அத்தியாயம் 1 · 1 / 26
அத்தியாயம் 1
Chapter 1
மூல ஸ்கேன் 14–22
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
1
வழக்கம்போலவே வேப்பமரத்து மேடையிலமர்ந்து புல்லாங்குழல் ஊதிக்கொண்டிருந்தான் சுருளிமலை
காலை நேரங்களில் அந்தமேடை அவனுக்கு மட்டுமே சொந்தம். மாலை நேரத்தில் ஊராருக்கு அதுவே காற்று வாங்குமிடமும், பொழுது போக்குமிடமும், ஊர்வம்பு பேசுமிடமுமாகும். இன்றியமையாத சமயங்களில் அந்த மேடையில் தான் ஊர்ப் பஞ்சாயத்து நடைபெறும். ஆண்டுக்கொரு முறை நடைபெறும் அம்பு போடும் உற்சவத்தின்போது குதிரை வாகனத்தின்மீது சாமியை அலங்கரித்து அங்கே தான் கொண்டுவந்து இறக்கி பூஜைகள் நடத்துவார்கள்.
இப்படி ஊருக்கு மிக சிறப்பான வேப்ப மரத்தடியில் காலை நேரப் பொழுதை சுருளிமலை கழித்து வந்தான். செழித்து வளர்ந்த அந்த வேம்பு, ஒரு விதவை! ஆமாம்; திருமணமான அடுத்த இரண்டொரு நாட்களிலேயே வேம்பின் கணவன் அரசு, பட்டுப் போய்விட்டான்! அரசில்லாத வேம்பு, தன்னந்தனியாக வளர்ந்து சுருளிமலையின் குழலோசையைத் தினந்தோறும் சுவைத்துக் கொண்டிருந்தது. அதன் உடலிலும், கிளையிலும், இலையிலும், காயிலும், பூவிலுமுள்ள கசப்பு கூட மறைந்து போயிருக்கும் எனக் கற்பனை செய்தால் அது மிகையாகாது; அவ்வளவு இனிப்பான இசையை அது பருகியிருக்கிறது! மரம், செடிகள் சுவாசிக்கின்றன என்பதைக் கண்டு பிடித்தான பிறகு, அவைகள் ஒலியைக் கேட்கவும் செய்கின்றன வென்று யாராவது ஒருவன் ஆராய்ச்சி முடிவை அறிவிக்காமலா இருக்கப் போகிறான்—என்ற எண்ணத்தாலோ என்னவோ—சுருளிமலை, வேம்படியில் வேய்குழலில் தன்னை மறந்து மூழ்கிவிடுவான். இசைவாணர்கள், குழலோர் இசைக்கென அமைத்துக் கொண்ட இலக்கணம் பற்றிய அரிச்சுவடியே அவனுக்குத் தெரியாது.
“வார நிலத்தைக் கேடின்று வளர்த்து, ஆங்கு ஈர நிலத்தின் எழுத்தெழுத்தாக வருவின்று இசைக்கும் குழலோன் தானும்,”
—என்று இளங்கோவடிகள், சிலப்பதிகாரத்தில் குழலோனுக்குரிய இலக்கணச் சிறப்பு வகுத்திருப்பதை அவன் உணர மாட்டான். சிலப்பதிகாரம் என்றாலே என்னவென்று புரிந்து கொள்ள முடியாத தமிழ் இளைஞன்தான் அவன்.
குயில் கூவுகிறது—மயில் ஆடுகிறது—சிந்து பாடும் அருவியென வர்ணிக்கிறோம். குயிலோ, மயிலோ, அருவியோ இசை இலக்கணம் கற்று சங்கீத இன்பத்தைப் பொழிபவை அல்ல. ஆனாலும் குயிலின் பாட்டை, மயிலின் ஆட்டத்தை மனிதர்கள் தரும் கலை விருந்துக்கு உவமையாக்கி விடுகிறார்கள்; கற்பனையாளர்கள். அது போன்ற ஒரு கவர்ச்சியும், கேட்போரை வயப்படுத்தும் சக்தியும் சுருளிமலையின் குழலோசையிலே இருந்தது!
தாளம் தவறாமல், ராகம் பிசகாமல், சுருதி விலகாமல் ஆந்தைப்பாடினுள் “ஆகா, என்னே இசை இலக்கணம்!” என்று வியப்படைவருண்டோ? “லயம்” வழுவாத, “பாவம்” நழுவாதவாறு நடனமாடினாலும் வான்கோழியை மெச்சுவாரும் உளரோ?
மயிலுக்கும் குயிலுக்கும் உள்ள இயற்கைச் சிறப்பு, எப்படியோ சுருளிமலையின் குழலிசைக்கும் இருந்தது. குளு குளுவென வீசும் வேப்பமரத்து மென் காற்றோடு அந்த இனிய நாதமும் கலந்து; காலை நேரத்தில் கழனி நாடிச் செல்வோருக்கும்—உழைப்பு தர ஓடுவோர்க்கும் புதிய தெம்பை அளிக்கும்.
ஒரு சிலர் அவனைப் பார்த்து முணு முணுக்காமல் இல்லை. “பெரிய கிருஷ்ண பரமாத்மா இவரு—கோகுலத்திலே குழல் ஊதுறாரு!” எனக் கேலி பேசுகிற பெரிய மனிதர்களிடத்திலே அவன் எப்படி மதிப்புரை பெற முடியும்.
“பொன்னையாவுக்கும் பூஞ்சோலைக்கும் வந்து பிறந்ததே பிள்ளே—குலம், கோத்திரம், குடும்பம் எல்லாத்தியும் மறந்துட்டு குழல் ஊதுது, குழல்!” எனக் கிண்டல் செய்தவாறு போகிறவர்களை சுருளிமலை கவனிக்காமலில்லை.
அந்தப் பேச்சுக்களையெல்லாம் அவன் மிக அலட்சியமாகக் கருதினான். அவைகளுக் கெல்லாம் பதில் சொல்லி பகையை வளர்த்துக் கொள்ள விரும்ப வில்லையோ என்னவோ, அவனுண்டு—வேப்பமரம் உண்டு என்ற அளவில் காலங் கடத்தி வந்தான். இள ரத்தம், துடிப்பு நிறைந்த பருவம், இவைகளுக்கு இயற்கையாக இருக்கக் கூடிய பரபரப்பு, படபடப்பு எதுவுமே யில்லை அவனிடம்!
பதினைந்து வயது இளைஞன்—பழுத்த கிழவரைப்போலவே அமைதியாகக் காணப்படுவான். முகத்தின் அழகு, அகத்தின் பிரதி பலிப்புத்தானே—அவனது அமைதி கலந்த ஆழ்ந்த பண்பை உணர்வதற்கு யாருமில்லைதான் அவ்வூரில்! அதனால் சிலர் அவனை சோணிப்பிள்ளையென்றும் அழைத்தார்கள்.
அவன் தவழ்ந்தாடும் பருவத்தில் பல் முளைத்தவுடனே, வீட்டில் பால் கொழுக்கட்டை சுட்டு சாமிக்குப் படைத்தார்கள். அப்போதே அவனுடைய குணம் எப்படியிருக்குமென்று அவன் தாய் கண்டு பிடித்து விட்டதாகப் பிறரிடம் பெருமையடித்துக் கொள்வாள். குல தெய்வத்துக்கு நேரே கொழுக்கட்டைப் படையல்போட்டு, ஒரு முறத்தில் விளையாட்டுப் பொம்மை, ஒரு ரூபாய் நாணயம், கத்தி, ஒரு கொழுக்கட்டை எல்லாவற்றையும் வைத்து, குழந்தை சுருளியைத் தவழவிட்டு, அவன் அந்தப் பொருள்களில் எதை ஆவலோடு எடுக்கிறான் என்று சோதித்துப் பார்த்தார்கள். குழந்தை தவழ்ந்து கொண்டேபோய் கொழுக்கட்டையைத் தான் எடுத்தது. அது முதலே இது சாப்பாட்டு ராமனுக்குத்தான் இருக்குமென்று அக்கம் பக்கத்தாரும் தாயாரும் முடிவு கட்டி விட்டார்கள். அந்த முடிவின்படியே அவனை வளர்க்கவும் தொடங்கினார்கள். அவனும் எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல், எந்தப் பொறுப்பிலும் தன்னை சிக்க வைத்துக் கொள்ளாமல் வளர்ந்தான்.
எப்பொழுதும் புன்முறுவல் பூத்திருக்கும் முகமும் ஆழ்ந்த யோசனையை வெளியிடுவது போன்ற விழிகளும் கொண்ட இளைஞன், என்றும்போல் அன்று காலையிலும் குழலிசையில் தன்னை மறந்து மூழ்கியிருந்தான்.
அதிகாலையில் வீட்டிலிருந்து புறப்படும்போது, அவனுக்கு முன் எழுந்து வீடு வாசல் பெருக்கி, தெருவில் கோலம் போட்டு விட்டு, பானை செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்த அவன் அன்புச் சகோதரி பொன்மணி “சாப்பிடாமல் போகாதே எங்கும்! நல்ல பழையதும், எருமைத் தயிரும், தொட்டுக் கொள்ள கிடாரங்காய் ஊறுகாயும் வைத்திருக்கிறேன். சாப்பிட்டுவிட்டுப்போ!” என்றாள்.
“கொஞ்ச நேரம் கழித்து சாப்பிடுகிறேன் அக்காள்!” எனக்கூறிவிட்டு நடந்த அவனைத் தடுத்து, “தம்பி, கொஞ்சம் இங்கேயே உட்கார்ந்து குழலூதேன்!” என்று அவள் கோரிக்கை விடுத்தாள்.
“அதெல்லாம் முடியாது!” என்று சர்வசாதாரணமாகக் கூறிவிட்டு வேப்ப மரத்தடிக்கு வந்துவிட்டான். அங்கே இசை முழக்கம் செய்தான். இடையிடையே வேப்பமரத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டான்.
அப்படி அண்ணாந்தபோது முதல் தடவை அவன் முகத்தில் வியப்பு ஏற்பட்டது!
“அடுத்த தடவை சிறு பீதி தலை நீட்டி உடனே மறைந்தது!
மூன்றாவது தடவை அலட்சியமாகப் பார்த்தான்!
பிறகு மேலே நிமிர்ந்து பார்க்கவேயில்லை; குழலூதுவதில் முழுக் கவனமும் செலுத்தி விட்டான்!
“ஆகா! பலே! பலே!! பிரமாதம்!” எனக் கைதட்டியவாறே அங்கே வந்தான், தீச்சட்டி சிங்காரம்.
“வாண்ணே! எங்க ரொம்பநாளாய்க் காணேம்?” என ஆவலுடன் கேட்டான் சுருளிமலை.
“அட போப்பா—அதேயேன் கேக்கிறே? பதினைந்து ஊரிலே தீச்சட்டி ஆட்டம்! எல்லா ஊர்க்காரப் பயலும் தீச்சட்டி<!-- verified source join: scan 17→18 --> சிங்காரந்தான் வேணுங்கிறான்! நான் ஊருக்கென்று ஒருத்தன்; யாருக்கென்று ஆடுவேன்? போய்த் தொலைந்தேன். இன்னைக் குத்தான் திரும்பினேன். ஒரு விஷயம் தெரியுமா தம்பி; அதுக் குத்தான் உங்க வீட்டைத் தேடிக்கிட்டு வந்தேன்,” எனப் பீடிகை போட்டான் சிங்காரம்.
“எங்க வீட்டைத் தேடிக்கிட்டு வேப்பமரத்தடிக்கு வந்துட்டேங்களே! அதிருக்கட்டும்; என்னண்ணே விஷயம்?”—சுருளிமலையின் கேள்வியிலேயுள்ள ஆவலைக் கண்டுபிடித்த சிங்காரம் நீண்ட முன்னுரையோடு பேச்சைத் தொடர்ந்தான்.
“காட்டூர் காளிகட்டித் திருவிழாவுக்குப் போயிருந்தேன். அடடா! எக்கச்சக்கமான கூட்டம்-எள் விழ இடமில்லையென்றால் பார்த்துக் கொள்ளேன்!”
சுருளிமலை குறுக்கிட்டு, “எள்விழ ஏன் இடமில்லை? ஜனங்கள் தலையிலே விழுந்தா தாங்க முடியாதா என்ன, எள் விழுவதை?” என்று கேட்டதும்.
“அடேய்! குறுக்கே பேசாதே! விஷயத்தைக் கேளுடா தம்பி! காட்டூர் முடிந்து கனியா குறிச்சி போனேன். சமயபுரம் போனேன். எல்லா எடத்திலும் ஏகக் கூட்டம்! நம்ப தீச்சட்டி ஆட்டத்துக்கு எகப்பட்ட மதிப்பு! நாலு நாள் தொடர்ந்தாப் போலே காலையிலே கப்பரைச் சட்டியைக் கையிலே எடுத்து, பத்து மைல் சுற்றளவுக்கு நடந்தே போய் ஆடணும்னு முடியிற வேலையா? நாலாம் நாள் காலையிலே தீச்சட்டி எடுத்து ஆடிக்கிட்டேயிருக்கும்போது எனக்கு ஒரேகளைப்பு! ஒரே மயக்கம்! எதிர்த்தாப்போல ஒரு பெண்ணு—அழகான குட்டி! அவளையே பார்த்துக்கிட்டு என்னை மறந்து ஆடிக்கிட்டே இருந்தேன்.....” என்று பேச்சை நீட்டிய சிங்காரத்திடம் சுருளிமலை,
“அடடா! என்னண்ணேயிது, எனக்கிட்ட வந்து இதெல்லாம் பேசிக்கிட்டு......” என்று வெடுக்கென்று பதிலுரைத்து எழுந்தான்.
“சரி, சரி, கேளுடாப்பா......எப்படியோ ஆடிக்கிட்டு இருக்கும்போது கை தவறித் தீச்சட்டி கீழே விழுந்து சிதறிப் போச்சு! அதோட என் மானமும் போச்சு!”
“தீச்சட்டி உடைஞ்சா மானம் ஏன் போகுது?”
“அட மண்டுப் பயலே! உனக்குத் தெரியாதா? தீச்சட்டியை அவ்வளவு நெருப்போடக் கையிலே தூக்குகிறோமே; அது கையிலே சுடுறதே இல்லியே—எப்படின்னு நினைச்சுகிட்டு இருக்கே?”
“காளியம்மன் சக்தின்னு நினைச்சுக்கிட்டிருக்கேன்!”
“என்னத்த அம்மமேலே சக்தி இருந்தாலும் நம்பளோட ஜாக்கிரதையும் கொஞ்சம் வேணும் தம்பி!”
“எப்படிண்ணே?”
“தீச்சட்டிக்கு அடியிலே சூடு அதிகமா இறங்காதபடிக்கு பருத்திக் கொட்டையைக் கொட்டி வச்சுக்குவோம். இல்லேன்னு கை அவ்வளவுதான்!”
“பருத்திக் கொட்டையா?”
“ஆமாண்டா ஆமாம்—அந்த ரகசியந்தான் அங்கே அம்பலமாயிட்டுது! என்னைப் பெருமையோடவும் பிரியத்தோடும் பார்த்துக்கிட்டு, தீச்சட்டியிலே இருக்கிற என்னை மாதிரி உருகிக்கிட்டிருந்த அந்த அழகான சின்ன பொம்பளே ‘களுக்’ குன்னு சிரிச்சிட்டா!”
“அப்புறம்?”
“அப்புறம் என்ன? இந்த ஊருக்கு ஏதோ ஆபத்து வரப்போகுது; அதான் தீச்சட்டி கை தவறி விழுந்து அம்பாள் அபசகுனம் காட்டியிருக்கிறாள்—அப்படின்னு கதை விட்டேன். எல்லாரும் நம்பி பயந்தாங்க! என்னோட அம்பாள் மாத்திரம் சுப சகுனம் காட்டிப்பிட்டு மறைஞ்சுட்டா!”
அவன் பேச்சில் சுருளிமலைக்கு வெறுப்பு மேலிட்ட போதிலும் அதை வெளியில் காட்டிக்கொள்ள இயலவில்லை. அதோடு, சிங்காரத்தின் மீது வீசிய சாராய வாடை காலையில்<!-- verified source join: scan 19→20 --> இளம் போதையில் அவன் இருக்கிறான் என்பதையும் அவனுக்கு உணர்த்தியது.
“சரி, சரி...அப்புறம்?” என்று எழுந்தான் சுருளிமலை.
“எனக்கு அவசரமா ஒரு தீச்சட்டி வேணும்—அம்மா கிட்ட போயி, நான் சொன்னதாச் சொல்லி ஒரு தீச்சட்டி சீக்கிரம் தயார் பண்ணி இரண்டு நாளில் கொடுக்கச் சொல்லு!”
“நீயே அம்மாகிட்ட போயி கேளு—போ!”
“ஏன்? நீ எங்க பெரிய கலெக்டர் வேலைக்குப் போறியோ?”
“ஆமாம்; கலெக்டர் வேலையவிடப் பெரிய வேலை ஒண்ணு இருக்கு. அதை கவனிக்கப் போகிறேன்!”
“அப்படிப்பட்ட வேலை என்னடா தம்பி?”
“கொஞ்சம் அண்ணாந்து பார் மரக்கிளையை!” என்று சுருளிமலை அமைதியாக மேலே சுட்டிக் காட்டினான். சிங்காரம் அண்ணாந்து பார்த்தான். திடுக்கிட்டான். ‘ஆ’ என்று அவனறியாமல் அலறி விட்டான். மரக்கிளையில் ஒரு இளம் பெண் தூக்கிட்டுத் தொங்கிக் கொண்டிருந்தாள்.
“என்னடா பாவிப் பயலே இது? இவ்வளவு நாழி எனக்கிட்டே சொல்லவே யில்லையே “நீ நான், ஒரு மடையன்; இவ்வளவு நாழி இதை கவனிக்காம உனக்கிட்டே வம்பு பேசிக்கிட்டு இருக்கேன். என்னடா பிள்ளை யாண்டான்! தூக்கு மாட்டிக்கிட்டு தொங்குற ஒருத்தி; அதைப் பத்திக் கவலைப்படாம புல்லாங்குழல் ஊதிக்கிட்டு இருக்கியே ... என்னடா ... அடடா உயிர் இருக்குமோ என்னமோ தெரியலியே!” எனப் பரபரப்புடன் மரத்தில் ஏறத் தொடங்கினான் சிங்காரம்.
“சரியண்ணே! நீ இதைக் கவனி; நான் போயி பஞ்சாயத்தாரை அழைச்சுட்டு வர்றேன்” என்று சுருளிமலை வேப்பமரத்தடியை விட்டகன்று பஞ்சாயத்தார் வீடு நோக்கிப் புறப்பட்டான்.
பஞ்சாயத்தார் பரமசிவம், வீட்டுத் திண்ணைப் புறத்தில் தன் அருமருந்தன்ன மைந்தனின் சேட்டைகளைத் தாங்கிக்கொண்டு<!-- verified source join: scan 20→21 --> “அட ஈஸ்வரா” என்று தலையில் கை வைத்தவாறு உட்கார்ந்திருந்தார்.
“அப்போ! அப்போ! உலகத்தை யாரப்பா தூக்கிக்கொண்டு இருக்கிறுங்க?”
“ஆண்டவன் தூக்கிக்கிட்டு இருக்காருடா...சும்மாகிட!”
“அவருக்குக் கழுத்தை வலிக்காதா அப்போ?”
“வலிக்கும்போது, தோள்மாத்திக்குவாரு — சும்மா இரு!”
“ஒரு நாளைக்கு ஆண்டவன் உலகத்தைப் பொத்துன்னு கீழே போட்டா என்னப்பா ஆகும்?”
“அப்படிப் போட்டால்தான் தேவலையே—என் சங்கடம் தீரும்—நிம்மதியாப் போகும்; உன் தொல்லையில்லாம!”
“எப்போ! ஆண்டவனுக்கிட்ட சொல்லி, உலகத்தைத் தூக்கி என் தலையிலே வைக்க சொல்லப்பா!”
“அதான் உன் தலையிலே உலகத்தை வச்சிருக்காரே! பிறகென்ன..... மூளையையா வச்சுருக்காரு?... உலகத்தில் இருக்கிற மண்ணு பூரா உன் தலையிலேதானே!”
—என்று தன் தலையிலே அடித்துக்கொண்டார் பஞ்சாயத்தார். நாள் முழுவதும் வீட்டிலேயிருக்கிற நேரமெல்லாம் பஞ்சாயத்தாருக்குத் தலைவேதனை தான்.
அன்று ‘அதிகாலையிலேயே வேதனை ஆரம்பமாகி விட்டதே கடவுளே’ என்று பெருமூச்சுவிடும் போதுதான் சுருளிமலை அங்கு வந்து வேப்பமரத்தில் ஒரு பெண் தூக்கு மாட்டிக் கொண்டு தொங்குகிற செய்தியைச் சொன்னான். பஞ்சாயத்தார் பரபரப்புடன் வேப்பமரத்தடிக்குப் புறப்பட்டார். செய்தி பரவிடவே அவரோடு ஊராரும் பின் தொடர்ந்தனர்.
அதற்குள், மரத்திலேறிய சிங்காரம் அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்க்க முடியாமல் அவள் முகம் மேலாக்குத் துணியால் மூடப்பட்டிருப்பதைக் கண்டான். அவசர அவசரமாக கயிற்றுச் சுருக்கை விடுவித்து, அவளைக் கீழே இறக்கினான்.
அதற்குள் பஞ்சாயத்தாரும் மற்றவர்களும் அங்கே வந்து சேர்ந்தார்கள். சிங்காரம் அந்தப் பெண்ணுடைய முகத்தை மூடியிருந்த துணியை விலக்கினான். அவ்வளவுதான்; “அய்யோ!” என்று அலறிவிட்டான்!
அவனை ஊரார் கவனித்து என்னவென்று கேட்பதற்குள் “அய்யோ, நீயா?” என்று உரக்கக் கூவி, தலை சுற்றிக் கீழே சாய்ந்து விட்டான் சிங்காரம்.
கலைஞர் மு. கருணாநிதி · சுருளிமலை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்