்று முதலில் நினைத்தேன். ஊர் வாயை மூட முடியாதே என்ற அச்சம்—கணவர் கண்டு பிடித்து விடுவாரே என்ற திகில்—அதனால் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். எங்கெங்கோ அலைந்தேன். கடைசியில் இந்த ஊர் வந்து சேர்ந்தேன். குடியிருப்பதற்குக் குறைந்த வாடகையில் இந்த வீடும் கிடைத்தது. கையிலிருந்த கொஞ்சம் பணம்—போட்டிருந்த நகை நட்டுகள் விற்றதில் கிடைத்த பணம்—அதை வைத்துக்கொண்டு வயிறு கழுவி வருகிறேன். போதுமா; இன்னும் சொல்லவேண்டுமா என் கதையை?” என்று அழுதவாறு மைனா முடித்தாள்.
“இனிமேல் உன் கதையை நான் சொல்லுகிறேன்!” சிங்காரம் கனைத்துக்கொண்டு ஆரம்பித்தான்.<!-- verified source join: scan 39→40 --> என்ன சொல்லப் போகிறான் என்று அவளும் ஆவலோடு எதிர்பார்த்தாள்.
“மைனா என்ற பெண், நாடகக்காரனின் வெளி வேஷத்திலே ஏமாந்து, அவனையே கல்யாணம் செய்து கொண்டு, அவனது சுயரூபம் தெரிந்தபிறகு அவனை விட்டு ஓடிவந்து விட்டாள். அப்படி ஓடி வந்தவள் ஒருநாள் தீச்சட்டி சிங்காரம் என்ற ஒரு வாலிபனை சந்திக்க நேரிட்டது. இருவருடைய கண்களும் காதல் பாஷை பேசிக்கொண்டன. சந்தித்த அதே நாள் இரவு சிங்காரம் அவளுடைய வீட்டுக்குத் தைரியமாக வந்தான். அவள் அவனிடம் தன் வாழ்க்கை முழுவதையும் சொன்னாள். அதைக் கேட்ட சிங்காரம் மனம் உருகி, நெஞ்சம் இளகி, ‘கவலைப்படாதே பெண்ணே! உன்னை நான் வைத்துக்காப்பாற்றுகிறேன்!’ என்று கையடித்துக் கொடுத்தான். அவளும் சம்மதித்தாள். பிறகு இருவரும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்த ஆரம்பித்தார்கள்.”
சிங்காரம், இதுபோலக் கதையைக் கூறி அவள் முகத்தைப் பார்த்தான். மைனாவின் கன்னங்களில் சிவப்பேறியது. தலை தானாகக் குனிந்து கொண்டது. அது, சம்மதத்தின் அறிகுறி எனப் புரிந்து கொண்ட சிங்காரம், அவள் தோள்மீது தன் முகத்தைப் பதித்தான்.
அவளும் அவன் முகத்தைக் கையால் வருடியவாறு, “என்னை மனைவியாகவே ஏற்றுக்கொண்டு எப்போதும் காப்பாற்றுவீர்களா?” என்று கண் கலங்கக் கேட்டாள்.
சிங்காரம், தழுதழுத்த குரலில், “கடவுள்மேல் சத்தியமாக, உன்னை மறக்கமாட்டேன்!” என்று உறுதி கொடுத்து அவளை அப்படியே அள்ளி அணைத்துக் கொண்டான்.
அவள், அவன் பிடியிலேயிருந்து விடுபட்டு, தெருக் கதவின் தாழ்ப்பாளைச் சரிசெய்து சாத்திவிட்டு, மீண்டும் அவனிடம் வந்தாள். பூனை மெதுவாக அடுப்படிக்குச் சென்று அந்தக் கதகதப்பில் படுத்துக் கொண்டது.
மைனா, தன்னை சிங்காரத்திற்கு ஒப்படைத்துவிட்ட பூரிப்பில் மயங்கிக் கிடந்தாள். தன் வாழ்வில் மறுமலர்ச்சி தோன்றி விட்டதாக இன்பக் கனவு கண்டாள். சிங்காரத்தின் வாயிலிருந்து லேசாக வீசிக்கொண்டிருந்த மதுவாடை மாத்திரம் அவளுக்கு அவ்வளவு பிடித்தமானதாக இல்லை. அதையும் அவனிடம் அவள் சொல்லி விட்டாள்.
“குடிகாரன் என்று பயப்படாதே! பொழுது விடிந்தால் இந்தப் பேச்சு மறந்துவிடும் என்றும் சந்தேகப்படாதே! சாராயத்தைவிட உன்னை நான் அதிகமாக நேசிக்கிறேன். எந்தக் குடிகாரனும் இது போலச் சொல்லமாட்டான். அதனால் என்னை நம்பு! குடித்துப் பழகிவிட்ட என்னை இனிமேல் மாற்றவே முடியாது!” என்று மனந்திறந்து சிங்காரம் பேசி, அவளையும் ஒப்புக் கொள்ளச் செய்துவிட்டான்.
“ஏன் மைனா, முதலில்தான் வேஷம் போட்டவனைப் பார்த்து அர்ச்சுன ராஜன் என்று நினைத்து ஏமாந்துபோனாய்—இப்போதும் என்னைத் தீச்சட்டி ஆட்டத்தில் பார்த்ததும் என்மீது ஆசைகொண்டு விட்டாயே; இதிலும் ஏமாந்திருந்தால் என்ன செய்வாய்?”
சிங்காரத்தின் இந்தக் குறும்புத்தனமான கேள்விக்கு மைனா தன் உதடுகளால் பதில் சொன்னாள். ஆனால் அந்தப் பதிலில் வார்த்தைகள் உதிரவில்லை. ஒலி மட்டுமே எழுந்தது.
தீச்சட்டியின் ஜூவாலையிலேயே கிடந்து வெந்துகொண்டிருந்த சிங்காரத்துக்கு மகிழ்ச்சியூட்ட ஒரு குளிர்ந்த மாந்தோப்பு கிடைத்து விட்டது. மைனாவுக்கும் ஒரு ஆதரவு கிடைத்து விட்டது. அவள் உள்ளத்தில் கப்பிக் கொண்டிருந்த அந்தகாரம் விலகி விட்டது. ஆனந்தத்தால் துள்ளியது நெஞ்சம். மறுநாள் காலையிலே சிங்காரம் சிற்றூருக்குப் புறப்பட வேண்டும். போய் இரண்டு நாளில் திரும்பி வந்து, மைனாவையும் அழைத்துக் கொண்டு சிற்றூரிலேயே குடித்தனத்தைத் துவங்க வேண்டும் என்று திட்டம் தீட்டப்பட்டது. பிரியா விடைபெற்று, சிங்காரம் விடியற்காலையில் அவளை விட்டுப் பிரிந்து கோயில் நிர்வாகி தனக்கு ஏற்பாடு செய்திருந்த வீட்டுக்குப் புறப்பட்டான்.
ஆயிரமாயிரம் இன்ப நினைவுகள் உள்ளத்திலே அலைமோத மைனா, வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள். படுத்திருந்த பாயைத் தொட்டுக் கும்பிட்டு, தலையணைக்கு முத்தமீந்து, இரண்டையும் சுருட்டி வைத்தாள். அடுப்படியில் படுத்திருந்த பூனைக் குட்டியைத் தூக்கி அதன் மெல்லிய ரோமத்தைத் தடவித் தடவி மார்போடும் முகத்தோடும் அதை அணைத்துக்கொண்டு குதியாட்டம் போட்டாள். வீட்டு வாசலுக்குத் தண்ணீர் தெளித்துப் பெருக்கினாள். என்றுமில்லாதவாறு பெரியதும், அழகியதுமான கோலமொன்று போடவேண்டும் என்ற திட்டத்தோடு கோலமாக் கிண்ணத்தோடு தெரு வாசலை முற்றுகையிட்டாள். அவள் வாசலில் வைத்த ஒவ்வொரு புள்ளியிலும் சிங்காரத்தின் கம்பீரமான முகத்தைக் கண்டாள். கோலத்திற்கென வளைந்து வளைந்து செல்லும் கோடுகளில் எல்லாம் அவள், தன் வாழ்க்கையின் வளைவை எண்ணுவாள். வளைந்த கோடுகள் இணையும் இடத்தில் எல்லாம் தானும் சிங்காரமும் இணைந்ததை எண்ணி மகிழ்வாள். பெரியதும், அழகு செறிந்ததுமான கோலம் போட்டு முடிந்தது. ஊருக்குப் போகும்போது சிங்காரம் இந்தப் பாதையில்தானே போவார்; போகும்போது கோலத்தைப் பார்ப்பார்; அப்படிப் பார்க்கும்போது இதையும் பார்க்கட்டும் என்று, தீச்சட்டிபோல சிறுகோலம் ஒன்று போட்டு, தீயின்மீது ஒரு மலர் தெரிவது போலவும் சித்தரித்தாள். அவளுக்கே அது புதுமையாகவும் அற்புதமாகவும் தெரிந்தது. கோலத்தை திருப்திக்கு ஏற்றவாறு முடித்து விட்டோம் என்ற ஆனந்தத்தில் கோலமாக் கிண்ணத்தோடு தலைநிமிர்ந்தாள்.
நிமிர்ந்தவள் திடுக்கிட்டாள். கண்கள் சுழன்றன அவளுக்கு—அவளையே அவளால் நம்பமுடியவில்லை. எதிரே பீதாம்பர பாகவதர் அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டு நின்றார். மைனா, ஒன்றும் பேசவில்லை. பேசவும் நா எழவில்லை. கோலமாக் கிண்ணம் அவளை அறியாமல் கீழே விழுந்து மாவு வாசலெங்கும் சிதறி, கோலத்தை அலங்கோலமாக்கியது. அவள், வீட்டுக்குள் போய் விட்டாள். பீதாம்பரமும் அவளைத் தொடர்ந்து உள்ளே போனார். அவள் உள்ளே சென்று அப்படியே அசைவற்று நின்றாள். அவள் கண்கள் கலங்கி<!-- verified source join: scan 42→43 --> யிருந்தன. அதை பீதாம்பரம் கவனிக்கத் தவறவில்லை. அவள் சொல்லாமலே பீதாம்பரம் வீட்டுக்குள் உட்கார்ந்தார். அவரைப் பார்த்த பூனை கத்திக்கொண்டு அவரிடம் ஓடிவந்தது.
“அட, நீயும் இங்கதான் இருக்கியா?...உனக்குக் கூடவா என்னைப் பிடிக்கவில்லை? என் வீட்டு சோற்றை எவ்வளவு நாள் தின்றாய்; திடீரென்று புது சிநேகிதம் கிடைத்ததும் வந்து விட்டாயா?” என்று பூனையை இழுத்துத் தடவிக்கொடுத்தார் பீதாம்பரம்.
“உட்காரேன் மைனா—ஏன் நிற்கிறாய்?” என்று அன்போடு அவளை உட்காரச் சொன்னார். அவள் உட்காரவில்லை.
“காலங்காத்தாலே ரொம்ப தூரம் நடந்தது பசி தாங்க முடியவில்லை...எதாவது இருக்கிறதா? போடுகிறாயா?” என்று மிகச் சாதாரணமாய் கேட்டார் அவர்.
மைனாவால், பீதாம்பரத்தின் போக்கைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.
“சரி; உனக்கேன் சிரமம்—இருந்தால் நானே போட்டுச் சாப்பிடுகிறேன்!” எனக் கூறியவாறு பீதாம்பரம் அடுக்களையில் உள்ள பானையிலேயிருந்து பழைய சோற்றை எடுத்துத் தட்டிலே போட்டுக்கொண்டு மைனாவுக்கு எதிரே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தார். அவரோடு, அதே தட்டில் பூனையும் சாப்பிடத் தொடங்கியது.
மைனாவுக்கு நிற்க முடியவில்லை. உடலெங்கும் நடுங்கியது. ஆயினும் வலுவில் மன உறுதியை வரவழைத்துக் கொண்டு சமாளித்துக்கொள்ள முயன்றாள்.
“உப்பு இருக்கிறதா?” என்றார், பீதாம்பரம்!
உப்புக் கிண்ணத்தை மைனாவே எடுத்து அவருக்கு அருகில் வைத்தாள். “கொஞ்சம் போடு உன் கையாலேயே; அளவாக!” என்று பீதாம்பரம் கோரிக்கைவிடவே, அவளும் பழைய சோற்றில் உப்பைப்போடத் தொடங்கி, கிண்ணத்தையே கைதவறிக் கவிழ்த்து விட்டாள். பீதாம்பரம் அதுகண்டு, “கல கல” வென நகைத்தார்.
கலைஞர் மு. கருணாநிதி · சுருளிமலை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்