முரசொலி கடிதங்கள் · 3570
நம்பிக்கையின் ஒரு துளிதான் இந்தக் கடிதம்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3570. நம்பிக்கையின் ஒரு துளிதான் இந்தக் கடிதம்!
உடன்பிறப்பே, சுதந்திரம் மலர்ந்திடவும், நாட்டு மக்களின் வாட்டம் போக்கிடவும், அவர்கள் உரிமைகளைப் பெற்று உயர்ந்திடவும், தமது உடல், பொருள், ஆவி என அனைத்தையும் ஈந்த பழம்பெரும் தேச பக்தர்கள், தியாகிகள் - அவர்கள் காங்கிரஸ் இயக்கத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் - அவர்களை மதித்துப் போற்றியும் - அவர்தம் நினைவு என்றும் நிலைத்திடவும் - ஆவன அனைத்தும் செய்து பழக்கப்பட்டவன் என்ற முறையில் - தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் மறந்து விட்ட ஒரு பெரியவரை “தாடியில்லாத ராமசாமி நாயக்கர்” என்றெல்லாம் மாற்றுக் கட்சிக்காரர்களாலேயே புகழப்பட்ட ஒருவரை; ஆம்; “ஓமந்தூரார்” எனப்படும் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களை - புதிய சட்டமன்ற மாளிகையும், அதையொட்டிய வளாகமும் உருவாக்கப்பட்ட போது - அவருடைய நினைவைப் போற்றும் வகையில், அந்தப் பகுதிக்கு - “ஓமந்தூரார் வளாகம்” எனப் பெயரிட்டு - அந்த வளாகத்தில் அமையும் சட்டமன்றப் பேரவை, மேலவை - அவற்றையொட்டி தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலகங்கள் ஆகியவற்றை அமைப்பதற்கும்; நவீன மயமான வகையில் கலைவாணர் அரங்கத்தை உருவாக்கிடவும்; முனைந்து - ஏறத்தாழ 86 ஆயிரத்து 450 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட “ஏ” பிளாக் என்ற கட்டிட வளாகத்தில் சட்டப்பேரவை கூட்ட அரங்கம் - பேரவைத் தலைவர் அலுவலகம் - மேலவை அரங்கம் - சட்டமன்ற நூலகம் - கூட்ட அரங்கு - மேதகு ஆளுநர் அலுவலகம் - முதலமைச்சர் அலுவலகம் - முதல் அமைச்சரின் செயலகம் - எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் - அமைச்சர்களின் அலுவலகங்கள் - அமைச்சரவை கூட்ட அரங்கம் - தலைமைச் செயலாளர் அலுவலகம் - சட்டமன்றத் துறை - பொதுத்துறை
- நிதித்துறை - உள் துறை - சட்டத்துறை - திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை ஆகிய ஆறு முதன்மையான துறைகளுக்குரிய அலுவலகங்கள் அமையுமாறு அழகுறக் கட்டி முடிக்கப்பட்டது.
இப்புதிய சட்டமன்றப் பேரவை மற்றும் தலைமைச்செயலக வளாகத்தில் 100 அடி உயரம் கொண்ட சட்டமன்றப் பேரவைக் கட்டிடத்தின் மேல் 120 அடி விட்டமும், 100 அடி உயரமும் கொண்ட - இரும்பினால் ஆன குவிமுகக் கோபுரம் அமைக்கப்பட்டு - பிரம்மாண்டமான இக்கட்டிடத்திற்கு மேலும் அழகு சேர்க்கப்பட்டது.
தங்க நிற முலாம் பூசப்பட்ட அலுமினியத் தகடுகளாலும் மெருகேற்றப்பட்ட கருங்கல் பலகையினாலும் இக்கட்டிடத்திற்கு கூரை வேயப்பட்டுள்ளது. இவ்வளாகத்திற்கு பொது மக்கள் தடையின்றி வந்து செல்வதற்காக வரவேற்புக் கட்டடம் ஒன்றும் தனியாக கட்டப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் “பப்ளிக் பிளாசா” என்று அழைக்கப்படும் அந்தப் பகுதியை சென்னை வாலாசா சாலையில் செல்வோர் பார்த்து வியந்து பாராட்டும் காட்சி வர்ணிக்கவே இயலாத ஒன்றாகும். அந்த “ப்ளாசா” வில் தான் நீண்டதொரு தண்ணீர் தொட்டியும் அமைக்கப்பட்டு - நூற்றுக்கணக்கான வண்ண வண்ண மீன்கள் அந்தத் தொட்டியில் நீந்தி விளையாடுவதை - அந்தப் பகுதிக்கு வரும் பள்ளிச் சிறார்களும், ஆண்களும், பெண்களும் கண்டுகளிக்கும் காட்சி அந்தக் கட்டிடத்திற்கே தனிப் பெரும் மாட்சியாக விளங்கியது.
பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் திருமதி சோனியா காந்தி அவர்கள் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்ட இந்தப் பெரிய கட்டிடத்தின் வெளிப்புற கட்டுமானப் பணிகள் முடிவடைந்து விட்டன என்பதையும் உள்புறக் கட்டுமானப் பணிகளில் பேரவைக் கூட்ட மண்டபப் பணிகள் முடிவடைந்து பேரவையின் கூட்டத் தொடர்கள் நடைபெற்றன என்பதையும்; கட்டிடத்தில் பிற உள் பகுதிகளில் நிறைவுப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதையும் முழுமையாக எல்லாப் பணிகளுமே ஜூன் 30ந்தேதிக்குள் முடிவடையும் என்பதையும் அரசின் சார்பிலேயே அறிவிக்கப்பட்டது.
ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள தலைமைச் செயலகக் கட்டிடம் என்னுடைய சொந்தப் பணத்திலே கட்டப்பட்டது
அல்ல. அதைக் கூட சில பத்திரிகைகளில் 1200 கோடி ரூபாய் செலவழித்துக் கட்டப்பட்ட கட்டிடம் என்று எழுதுகிறார்கள். தற்போது கட்டி முடிந்துள்ள கட்டிடத்திற்காக திட்டமிடப்பட்ட தொகை 623 கோடியே 99 லட்சம் ரூபாய். அதிலே செலவு செய்யப்பட்டது 479 கோடியே 50 லட்சம் ரூபாய். கட்டப்பட்டு வருகிற பிளாக் “பி” கட்டிடத்திற்கான மதிப்பு 279 கோடியே 56 லட்சம் ரூபாய். இதிலே செலவாகியுள்ள தொகை 72 கோடியே 30 லட்சம் ரூபாய். எனவே 1200 கோடி ரூபாய் செலவழிக்கப் பட்டதாகக் கூறுவது தவறு! தவறு! செயின்ட் ஜார்ஜ் கோட்டையில்தான் ஏற்கனவே தலைமைச் செயலகம் இயங்கி வந்தது. இந்த இடத்தில் இந்திய ராணுவமும் இருப்பதால் பாதுகாப்பு காரணமாக பொதுமக்கள் எளிதில் வந்து செல்ல முடியாத ஒரு நிலை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. மேலும், அங்கே உள்ள கட்டிடங்களில் ஏதாவது மாறுதல் செய்ய நேரிட்டால்கூட, - ஏன், அங்கே இருக்கும் புல்லைச் செதுக்கி அகற்றுவதற்குக் கூட - இந்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டியிருக்கிறது. வேறு சில அரசு அலுவலகங்கள் நகரின் வெவ்வேறு இடங்களில் இயங்கி வருவதால் அதன் காரணமாக “வாடகை” என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு தொடர்ந்து செலவு ஏற்படுகிறது என்பதாலும்; அனைத்து அலுவலகங்களும் அமையக் கூடிய விதத்தில் புதிய இடத்தை அ.தி.மு.க. அரசு முதலில் தேடி வந்தது. சென்னை கோட்டூர்புரத்தில் தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான அடிக்கல் நாட்டு விழா பூஜை - புனஸ்காரங்களோடு நடைபெற்று, அன்றைய முதல் அமைச்சரான ஜெயலலிதாவே அதிலே கலந்து கொண்டார். சென்னை கடற்கரை சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரி வளாகத்தில் புதிதாக தலைமைச் செயலகம் கட்டுவதற்கு ஜெயலலிதா ஆட்சியிலே இருந்த போது முடிவெடுத்தார். நிதி நெருக்கடி அரசுக்கு இருந்தாலும், தொலை நோக்குப் பார்வையோடு புதிய தலைமைச் செயலகத்தை ராணி மேரி கல்லூரி வளாகத்தில் அமைப்போம் என அப்போது அ.தி.மு.க. அரசு தெரிவித்தது. சட்டப் பேரவையில் ஜெயலலிதாவால் அப்போது அறிவிக்கப்பட்டபோதே, “தற்போதைய தலைமைச் செயலகம் தகுதி வாய்ந்ததாக இல்லை. ராணி மேரி கல்லூரி கட்டிடங்கள் மோசமான நிலைமையில் உள்ளன. அதை இடிக்க
வேண்டும். புதிய தலைமைச் செயலக வளாகம் அவசியம்.” என்றெல்லாம் கூறப்பட்டது.
அந்தக் கருத்துக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் - தி.மு. கழக ஆட்சியில் கட்டி 14-8-1975 அன்று திறந்து வைக்கப்பட்ட - நாமக்கல் கவிஞர் மாளிகையில், பல இடங்களில் விரிசல் விழுந்துள்ளது என்றும், கசிவு ஏற்படுகிறது என்றும், எனவே கோட்டையில் இருந்து உடனடியாக தலைமைச் செயலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் அப்போது ஜெயலலிதா கூறினார். அதையெல்லாம் மனதிலே கொண்டு தி.மு.கழக ஆட்சியிலே புதிய தலைமைச் செயலகம் உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது ஜெயலலிதா அந்தப் புதிய தலைமைச் செயலகத்தைப் புறக்கணித்து விட்டு, பழைய தலைமைச் செயலகத்திலேயே தான் இருப்போம், நாமக்கல் கவிஞர் மாளிகையை புனருத்தாரணம் செய்யப் போகிறோம் என்றெல்லாம் ஆரம்பித்திருப்பது விதண்டாவாதம்; வெறுப்பினாலும், காழ்ப்புணர்ச்சியாலும் ஏற்பட்ட விளைவு; என்பதைத்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
தற்போது புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டு - திறப்பு விழாவும் நடைபெற்று - சட்டப் பேரவைக் கூட்டத் தொடர்களும் நடைபெற்று - ஏழு முறை அமைச்சரவை கூட்டங்களும் நடைபெற்று - முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் எல்லாம் புதிய தலைமைச் செயலகத்திற்கு இடம் மாறிய பிறகு; தலைமைச் செயலகத்தை, பழைய இடத்திலேயே தொடர்ந்து நடத்துவோம் என்றும்; புதிதாக கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தைப் பயன்படுத்தமாட்டோம் என்றும் கூறி, அங்கே வைக்கப்பட்ட பெயர்ப் பலகைகளை எல்லாம் பெயர்த்தெறிகின்ற பணியிலே “ஜெயா” அரசு ஈடுபட்டுள்ளது.
கழக ஆட்சியிலே உருவாக்கப்பட்ட ஓமந்தூரார் வளாகத்திலே உள்ள தலைமைச் செயலகத்திலேதான்; திரிபுரா ஆளுநர் என்னைச் சந்தித்து கட்டிடத்தைப் பார்வையிட்டு, பெரிதும் பாராட்டி முதலமைச்சர் அறைக்கே வந்து அந்த அறையையெல்லாம் சிலாகித்துக் கூறிவிட்டு “இந்தியா கேட்” மாதிரியிலான நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கிச் சென்றார்.
இந்தியக் கிரிக்கெட் குழுவின் தலைவரான மகேந்திர சிங் டோனி அவர்களுக்கு; உலகக் கோப்பையை வென்றதற்காக தமிழக அரசின் சார்பில் சிறப்பு பரிசு புதிய தலைமைச் செயலகத்திலே உள்ள முதலமைச்சர் அறையிலேதான் வழங்கப்பட்டது. பரிசினைப் பெற்றுக்கொண்ட டோனியும் அவரோடு வந்த சுரேஷ் ரெய்னா, அஸ்வின் போன்றவர்களும் தலைமைச் செயலகத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு, வெகுவாகப் புகழ்ந்து சென்றார்கள்.
அதுமட்டுமல்லாமல்; மத்திய அரசின் அமைச்சர்கள், திரு.ப.சிதம்பரம், திரு. ஜி.கே. வாசன், திரு. நாராயணசாமி போன்றவர்களும்; தமிழக ஆளுநர் மேதகு சுர்ஜித்சிங் பர்னாலா அவர்களும் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், புதிய தலைமைச் செயலக வளாகத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு பாராட்டி இருக்கின்றார்கள்.
ஏன்; புதிய தலைமைச் செயலகத்திலே உள்ள சட்டப் பேரவை அரங்கிற்கு ஜெயலலிதாவின் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் பல நாட்கள் வந்திருந்து கலந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் ஒரு முறை கூட அந்த வளாகத்திற்கே வராமல் இருந்த ஜெயலலிதா, அந்தத் தலைமைச் செயலகத்தை புறக்கணித்துவிட்டு, தமிழகத்திலே உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாம் வலியுறுத்திய பிறகும், அந்தக் கட்டிடத்தைப் புறக்கணித்து, பழைய தலைமைச் செயலகத்திலே இயங்கி வந்த “பாவேந்தர்” செம்மொழித் தமிழாய்வு நூலகத்தை இரவோடு இரவாக வெளியே போகச் சொல்லிவிட்டு; அங்கே மீண்டும் சட்டப் பேரவையை நடத்தி முடித்திருக்கிறார். இதிலிருந்து ஓமந்தூரார் வளாகத்திலே உள்ள கட்டிடம் தி.மு.கழக ஆட்சியிலே கட்டப்பட்டது என்பதுதான் அவரது வெறுப்புக்கு ஒரே காரணமாக இருக்க முடியுமென்றும், நிர்வாக வசதி இல்லை என்றெல்லாம் கூறுவது அவரது உள்மனதில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வை மறைப்பதற்காகத்தான் என்பதும் நன்றாகப் புலனாகிறது.
தி.மு. கழக ஆட்சியிலே கட்டியதுதான் காரணம் என்றால், தி.மு. கழக ஆட்சியிலே எழுப்பப்பட்ட நாமக்கல் கவிஞர் மாளிகையை மட்டும் புனருத்தாரணம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாமா?
தமிழகத்திலே உள்ள பல மேம்பாலங்கள் தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் தானே உருவாக்கப்பட்டன. அந்த மேம்பாலங்களின் வழியாகத்தானே அம்மையார் ஜெயலலிதாவின் கார் செல்லுகிறது!
கருணாநிதி கட்டிய மேம்பாலம், அதிலே நான் பயணம் செய்யமாட்டேன் என்று நிறுத்தி விட்டாரா என்ன? இன்னும் சொல்லப் போனால் கடந்த வாரம் டெல்லி சென்றபோது அவசர அவசரமாக டெல்லி தமிழ்நாடு இல்லம் சீர்படுத்தி அங்கே சென்று தங்கினாரே; அந்தத் தமிழ்நாடு இல்லம் எப்படி வந்தது?
ஒருமுறை நானும், முரசொலி மாறனும் டெல்லியில் பேசிக்கொண்டிருந்தபோது, பெரிதாக அமைந்துள்ள ஆந்திர பவனை மாறனிடம் சுட்டிக்காட்டி, ஆந்திர மாநில அரசு டெல்லியிலே அவ்வளவு எழிலாக தனது விருந்தினர் இல்லத்தைக் கட்டியிருக்கும்போது, தமிழ்நாடு இல்லத்திற்கு அப்படியொரு இடம் வேண்டாமா என்று நான் கேட்டு - அதன் பிறகு முரசொலி மாறனும், நமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் முயற்சியெடுத்து, தற்போதுள்ள இடத்தைத் தேர்வு செய்து, அதிலே கட்டிடம் கட்டியபோது நானே நான்கைந்து முறை நேரில் சென்று பார்வையிட்டு, எழும்பிய மாளிகைதானே தற்போது உள்ளது. அம்மையார் ஜெயலலிதா அங்கேதானே சென்று தங்கினார். தி.மு. கழக ஆட்சிக்காலத்தில் நான் முயற்சி எடுத்துக் கட்டிய கட்டிடம் என்பதற்காக அங்கே போகாமலா இருந்துவிட்டார். கோபம் என் மீதுதானே தவிர; நான் கட்டிய புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் என்ன “பாவம்” செய்தது?
எனவே முதலமைச்சர் பொறுப்புக்கு மூன்றாவது முறையாக வந்துள்ள ஜெயலலிதா அவர்கள் இனியாவது, அரசியலில் பக்குவப்பட்ட ஒரு தலைவராக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். தி.மு.கழக ஆட்சி செய்ததையெல்லாம் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பது என்பது அவர் இருக்கும் பதவிக்கு அழகல்ல. எந்தவிதப் பெருமையையும் சேர்க்காது. மக்களின் வரிப் பணத்தைச் செலவழித்து கட்டப்பட்ட கட்டிடங்களை வேண்டாமென்று கூறுவது தன்னிச்சையான போக்கு மட்டுமல்ல; மக்களையே அவமதிப்பதாகும். அவர்களே கூறிய கசிவு ஏற்பட்டுள்ள, விரிசல் உள்ள கட்டிடத்திற்கு தலைமைச் செயலகத்தை மாற்றி, அதன் பிறகு அங்கே ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றால், அதற்கு முழு பொறுப்பையும்
புதிய ஆட்சியாளர்கள்தான் ஏற்க வேண்டும். சட்டப்பேரவை மண்டபத்தை மீண்டும் மாற்றுவதால் செம்மொழி ஆய்வு மையத்தின் நூலகத்தை தேவையில்லாமல் மாற்றியிருக்கிறார்கள். இது தமிழுக்குச் செய்யப்பட்ட நன்மையல்ல. புதிய அரசு நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு நலத் திட்டங்கள், மக்களுக்கு ஆற்றிட வேண்டிய முக்கிய பணிகள் ஏராளமாக இருக்கும்போது தலைமைச் செயலகத்தை மாற்றுவதில் அரசு இயந்திரத்தின் முழுக் கவனத்தையும் செலவழிப்பது வீண் வேலை, தனி மனிதர் ஒருவரின் பிடிவாதத்திற்காக அரசு நிர்வாகத்தைத் திசை திருப்பும் செயலாகும். புதிய தலைமைச் செயலகம் தமிழக அரசுக்குச் சொந்தமான இடம். அனைத்து அலுவலகங்களையும் ஒரே இடத்தில் அமைத்திட முடியும். ஆனால் பழைய தலைமைச் செயலகம் மத்திய அரசுக்குச் சொந்தமானது. காலத்தின் மாற்றத்திற்கேற்ற நிர்வாகத் தேவைகளை அங்கே நிறைவு செய்திட முடியாது. தமிழக அரசுக்குச் சொந்தமான புதிய இடத்தை விட்டு விட்டு, வேண்டுமென்றே பழைய இடத்திற்கு போவது என்பது முறையான நிர்வாகச் செயல்பாடு அல்ல. ஆட்சிகள் மாறும்போது சில திட்டங்கள், சட்டங்கள் மாறலாமே தவிர; அடிப்படையில் முந்தைய ஆட்சி செய்த மக்கள் நலத் திட்டங்களையெல்லாம் புறந்தள்ள வேண்டும் என்பது ஓர் ஆட்சி மாற்றத்தின் நெறிமுறையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இத்துடன் நிறுத்துகிறேன். இதற்கு மேல் நான் எதுவும் எழுதத் தேவையில்லை என்று கருதுகிறேன். பகுத்தறிந்து பார்க்கும் - பழக்கமும் தெளிவும் தமிழ் மக்களுக்கு அறவே அற்றுப்போய் விட்டதாக நான் கருதவில்லை. அந்த நம்பிக்கையின் ஒரு துளிதான் இந்தக் கடிதம்.
அன்புள்ள, மு.க. 19-6-2011
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065831_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_45.pdf; PDF பக்கம் 249–255. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.