பொருளடக்கம்

சுருளிமலை

அத்தியாயம் 27 · 27 / 26

அத்தியாயம் 27

Chapter 27

மூல ஸ்கேன் 193–197

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

27

அண்ணனும் தோற்றுவிட்டான்—கண்ணனும் தோற்றுவிட்டான் என்றதும் கற்பூரத்திற்கு ஒரே குழப்பமாகி விட்டது உள்ளம். கண்ணன் உயிர் பிழைப்பானா என்ற கவலை இப்போது அவளைச் சூழ்ந்து கொண்டது. போட்டியின் முடிவைப்பற்றி அவள் அறிவதற்கு ஆவல் கொண்டிருந்தாலும் அங்கு நிற்காமல் கண்ணனைப் பார்க்க ஓடிவிட்டாள்.

கண்ணன், விழிகளைத் திறக்காமல் பிணம்போல் கிடந்தான். மருத்துவர்கள் ஓடியாடித் தங்கள் திறமையைக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

சிங்காரம் ஆபத்தான நிலைமையில் இல்லாவிட்டாலும் வலி பொறுக்க முடியாமல் கத்திக் கொண்டிருந்தான்.

கற்பூரம் இருவரையும் பார்த்துப் பார்த்து கண்ணீர் விட்ட படி அங்கு நின்று கொண்டிருந்தாள். அண்ணன் பக்கத்திலே அவளுக்கு நெருங்குவதற்குப் பயம்—என்ன சொல்லி விடுவானோ என்ற அச்சம்!

இப்படி இக்கட்டான நிலையில் தவித்துக் கொண்டிருந்த அவள் காதில் மாரியம்மன் திடலில் ஒலித்துக் கொண்டிருந்த முழக்கம் சற்று வேகமாகக் கேட்டது.

வலியினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த சிங்காரம் "என்ன? அறவாழி போட்டியில் குதித்துவிட்டானா?" என்று தனக்குத் தானே உரக்கக் கேட்டுக் கொண்டான்.

அவன் நினைத்தபடியே அறவாழி, காளையுடன் போருக்குத் தயாராகிவிட்டான்! பொன்மணியோ அவன் காலடியில் கிடந்தவாறு, "என்னை மறந்து உயிர் வாழுங்கள்" என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

இதைக் கண்ணுற்ற ஒரு பெரியவர், "இனிமேல் எதற்காகப் போட்டி? போட்டி போட்டவர்கள் இருவருந்தான் தோற்றுவிட்டார்கள். பொன்மணி, அவளுக்கு இஷ்டமானவனைக் கட்டிக் கொள்ளட்டுமே!" என்றார்.

உடனே பஞ்சாயத்தார் பரமசிவம் அதை மறுத்தார். "போட்டியில் ஜெயித்தவன்தான் பொன்மணியை அடையலாம் என்பது பொதுவான பந்தயம். அதை மாற்றக்கூடாது!" என்பது அவரது வாதம்.

அறவாழி, அந்த வாதத்தை ஏற்றுக் கொண்டான். பொன்மணியினால் முடியவில்லை. எப்படியாவது அறவாழியின் உயிரைக் காப்பாற்றிவிட வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு அவனுக்கு நேரே நின்று தைரியத்தோடு எதிர்த்தாள்.

அறவாழி, அவளைப் பார்த்து "பொன்மணீ...! என்னைக் கோழையாக்காதே!" என்று கத்தினான்.

அதற்குள் சுருளிமலை காளையை சற்றுக் காலாற்றி ஓய்வளித்துக் கொண்டு வருவதற்காக ஓட்டிக்கொண்டு புறப்பட்டான்.

பொன்மணி, சுருளிமலையிடம் சென்று "தம்பீ! காளையோடு எங்கேயாவது ஓடிவிடு! அவரைக் காப்பாற்று!" என்று காதோடு காதாகக் கெஞ்சினாள்.

"அக்கா! பயப்படாதே! உன் இஷ்டப்படி எல்லாம் நடக்கும்" என்று சுருளிமலை பதில் கூறிவிட்டுக் காளையுடன் போனான். காளையும் அவனுமாக வேப்பமரத்தடிக்குச் சென்றார்கள். சுருளிமலை காளையின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கண்களிலிருந்து ஆறெனப் பெருகிற்று நீர்!

காளையை அங்கேயே நிற்க வைத்துவிட்டு அருகேயுள்ள தோட்டத்து வேலிப்பக்கம் போனான். அங்கே முளைத்துக் கிடந்த ஒருவிதப் பச்சிலையைப் பறித்தான். அதை ஏன் அவன் பறிக்கிறான்? அந்தப் பச்சிலை விஷ மூலிகை ஆயிற்றே? மாடுகளைக் கொல்லக் கூடிய சக்தியுடைய பச்சிலை யாயிற்றே அது! அதை அவன் பறிக்க வேண்டிய அவசியம் என்ன?

கை நிறைய இலைகளைப் பறித்துக்கொண்டு சிவாவிடம் வந்தான். சிவாவின் முதுகைத் தட்டிக் கொடுத்தான். அது அவனை நக்கிற்று. காளையையே உற்றுப் பார்த்தான். பிறகு, கையிலிருந்த இலைகளை அதன் வாயில் நீட்டினான். அது தயங்<!-- verified source join: scan 194→195 --> கிற்று. ஆனால் அவன் விடவில்லை. சற்று பிடிவாதத்துடன் இலைகளை அதன் வாயில் திணித்தான். காளை, மறுக்காமல் அவைகளை விழுங்கிற்று. சுருளிமலை விக்கி விக்கி அழுதவாறு, அதன் கழுத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டான். காளைக்கு ஒன்றும் புரியவில்லை. அசையாமல் நின்று கொண்டிருந்தது.

சுருளிமலை, காளையைப் பார்த்து "கண்ணே சிவா!" என்றான் மெதுவாக. பிறகு ஓங்கிக் கூச்சலிட்டான். ஒரு சமயம் சிவாவை அவன் பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறான். அது முதல் தான் சிவா அவனுக்கு நண்பனாயிற்று!

ஒரு வயலில் இறங்கி விளைச்சலைக் கெடுத்துவிட்டு சரியான படி சேற்றில் சிக்கிக்கொண்டு தவித்த சிவாவை ஏழெட்டு முரடர்கள் கூடி அடி அடியென்று அடித்துத் தள்ளினார்கள். அப்போது சுருளிமலைதான் ஓடிப்போய் அவர்களை யெல்லாம் விலக்கி காளையை மீட்டுக்கொண்டு வந்தான். அது முதல் சிவாவும் அவனும் இணைபிரியாதவர்களாகி விட்டார்கள்! முரட்டு மனிதர்களிடம் சிக்கிய சிவாவைக் காப்பாற்றிய சுருளிமலை இப்போது அதைக் கொல்லவே தீர்மானித்து விட்டான்!

ஏன்?

தன் அக்காளுக்காக!

அறவாழியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக!

அவனால் அழக்கூட முடியவில்லை. சிவாவை ஓட்டிக்கொண்டு திடலுக்கு வந்தான். அறவாழி முன்னே கொண்டுபோய் நிறுத்தினான். பறையொலி தீவிரமாக முழங்கிற்று.

அறவாழி, காளையை எதிர்க்கத் தயாரானான். பொன்மணி, மயக்கமுற்றுக் கீழே விழுந்தாள். காளை அறவாழியின் மீது ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தது. அவன் சமாளித்துக்கொண்டு விலகினான். நெடுநேரம் சண்டை! கூடியிருந்தார் வியக்கும் வண்ணம் அறவாழி காளையிடம் போரிட்டான். நாலைந்து முறை அறவாழியின் வயிற்றைக் கிழித்து ஆளையே நசுக்கிவிடும் என்று அஞ்சக் கூடிய அளவுக்கு அவன்மீது பாய்ந்த காளை குறி தவறித் தரையிலே தலையை மோதிக் கொண்டது.

சுருளிமலை கொடுத்த மருந்து வேலை செய்யத் தொடங்கி விட்டது போலும்!

அறவாழியும் காளையின் பலகீனத்தை உணர்ந்துகொண்டு அதை அதிகமாக ஆட்டிப் படைத்தான். ஓடவைத்தான். பாய வைத்தான். தரையை முட்டவைத்தான். அறவாழியின்மீது பாயும் போதெல்லாம் காளை சுழன்று சுழன்று கீழே விழுந்து எழுந்தது. நெடுநேரம் போராட்டத்திற்குப் பிறகு, அறவாழி அதன் கொம்புகளைப் பிடித்துக் கொண்டு முதுகில் ஏறி உட்கார்ந்தான். ஒரே மகிழ்ச்சி! ஆரவாரம்! பறையொலி முழங்கிற்று, உற்சாகமாக!

அறவாழி ஜெயித்து விட்டான்!

பொன்மணி, கண் விழித்துப் பார்த்தாள். அறவாழி ஜெயித்து விட்டான்! அவனைக் சுமந்து நின்ற காளை கீழே விழுந்தது. எல்லோரும் காளையிடம் ஓடிவந்தார்கள்—காளை செத்துவிட்டது! சுருளிமலையின் ஆருயிர் நண்பன் தன் ஆட்ட பாட்டத்தை யெல்லாம் அடக்கிக் கொண்டு சவமாகக் கீழே கிடந்தான்!

பொன்மணி, அறவாழியிடம் ஓடினாள். அறவாழி, சுருளிமலையைத் தேடினான். அவன் அங்கு இல்லை. பொன்மணியை அழைத்துக் கொண்டு சுருளிமலையைத் தேடுவதற்கு வேப்பமரத் தடிக்கு ஓடினான். சிவா இறந்து விட்டதற்காக அவனிடம் மன்னிப்புக் கேட்கவே அவன் ஓடினான்.

வேப்பமரத்தடியில் அவர்கள் கண்ட காட்சி! அய்யோ! சுருளிமலையின் புல்லாங்குழல் கீழே கிடந்தது! பொன்மணி, அண்ணாந்து பார்த்தாள்! சுருளிமலை மரக் கிளையில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தான்! அக்காளின் நல் வாழ்வுக்காகத் தம்பி தன் தோழனையும், தோழனின் பிரிவுக்காகத் தன் உயிரையும் இழந்தான்!

இனி என்ன? பொன்மணியும் பூஞ்சோலையும் அழுதனர்; புலம்பினர்!

பொன்னையாவினுடைய கல்லறைக்கு அருகே சுருளிமலைக்கு ஒரு கல்லறை—அவன் கல்லறைக்கு அருகே கோயில்காளை சிவாவுக்கு ஒரு கல்லறை!

கண்ணன், உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்தான் சிங்காரம் சிறுகச் சிறுகப் பிழைத்துக் கொண்டான். கிழிக்கப்பட்ட வயிற்றிலிருந்து வடிந்த குருதியின் வழியாக வஞ்சக நினைவுகள் போய்விட்டதுபோல் கண்ணன் வாயிலிருந்து நல்ல வார்த்தைகள் வெளிப்பட்டன. சிங்காரத்தின் காலில் விழுந்து தன் தவறுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். சிங்காரமும் அவனை மன்னித்து விட்டான் பிணமாகத் தொங்கிய மைனாவின் முந்தாணியில் சிங்காரத்தின்மீது பழி சுமத்திக் கடிதம் எழுதியதும் தானே தான் என்பதை கண்ணன் ஒப்புக்கொண்டான். தன் நெஞ்சிலே இருந்த பாரங்கள் இறங்கியதால் மன நிம்மதியே மருந்தாகி அவன் உயிரைக் காப்பாற்றியது. பிறகு கற்பூரத்தின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்

கழுதை ஊர்வலம் நடத்துவதாகச் சபதம் செய்த சிங்காரம், "கற்பூரம்-கண்ணன்" கல்யாண ஊர்வலத்தை நடத்திமகிழ்ந்தான்!

தந்தையையும் - தம்பியையும் இழந்த பொன்மணி, தாயின் அன்பிலும் அறவாழியின் முகங்காண்பதிலும் ஆறுதல் கொண்டு வாழ்வதற்குத் துணிந்தாள்!

பஞ்சாயத்தார் பரமசிவம் அனைவரையும் வாழ்த்துவதற்குத் தயாராய் வந்து சேர்ந்தார்!

[முற்றிற்று.]

கலைஞர் மு. கருணாநிதி · சுருளிமலை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்