பொருளடக்கம்

பெரிய இடத்துப் பெண்

பகுதி 3 · 3 / 7

கண்ணம்மா — முதல் உரை

Kannamma

இத்தலைப்பு மூலக் காப்பகத்தின் வாசிப்புப் பிரிவுக்கான விளக்கக் குறிப்பே; அச்சிடப்பட்ட தலைப்பு அல்ல.

மூல ஸ்கேன் 19 (from கண்ணம்மா heading)-31

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

கண்ணம்மா

ஆம்! நான் விபசாரிதான். அது என் குற்றமா! என் மனதுக் கேற்றவனோ மனம் முடித்திருந்தால் என்னிலே இப்படி ஆகி இருக்குமா? நான் சிறுமியா இருக்கும்போது, எவ்வளவோ நல்லவளாகத்தான் இருந்தேன். ஊரில் கண்ணம்மா என்றாலே தனிப் பிரியந்தான் காட்டினார்கள். எனக்குக் கடவுளிடத்தில் அபார பக்தி இருந்தது. கிழமை தவறினும் தவறும், என்னுடைய விரதங்கள் தவறு. அம்பிகைக்குப் படையல் செய்து விட்டுத்தான் சாப்பிடுவேன். எதிர்காலத்தில் ஒரு பெரிய ‘பக்திமணி’யாக வேண்டுமென்ற பேராசையால் என் நெஞ்சம் நிரப்பப்பட்டிருந்தது. சதா சர்வ காலமும் தெய்வத்தின் திரு நாமங்களையே உச்சரித்துக்கொண்டிருப்பேன். இப்பொழுதுதான் என்ன? எப்பொழுதும் ஆண்டவனைத் துதித்த வண்ணமேதான் இருக்கிறேன். குற்றம் செய்தவர்கள்தானே மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும்! நான் செய்த விஷமகரமான விபரீதச் செயல்களுக்குக் கடவுளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளத்தானே வேண்டும்! ஆனால் ஒன்று. அதை யாரும் கவனியாது விட்டு விடாதீர்கள்! பகவானிடம் மன்னிப்புப் பெற்றுவிடலாமென்ற தைரியத்தில் நான் இன்னும் என்னுடைய ஊறிப்போன செய்கைகளை விட்டு விடாமல்தான் இருக்கிறேன்; அதை ஏன் கேட்கிறீர்கள்! விபசாரி வேதாந்தம் பேசுகிறாள் என்று கூறுவீர்கள், விவேகமொழி கூறுகிறாள் என்று ஏளனம் செய்வீர்கள். என்னைப்பற்றி நீங்கள் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டுமா? இதோ பதில்! கண்ணம்மா ஒரு விபசாரி! கண்ணம்மா ஒரு பக்த சிரோன்மணி! போதுமா? இன்னும் வேண்டுமானாலும் இதோ விளக்கம். கேளுங்கள்!

என் தகப்பனார் நல்ல செல்வந்தர். என் தாயார் என்னை வெகு அருமையாக வளர்த்தாள். நானும் நன்றாகத்தான் வளர்ந்தேன். எப்படியோ எனக்குத் தெரியாது; ஒருநாள் உலகநாதரின் திருஷ்டியில் பட்டு விட்டேன். ‘ஆண்கள் இருக்கும் பக்கத்தில் போகக் கூடாது’ என்று என் அன்னை அடிக்கடி கூறித்தான் வந்தாள். ஆனால் கால வித்தியாசம், அவரது கழுகுப் பார்வைக்கு இரையானேன். இடுக்கி; கால்களின் இரும்புப் பிடியில் எலிகளைத் தூக்கிச் செல்லும் கழுகைப் போலவே, உலகநாதர் என்னை அடைந்துவிட்டார். அந்த வயிற்றெரிச்சலே வர்ணிப்பானேன்! உலகநாதருக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. ஆமாம், வாழ்க்கையை ஒப்பந்தம் செய்து வைக்கப்பட்டேன். அதன் பெயர் திருமணமா? கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டுக் கரடியோடு கொஞ்சு என்று கட்டளை இடுவதற்குப் பெயர்தான் ‘திருமணம்’ என்றால், எனக்கு நடந்ததும் திருமணம்தான். விஷத்தை வேலில் தடவி விழியில் சொருகுவதற்குப் பெயர்தான் ‘வாழ்க்கை ஒப்பந்தம்’ என்றால் எனக்கு நடந்ததும் வாழ்க்கை ஒப்பந்தந்தான்! உலகநாதர் எனக்குக் காண்டாமிருகமாகத் தோன்றினாரே பொழியக் கணவனுக்குக் காட்சியளிக்கவில்லை. உலகத்தின் விகாரமே உருப்பெற்றெழுந்ததுதான் உலகநாதர். நான் என்ன செய்வேன்; அவருக்கு என்னவோ இளமை இருந்தது உண்மை. ஆனால், என் இதயத்தைக் கவரும் இன்முகம் கிடையாதே! அவர் வாலிப முறுக்குள்ளவர்தான். ஆனால், அந்த வடிவம் வாராகத்தைப் பழிப்பது போலவா இருக்க வேண்டும்? இவைகள் நான் பொறுத்துக்கொள்ளக் கூடாதா என்று நீங்கள் கேட்பீர்கள். ‘புல்லென்றாலும் புருஷன், கல்லென்றாலும் கணவன்’ என்று புராணக் காலக்ஷேபங்கூட நடத்துவீர்கள். என் நிலையில் நீங்கள் இருந்து பார்த்தால் அப்படிப் பேசமாட்டீர்கள். உலகநாதரின் குரூபப்பற்றி ஒரே ஒரு வார்த்தை, வாயைத் திறந்தாலே போதும், வாந்தியெடுப்பவனுக்கு வயிற்றிலிருந்து கிளம்புவது போன்ற வறட்டுச் சப்தம். அதைக் கோகிலத் தொனி என்று தான் கூறிக்கொள்ள வேண்டுமா? நீங்கள் தான் தீர்ப்புக் கூறுங்களேன். என்னைப் பற்றி நானே கூறிக்கொள்வதாக எண்ணாதீர்கள். ஒரு பணக்கார வீட்டுப்பெண், போதுமான அழகுடையவள். இளமையின் எழுச்சியில், இன்பத்தின் அடிவாரத்தில் உலாவத் தொடங்குபவள், ‘எண்ணத் எண்ணங்கள் எண்ணியவள்’ எதிர்காலத்தைப் பற்றி எட்டாத பேராசைக் “கோட்டைகள் கட்டியவள்,” “கண்ணம்மாளா? கட்டழகி யாயிற்றே! கட்டுடல் வாய்ந்தவளாயிற்றே!” என்று ஊராரின் மதிப்புரையைப் பெற்றவள் கடைசியில் ஒரு கண்ராவியான மனிதனைக் கட்டிக்கொள்ள தென்றால், அது நியாயமா? பச்சிளங் குழந்தையும் பரிகாசஞ் செய்யுமே! தோழிகள் ‘தூ’ என்று துப்புவார்களே!

இது என்ன, வாராகாவதாரத்தைக் கண்டு பூமா தேவி விரகதாபங்கொண்ட காலமா? அதுவுமில்லையே! என்ன விபசாரி என்று கூறுகிறீர்களே; எனக்கு அந்த வாழ்வை அமைத்துக் கொடுத்தது உங்கள் வைதீக உலகந்தானே!

வாழ்வில் கோணல் ஏற்பட்டு விட்டதே என்று வாடினேன்; வதங்கினேன். ஆனால் அதை உலகநாதரிடம் காட்டிக்கொள்ளவில்லை. என் தாய் தந்தையரைச் சபித்துக்கொண்டிருந்தேன், என் சாபங்களுக்கு மட்டும் சக்தி இருந்திருக்குமானால். இந்த உலகமே அழிந்து போயிருக்கும். என் தாயகத்திலிருந்து சீதனங்கள் வந்து குவிந்தன. கட்டில்களென்ன, கம்மல்களென்ன, ஏதேதோ வழங்கினார்கள். வழக்கத்தைவிடாமல் செய்து விட்டார்கள்; அவ்வளவுதான்! அவர்கள் அள்ளி அள்ளிக் கொடுத்த அவ்வளவும் எனக்குத் தேவையில்லை. என் கருத்துக் கேற்றவரைத் தேடித்தராத அந்தப் ‘பெற்ற பேய்கள்’ எனக்கு எதை வாரிக்கொடுத்தால்தான் என்ன? ஓர் ஆண்மகனை மட்டும் எனக்குத் துணையாகச் செய்திருந்தால் போதுமே! சீதனமா வேண்டும், எனக்குச் சீதனம்!

பார்த்தேன். வண்டிக்கார வீரன் வாட்டத்தைப் போக்க முன்வந்தேன். வெற்றி பெற்ற வீராப்பில் பெருமூச்சுவிட்டேன். அகழ் பல கடந்து, அரும்பாடு பட்டு அந்நியனுடைய கோட்டையைக் கைப்பற்றியது போல ஆனந்தங் கொண்டேன். இதய வீதியில் எண்ணப்பட்டாளம் ஜெயபேரிகை முழங்கிச் சென்றது. குனிந்து கிடந்த என் இளமை கொக்கரித்துக் கொடியேந்திப் புறப்பட்டது. “என்னடி வேசி! அளக்க ஆரம்பித்துவிட்டாய்” என்று ஆத்திரப் படுகிறீர்களா? சற்றுப் பொறுங்கள். இதோ பாருங்கள், வீரனுக்கும் உலகநாதருக்கும் உள்ள வித்தியாசங்களே!

உலகநாதரிடம் இளமை மட்டுமிருந்தது, வீரனிடம் அந்த இளமைக்கேற்ற அழகு இருந்தது! உலகநாதர் உருட்டுச் சட்டிப் பொம்மை; வீரன் வடிவழகன்! உலகநாதர் உன்மத்தர்; வீரன் விவேகி! உலகநாதரிடம் செல்வமிருந்தது; சிங்காரமில்லை! வீரன் ஏழைதான் ஆனால், எழில் மிக்கவன் எனக்கு வேண்டியது. அது தானே! உலகநாதரின் குரலில் ஒரே கரகரப்பு, வீரனின் தொனியில் வீணை கிளப்பும் ஒலி! உலகநாதரின் கண்களுக்கு ஆந்தை அருமையான உதாரணம்; வீரனின் கண்களோ என் விலாவைக் குத்தி வேதனைக் கிளப்பிய வேல்கள்! உலகநாதரின் பல்வரிசை பார்க்கப் பயங்கரம்; வீரனின் பற்களோ முத்துக் கோவை!

அவ்வளவு ஏன்? வீரன் என்னை இந்திர விமானத்தில் இட்டுச் சென்றான். இன்பபுரியில் சுற்றுப் பிரயாணம் செய்ய.

வீரனுக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதை உலகநாதர் அறியவே இல்லை. அவர் அறியாதபடியே நான் நடந்துகொண்டேன். அவரது ஆசை மனைவிபோல நடந்தேன். அவரைக் கடவுளாகக் கருதுவதாகக் கூறினேன். பாதங்களைக் கண்களில் ஒத்திக்கொண்டேன். பாசமுள்ள பத்தினிமேல் பாசாங்கு செய்தேன். உலகநாதர் என்னை நம்பியே இருந்தார். இவ்வளவு நாடகமும் நான் ஆடாவிட்டால் அவர் என்னை நம்புவாரா? தலையை வலிக்கிறது என்று சொல்வார்; எனக்கே வலி ஏற்பட்டதாக வருத்தத்தை வரவழைத்துக் கொள்வேன், அவர் நன்றாக ஏமாந்து விடுவார். ஏமாற்றட்டுமே! எனக்கென்ன!

வீரன் என் வலையில் சாதாரணமாக விழுவேன் என்றானா? அப்பப்பா! எவ்வளவு கஷ்டம்? எஜமானி அம்மாள் அழைக்கிறதே என்று முதலில் பார்த்தான். பெரிய இடத்து விஷயமாயிற்றே என்று கலங்கினான். ‘ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்’ என்பதை அவன் எப்படி அறிவான். பாவம்!

எப்படியோ காரியம் கைகூடிற்று. என் கணவர் அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். வாசலில் கை கட்டி நிற்கும் வண்டிக்காரனுக்கு ரயிலுக்கு வண்டி கொண்டு போகும் வேலை மட்டுந்தானா? என்னை வட்டமிடும் வேலையும் வந்து சேர்ந்தது. உலகநாதர் ஊரிலே! நானும் வீரனும் உல்லாசபுரியிலே! அவர் காட்டிலோ மேட்டிலோ அல்லவா. அதைப் பற்றிக் கவலையில்லை நாங்கள் கட்டிலிலே!

வீரனுக்கு முதலில் என்னைத் தீண்டுவதற்குப் பயம்! தீண்டிய பிற்பாடு அய்யா பார்த்துவிடுவாரோ என்ற அச்சம்! சங்கதி பரவிவிடுமோ என்ற சந்தேகம்! கடைசியில் அவர் எப்பொழுது வெளியூர் செல்வார் என்ற ஏக்கம்! இந்த நிலையிலே எங்கள் காதல் வளர்ந்தது. மாதங்கள் ஒன்று இரண்டு இப்படிப் பல மாதங்கள்! ஏன் இரண்டு மூன்று வருடங்களும் ஆகிவிட்டன. இதில் இன்னொரு பயங்கரமும் நடந்துவிட்டது. நானும் வீரனும் சேர்ந்து கொலையும் செய்துவிட்டோம். என் வயிற்றில் வளர்ந்த இரண்டரை மாதச் சிசுவை யம லோகத்திற்கு அனுப்பினோம். அதற்கு வீரன்தான் மருந்து வாங்கிக்கொண்டுவந்து கொடுத்தான். பிறக்கும் குழந்தை வீரனைப்போல் இருந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயமே கொலைக்குக் காரணம். இப்பொழுது நீங்கள் சொல்லுங்கள் கண்ணம்மா ஒரு கொலைகாரி என்று. அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. என் உடம்பில் ஏதாவது கூச்சம் இருந்தால் தானே! என் மனசுதான் மறத்துப் போய்விட்டதே!

குழந்தையை அழித்த சில நாட்களுக்குப் பிறகு வீரனுக்கும் எனக்கும் நடுவே ஒரு தொய்வு ஏற்பட்டது.

திடீரென்று வீரன் என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டான். என்னைக் கண்டாலே பிடிக்காதவன் போல் நடந்துகொண்டான். நான் ஏதாவது கேட்டால் ‘வெடுக்’கென்று பதிலச் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவான். எத்தனையோ முறை உலகநாதர் வெளியூர் சென்று வந்தார். நான் அந்த நேரங்களெல்லாம் தனியாகவே கழித்து வந்தேன். பலமுறை வீரனுக்கு ஆள் அனுப்பிப் பார்த்தேன். அவசரச் செய்தி என்று கூப்பிட்டேன். ஒன்றுக்கும் அவன் அசையவில்லை. காரணந் தெரியாது விழித்தேன்.

என்னுடைய கலக்கத்தைக் கண்டு என் கணவர், “என்ன கண்ணம்மா வருத்தம்?” என்று கேட்டார். “ஒன்றுமில்லை; உடம்பு சரியில்லை” என்பேன். உடனே அவர் எனக்குச் சிகிச்சைகள் செய்ய ஆரம்பிப்பார். அவர் அறிந்துகொள்ள முடியாத நோய் எனக்கு! அதை நீக்க அவர் கொண்டுவந்து தரமுடியாத மருந்து ஒன்று இருந்தது. அதை அவர் எப்படி அறிவார், பாவம்! இந்த நிலையிலே ஒரு சில மாதங்கள் ஓடின.

என்னுடன் பட்சமாயிருந்த உலகநாதரும் திடீரென்று மாறிவிட்டார். எப்பொழுதும் சிந்தனை; எப்பொழுதும் வெறுப்பு; எப்பொழுதும் கடுகடுப்பு!

சாதாரண வேளையிலேயே என் நாயகரைப் பார்க்க ஆயிரங் கண்கள் வேண்டும். அதுவும் இந்த நிலையிலேயே எப்படி இருப்பார் என்று நான் சொல்லவும் வேண்டுமா! அவர் இப்படி ஒரேயடியாக மாறிவிட்டதற்கு எனக்குக் காரணம் புரியவில்லை. ஒருவேளை வீரனுக்கும் எனக்கும் உள்ள “இரகசியம்” அம்பலமாகி விட்டதோ என்று நடுக்கமுற்றேன். அல்லது வேறு ஏதாவது புதுவித வியாதியோ என்று ஐயமுற்றேன். நான் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. ஒரு பக்கம் வீரனில்லா வாழ்வு! இன்னொரு பக்கம் உலகநாதர் பற்றிய ஆராய்ச்சி! இரண்டிற்கும் நடுவில் நின்று தவித்தேன். உலகநாதரிடம் எவ்வளவோ கேட்டுப் பார்த்தேன். அவர் மெளனமே சாதித்தார்.

ஒரு நாள் இரவு 9 மணிக்கு இருக்கும். உலகநாதர் எங்கேயோ போய்விட்டு வீட்டுக்கு வந்தார். ஊஞ்சலில் உட்கார்ந்தார். நானும் அவர் அருகில் அமர்ந்தேன். அவருடைய முகத்தைக் காணச் சகிக்கவில்லை. அந்த அகண்ட சச்சிதானந்த விழிகளைப் புருவத்தின் பக்கம் ஏற்றி எங்கேயோ யோசனையை ஒட்டிக்கொண்டிருந்தார். நான் நடிக்க ஆரம்பித்தேன். ஊஞ்சலிலிருந்து கீழே விழுந்துவிட்டேன். உண்மையாக அல்ல, உலகநாதரை ஏமாற்ற. உலகநாதர் என்னை வாரியெடுத்துத் தடவிக் கொடுத்தார். அந்த ஸ்பரிசத்தால் என் வலி நீங்குமென்று அவர் எண்ணியிருக்கலாம். ‘வீரனிருக்க வேண்டிய இடத்தில் இந்த வீணன்’ என்று என் மனம் துடித்துக்கொண்டதை அவர் எப்படி அறிவார்? மறுபடியும் ஊஞ்சலில் உட்கார்ந்தோம். ஊஞ்சல் அசைந்தது; உலகநாதரும் பேச்சை ஆரம்பித்தார்.

(எங்கள் பண்ணையிலே தலையாரி உத்தண்டி என்று ஒரு கிழவன் வேலை பார்த்து வந்தான். அவனுக்கு ஒரு மகள். அவள் பெயர் குமுதம். அந்தக் குமுதம் அழகிதான். அந்தக் குமுதத்தின் மேல் என் பிராணபதிக்கு மோகம் ஏற்பட்டுவிட்டது. என்னைத் திருப்திபடுத்த முடியாத அந்த அழகு துரை குமுதத்தின் மேல் பாய்ந்துவிட்டார். பணக்கார நல்லவர்? பார்த்த பெண்கள் யெல்லாம் காதலிப்பதுதானே பணக்காரத் தத்துவம்!) ‘குமுதத்தோடு கொஞ்சவேண்டு’ மென்று என்னிடம் கூறினார் தாராளமாகச் செய்வதுதானே, என்று என் விருப்பத்தை வெளியிட்டேன். அதற்கு ஒரு தடங்கல் இருக்கிறதென்றார். என்ன தடை? என்று நான் கேட்டேன். அவர் அதைச் சொன்னார். வீரன் என்னை மறந்து விட்டதன் இரகசியத்தை அப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன்.

உலகநாதர் விரும்பிய குமுதாவுக்கு ஓர் அத்தான் உண்டு. அவன்தான் என்னை அடிமை கொண்ட அன்பன் வீரன். “குமுதாவுக்கும் வீரனுக்கும் காதலாம். இருவரும் கல்யாணம் செய்துகொள்ள முடிவு செய்து விட்டார்களாம். கல்யாணமும் சீக்கிரம் முடியப் போகிறது” என்று உலகநாதர் கூறினார். அந்தச் சமயத்தில் என் முகத்தில் தோன்றிய சிறல்களே உலகநாதர் பார்த்திருந்தால் ஆச்சரியப்பட்டிருப்பார். நான் இறந்து போய் விட்டதாகவே கருதினேன். ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, “வீரனுக்கும் குமுதாவுக்கும் காதல் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டேன். (குடியானவர் தெரு கொல்லைப்புறத்து வாய்க்கால் ஓரத்தில் இருவரும் இரகசியம் பேசிக்கொண்டிருந்ததைத் தாம் கண்டதாக என் கணவர் கூறினார்.) அதோடு உலகநாதர் நிற்கவில்லை. “கண்ணம்மா! என் கண்ணல்ல.....நான் உன்னை அலட்சியப் படுத்துவதாக நினைக்காதே....எப்படியாவது ஒருநாள் ....குமுதா என் படுக்கையை அலங்கரிக்க வேண்டும். இதை நீதான் செய்யவேண்டும். தயவுசெய்! உன் தாளைப் பிடிக்கிறேன். இரங்கமாட்டாயா?” என்று கெஞ்சினார்; கதறினார், பல்லைக் காட்டிப் பிச்சைக் கேட்டார். எனக்கும் ஒரேயோசனை தோன்றிற்று; அது மிகவும் அருமையான யோசனையாகத்தான் முடிந்தது.

குமுதாவையும் வீரனையும் பிரித்து விட்டால் மீண்டும் வீரன் என்னை நெருங்குவான் என்று தீர்மானித்தேன். குமுதாவை உலகநாதரிடம் அளித்துவிட்டால் அவளிடமே குவலிக் கிடப்பார். வீரனும் நானும் வேறு அந்தப்புரம் அமைத்துக் கொள்ளலாம், அவர் அதைக் கவனிக்க முன்னமாட்டார் என்று முடிவு கட்டினேன். ஆகவே, குமுதாவை என் கணவருக்குக் கூட்டிவைக்க யோசனை சொல்லிக் கொடுத்தேன். குமுதாவை ஒரு விபசாரி ஆக்குவதன் மூலம் இழந்த வீரனை இழுத்து விடலாமென்ற தைரியம் எனக்கு! “அடி துரோகி! நீ கெட்டதோடு இருக்கக் கூடாதா? குமுதாவையுமா அப்படிச் செய்ய வேண்டும்?” என்று கேட்கிறீர்களா? அதற்கு நான் என்ன செய்வேன்? என் வீரனை அடைய வேறு வழி ஏது? குமுதா வேண்டுமானால் தன் கற்பின் திறமையைக் காட்டுவதுதானே!

மறுநாள் பொழுது விடிந்தது, என் யோசனைப்படி உலகநாதர் உத்தண்டிக் கிழவனைக் கூப்பிட்டனுப்பினார், ‘குமுதா வீட்டில் வேலை செய்யவேண்டும்’ என்றும், ‘கண்ணம்மாவுக்குத் துணையாகச் சில நாட்களுக்கு இருக்க வேண்டுமென்றும் சொன்னார். கிழவன் சிரித்து தடுமாறினன். குமுதாவுக்கு மாதச் சம்பளம் இருபது ரூபாய் என்று குறிப்பிட்டார். கிழவன் ஏமாந்துவிட்டான். பணத்தைப் பார்க்காதவன் தானே! அந்தப் பஞ்சை! குமுதாவை எங்கள் வீட்டுக்கு வேலைக்காரியாக அனுப்பிவிட்டான். குமுதாவை நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு பார்த்தது. ஆனால், இப்பொழுது குமுதா பருவமடைந்த மங்கை. அவளுடைய லாவகமான நடையும், முகத்தின் களையும் பெண்ணை என்னையே ஆசைப்பட வைத்தது.

குமுதா வீட்டுக்கு வந்தது முதல் மிகவும் மரியாதையாகவே பழகினள், அவளுடைய சிந்தனை மட்டும் எங்கேயோ இருந்தது. அதை அவளால் மறைத்துக் கொள்ள முடியவில்லை. அடிக்கடி வாசல் பக்கம் செல்வாள். எங்கேயோ சுற்றுமுற்றும் பார்ப்பாள். எனக்கெல்லவா தெரியும், அவள் யாரைப் பார்க்கிறாளென்று! அந்தச் சிறுமி வீரனிடம் கொண்டிருந்த கள்ளங் கபடமற்ற காதலில் நான் நச்சுப் பொடித் தூவ தயாராய் இருந்தேன்.

குமுதா வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் கழிந்தன. ஒருநாள் இரவு நான் அவளோடு சம்பாஷணை துவக்கினேன். இதற்குள் என் கணவர் பட்டபாட்டை நினைத்துக்கொண்டு நானே சிரித்தேன், குமுதா தன் வீட்டுக் கதைகளை யெல்லாம் சொன்னாள். நான் அவள் பேச்சில் என் பச்சப் வார்த்தைகளைப் பின்னிக் கொண்டே வந்தேன். எங்கெங்கோ ஆரம்பித்துக் கடைசியில் உலகநாதர் குமுதாவிடம் கொண்டிருக்கும் ஆசை வரையில் கூறிவிட்டேன். குமுதா ஒன்றும் பேசவில்லை. பேசாமற் போய்ப் படுத்துக் கொண்டாள். சற்று நேரத்திற்குப் பிறகு குமுதா விம்மி விம்மி அழுத சப்தம் மட்டும் எனக்குக் கேட்டது. அன்றிரவு அதோடு முடிந்தது.

மறுநாள் காலை கொல்லைப்புறத் தோட்டத்தில் குமுதா தன் தகப்பனுடன் பேசிக்கொண்டிருந்தாள். குட்டி தப்பித்துக் கொள்வாளோ என்ற பயம் எனக்கு. “குமுதா! குமுதா!” என்று அதட்டலாகக் கூப்பிட்டேன். ஓடிவந்துவிட்டாள். எனக்குத் தெரியாமல் அவள் கண்களைத் துடைத்துக் கொண்டதை நான் பார்க்காமலில்லை. வீரனை நான் மறுபடியும் அடையும் பொருட்டு நான் குமுதாவை என்ன செய்தால்தான் என்ன? என்னை வந்தடையும் பழி பாவங்களுக்கு நான் பொறுப்பாளி? ‘எண்ணியபடி எதுவும் நடக்காது’ என்ற சட்டமும், ‘அவனன்றி ஓர் அணுவும் அசையாது’ என்ற உறுதியும் இருக்கிற உலகத்திலே நான் ஒரு குற்றமற்றவள் தானே! இந்தத் தைரியத்தில்தான் குமுதாவின் நல்வாழ்வில் நஞ்சைக் கலந்தேன். அந்தக் காரியத்தைச் செய்யும்பொழுது என் உடல் பதறவில்லை தான். தோட்டத்தில் உத்தண்டியைச் சந்தித்து குமுதா பேசிய அன்றிரவேதான் நான் அந்தச் சதியைச் செய்தேன். உங்கள் பாஷைப்படி அது ‘சதி’யாக இருக்கலாம். ஆனால், அந்தக் காரியந்தான் என் தலை விதியைத் தீவிழியாக மாற்றிய மாபெரும் புரட்சி! என் சுயநலத்துக்காகக் குமுதாவைக் கொலை செய்தால்தான் என்ன?

மு. கருணாநிதி · பெரிய இடத்துப் பெண், எட்டாம் பதிப்பு (ஜூலை 1953, திராவிடன் பதிப்பகம், வேலூர்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்