பகுதி 6 · 6 / 7
உலகநாதர்
Ulaganathar
மூல ஸ்கேன் 45
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
உலகநாதர்
வண்டிக்காரவீரன்தான்! என் உப்பைத்தின்றவன்தான் இந்த வேலை செய்துவிட்டான். அவனைக் கோபித்துக்கொண்டு பயன் என்ன? எல்லாம் அந்தத் தடவை செய்த வேலை. கண்ணம்மா. என்னைக் கடவுளாகப் பாவிப்பதாகச் சொன்னாளே! அவளா இந்த வேலை செய்துவிட்டாள்? விபசாரி! வீரனுக்கும் கண்ணம்மாவுக்கும் எத்தனை நாள் தொடர்பு? ஒரு வேளை நான் குமுதாவைக் காதலித்தது அவளுக்குப் பிடிக்கவில்லையா? அதை என்னிடம் நேரில் சொல்லியிருக்கலாமே! நான் என்ன உலகத்திலே இல்லாத தவறு செய்துவிட்டேன்? ஊரார் மெச்ச வாழ்ந்த என் குடும்பத்தின் பரம்பரைப் புகழுக்கு இழுக்கு வந்து விட்டதே! அட கடவுளே!
ஒருவேளை என்னைவிட வீரன் அழகு என்பது கண்ணம்மாவின் எண்ணமா? விகாரமாயிருப்பதற்காக நான் என்ன செய்ய முடியும்? நான் அழகு இல்லாதவன்தான்; ஒத்துக் கொள்கிறேன். எனக்கு உணர்ச்சி இல்லை என்று யாராவது கூறமுடியுமா? கண்ணம்மா! உன்னை நம்பி இருந்தேனே! பெண் பிசாசே! பாம்பின் விஷத்தையும் நம்பலாம்; உன் பசப்பு வார்த்தையை நம்ப முடியாதபடி என்னை உனக்குப் பிடிக்கவில்லையானால் அப்பொழுதே என்னிடம் சொல்லி இருக்கலாமல்லவா கள்ளி! பாசமுள்ளவள்போல் நாடகம் ஆடியே, பத்திர காளி! உனக்குத் தெய்வம் நல்லது காட்டுமா?
மு. கருணாநிதி · பெரிய இடத்துப் பெண், எட்டாம் பதிப்பு (ஜூலை 1953, திராவிடன் பதிப்பகம், வேலூர்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்