முரசொலி கடிதங்கள் · 3572
“100” கருணாநிதிகளால் முடியாதுதான்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3572. “100” கருணாநிதிகளால் முடியாதுதான்!
உடன்பிறப்பே,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் தா. பாண்டியன் அவர்கள், தி.மு. கழகத்தோடு உறவு நிலையில் இருந்த காலத்திலேயே அந்தக் கட்சியைச் சேர்ந்த தொண்டர்களும், தலைவர்களும் நம்மோடு ஒன்றுபட்டு தோழமை உணர்வோடு இருந்த போது கூட - தோழர் தா. பாண்டியன் அவர்கள் ஒருவித “அலர்ஜி”யோடுதான் பழகுவார். பொதுத் தேர்தலுக்கு முன்பே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அ.தி.மு.க. வோடு உறவு கொள்ள வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையோடும், ஆர்வத்தோடும் செயல்பட்டவரும் அவர்தான் என்பதை அந்தக் கட்சியிலே உள்ள தொண்டர்களும், முன்னணியினரும் நன்றாகவே அறிவார்கள். ஆனால் எந்தவொரு கருத்திலும் எந்த அளவிற்கு அவர் உறுதியோடு இருப்பார் என்பது கேள்விக்குரியது. கடந்த வாரத்திலே கூட ஒரு நிகழ்ச்சியிலே பேசும்போது புதிய அ.தி.மு.க. அரசிலே அமைச்சர்கள் மாற்றத்தைத் தவிர வேறு எதுவும் நடை பெறுவதில்லை என்று அவர் பேசி, அது அவருடைய கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான “ஜனசக்தி” முதல் ஆங்கில ஏடுகள் வரையிலே வெளிவந்ததை நான் எடுத்துக்காட்டியிருந்தேன். அந்த என்னுடைய கருத்துக்குப் பதிலாக “ஜனசக்தி”யின் செய்தியாளர் அவருடைய அந்த நிகழ்ச்சிக்கே வரவில்லை என்றும், வேறு ஏடுகளில் வந்த செய்தியைப் பார்த்து வெளியிடப்பட்டுவிட்ட பேச்சு அது என்றும் மறுப்பு தெரிவித்திருந்தார். அவருடைய பேச்சு அ.தி.மு.க. வின் ஆதரவு வார இதழான “துக்ளக்” கிலும் வெளிவந்து, அதற்கும் தா. பாண்டியன் மறுப்பு வெளியிட்டிருந்தார். ஆனால் தா. பாண்டியன் கலந்துகொண்டு பேசி விட்டுச் சென்ற பிறகு, அதே நிகழ்ச்சியில் பேசிய அ.தி.மு.க. அமைச்சர் ஒருவர் - ஜெயலலிதா
அமைச்சர்களை மாற்றியதில் எந்தக் குற்றமும் இல்லை என்று தா. பாண்டியனுக்கு பதில் கூறியதும் “துக்ளக்” இதழிலே வெளிவந்து, தா. பாண்டியன் பேசியது உண்மையா இல்லையா என்பதை தெள்ளத் தெளிவாக உலகத்திற்குக் காட்டிவிட்டது. ஜெயலலிதா அரசு பொறுப்புக்கு வந்த இரண்டு மாதங்களுக்குள்ளேயே 4200 கோடி ரூபாய் அளவிற்கு வரிகளை விதித்துள்ளது. அதைப்பற்றி அனைத்துக் கட்சியினரும் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் தா. பாண்டியன் அதைப் பற்றி ஒரு பேட்டியில் பதில் கூறியதாக சில ஏடுகள் வெளியிட்டுள்ளன. குறிப்பாக “தினத்தந்தி”யில், “தமிழக அரசுக்கு ரூ. 98 ஆயிரம் கோடி கடன் இருப்பதாக முந்தைய அரசு அறிவித்தது. ஆனால் தமிழக அரசுக்கு ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் கோடி கடன் இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு அசல் மற்றும் வட்டியை அரசு செலுத்த வேண்டியது உள்ளதால் பொருள்களின் மீது வரி விதித்திருப்பது தவிர்க்க முடியாதது” என்று பொதுமக்கள் மீது 4200 கோடி ரூபாய்க்கு வரிகள் விதிக்கப்பட்டதற்கு நியாயம் கற்பித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கூறியிருக்கிறார். நல்லவேளையாக “ஜனசக்தி” இதழில் இந்தப் பேட்டியினை வெளியிடும் போது, இந்த வரிகளில் எவையெவை எந்தெந்த உற்பத்தி தொழில்களைப் பாதிக்கும் என்பவற்றைப் பற்றிய விவரங்களைச் சேகரித்து, அதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் அவை முழுமை அடைந்ததும் அந்தக் கட்சி அறிவிக்கும் என்றும் கூறியதாக விளக்கம் தந்துள்ளது. வார இதழ் ஒன்றுக்கு - ஜெயலலிதா அரசு திடீரென்று விதித்துள்ள வரி விதிப்புகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளனவே என்ற கேள்விக்கு விடையளித்துள்ள தா.பாண்டியன், “முன்னாள் முதல்வர் கருணாநிதி வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதற்காகப் போடப்பட்டுள்ள வரிகள் அவை. கடந்த ஆட்சியில் 1.25 லட்சம் கோடி ரூபாய்க்கு கடன் சுமையை கருணாநிதி ஏற்றி வைத்துள்ளார். அதனைத் தீர்க்க நிலைமையைச் சீராக்க இந்த வரி உயர்வு கூட போதாது. இன்னும் கருணாநிதி மீதும் வரி போட வேண்டும். கடந்த முறை அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோதும் இதே போலத்தான் தமிழகத்தைப் பெரிய கடன்
பள்ளத்தில் தள்ளி இருந்தார் கருணாநிதி. இந்தப் பள்ளத்தை நிரப்பி சீர் செய்யவே, அ.தி.மு.க. அரசுக்கு ஒரு வருடம் பிடிக்கும். அதனால், வரி உயர்வு பற்றிப் பேச கருணாநிதிக்கு யோக்கியதையே கிடையாது” என்று பதில் சொல்லியிருக்கிறார். கேள்வி கேட்டவர், பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளனவே, அதுபற்றி என்ன கூறுகிறீர்கள் என்று வினவினால், தேவையில்லாமல் என் மீது பாய்ந்து பிறாண்டியதோடு, தி.மு. கழக ஆட்சியிலே கூட அல்ல, நானே கடன் சுமையை அ.தி.மு.க. அரசு மீது சுமத்தியிருப்பதாகப் பதில் கூறி, அதற்காக புதிதாக வரி விதித்ததில் தவறில்லை என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் சொல்லியிருக்கிறார். அ.தி.மு.க. அரசு 4200 கோடி ரூபாய்க்கு வரிகளை விதித்திருப்பதில் தவறில்லை என்பது போல தா. பாண்டியன் கூறியது தங்களுக்கும் ஒத்தக்கருத்து தானா என்பதை அந்தக் கட்சியைச் சேர்ந்த தோழர்கள் நல்லகண்ணு, கோபு, சிவபுண்ணியம், சுப்பராயன் போன்றவர்கள் தான் சொல்ல வேண்டும். அது மாத்திரமல்ல; தமிழக அரசின் கடன் விவரங்கள் பற்றி அரசின் சார்பில் பலமுறை விளக்கம் தரப்பட்ட பிறகும், தா. பாண்டியன் நான் ஏதோ 1.25 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையை அரசுக்கு ஏற்றி வைத்து விட்டதாகச் சொல்லுகிறார். இதே குற்றச்சாட்டினை அ.தி.மு.க. வின் முதலமைச்சர் ஜெய லலிதாவும் கூறி நான் அதற்கு 1-7-2011 அன்று விளக்கமாகப் பதில் கூறியிருக்கிறேன். அதற்கு முன்பே தா. பாண்டியன் அவர்களும் இதே குற்றச்சாட்டினைக் கூறி அதற்கும் 13-2-2011 அன்று விளக்கமான பதிலை அளித்திருக்கிறேன். அதையெல்லாம் தா. பாண்டியன் படித்தாரா, படிக்கவில்லையா என்று தெரிய வில்லை. இருந்தாலும் அவர் இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக மீண்டும் ஒரு முறை தெரிவிக்கிறேன். இந்த ஆட்சியினர் மீது 1.25 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையை தி.மு.கழக அரசு ஏற்றி வைத்து விடவில்லை. 31-3-2006 அன்றே, அதாவது தா. பாண்டியனின் அபிமானத்திற்குரிய ஜெயலலிதா ஆட்சி புரிந்த ஐந்தாண்டு காலத்திற்கு பிறகு தமிழக அரசின் மொத்தக் கடன் பொறுப்பு 57 ஆயிரத்து 457 கோடி ரூபாயாகும்.
இது ஜெயலலிதா, தி.மு. கழக அரசின் மீது ஏற்றி வைத்துவிட்டுச் சென்ற கடன் சுமை. அந்தக் கடன் சுமையைக் குறைக்க தி.மு. கழக அரசு எந்த வரியையும் ஜெயலலிதா மீதும் விதிக்கவில்லை, தா. பாண்டியன் மீதும் விதிக்கவில்லை.
மேலும் தா. பாண்டியன் அளித்துள்ள பேட்டியில், தமிழக அரசுக்கு ரூ. 98 ஆயிரம் கோடி கடன் இருப்பதாக முந்தைய அரசின் சார்பில் நிதியமைச்சர் பேராசிரியர் கூறியிருந்தார், ஆனால் தமிழக அரசுக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருப்பது தெரிய வந்துள்ளது என்று தி.மு. கழக ஆட்சியிலே ஏதோ பெரிய பொய் ஒன்றினைக் கூறிவிட்டதைப் போலக் கற்பனை செய்து கொண்டு சொல்லியிருக்கிறார்.
தி.மு. கழக அரசின் சார்பில் 5-2-2011 அன்று பேரவையில் வைக்கப்பட்ட இடைக்கால நிதி நிலை அறிக்கை - பக்கம் 55இல், “சேம நல நிதி முதலிய பொறுப்புகளை உள்ளடக்கிய மாநில அரசின் மொத்தக் கடன் 31-3-2006 அன்று ரூபாய் 57,457 கோடியாக இருந்தது. இது 31-3-2011இல் ரூபாய் 1,01,541 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது” என்று சொல்லப்பட்டிருப்பதை தா.பாண்டியன் இப்போதாவது எழுத்துக் கூட்டியாவது படித்துப் பார்த்து தெளிவு பெறலாம். எனவே 98 ஆயிரம் கோடி கடன் இருப்பதாக தி.மு. கழக அரசில் யாரும் தவறாகக் கூறி விடவில்லை. 10-2-2011 அன்று இடைக்கால நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்திற்குப் பதில் கூறும்போது கூட, அன்றைய நிதியமைச்சர் பேராசிரியர் அவர்கள், அ.தி.மு.க. அரசு வைத்து விட்டுப் போன கடன் 56 ஆயிரம் கோடி ரூபாய். அதுதான் தற்போது ஏறத்தாழ 1 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார். எனவே தவறான புள்ளி விவரம் எதையும் கழக அரசின் சார்பில் யாரும் தந்து விடவில்லை.
இன்னும் கூற வேண்டுமேயானால், 2005-2006ஆம் ஆண்டின் இறுதியில் ஜெயலலிதா ஐந்தாண்டுகள் ஆட்சி செய்த பிறகு மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 22.29 சதவிகிதமாக இருந்த கடன் பொறுப்புகளின் அளவு; 2010-2011 ஆம் ஆண்டில் தி.மு. கழக அரசின் ஐந்தாண்டு காலத்திற்குப் பிறகு 19.58 சதவிகிதமாகக் குறையும் என்று தி.மு.க.வின் இடைக்கால நிதி நிலை அறிக்கையிலேயே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இறுதியாக அந்த வார இதழின் சார்பாக தா. பாண்டியனிடம் “உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்...... சமச்சீர் கல்வி நிலைப்பாட்டில் ஆளும் கட்சியின் அத்தனை நடவடிக்கைகளும் திருப்திகரமாக இருக்கின்றனவா?” என்று கேட்டிருக்கிறார்கள். தி.மு. கழக ஆட்சியில் பல குழுக்களை நியமித்து, பல மாநிலங்களுக்குச் சென்று அங்கெல்லாம் சமச்சீர் கல்வி எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றெல்லாம் ஆய்ந்து; மூன்றாண்டுகள் பல்வேறு கட்டக் கலந்தாலோசனைகள் முடிந்து; அதன் பிறகும் அவசரம் காட்டாமல் படிப்படியாக நடைமுறைப்படுத்தலாம் என்று முதல் ஆண்டில் 2 வகுப்பு களுக்கு மட்டுமே சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. அரசில் முதல் நாள் அறிவித்துவிட்டு, மறுநாள் பேரவையில் திருத்தச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி னார்கள். நீதி மன்றமே ஏன் இந்த அவசரம் என்று கேட்டது. ஆனால் தா. பாண்டியன் அளித்த பதிலில், “தி.மு.க. மாதிரி அவசர கதியில் அரைகுறைச் சமச்சீர் கல்வித் திட்டத்தைக் கொண்டு வர ஜெயலலிதா விரும்பவில்லை. எனவே இந்த விஷயத்தில் அ.தி.மு.க. வின் நிலைப்பாடுதான் சரியானது” என்று கூறியதோடு; 100 கருணாநிதிகள் ஒன்று சேர்ந்தாலும், ஒரு ஜெயலலிதா ஆக முடியாது என்று முடித்திருக்கிறார். உண்மை தான்! இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரையே இந்த அளவிற்கு ஜெயலலிதா பேட்டி கொடுக்க வைத்துள்ளாரே; ஆம், சட்டப் பேரவையில் ஒரு முறை ஜெயலலிதா, இந்த நாட்டில் “தகர டப்பா” கண்டுபிடித்ததே கம்யூனிஸ்ட்கள் உண்டியல் குலுக்குவதற்காகத்தான் என்று பேசினாரே; அப்படிப்பட்ட வசை மாரி பொழியும் ஜெயலலிதாவாக உருவெடுக்க 100 கருணாநிதிகளாலும் முடியாதுதான்!
அன்புள்ள, மு.க. 19-7-2011
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065831_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_45.pdf; PDF பக்கம் 261–265. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.