அடக்கம்

முரசொலி · தொகுதி 45 · கடிதம் 3566

முரசொலி கடிதங்கள் · 3566

அதுவே ஓர் ஆறுதல்தான்!

நாள் 13.6.2011சுமார் 7 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3566. அதுவே ஓர் ஆறுதல்தான்!

உடன்பிறப்பே,

இலங்கை மீது பொருளாதார தடை கோரி தமிழகச் சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தி.மு. கழகத்தின் சார்பில் அந்தத் தீர்மானத்தை வரவேற்றும், சட்டப்பேரவையிலே உள்ள எல்லா கட்சிகளும் ஒன்றுபட்டு தீர்மானத்தை ஆதரித்திட வேண்டுமென்றும் தி.மு. கழக சட்டமன்றக் கட்சியின் துணைத் தலைவர் தம்பி துரைமுருகன் அவையில் பேசியிருக்கிறார். ஆனால் அந்தத் தீர்மானத்தின் மீது அவையிலே பேசிய சிலர் தி.மு. கழகத்தையும், என்னையும் வாய்க்கு வந்தபடி தரக்குறைவாக விமர்சித்து, அதற்குப் பதில் கூற சட்டப் பேரவை மரபுகளின்படி தி.மு. கழகத்திற்கு வாய்ப்பு அளிக்காத காரணத்தால் வெளி நடப்பு செய்திருக்கிறார்கள். தீர்மானத்தைக் கொண்டு வந்தவர்கள், அதற்குக் காரணமான இலங்கை அரசு பற்றியும் அதிபர் ராஜபக்சேவின் போர் வெறி பற்றியும் விமர்சிக்காமல், தேவையில்லாமல் எதற்காக தி.மு. கழகத்தைப் பற்றியும், என்னைப் பற்றியும் தாக்கிப் பேசி, பேரவையின் நேரத்தை வீணாக்கி நாட்டு மக்களைத் திசை திருப்பிட வேண்டும் என்று தமிழகத்திலே உள்ள நடுநிலை நாளேடுகள் என்று சொல்லிக் கொள்பவைகூட எழுத வில்லை.

இலங்கைத் தமிழர் பற்றிய தீர்மானத்தில் பேசிய தே.மு.தி.க. தலைவர் காவிரிப் பிரச்சினையிலே தி.மு.க. வஞ்சித்து விட்டது என்று வேண்டுமென்றே பேசி விஷத்தைக் கக்க வேண்டிய அவசியம் என்ன?

தி.மு. கழகம் பொறுப்பிலே இருந்தபோது இலங்கைத் தமிழர்களுக்காக அனைத்துக் கட்சிக் கூட்டம், சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்கள் கூட்டம், தமிழ்நாடு சட்டப் பேரவையில்

தீர்மானம், மனிதச் சங்கிலி போராட்டம், பிரதமருக்கு தந்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா என்ற அறிவிப்பு, ராஜினாமா கடிதங்களைத்தானே பெற்றுக் கொண்டது, இறுதி எச்சரிக்கை என்ற அறிவிப்பு என்றெல்லாம் நடத்தியதாகவும், ஆனால் அவைகள் எல்லாம் என்னால் நடத்தப்பட்ட நாடகங்கள் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையிலே முழங்கியிருக்கிறார். நாம் எதைச் செய்தாலும் அதை உடனடியாக “கபட நாடகம்” என்று கற்பித்து அறிக்கை விடுவது என்பது ஜெயலலிதாவின் வாடிக்கை.

இலங்கைத் தமிழர்களுக்காக நான் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து தன்னந் தனியனாக அண்ணா நினைவிடத்திற்கு காலை 6 மணிக்கெல்லாம் என் வீட்டாரிடம் கூடச் சொல்லாமல் அங்கே சென்று உண்ணா விரதத்தைத் தொடங்கினேன். ஆனால் காலைச் சிற்றுண்டியை வீட்டில் முடித்து விட்டு தலைமைச் செயலகம் செல்லும் வழியில் உண்ணாவிரதம் இருக்கச் சென்றேன் என்று முதலமைச்சராக இருப்பவர் புளுகுகிறார் என்றால், முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்த பிறகும் அந்த இருக்கைக்கு உகந்த வகையில் அவர் தன்னைத் திருத்திக் கொள்ளவில்லையே என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. நான் உண்ணாவிரதம் இருந்தால் அது “கேலிக் கூத்து” - அவர் உண்ணாவிரதம் இருந்தால் அது “அன்னா ஹஸாரே” நடத்துகின்ற உண்ணா விரதம் போன்றதா?

யார், எதைப் பற்றி பேசுவது என்றே இல்லாமல் எல்லாம் நிலை குலைந்து போய்விட்டது! 1956ஆம் ஆண்டிலேயே சிதம்பரம் தி.மு. கழகப் பொதுக்குழுவிலே பேரறிஞர் அண்ணா அவர்களின் முன்னிலையில் இலங்கைத் தமிழர்களுக்கான தீர்மானத்தை முன்மொழிந்தவனே நான்தான்! அந்த ஆண்டிலே பிறந்தார்களோ, பிறக்க வில்லையோ அவர்கள் எல்லாம் இன்று கைகோத்துக் கொண்டு, நான் இலங்கைத் தமிழர் பிரச்சினையிலே “கேலிக் கூத்து”, “கபட நாடகம்” நடத்துவதாக கீழ்த்தர விமர்சனம் செய் கிறார்கள்!

24-8-1977 அன்று சென்னை மாநகரிலே ஒரேநாள் அறிவிப்பில் ஐந்து இலட்சம் பேரைத் திரட்டி இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக பிரம்மாண்டப் பேரணி நடத்தியது தி.மு.க.! 1981ஆம் ஆண்டு இலங்கையிலே தமிழர்கள்

பாதிக்கப்படுகிறார்கள் என்ற செய்தி ஏடுகளில் வந்ததும், 13- 8-1981 அன்று இந்தியப் பிரதமருக்கு “கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் இலங்கையின் கிழக்கிலும் தெற்கிலும் கலவரங்கள் பரவி வருகின்றன என்று தெரிவிக்கின்றன. அங்குள்ள அரசே கலவரத்தை ஊக்குவிப்பதாகத் தோன்றுகிறது. தமிழர்களின் இல்லங்கள் தாக்கப்படுகின்றன. தமிழ்ப் பயணிகள் கொள்ளை அடிக்கப்பட்டு ரயிலை விட்டு தூக்கி எறியப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையை தீர்க்க மனிதாபிமான அடிப்படையில் உதவிட வேண்டும்” என்று கேட்டு தந்தி அனுப்பிய நான் தற்போது “நாடகம்” நடத்துகிறேனாம்! சொல்வது யார் தெரியுமா? தமிழக முதல் அமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும்தான்! இதே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக 81ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் அன்று தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த அ.தி.மு.க. அரசினால் கைது செய்யப்பட்ட நான் இப்போது நாடகம் நடத்துகிறேனாம். அன்று என்னைக் கைது செய்த அ.தி.மு.க. வின் இன்றைய தலைவி பேரவையில் முழங்குகிறார்!

25-7-1983 அன்று வெலிக்கடை சிறைச் சாலைக்குள் நுழைந்து தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் போன்ற 35 தமிழர்களை படுகொலை செய்தபோது சென்னை மாநகரில் 7 மணி நேர அவகாசத்தில் 8 இலட்சம் பேரைக் கூட்டி மாபெரும் பேரணி நடத்தியது; நாம். மத்திய மாநில அரசுகள் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அக்கறை காட்டிட வேண்டுமென்பதற்காக 10-8- 1983 அன்று நானும், பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களும் எங்களுடைய சட்டப் பேரவை உறுப்பினர் பதவிகளையே ராஜினாமா செய்தோம். 16-5-1985 அன்று காஞ்சிபுரத்தில் இலங்கைத் தமிழர்களுக்காக நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டேன். அதே ஆண்டு ஆகஸ்ட் 23ந்தேதியன்று சந்திரஹாசன், பாலசிங்கம், சத்தியேந்திரா ஆகியோரை நாடு கடத்த உத்தரவிட்டதை அடுத்து சென்னையில் ஊர்வலம் நடத்தி, அந்த உத்தரவு ரத்து செய்யப்படாவிட்டால் போராட்டம் தொடருமென்று அறிவித்து, அதன் தொடர்ச்சியாக நாடு கடத்தும் உத்தரவைத் திரும்பப் பெறச் செய்தவர்களும் நாமேதான்!

இலங்கைத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டி 1986ஆம் ஆண்டு மே திங்களில் மதுரையில் “டெசோ” அமைப்பின்

சார்பில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டினை நடத்தியது யார்? நான் தான். இப்படி தொடர்ந்து சொல்லிக் கொண்டே போகலாம்; அயர்ந்து விடாமல் அடுக்கடுக்கான நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொண்டவர்கள் நாம்!

1989ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் இலங்கைப் பிரச்சினைக்கு எப்படியாவது ஒரு தீர்வு காண வேண்டுமென்று விரும்பி, அன்றைய பிரதமர் திரு. வி.பி. சிங் அவர்களிடம் கலந்து கொண்டு அவர் தெரிவித்த யோசனையின் பேரில், பல்வேறு போராளிக் குழுவினரையும் தனித்தனியாகச் சந்தித்து உரையாடிவிட்டு, 19-12-1989 அன்று டெல்லியில் பிரதமரைச் சந்தித்து விவரங்களைக் கூறினேன்.

1990ஆம் ஆண்டு ஜூன் திங்களில் நான் டெல்லியில் முகாமிட்டு, பிரதமரிடம் வலியுறுத்தியதன் தொடர்பாக, 19ஆம் தேதி மாலையில் பிரதமர் வி.பி. சிங் தனது இல்லத்தில் ஓர் அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார். அந்தக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வராக இருந்த ஜோதிபாசு, கேரள மாநில முதல்வராக இருந்த நாயனார், ஒரிசா முதல்வராக இருந்த பிஜு பட்நாயக், அஸ்ஸாம் மாநில முதல்வராக இருந்த மகந்தா, இமாசலப் பிரதேச முதல்வராக இருந்த சாந்தகுமார், சிக்கிம் மாநில முதல்வராக இருந்த பண்டாரி, புதுவை முதல்வராக இருந்த

டி. ராமச்சந்திரன், மத்திய அமைச்சர்கள் அருண் நேரு, முப்தி முகமது சயீத், தம்பி முரசொலி மாறன், குருபாதசாமி, தினேஷ் கோசுவாமி, உபேந்திரா, உன்னிகிருஷ்ணன், மற்றும் இந்தியத் தலைவர்களான அத்வானி, ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத், வாஜ்பாய், சிட்டபாசு எம்.பி., சாமர் முகர்ஜி எம்.பி., இந்திரஜித் குப்தா, பரூக்கி ஆகியோர் வந்திருந்தனர். இலங்கைப் பிரச்சினை குறித்து அனைத்து விவரங்களையும் அவர்களிடம் நீண்ட நேரம் விளக்கிவிட்டு, தமிழ்நாடு இல்லத்திற்கு திரும்பியபோது தான் சென்னையிலிருந்து தொலைபேசியில் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தைச் சேர்ந்த பத்மநாபாவும் மற்றும் பத்து பேரும் சுடப்பட்டு கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற செய்தி வந்தது.

இலங்கைத் தமிழர்களுக்காக தற்போது சட்டமன்றத்தில் தீர்மானத்தை முன்மொழிந்த இதே ஜெயலலிதா; 1997ஆம் ஆண்டு தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்தபோது, “சட்டம்

ஒழுங்கைச் சீர்குலைக்க கருணாநிதி முயலுகிறார், விடுதலைப் புலிகள் தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கி விட்டார்கள்” என்று கண்டன அறிக்கை விடுத்ததை மறந்துவிட முடியுமா?

இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்தபோது மத்திய அரசை வலியுறுத்தி எதுவுமே செய்யவில்லையாம்!

23-4-2008 அன்று தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்த போதுதான் - தமிழகச் சட்டப் பேரவையில் - “இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக, அங்கே மோதலில் ஈடுபட்டு வரும் இரு பிரிவுகளுக்கிடையே பேச்சு வார்த்தைகளுக்கு இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்; இலங்கையில் அமைதியை ஏற்படுத்த முறையானதொரு அரசியல் தீர்வு எட்டப்படுவதற்காக பயனுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு முன் வரவேண்டுமென்று இப்பேரவை வலியுறுத்துகிறது” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அவையின் நடவடிக்கை குறிப்பினை எடுத்துப் பார்த்தாலே நன்கு தெரிந்து கொள்ளலாம். —

தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியதோடு நின்று விடவில்லை. 6-10-2008 அன்று இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை தொலைபேசியிலே தொடர்பு கொண்டு - புது டெல்லியிலே உள்ள இலங்கைத் தூதரை மத்திய அரசு உடனடியாக நேரில் அழைத்து, நிராயுதபாணியாக உள்ள இலங்கைத் தமிழர்களைக் கொல்வது குறித்து, இந்தியாவின் மன உளைச்சலை தெரிவிக்க வேண்டுமென்றும், இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கையும், இனப் படுகொலையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டதை ஜெயலலிதா வசதியாக மறந்துவிட்டு அல்லது வேண்டுமென்றே மறைத்துவிட்டு தற்போது குற்றஞ்சாட்டுவது சரிதானா என்பதை தமிழ் நாட்டு மக்கள்தான் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்!

இலங்கையிலே ராஜபக்ஷேயின் சிங்களப் படையினர் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்தபோது, அதனைக் கண்டித்து தமிழகத்தில் கண்டன ஊர்வலங்களும், பொதுக் கூட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்த போது, “இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை

ராணுவம் எண்ண வில்லை; போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான்” என்று கொஞ்சமும் இரக்கமின்றி அறிக்கை விட்ட ஜெயலலிதா; தற்போது ஈழத் தமிழர்களின் மீது மிகுந்த அக்கறை கொண்டவரைப் போல தீர்மானத்தை முன்மொழிந்து விட்டால், இங்கேயுள்ள ஒருசிலர் “ஆகா”வென அதனைப் பாராட்ட முன்வரலாம்; ஆனால் உண்மையான தமிழ் நெஞ்சத்திற்குரியவர்களுக்கு நாடகம் நடத்துவது யார் என்பது புரியாமலா போய் விடும்?

இலங்கையில் தமிழ் இனப் படுகொலையைக் கண்டித்து, போர் நிறுத்தம் உடனே அறிவிக்கப்பட வேண்டுமென்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியபோது, ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், “விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது, இலங்கையில் தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை” என்று தெரிவித்து மத்திய அரசுக்கு வக்காலத்து வாங்கியவர், தற்போது நடத்துவதுதான் கேலிக் கூத்தே தவிர நான் எந்தக் காலத்திலும் கேலிக் கூத்தாடியவன் இல்லை. இதை இலங்கைத் தமிழர்களும் நன்கறிவார்கள், உலகம் முழுவதும் இருக்கின்ற தமிழர்களும் நன்குணர்வார்கள். அன்றைக்கு இலங்கையிலே நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்று நம்மைப் பார்த்துச் சொன்னவர்; தற்போது அதே இந்திய அரசுக்குப் பரிந்துரை செய்து பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்திருப்பதைப் பார்க்கும்போதாவது எது போலி, எது உண்மை என்பதை தமிழகம் உணராதா என்ன?

2006ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மாத்திரம் 7-12-2006 அன்றும், 23-4-2008 அன்றும், 12-11-2008 அன்றும், 23-1-2009 அன்றும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோம். குறிப்பாக 23-4-2008 அன்று பேரவையில் இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு. கழகம் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து திரு. எம்.கே. நாராயணன் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்திய அரசு இலங்கை தூதுவர்களை அழைத்து அன்று பிற்பகலிலேயே பேசி விட்டதாகவும், பிரதமர்

அவர்கள் இந்தத் தகவலை எனக்குத் தெரிவிக்கும்படி கூறினார் என்றும் சொன்னார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக இருந்த தமிழ்ச் செல்வன் மறைந்த போது 4-11-2007 தேதிய முரசொலியில் நான் ஒரு இரங்கல் கவிதை எழுதினேன். அது,

எப்போதும் சிரித்திடும் முகம்

எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்!

இளமை, இளமை, இதயமோ;

இமயத்தின் வலிமை, வலிமை!

கிழச் சிங்கம் பால சிங்கம் வழியில்

பழமாய்ப் பக்குவம் பெற்ற படைத் தளபதி!

உரமாய்த் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய

உத்தம வாலிபன் - உயிரனையான் -

உடன்பிறப்பனையான்;

தமிழர் வாழும் நிலமெலாம் அவர்தம் உளமெலாம்

தன்புகழ் செதுக்கிய செல்வா; எங்கு சென்றாய்?

இவ்வாறு இறந்த ஒருவருக்கு இரங்கல் தெரிவித்ததைக் கூட, ஜெயலலிதாவினால் பொறுத்துக்கொள்ள முடியாமல், அவர் வெளியிட்ட அறிக்கையில், புலிகளுடன் கருணாநிதிக்கு ரகசியத் தொடர்பு இருக்கின்றது என்பதற்கு இதுவே சான்று, அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தவர்தான் ஜெயலலிதா.

14.10.2008 அன்று இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டினேன். 15.10.2008 அன்று பிரதமருக்கு இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து கடிதம் எழுதினேன். 13.11.2008 அன்று உணவுப் பொருட்கள், துணிவகைகள் மற்றும் மருந்து பொருட்களை இலங்கைத் தமிழர்களுக்காக கப்பல் மூலம் அனுப்பி வைத்தோம்.

2009ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்காக சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது - இலங்கையிலே தமிழ் ஈழம் மலரும் என்றால், அதற்காக ஆட்சியை இழக்கக் கூட நாங்கள் தயார் என்று அறிவித்தவன்

நான் என்பதை உண்மையிலேயே இலங்கைத் தமிழர்களுக்காகப் பாடுபடுபவர்கள் நிச்சயம் உணருவார்கள். அதனால் தான் ஈழத் தந்தை செல்வா அவர்களின் அன்பு மகன் சந்திர ஹாசன் அவர்கள் அப்போது எனக்கெழுதிய கடிதத்தில், “ஈழத் தமிழர் இன்னல், அதையொட்டித் தமிழ்நாட்டில் கொந்தளிப்பு இவையெல்லாம் தங்களைப் பாதிக்கும் என்பதை அறிவோம். ஆயினும் தாங்கள் ஆட்சியில் இருப்பதால்தான் இலங்கையில் சிங்களப் பேரினவாதம் ஓரளவுக்கேனும் அடக்கி வாசிக்கிறது. உலகத் தமிழர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளியிட முடிகின்றது” என்று எழுதினார் என்றால், எந்த அளவுக்கு எனது உள்ளத்தின் அடியாழ உணர்வுகளை அவர் புரிந்து கொண்டிருந்தார் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்! ஆனால் ஜெயலலிதா தற்போது ஆட்சியிலே அமர்ந்ததும் இலங்கைத் தமிழர்களுக்கு தீர்மானம் நிறைவேற்றியதும், அதற்கு லாலி பாடி, அதனை வரவேற்று, பாராட்டி பலரும் பேசுவதிலும், அறிக்கை விடுவதிலும் நமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் அவர்கள் அப்படி ஜெயலலிதாவைப் பாராட்டுகின்ற நேரத்தில், தேவையில்லாமல் நம்மீது விழுந்து பிறாண்டி திருப்தி அடைய நினைக்கிறார்களே, அது சரி தானா? உண்மையில் நடந்தது என்ன என்பதை உலகத்திற்கு நினைவுப் படுத்தத்தான் இந்த விவரங்களையெல்லாம் இங்கே தொகுத்துக் கூறியிருக் கிறேன். மனசாட்சி உள்ள ஒரு சிலராவது இந்த உண்மைகளைப் புரிந்து கொள்வார்களானால்; அதுவே எனக்கு ஓர் ஆறுதல்தான்! அன்புள்ள, மு.க. 13-6-2011

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065831_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_45.pdf; PDF பக்கம் 223–230. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 45-இல் மேலும் கடிதங்கள்