முரசொலி கடிதங்கள் · 3569
வருமா; எதிர்காலத்தில் மின் பற்றாக்குறை?
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3569. வருமா; எதிர்காலத்தில் மின் பற்றாக்குறை?
உடன்பிறப்பே,
ஆளுநர் உரையின் மீதான விவாதத்திற்கு பதிலளித்த தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா நீண்ட நேரம் மின் தட்டுப் பாட்டைப் பற்றி பேசியிருக்கிறார். தான் ஆட்சியில் இருந்தபோது மேற்கொண்ட முயற்சிகளை தி.மு. கழக அரசு தொடர்ந்திருந் தால் தமிழகத்தில் மின் தட்டுப்பாட்டை தவிர்த்திருக்கலாம் என்றும், ஜூலை மாதம் முதல் தமிழ்நாட்டில் தற்போதுள்ள 3 மணி நேர மின்வெட்டினை 2 மணி நேரமாகக் குறைப்போம் என்றும், கழக ஆட்சிக் காலத்தில் மின் உற்பத்தியை அதிகப்படுத்த எதுவுமே செய்யவில்லை என்றும் புள்ளி விவரங்களை அள்ளித் தெளித்திருக்கிறார். ஆட்சிப் பொறுப்பில் கடந்த ஐந்தாண்டுகள் முதலவராக நான்தான் இருந்தேன் என்ற அடிப்படையில் அவரது குற்றச்சாட்டுகளுக்கு நான் பதிலளிக்க விரும்புகிறேன்.
2006ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சி அமைந்த பிறகு மின் உற்பத்திக்காக என்னென்ன செய்யப்பட்டது என்று விளக்குகிறேன்.
எண்ணூர் அனல் மின் நிலைய இணைப்பு மூலமாக 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஒன்று 8-12-2006இல் 3 ஆயிரத்து 136 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது; அதன் உற்பத்தி 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் தொடங்கும்.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் - 3 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக் கூடிய ஒரு திட்டம் 2-5-2007இல் தொடங்கப்பட்டது; அதன் உற்பத்தி 2011ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் முதல் இயக்கத்திற்கு வரும்.
வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக் கூடிய வகையில் 2 ஆயிரத்து 475 கோடி ரூபாய்
மதிப்பீட்டில் ஒரு திட்டம் 26-6-2007இல் தொடங்கப்பட்டது; இதன் உற்பத்தி 2011 மே திங்களில் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டியது, தற்போது செப்டம்பரில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உடன்குடியில் பி.எச்.ஈ.எல்., மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் இணைந்து கூட்டுத் திட்டத்தின்கீழ், ஒவ்வொன்றும் 800 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய இரண்டு திட்டங்கள் 15-10-2007இல் 8 ஆயிரத்து 362 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டன. இதில் ஒரு அலகு 2013ஆம் ஆண்டு மார்ச் திங்களிலும்; மற்றொரு அலகு 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் நடைமுறைக்கு வந்து உற்பத்தியைத் தொடங்கும். வடசென்னை அனல் மின் நிலையத்திலேயே மேலும் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக் கூடிய ஒரு திட்டம் 2 ஆயிரத்து 475 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 14-7-2008இல் தொடங்கப்பட்டது. இதன் உற்பத்தி 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், நடைமுறைக்கு வரும். ஆயிரத்து 126 கோடி ரூபாய் செலவில், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளிலிருந்து, 183 மெகாவாட் இணை மின்சாரம் தயாரிக்கக்கூடிய திட்டம், 14-12-2009இல் தொடங்கப்பட்டது. இதன் உற்பத்தி 2011ஆம் ஆண்டு ஜூலை முதல் இயக்கத்திற்குக் கொண்டுவரப்படும். மொத்தம் 4183 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் தி.மு. கழக ஆட்சியில் தொடங்கப்பட்டன. 2006இல் தி.மு. கழக ஆட்சி அமைந்த பிறகு, வருங்காலத் தேவையை கருத்தில்கொண்டு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக 2010-2011இல் 1400 மெகாவாட் மின்சாரமும், 2011-2012இல் 3316 மெகாவாட் மின்சாரமும், 2012-2013இல் 1222 மெகாவாட் மின்சாரமும், 2013-2014இல் 1860 மெகாவாட் மின்சாரமும் - ஆக மொத்தம் 7798 மெகாவாட் மின்சாரம் பல்வேறு மின் திட்டங்களின் மூலமாகக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. இந்தப் புள்ளி விவரங்கள், தி.மு. கழக ஆட்சியில் புதிதாக மின்சாரத்தை உற்பத்திச் செய்யக் கூடிய திட்டங்கள் எதையும் தொடங்கவில்லை என்ற குற்றச் சாட்டிற்குத் தேவையான திடமான விளக்கமாக அமையுமென்று கருதுகிறேன்.
2006ஆம் ஆண்டு தமிழகத்திலே திராவிட முன்னேற்றக்கழக ஆட்சி அமைந்த பின்னர் பல்வேறு புதிய தொழிற்சாலைகள் ஆங்காங்கு தொடங்கப்பட்டதால் மின் தேவை அதிகமாயிற்று. 2006ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு டிட்கோ நிறுவனத்தின் முயற்சியினால் 27 தொழில்கள் தொடங்கப்பட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன.
24 அரசாணைகள் மூலம் 24 தொழில்கள் தொடங்கப்பட அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் இதுவரை மோட்டோரோலா தொழிற்சாலை 27-4-2008 அன்றும், அப்போலோ ரேடியல் டயர்ஸ் தொழிற்சாலை 10-2-2011 அன்றும், சாம்சங் இந்தியா 13-11-2008 அன்றும், சான்மினா (எஸ்.சி.ஐ.) கார்ப்பரேஷன் 2007 டிசம்பரிலும், ஹூண்டாய் மோட்டார் தொழிற்சாலையின் இரண்டாம் பிரிவு 2-2-2008 அன்றும், டெல் கம்ப்யூட்டர்ஸ் 22-4-2008 அன்றும், குரோத்லிங் தொழிற் சாலை 16-7-2008 அன்றும், நோக்கியா சீமென்ஸ் தொழில் நிறுவனம் 16-10-2008 அன்றும், ஹேன்சன் டிரான்ஸ்மிஷன்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத் தொழிற்சாலை 24-1-2010 அன்றும், போர்டு விரிவாக்கத் தொழிற்சாலை 5-2-2010 அன்றும், நிசான் இந்தியா கார் தொழிற்சாலை 17-3-2010 அன்றும், ஏ.டி.சி. டயர்ஸ் தொழிற்சாலை என மொத்தம் 12 தொழிற்சாலைகள் திறக்கப்பட் டுள்ளன. இது தவிர சிப்காட் மூலமாகவும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலமாகவும் புதிய புதிய தொழில்களைத் தொடங்கத் தேவையான உதவிகள் செய்யப்பட்டு அதன் காரணமாகவும் தமிழகத்தில் தொழில்கள் பெருகி, அதற்குத் தேவையான மின்சாரத்தை வழங்க வேண்டிய சூழ்நிலைக்கு தமிழகம் உள்ளாகியது. தமிழகத்தின் உத்தேசமான உச்ச கட்ட மின் தேவை 11 ஆயிரம் மெகாவாட். ஆனால் கழக ஆட்சியிலே மின் உற்பத்தி சுமார் 7300 மெகாவாட்டாக இருந்தது. எனவே பற்றாக்குறை 3700 மெகாவாட். இந்தப் பற்றாக்குறையை சமாளிக்க, கழக ஆட்சியிலே அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. மின் உற்பத்தியாளர்களிடமிருந்து 2200 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது. மின் சந்தையிலிருந்தும் கொள்முதல் செய்யப்பட்டது.
நிலக்கரி மூலம் இயங்கும் அனல் மின் நிலையங்களை தனியார் வணிக மின் திட்டங்களாக நிறுவுவதற்கு தமிழக
அரசு ஊக்கமளித்தது. அதன் காரணமாக தமிழகத்தில் 18,140 மெகாவாட் அளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்ய பத்து கடலோர அனல் மின் திட்டங்கள் அமைக்க தனியார் நிறுவனங்கள் முன்வந்தன. அவற்றில் தனியார் நிறுவனம் ஒன்று 1200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய பூர்வாங்க பணிகளை தொடங்கியது. அது 2011-2012ஆம் ஆண்டில் உற்பத்தியைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையெல்லாம் அனுசரித்துத்தான் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே எதிர்காலத் தேவையைக் கணக்கிட்டு இந்த அளவிற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்குமானால், தற்போது தேவையான மின் உற்பத்தி தொடங்கப்பட்டிருக்கும், தமிழகத்திலே பற்றாக்குறை வந்திருக்காது என்று விளக்கம் தரப்பட்டது. அனல், புனல், அணு, எரிவாயு மற்றும் காற்றாலை மின் உற்பத்தியைத் தவிர தமிழகத்தில் இணை மின் உற்பத்தி மூலமும், தாவர சக்தி மூலமும் தன் பயன் உற்பத்தி நிலையங்கள் மூலமும் மின் உற்பத்தி செய்யப் படுகின்றது. குறிப்பாக இணை மின் உற்பத்தி மூலம் 487 மெகாவாட்; தாவர சக்தி மூலம் மின் உற்பத்தி 127 மெகாவாட்; தன் பயன் உற்பத்தி மூலம் 851 மெகாவாட்; கழக ஆட்சியில் மின்சாரம் கிடைத்தது. இது தவிர மத்திய அரசு தொகுப்பிலிருந்து 2350 மெகா வாட் மின்சாரம் கேட்டுப் பெற்றோம். உச்ச நேரத் தேவையை சமாளிப்பதற்காக என்று 75 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக 26-3-2008 முதல் பெறப்பட்டது. மின் கட்டமைப்பில் உள்ள காற்றாலைகளின் மொத்தக் கொள்திறன் அப்போது 4888 மெகாவாட். தனியார் காற்றாலைகள் மூலமாக 2006-2007ஆம் ஆண்டில் 578 மெகாவாட்; 2007-2008ஆம் ஆண்டில் 381 மெகாவாட்; 2008- 2009ஆம் ஆண்டில் 431 மெகாவாட் மற்றும் 2009-2010 ஆம் ஆண்டில் 600 மெகாவாட்; என்ற அளவிற்கு மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டிருந்தது. “2006 முதல் 2011 வரையிலான கால கட்டத்தில், அதாவது தி.மு.க. ஆட்சிக் காலத்தில் எந்தவிதமான விருதையும் இந்த அனல் மின் நிலையங்கள் பெறவில்லை” என்பதும் ஜெயலலிதா அம்மையாரின் குற்றச்சாட்டு! தூத்துக்குடி அனல் மின் நிலையம், தூத்துக்குடி துறைமுகம் வழியாக அதிக இறக்குமதியின் பேரில் சிறந்த போக்குவரத்திற்கான
விருதை 2006-2007, 2007-2008 மற்றும் 2008-2009 ஆகிய ஆண்டுகளுக்கு இந்திய அரசிடம் பெற்றுள்ளது. மேட்டூர் அனல் மின் நிலையத்தின் நான்காம் அலகு 1-10-2009 வரையில் தொடர்ந்து 300 நாட்கள் மின் உற்பத்தி செய்து, மூன்றாவது அலகின் முந்தைய சாதனையான 272 நாட்களை விஞ்சியது, தி.மு. கழக ஆட்சியிலேதான். வடசென்னை அனல் மின் நிலையத்தின் முதலாவது அலகு 2006 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து 214 நாட்கள் மின் உற்பத்தி செய்தது.
அடுத்து ஜெயலலிதா தனது முந்தைய ஆட்சிக் காலத்தில் வல்லூர், வட சென்னை அனல் மின் நிலையங்களைப் பற்றிக் குறிப்பிட்டு; தனது அரசு மேற்கொண்ட முயற்சிகளை தி.மு.க. அரசு தொடர்ந்திருந்தால் மின் தட்டுப்பாடு வந்திருக்காது என்றும் கூறியிருக்கிறார். வல்லூர் அனல்மின் நிலையத் திட்டத்திற்கான மொத்த மதிப்பு 8 ஆயிரம் கோடி ரூபாயாகும். இந்தத் திட்டத்தின் அலகுகள் ஒன்று மற்றும் இரண்டிற்கான வேலைகள் - 13-8-2007 அன்று கழக ஆட்சியில் தொடங்கப்பட்டன. அலகு மூன்றிற்கான வேலைகள் 28-7-2009 அன்று தொடங்கப்பட்டது. அலகு ஒன்றுக் கான கொதிகலன் நிறுவப்பட்டு சுழலியின் நிறுவு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முக்கிய இயந்திர சாதனம் தவிர, இதர சாதனங்களை அமைக்கும் வேலைகள் இரண்டு அலகுகளுக்கும் நடைபெற்று வருகின்றன. அலகு மூன்றுக்கான முக்கிய இயந்திர சாதனங்களை வாங்கும் ஒப்பந்தமும் பாரத மிகு மின்கழகத்திற்கு வழங்கப்பட்டு, அதற்கான வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அலகுகள் 1, 2, மற்றும் 3 முறையே ஆகஸ்ட் 2011, அக்டோபர் 2011, செப்டம்பர் 2012இல் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு; அக்டோபர் 2011, டிசம்பர் 2011 மற்றும் நவம்பர் 2012இல் செயலாக்கத்திற்கு கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தைப் பொறுத்தவரை, முக்கிய இயந்திர சாதனங்களுக்கான ஒப்பந்தம், பாரத மிகு மின் கழகத்திற்கு 28-1-2009 அன்று கழக ஆட்சியிலேதான் வழங்கப்பட்டது. ஆகஸ்ட் 2012இல் இத்திட்டம் செயலாக்கத்திற்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. 8700 கோடி ரூபாய் மதிப்புடைய உடன்குடி அனல் மின் நிலையத்தின் முதலாவது அலகு மார்ச் 2013லும், இரண்டாவது அலகு செப்டம்பர் 2013லும் செயலாக்கத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக, கழக ஆட்சியில் எண்ணிப் பார்த்து, திட்ட அறிக்கைகள் தயாரித்து, செயலாக்கத்திற்குப் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அனுசரித்து, பின்னர் மின் திட்டங்கள் உற்பத்தி நிலையை அடையும்போது, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்திருக்கிறது. மின் தடை தமிழகத்திலே மட்டும்தான் இருக்கிறதா? மற்ற மாநிலங்களில் மின் தடையே இல்லையா? மராட்டியத்தில் 5200 மெகாவாட் - உத்தரப் பிரதேசத்தில் 2384 மெகாவாட் - கொல்கத்தாவில் 1200 மெகாவாட் - பஞ்சாப்பில் 1500 மெகாவாட் - கர்நாடகாவில் 1120 மெகாவாட் - ஆந்திராவில் 964 மெகாவாட் - கேரளாவில் 364 மெகாவாட் - அரியானாவில் 880 மெகாவாட் - ராஜஸ்தானில் 800 மெகாவாட் மின்பற்றாக்குறை இருப்பதாகவும், தமிழ்நாட்டில் 1178 மெகாவாட் மின்சாரம் மின் பற்றாக்குறை உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் — தெரிவிக்கின்றன. ஆந்திராவில் நாள் ஒன்றுக்கு 4 மணி நேரத்திற்கு சுழற்சி முறையில் மின்தடை உள்ளது. கர்நாடக மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு 3 மணி நேரத்திற்கு சுழற்சி முறையில் மின்தடை உள்ளது. தமிழகத்திலும் நாள் ஒன்றுக்கு 3 மணி நேரத்திற்கு சுழற்சி முறையில் மின் தடை செய்யப்படுகிறது. விவசாயத்திற்கு என்று எடுத்துக் கொண்டால் ஆந்திராவில் மும்முனை மின்சாரம் மொத்தம் 7 மணி நேரம் நாள் ஒன்றுக்கு தரப்படுகின்றது. கர்நாடகாவில் மும்முனை மின்சாரம் நாள் ஒன்றுக்கு 6 மணி நேரம் தான் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மும்முனை மின்சாரம் நாள் ஒன்றுக்கு மொத்தம் 9 மணி நேரம் வழங்கப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கு என்று எடுத்துக்கொண்டால் ஆந்திராவில் பொதுவாக மாதத்தில் 8 நாட்களுக்கு மின் தடை - நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய 28 மில்லியன் யூனிட் அளவுக்கு மின்தடை. கர்நாடகாவில் தொழிற்சாலைகளுக்கு அன்றாடம் 3 மணி நேரம் மின் தடை உள்ளது; நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய 28 மில்லியன் யூனிட் அளவுக்கு மின் தடை. தமிழ்நாட்டில் உயரழுத்த தொழிற்சாலைகள் மற்றும் வணிக பயனீட்டாளர்களுக்கு மின் தேவை மற்றும் பயனீட்டளவில் 30 விழுக்காடு மட்டுமே மின்வெட்டு; நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய 20 மில்லியன் யூனிட் அளவிற்கு மட்டுமே மின் தடை. எனவே மின் பற்றாக்குறை என்பது தமிழ்நாடு போன்ற ஒருசில
மாநிலங்களில் மட்டுமே இருந்து வந்ததற்கு மாறாக; இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களும் மின் பற்றாக்குறையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த மாநிலங்களிலிருந்தும் தமிழகத்திற்குத் தேவையான மின்சாரத்தைப் பெற இயலாத நிலைமை ஏற்பட்டது.
2001 முதல் 2006 வரையிலான தனது ஆட்சிக் காலத்தில், தமிழ்நாடு மின் வெட்டே இல்லாத மாநிலமாக இருந்தது என்று ஜெயலலிதா சொல்லி பெருமைப்பட்டுக் கொள்கிறார். 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலே 16-10- 1992 வரை தமிழ்நாட்டில் மின் கட்டுப்பாட்டு முறை இருந்ததா? இல்லையா? அது போலவே 3-10-1982 முதல் 26-7-1984 வரை அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலே மின் கட்டுப்பாட்டு முறை இருந்ததா இல்லையா? 2006ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அதிகத் தொழிற்சாலைகளை தமிழகத்திலே தொடங்கா மல் இருந்திருந்தால் மின் கட்டுப்பாட்டு முறை வந்திருக்காதுதான். அதற்காக தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்காமல் ஓர் அரசு இருக்க முடியுமா ?
அ.தி.மு.க. ஆட்சியிலே மின் உற்பத்தி திட்டங்களை அதிகமாகத் தொடங்காத காரணத்தால் கழக ஆட்சியிலே மின் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆனால் தி.மு.கழக ஆட்சியில் மின் உற்பத்தித் திட்டங்களைத் தொடங்கியதன் பயன் நிச்சயமாக வருங்காலத்தில் மின் பற்றாக்குறையை தமிழகத்தில் இல்லாமல் செய்திடும் என்று உறுதியாக நம்பலாம். அ.தி.மு.க. ஆட்சியினர் தங்கள் திறமையால்தான் தமிழகத்திலே மின் பற்றாக்குறை இல்லாத நிலையை ஏற்படுத்தியதாக தற்பெருமை கொள்ளலாம். எப்படியோ; மக்களுக்கு மின்சாரம் கிடைத்தால் போதும்! தடையில்லாத, தரமான மின்சாரம் என்னருந் தமிழ் மக்களுக்குக் கிடைக்குமானால், எல்லார்க்கும் எப்போதும் மகிழ்ச்சிதான்!
அன்புள்ள, மு.க. 18-6-2011
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065831_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_45.pdf; PDF பக்கம் 242–248. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.