பொருளடக்கம்

பெரிய இடத்துப் பெண்

பகுதி 1 · 1 / 7

தொடக்கம்

The Woman of the Great House

இத்தலைப்பு மூலக் காப்பகத்தின் வாசிப்புப் பிரிவுக்கான விளக்கக் குறிப்பே; அச்சிடப்பட்ட தலைப்பு அல்ல.

மூல ஸ்கேன் 8-15 (through pre-உத்தண்டி transition)

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

பெரிய இடத்துப் பெண்

“குமுதா! அவளுக்கு அவன்தான் அமுதா?” என்று நினைத்தவாறே என்னவோ ஊஞ்சலில் அமர்ந்தார் உலகநாதர். “ஏன், வேலை யெல்லாம் முடிந்ததா?” என்று கேட்டபடி கண்ணம்மா பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். ஊஞ்சல் வேகமாக ஆடிற்று. உலகநாதரின் உள்ளத்தின் அசைவை அது வெற்றி கொண்டதாக அவருக்குத் தோன்றவில்லை. கண்ணம்மாவின் கரங்கள் உலகநாதரின் உடலில் நகர்ந்துகொண்டிருந்தன. அவள் அவரது தோள்களை அணிச்சக் கைகளால் அழுத்திப் பிடித்தபோதுகூட ஆனந்த ஒளி இதயப் படுதாவில் விழவில்லை. உலகநாதரின் எண்ணங்கள் ஊர்க் கடைசியிலுள்ள குப்பத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்தன; கண்ணம்மா அவருக்குப் பொன்னம்மாளாக விளங்குவாள். அவளது மிருதுவான ஸ்பரிசம், அவரது சிந்தனையைச் சிதறடிக்கும் சிரிப்பு, அவரைச் சொர்க்க லோகத்திற்கு இட்டுச் செல்லும் சொகுசான லீலைகள்—இவைகளில் சொக்கிக் கிடப்பார்.

ஆனால், அவர் அன்று கண்ட காட்சி மட்டும் அவருக்கு வேப்பங்காயாக இருந்தது. “என் பொன்னம்மா ............ இருக்கீங்க?” என்று கேட்டுக்கொண்டே உலகநாதரின் முகத்தைத் திருப்பினாள் கண்ணம்மா.

கண்ணம்மாவின் விரல் பட்ட மாத்திரத்தில் காந்தத் தோடு தொடரும் இரும்புபோலக் கழுத்தைத் திருப்பும் உலகநாதர் அன்று முரட்டுத்தனமாக, முகத்தை அசைக்காமலேயே இருந்துவிட்டார். கடைசி வரையில் பார்த்துவிடுவதென்ற முடிவில் கண்ணம்மா ஊஞ்சலை விட்டுக் கீழே இறங்கினள். உலகநாதரின் உந்தலினால் ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சல் கண்ணம்மாளைக் கீழே தள்ளிற்று. கண்ணம்மாள் கீழே விழுந்தாள். அடி அவ்வளவாக இல்லை. ஆனாலும் எவரெஸ்ட் சிகரத்திலிருந்து வழுக்கி விழுந்தவள்போல வேதனையைக் கொட்டினள்.

உலகநாதருக்குக் கருணை பிறந்தது. “கண்ணம்மா! கண்ணம்மா!” என்று கூவிக்கொண்டே அவளைத் தூக்கினார். மீண்டும் ஊஞ்சல் ஆட ஆரம்பித்தது.

உலகநாதரும் கண்ணம்மாவும் இன்பபுரிப் பிரயாணத்தை ஆரம்பித்தனர். உலகநாதர், ஆமாம்! ‘மண்டிக்கடை மன்னர்’ என்று கூடப் பட்டஞ் சூட்டுவார்கள் மாநாடு கூட்டினால். அவ்வளவு பெருத்த வியாபாரி. கண்ணம்மா—அவள் குடும்பமும் அவருக்குச் சினேகத் தல்ல? செல்வமும் செல்வமும் கைகோர்த்துக்கொண்டன. பணமும் பணமும் உராய்ந்துகொண்டன. நான்கு வருடங்கள்! உலகநாதர்—கண்ணம்மா திருமணமாகிக் கழிந்த ஆண்டுகள் அவை.

உலகநாதர் சற்று தடித்த தோல்! ரோஷமில்லாக் காரணத்தாலல்ல; உடற்கூறுதான் அப்படி! கண்ணம்மா ரோஜா மலர்! அவளை இவருக்குக் கட்டினர்கள் அதைப் பற்றி உலகம் பேசாமலில்லை. பணக்காரர் வீட்டுப் படிக்கட்டுமேல் பாமர் பேச்சு ஏறுமா? கண்ணம்மாளுக்கு வாழ்க்கை கசப்பாகத்தா னிருந்தது. ஆனால், அவளாகத் தயாரித்துக்கொண்ட திட்டம். ஒடிந்த வாழ்க்கை உயர்த்திற்று; கூனிலே நிமிர்த்தியது. உலகநாதர் வீட்டு வண்டிக்கார வீரன் கட்டழகன். கண்ணம்மாவின் விழியில் வீரன் மாட்டினான். இது அவன் குற்றமா? அல்லது உலகநாதரின் வெம்பிப் போன அழகின் குற்றமா? இந்த விசாரணைக்கு வீரன் போகவில்லை. உதட்டில் தடவப்பட்ட தேன் நக்கினன்; சுவைத்தான்; தேனடையைத் தேடினன். ருசி கண்ட பூனை உறியைத் தாவாமலிருக்குமா? கண்ணம்மா ‘கற்போடு நடக்க வேண்டுமே’ என்று குழம்பிக்கொண்டிருந்தபோது, “சாகும்போது என்ன சங்கார வேண்டியிருக்கு!” என்றான். உலகநாதருக்கு உபசரிப்பு குறையவில்லை. அன்பை அவருக்கு அர்ப்பணிப்பதாகக் கண்ணம்மா கூறினள். அந்த நாடகத்தில் உலகநாதரின் ராஜபார்ட் கம்பீரங் கொண்டது. ஆனால் ஸ்திரீபார்ட் போட்டிருப்பது ஆண் என்று கூட ஐயமுறத் நிலை அவருக்கு! கண்ணம்மாவின் கன்னங்களிலே சுவைக்க நேரமிருந்தது அவருக்கு! கருத்தைச் சோதிக்கநினைப்பதில்லை.

சீமான் வீட்டுச் செல்வி சின்னப்புத்திக்காரியாக இருப்பாள் என்று அவர் கருதத்தானில்லை. வீரனுக்கல்லவா தெரியும் அவளின் விரகதாபம்!

உலகநாதருக்கு மஞ்சம் உண்டு! கொஞ்சல் உண்டு! ஆனால், அவ்வளவும் வீரனுக்குப்போக எஞ்சியதுதான்!

உலகநாதரிடம் நடனமுண்டு! நெளிவு உண்டு! ஆனால் அந்தக் கேளிக்கைக்கு வாடிக்கைக்காரன் வண்டிக்கார வீரன்தான்!

உலகநாதரிடம் ஊடல் உண்டு! கூடல் உண்டு! பாடல் உண்டு! ஆனால் அப்போதும் கண்ணம்மாவுக்கு வீரனைக் காணவில்லையே என்ற வாடல் உண்டு!

உலகநாதரிடம் உல்லாசம் பரிமாறுவதுண்டு! சல்லாபம் உண்டு! எல்லாமுண்டு! ஆனால், வீரனிடம் நடிப்பதற்கு இவை ஒத்திகைகள்.

வண்டிக்கார வீரன் பலே ஆள்; கட்டுமஸ்தான உடல்; உழைத்து உழைத்துப் பக்குவம் பெற்ற உடற் கட்டு. முகத்திலே எப்பொழுதும் ஓர் அலாதியான தேஜஸ்! ‘ஹை’ என்று அவன் மாடுகளை அதட்டுவதே ஒரு சங்கீதமாயிருக்கும். அலட்சியமாகப் பார்வையைச் சிந்தும்போது அவன் ஒரு பாட்டாளி என்பதையே மறந்துவிடுவான். அவனது சிரிப்பிலே ஒரு தனி அழகு தாண்டவமாடும். அரும்பிய சிறு மீசைகள்! அவசரத்தையே காட்டிக்கொண்டிருக்கும் அசைவுகள்!

கண்ணம்மாவின் கருத்தைக் கிளற இவை போதாதா? கண்ணம்மா கற்போடு நடக்க வேண்டும் என்றுதான் முதலில் கருதினள். ஆனால், உலகநாதரின் விகார ரூபம் அவள் பிடிவாதத்தை உடைத்தெறிந்தது. வீரனின் ‘கண்’ என்ற அதட்டல் காளை மாடுகளை அதிரச் செய்தன. அதே சமயத்தில் அந்த ஒலி கண்ணம்மாவுக்குக் கீதமாக இருந்தது. வண்டிக்காரனின் முறைப்பு, வெறித்த வண்டி மாடுகளுக்கு வெதறலைத் தந்தது. அதே சமயத்தில் கண்ணம்மாவுக்கு அது கம்பீரப் பார்வையாக இருந்தது. அவனது சவுக்கடிகள் மாடுகளுக்கு மனவேதனையைக் கொடுத்தன. அந்தச் சப்தத்தில் அவனது ஆற்றல் ஒளிந்து கிடப்பதாகக் கண்ணம்மாள் கருதினள். கண்ணம்மாவின் அணைப்பு வீரனுக்கு ஆனந்தமாகத்தா னிருந்தது. ஆனால், அவன் ஆண்ட வாழ்க்கையல்லவா? சுவைக்காத கைச் சுவைத்தான்; கிடைக்காது கிடைத்தது; முடியாது முடிந்தது; எஜமானியின் ஆசைக்குரியவன் தான்! வீரனுக்கும் கண்ணம்மாவுக்கும் இருந்த தொடர்பு விவகார தாட்சண்யமாக மாறிற்று. உறியில் தாவும்போது பயப்படாத பூனை உறியை அடைந்ததும் பயப்பட்டதுபோல - சுவரைத் துளைத்தபோது அஞ்சாத திருடன் வீட்டில் நுழைந்தவுடன் அஞ்சுவதுபோல—வீரன் கண்ணம்மாவின் கட்டில் அகப்பட்ட பிறகு நடுங்கினன் ஊருக்காக! உலகநாதர் வீட்டு விஷயம் ஊரில் பரவிற்று. ஊர் தூற்றுமோ? எஜமான் அறிந்தால் என்ன ஆகுமோ? என்ற கேள்விகள் வீரனத்திக்கு முக்காட வைத்தன.

வண்டியுடன் மாடுகளுண்டு. வண்டிக்காரன் வீரனுண்டு, என்ற நிலை ஏற்பட்டது பின்னால்! கண்ணம்மாவைக் கண்டாலே முகத்தைத் திருப்பிக்கொண்டு போய் விடுவான். முகாந்திரம் தெரியாமல் கண்ணம்மா விழித்தாள். கடிதம் எழுதலாம் என நினைத்தாள்! நினைப்பு இருந்தது, நேரமிருந்தது, தாள் இருந்தது, பேனா இருந்தது, ஆனால், வீரனுக்குக் கல்வி வாடை இல்லையே! கண்ணம்மா கலங்கிய உள்ளத்துடனே காலத்தைக் கடத்தினள். வீரனின் ஊடல் தீரும் வரை உலகநாதரிடம் உல்லாச நாடகத்தின் ஒத்திகைகளே நடத்தி வந்தாள்.

அப்போதுதான் ஒருநாள்! உலகநாதர்-கண்ணம்மா ஊஞ்சல் ஆட்டம் நடைபெற்றது. கண்ணம்மா கிளறிக் கிளறிக் கேட்ட பிறகு உலகநாதர் வாயைத் திறந்தார்.

உலகநாதர் பண்ணையில் வேலை பார்க்கும் உத்தண்டி என்ற தலையாரி ஒரு கிழவன். அவனது மகள் குமுதா. குமுதம் என்ற பெயரின் சுருக்கம் குமுதா. உத்தண்டியின் தங்கை மகன்தான் வீரன். குமுதாவின் அத்தான். குமுதாவும் வீரனும் குலவிக் கொண்டிருந்ததை உலகநாதர் கண்ட அன்று தான் ஊஞ்சல் உரையாடல் நிகழ்ந்தது.

உத்தண்டியின் மகளிடம் உலகநாதருக்கு மோகம். கண்ணம்மா தரும் காதல் ரசத்தையவிடக் குமுதாவின் கொவ்வை இதழ்களில் கசியும் இன்பம் அதிக விலை என்று புள்ளி போட்டார். இவ்வளவுக்கும் அந்த மகானுபாவன் மாதிரி பார்க்கக்கூட இல்லை. கண்ணம்மா போனால் போகட்டும், கட்டிய புருஷனல்லவா என்று, ஊருக்குப் பயந்தோ அல்லது சொத்துக்கு ஆசைப் பட்டோ உலகநாதரிடம் ஆசை காட்டி வாழ்ந்ததை, அவர் அன்பின் சிகரம் என்று நினைத்துவிட்டார். தமது அழகில் ஈடுபட்ட மயக்கம் என முடிவுகட்டிவிட்டார். கண்ணம்மா தம்மையே கடவுளாக நினைத்துவிட்டதாகக் கனவு கண்டார்.

கடவுளுக்கு நைவேத்தியம் என்று கூறிப்'பொங்கல் பள்ளயம் பாவாடை' போட்டு, அதைக் கருத்துக் கேற்ற கனகசுந்தரிகளுக்கு ஊட்டுகின்ற பூசாரியைப் போலவே, கண்ணம்மாவும் தன்னைக் கணவனுக்கு நைவேத்தியம் செய்து இன்பத்தை வீரனுக்கு வழங்கி வந்தாள். இதை அந்த இளித்தவாயர் அறியவில்லை. பாவம்! கடவுளாவது கற்சிலை; கண்ணில்லாதவர்! இந்தக் கணவனுக்கோ கருத்துமில்லை; கவனிப்புமில்லை!

இந்தக் கடவுளுக்குக் காட்டப்பட்ட பிரசாதத்திற்கு வீரன் நாக்கை நீட்டிக்கொண்டிருந்தான். அது ஒரு காலம்! ஆனால், அதே வீரன் அத்தை மகள் குமுதாவிடம் எஜமானியம்மாள் கற்பித்த பாடங்களை நடத்த நாள் எண்ணி வந்தான்.

குமுதாவிடம் ஆவலைக் கொட்டியிருந்த உலகநாதர் உள்ளம் வெதும்பினார், உடல் இளைத்தார்.

குமுதா குடியானவன் வீட்டுப் பெண்தான். அலங்காரமில்லாவிட்டாலும் அழகி. 'மேக்கப்' இல்லாவிட்டாலும் மேனியில் ஒரு லளித களை. சுருக்கமாகக் கூற வேண்டுமானால், குமுதா ஒரு குளிர்த் தென்றல்!

அவள் வீரனுக்குக் கிடைக்க அவனுக்கு உரிமை இருந்தது. அத்தான் என்ற முறையின் காரணமாக மட்டுமல்ல; அவன்தான் அவளுக்கும் சத்தான பொருள். வீரன் எஜமானியம்மாளின் இஷ்டத்திற் குரியவன் என்ற செய்தி குமுதாவுக்குத் தெரியாது. கொழுந்துப் பெண் தானே அவள்! வீரனை நம்பினள். வீரனும் வாழ்க்கையின் துணையாக அவளை ஏற்றுக்கொள்ளத் துணிந்தான்.

இதற்கிடையில் உலகநாதர் நின்றார். குமுதாவை ருசி பார்க்கக் குள்ள நரியா? 'குமுதா எப்படியும் கிட்ட வேண்டும்'—இந்த எண்ணத்தைக் கண்ணம்மாவிடம் கக்கிவிட்டார். ஆம்! ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தபோது தான் உள்ளத்தைத் திறந்தார். ஒளித்து வைத்திருந்ததை எடுத்து நீட்டினார். “கண்ணம்மா என் கண்ணல்ல.. நான் உன்னை அலட்சியப்படுத்துவதாக நினைக்காதே! எப்படியாவது ஒருநாள்....குமுதா என் படுக்கையை அலங்கரிக்க வேண்டும்....இதை நீதான் செய்ய வேண்டும்....தயவு செய்! உன் காலைப் பிடிக்கிறேன். இரங்கமாட்டாயா?” என்று வேண்டினார்.

அதற்குப் பிறகு நடந்தது என்ன? அந்த வரலாற்றை ஒவ்வொருவரும் கூறுகிறார்கள், கேளுங்கள்!

மு. கருணாநிதி · பெரிய இடத்துப் பெண், எட்டாம் பதிப்பு (ஜூலை 1953, திராவிடன் பதிப்பகம், வேலூர்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்