பொருளடக்கம்

சுருளிமலை

அறிமுகம் · 0 / 26

அறிமுகம்

Introduction

மூல ஸ்கேன் 5–13

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

அறிமுகம்

கதை சொல்லும் முறை பலவகை!

திடீரென்று ஒரு வீட்டில் நடு ராத்திரியில் ஒரு பயங்கர சப்தம் கேட்கிறது. தெருவிலுள்ளோர் அனைவரும் பரபரப்போடு அங்கு ஓடுகிறார்கள். வீட்டுக் கதவு திறந்திருக்கிறது. விளக்கு மங்கலாக எரிகிறது. யாரோ முனகிடும் சப்தம் காதில் விழுகிறது. சிறிது நேரத்தில் அந்த ஒலியும் நின்று விடுகிறது. விளக்கைப் பெரிதாக்கிப் பார்த்தால் சுந்தரவடிவுடையாள் ஒருத்திப் பிணமாகக் கிடக்கிறாள். அவளை ஊரார் அறிவர். ஊருக்கே அவள் மகாலட்சுமி எனப் போற்றப்படுபவள். அவள் பிணமாகிவிட்டாள். அவள் கணவனையோ காணவில்லை. அவன் எங்கே போனான்? அவள் ஏன் கொலை செய்யப்பட்டாள்? இந்தக் கேள்விக் குறிகளிலேயிருந்தே கதையின் சிக்கல்கள் ஆரம்பமாகிவிடும்.

நல்ல நிலாக் காலம்! வானம், வெள்ளியை உருக்கி வார்ப்பது போல் உலகமெங்கும் ஒளிபெற்றுத் திகழ்ந்தது. புள்ளினங்கள் தங்கள் கூடுகளில் தங்கி ஓய்வு பெற்றுக்கொண்டிருந்தன. அந்தக் கிராமமே அமைதி மங்கையின் அணைப்பில் மயங்கி மயங்கி நினைவிழந்திருந்தது. தெருக்களில் குங்கும நிறத்துப் பாதிரிப் பூக்கள் இறைந்து கிடந்தன. நீல நிலா வெளியில் தன்னந் தனியாக ஒரு அழகி மெல்ல நடந்து கொண்டிருந்தாள். அவள் யார்? அவள் முகத்திலே வேதனை ரேகைகள் படர்ந்திருக்கக் காரணம் என்ன? இப்படியும் கதைகள் துவங்குவதுண்டு.

கதையின் மையக் கட்டத்திலேயிருந்து தொடங்கி, முன்னும் பின்னும் வாசகர்களை இழுத்துச் செல்லும் முறையில் கதையில் நடமாடுபவர்களைப் பற்றிய குறிப்புகள் முன் கூட்டியே அறிவிக்கப்பட்ட வேண்டியதில்லை.

‘சுருளிமலை’ கதை, நிகழ்ச்சிகளின் மையக் கட்டத்திலேயிருந்து உருவாவதில்லை. ஒரு சிற்றூரின் வரலாற்று மையத்திலேதான் தோன்றுகிறது. அந்த ஊரிலுள்ள முக்கிய புள்ளிகளின் மத்தியில் சுழன்றோடும் நிகழ்ச்சிகளே சுருளிமலை கதையின் கருப் பொருள். அதனால் அவர்களைப் பற்றிய அறிமுகம் மிக அவசியமல்லவா?

எல்லா குக்கிராமங்களையும் சிற்றூர் என்றே அழைக்கிறோம். ஆனால் இந்தக் கதையிலே வரும் சிற்றூருக்குப் பெயரும் சிற்றூரே!

இப்போது சிற்றூரில் நுழைவோம். கட்டை வண்டியில் ஏறிக்கொண்டுதான் அந்த ஊருக்குள் பிரவேசிக்க வேண்டும். அல்லது நடந்து செல்லவேண்டும். அவ்வளவு நொடி நிறைந்த பாதை. குறுக்கும் நெடுக்குமாகப் பெரும் பெரும் பள்ளங்கள். இன்னல் பலவற்றைக் கடந்துதான் இன்பம் பெறவேண்டியிருக்கிறது என்ற இலக்கணத்தை மெய்ப்பது போல் அழகும் வளமும் மிக்க ஊர் சிற்றூர். ஊரின் முகப்பிலேயே செவ்விள நீர்க் குலைகளுடன் வான்நோக்கி வளர்ந்திருக்கும் தென்னஞ்சோலை! அதனுள் அமர்ந்து விட்டால் மேனியை மெல்ல வருடித் தாலாட்டும் குளிர் தென்றல்! அதைக்கடந்து உட்சென்றால் எடுப்பான சிவன் கோயில் — காளி கோயில் - மாரிகோயில்! திருக்குளம்—அதனைச்சூழ்ந்து நான்கு தெருக்கள்! பட்டு விரித்தாற்போல் பச்சைப்புற்றரைகள்! அவைகளையொட்டித் தலையாட்டும் தங்க நிற நெல் மணிகள் குலுங்குகின்ற எழிற் கழனிகள்!

சிவன் கோயில் மணியோசை-இசை முழக்கம்—காளி மாரி கோயில்களில் பம்பை, உடுக்கைகளின் ஓங்கார ஒலிகள்-செக்காடும் சப்தம்—கூடைக்காரிகளின் வியாபாரக் குரல்கள்—கோலி யடிக்கும் பிள்ளைகளின் இரைச்சல் - மாந்தோப்பின் நடுவில் அமைந்த பள்ளிக்கூடத்தில் பையன்கள் முழங்கும் வாய்ப்பாடு<!-- verified source join: scan 6→7 --> பாடத்தின் “கோரஸ்”!! இப்படி ஊரே உயிர்ப்புள்ளதாகக் காட்சியளிக்கும். அந்த ஊரில் நம் கதைக்குத் தொடர்புடையவர்களில் தலையானவர்களைத் தேடுவோம். முதலில் நம் கண்ணில் படுவது, அதோ அந்தக் கோயில் காளைதான்!....

● சிவன் கோயில் காளை ‘சிவா’ என்றால் அதை யாரும் வெறித்துக் கூடப் பார்க்கமாட்டார்கள். பார்ப்பது ‘பாபம்’ என்பது மாத்திரமல்ல; அவ்வளவு பயம் அந்த ஊராருக்கு அதன்மீது! வீதியில் கம்பீரமாக ராஜ நடை போட்டுக்கொண்டு அது செல்லும்போது வீட்டோரங்களிலும், வேலிப் பக்கங்களிலும் ஒதுங்கி நின்று வியர்வையால் மேனியை ஈரமாக்கிக் கொள்வார், அவ்வூரார்! கொழுப்பேறிய உடல்-இரும்பினும் வலுவான கொம்புகள் — கருநீலமெனப் பளபளக்கும் ரோமம் அடர்ந்த தோல்—அந்த முரட்டுக் காளையின் கண்களிலே மட்டும் ஒரு கனிவு தென்படுகிறதென ஊரார் சொல்வர். ஆனால் அருகே நெருங்க அஞ்சுவர். பற்று, பாசம், பந்தம், சொந்தமெல்லாம் மனித இனத்துக்கு மட்டுந்தானா தனியுடைமை? மாடுகளுக்கு அவையெல்லாம் இல்லையா என்ன? சொல்லப்போனால் மனிதனைவிட அதிகமாக உழைக்கின்றன; அவனைவிட அதிகமாகத் தன்னை வளர்த்தவனிடம் விசுவாசம் காட்டுகின்றன.

பலநாள் வளர்த்துப் பணத்துக்காக வேறொருவனிடம் விற்று விட்டால் சாமான்யத்தில் அந்த வீட்டைவிட்டு நகருகிறதா மாடு! எத்தனை தடவை தன்னை வாங்கியவன் ஏமாற்றிவிட்டு முதலில் இருந்த இடத்துக்கு ஓடிவந்து விடுகிறது! விற்றவன் விரட்ட விரட்ட, இறுதியில் அதுவாக ஒரு முடிவுக்கு வந்து...தன்னை வெறுத்துப் பணத்தைப் பெரிதென மதித்தவனைவிட, பணம் கொடுத்துத் தன்னை விரும்பியவனே மேலென்ற தீர்மானம் செய்து கொண்டோ என்னவோ...வாங்கியவனிடமே அன்பு காட்டத்தொடங்கி விடுகிறது. அந்த மாட்டினத்தில் சிறப்பும் செழிப்பும் மலிந்த குடும்பத்தில் பிறந்ததுதான் கோயில் காளை சிவா! சிவாவை மக்கள் ஆண்டவனின் வாகனமென்றே கருதி மரியாதை செலுத்தினர். ஆனால் அதைத் தனக்கு வாகனமாக்கிக்கொண்டான். ஒரு சட்டிப் பயல்—அவன்தான்............

● ‘சுருளிமலை’ யென்றதும் யாரோ பெரிய கொள்ளைக்காரன்-பக்காத் திருடன் என்றெல்லாம் எண்ணத் தோன்றும். பக்தர்கட்கோ, “சுருளிமலை மீதில் மேவும் சீலா! உன்னைத் தோத்தரித்தேன் சுப்பிரமண்ய வேலா!” எனப்பாடத் தோன்றும். சுருளிமலைச்சாரல் இன்றைக்கும் திருடர்களும் குற்றவாளிகளும் மறைந்து வாழ்வதற்கான வசதியை அளித்துக்கொண்டிருக்கிறதென மதுரை மாவட்டத்தார் கூறுகிறார்கள். நமது சுருளிமலையோ திருடர்களையும் குற்றவாளிகளையும் சந்தியில் நிறுத்துகின்ற முயற்சிக்குத் தன்னையே அர்ப்பணிக்கின்றான்.

சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். தாய், தந்தை, ஒரு சகோதரி அவர்களே அவனுக்கிருக்கிற ஆதரவு. கோயில் காளை சிவாவைத் தவிர அவனுக்கு அந்த ஊரில் யாருமே நண்பர்கள் கிடையாது. சிவாவுக்கு அடுத்தபடியாக அவன் பிரியம் வைத்திருப்பது மூங்கிலால் செய்யப்பட்ட புல்லாங்குழல்மீது தான்! சிவாவும், குழலும் இருந்துவிட்டால் அவனுக்குப் பசியேகூடத் தெரிவதில்லை. பதினொறு வயதுகூடச் சரியாக நிரம்பாத அவன்பால் குடும்ப பாரம் முழுவதையும் போடுவதற்கு விரும்பாவிட்டாலும், அவனிடமிருந்து சிறு உதவிகளையாவது எதிர்பார்த்தது அந்த ஏழைக் குடும்பம். அவனே, கோயில் காளை போலக் கவலையற்றுத் திரிந்தான். தந்தை திட்டுவார்—அடிக்க ஓடுவார்—அக்காள் அதைத் தடுத்து அழுவாள்—தாயோ வேதனைக்கலமானாள். சோகப்புயலானாள். ஆனால் பெயர் என்னவோ பூஞ்சோலைதான்!....

● மண் மிதித்து, பானை சட்டி செய்து, வயிறு வளர்க்கும் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு, உழைப்பொன்றே உலக இன்பமெனக்கொண்டு, நாற்பது ஆண்டுகளுக்கு மேல் நகர்த்தி விட்ட பெருமாட்டி—அன்பின் திரு உருவம்—குணக் குன்று—குடும்பத்தின் நில விளக்காய் ஒளிவிட்டுப் பெருமை கொண்ட பெண்ணரசி! பொன்னையா வீட்டென்றால் புரியாது யாருக்கும்—அவன் மனைவி பூஞ்சோலை பெயராலேதான் வீட்டுக்குப் பெயருண்டு அவ்வூரில்! யார் வீட்டில் உடல் நலிவு என்றாலும்<!-- verified source join: scan 8→9 -->பூஞ்சோலை அங்கிருப்பாள். பிள்ளைப் பேறு? பூஞ்சோலை அடியெடுத்து வைத்தாலே போதும்—சுகப் பிரசவந்தான் எனப் பெரியோர்கள் புகழ்ந்திடுவர். பொங்கலுக்குப் புதுப்பானை, புதிய சட்டி பூஞ்சோலை கையால்தான் வாங்கவேண்டும் என்ற பேச்சு அந்த வட்டாரம் முழுவதிலும் அடிபடும்.

மஞ்சள் முகத்தில் எடுப்பான குங்குமத் திலகம்—பெரு நோக்கு—சாந்த முகம்—குடும்பத்தின் கவலியால் உள்ளத்தில் புயல்! சுருளிமலை அடங்காத பிள்ளையாகி விட்டானே என்ற ஏக்கம்—மகளுக்கு ஏற்ற வரன் கிட்டவில்லை என்கின்ற துக்கம்—அழகு திருக் குமாரிக்கு அணிகலன்கள் பூட்டிப் பார்க்க வேண்டுமென்கின்ற தனியாத ஆசை—மண்ணிலே செய்வதென்றால் மடிபோல் குவித்திருப்பாள் அணிமணிகள்! பொன்னாலன்றே செய்ய வேண்டும்—அதுலைதான் போலும் மனத் திருப்திக்காக மகளுக்குப் பொன்மணி என்று பெயராவது வைப்போம் என்று வைத்துவிட்டாள்..........

● பூவார் சோலைப் புது மயில்! பொங்கும் இளமை எங்கும் சிந்தக் காட்சி தரும் கட்டழகு! மொட்டவிழா மல்லிகைபோல் பல் வரிசை-வட்ட நிலா மண்மீது வந்ததுபோல் முகப் பொலிவு! அந்த அழகுச் சிலை மண்மீதும், சுடு நெருப்பின் ஜ்வாலையின் வீசுகின்ற சூள மீதும் உழன்றதாலே இயற்கை எழில் மறைத்து ஏழை வீட்டு முற்றத்திலே ஏங்கியது. உலகம், தன் வீட்டோடும்—வீட்டுக்கருகே இருக்கும் பானை வேகும் சூளையோடும்—அந்தப், பானைகளை விற்று வரத் தான் நடந்து செல்லும் ஊர்களோடும் முடிந்து விடுவதாகவே அவளுக்குத் தோன்றும். உடம்பு முடியாத தந்தை—உழைத்து உழைத்து உருமாறி விட்ட தாய்—ஊர் சுற்றும் தம்பி—இவர்களுக்கிடையே குடும்பப் பாசமெனும் கயிற்றினில் சுற்றி விடப்பட்ட பம்பரமாகச் சுழன்றாள் அந்தப் பாவை—பளிங்குச் சிலை!

கவலையெல்லாம் மறந்த அளவில் களிப்பு ஒருநாள் அவளை ஆட்கொள்ளும்—அதுதான் என்றைக்காவது அவள் தம்பி, பலமுறை கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஊதுகின்ற புல்லாங்<!-- verified source join: scan 9→10 -->குழல் எழுப்புகின்ற இன்ப ஓசை! அவள் அப்போது கலாபமாவாள்—அதைக் கண்டு தாய் கண்களே குளமாக்கிக் கொள்வாள்— “என் தங்கத்தை அடையும் பாக்கியம் யாருக்குக் கிடைக்கிறதோ?” எனக் கேட்டுக் கொள்வாள்.

அப்போது, உள்ளிருந்து பொன்னையாவின் “லொக் லொக்” என்ற இருமல் சப்தம்—அவன் படும் மரணவஸ்தை—அவர்களை வீட்டுக்குள் ஓடச் செய்யும்!.... .... அந்த இருமலினூடே தந்தை, மகனைக் கண்டிக்கத் தொடங்குவான். இருமல் அதிகமாகும். தன்னுள் தந்தைக்கு உயிர் வாதீன என நினைத்து சுருளிமலை வெளியேறுவான். அவனைத் தொடர்ந்து ஓடிக் கண்ணீருடன் திரும்புவாள் பொன்மணி! இந்த விசித்திரமான குடும்பத்தைப் பற்றித் தினந்தோறும் பலவிதம் திரும்பத் திரும்ப விமர்சனம் செய்யாவிட்டால் தூக்கமே வராது, தீச்சட்டி சிங்காரத்துக்கு!....

● பெயர் மட்டும் அல்ல; ஆளைப் பார்த்தாலே நெருப்பைப் பார்ப்பதுபோல்தான் இருக்கும். யாராயிருந்தாலும் எரிந்து விழுந்துதான் பேசுவான். எடுப்பான தோற்றமும் மிடுக்கான நடையும் கொண்ட அவனைக் கண்டு ஊரிலேயுள்ளவர்கள் சிறிது அச்சங் கொள்ளவே செய்வர். பேச்சு, தோற்றம், நடை உடை பாவனைகள்—இவைகளெல்லாம் கண்டு அவனை ஒரு துஷ்டன் என்று யாரும் தீர்மானித்து விடக்கூடாது. கள்ளமில்லாத உள்ளம்—என்ன பேசுகிறோம், ஏன் பேசுகிறோம், நாம் இப்படிப் பேசுவதால் யார் யாருக்கு மனசு புண்படும் என்பதைப்பற்றி யெல்லாம் கவலைப் படமாட்டான். நினைத்ததை நினைத்து முடியும் பதற்குள் வெளியே சொல்லிவிட வேண்டும். இல்லாவிட்டால் தலையிலும் இருதயத்திலும் ஏதோ பெரிய பாரம் அழுத்துவது போலிருக்கும் அவனுக்கு!

காளி கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழாவில் கதாநாயகனே தீச்சட்டி சிங்காரம்தான்! சிற்றூர் காளி கோயிலுக்கு மட்டுமல்ல; ஐம்பது மைல் சுற்றளவில் உள்ள எல்லா ஊர்களிலும் திருவிழாக் காலங்களில் தீச்சட்டி தூக்கி ஆடுவதற்கு சிங்காரத்திற்கு ஏகப்பட்ட கிராக்கி!

நல்ல வருமானம் — அநேகமாக மாதந்தோறும் அவனுக்கு வேலையிருக்கும். தீச்சட்டி தூக்குகிற நேரமின்றி மற்ற நேரங்களிலும் தீச்சட்டி ஆட்ட உடைகளே அணிந்து கொள்வதில் அவனுக்கு அடங்காத ஆசை. ஊரார் அவனைப் பார்த்து சில சமயங்களில் “காத்தவராயா! மதுரை வீரா!” என்றுகூட கேலியாக அழைப்பார்கள். இவன் எப்படி பார்வையிலும், நடை முறையிலும் நெருப்போ, அதுபோலவே அந்த நெருப்பில் பட்டதும் ‘குபீர்’ எனப் பற்றிக் கொள்ளும் கற்பூரமாக இருந்தாள் அவன் தங்கை!....

● உணர்ச்சி வசப்படும் காட்சியைக் கண்டாலோ—அல்லது அப்படியொரு செய்தியைக் கேட்டாலோ போதும்; கற்பூரத்திற்கு சாமி ஆவேசம் வந்துவிடும். பிறகு உடுக்குப் பம்பை எல்லாம் எடுத்து வர வேண்டியதுதான்! அரைமணி நேரமாவது ஆடி ஓய்வாள்; அதற்குள் அவசர அவசரமாக அபிலாஷைக்காரர்கள் குறி கேட்க ஓடி வருவார்கள் அவளும் ஆடிக்கொண்டே குறி சொல்லுவாள். கற்பூரத்தின் மகிமை அந்த வட்டாரத்திலேயே பரவி இருந்தது. வயது பதினெட்டுக்குள்ளே தானிருக்கும்—பேரழகு எனக்கூற முடியாவிட்டாலும் கவர்ச்சிக்குக் குறைவின்றிக் காணப்படுவாள். கண்களிலே அவளுக்கு ஒரு மயக்கும் சக்தியுண்டு. அவளது சிவந்த முகத்திலே நிரந்தரமாக அமைந்த ஒரு கருமையான மறு அவளுக்குத் தனிக் கவர்ச்சியைத்தான் தந்தது. எரிந்து விழும் அண்ணனைப் போலவே அவளும் “வெடுக், வெடுக்” என்று பேசுவாள். அவளத் தேவதையின் அவதாரம் என்று கருதிக்கொண்டு அனைவரும் பக்தி செலுத்தினர்களே தவிர, அவள் நல்லவளா கெட்டவளா என்று ஆராய்வதற்கு யாருமே முன் வரவில்லை. தேவ அம்சத்தைப்பற்றி ஆராய்வது பாப மல்லவா? அதனால் போலும்! தேவ அம்ச—தெய்வீகப் போர்வை—அவைகளிலேயிருந்து சமுதாயத்தை விடுவிக்க வேண்டுமென்ற நினைப்புடைய இளைஞன் ஒருவன் அந்த ஊருக்கு வந்து சேர்ந்தான். அவன் வந்த பிறகு ஊரிலே புரட்சி ஆரம்பமாகி விட்டது என்று கூறலாம்...

● புரட்சி ஏற்படுத்தக்கூடிய தோற்றமோ, முக அமைப்போ சிறிதுமில்லைதான் அவனிடம்! புரட்சிக்காரன் என்றால் தீச்சட்டி சிங்காரத்தைப் போலவா இருக்க வேண்டும்? அமைதி நிறைந்த வதனமும், அதைவிட மென்மையான சொல்லும் கொண்டு உலகத்திலே பெரும் புரட்சியை முட்டிவிடவில்லையா கெளதம புத்தர்! காட்டாற்றிலே வெள்ளம் கரைபுரண்டு வருகின்றதென்றால் அதற்காக நடைபெறும் ஆரம்பப் புரட்சி எவ்வளவு அமைதியாக யாருக்கும் தெரியாமல் நடந்து விடுகிறது! கடல் நீரைக் கதிரவன் நீராவியாக்குவதும், நீர் மேகங்களில் குளிர் காற்று மோதுவதும் எவ்வளவு அமைதியாக நடைபெறுகிற புரட்சிகள்! மழை பொழிந்து, உலகம் வெள்ளக்காடாகும் வரையில், கடல், கதிர், காற்று இவைகள் நடத்திய அமைதியான புரட்சிக் கூட்டத்தையாருமே கவனிப்பதில்லையே!

அந்த அமைதியான புரட்சியின் விளைவு உலகைப் பெரிதும் வாழ்விப்பதாகவும், சிறிதளவு அழிப்பதாகவுமே முடிகிறது; அது தவிர்க்க முடியாதது! அது போலவே மிருது வான உள்ளத்திலேயிருந்து புரட்சிக் கனல் புறப்படுகிறது. அப்படியொரு உள்ளந்தான் சிற்றூரில் முதன் முதலாக அடி யெடுத்து வைத்தது. ஆசிரியர் அறவாழியை அந்த ஊர் மக்கள் சற்று ஆச்சரியத்துடன் வரவேற்றார்கள். ஏனெனில் இதுவரை அவர்கள் ஒரு இளைஞரை ஆசிரியராகக் கண்ட தில்லை. தல நரைத்த, கொட்டை கட்டிய கிழடுகளையே கண்டு கண்டு, ஆசிரியர் இப்படித்தானிருக்க வேண்டுமென்று தீர்மானித்திருந்தவர்கள் அந்த ஊரார். அவர்கள் அறவாழியை வியப்போடு நோக்கினர். அறவாழி ஊருக்கு வந்த அன்றைக்கே சிறு சச்சரவு—அதற்குக் காரணகர்த்தா, கரகமாடி கண்ணன்...

● அழகானவன் — அரும்பு மீசையும் அரிமா நோக்கும் கொண்ட வாலிபன்—ஆழ்ந்த பக்திமான் — பூக்கரகம் எடுத்து ஆடுவதில் அவனுக்கு நிகரான திறமைசாலி யாருமே இல்லை யெனப் புகழ் பெற்றவன். பரம்பரை வழக்கம்—பழமை—இவைகளில் அசைக்க முடியாத பற்றுதல் கொண்டவன். எடுப்பார்<!-- verified source join: scan 12→13 --> கைப்பிள்ளை! யார் எதைச் சொன்னாலும் அதைக்கேட்டு நடக்கக் கூடிய சுபாவம். அவனுக்கும் தீச்சட்டி சிங்காரத்துக்கும், அந்த ஊரிலே பரம்பரைப்பகை! அவர்கள் பாட்டன் பூட்டன் காலத்திலேயிருந்து இரண்டு குடும்பங்களுமே தீச்சட்டி ஆட்டம் கரக ஆட்டம் இவைகளிலே போட்டிபோட்டு சண்டையிட்டுக் கொண்டு விலகி வாழ்பவை. எல்லாச் சண்டைகளையும் தீர்த்து வைக்கும் பஞ்சாயத்தார் பரமசிவம் இவர்கள் சண்டையைத் தீர்க்க முடியாமல் திணறுகிறார்...

● வெகுளி! வெளுத்ததெல்லாம் பால் அவருக்கு! ஊரிலே அவர் வீடு பரம்பரைப் பணக்காரவீடு. சுத்தக் கருமி - சுருட்டு ஒன்றை அணைத்து அணைத்து மூன்று நாளைக்குப் புகைப்பார். ஏழை விவசாயிபோலத் தோற்றமளிக்கும் அவருக்கு எழுபது ஏக்கராவுக்கு மேல் நிலபுலம், தோட்டம் துரவுகள் உண்டு.

“எல்லாம் ஆண்டவன் தந்தது” என்ற வாசகத்தை ஒரு நாளைக்கு ஆயிரம் தடவையாவது உச்சரிக்கும் அவருக்கு ஒரு பைத்தியத்தை மகனைத் தந்து விட்டார் ஆண்டவன். பைத்தியக்கார மகனைப்பற்றி விளக்கம் எதற்காக உங்களுக்கு! கதையில் பல இடங்களில் வரப்போகிறான்—அப்போது சுவைக்கலாம் அவனது செயல்களையும் பேச்சுக்களையும்!

ஓரளவுக்கு அறிமுகம் முடிந்து விட்டது. இடையிடையே பலர் வருவர்; போவர்

கலைஞர் மு. கருணாநிதி · சுருளிமலை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்