அடக்கம்

முரசொலி · தொகுதி 45 · கடிதம் 3565

முரசொலி கடிதங்கள் · 3565

இன்று நடப்பது; அன்றே நடந்ததுதான்!

நாள் 11.6.2011சுமார் 4 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3565. இன்று நடப்பது; அன்றே நடந்ததுதான்!

உடன்பிறப்பே,

10.6.2011 அன்று மாலையில் அண்ணா அறிவாலயம், முரசொலிமாறன் வளாகத்தில் கழக உயர் நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பத்து தீர்மானங்களின் நகல்கள் எடுக்கப்பட்டு, கழக அமைப்புச் செயலாளர் மூலமாக செய்தியாளர்களுக்கு உடனடியாக வழங்கப்பட்டுவிட்டன. கூட்டம் முடிந்து புறப்படுகின்ற நேரத்தில் செய்தியாளர்கள் காத்திருக்கிறார்கள். பார்க்கிறீர்களா என்று கேட்டபோது, தீர்மானங்களைக் கொடுத்து விட்டீர்கள் அல்லவா, பிறகு எதற்காக என்று நான் திரும்பக் கேட்டேன். பத்திரிகையாளர்கள் உங்களிடம் சில கேள்வி களைக் கேட்பதற்காக காத்திருக்கிறார்கள் என்று சொன்னவுடன், நான் அதற்குச் செவிசாய்த்து செய்தியாளர்கள் அறைக்குச் சென்றேன். எப்போதும் கலந்து கொள்கின்ற செய்தியாளர்களைப்போல இரண்டு மடங்கு கூட்டம் அங்கே! அந்தச் செய்தியாளர்கள் கூட்டத்தில் எப்போதும் வராத ஒருசில செய்தியாளர்களும் வந்திருப்பதைப் பார்த்ததும், எதற்கோ அவர்கள் வந்திருக்கிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன்.

“நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகல் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட்டுள்ளன. அதில் ஏதாவது, அந்தத் தீர்மானங்களைப் பற்றியோ அல்லது அவற்றின் தொடர்பாகவோ ஏதாவது கேட்கவேண்டுமென்றால் கேளுங்கள், பதில் கூறுகிறேன்” என்று சொன்னேன்.

அதைத் தொடர்ந்து அந்தச் செய்தியாளர்கள் கூட்டத்தில் 31 கேள்விகள் கேட்கப்பட்டு, ஒவ்வொன்றிற்கும் நான் அளித்த பதில் ஏடுகளில் வந்துள்ளது. அந்த 31 கேள்விகளில் ஒருசிலவற்றை மட்டும் நான் இங்கே ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

1. மத்திய அரசு, சி.பி.ஐ. நிறுவனத்தை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

2. திருவாரூரில் நீங்கள் பேசும்போது கனிமொழி மீது போடப்பட்டுள்ள வழக்கு மத்திய அரசால் போடப்பட்ட வழக்கு என்று சொன்னீர்களே, அதைப்பற்றி உங்கள் தீர்மானத்தில் ஏன் சொல்லவில்லை?

3. “கூடா நட்பு” என்று சொன்னீர்களே, அதை யாரைப் பற்றி?

4. உங்கள் கட்சியிலே உள்ள பெரும்பான்மையான தொண்டர்கள் காங்கிரஸ் கட்சியுடன் உறவைத் தொடரக் கூடாது என்று விரும்புகிறார்களே?

5. உங்கள் பொதுக்குழுவில் காங்கிரஸ் கட்சியோடு தி.மு.க. கொண்டுள்ள உறவு தொடருமா, தொடராதா என்ற முடிவினை எடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கலாமா?

6. காங்கிரஸ் கட்சியுடன் உறவு தொடர வேண்டுமா என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் இருக்கிறதே, அதற்கு என்ன பதில்?

7. காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வமான பத்திரிகை ஒன்றில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தான் தேர்தல் தோல்விக்குக் காரணம் என்று எழுதியிருக்கிறார்களே?

8. ஸ்பெக்ட்ரம் பிரச்சினை இந்தத் தோல்விக்குக் காரணமா; இல்லையா?

9. பா.ஜ.க. வுடன் நீங்கள் செல்லப் போவதாக டெல்லியில் சொல்கிறார்களே?

10. சி.பி.ஐ. மூன்றாவது குற்றப்பத்திரிகையில் தயாநிதி மாறன் பெயர் இடம் பெறப்போவதாகச் செய்தி வந்திருக்கிறதே?

11. தயாநிதிமாறன் பதவி விலக வேண்டுமென்று சொல்கிறார்களே?

12. தயாநிதிமாறனை நீங்கள் ஆதரிக்க வில்லையே?

13. வெங்கைய நாயுடு நெருக்கடி நிலை மீண்டும் வரும் என்று சொல்லியிருக்கிறாரே, அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

14. நீங்கள் ஜூலையில் கூட்டுகின்ற பொதுக் குழு மத்திய அரசுக்கு நீங்கள் வைத்துள்ள காலக் கெடு என்று எடுத்துக் கொள்ளலாமா?

15. காங்கிரஸ் கட்சி தி.மு.க.வை என்றைக்கும் மதித்ததில்லை என்று கூறுவீர்களா?

16. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலே உங்கள் சுயமரியாதை காப்பாற்றப்படுகிறது என்று நினைக்கிறீர்களா?

17. 2ஜி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி எந்த விதத்திலும் உங்களுக்கு உதவி செய்யவில்லை என்ற வருத்தம் இருக்கிறதா?

18. ஆ.ராஜாவும், கனிமொழியும் சிறையிலே இருக்கக் காரணம் காங்கிரஸ் கட்சிதான் என்று உங்கள் தொண்டர்கள் பேசுகிறார்களே?

19. 2ஜி வழக்கிலே சி.பி.ஐ.யின் செயல்பாடு எவ்வாறு உள்ளது?

20. சி.பி.ஐ.யை நீங்கள் தீர்மானத்தில் கண்டித்திருக்கிறீர்கள். அதனால் பிரதமரையே தாங்கள் கண்டித்ததாக எடுத்துக் கொள்ள லாமா?

21. எக்காரணம் கொண்டும் காங்கிரசுடன் உங்கள் கூட்டணியில் சிக்கல் இல்லை என்று கூறுவீர்களா?

22. டெல்லியில் குலாம் நபி ஆசாத், 2 ஜி வழக்கில் தங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லியிருக்கிறாரே?

உடன்பிறப்பே, மொத்தம் 31 கேள்விகளில் 22 கேள்விகள் காங்கிரஸ் கட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் உள்ள உறவை எப்படியாவது துண்டிக்கவேண்டும், காங்கிரஸ் கட்சியை விமர்சித்து நான் ஏதாவது கூறி அதைப் பெரிதுபடுத்தி இருவருக்குமிடையே கலகத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தோடு கேட்கப்பட்ட கேள்விகளா; அல்லவா? விருப்பு, வெறுப்பின்றி, நடுநிலையோடு செய்திகளைச் சேகரித்து, கலப்படமில்லாமல் மக்களுக்குக்கொண்டு சேர்த்திட வேண்டிய செய்தியாளர்களுக்கு ஏன் இந்த அக்கறை? அவசரம்? துடிப்பு? ஒன்றிரண்டு கேள்விகள் இந்தப் பொருளைப் பற்றிக் கேட்டிருந்தால் அதன் உள்நோக்கத்தை நாம் புரிந்து

கொள்ளலாம். ஆனால் 31 கேள்விகளில் 22 கேள்விகள் காங்கிரஸ் கட்சிக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையே சிண்டு முடியும் குணம் கொண்டவை என்பதைக் கவனித்தால் பத்திரிகாதர்மத்தைக் குலைக்கும் செயலிலே செய்தியாளர்களே ஈடுபடலாமா என்று நினைக்கத் தோன்றுகிறது அல்லவா? உயர்நிலை செயல்திட்டக் குழுவிலே பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அந்தத் தீர்மானங்கள் அனைத்துச் செய்தியாளர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தீர்மானங்களைப் பற்றி எந்தவொரு கேள்வியையும் கேட்காமல், திட்டமிட்டு, பேசி, தீர்மானித்துக் கொண்டதைப்போல ஒரு சில குறிப்பிட்ட செய்தியாளர்கள், தி.மு.க. - காங்கிரஸ் உறவு பற்றியே கேள்விகளை எழுப்பினார்கள் என்றால்; எந்த அளவிற்கான ஒரு சூழ்நிலையில் வருங்காலத்தில் நாம் செயல்பட வேண்டியுள்ளது என்பதை நினைத்துப்பார்! தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் ஆளுநர் உரையாக இருந்தாலும், நிதிநிலை அறிக்கையாக இருந்தாலும் அவைகளைத் தயாரிக்கும்போது பத்திரிகையாளர்களின் நலன்களும் இடம்பெற வேண்டுமென்று ஒவ்வொரு முறையும் எண்ணிப் பார்த்து, அவற்றை இடம் பெறச் செய்தவன் நான் என்பது மட்டுமல்ல - பத்திரிகையாளர்கள் சொந்த இல்லங்களில் குடியிருக்கவேண்டும் என்பதற்காக சென்னையிலும், மற்ற பிற நகரங்களிலும் குறைந்த செலவில் மனைகளை ஒதுக்கிட ஆணைகளைப் பிறப்பித்தவன் நான் என்ற அடிப்படையிலும் - இந்த அளவிற்கு பத்திரிகை யாளர்களின் நலன்களுக்காகப் பாடுபட்டோமே ; ஆனால் அவர்கள் இந்த அளவிற்கு மாறுபட்ட மனத்தோடும், குணத்தோடும் நம்மிடம் பழகுகிறார்களே என்ற வருத்தம்தான் எனக்கு ஏற்பட்டது. ஆனால் அந்தக் கேள்விகளைக் கேட்டவர்கள் அங்கே செய்தியாளர்கள் கூட்டத்தில் அமர்ந்திருந்த ஐம்பதுக்கு மேற்பட்ட அனைவரும் அல்ல. குறிப்பாக ஐந்தாறு பேர், ஒன்று சேர்ந்து அமராமல், ஆங்காங்கு அமர்ந்து கொண்டு இந்தக் கேள்விகளையெல்லாம் அவர்களே மாற்றி மாற்றி கேட்டதையும், அதற்கு நான் பதில் அளித்ததையும், அந்தச் செய்தியாளர்கள் கூட்டத்திலே அமர்ந்திருந்த மற்றச் செய்தியாளர்கள் புரிந்து கொண்டு தானிருப்பார்கள். இருந்தாலும் அவர்களால் இந்த ஐந்தாறு பேர்களின் எரிச்சல் கக்கும் கேள்விகளை அமைதியாகக்

கேட்டுக் கொண்டிருக்கத்தான் முடிந்ததே தவிர; வேறு எதுவும் செய்ய முடியவில்லை. செய்தியாளர்கள் சந்திப்பின்போது கேள்வி கேட்டது மாத்திரமல்ல, 12-6-2011 தேதிய “தினமணி” நாளிதழில் ஒரு பெரிய கட்டுரை! அதன் தலைப்பே “தி.மு.க. தயங்குவது ஏன்” என்பதாகும். அந்தக் கட்டுரையில் காங்கிரசுடன் உறவை முறித்துக்கொள்ள கருணாநிதி தயாராக இருப்பதாகவும், ஆனால் நாடாளு மன்ற உறுப்பினர்களும், மத்திய அமைச்சரான மு.க. அழகிரியும்தான் கூட்டணி முறிவைத் தள்ளிப்போட விரும்புவதாகவும் எழுதி, எந்த அளவிற்கு இந்தக் கூட்டணியை முறிக்க முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றார்கள். அதே 12ஆம் தேதிய “தினமலர்” நாளிதழில் வந்துள்ள பெரிய கட்டுரையின் தலைப்பு “கருணாநிதியின் முடிவால் அதிர்ச்சியான தொண்டர்கள்” என்பதாகும். அந்தக் கட்டுரையை முடிக்கும்போது, “எவ்வளவு அடித்தாலும் தாங்குவோம் என்று நினைக்குமளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளதாக தி.மு.க. தொண்டர்கள் குமுறத் தொடங்கி யுள்ளனர்” என்று எழுதப்பட்டுள்ளது. எந்தத் தி.மு.க. தொண்டர்களும் குமுறவில்லை. ஆனால் “தினமணி”, “தினமலர்” நாளேடுகள் தான் கழகத்தின் முடிவினால் கதறுகிறார்கள், குமுறுகிறார்கள். தங்கள் எண்ணம் நிறைவேற வில்லையே என எண்ணி கட்டுரை தீட்டுகிறார்கள். செய்தியாளர்கள் சந்திப்பின்போது கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறார்கள். பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுடைய முதலாளிகள் கேட்கச் சொன்னதையும், எழுதச் சொன்னதையும் செய்கின்றார்கள். அவர்களின் முதலாளிகள் ஏன் அப்படிச் சொல்கிறார்கள்? அப்போதுதானே விளம்பரம் என்ற “கொழுக் கட்டை” அவர்களுக்கு கிடைக்கும். அவர்களின் வாழ்க்கை சிறக்கும். வாழ்க மனு தர்மம்! - வாழ்க பத்திரிகா தர்மம்! அன்புள்ள, மு.க. 11-6-2011

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065831_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_45.pdf; PDF பக்கம் 218–222. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 45-இல் மேலும் கடிதங்கள்