அடக்கம்

முரசொலி · தொகுதி 44 · கடிதம் 3532

முரசொலி கடிதங்கள் · 3532

விளைச்சல் நிறைந்தது; விவசாயி கண்ணீர் மறைந்தது!

நாள் 5.3.2011சுமார் 8 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3532. விளைச்சல் நிறைந்தது; விவசாயி கண்ணீர் மறைந்தது!

உடன்பிறப்பே,

வேளாண்மைத் துறையில் கழக ஆட்சி கடந்த ஐந்தாண்டு காலத்தில் நிறைவேற்றிய சாதனைகள் - திட்டங்களின் தொடர்ச்சியினை எழுதுகிறேன்.

ஐந்திணை மரபணுப் பூங்கா

“தமிழக அரசு சார்பில் ஐந்திணை நில வகைகளில்” பாரம்பரிய மரபணுப் பூங்காக்கள் (Genetic Gardens) அமைக்கப்படும் என கோவை மாநகரில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு நிறைவு விழாவில் தெரிவித்தபடி சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 75 ஏக்கரில் குறிஞ்சிப் பூங்கா; திண்டுக்கல் மாவட்டம் சிறுமலைப் பகுதியில் 25 ஏக்கரில் முல்லைப் பூங்கா, தஞ்சை மாவட்டம் சாக்கோட்டையில் 21.47 ஏக்கரில் மருதம் பூங்கா, நாகை மாவட்டம் திருக்கடையூரில் 14.61 ஏக்கரில் நெய்தல் பூங்கா, இராமநாதபுரம் மாவட்டம் அச்சடிப் பிரம்பு கிராமத்தில் 25 ஏக்கரில் பாலைப் பூங்கா என ஐந்திணை மரபணுப் பூங்காக்கள் அமைத்திட முடிவு செய்யப்பட்டு முதற்கட்டமாக 37 கோடியே 391 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆயத்தப் பணிகள் நடைபெறுகின்றன.

கழக அரசு உருவாக்கும் தாவரவியல் பூங்காக்கள்

நீலகிரி மாவட்ட உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா மற்றும் அரசு ரோஜாத் தோட்டம், குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா, கொடைக்கானல் பகுதியில் அமைந்துள்ள பிரையண்ட் பூங்கா ஆகியவை சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஈர்த்து வருவதால் மேலும் பல தாவரவியல் பூங்காக்களை கழக அரசு தமிழகத்தில் அமைத்து வருகிறது.

கோவை மாநகரில் அமையும் செம்மொழிப் பூங்காவுடன், சென்னை கதீட்ரல் சாலையில் 7 கோடியே 96 இலட்சம் ரூபாய் செலவில் உலகத் தரம் வாய்ந்த செம்மொழிப் பூங்கா அமைக்கப் பட்டு 24.11.2010 அன்று என்னால் திறக்கப்பட்டுள்ளது.

அதேபோல, சென்னையை அடுத்த மாதவரத்தில் 28.16 ஏக்கர் பரப்பில் 5 கோடியே 93 இலட்சம் ரூபாய் செலவில் அலங்காரத் தோட்டம் மற்றும் செயல்விளக்கப் பூங்கா;

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் 36.78 ஏக்கர் பரப்பில் 5 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் சுற்றுச்சூழல் பூங்கா;

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 47.25 ஏக்கர் பரப்பில் 11 கோடியே 26 இலட்சம் ரூபாய் செலவில் தாவரவியல் பூங்கா ஆகியவை அமைக்கப்பட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா, அண்ணா பூங்கா, செட்டியார் பூங்கா ஆகியவை ஒரு கோடியே 59 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படு கின்றன.

வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம்

❖ வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்தின் மூலம் வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளிடத்தில் அரசு பிரபலப்படுத்தி வருவதால் வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் அதிகரித்து, வேளாண் தொழிலாளர்கள் பற்றாக்குறை நீங்கி, குறித்த காலத்தில் வேளாண் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வேளாண்மையில் மேற்கொள்ளப்படும் செலவுகள் குறைந்து விவசாயிகளின் நிகர வருவாய் உயர்வதுடன் வேளாண் பணிகளிலுள்ள இடர்ப்பாடுகளும் குறைகின்றன.

ஐந்தாண்டுகளில் டிராக்டர்கள், பவர் டில்லர்கள், அறுவடை இயந்திரங்கள் முதலிய வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கிட 36 ஆயிரத்து 813 விவசாயிகளுக்கு 86 கோடியே 71 இலட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில், விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் விடுவதற்காக பயன்பாட்டிற்காக, 25 கதிர் அறுவடை

இயந்திரங்கள் மற்றும் 50 டிராக்டர்கள் 5 கோடியே 90 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டுள்ளன.

உலர் களங்கள்

❖ தானிய விளைபொருட்களில் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பினைக் குறைக்கும் வகையில் கிராமங்களில் 2006- 07 முதல் 2009-10 வரை 4 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் 200 உலர்களங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

முந்திரி ஏற்றுமதி மண்டலம்

❖ முந்திரிக்கென கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் 16 கோடியே 54 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வேளாண் ஏற்றுமதி மண்டலம் திருவாளர் சத்துவா அக்ரோ எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தால் 2006-07ல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிறுவனம் மூலம் ஒரு கோடியே 53 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள முந்திரி வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.

மலர் ஏல மையம்

❖ மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனுக்கென திருநெல்வேலி மாவட்டம், காவல் கிணற்றில் 1 கோடியே 63 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் மலர் ஏல மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 2009-2010ஆம் ஆண்டில் சராசரியாக நாளொன்றுக்கு 85 ஆயிரத்து 756 ரூபாய் மதிப்புள்ள 1500 கிலோ மலர்கள் 124 விவசாயிகளால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

புதிய வணிக வளாகங்கள்

❖ ஒரு கோடி ரூபாய் செலவில் திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் வெங்காயத்திற்கென குளிர்ப்பதன வசதியுடன் கூடிய வணிக வளாகம்;

❖ ஒரு கோடி ரூபாய் செலவில் கிருஷ்ண கிரியில் மாங்கனிக்கு குளிர்ப்பதன வசதியுடன் கூடிய வணிக வளாகம்;

❖ ஒரு கோடி ரூபாய் செலவில் தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் தக்காளிக்கென குளிர்ப்பதன வசதியுடன் கூடிய வணிக வளாகம்;

❖ ஒரு கோடி ரூபாய் செலவில் தேனி மாவட்டம் ஓடைப்பட்டியில் திராட்சைக்கென குளிர்ப்பதன கிட்டங்கி வசதியுடன் கூடிய வணிக வளாகம்;

❖ 4 கோடி ரூபாய் செலவில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு அருகில் பொன்னவராயன் கோட்டை, உக்கடை கிராமத்தில் தென்னை வணிக வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது.

❖ சென்னைக்கு அருகில் நாவலூரிலும், மதுரைக்கு அருகில் முக்கம்பட்டியிலும், கோவைக்கு அருகில் பெருந்துறையிலும் காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர விளைபொருளுக்கு நவீன உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் உற்பத்தி பகுதியில் சேகரிப்பு மைய வசதிகளுடன் கூடிய விற்பனை முனையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

❖ சேலம் மாவட்டம் மேச்சேரியில் ஒரு கோடி ரூபாய் செலவில் தக்காளிக்கென குளிர்ப்பதனக் கிட்டங்கி; திருப்பூர் மாவட்டம் பெதப்பம்பட்டியில் தேங்காய்க்கென ஒரு கோடி ரூபாய் செலவில் வணிக வளாகம் ஆகியவற்றுடன் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் 10 இடங்களில் ஊரக வணிக மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

❖ திருச்சி, நாமக்கல் மாவட்டம் மோகனூர், தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம், தேனி மாவட்டம் சின்னமனூர் ஆகிய இடங்களில் தலா

50 இலட்சம் ரூபாய் செலவில் வாழை பழுக்க வைக்கும் நான்கு கூடங்கள்;

❖ கோவை மாவட்டம் காரமடையில் ஒரு கோடி ரூபாய் செலவில் மலைக் காய்கறிகளுக்கென விற்பனை வளாகம்;

❖ மதுரையில் 36 இலட்சம் ரூபாய் செலவில் நெல் வணிக வளாகத்தில் கூடுதல் கடைகள்

- ஆகியவற்றுடன் 7 கோடியே 81 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

❖ மதுரையில் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் விவசாயிகள் / வியாபாரிகள் பயன்பெறும் வகையில் “காய்கறி வணிக வளாகம்” 85 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். முதல்கட்டமாக 30 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சிறு விவசாயிகள் வேளாண் வணிக நட்பமைப்பு

அரசு, தனியார்த் துறை, கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் சேவை நிறுவனங்களுடனும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், பாரத வங்கி, அதன் துணை வங்கிகள் ஆகியவற்றுடனும் இணைந்து செயல்பட்டு, தமிழகத்தில் வேளாண் வணிகம் மேம்பட உதவும் தமிழ்நாடு சிறு விவசாயிகள் வேளாண் வணிக நட்பமைப்புத் திட்டத்தின்கீழ் 132 கோடியே 62 இலட்சத்து 73 ஆயிரம் ரூபாய் முதலீட்டுத் தொகையில் 31 வேளாண் வணிக நிறுவனங்களுக்கு தொழில் தொடங்குவதற்கான மூலதன முதலீட்டுத் தொகையாக 12 கோடியே 14 இலட்சத்து 84 ஆயிரம் ரூபாய் தமிழ்நாடு சிறு விவசாயிகள் வேளாண் வணிக நட்பமைப்பு மூலம் வழங்கப்பட்டுள்ளது.

கழக அரசின் தொழிற்கொள்கை 2007இல் வேளாண் வளர்ச்சி

விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் பொருட்டும், விவசாயத்தைப் பிற தொழில்களுக்கு இணையாக உயர்த்தும் பொருட்டும், வேளாண்மைக்குப் பல சலுகைகள் உள்ளடக்கிய ‘தொழிற் கொள்கை 2007’இல் வகுக்கப்பட்டது. இதில் விவசாயத் தொழில்களுக்குப் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. 11வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் வேளாண்மையில் 4 சதவீத வளர்ச்சியினை அடைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நீர்வள நிலவளத் திட்டம்

உலக வங்கி உதவியுடன் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் பாசன பரப்பினை அதிகரிக்கும் நோக்குடன் தமிழ்நாடு நீர் வள நிலவளத் திட்டம் 63 துணை ஆற்றுப்படுகைகளில் 578 கோடியே 40 இலட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் 2007-2013 ஆகிய 6 ஆண்டுகளில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

2007-2008ஆம் ஆண்டு முதல் 2010-2011 அக்டோபர் வரை, 76 ஆயிரத்து 444 எக்டர் பரப்பில் 112 கோடியே 69 இலட்சம் ரூபாய் செலவில் 55 துணை நீர் வடிநிலப் பகுதிகளில் இத்திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

துணை நீர்வடிநிலப் பகுதி விவசாயிகள் கூடுதல் வருமானம் ஈட்டிட அவர்களிடையே 936 விளைபொருள் குழுக்கள் அமைக்கப்பட்டு, வியாபாரிகளுடன் 558 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டன. இதுவரை, 64 கோடியே 3 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 50 ஆயிரத்து 925 மெட்ரிக் டன் வேளாண் விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு 15 ஆயிரத்து 36 விவசாயிகள் 4 கோடியே 58 இலட்சம் ரூபாய் கூடுதல் வருமானமாகப் பெற்று பயனடைந்துள்ளனர். உலக வங்கியின் ஆய்வுக்குழு விற்பனைத் துறையின் செயல்பாட்டினை ஆய்வு செய்து பாராட்டியுள்ளது.

குழு முறையிலான அணுகுமுறை

2006-07 முதல் 2008-09 வரை 3432 விவசாயிகள் ஆர்வலர் குழுக்கள் ரூ.3.36 கோடி ஒதுக்கீட்டில் 51 ஆயிரத்து 285 விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

2006-2007 மற்றும் 2007-2008ஆம் ஆண்டுகளில் 5 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் 8 ஆயிரத்து 91 பண்ணை மகளிர் குழுக்களுக்கு சுயதொழில் தொடங்க பயிற்சி மற்றும் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

2008-2009ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 25 குழுக்களுக்கு, குழுவிற்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் தொழில் தொடங்க 2 கோடியே 19 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நிதி உதவி வழங்கப் பட்டுள்ளது. மொத்தத்தில் 10 ஆயிரத்து 116 குழுக்களை சார்ந்த ஏறத்தாழ ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பண்ணை மகளிர் பயன்பெற்றனர். மேலும் 223 பண்ணை மகளிர் குழுக்கள் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விடுவதன் மூலம் பயன்பெற அக்குழுக்களுக்கு 25 சத மானியத்தில் பண்ணைக் கருவிகள் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் வழங்கப்பட்டுள்ளது.

சர்க்கரைத் துறை

சர்க்கரைத் தொழிலினை மேம்படுத்துவதற்கு தனியார்த் துறையில் 9 புதிய சர்க்கரை வளாகங்கள் அமைக்க தமிழக அரசு

அனுமதி அளித்து உள்ளது. அதில் 8 சர்க்கரை ஆலைகள், நிர்மாணப் பணிகளை முடித்து, சர்க்கரை உற்பத்தியைத் தொடங்கியுள்ளன.

2006-2007 அரவைப் பருவம் முதல் கரும்பு வயலிலிருந்து சர்க்கரை ஆலை வரையான தூரத்திற்குப் போக்குவரத்து வாகனக் கட்டணம் முழுவதையும் ஆலைகளே ஏற்க வேண்டுமென அரசு அறிவித்து நடைமுறைப் படுத்தப்படுகிறது.

மேலும் சர்க்கரை ஆலைகளில், இணைமின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதில் தமிழகம் முன்னோடியாகவுள்ளது. தமிழ் நாட்டில் 19 தனியார் சர்க்கரை ஆலைகளில் 404.19 மெகாவாட் திறனுடைய இணைமின் உற்பத்தி நிலையங்களும், 3 கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளில் சிறிய இணை மின் நிலையங்களும் உள்ளன. 1125 கோடியே 63 இலட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் 183 மெகாவாட் திறன் கொண்ட இணைமின் உற்பத்தி நிலையங்களை 12 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் அமைக்க தீர்மானித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஓர் ஆண்டிற்கு 960 இலட்சம் லிட்டர்கள் எத்தனால் உற்பத்தி செய்யக்கூடிய 9 எத்தனால் உற்பத்தி நிலையங்கள் மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ளது. எரிசாராய உற்பத்தி பற்றாக்குறையினால் 5 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் வழங்கிட இயலாத நிலை உள்ளது. கழிவுப் பாகு உற்பத்தி அதிகரிக்கும் பட்சத்தில், புதியதாக உரிமம் பெற்றுள்ள எரிசாராய நிலையங்கள், உற்பத்தியைத் தொடங்கும்போது 5 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் மாநிலத்தில் முழு அளவில் கிடைக்கும். நாளொன்றுக்கு 45 கிலோ லிட்டர் திறனுள்ள எரிசாராயம் மற்றும் எத்தனால் ஆலைகள், செய்யாறு மற்றும் எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளில் தலா 36 கோடி ரூபாய் செலவில் நிறுவும் பணி மேற்கொள்ளப்பட்டு, நடைபெற்று வருகிறது.

கரும்புச் சாற்றுக் கசண்டு, சர்க்கரை ஆலைகளின் விலை மதிப்புள்ள உப உற்பத்திப் பொருளாகும். கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளில் அமராவதி மற்றும் சேலம் கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளில் உற்பத்தியாகும் கரும்புச் சாற்றுக் கசண்டை வடிப்பாலையில் எரிசாராயம் தயாரிக்கப் பயன்படுத்தி வருகின்றன.

இந்த அரசின் சீரிய முயற்சியால் சேலம் மற்றும் அமராவதி கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளில் 30 கிலோ லிட்டர் எரிசாராய உற்பத்தித் திட்டம் ஆகஸ்ட் 2008இல் தொடங்கப்பட்டது.

மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை 15.10.2010 அன்று மீண்டும் திறக்கப்பட்டு அடுத்த அரவைப் பருவம் முதல் செயல்படும்.

மத்திய அரசின் பரிசு பெற்ற சர்க்கரை ஆலைகள்

தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பு 2009-2010 சர்க்கரைப் பருவத்திற்கு சிறந்த தொழில்நுட்பச் செயல்திறனுக்காக தமிழகத்தைச் சேர்ந்த சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை, கரும்பு மேம்பாட்டிற்காக சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, நிதி மேலாண்மைக்காக செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆகியவற்றிற்கு முதல் பரிசு வழங்கிப் பாராட்டியுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்

தமிழக வேளாண்மை வளர்ச்சியில் வேளாண் கல்வி, வேளாண் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு 1971ஆம் ஆண்டில் நான் முதலமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் உருவாக்கிய வேளாண்மைப் பல்கலைக் கழகம், 7 வளாகங்களில் அமைந்துள்ள 10 கல்லூரிகள், 36 ஆராய்ச்சி நிலையங்கள், 14 வேளாண்மை அறிவியல் மையங்கள் மூலமாக பெரிதும் தொண்டாற்றி வருகிறது.

வேளாண்மைத் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள விவசாயிகள் நிறைந்த நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் பெரிதும் பயன்பெற வேண்டுமென்ற எண்ணத்தோடு, நாகை மாவட்டத்தில் உள்ள கீவளூரில் புதிதாக வேளாண்மைக் கல்லூரியும் - வேளாண்மையின் எதிர்காலம் என்று கருதப்படும் தோட்டக் கலைக்கென தனியே “தோட்டக்கலை பல்கலைக் கழகம்” ஒன்றை கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் இந்த ஆண்டு தொடங்கவுள்ளது.

தமிழக விவசாயிகளின் தேவைக்கேற்ப ஐந்தாண்டுகளில் 56 புதிய பயிர் இரகங்கள், 20 பண்ணைக் கருவிகள், 20

மேலாண்மைத் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை உருவாக்கி வெளியிட்டு வேளாண்மை உற்பத்தி பெருகிட உதவியுள்ளது.

வேளாண் அலுவலர்கள் பணி நியமனம்

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தமிழகத்திலே அமைந்தபோதெல்லாம் இவ்வாறு வேளாண் மக்களுக்கு சலுகைகளையும், திட்டங்களையும் வழங்கியது போலவே, வேளாண்மை அலுவலர்களுக்கு அடுக்கடுக்கான பல உதவிகளை செய்து வருகிறது என்பதை 24-11-2010 அன்று சென்னையிலே நடைபெற்ற அவர்களது மாநாட்டிலேயே என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

1972ஆம் ஆண்டு கழக ஆட்சியிலேதான் வேளாண்மை அலுவலர்களுக்கு கெஜட்டட் தகுதியே வழங்கப்பட்டது. 1989ஆம் ஆண்டு காலநடை உதவி மருத்துவர், உதவிப் பொறியாளர்களுக்கு இணையாக வேளாண்மை அலுவலர்களுக்கு ஊதியம் அளிக்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த 131 உதவி ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியமளித்து உதவிப் பேராசிரியர் களாக பணி நியமனம் செய்யப்பட்டது. 2007ஆம் ஆண்டு துறை மறு சீரமைப்பில் 509 வேளாண்மை அலுவலர்கள் பணியிடங்களை உதவி வேளாண்மை இயக்குநர்களாகவும் - 512 உதவி விதை அலுவலர் பணி இடங்களை துணை வேளாண்மை அலுவலர்களாகவும் - 514 உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களை உதவி விதை அலுவலர்களாகவும் - அதே போல 399 உதவி மண்வளப் பாதுகாப்பு அலுவலர் பணி இடங்களை இளநிலைப் பொறியாளர்களாகவும் - பொறியியல் பட்டம் பெற்ற 54 உதவி மண்வளப் பாதுகாப்பு அலுவலர் பணி இடங்களை உதவிப் பொறியாளர்களாகவும் தரம் உயர்த்தி பதவி உயர்வும் அளிக்கப்பட்டது. பணி நியமனத் தடைச் சட்டத்தை நீக்கி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் 338 உதவிப் பேராசிரியர்கள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறைகளில் 540 வேளாண்மை அலுவலர்கள், 47 தோட்டக்கலை அலுவலர்கள், 1707 உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆக மொத்தம் 2632 பணி இடங்களுக்கு நேரடி நியமனமும், வேளாண் துறையில் 3544 அலுவலர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.

உடன்பிறப்பே, தம்பி வீரபாண்டி ஆறுமுகத்தின் பொறுப்பிலுள்ள இந்தத் துறையின் சார்பாக அதிகாரிகளின் ஒத்துழைப்போடு செய்யப்பட்டுள்ள சாதனைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளேன். நீ படிப்பதோடு மட்டும் இருந்து விடாமல் இவ்வளவு சாதனைகள் விவசாயப் பெருங்குடி மக்களுக்காக இந்த ஐந்தாண்டு காலத்தில் செய்யப்பட்டுள்ளன என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்திடவும் தவறாதே! அன்புள்ள, மு.க. 05-03-2011

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 44 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065830_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_44.pdf; PDF பக்கம் 350–359. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 44-இல் மேலும் கடிதங்கள்