அடக்கம்

முரசொலி · தொகுதி 45 · கடிதம் 3568

முரசொலி கடிதங்கள் · 3568

வென்றவர் சொல்வதெல்லாம் வேதம் ஆகுமா?

நாள் 15.6.2011சுமார் 6 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3568. வென்றவர் சொல்வதெல்லாம் வேதம் ஆகுமா?

உடன்பிறப்பே,

கச்சத் தீவை திரும்பப் பெற உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கில் தமிழக அரசின் வருவாய்த் துறை இணைந்து கொள்ள வேண்டுமென முடிவு செய்து, அதற்காக சட்டப்பேரவையிலே ஒரு தீர்மானத்தை ஜெயலலிதா கொண்டு வந்து

9-6-2011 அன்று ஒருமனதாக நிறைவேற்றப் பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாய்த் துறை என்பது, தமிழக அரசின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள ஒரு துறைதான். அந்தத் துறையின் சார்பில் ஒரு வழக்கிலே இணைந்து கொள்ள தமிழக அரசே ஒரு தீர்மானத்தைச் சட்டப்பேரவையில் கொண்டு வரவேண்டுமா? அந்தத் தீர்மானம் இல்லாமலே தமிழக நலன் சார்ந்த அந்த வழக்கிலே தமிழக அரசின் வருவாய்த் துறை இணைந்து கொண்டு வாதாட முடியாதா ; சுற்றோட்டத்தில் உத்தரவு பெற்று ஆணை வழங்கினால் போதாதா; என்பது பற்றி யெல்லாம் வழக்கறிஞர்களும், தலைமைச் செயலக நடைமுறைகள் பற்றி அறிந்துள்ள மூத்த அதிகாரிகளும்தான் கூற வேண்டும். எது எப்படியோ? கச்சத் தீவுக்காக பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தது பற்றி நமக்கு மகிழ்ச்சிதான். ஆனால் அந்தத் தீர்மானத்தை முன் மொழிந்த இன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதாவும், அந்தத் தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய எதிர்க்கட்சியினரும் தேவையில்லாமல் “கருணாநிதி ஆட்சியில் இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டது” என்று ஆரம்பித்து, கச்சத் தீவினை நான்தான் மத்திய அரசிடம் கூறி இலங்கைக்கு வழங்கும்படி கூறியதைப் போல எண்ணிக் கொண்டு என்மீது வசைமாரி பொழிந்திருக்கிறார்கள். வேறு சிலர் தமிழகத்தின் அழிவுக்கே நான்தான் காரணம், காவிரிப் பிரச்சினைக்கும் நான்தான் காரணம் என்றெல்லாம் வீராவேசமாக

முழங்கியிருக்கிறார்கள். இதிலிருந்து கச்சத்தீவு தீர்மானம் கொண்டு வரப்பட்டதே; என் மீது விமர்சனக் கணைகள் வீசத்தான் என்பதை

எளிதில் புரிந்துகொள்ளலாம்.

கச்சத் தீவு மத்திய அரசினால் திராவிட முன்னேற்றக் கழக அரசின் எதிர்ப்பையும் மீறி இலங்கைக்கு வழங்கப்பட்டது பற்றியும், அதனை வழங்கும்போது 1974ஆம் ஆண்டு ஒப்பந்த ஷரத்திலே இருந்த உரிமைகள்கூட, 1976ஆம் ஆண்டு தமிழகத்திலே குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்ற போது பறிக்கப்பட்டுவிட்டன என்பது குறித்தும் நான் பல முறை விளக்கமளித்திருக்கிறேன். அந்த 1976ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டு வரையிலான 34 ஆண்டுகளில் சுமார் 22 ஆண்டுகள் அ.தி.மு.க.வும், 12 ஆண்டுகள் தி.மு.க.வும் தமிழகத் திலே ஆளுங்கட்சியாக இருந்திருக்கின்றன. கச்சத்தீவை தி.மு.க. தாரை வார்த்து விட்டது என்று; தகவல்கள் எதையும் ஆரம்பம் முதல் அறிந்து கொள்ளாமல், தொண்டை கிழிய தொடர்ந்து முழங்கிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. தாங்கள் ஆட்சி செய்த 22 ஆண்டுகளில் கச்சத் தீவை ஏன் மீட்கவில்லை?

1991ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தனது சுதந்திர தின விழா உரையில் “நம் தாயகத்துக்குச் சொந்தமான கச்சத் தீவை இலங்கை அரசுக்குத் தாரைவார்த்த காரணத்தால் நம் மீனவர்கள் தங்கள் வலைகளைக்கூட உலர்த்திக்கொள்ள அந்தத் தீவின் அருகில் நெருங்க முடியாத நிலை உள்ளது. எனவே, கச்சத்தீவைத் திரும்பப் பெற மத்திய அரசுடன் வாதாடவும், தேவை ஏற்பட்டால் போராடவும் இந்த அரசு தயாராக உள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். இது எங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த ஒரு வாக்குறுதியாகும்” என்று கூறியதோடு 3-10-1991 அன்று - அதற்கான தீர்மானத்தையும் பேரவையிலே முன்மொழிந்து ஒருமனதாக நிறைவேற்றினார்கள்.

20-4-1992 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் அம்மையார் ஜெயலலிதா பேசும்போது, “கச்சத் தீவை மீட்க வேண்டுமென்ற ஒரு தீர்மானத்தை இங்கே நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினோம். ஆனால், கச்சத் தீவை மீட்பது என்பது விரைவில் நடக்கக்கூடிய, நடைபெறக்கூடிய ஒன்றாகத் தெரியவில்லை” என்று கூறியிருக்கிறார்.

9-6-2011 அன்று பேரவையில் பேசிய ஜெயலலிதா; தான் முதல் அமைச்சராக இருந்தபோது கச்சத் தீவை திரும்பப் பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகவும், ஆனால் தி.மு.க. ஆட்சியிலே இருந்தபோது, குறிப்பாக நான் முதலமைச்சராக இருந்தபோது கச்சத் தீவை மீட்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் பேசி யிருக்கிறார்.

அவர் என்ன முயற்சி மேற்கொண்டார் என்று அவரே சொல்லியிருக்கிறார். அதாவது மத்திய அரசையும், பாரதப் பிரதமரையும் நேரிலும், கடிதம் மூலமாகவும் வற்புறுத்தியதாகவும்; ஆனால் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும் கூறுகிறார். நான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பேசியிருக்கிறாரே, அது உண்மையா?

தி.மு. கழகத்தைப் பொறுத்து மாத்திரமல்ல, தி.மு.கழக ஆட்சியைப் பொறுத்தும் மத்திய அரசிடம் பல நேரங்களில் கச்சத் தீவு பிரச்சினையை எழுப்பி கச்சத் தீவை மீட்டுக் கொடுங்கள் என்று கேட்கத் தவறியதும் இல்லை. கச்சத்தீவிலே மீனவர்களுக்கு உள்ள உரிமை பாதிக்கப்படுவதை எடுத்துக் காட்டி அந்தப் பாதிப்பை நிவர்த்திக்க வேண்டுமென்று கேட்கவும் கழக அரசு தவறியது இல்லை.

2009ஆம் ஆண்டு தி.மு.கழகம் ஆளுங்கட்சியாக இருந்தபோது ஜூன் திங்கள் 18ஆம் தேதியன்று கச்சத் தீவு தொடர்பாக அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., மார்க்சிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் சார்பில் கச்சத்தீவு பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டு மென்று ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்தபோது, பேரவைத் தலைவரால் அனுமதிக்கப்பட்டு - மாண்புமிகு உறுப்பினர்கள் ஜெயக்குமார் அவர்களும், ஞானசேகரன் அவர்களும், கோ.க.மணி அவர்களும், மகேந்திரன் அவர்களும், சிவபுண்ணியம் அவர்களும், ரவிக்குமார் அவர்களும் பல்வேறு கருத்துக்களை அவையில் எடுத்துச் சொன்னார்கள். அத்தகைய கருத்துக்களின் மொத்தத் தொகுப்பு என்ன வென்றால் கச்சத்தீவு மீண்டும் இந்தியாவிற்குத் தரப்பட வேண்டும் என்பதாகும். அதனையொட்டி தமிழகச் சட்டப் பேரவையில் நான் உரையாற்றியபோது, கச்சத் தீவினை தாரைவார்க்க தி.மு.க. ஒப்புக் கொள்ளவும் இல்லை; ஒருபோதும்

உடன்படவும் இல்லை; அனைத்துக்கட்சியினரும் ஆதரிக்கத் தயாரென உறுதியளித்தால் கச்சத் தீவை திரும்பப் பெற அவையிலேயே தீர்மானம் கொண்டுவரத் தயாராக இருக்கிறேன் என்று கூறினேன்.

பேரவையில் 9-6-2011 அன்று பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டதின் காரணமாக இதுவரை நூற்றுக்கணக்கான மீனவர்கள் பலியாகியிருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அவரே முன்பொரு முறை இதைப்பற்றிக் கூறும் போது “மீனவர்கள் இண்டர்நேஷனல் பவுண்டரி லைனைக் கடந்து சென்று கச்சத் தீவு அருகில் உள்ள கடல் பகுதியில் மீன் பிடித்தால்தான் அவர் களுக்குப் போதிய அளவு நல்ல வகை மீன்கள் கிடைக்கின்றன. நம்முடைய இந்தியக் கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கச் சென்றால், அவர்களுக்குத் தேவையான அளவு நல்ல ரக மீன்கள் கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ பல முறை இண்டர்நேஷனல் பவுண்டரிலைனைக் கடந்து செல்லும்போது இலங்கை கடற்படையினர் அவர்களுடைய படகுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, அவர்கள் பிடித்து வைத்திருக்கின்ற மீன்களை எல்லாம் கைப்பற்றிக் கொண்டு, அவர்களுடைய படகுகளை எரித்து, இப்படிப்பட்ட சம்பவங்கள் எத்தனையோ நடந்திருக்கின்றன” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலேதான் மீனவர்கள் காணாமல் போகும் நிலைமை ஏற்பட்டது என்று கூடச் சிலர், எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருப்பதைப் போலப் பேசியிருக்கிறார்கள். ஒரு கணக்கெடுத்துப் பார்த்தால் 1986இல் மீனவர்கள் நான்கு பேர் மீன் பிடிக்கச் சென்றவர்கள் காணாமல் போனார்கள். 1987இல் நான்கு பேர் காணாமல் போனார்கள். 1988இல் எட்டு பேர் காணாமல் போய் இருக்கிறார்கள். 1993இல் ஐந்து பேர் காணாமல் போய் இருக்கிறார்கள். 1995இல் இரண்டு பேர் காணாமல் போய் இருக்கிறார்கள். 2002இல் 22 பேர் காணாமல் போய் இருக்கிறார்கள். 2003இல் ஆறு பேர் காணாமல் போய் இருக்கிறார்கள். 2004இல் நான்கு பேர் காணாமல் போய் இருக்கிறார்கள். 2007இல் 12 பேர் காணாமல் போய் இருக்கிறார்கள். இந்தக் கணக்கு விவரம், ஒப்பீடு - இது எப்போதும் நடைபெறுகின்ற ஒன்று தான் - குறிப்பிட்ட

அந்த ஆட்சியிலேதான் நடைபெற்றது; இந்த ஆட்சியிலே நடைபெறவில்லை என்பதற்காகச் சொல்லவில்லை, பொதுவாக ஜெயலலிதா அம்மையார் குறிப்பிட்டதைப் போல - அந்த பவுண்டரி லைனைத் தாண்டிச் சென்றால், நல்ல வகை மீன் கிடைக்கும் என்று வரம்புமீறி எண்ணுகின்ற சில மீனவ மக்களால், அவர்கள் தங்களுடைய உயிரை இழக்க நேரிடுகிறது என்ற விபரீதமான உண்மை வெளிப்படுவதை நாம் மறந்துவிடக் கூடாது.

இதைப்பற்றிப் பேசிய சிலர் கச்சத் தீவை தி.மு.க. ஆட்சி தாரை வார்த்து விட்டது என்று திரும்பத் திரும்ப சொல்லியிருக்கிறார்கள். அப்படி தாரை வார்த்த எந்தச் சம்பவமும் 1974ஆம் ஆண்டில் நடைபெறவில்லை. அந்த ஆண்டில் கச்சத் தீவை இலங்கைக்குத் தருவதென்ற முடிவை மத்திய அரசு எடுத்தபோது, அன்றைய தமிழகத்திலே இருந்த மாநில அரசான திராவிட முன்னேற்றக் கழக அரசு, அதற்கு பெரும் எதிர்ப்பைத் தெரிவித்தது. இருந்த போதிலும், மத்திய அரசால் கச்சத் தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டு விட்டது. அப்படி வழங்கப்பட்ட நேரத்திலே கூட, கச்சத் தீவிலே மீன் பிடிக்கும் உரிமை, யாத்திரை செல்கின்ற உரிமை, மீன் வலைகளை காய வைப்பதற்கான உரிமை இவைகள் எல்லாம் மீனவ மக்களுக்கு உண்டு என்கிற ஷரத்து ஒப்பந்தத்திலே சேர்க்கப்பட வேண்டுமென்று அன்றைய தமிழக தி.மு.க. அரசு வலியுறுத்தியதின் பேரில், அந்த ஷரத்து அதிலே சேர்க்கப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு வந்த நெருக்கடி நிலை காலத்தில், இங்கே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி இல்லாத சூழ்நிலையில் தமிழகத்திலே கவர்னர் ஆட்சி நடைபெற்ற நேரத்தில், அந்த ஷரத்துக்கள் எப்படி அந்த ஒப்பந்தத்திலிருந்து விலக்கப்பட்டன என்றே தெரியாத அளவிற்கு, அந்த ஷரத்துக்கள் பறிபோய் விட்டன. அதற்குப் பிறகு அந்த ஷரத்துக்களையாவது சேர்க்க வேண்டுமென்று நாம் மத்திய அரசோடு தொடர்ந்து வாதிட்டுக் கொண்டிருக்கிறோம்.

கச்சத் தீவை தாரை வார்க்க தி.மு.க. ஒப்புக் கொள்ளவும் இல்லை, தாரை வார்க்க உடன்படவும் இல்லை. பாராளு மன்றத்திலேயே இந்தத் தீர்மானம் வந்தபோது, வெளிநடப்பு செய்திருக்கிறது தி.மு.க. என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஒன்றைச் சொல்ல வேண்டுமேயானால் - 30-9-1994இல் தமிழக முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா, அப்போது பிரதமராக இருந்த திரு. நரசிம்மராவ் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் “The ceding of this tiny island to the Island Nation had been done by the Government of India in the interest of better bilateral relations” அதாவது, “தீவு நாடான இலங்கைக்கு, இந்தச் சின்னஞ்சிறிய தீவினை (கச்சத் தீவை) இந்திய அரசு பிரித்துக் கொடுத்தது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலே நல்லுறவு நிலவிட வேண்டும் என்பதற்காகத்தான்” - என்று அன்றைய முதலமைச்சர், அம்மையார் குறிப்பிட்டிருக்கிறார். அதே பாடத்தைத்தான் இன்னமும் மத்தியிலே உள்ள அமைச்சர்கள் கூறி வருகிறார்கள். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பல பிரச்சினைகள் இருந்தாலும் இரு நாடுகளுக்கிடையே நல்லுறவு வேண்டும் என்பதற்காகத்தான் கச்சத் தீவு அளிக்கப்பட்டது என்று ஜெயலலிதா அம்மையார் சொன்னதைப் போலவே, சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதாவும் அன்று தந்த விளக்கத்தை மறந்து, இன்று வீராவேசமாகப் பேசுகிறார்!

ஜெயலலிதா 9ஆம் தேதியன்று பேரவையில் பேசியபோதுகூட, தனது உரையில் கச்சத் தீவு பற்றியோ, அதைப் பெறுவதற்கான வழிமுறைகளைப் பற்றியோ பேசாமல் நீண்ட நேரம் என்னைப் பற்றியும், என்மீது பழி போடுவதைப் பற்றியும் உரையாற்றியதில் இருந்தே விஷயம் புரிந்தவர்கள் எந்தெந்த விபரங்களையெல்லாம் மறைத்திட முயற்சிக்கிறார்கள் என்ற உண்மையைப் புரிந்து கொண்டிருப்பார்கள். கச்சத்தீவை காவு கொடுப்பதற்கு ஒப்புதல் அளித்துவிட்டு, கண்துடைப்பு நாடகமாக அவையிலே தீர்மானத்தை முன் மொழிந்தவன் நான் என்று ஜெயலலிதா பேரவையிலே சொல்லியிருக்கிறார். தி.மு. கழகம் தேர்தலிலே தோற்றிருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் தி.மு. கழகத்தின் தாயகப்பற்றையும் என்னுடைய தமிழ்ப் பற்றையும் நன்கறிவார்கள். வெற்றி பெற்றவர்கள் எல்லாம் தமிழ்நாட்டின் மீது பற்றுக் கொண்டவர்களுமல்ல - தோல்வி அடைந்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டுப் பற்றற்றவர்களும் அல்ல. வென்றவர்கள் சொல்வதெல்லாம் “வேதமும்” அல்ல!

அன்புள்ள, மு.க. 15-6-2011

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065831_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_45.pdf; PDF பக்கம் 236–241. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 45-இல் மேலும் கடிதங்கள்