பொருளடக்கம்

பெரிய இடத்துப் பெண்

பகுதி 5 · 5 / 7

வீரன்

Veeran

மூல ஸ்கேன் 38-44

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

வீரன்

அத்தான்! அத்தான்! என்ன வேண்டியிருக்கு. அத்தான்! அந்தப் பாதகி என்னை அப்படியா வஞ்சிப்பது? படிக்காத முட்டாள்தானே என்று எண்ணமா அவளுக்கு! குழந்தையிலிருந்து குமுதா என்றால் எனக்கு அலாதிப் பிரியம். அவளும் அப்படித்தான்.

“அப்படிப்பட்ட குமுதாவை எண்டா வீரா பாதகி என்று கூறுகிறாய்?” என்று நீங்கள் கேட்பது சகஜம். அதற்குமுன் என் வரலாற்றைக் கேளுங்கள். என் வரலாறு வேடிக்கையானது. வண்டி போகும் பாதையைப்போல வளைவுகள் நிரம்பியது. மேடுபள்ளங்கள், குண்டு குழிகள் ஏராளம்.

உத்தண்டி மாமா உலகநாதர் பண்ணைத் தலையாரி, அவருடைய மகள்தான் குமுதம். குமுதத்தை எனக்குக் கட்டிக்கொடுப்பதாக உத்தண்டி மாமா உறுதி கூறியிருந்தார். நான் குமுதாவைக் கல்யாணம் செய்து கொள்வதாக இருந்தால் ஏதாவது சம்பாதிக்கும் வழியைத் தேட வேண்டாமா என்று யோசித்தேன். அதற்காக என் உத்தண்டி மாமா சிபாரிசு செய்தார். உலகநாதர் வீட்டு வண்டிக்காரனாக அமர்ந்தேன். வண்டிக்கார உத்தியோகத்திற்கு ஊதியம் மாதம் ரூபாய் ஐந்து. உலகநாதர் வீட்டிலேயே சாப்பாடு. வண்டிக்காரனுக்கு வாய்க்காத சுகம் வலுவில் வந்தது. அடிக்கடி எஜமானர் ஊருக்குப் போவார். எஜமானர் ஊருக்குப் போய்விட்டால் கண்ணம்மா எனக்குச் செய்யும் உபசாரங்கள் பலமாயிருக்கும். வெகுநாள் வரையில் எனக்கு அது ஏன் என்று புரியவில்லை.

ஒருநாள் கண்ணம்மா, உலகநாதருக்கு வீட்டைப் பற்றிய கவலையே இல்லை என்று குறைப்படலம் ஆரம்பித்தாள். “ஆமாங்க அண்ணி” என்று நான் தலையசைத்தேன். இன்னொருநாள், “உலகநாதர் நடத்தையே சரியில்லை வீரா!” என்று கண்ணம்மா கூறினாள். அதற்கும் ஆமாம் போட்டுவிட்டு நகர்ந்தேன். “உட்காரு வீரா! அவரும் ஊரிலில்லை. ஏதாவது ஊர்க் கதை இருந்தால் சொல்லு!” என்று வற்புறுத்தினாள். இரவு பத்து மணி வரையில் என்னென்னவோ வம்பளந்தாள். பிறகு வீட்டுக்குத் திரும்பிவிட்டேன். எனக்கு வீடு எது? மாமன் வீட்டுத் திண்ணையில்தான் படுக்கை.

மற்றொருநாள், “உலகநாதரைக் கண்டாலே எனக்குப் பிடிக்கிறதில்லை. சுத்த அசடு!” என்று கண்ணம்மா கதையைத் துவக்கினாள். நானும் உட்கார்ந்து கதையைக் கேட்டுக்கொண்டிருந்தேன். “உலகநாதரோடு வாழ்க்கை நடத்துவதே கசப்பாக இருக்கிறது” என்று முடித்தாள். “எல்லாம் சரியாகிவிடும் அம்மா” என்று சொல்லிவிட்டு எழுந்தேன். “என்னப்பா அவசரம்!” என்று என் துண்டைப் பிடித்து இழுத்தாள் கண்ணம்மா. எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

பெரிய இடத்துப் பெண்ணுடன், அதுவும் இளம் வயதுள்ள பெண்ணுடன்; உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதே எனக்குப் பயத்தைக் கொடுத்து வந்தது. நிலைமை இப்படி விபரீதமாகிவிட்ட பிறகு என்னால் என்ன செய்ய முடியும்? “விடுங்கள் அம்மா” என்று கூற வாயைத் திறந்தேன். வாயில் நீரில்லை; வற்றிவிட்டது. நாக்கை அசைக்கவும் முடியவில்லை. ஈரமில்லாத தொண்டைக் குழியில் ஏதோ ஒரு தொந்தரவு ஏற்பட்டதுபோல் இருந்தது. அதற்குள் நான் மெய்மறந்துவிட்டேன். கண்ணம்மாவின் கரங்கள் என் தலையைக் கோதிக்கொண்டிருந்தன. என் ‘முண்டாசு’ அவிழ்ந்து விழுந்து விட்டதையும் அப்பொழுதுதான் பார்த்தேன். ஒரு நல்ல இடத்து ஸ்திரீ இவ்வளவு கேவலமாகப் போய்விட்டாளே என்ற ஆச்சரியத்தால் என் இருதயம் வாயு வேகத்தில் அடித்துக்கொண்டிருந்தது. உலகநாதர் பண்ணையைப் பற்றி ஊரிலே எவ்வளவு புகழ்! அந்த வீட்டு அம்மாள் சாதாரண ஒரு கூலிக்காரனுக்கு ஆசை நாயகியாக ஆவதென்றால் எவ்வளவு மட்டரகமான தன்மை என்பதை முதலில் சிந்தித்தேன். சிந்தனை நீண்டநேரம் நிற்கவில்லை. சிசுப் பருவத்திலேயே சிதைந்துவிட்டது. எஜமானி யம்மாளுக்கு விரோதமாக நடக்கவோ, விருப்பத்தை மறுக்கவோ எனக்கு மனம் வரவில்லை. தாட்சண்யத்திற்காகத் தலையசைத்துவிட்டேன். குமுதாவின் மேலிருந்த அன்பைக்கூட கொஞ்சநாள் ஒத்திப்போட்டிருந்தேன். எனக்கும் கண்ணம்மாவுக்கும்—பிறகு கேட்கவேண்டியதில்லை. உலகநாதரைவிட என் பதவி ஒருபடி உயர்ந்ததாக மாறிவிட்டது. காலம் போனதே தெரியவில்லை. மகாராணியின் அன்பை ஒரு குதிரைக்காரன் பெற்றதாக ‘ராஜாபர்த்ருஹரி’ கதையிலே பார்த்திருக்கிறேன். அவனுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? உண்மையாகவே உலகநாதருக்கும் கண்ணம்மாவுக்குந்தான் பொருத்த வித்தியாசம். வண்டியிலே ‘சண்டி’ மாட்டையும், ‘ஜாதி’ மாட்டையும் ஒன்றுக்குக் கட்டி ஓட்ட முடியுமா? எப்படியோ கண்ணம்மாவுக்கு நான் தேவையான பொருளாகிவிட்டேன். அவள் எனது பாதங்களில் விழுந்து கிடந்தாள்.

ஒருநாள் கண்ணம்மா என்னிடம் ஒரு துண்டுக் காகிதத்தைக் கொடுத்தாள். அதில் என்ன எழுதியிருக்கிறது என்று அவளை நான் கேட்டேன். “ஒரு மருந்து” என்றாள். அதோடு நிற்கவில்லை; “எல்லாம் உன்னால்தான்” என்று கூறி உடம்பை லாகவமாக அசைத்தாள். “புரியவில்லையே” என்று சொல்லி நான் விழித்தேன். பிறகு விவரத்தைச் சொன்னாள். கார்க்குச்சியால் உடம்பில் ‘சுவீர்’ என்று குத்தியதுபோல் இருந்தது எனக்கு. அவளுக்குக் குழந்தை பிறந்தால் என்னைப் போலப் பிறந்துவிடும் என்ற பயம். இங்கிலீஷ் மருந்துக்கடையில் நான் அந்த மருந்தை வாங்கிவந்தேன். அதைக் கொடுக்கும்போது கடைக்காரர் என்னை வெறித்துப் பார்த்தார். நான் திரும்பிப் பார்க்காமலே வந்துவிட்டேன். கண்ணம்மா அதை சாப்பிட்டாள். கர்ப்பத்தைக் கருவோடு தொலைத்துவிட்டோம்.

இருந்தாற்போலிருந்து என் மனதில் ஏதோ ஒரு புயல் வீச ஆரம்பித்தது. வாழ்க்கை வண்டி பெரிய தொரு பள்ளத்தில் சிக்கிக் கவிழ்வதுபோல் தெரிந்தது. கண்ணம்மாவினையும் என்னையும் பற்றி ஊரில் ஏதேதோ பேசிக்கொள்வதாகக் காதில் விழுந்தது. பிறகு கண்ணம்மாவுடன் பேசுவதை நிறுத்திவிட்டேன். அவள் நிமிர்ந்து பார்ப்பதுகூடக் கிடையாது.

எனது ஆசைகள் எல்லாம் குமுதாவிடம் திரும்பின— குமுதாவைக் கல்யாணம் செய்துகொள்ளும் நாளை எதிர்பார்த்துக் கிடந்தேன். தை மாதத்தில் கல்யாணத்தை முடிக்கப் போவதாக உத்தண்டி மாமா கூறினார்; எனக்கு அடக்க முடியாத ஆனந்தம்! நான் குமுதாவை மனப்பூர்வமாக நம்பினேன். என்னை ஏமாற்றமாட்டாளென்று எண்ணிக்கிடந்தேன். ஆனால், இலவு காத்த கிளியாக ஆகிவிட்டேன். குமுதா உலகநாதர் வீட்டுக்கு வேலைக்காரியாகப் போனாள். போகும்போதுகூட நானும் அவளும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். அடிக்கடி தன்னைச் சந்திக்கும்படி கூறினாள். இரண்டு சொட்டுக் கண்ணீர்கூட விட்டாள். எல்லாம் பசப்பு என்பது எனக்கு அப்போது புரியவில்லை. நான் அவளை நம்பி எஜமானியையே புறக்கணித்து வந்தேன்.

ஆனால்....அன்றிரவு.........அடாடா.... அதை நினைத்தாலே இரத்தங் கொதிக்கிறது. வண்டி மாடுகளுக்குத் தீனி வைத்துவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். கண்ணம்மா ஓடிவந்தாள். என்னைப் பரபர வென்று இழுத்துக்கொண்டு வீட்டுக்குள் போனாள். எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை. திமிர்க்கொண்டு போகவும் முடியவில்லை. என்ன இருந்தாலும் பழைய கண்ணம்மா தானே! வீட்டின் தாழ்வாரத்திலுள்ள அறைப் பக்கம் இழுத்துச் சென்றாள். அறையின் ஜன்னலிலுள்ள துவாரத்தின் வழியாக என்னை உள்ளே பார்க்கச் சொன்னாள். பார்த்தேன். அதைப் பார்த்த போது என் மனம் பட்ட பாட்டை எப்படி வர்ணிக்க முடியும்? கண்ணம்மா மட்டும் என்னை உடனே இழுத்துக்கொண்டுபோய் விடாவிட்டால் அந்த அறை தூள் தூளாகியிருக்கும். குமுதா என் கையால் இறந்திருப்பாள்.

“உன் ஆசைக் காதலி குமுதாவின் போக்கியதைப் பார்த்தாயா?” என்று கேட்டாள் கண்ணம்மா!

நான் என்ன சொல்லுவது! குனிந்த தலை நிமிரவில்லை. என் உடல் சூடேறிப் போய்விட்டது. கண்ணம்மா மட்டும் என்னை அவளுடைய அறைக்கு அழைத்துச் சென்றிராவிட்டால் இரத்தக் கொதிப்பால் மாண்டிருப்பேன். என்னிடம் உயிரை வைத்திருப்பதாகக் கூறிக்கொண்டு இருந்த குமுதா உலகநாதருடன் உல்லாசமாயிருப்பதை என் கண்களால் கண்டேன். சத்தியமாகச் சொல்கிறேன்; குமுதா ஒரு விபசாரி!

எந்தக் கண்கள் குமுதாவைக் கனிவோடு பார்த்தனவோ! அந்தக் கண்கள் இரத்த நிறமாக மாறிவிட்டன. எந்தக் கரங்கள் அவளது மேனியைத் தொட்டுத் துடித்தனவோ! அந்தக் கரங்களே அவளை ஒடித் தெரியத் துடித்தன.

கண்ணம்மாவின் சமாதானத்தில் அடங்கினேன். கண்ணம்மாவுக்கு என் வாழ்க்கையைப்பற்றி இருக்கும் அக்கறை அந்தக் குமுதாவுக்கு இல்லையே! இல்லாவிட்டாலும் பரவாயில்லை. என்னை இளிச்சவாயனாக ஆக்கிவிட்டாளே! இனிக் குமுதாவைவிட ஒரு வேசி உலகத்திலே பிறப்பாளா? பிறக்க முடியுமா? எனக்கு உயிரை அர்ப்பணிப்பேன் என்றாளே! உலகநாதருக்கு உடல் விற்றதை நான் நேரில் கண்டேனே! அதற்கு இனிச் சாட்சியா வேண்டும்?

மறுநாள் காலையில் குமுதாவுக்குச் சரியான தண்டன் கிடைத்தது. அவள் செய்த குற்றத்தைக் கடவுள் பொறுப்பாரா? தெய்வமே சகிக்காத தவறை அல்லவா அவள் செய்தாள்! அதற்குத் தெய்வம் தந்த தண்டனை சரியான தண்டனை. குமுதாவுக்குக் காலரா கண்டுவிட்டது. வாந்தி பேதிக்கு இலக்கானாள். அந்த வஞ்சகி! கருப்பு மனம் படைத்த அந்தத் தாசியின் ஆபாச வாழ்க்கை அழிந்தது, என் சாபம் என்ன சாமான்யமானதா? ஏமாந்து போனவன் கொடுத்த சாபமல்லவா? கைவிடப்பட்ட வீரனின் கோபாக்கினிக்கு அந்தக் கொலைகாரி இரையாக வேண்டியதுதானே நியாயம்! அவள் சாகும்போது நான் அருகில்தான் இருந்தேன். என்னை இரண்டு மூன்று முறை பார்த்தாள். நான் அந்த இராக்ஷசியின் முகத்தில் விழிப்பதே பாபம் என்று கருதி அந்த இடத்தை விட்டுப் போய் விட்டேன். பொழுது போவதற்குள் குமுதா போய்விட்டாள்.

என்னைக் கல்யாணம் செய்துகொண்டு ஊர்வலம் போகப் போகிறதாகச் சொல்லி, அதிலே தனக்கு ஆசையிருப்பதாக நடித்த அந்த நாசக்காரி பாடையில் பவனி போனாள். அதைப் பார்த்து நான் மகிழ்ந்தேன்.

உத்தண்டி மாமா கதறினார். தெருவில் புரண்டார். பாவம், பெற்ற தோஷம்; புலம்பினார். அந்த விபசாரியை இவர் ஏன் பெற்றார்?

குமுதா இறந்துபோன அன்றிரவே நானும் கண்ணம்மாவும் ஒரு திட்டம் தயாரித்தோம். அதை அமுலுக்குக் கொண்டுவர அதுவே ஏற்ற நாளாயிற்று. அந்தத் திட்டந்தான் என்னை இவ்வளவு பெரிய அதிர்ஷ்டக்காரனாக ஆக்கிவிட்டது. இப்பொழுது என்னைப் பாருங்கள்! நான் வண்டிக்கார வீரனா?

மு. கருணாநிதி · பெரிய இடத்துப் பெண், எட்டாம் பதிப்பு (ஜூலை 1953, திராவிடன் பதிப்பகம், வேலூர்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்