அத்தியாயம் 2 · 2 / 26
அத்தியாயம் 2
Chapter 2
மூல ஸ்கேன் 22–29
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
2
அவள் அவனுக்கு அறிமுகமானவளாய்த்தானிருக்க வேண்டும். அவள் பிணமானதைக் கண்டு மூர்ச்சித்துப்போய் விட்டான் என்றால் அவளுக்கும் அவனுக்கும் உறவுகூட இருக்க வேண்டும். அந்த உறவும் உள்ளங்கள் ஒன்றி விட்ட இன்ப உறவாக இருக்குமென்பதற்கு அறிகுறியாகத்தான் சிங்காரம் போட்ட கூச்சல் அமைந்து விட்டது. கையிலே தீச்சட்டியேந்திக் கர கரவெனப் பம்பரம் போல் சுழன்றாடும் சிங்காரத்திற்கு சமயபுரத்திலே புது அனுபவமே ஏற்பட்டது என்று கூறலாம். ஆடும்போது சட்டி கீழே விழுந்து சிதறி விட்டது என்பதுகூட அல்ல அந்த அனுபவம்.
அது கை தவறுகிற அளவுக்கு அவனுக்கு மயல் மூட்டிய ஒரு வாலைக் குமரியை அவன் அந்த ஊரில் சந்தித்தான்... பம்பையும் தவிலும் போட்டி போட்டுக் கொண்டு முழங்கின. வாத்தியங்களின் ஒலியால் எழுகிற உணர்ச்சிக்கு மேலும் வலுவூட்டுவதுபோல் சாம்பிராணிப் புகை தெருவெங்கும் மணம் பரப்பியது.
வேப்பிலைக் கொத்துக்களைக் கைகளில் பிடித்து ஆடிக் கொண்டும், விபூதியை வாயால் ஊதி ஊதி நாலா பக்கங்களிலும் ஓடிக் கொண்டும் ஒரு பயங்கரமான பக்தியைப் பரப்பும் கைங்கரியத்தில் குட்டிப் பூசாரிகள் எல்லாம் ஈடுபட்டிருந்தார்கள். “தாயே! தாயே! லோக மாதா! காளி! மாரி! தேவி!” என்ற முழக்கங்கள் வேறு பாமர மக்களுக்குப் பக்திப் போதையூட்டி அவர்கள் தலையைக் கிறு கிறுக்க வைத்தன.
அந்தச் சூழ்நிலையிலேதான் தீச்சட்டி சிங்காரம் தான் கற்றவித்தையைக் காட்டி அனைவருடைய பாராட்டுதலையும் பெற்றுக் கொண்டிருந்தான். மெல்ல மெல்ல தீச்சட்டி ஊர் வலம் பல தெருக்களைக் கடந்து கடைசித் தெருவின் கோடிக்கு வந்து விட்டது. அந்தக் கோடியில் கொஞ்ச நேரம் ஆட வேண்டுமென்று கோவில் நிர்வாகிகள் அவனைக் கேட்டுக் கொண்டார்கள்.
“ரொம்பக் களைப்பாயிருக்கு, கொஞ்சம் தண்ணி வேணும்” என்று கூறிக்கொண்டே கண்ணடித்துக் காட்டினான் சிங்காரம். கண்ணடித்துக் கேட்கும் தண்ணீர் எப்படிப்பட்ட தென்று புரிந்து கொண்ட நிர்வாகிகள் ஒரு கோப்பையில் ‘அதைக்’ கொண்டு வந்து கொடுத்தார்கள். சிங்காரம் அதை அருந்திவிட்டு ஆடுவதற்குத் தயாராகிவிட்டான். அதற்குள் அந்தத் தெருவிலேயுள்ளோர் தீச்சட்டிக்கு எண்ணெய் ஊற்று வதற்கு வரிசை வரிசையாக வர ஆரம்பித்தார்கள். ஒவ்வொருவரும் தாங்கள் கொண்டு வந்த கிண்ணத்தில் உள்ள எண்ணெயை சட்டியில் ஊற்றுவார்கள். உடனே சிங்காரம் அவர்கள் நெற்றியில் விபூதி, குங்குமத் திலகங்களையிட்டு ஆசீர்வாதம் செய்து அனுப்புவான்.
அப்படி வந்த வரிசையிலே தான் அவன் உள்ளத்தைக் கவர்ந்துவிட்ட ‘அவளும்’ இருந்தாள். அவள் எண்ணெயை ஊற்றியதும், அவள் நெற்றியில் சிங்காரம் குங்குமத் திலகத்தையிடுவதற்கு முயன்றான். ஏனோ அவன் விரல்கள் நடுங்கின. சமாளித்துக்கொண்டு குங்குமத்தை வைத்துவிட்டான். ஆனால் அருகே இருந்தவர்கள் எல்லாம் சிரித்துவிட்டார்கள். அவன் ஆச்சரியத்தோடு பார்த்தான். குங்குமப் பொட்டு அவள் நெற்றியிலே இல்ல; மூக்கின் நுனியிலே இருந்தது. அவனுக்கும் வெட்கம்; அவளுக்கும் வெட்கம்; வேடிக்கை பார்த்தவர்களுக்கு விஷயம் விபரமாகப் புரியவில்லை. கோயில் நிர்வாகிகளோ, “தண்ணீர் தந்த தடுமாற்றம்” எனத் தங்களுக்குள் சிரித்துப் பேசிக்கொண்டனர்.
அவள் மூக்கிலிருந்த குங்குமத்தைத் துடைத்துக் கொண்டே வீட்டு வாசலில் போய் நின்றுகொண்டு ஆட்டத்தைக் கவனிக்க ஆரம்பித்தாள். சிங்காரமும் புதிய உற்சாகத்தோடு ஆட ஆரம்பித்தான். ஆட்டக்காரனின் கால ஓசைக்கு வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்ட வாத்தியக்காரர்களின் கைகள் ஓய்ந்து போகிற அளவுக்கு அவ்வளவு அற்புதமாக ஆட ஆரம்பித்தான்.
தீச்சட்டியில் கொழுந்துவிட்டெரியும் தீயின் சிகப்பு நாக்குகள் உமிழும் புகை, வான் நோக்கி எழுகின்ற காட்சியும், அந்தப் புகை மண்டலத்திற்குக் கீழே அவன் சுழன்று சுழன்று ஆடுவதும் அவள் உள்ளத்தில் ஏதோ ஒரு புதிய உணர்வைத் தோற்றுவித்தே இருக்கவேண்டும் இல்லாவிட்டால் அவள் கண்களில் அந்தப் புத்தொளி எழக் காரணமேயில்லை. சிங்காரத்தின் கையிலே இருப்பதல்ல தீச்சட்டி; தன் இதயத்திலே ஜ்வாலை யெழுப்பி வெம்மையைக் கொட்டுவதுதான் உண்மையான தீச்சட்டியென அவள் கற்பனை செய்து கொண்டாள். சிங்காரம் புதிய புதிய ஆட்டங்கள் ஆடினான். ஆச்சரியமான நடை வரிசைகள் போட்டான். தீச்சட்டியை மிகப் பயங்கரமாக எரிய விட்டான். அவன் ஆடிய இடத்தில் அரை அடி ஆழத்தில் பெரிய குழியே ஏற்பட்டுவிட்டது.
“இவனு ஆடுகிறான்? அம்பாள் ஆட்டிவைக்கிறாள்!” என்றனர் பக்தர்!
“அதுவல்லவோ ஆடுகிறது!” என்றனர் தண்ணீர் கொடுத்த நிர்வாகிகள்.
எதுவுமே காரணமில்லை; எதிரே நிற்கும் ஏந்திழைதான் காரணம் என்பதை சிங்காரம் சொல்லவில்லை. அவன் அநாயாசமாக ஆடிக் கொண்டிருந்தான்.
கடைசலிட்டு உருவாக்கியது போன்ற வடிவம்—மேனி எங்கும் இளமையின் பூரிப்பு—இருகோவைப் பழங்களாய்ப் பொருந்தியது போன்ற உதடுகள்—எலுமிச்சம் பழ நிறம்—அவளுக்கு அருகாமையில் திண்ணையில் ஒரு பூனைக்குட்டி. அதைத்<!-- verified source join: scan 24→25 --> தூக்குவதும் அதன் மென்மையான உடலைத் தடவிக் கொடுப்பதும் பிறகு அதைக் கீழே விடுவதுமாக அவள் சிங்காரத்தின் ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தாள். கண்கொட்டாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தால் பக்கத்திலிருப்பவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற பயம்! களங்கமில்லாமல் அவ்வாறு பார்ப்பவர்கள் அருகிலிருப்பவர்களைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்.
உள்ளத்தில் ஏதோ ஓர் உணர்ச்சி பொங்கிக் கிளம்புவதை மறைக்க முடியாதவர்கள் பக்கத்திலுள்ளவர்களுக்குப் பயப்படுவது இயற்கைதானே! கமல மலர், கதிரவனிடம் காதல்கொண்டு மலர்கிறது என்பது கவிஞர்களின் கைச்சரக்கு! ஆம்பல், நிலவைத் தழுவிட மலர்கிறது என்பதும் கற்பனையாளனின் கனவேதான்! “காதல்” என்ற வார்த்தைக்கு அங்கு பொருளுமில்லை; வேலையுமில்லை!
அவளுக்கு மட்டுமென்ன; “காதல்” என்ற வார்த்தை தெரியுமா? தெரியாது! ஆனாலும் அவனைக் கண்ட அவள் உள்ளத்தில் ஒரு விதப் புது மலர்ச்சி ஏற்பட்டு விட்டது.
அல்லி, தாமரைகளின் மலர்ச்சியில் “காதல்” அடிப்படையாக அமைவதில்லை. இயற்கை நியதி அது! அவள் கொண்ட மலர்ச்சியிலோ காதல் எனும் உணர்வு ஊமை நிலையிலே அடங்கிக்கிடந்து அவளை அவன்பால் சேர்க்கத் துடித்தது.
பசியெடுத்தக் குழந்தை “சோச்சி” என்கிறது. “சோச்சி” என்றால் சோறு! அந்தச் சோறு, அரிசியால் ஆக்கப்படுகிறது. அரிசி, நெல்லிலே கிடைக்கிறது. நெல் விளைக்க எவ்வளவோ பேர் வியர்வை சிந்த வேண்டியிருக்கிறது என்பதையெல்லாம் குழந்தை அறிந்திருப்பதில்லை. அறிந்திருக்கும் நாமே, சோறு தின்னும் நேரத்தில் அது கிடைத்த விதம்பற்றி சிந்திப்பதில்லை.
அதுபோலவே அவள் அவனிடம் தன்னைப் பறிகொடுத்தாள். அதற்குப் பெயர் “காதல்” என்று சொல்ல அவளுக்குத் தெரியாது. “சோச்சி” கேட்கும் குழந்தை நிலையிலேயே இருந்தாள். பூனையை முகத்தோடு முகம் வைத்து இறுக அணைத்துக் கொண்டாள். பாவம், அது “மியாவ்” என்ற ஒலியோடு அவள் கரத்திலிருந்து விடுபட்டு கீழே குதித்தது. அது குதித்த வேகத்<!-- verified source join: scan 25→26 -->தில் அதன் காலில் சிக்கி அவளது நீல நிற மேலாடை கீழே நழுவிற்று. பூனையைவிட்டு, மேலாடையைச் சரி செய்து கொள்ள அவள் கைகள் அவசரமாக ஓடின. அதற்குள் “தடார்” என்ற சப்தம்! சிங்காரத்தின் கையிலே இருந்த தீச்சட்டி கீழே விழுந்து நொறுங்கி விட்டது. அவள் “களுக்” என்று சிரித்து விட்டாள். அவளுக்குப் புரிந்துவிட்டது; தீச்சட்டி எப்படிக் கீழே விழுந்தது என்பது! எல்லாம் இந்தப் பூனை பண்ணிய குறும்பு என்று மனதிற்குள் நினைத்தவாறு மீண்டும் ஆடை திருத்தி நின்றாள். பூனை திண்ணையிலேதான் உட்கார்ந்திருந்தது.
சிங்காரம் தன் தவறுதலை வெளிக் காட்டிக்கொள்ள அஞ்சி, “ஊருக்கு ஏதோ ஆபத்து வரப்போகிறது! அதனால்தான் இந்த அபசகுனம்!” என்று ஓர் அதிர்ச்சி வேட்டை வெடித்தான். பக்தர்கள் தொங்கிய முகத்துடனும் பீதி நிறைந்த கண்களுடனும் அதை விட்டு நகர்ந்தனர். “தாயே! அம்பிகே! எங்களைக் காப்பாத்தும்மா!” என்று கோயிலை வலம் வர ஆரம்பித்தனர்.
சிங்காரம், அவன் தங்கியிருந்த இடத்தில் இருப்புக் கொள்ளாமல் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தான்.
“அவள் யார்?” என்ற கேள்விக்கு அவன் யாரிடம் பதில் பெற இயலும்! யாரையாவது போய் இதைக் கேட்டால் அவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ? அப்படிக் கேட்பதாயிருந்தாலும் என்ன அடையாளம் சொல்லி அவளைப்பற்றி விசாரிப்பது?
திடீரென அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. “தவறி மூக்கிலே குங்குமம் இட்டேனே—அந்தப் பெண் யார்?” என்று கேட்டுவிடுவது எனத் தீர்மானித்துக் கொண்டான். கோயில் நிர்வாகியொருவரிடம் மெதுவாகப் பேச்சைத் தொடங்கினான். அவர் விளக்கம் தந்தார். “அவளைப் பற்றி நானும் விசாரித்துக் கொண்டுதானிருக்கிறேன்.
அவள் இந்த ஊருக்கு வந்து ஒரு மாதமாகிறது. யாரும் அவளுக்குத் துணையிருப்பதாகவும் தெரியவில்லை. தனிமையில் தான் அந்த வீட்டில் வாழ்ந்து வருகிறாள். சிலபேரை விட்டு விபரங் கேட்கச் சொன்னேன். அவர்கள்மீது எரிந்து விழுந்து<!-- verified source join: scan 26→27 -->வாயில் வந்தவாறு பேசி அனுப்பிவிட்டாள். யாரோடும் அவள் அதிகமாகப் பேசுவதே இல்லையாம். அடுத்தவீட்டு எதிர்த்த வீட்டுப் பெண்களோடுகூட அவள் கல கலப்பாகப் பேசுவது கிடையாது என்று கேள்விப்பட்டேன். இதற்குமேல் அவளைப் பற்றி எனக்கொன்றும் விபரம் தெரியாது. அவள் பெயர் மட்டும் மைனாவாம்!”
நிர்வாகி கொடுத்த விளக்கம், சிங்காரத்துக்கு ஆச்சரியமாக இருந்தது. இன்னும் ஆவலைத்தூண்டியது. சிற்றூரில் “சிடு மூஞ்சி” என்ற பெயர் அவனுக்குத்தான் உண்டு. அவளும் தன்னைப் போலவே இருக்கிறாளேயென்று உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டான்.
எப்படியாவது அவளை நேரில் சந்தித்து விடுவது என்று முடிவு கட்டிக்கொண்டான். மைனா! அவன் மனதில் புயலைக் கிளப்பி விட்ட மங்கை! அவளைக் காண அவன் புறப்பட்டு விட்டான். அடர்ந்த இருள்—அத ஊரில் மயான அமைதி நிலவிக் கொண்டிருந்தது. சிங்காரம் யாருமறியாமல் புறப்பட்டு அவள் வீடு நோக்கி நடந்தான்! யாராவது பார்க்கப்போகிறார்களே என்ற பயம் அவனைத் தடைப்படுத்தவில்லை. காரணம்; கொலை செய்யக்கூடத் துணிவைக் கொடுக்கக் கூடிய மதுவை வேண்டிய மட்டும் அருந்தியிருந்தான்.
குடிகாரனுக்குத்தான் எத்தனை பாதுகாப்பு! குடித்தவனுக்கு புதிய தைரியம் பிறக்கிறது—அதோடு மாத்திரமா? அவன் ஏதாவது தவறு செய்து விட்டாலும் “அய்யோ பாவம்; குடிவெறியில் செய்து விட்டான்!” என்று சமுதாயத்தில் சில நேரங்களில் மன்னிப்பும் கிடைத்து விடுகிறது.
அந்தப் பாதுகாப்புகளுடன் சிங்காரம், மைனாவின் வீட்டுப் படியை மிதித்தான். கதவு சாத்தப்பட்டிருந்தது. மெதுவாகத் தள்ளிப் பார்த்தான். திறக்கவில்லை. இன்னும் கொஞ்சம் வேகமாகத் தள்ளினான். உள்ளே ஏதோ சப்தம் கேட்டது. கதவு திறந்து கொண்டது.
சப்தம் எதுவுமில்லை; கழன்றிருந்த தாழ்ப்பாள்தான் கீழே விழுந்திருக்கிறது. மதுபோதையிலும் சிங்காரம் நிதானமாக நடந்து கொண்டான். உடனே உள் நுழையவில்லை. எழுந்த ஒலிக்கு ஏதாவது<!-- verified source join: scan 27→28 --> எதிரொலி கேட்கிறதா என்று கவனித்தான். பூனைக்குட்டியின் “மியாவ்” சப்தம் மட்டும் ஒருமுறை கேட்டுப் பிறகு அடங்கி விட்டது.
“ஸ்! அதான் தின்னுட்டியே... தூங்கு! தூங்கு!” என்று அவள் தூக்கக் கலக்கத்தில் கூறியதும் அவன் காதில் விழுந்தது. பிறகு மெதுவாக கதவை அகலத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். பாயொன்றில் மைனா தூங்கிக் கொண்டிருந்தாள். அருகே பூனையும் உறங்கிக்கொண்டிருந்தது.
இரவு நேரத்தில் பூனை விழித்திருந்து எலி தேடும் என்பார்களே; இந்தப் பூனை சுகமாகப் படுத்துத் தூங்குகிறதே என வியப்பு கொண்டான். வயிறு பிதுங்குகிற அளவுக்கு ஆகாரம் கொடுத்து விட்டால் பிறகேன் விழிப்பு—அலைச்சல்—எல்லாம்! அரைப் பட்டினி கால் பட்டினிக்குத்தானே அந்தத் தொல்லையெல்லாம்!
சிங்காரம், “மைனா!” என்று கூப்பிடலாமா என நினைத்தான். நா எழவில்லை. அவள் முகத்தையே உற்றுநோக்கிக் கொண்டிருந்தான். அவள் கழுத்தைப் பார்த்தான்.
மணிகள் கோர்த்த மாலைகள் அணிந்திருந்தாள் தன்னந்தனியாக அந்த வீட்டில் அவள் உறங்குவது ஒரு அழகாகவே இருந்தது. அவன் கையிலேயிருந்த தீச்சட்டி நழுவி விழுந்து சிதறுவதற்குக் காரணமாயருந்த இளமையின் பூரணப் பொலிவை விழியால் விழுங்கினான். அந்த உடலில் நடுக்கம் பிறக்க ஆரம்பித்தது. மதுவெறி தணியத் துவங்கியது. அவளது கழுத்தின் பின்புறத்தில் ஏதோ “பள பள” வென்று மின்னியது. குனிந்து உற்று நோக்கினான். அவள் போட்டிருந்த மாலையில் கோர்க்கப்பட்டு, பின் கழுத்தின் பக்கமாகத் தலையணையில் படிந்திருந்த தாலிதான் அது!
அவள் கழுத்தில் தாலியைக் கண்டதும், சிங்காரத்தின் போதை முழுவதும் எங்கேயோ பறந்து போயிற்று. வீட்டை விட்டுப் போய்விடத் திரும்பினான். கால் இடறிய காரணத்தால் ஒரு பாத்திரம் பெரிய ஒலியுடன் உருண்டது. விருட்டெனப் பாய்ந்தது பூனை! சிங்காரத்தின் கழுத்திலே கூரிய நகங்களால் பிராண்டியது. மைனா திடுக்கிட்டு விழித்து, ஓடிப்போய் கதவை சாத்திக்கொண்டு, “யாரது? நில்!” என்று கத்தினாள்.
கலைஞர் மு. கருணாநிதி · சுருளிமலை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்