பொருளடக்கம்

பெரிய இடத்துப் பெண்

பகுதி 7 · 7 / 7

கண்ணம்மா — முடிவு

Kannamma

இத்தலைப்பு மூலக் காப்பகத்தின் வாசிப்புப் பிரிவுக்கான விளக்கக் குறிப்பே; அச்சிடப்பட்ட தலைப்பு அல்ல.

மூல ஸ்கேன் 46-49

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

கண்ணம்மா

தெய்வம் காட்டிய வழிப்படித்தான் நான் நடக்கிறேன். அகல்யை செய்ததைவிட நான் என்ன அதிக அக்கிரமம் செய்துவிட்டேன்? தாரை செய்ததைவிட நான் செய்த தவறு பெரிதா? அப்பேர்ப்பட்ட பார்வதியே பிரம்மாவிடம் ஏமாந்து விட்டாளே, உலகத்திலே நடக்கும் அத்தனை அக்கிரமங்களும் தெய்வங்கள் காட்டிய வழிகள் தானே.

உலகநாதர் என்னைக் கோபித்துக் கொண்டிருப்பார். என்னைத் துரோகி என்று கூறுவார்; விபசாரி என்று சொல்வார், எது வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளட்டுமே! நான் வருந்தலாகச் செய்யாத காரியத்தை இப்பொழுது என்ன புதிதாகச் செய்துவிட்டேன்? வீரனுடன் வெளியூருக்குப் புறப்பட்டு விட்டேன் வேண்டுமானால் புதிய காரியம் என்று சொல்லலாம். உலகநாதர் ஒழுங்காக நடந்து கொண்டாரா, நான் நடந்துகொள்ள? நான் ஒருத்தி இருக்கும்பொழுது இவருக்கு ஏன் குமுதா மேல் ஆசையும் மோகமும்?

அவர்களுக்கு துரோகம் செய்ய நானா ஆள்? வீட்டிலேயே இருந்து கொண்டு உலகநாதருக்கு மனைவியாக நடித்துக்கொண்டு வீரன் விருந்தில் நாளைக் கடத்த நான் எண்ணியதுண்டு. அதை கெடுத்தது என் கணவர்தானே! கணவன் என்ற பொம்மையாகாவது அவர் இருந்திருக்கலாம். குமுதாவைக் கோரியதால் அந்தப் பதவியையும் இழந்து விட்டார், பாவம்! எனக்கு உலகநாதர் மேல் இரக்கம் எப்படிப் பிறக்கும்? பெண்ணினத்தைச் சேர்ந்த குமுதாவின் சாவுக்கே நான் தானே காரணமாயிருந்தேன்! குமுதாவை நான் அந்தப் பாடு படுத்தாவிட்டால் வீரனின் விருந்து கிடைக்குமா? குமுதா இறந்த காரணம் உங்களுக்குத் தெரியுமா?

அன்றிரவு அவள் கற்பழிக்கப்பட்டாள். உலகநாதரின் வெறியின் முன் அவள் ஒரு பெட்டிப் பாம்பானாள். குமுதாவையும் வீரனையும் பிரிக்க நான் செய்த சூழ்ச்சியில் வெற்றி பெற்றேன். உலகநாதரும் குமுதாவும் ஒரே அறையில் இருந்ததை வீரன் பார்த்தான்—பார்க்கும்படி நான் செய்தேன். மறுநாள் காலையில் குமுதா வக்குப் பேதி கண்டது. காலரா என்று எல்லோரும் சொன்னார்கள். அவள் அவமானந் தாங்கமாட்டாது வைரத்தைத் தின்றுவிட்டாள் என்பது எனக்கும் அவளுக்குமே தெரியும். எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்டீர்கள். என் வைர மூக்குத்தி தூளாகப் பட்டுக் கிடந்தது; அதிலுள்ள வைரத்தைக் காணவில்லை, நான் அந்தச் செய்தியை அப்படியே மறைத்து விட்டேன்.

குமுதா சாயங்காலம் இறந்துவிட்டாள். அப்பொழுதும் கல்மனங் கரையவில்லை. வீரன் குமுதா மேல் ஆத்திரமாக இருந்தானே தவிர, கொஞ்சங்கூடக் கவலைப்படவில்லை. அவனைக் கவலைப்பட நான் விட வேணா?

வண்டிக் கொட்டகையில் ஒரு கடிதம் சொருகியிருந்தது. இது வீரனுக்குக் குமுதாவினால் எழுதப்பட்ட கடிதம். அதைக் கடிதம் என்று கூடச் சொல்லமுடியாது. குமுதாவின் வாழ்க்கைக் குறிப்பை அப்படியே தீட்டியிருந்தாள். பிறந்தது முதல், வைரத்தைச் சாப்பிட்டுச் சாகத் துணிந்தது வரை ஒன்றுவிடாமல் எழுதியிருந்தாள். அதை நான் எடுத்துப் படித்தேன். கிழித்து எறிந்ததோடு விடவில்லை. அடுப்பில் போட்டுச் சாம்பலாக்கி விட்டேன். வீரன் கண்ணில் அந்தக் கடிதம் அகப்பட்டிருந்தது, அதிலுள்ள விஷயத்தை அவன் அறிந்திருந்தால் என்னைச் சித்திரவதை செய்திருப்பான். ஆனால், இப்பொழுது நான்தான் என் சிரிப்பால் அவனைச் சித்திரவதை செய்கிறேன்.

நானும் வீரனும் இப்பொழுது எங்கிருக்கிறோம் தெரியுமா? கல்கத்தாவில் நடக்கிறது எங்கள் வாழ்க்கை. குமுதா இறந்துபோன அன்று மாலையில் என் கணவர் கடை சம்பந்தமான வேலையில் எங்கேயோ போய்விட்டார். குமுதா இறந்துபோன கவலை வேறு அவருக்கு! அன்றிரவே நானும் வீரனும் வீட்டை விட்டுப் புறப்பட்டுவிட்டோம். நான் வரும்போது சுமார் பத்தாயிரம் ரூபாய் வரையில் எடுத்துக்கொண்டுதான் புறப்பட்டேன். இரவே எங்கள் கிராமத்துக்கு அருகிலுள்ள ரயிலடிக்கு வந்துவிட்டோம். ரயிலடிக்கு வீரன்தான் வண்டியோட்டி வந்தான். அதோடு அவன் வண்டியோட்டும் தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. என்னுடைய வேசின் வாழ்வும் தொலைந்தது.

அந்த நடு நிசியில் வீரன் வண்டியை வெகு வேகமாகத்தான் ஓட்டிச் சென்றான். நான் அவனது தோளில் சாய்ந்திருந்தேன். குமுதா இந்தப் பாழும் சமுதாயப் பலி பீடத்திலே தன் உயிரைத் தத்தம் செய்த அதே நாளில் நாங்கள் எங்கள் இன்ப யாத்திரையை நடத்தினோம். எங்களுக்கு என்ன கவலை வந்து கிடக்கிறது.

வண்டி ஊரின் எல்லையைத் தாண்டிக்கொண்டிருந்தது. ஒரே இருள். அந்த இருளில் ஒரு பெரிய ஜோதி நிரந்தரமாக நின்று எரிந்துகொண்டிருந்தது. “அது என்ன வீரா?” என்று கேட்டேன். “குமுதாவின் பிணம் சுடுகாட்டில் எரிகிறது” என்று அலட்சியமாக அவன் பதில் சொன்னான். குமுதாவிடத்தில் அவனுக்கு எவ்வளவு அன்பு இருந்தது! நான்தான் அவனுக்கு மோட்ச சாம்ராஜ்யமாகி விட்டேனே! பாவம்!

அத்தானுக்காகச் சுமந்துகொண்டிருந்த உடல் அழுக்குப்பட்டு விட்டது. அதைத் தீயில் குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள் குமுதா. குமுதா உலகத்திலிருந்து மட்டுமல்ல; அவள் நம்பியிருந்த அத்தானின் இதயத்திலிருந்தும் பிரிந்துவிட்டாள். பரிதாபத்திற்குரிய சிறுமி!

எங்கள் வண்டி ‘கடகட’வென ரயில் நிலையத்தை நோக்கி ஓடிற்று; குமுதா எரிந்துகொண்டிருந்த இடத்தை விட்டு வெகு தூரம் போய்விட்டது

ஒரு நரியின் பயங்கரமான ஊளை சோகத்தின் உச்ச ஸ்தாயியை எட்டிற்று. இந்த உலகத்தில் குமுதாவுக்காக அந்த ஒரு ஜீவன்தான் அப்பொழுது அழுது போலும்!

குமுதா கிடக்கிறாள்; இனி எங்களைப் பற்றிக் கேளுங்கள். நாங்கள் ஏறிய ரயில் கல்கத்தாவை நோக்கிக் கிளம்பிற்று.

எங்கள் கல்கத்தா வாழ்க்கையைப்பற்றி ஒரு வார்த்தை! பக்தர்கள், சுத்த முடர்கள்; இந்திர லோகத்தைக் காண எங்கேயோ போகவேண்டு மென்னிருக்கலே, அசடுகள்! வந்து பார்க்கட்டும், கல்கத்தாவிலே எங்கள் வீடு இந்திர லோகமா யிருப்பதை! நான் இந்திராணி! வீரன் இந்திரன்! ரதியும் மன்மதனும் பாடங் கற்றுக் கொள்ள எங்களிடம் வரவேண்டும், தெரியுமா?

ஸ்ரீமகள் அச்சகம், சென்னை-1

மு. கருணாநிதி · பெரிய இடத்துப் பெண், எட்டாம் பதிப்பு (ஜூலை 1953, திராவிடன் பதிப்பகம், வேலூர்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்