பகுதி 4 · 4 / 7
குமுதா
Kumudha
மூல ஸ்கேன் 32-37
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
குமுதா
வேண்டுமானால் என்னைக் கொலை செய்திருக்கலாம். சந்தோஷத்தோடு செத்திருப்பேன். ஆறிலும் சாவுதான், நூறிலும் சாவுதான். ஆனால், எனக்கு வாழ்க்கையிலே ஆசை ஏற்பட்ட பிறகு சாகத் துணிவது சாமான்யமாகத் தோன்றாமல்தான் இருந்தது. கண்ணம்மா செய்த வேலை என்னை ஒரு வீராங்கனையாக்கிவிட்டது. சாவோடு விளையாடத் தயாராகி விட்டேன். “ஏன் இந்த முடிவுக்கு வந்தாள் குமுதா?” என்று நீங்கள் சந்தேகப்படுவீர்கள். முதலில் என்னைப் பற்றிய குறிப்பைப் படியுங்கள்.
நான் உத்தண்டியின் மகள். குழந்தையாக இருக்கும் பொழுதே தாயார் இறந்துவிட்டாள். என் குலத்திலே இல்லாத வழக்கமாக எனக்கு ஐந்தாவது வகுப்பு வரையில் கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டது. அந்த ஆரம்பப் படிப்பை வைத்துக்கொண்டுதான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். ஆனால் எனக்கு ஒரு வருத்தம். இந்தக் கடிதத்தை என் அத்தான் படிக்காவிட்டாலும் யார் கையிலாவது அகப்பட்டு நான் குற்றமற்ற நிரபராதி என்பது ருசுவாகி விட்டால் போதும். உலகத்திலே ஒருவராவது ‘குமுதா குற்றமில்லாத பெண்’ என்று கூறமாட்டார்களா?
நான் படித்த பெண்தான். படித்திருந்தாலும் படிந்த மனப்பான்மை உள்ளவள். நாகரிகத்தின் நாசக் வேலைகளால் உள்ளத்தைக் குரங்கைப்போல ஆக்கிக் கொண்ட பெண்களின் இனத்தைச் சேர்ந்தவள் நானல்ல என்பதை நீங்கள் கட்டாயம் நம்பவேண்டும்.
இந்த உலகத்திலே எத்தனையோ குமரிகள் தங்கள் வாழ்க்கையைத் தாங்களாகவே வீணாக்கிக் கொள்கிறார்கள். எனக்கு ஏற்பட்ட நிலைமை நானாகத் தேடிக் கொண்டதல்ல.
வீரன் என் அத்தை மகன். அத்தான் பிடிக்காத ஆள். ஆனால், என் வாழ்க்கைத் துணைவராக இருப்பதற்கு லாயக்குள்ளவர். அவரோடு ஆனந்தமாகக் காலத்தைக் கடத்தலாம் என்று நம்பினேன். நான் நினைத்ததிலே தவறில்லை. நம்பியதுதான் முட்டாள் தனமாகிவிட்டது. என் தகப்பனார் என்னை வீரனுக்கு மணமுடிப்பதாகக் கூறிய பின்னரே நான் அவரோடு பழக ஆரம்பித்தேன். அதுவரை என் சிந்தனையில் எந்த தூர் எண்ணங்களும் இடம் பெறவில்லை. அத்தானுடைய அழகுகளைப் பற்றி நான் கூறவே தேவையில்லை. அவருக்கு நான் அடிமையாகி விட்டேன் என்றால், அந்த ஒரு வார்த்தை போதாதா? அத்தான் என் மேல் வைத்த ஆசை மாறக்கூடாதே என்பதற்கு வேண்டுமானால் நான் என்னைச் சிங்காரித்துக் கொள்வதுண்டு. வைர ஜோடிப்புகளா எனக்கு இருந்தது? கொல்லையில் கிடைக்கும் முல்லையும், தோட்டத்துத் தாழம்பூவுமே எனக்கு ஆபரணங்கள். கண்ணாடி வளையல்களைத்தான் என் கைகள் அறியும்.
எப்படியோ நானும் அத்தானும் ஒன்றுபட்டு விட்டோம். அவர் என்னை உண்மையாகவே காதலித்தார். அவருக்குக் காதல் என்றால் இன்னதென்று தெரியுமோ தெரியாதோ! என்னை அடிமையாக்கிக் கொள்ள மட்டும் அவரிடம் ஒரு சக்தி இருந்தது. சதா என் இருதயப் பீடத்திலே அத்தானை அமரவைத்துப் பூஜித்துக்கொண்டிருந்தேன். அந்த இடத்திலே யாரும் எட்டிப் பார்க்கவும் முடியாது. அப்படி இருந்த அதே குமுதாதான் வெட்க மில்லாமல் இந்தக் கடிதத்தை எழுதுகிறாள். நான் கடிதமா எழுதுகிறேன். இல்லை கத்துகிறேன்! கடிதமா இது! இல்லை, கண்ணீர்த் தேக்கம்! எழுத்துக்களா இவைகள்! இல்லை, இதயத்தைப் பொத்துக்கொண்டு பீறிட்டுக் கிளம்பிய இரத்தத் துளிகள்!
அன்றிரவு........அய்யோ.........அதை நினைத்தாலே குலை நடுங்குகிறதே! என் தகப்பன் ஆசையைக் கெடுக்காமல் உலகநாதர் வீட்டுக்கு வேலைக்காரியாகச் சென்றேன். கண்ணம்மா என்னை அவருக்கு வெள்ளாட்டியாக்க முயன்றாள். ஒருநாள் இரவு அந்தப் பேச்சை எடுத்தாள். புருஷனுக்குப் பெண் தேடும் அவசியம் அவளுக்கு ஏன் ஏற்பட்டதோ எனக்குத் தெரியாது. என்னென்னவோ தளுக்குமொழிகள் பேசினாள். நாசுக்காக என்னை நடத்தினாள். வெட்டப்போகிற கிடாவுக்கு மஞ்சள் தெளித்து மாலை போடுகிறாள் என்பதை நான் முதலில் புரிந்துகொள்ளவில்லை. விஷயத்தை உணர்ந்து விம்மினேன். வீரனிடம் அதைச் சொல்லித் தப்பித்துக் கொள்ள திட்டம் போட்டேன். வீரனைக் காணவே இல்லை. அப்பா வந்தார். அவரிடம் விஷயத்தை முழுவதும் சொல்ல முடியவில்லை. அதற்குள் எஜமானி கண்ணம்மா கூப்பிட்டுவிட்டாள்; காரியம் மிஞ்சி விட்டது.
அன்றிரவு மணி பத்து இருக்கும். உலகநாதர் ஊரில் இல்லை என்று கண்ணம்மாள் சொன்னாள்.
எனக்குச் சற்று நிம்மதியாக இருந்தது. காலையில் எப்படியாவது என் வீட்டுக்கு ஓடிவிடலாமென்று தீர்மானித்துச் சந்தோஷப்பட்டேன்.
கண்ணம்மா அப்பொழுது எனக்கு ஒரு கட்டளையிட்டாள். சாதாரண வேலையுதான்; அதுதான் சதியாக முடிந்தது. புலியின் அகண்ட வாய்க்குள்ளே ஒரு பிள்ளையைத் தவழ்ந்து செல்லும்படி ஆணை பிறந்தது.
“வெள்ளிக்கோப்பை அந்த அறையிலே இருக்கிறது. அதை எடுத்துவா குமுதா!” என்றுதான் கண்ணம்மா கூறினாள். நான் அதை எடுத்துவர அறையில் நுழைந்தேன். திடீரெனக் கதவுகள் மூடிக்கொண்டன. திரும்பிப் பார்த்தேன்; உலகநாதர் நின்றார்; நின்றது மட்டுமல்ல; கலகலவெனச் சிரித்தார். “தோற்றாய் குமுதா, தோற்றாய்” என்று ஒரு பிசாசு அலறுவது போல் இருந்தது. என் நிலைமை தவறிவிட்டது. உலகமே கிறுகிறுவெனச் சுழன்றது. ஆகாய வெளியில் ஒரு பயங்கரச் சப்தம் கேட்டதுபோல் தெரிந்தது. பல மின்னல்கள்! இடி முழக்கங்கள்!
அதற்குப் பிறகு என்ன நடந்தது என்றே எனக்குத் தெரியாது. கண்ணை விழித்துப் பார்த்தேன். கட்டிலில் படுத்திருப்பதாக உணர்ந்தேன். அருகில் உலகநாதர் சயனித்திருந்தார். ஏதோ சூரிய மண்டலத்தையே சுற்றி வந்துவிட்டவர் போலச் சிரித்தார்; என்னென்னவோ பேசினார். எதுவும் என் காதில் விழவில்லை. காமாந்தகாரப் பூதத்தின் இரத்தந் தோய்ந்த நகங்களால் என் இதயம் கிழிக்கப்பட்டு விட்டது. அதனுடைய கடைவாய்ப் பற்களின் கூர்மை என்னைப் பிளந்தெறிந்தது. நான் இப்பொழுது ஒரு வேசி! விபசாரி! குமுதாவின் உடலில் ஒருவன் ருசிபார்த்து விட்டான். என் உள்ளத்தை அந்த உன்மத்தன் அடிமைப்படுத்தவில்லை; அதற்காக நான் பரிசுத்த மனுஷி என்று பறை சாற்றிக்கொள்ள முடியுமா?
இராமாயணத்திலே சீதை, “ராமப்ரபு! இராவணன் என் உடலில் தீண்டினானே தவிர உள்ளத்தைத் தீண்டவில்லை” என்று கூறி தப்பித்துக் கொண்டாளாம். அதுபோல நான் வீரனிடம் நல்ல பெயர் வாங்க நினைக்கவில்லை. இன்னொருவன் தொட்ட குமுதாவைக் கபடமற்ற வீரன் தொடுவதா? அன்னியனுடைய எச்சில் அத்தானுக்கு வழங்குவதா? பக்கத்திலே இருந்தான்; பார்த்தேன். வெற்றிச்சிரிப்பு சிரித்தான்; நான் வெகுளவில்லை. அணைத்தான்; அடங்கி விட்டேன். பலாத்காரச் செயல்தான்! தடுக்கும் தைரியம் எனக்கு வரவே இல்லை. “என்னடி குமுதா! உன்னை மீறியா ஒன்று நடந்துவிடும்?” என்று கேட்பீர்கள்; உண்மைதான். ஆனால், நடந்துவிட்டதே, என்ன செய்வேன்?
புளிப்புக் கலந்த பாலாகி விட்டேன்; விஷங்கலந்த உணவாகி விட்டேன். ஆனால் நான் விபசாரியாக வாழ நினைக்கவில்லையே! அதற்காக நீங்கள் இரங்கலாகாதா? என்னை மன்னிக்கக் கூடாதா? என் கடிதத்தை மறு முறையும் படித்துப் பாருங்கள். கண்ணம்மா என்னை வஞ்சித்தாள்! ‘பெரிய இடத்துப் பெண்மணி’ இந்த வேலை செய்தாள்; செல்வர் வீட்டுச் சீமாட்டி சதி புரிந்தாள், தன் கணவனைத் தாசி வீட்டுக்குத் தூக்கிச் சென்றதாக நான் நளாயினி கதை படித்ததுண்டு. இந்தக் கலியுக நளாயினி என்னையே அவள் கணவனுக்குக் காணிக்கை யாக்குவாள் என்று நான் கருதவில்லை.
இனி இந்த விபசாரிக்கு என் வாழ்வு! வைர நகை போட்டறியாத குமுதா வைரத்தையே பொடி செய்து சாப்பிட்டு விட்டாள். ஆம், எஜமானியம்மாளின் வைர மூக்குத்தியைத் தூள் செய்து சாப்பிட்டுவிட்டேன். எந்த எஜமானி என்னை அவளது கணவனின் கட்டிலறைக்கு அனுப்பினாளோ, அதே எஜமானியின் மூக்குத்தி என்னைக் கைலாசத்திற்கு அனுப்பட்டும்.
அத்தான்! என்னை மன்னித்து விடுங்கள். குமுதா அழுக்குப்பட்டவள்; களங்க மடைந்தாள். அவளை மறந்து விடுங்கள்!
மனித சமூகமே! நீ இனிமேலாவது உலகநாதர்களை உற்பத்தி செய்யாமல் இருக்கமாட்டாயா! கண்ணம்மாக்களைக் காசினிக்கு அனுப்பாமல் இருக்கமாட்டாயா? அந்த வேண்டுகோளின்மீது என் உயிரை உனக்கு அர்ப்பணிக்கிறேன். என் உடலை மண்ணுக்குகிறேன்.
அத்தான்! அத்தான்!!
இப்படிக்கு
இறக்கப் போகும்
குமுதா
மு. கருணாநிதி · பெரிய இடத்துப் பெண், எட்டாம் பதிப்பு (ஜூலை 1953, திராவிடன் பதிப்பகம், வேலூர்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்