பகுதி 2 · 2 / 7
உத்தண்டி
Uthandi
மூல ஸ்கேன் 15 (from உத்தண்டி heading)-19 (through pre-கண்ணம்மா text)
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
உத்தண்டி
பல் முளைத்த நாள் முதல் நான் பண்ணைக்காரர் வீட்டில்தான் அடிமை வேலை பார்க்கிறேன். பரம்பரை பரம்பரையாக என் பாட்டன் பூட்டன் எல்லோருமே அடிமைகள்தான். என் தகப்பனுக்கு என்னைச் சுதந்திர மனிதனாக ஆக்க எங்கிருந்து புத்தித் தோன்றும்? உலகநாத முதலியார் என்னைவிட எத்தனையோ வயது இளையவர். நான் அந்தப் பண்ணையில் மாடு மேய்க்கும்போது அவர் பிறக்கக்கூட இல்லை. இப்போது உலகநாதர் என்றுமே அடிவயிற்றில் 'பசீர்' என்கிறது. இத்தனைக்கும் மண்டிக்கடை ஆசாமிதான். ஆனால், லட்சுமி அங்கு விளையாடுகிறாள். அங்கேயே வாசம் செய்கிறாள். அவர் பார்த்து ஒழிக்க வேண்டுமென்றால் ஒழித்துக் கட்டிவிடலாம். என் வீடு, மண், தோட்டம் எல்லாம் அவரிடம் அடமானம். அந்தத் தைரியத்தில்தான் அவர் என் நெஞ்சத்தைக் குத்திக் கிளறிவிட்டார்.
அவருக்கு நான் பட்டிருக்கும் கடன் 500 ரூபாய். உலோபி மனுஷன் நம்மை நம்பி எப்படிக் கடன் கொடுத்தார் என்று நினைத்தேன். அவருடைய தாராள புத்தியின் சரியான காரணம் இப்பொழுதுதான் தெரிந்தது. குமுதா என் பெண்; ஆசை மகள். அவள் அம்மா சாகும்போது குமுதாவை என்னிடம் ஒப்படைத்தாள். குமுதாவுக்கு வாழ்க்கையில் துன்பம் தோன்றவே கூடாதென்று எண்ணினேன். ஆனால், கடவுள் அப்படி நினைக்கவில்லை. உலகநாதரையல்லவா எனக்கு அனுப்பியிருந்தான் பாழும் கடவுள்.
அன்று உலகநாதர் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். ஏதோ சாகுபடி விஷயம் என்று நானும் போனேன். “வா, உத்தண்டி!” என்று அவர் அழைக்கும்போதே அவரது முகத்தில் ஆவல் ததும்பிக்கொண்டிருந்தது. நாங்கள் பேசிக்கொண்டிருந்த இடத்தில் யாருமே இல்லை, “என்னடா உத்தண்டி!” என்று அதிகாரத் தோரணையில் கூப்பிடும் அவர் அன்று பரிவோடு என்னை அழைத்தார். அகம்பாவமாகவே என்னிடம் நடந்துகொள்ளும் அவர் சில நாட்களாக அன்பு வார்த்தைகளையே உபயோகித்தார்.
“என் எஜமான் கூப்பிட்டீங்களாம்” என்று கேட்டுக் குனிந்து நின்றேன். “கடன் வளர்த்துக் கொண்டே போகிறாயே, வட்டி வளருதே, தெரியலியா?” என்று கேட்டார். அஸ்திவாரத்தைப் பலமாகப் போட்டுக்கொண்டார். நான் அவர் கருத்தை முதலில் அறியவில்லை; பேசாமல் நின்றேன். “உன் மகளுக்குக் கல்யாணம், காட்சி நடக்கவில்லையா?” என்று அடுத்த கேள்வியைப் போட்டார். அதையும் நான் விகற்பமாகக் கருதவில்லை. பண்ணையாள் குடும்பத்திலே அய்யாவுக்கு அவ்வளவு அக்கறை என்று சந்தோஷப்பட்டுக்கொண்டேன். ஆனால், அதை அவர் நீடிக்க விடவில்லை. நம் வீட்டு அண்ணிக்கு வேலைக்காரி ஒருத்தி வேண்டுமாம். “கல்யாணம் ஆகிற வரையிலே உன் மகளை இங்கே விட்டு வையேன்” என்றார். நான் அப்போதுதான் தடுமாறினேன். “அவள் குழந்தைங்கோ. தனியா இங்கே இருக்க பயப்படுவாளே” என்று பல்லைக் காட்டினேன். உன் மகளைக் காட்டிலா கொண்டு வந்து விட்டுப் போகிறாய்! அட பைத்தியக்கார மனுஷா?” என்று ஏளனம் செய்தார் உலகநாதர். எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. “எப்போதும் இங்கேதான் இருக்கணுமா?” என்று ஒரு கேள்வியைப் போட்டு வைத்தேன். “அட ஒரு இரண்டு மூணு மாசத்துக்கு இருக்கட்டுமே. என்ன உன் பெண் தேய்ந்தா போய் விடுகிறாள்! கண்ணம்மாவோடு இருந்து பழகினால் குடும்ப விஷயமும் புரியும், வேறு ஒரு புருஷன் வீட்டுக்குப் போனாலும் நல்ல குடித்தனக்காரியென்று பெயரெடுப்பாள்” என்று பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார். என்னால் மறுக்கவே முடியவில்லை; மறுக்கத் தைரியமும் இல்லை. மறுத்திருந்தால் மறுநாளே அவருடைய கடன் அடைத்தாக வேண்டும். நான் 500 ரூபாய்க்கு அப்பொழுது எங்கு போவேன். இந்தப் பாழும் தெய்வங்கள் என்னை அப்படியா வைத்திருந்தன? அவைகளுக்குத்தான் என்னைப் பற்றிக் கவலையே கிடையாதே!
“உன் மகள் குமுதத்துக்கு மாசம் 20 ரூபாய் சம்பளம் கொடுக்கிறேன். கவலைப்படாதே. அவளுக்கு இங்கு ஒரு கஷ்டமும் இருக்காது. கண்ணம்மாவோடு குஷாலா இருக்கலாம். வேலையும் அதிகமில்லை” என்று மறுபடியும் உலகநாதர் உபந்யாசத்தை ஆரம்பித்தார். கிராமத்திலே பணத்தைக் கண்டால் பகவானைக் கண்டது போலத்தானே! அதுவும் என்போன்ற தலையாரிகளுக்குக் கேட்கவா வேண்டும்! கோபாலகிருஷ்ண பிள்ளை மகள் பள்ளிக்கூடத்திலே 10 கிளாஸ் படிச்சுப்பிட்டு வாத்தியாரம்மா வேலை பார்த்து மாதம் 20 ரூபாய் சம்பாதிக்கிறாள். ஒன்றுமில்லாமல் என் குமுதாவுக்கு 20 ரூபாய் சம்பளம் என்றதும் எனக்குச் சபலம் தட்டிற்று; சிறிது ஆசையும் ஏற்பட்டது. அவளுக்கு மாதா மாதம் வரும் இருபது ரூபாயை அப்படியே மீத்துப் புருஷன் வீட்டுக்குப் போகும்போது சீதனமாகக் கொடுத்தனுப்பலாமென்று திட்டங்கள் போட்டு விட்டேன். உலகநாதரின் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்தேன்.
இந்த அபிப்பிராயத்தை என் குமுதாவிடம் கூறினேன். குமுதா குழந்தை மனம் படைத்தவள் அல்லவா? என்னைப் பிரிந்து வேறு ஒரு வீட்டில் வேலை செய்யத் தயங்கினள். “இந்த ஊர்தானே அம்மா! ஏன் பயப்படுகிறாய்? நான் உன்னை அடிக்கடி எஜமான் வீட்டிலே வந்து பார்க்கிறேன். பயப்படாதே” என்று சப்பைக்கட்டுகள் கட்டினேன். அவளும் உலகநாதர் வீட்டுக்கு வேலைக்காரியாகப் போகச் சம்மதித்தாள். அதன்படி அங்குச் சென்று வேலையிலும் அமர்ந்தாள். பிறகுதான் நான் செய்தவற்றை உணர்ந்தேன். குமுதாவைக் குழியில் போட்டுப் புதைத்த குருட்டுப் புத்திக்காரனேன். இன்னும் சொல்லட்டுமா? குமுதா ஒரு நாள் உலகநாதர் வீட்டுக் கொல்லைப்புறத்தில் உட்கார்ந்திருந்தாள். நான் திடீரென்று அங்குப் பிரவேசித்தேன். குமுதா கண்களைத் துடைத்துக்கொண்டு அவசரமாக எழுந்து, “அப்பா!” என்று கூவிக்கொண்டு என்னிடம் ஓடிவந்தாள். “ஏன் குமுதா, அழுகிறாய்?” என்றேன். என் மனம் பட்டபாட்டை ஈசன்தான் அறிவான். குமுதா தேம்பினள். அழுது அழுது அவள் முகம் வீங்கியிருந்தது. கண்கள் செக்கச் செவேலென்றேதோன்றின. என் கால்கள் நடுங்கின. கைகள் உதறலெடுத்தன. குமுதா பேசத் தொடங்கினள். ஆனால், வாய் குளறிற்று. சில வார்த்தைகள் சொன்னாள். அவைகள் என் காதில் ஈட்டிகளாய்ப் பாய்ச்சின. அதற்குள் எஜமானி கண்ணம்மா, குமுதா! குமுதா! என்று அழைத்தாள். குமுதா ஓடிவிட்டாள். நான் வீடு திரும்பினேன். அன்றிரவு முழுவதும் எனக்குத் தூக்கம் இல்லை. “குமுதா! குமுதா!” என்று புலம்பினேன்.
என் தங்கை மகன் வீரனுக்காக என் அருமைக் குமுதாவை வைத்திருந்தேன். வீரனையும் குமுதாவையும் மணக்கோலத்தோடு பார்க்க எண்ணியிருந்தேன். ஆனால் அதற்குமுன் அவர்கள் ஜோடியாகி விட்டார்கள். கல்யாணத்தை முடித்துவிடலாமென்று இருந்தேன்; இந்த கபோதியிடம் காசு ஏது? காசில்லாக் கஷ்டத்தால்தானே நான் உலகநாதர் உத்தரவுக்கு இணங்கி என் குமுதாவை வேலைக்காரியாக அனுப்பினேன்!
அந்தக் கண்ணம்மா இவ்வளவு கைகாரி என்று எனக்குத் தெரியாதே! என் வயிற்றை எரிய விட்டு விட்டாளே! அடி விபசாரி.
மு. கருணாநிதி · பெரிய இடத்துப் பெண், எட்டாம் பதிப்பு (ஜூலை 1953, திராவிடன் பதிப்பகம், வேலூர்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்