அத்தியாயம் 3 · 3 / 26
அத்தியாயம் 3
Chapter 3
மூல ஸ்கேன் 29–37
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
3
மைனாவின் கூச்சலைக் கேட்டு சிங்காரம் சிறிது திடுக்கிட்டானாயினும் வெளியே ஓடி விட முயலாமல் புதிய தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அப்படியே நின்று விட்டான்.
மைனாவும் அவனை உற்றுப் பார்த்தாள். “தெரியவில்லையா யாரென்று? விளக்கை எடுத்து முகத்தைப் பாரேன்!” என்று சாவதானமாகச் சொன்னான் சிங்காரம். வீட்டுக்குள்ளே நுழைந்த ஒரு ஆடவன், அகப்பட்டுக் கொண்ட பிறகும், நிதானமாகவும், துணிவாகவும் பேசுவது அவளுக்குப் புதிராகத் தோன்றியது.
மாடத்தில் மங்கலாக எரிந்து கொண்டிருந்த விளக்கை எடுத்து அவன் முகத்துக்கு நேரே பிடித்தாள். அவள் கரம் அவளையறியாமல் நடுங்க ஆரம்பித்தது. திடீரென அவள் கண்கள் தரையை நோக்கிக் கவிழ்ந்தன. இருதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. இரவு நேரத்தில் யாரோ ஒருவன்—கொலைகாரனோ, கொள்ளைக்காரனோ திடீரென்று வீட்டுக்குள் புகுந்து விட்டான் என்ற அதிர்ச்சியிலேகூட அவளுக்கு ஏற்படாத நடுங்கியது. அவள் நிலையை சிங்காரம் புரிந்து கொண்டான். தன்னுடைய திடும் பிரவேசத்தால் ஆபத்து ஏதும் நிகழ்ந்து விடாது என்ற நம்பிக்கை பிறந்து விட்டது அவனுக்கு.
மெதுவாக, “மைனா!” என்றான்.
“என் பெயர் எப்படித் தெரியும் உங்களுக்கு?”—அவள் இது போலக் கேட்கவில்லை. வியப்பை விழிகளில் நிறைத்துக் கொண்டு அவனை ஒருமுறை பார்த்தாள்.
“என்மேல் கோபமா?” என்று அவளிடம் நெருங்கினான். அவள் அவனை விட்டு சுவற்றுப் பக்கம் போனாள். மனித ஜாதியின் மர்மங்களைப் புரிந்து கொள்ளாத பூனைக் குட்டி, ஒளியுமிழும் கண்களால் அவர்களை மாறி மாறிப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தது. சிங்காரம் இன்னும் நெருங்கினான். மைனாவின் கண்களிலேயிருந்து நீர் பெருகிற்று.
“ஏன் அழுகிறாய்?” என்ற வாறு சிங்காரம் அவள் கரத்தைப் பிடித்தான். அவள் விக்கி விக்கி அழ ஆரம்பித்து விட்டாள். அந்த அழுகை, சிங்காரம் இன்னும் அதிகமாக அவளைத் தொட்டு ஆறுதல் கூறுவதற்கான வாய்ப்பை அளித்தது.
“அழாதே! அழாதே!... இப்படி உட்காரு!”
சிங்காரம் அவன் தோளில் அணைத்தவாறு அவளைக் கீழே உட்காரவைத்தான். அவளும் தலைகுனிந்தவாறு உட்கார்ந்து கொண்டாள். நெளி நெளியாகச் சுருண்டிருக்கும் அவளது கருங் கூந்தலைக் கையால் கோதிய சிங்காரத்திற்கு, அந்த விரல்களின் வழியாக மின்சாரம் பாய்ந்து தன்னைப் பிரக்ஞை இழக்கப் செய்வது போன்ற உணர்ச்சி பீறிட்டுக் கிளம்பியது. ஆனால் அந்த நிலையில் அவன் மிருகமாக மாறிவிட விருப்பவில்லை.
சிங்காரத்தின் தோற்றம் — பேச்சு — நடை, உடை, பாவனை — வாயிலிருந்து வீசும் கள் வாடை இவைகளைக் கவனிப்பவர்களுக்கு சிங்காரம் ஓர் அழகான பெண்ணின் பக்கத்தில் மனிதப் பண்போடு அமர்ந்திருந்தான் என்பது நம்ப முடியாத சேதியாகத்தானிருக்கும். அழகிய உருவும் — அந்தஸ்து ஆஸ்தி மிகுந்த நிலையும் — பார்ப்பதற்குப் பசுவின் தோற்றமும் உடைய எத்தனையோ பேர் பகல் நேரத்துப் பத்தினிகளாகவே தான் இருக்கிறார்கள் என்பதை ஆடவர் பெண்டிர் இரு சாராரிலும் சகஜமாகக் காண முடிகிறது. இதை யாரும் மறுக்க முடியாதது போலவே பார்வைக்குப் புலிபோல் காட்சியளிக்கும் சிங்காரமும் இயற்கையாகவே இழிகுணமற்றவன் என்பதையும் யாரும் மறுத்துவிட இயலாது.
அவள் அழுவதை நிறுத்தவில்லை. அவளை எப்படியாவது பேச வைக்க வேண்டுமென்று சிங்காரம் தீர்மானித்துக் கொண்டான்.
“கொஞ்சம் தண்ணி வேணும்!”
மைனா, எழுந்து மண்குடத்திலேயிருந்த தண்ணீரை ஒரு குவளையில் பிடித்து வந்து அவனிடம் கொடுத்தாள். கொடுக்கும்போதும் அவள் கைகள் நடுங்கின.
குவளையை உதட்டில் வைத்து நீர் பருகிய சிங்காரம், “தூ தூ! ....அப்பா! அப்பா!” என்று சப்தமிட்டு தண்ணீரை யெல்லாம் கீழே துப்பி விட்டு, வாயைத் துணி கொண்டு பர பரப்போடு துடைத்துக்கொண்டான்.
மைனவுக்கு விஷயம் விளங்கிவிட்டது. உப்பு வைத்திருந்த படியைக் குவளையென்று நினைத்து அதிலே தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்து விட்டாள். பட படப்பிலே நடந்துவிட்ட தவறு! “மன்னிச்சுக்குங்க! வாய்கொப்பளிக்க வேற தண்ணி வேணுமா? என்று புன்முறுவலோடும்—அந்தப் புன்முறுவலில் உடனே மறைக்கும் சோகப் பார்வையோடும் கேட்ட மைனவை இறுகத் தழுவிக்கொள்ளத் துடித்தது சிங்காரத்தின் நெஞ்சம். ஆயினும் அவள் கழுத்திலே மின்னுகிற தாலி, அவன் பாய்ச்சலைத் தடுத்திடும் உயர்ந்த வேலியாகக் குறுக்கே நின்றது.
“தண்ணி வேண்டாம்—இப்போது எனக்கு வேண்டிய தெல்லாம் நீ ஏன் அழுகிறே என்ற காரணந்தான்!” என்று சிங்காரம் தழுதழுத்த குரலில் அவள் முகத்தைப் பார்த்தவாறு பதில் கூறினன்.
அவ்வளவு நேரத்துக்குப் பிறகு, தொடர்பில்லாத கேள்வியாக — அவளுக்கே தேவையற்றது என்று தெரிந்தும்கூட — ஒரு கேள்வி பிறந்தது; “நீங்க ஏன் இங்க வந்தீங்க?” என்று!
“தீச்சட்டி ஆடும்போது நீ ஏன் என்னை அப்படிப் பார்த்தே? அதனால்தான் வந்தேன்?”
“தயவு செஞ்சு போயிடுங்க!”
“ஏன் மைனா — என்னைப் போகச் சொல்றே?”
“உங்க காலைப்பிடிச்சு கெஞ்சுகிறேன்; தயவு செஞ்சு போயிடுங்க!”
“போகமாட்டேன். உன்னைப் பத்தி எனக்கு விவரம் தெரிஞ்சாகணும். என் ஆசையை நிறைவேத்திட்டுப் போகத்தான் வந்திருக்கேன்னு நினைக்காதே! முதல்ல நான் வந்தது உன்னைப் பார்க்கணும் என்கிற ஆவலாலே! இப்ப, உன்னைப் பார்த்த பிறகு நீ யாரு; ஏன் இப்படி அழுது அழுது உருகிப்போறே—அப்படிங்கிற விஷயமெல்லாம் எனக்குத் தெரியணும்; மைனா—தெரியணும்!”
“என்னைப்பத்தி நீங்கதெரிஞ்சு என்ன பண்ணப்போறீங்க?”
“உனக்கு உதவி செய்ய முடியாத அளவுக்கு—அப்படி சக்தியற்றவன்னு என்னை நினைக்கிறியா!”
“அய்யோ—நாம் ரெண்டுபேரும் ஏன் சந்திச்சோம்? அட தெய்வமே—என் வாழ்க்கையை குட்டிச் சுவராக்கினது போதாதா? இப்ப இது வேற விபரீதமா?”
“மைனா! உன் வாழ்க்கை குட்டிச்சுவராகி விட்டதா?... குட்டிச்சுவருக்குக் காவலாக ஒரு கழுதைபோல நான் இருக்கிறேன்—கவலைப்படாமல் எங்கிட்டே விஷயத்தைச் சொல்லு!”
“நான் கல்யாணமானவள்!”
“தெரியும் எனக்கு!”
“தெரியுமா? எப்படி?”
“உன் கழுத்திலே இருக்கிற தாலியை முன்னுலேயே பாத்துட்டேன்!”
“ஆ—தாலியைப் பார்த்துட்டீங்களா?”
“ஏன்—புருஷன் கண்ணுக்குத் தவிர வேறயாரு கண்ணுக்கும் தெரியாத சந்திரமதி தாலியா உன் தாலி?”
வழிந்த கண்ணீரால் நனைந்திருந்த அவள் உதடுகளில் குறுஞ் சிரிப்பு மின்னி மறைந்தது.
“தாலியைப் பார்த்த பிறகுமா என்னைத் தொட்டீங்க?”
“தாலி போட்டுக் கொண்ட பிறகு நீ மாத்திரம் என்னை உயிரை வாங்குகிற மாதிரிப் பார்க்கலாம்; நான் மாத்திரம் உன்னைத் தொடக்கூடாதோ?”
“என்னை நானே மறந்து தப்பு பண்ணி விட்டேன். மன்னிச்சுடுங்க. தயவு செஞ்சிபோயிடுங்க. என்னைக் காப்பாத்துங்க!”
“உன்னை ஒரு தொந்தரவும் செய்றது இல்ல—கடவுள் மேல் சத்தியம்! இதோ, ஒதுங்கி உட்கார்ந்துக்கிறேன். நீ விஷயத்தைச் சொல்லு; உன் புருஷன் இப்ப எங்கே?”
“உயிரோடதான் இருக்கார்!”
“அது தெரியுது; நீ மஞ்சள் குங்குமத்தோட இருக்கும்போதே அது தெரியுது! எந்த ஊர்ல இருக்காரு?”
“கோயம்புத்தூருக்குப் பக்கத்திலே பேரூர்ல இருக்காரு!”
“அப்புறம் ஏன் அவரை விட்டுட்டு இப்படி வந்தே?”
“தெய்வம் என் தலையிலே அப்படி எழுதியிருக்கு; அதனால வந்தேன்!”
“புருஷனுக்கும் உனக்கும் ஏதாவது சண்டையா?”
“அய்யோ—தங்கமானவர் அவரு! அவருக்கும் எனக்கும் சண்டை ஏன் வரப்போகுது!”
“தங்கமான புருஷன்னு நீயே சொல்றே—அப்புறம் ஏன் இப்படி ஆச்சு? ஓகோ! மாமியாருக்கும் உனக்கும் ஒத்துக் கொள்ள வில்லையோ? அடாடாடா!......இந்த மாமியாருங்க மருமகள்களேப் படுத்துற பாடு...ரொம்பக் கொடுமை! தானும் ஒரு காலத்திலே மருமகளாயிருந்தோம்கிறதையே மறந்துடறாங்க! உன் மாமியாரும் அப்படித்தானு மைனா?”
“அய்யோ, எனக்கு மாமியாரே கிடையாதே!”
“நாத்தனாரு யாராவது...?”
“அதுவும் இல்லைங்க!”
“அப்புறம் என்னு தகராறு? புருஷன், இந்தக் கண்ணகியை விட்டுட்டு யாராவது மாதவி வீட்டுக்கு......”<!-- verified source join: scan 33→34 --> “அதெல்லாமில்லே......அவர் அப்படி யெல்லாம் போகக் கூடியவரல்ல!”
“வேறு என்னுதான் காரணம்? நீ சொல்லித்தான் ஆக வேண்டும்!”
“அய்யோ—அந்தப் பேச்சை அதோட நிறுத்துங்க...நான் அதை நினைச்சு நினைச்சு அழுது போதும்—அந்தக் கதையை மறுபடியும் சொல்லி, ரெண்டுபேரும் சேர்ந்து அழவேண்டாம்!”
மைனவிடமிருந்து எப்படியும் அவளது சோகக் கதையின் மர்மத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்று சிங்காரம் துடியாய்த் துடித்தான். வேறு வழியின்றி அவளும் சொல்ல ஆரம்பித்தாள்; இடையிடையே விம்மி விம்மி அழுதவாறு;
“நான் பிறந்தது சிங்காநல்லூர்—பஞ்சாலைத் தொழிலாளி என் அப்பா—ஒரே பெண் அவருக்கு நான். ஆலை வேலையில் கிடைக்கும் ஊதியத்தைக்கொண்டு நானும் அப்பாவும் வயிறு கழுவி வந்தோம். எனக்கோ வயது பதினுறைத் தாண்டி விட்டது. ஆண் பிள்ளைகளின் பார்வை என்மீது விழத் துவங்கியது. காசு நோயினால் கஷ்டப்படும் அப்பாவுக்கு, எப்படியாவது அவர் கண் மூடுவதற்குள் எனக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிப் பார்த்துவிட வேண்டுமென்று ஒரே ஆசை அடித்துக் கொண்டது.
“நானும் கல்யாணம் செய்து கொள்ளவேணும் என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன். அப்பா எங்கெங்கோ மாப்பிள்ளை பார்த்தார். அவர்களே யெல்லாம் எனக்குப் பிடிக்கவில்லை. கடைசியில் எனக்குப் பிடித்தமான மாப்பிள்ளையை நானே தேர்ந்தெடுத்து அப்பாவிடம் சொன்னேன். அப்பாவும் என் இஷ்டத்துக்கு விரோதமாக எதுவும் சொல்லாமல் சரியென்று தலையசைத்தார். என் கணவரை எங்கே எப்படித் தேர்ந்தெடுத்தேன் என்று சொல்ல வில்லையே...ஒரு நாள் பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் ஆண்டுவிழா அதிவிமரிசையாக நடத்தினார்கள். அந்தக் கொண்டாட்டத்தில் நாடகமொன்றும் ஏற்பாடு பண்ணியிருந்தார்கள். “அல்லி அர்ச்சுன” நாடகம்! அதில்<!-- verified source join: scan 34→35 --> அர்ச்சுனனை நடித்தவரின் நடிப்பு அபாரமாக இருந்தது. அவர் மேடைக்கு வந்தாலே ஒரு களா! ஒரே கரகோஷம்! சுருள் கம்பிபோல வளர்ந்து அடர்ந்து காதுகளை மறைத்துக் கொண்டு கழுத்தைத் தொடுகிற அழகான கேசம்! முத்துக்கள் எடுத்து வரிசையாக அடுக்கி வைத்ததுபோல பற்கள்! செக்கச் சிவந்த மேனி! கச்சிதமான மீசை!—கம்பீரமான பார்வை! அவர் அல்லியைக் கொள்ள கொண்டதாகத்தான் கதை! ஆனால் அவர் என்னை அப்படியே கொள்ள கொண்டு விட்டதாக எண்ணினேன்.
“நாடகம் முடிந்தது. வீட்டுக்கு வந்தேன். இரவெல்லாம் தூக்கம் வரவில்லை. ஒரே ‘அல்லி அர்ச்சுன’ கனவுதான்! மறுநாள் அப்பாவிடம் கொஞ்சமும் வெட்கமின்றி நான் அந்த அர்ச்சுனனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று முடிவாகக் கூறிவிட்டேன். அப்பா, அந்த நடிகரைப்பற்றி விசாரித்தார். அவர் பெயர் ராஜபார்ட் பீதாம்பர பாகவதர்! “மகளே! நான் போய் பீதாம்பரத்தைப் பார்த்து வருகிறேன். கல்யாணம் முடிகிற வரையில் விஷயம் ரகசியமாக இருக்கட்டும். ஒரு வேளை அந்த பாகவதர் சம்மதிக்கவில்லை என்றால் ஊரிலே நம்மைப்பற்றி கிண்டலாகப் பேசுவார்கள்!” என்று கூறிவிட்டு அப்பா புறப்பட்டார். அதற்குள் நான் என் அர்ச்சுனரின் விலாசத்தைக் கேட்டறிந்து, என்னுடைய போட்டோப் படம் ஒன்றையும் வைத்து என்னை எப்படியும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று அவசரமாகக் கடிதம் எழுதினேன். என் படத்தைப் பார்த்த அவர், அப்பாவிடம் தன்னுடைய சம்மதத்தை அறிவித்து கல்யாணத்துக்கு நாளும் குறித்துவிட்டார்.
மாப்பிள்ளை வீட்டான பேரூரிலேயே கல்யாணம் சிக்கனமாக நடந்து முடிந்தது. மாப்பிள்ளை கோலத்திலேகூட என் கணவர் அர்ச்சுனனைப் போலவே ராஜபார்ட் உடையில் இருந்து என்னை அதிகமயக்கத்தில் ஆழ்த்தினார்.
கல்யாணத்தன்றைக்கே ‘முதல் இரவு’ ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது. வாழ்க்கையில் நானாகத் தேர்ந்தெடுத்துக்<!-- verified source join: scan 35→36 --> கொண்ட என் இஷ்ட தெய்வத்தைத் தனியாக சந்திக்கப் போகிறோம் என்ற அளவில்லாத சந்தோஷத்தோடு படுக்கையறையில் அடியெடுத்து வைத்தேன். என் உடம்பெல்லாம் ஏதோ ஒரு உணர்ச்சியால் பரபரப்படைந்தது. அவர் நிலைக் கண்ணாடிக்கு நேரே நின்று தன் அழகைப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் உள்ளே சென்றதும் என் கையைப் பிடித்து அருகே அழைத்து கட்டிலில் உட்கார வைத்தார். நாணம் தாங்கமுடியாமல் நான் உட்கார்ந்தேன்—என்ன, நானே அல்லி ராணியாகக் கற்பனை செய்து கொண்டேன். பழங்கள் சாப்பிட்டோம். பால் அருந்தினோம். அவர் அங்கிருந்த விளக்கை வாயால் ஊதி அணைத்துவிட்டார். கூடத்துக் கடிகாரத்தில் மணி ஐந்து அடித்தது. விழித்துக்கொண்டேன். அறைக்குள்ளே வெளிச்சம் பரவியிருந்தது. அவர் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தார். கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த முக்காலியில் ஏதோ ஒரு பொருள் பளபளவென்று மின்னியது. அதை கவனித்துப் பார்த்தேன். இரண்டு வரிசைப் பற்கள்! எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவரைக் கூர்ந்து கவனித்தேன். அவருடைய வாயிலேயிருந்த பற்கள்தான்!
“அய்யோ! பொக்கை வாய்க்கிழவா என் கணவர்?” என்ற ஆத்திரத்தோடு—சிறிது நம்பிக்கையை வரவழைத்துக் கொண்டு அவர் முகத்தையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். புரண்டு படுத்தார். காதுப்புறம் தொங்கிக்கொண்டிருந்த சுருள் கேசம் சற்று விலகியது. காது பளபளவென்று மின்னியது. கவனித்தேன். விளக்கையேற்றிப் பார்த்தேன். பெருவியாதியின் ஆரம்பம்! அதைத்தான் அந்த அழகான கேசத்தால் மறைத்துக் கொண்டிருக்கிறார். கேசத்தை கையால் விலக்கிப் பார்த்தேன். என்ன கொடுமை—முழுவதும் கையோடு வந்துவிட்டது. ஒரே வழுக்கைத் தலை! அவர் புரண்டு எழுந்தார். அதற்குள் நான், விளக்கைக் கீழே வைத்துவிட்டுத் தூங்குவதுபோல் பாசாங்கு செய்தேன். அவசர அவசரமாகத் தலையைச் சரிசெய்துகொண்டு, முக்காலியில் இருந்த பற்களையும் எடுத்து வாயில் பொருத்திக்கொண்டு, நிலைக்கண்ணாடிக்கு நேரே நின்று அலங்காரத்தில் ஈடுபட்டார்.
“என்னால் படுத்திருக்க முடியவில்லை. அப்போதுதான் விழிப்பதுபோல் எழுந்தேன். ‘மைனு’ என்று அன்போடு கூப்பிட்டவாறு அருகே வந்தார் அந்த அர்ச்சுனர்! என் கன்னத்தில் காலை முத்தம் ஒன்றும் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்டு, அழுகையையும் ஆத்திரத்தையும் அடக்கிக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தேன். வெளியே வந்த என் காதில்........ “அய்யய்யோ!” என்ற ஒப்பாரி சப்தம் கேட்டது!
“என்னவென்று கேட்க ஓடினேன். என் அப்பா, விடியற் காலையில் கடைசித் தடவையாகக் கண்கள்மூடிவிட்ட காட்சியைத் தாழ்வாரத்தில் கண்டேன்......”
கலைஞர் மு. கருணாநிதி · சுருளிமலை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்