அடக்கம்

முரசொலி · தொகுதி 44 · கடிதம் 3531

முரசொலி கடிதங்கள் · 3531

விளைச்சல் நிறைந்தது; விவசாயி கண்ணீர் மறைந்தது!

நாள் 4.3.2011சுமார் 10 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3531. விளைச்சல் நிறைந்தது; விவசாயி கண்ணீர் மறைந்தது!

உடன்பிறப்பே,

நாடு விடுதலை பெற்ற நாளை “கணக்குத் தீர்த்த நாள்” என்றும் அந்த விடுதலைக்காக ஆண்டு தோறும் விழா எடுத்துக் கொண்டாடும் நாளை “கணக்குப் பார்க்கும் நாள்” என்றும் பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியதை நெஞ்சிலே நிறுத்தி அன்றாடம் பணி புரிந்து வரும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஐந்தாவது முறையாக 2006ஆம் ஆண்டு மே திங்களில் பதவிப் பொறுப்பேற்று கடந்த ஐந்தாண்டு காலமாக மக்கள் பணியே மகேசன் பணி என்ற உணர்வோடு விடிகின்ற ஒவ்வொரு நாளிலும் மக்களுக்கு இன்று என்ன செய்யலாம், என்ன திட்டங்களை நிறைவேற்றலாம் என்ற எதிர்பார்ப்போடு அதிகாரிகளோடு விவாதித்து சாதனைகளையும், திட்டங்களையும் ஆற்றி வருவதை தமிழ் நாட்டு மக்கள் நன்கறிவார்கள்.

2006ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டு மக்களிடம் சென்று, நீங்கள் எங்களுக்கு வாக்களியுங்கள், நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் இன்னின்ன திட்டங்களை உங்களுக்காக ஆற்றிடுவோம், “சொன்னதைச் செய்வோம், செய்வதைப் சொல்வோம்” என்று உறுதிமொழி தந்து, மக்களும் அதை நம்பியேற்று பதவிக் கட்டிலிலே மக்கள் நம்மை அமர்த்திய பிறகு, 2011இல் மீண்டும் தமிழ் நாட்டு மக்களைச் சந்திக்கப் போகும்போது, 2006ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் நாம் அவர்களுக்கு அளித்த உறுதி மொழிகளை நிறைவேற்றினோமா, மேலும் என்னென்ன திட்டங்களை மக்களுக்காக எந்தெந்த துறைகளின் சார்பாக நிறைவேற்றியிருக்கிறோம் என்று கணக்குக் காட்ட வேண்டிய நிலையில் தற்போது நான் இருக்கின்றேன்.

2006ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு முடிகின்ற வரையில் உள்ள இந்தக் காலக் கட்டத்தில் எந்தெந்த துறைகளின்

வாயிலாக என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன, என்னென்ன சலுகைகள் வழங்கப்பட்டன என்பதை நேரம் கிடைக்கின்றபோது உனக்குத் தெரிவிக்கின்றேன். இதனை நாட்டுமக்களிடம் எடுத்துக் கூற வேண்டிய பொறுப்பு உனக்கும், உன் போன்ற உடன்பிறப்புக்களுக்கும் உள்ளது என்பதை நான் நினைவுபடுத்த வேண்டிய தில்லை. “சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால் உழந்தும் உழவே தலை” - என்றும் “உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா தெழுவாரை எல்லாம் பொறுத்து” - என்றும் அய்யன் வள்ளுவரால் போற்றப்பட்ட வேளாண் துறையின் சார்பில் கடந்த நான்கரை ஆண்டுகளில் தி.மு.கழக அரசு செய்த சாதனைகளின் பட்டியலை இந்தக் கடிதத்தில் தொகுத்துத் தருகின்றேன். 2006ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழக மக்களிடம் வைக்கப்பட்ட தேர்தல் அறிக்கையில் “சிறு, குறு விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட கூட்டுறவுக் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்வோம்” என்று சொல்லியிருந்தோம். தேர்தலில் தி.மு. கழகம் வெற்றி பெற்று நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட அதே நாளில் - அதே மேடையில் இருந்தவாறே விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட இந்தச் சலுகைக்கான கோப்பிலே நான் கையெழுத்திட்டதை தமிழக விவசாயிகள் மறந்திருக்க முடியாது. அன்றைய தினம் நான் கையெழுத்திட்ட மூன்று கோப்புகளில் ஒன்றுதான் விவசாயிகளுக்கு சலுகைகளை அளிக்கக் கூடிய இந்தக் கோப்பு. அதன் காரணமாக விவசாயிகள் வாங்கிய 7000 கோடி ரூபாய் கூட்டுறவு விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு - 22 இலட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்கள் பயன் அடைந்துள்ளன. விவசாயிகளுக்கான பயிர்க் கடன் வட்டி 2005-2006இல் 9 சதவீதம் என இருந்ததை 2006-2007 கழக அரசில் 7 சதவீதமாகக் குறைத்து, 6,31,283 பேருக்கு 1250 கோடியே 62 இலட்ச ரூபாயும்; 2007-2008இல் 5 சதவீதமாகக் குறைத்து, 6,48,397

பேருக்கு 1393 கோடியே 97 இலட்ச ரூபாயும்; 2008-2009இல் 4 சதவீதமாகக் குறைத்து, 6,91,192 பேருக்கு 1570 கோடியே 99 இலட்ச ரூபாயும்; 2009-2010இல் பயிர்க்கடன்களை முறையாகத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியை முற்றிலும் ரத்து செய்த புரட்சிகரமான திட்டத்தை இந்தியாவிலேயே முதன் முதலாக அறிவித்து, 8,98,540 பேருக்கு 2169 கோடியே 48 இலட்ச ரூபாயும்; நடப்பு நிதி ஆண்டில் (2010 - 2011) 15.2.2011 வரை 8 லட்சத்து 1960 விவசாயிகளுக்கு 2453 கோடி ரூபாயும் என 2006க்குப்பின் மொத்தம் 36 இலட்சத்து 71 ஆயிரத்து 372 விவசாயிகளுக்கு 8,838 கோடியே 6 இலட்ச ரூபாய் பயிர்க்கடனாக வழங்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் 1 கோடியே 73 இலட்சத்து 92 ஆயிரத்து 556 பேர் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு, இதுவரை 8 இலட்சத்து 61 ஆயிரத்து 614 உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு 632 கோடியே 59 இலட்சத்து 61 ஆயிரத்து 257 ரூபாய் முதியோர் ஓய்வூதியம், கல்வி, திருமணம், விபத்து போன்ற இனங்களுக்கான உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு தலவரி, தலமேல்வரி, தண்ணீர்த் தீர்வை ஆகியவை ரத்து செய்யப்பட்டு, நிலவரி புன்செய் நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு சராசரியாக 15 ரூபாய் என்பது 2 ரூபாய் என்றும், நன்செய் நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு சராசரியாக 50 ரூபாய் என்பது 5 ரூபாய் என்றும் 2009-2010 முதல் பெயரளவுக்கு வசூலிக்கப்படுகிறது.

1990ஆம் ஆண்டில் கழக அரசு, விவசாய பம்பு செட்டுகளுக்கு வழங்கிய இலவச மின்சாரத் திட்டத்தின் கீழ் இதுவரை 19 இலட்சத்து 13 ஆயிரத்து 697 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். தற்போது நிலுவையில் உள்ள மேலும் 2 இலட்சம் பம்பு செட்டுகளுக்கு படிப்படியாக இலவச மின் இணைப்பு வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நவம்பர் 2008-ல் பெய்த பெருமழை மற்றும் வெள்ளத்தால் 5.77 இலட்சம் எக்டரில் பாதிப்புக்குள்ளான நெல் மற்றும் இதர பயிர்களைச் சாகுபடி செய்த 9 இலட்சத்து 10 ஆயிரத்து 200 விவசாயிகளுக்கு, இழப்பீடு வழங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட

உச்சவரம்பான 2 எக்டர் என்ற விதிமுறையையும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் நெற்பயிர்களுக்கு நிவாரணமான எக்டருக்கு ரூ.4000/- என்பதை ரூ.7500/- ஆக உயர்த்தியும், பாதிக்கப்பட்ட விவசாய நிலப்பரப்பு அனைத்திற்கும் நிவாரணம் வழங்கிட ஆணையிடப்பட்டு 404 கோடியே 41 இலட்சம் ரூபாய் வெள்ள நிவாரணமாக வழங்கப்பட்டது.

இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பயிர்ப் பாதிப்பிலிருந்து விவசாயிகளைக் காக்கும் பொருட்டு கொண்டு வரப்பட்ட விவசாயக் காப்பீட்டுத் திட்டத்தில் தமிழக அரசு காப்பீட்டு பிரிமியத் தொகையில் 50 சத மானியம் வழங்கிய காரணத்தால் பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளின் எண்ணிக்கை 2006இல் 1 இலட்சம் என்பதிலிருந்து படிப்படியாக 9 இலட்சத்து 88 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடந்த நான்காண்டுகளில் மொத்தம் 9 இலட்சம் விவசாயிகளுக்கு 974 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் காப்பீட்டுத் தொகை மானியமாக வழங்கிட 40 கோடி ரூபாயும், இழப்பீட்டுத் தொகை வழங்கிட தமிழக அரசின் பங்காக 200 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகளின் துயர் துடைக்கும் பொருட்டு, விவசாயிகளிடமிருந்து 1.4.1980 முதல் வசூலிக்கப்பட வேண்டிய மண்வளப் பாதுகாப்பு கடன் உள்ளடக்கிய தக்காவி கடன் 196 கோடியே 37 லட்சம் ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

வேளாண் துறைக்காக 2001-2006 ஐந்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் 4 ஆயிரத்து 137 கோடியே 34 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு; 2006-2011 ஐந்தாண்டுகால கழக ஆட்சியில் 7 ஆயிரத்து 437 கோடியே 23 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு. உணவுதானிய உற்பத்தியில் சாதனை

2005-06-ல் உணவு தானிய உற்பத்தி 61.17 இலட்சம் டன்

2006-07-ல் உணவு தானிய உற்பத்தி 82.63 இலட்சம் டன்

2007-08-ல் உணவு தானிய உற்பத்தி 65.82 இலட்சம் டன்

2008-09-ல் உணவு தானிய உற்பத்தி 71.01 இலட்சம் டன்

2009-10-ல் உணவு தானிய உற்பத்தி 84.29 இலட்சம் டன்

தமிழக நெல் விவசாயிகளின் நிலை உயர, மத்திய அரசு நெல்லுக்கு நிர்ணயிக்கும் விலையுடன் மாநில அரசின் சார்பில் மானியம் வழங்கி விவசாயிகளுக்கு உதவி வருகிறது. அந்த வகையில்

❖ 2006-2007 இல் சாதாரணம் குவிண்டால் ஒன்றுக்கு மத்திய அரசு விலை ரூ.580 என நிர்ணயம் செய்தது; கழக அரசு அதனை ரூ.620 என உயர்த்தியது.

❖ 2007-2008இல் சாதாரணம் குவிண்டால் ஒன்றுக்கு மத்திய அரசு விலை ரூ.745 என நிர்ணயம் செய்தது; கழக அரசு ரூ.795 என உயர்த்தியது.

❖ 2008-2009இல் சாதாரணம் குவிண்டால் ஒன்றுக்கு மத்திய அரசு விலை ரூ.900 என நிர்ணயம் செய்தது; கழக அரசு ரூ.1000 என உயர்த்தியது.

❖ 2009-2010 மற்றும் 2010-2011இல் மத்திய அரசு விலை 1000 ரூபாய் என நிர்ணயம் செய்தது; கழக அரசு ரூபாய் 1050 என உயர்த்தி வழங்கியது.

❖ 2005-2006இல் அ.தி.மு.க. அரசு நெல்லுக்கு வழங்கிய கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூபாய் 600; கழக அரசு ஆண்டுக்காண்டு இதனை உயர்த்தி, 2009- 2010இல் சாதாரண நெல் விலை 1050 ரூபாய் என உயர்த்தி வழங்கி வருகிறது.

நெல் விலை - சன்ன ரகம்

❖ 2006-2007 இல் சன்ன ரகம் குவிண்டால் ஒன்றுக்கு மத்திய அரசு விலை ரூ.610 என நிர்ணயம் செய்தது; கழக அரசு அதனை ரூ.650 என உயர்த்தியது.

❖ 2007-2008இல் சன்ன ரகம் குவிண்டால் ஒன்றுக்கு மத்திய அரசு விலை ரூ.775 என நிர்ணயம் செய்தது; கழக அரசு ரூ.825 என உயர்த்தியது.

❖ 2008-2009இல் சன்ன ரகம் குவிண்டால் ஒன்றுக்கு மத்திய அரசு விலை ரூ.930 என நிர்ணயம் செய்தது; கழக அரசு ரூ.1050 என உயர்த்தியது.

❖ 2009-2010 மற்றும் 2010-2011இல் சன்னரகம் குவிண்டால் ஒன்றுக்கு மத்திய அரசு விலை ரூ.1030 என நிர்ணயம் செய்தது; கழக அரசு ரூ.1100 என உயர்த்தி வழங்கி வருகிறது. கரும்பு விலை அதேபோல கரும்பு விவசாயிகளுக்கும் கழக அரசு ஆண்டுக்காண்டு கூடுதல் விலை வழங்கி வருகிறது.

❖ 2005-2006இல் கரும்பு விவசாயிகளுக்கு அ.தி.மு.க அரசு டன் ஒன்றுக்கு வழங்கிய விலை 1014 ரூபாய்;

❖ 2006-2007இல் கழக அரசு பொறுப்பேற்றபின், கரும்பு டன் ஒன்றுக்கு மத்திய அரசு நிர்ணயித்த 802 ரூபாய் 50 காசு என்பதை 1024 ரூபாய் எனவும்,

❖ 2007-2008இல் 811 ரூபாய் 80 காசு என்பது 1034 ரூபாய் எனவும்

❖ 2008-2009இல் 811 ரூபாய் 80 காசு என்பது 1100 ரூபாய் எனவும்,

❖ 2009-2010இல் 9.5 சத சர்க்கரை பிழிதிறன் உள்ள கரும்புக்கு மைய அரசு நியாய மற்றும் ஆதாய விலையாக 1077 ரூபாய் 60 காசு என அறிவித்த போது கழக அரசு போக்குவரத்துக் கட்டணம் மற்றும் ஊக்கத் தொகை உட்பட டன் ஒன்றுக்கு 1650 ரூபாய் என வழங்கியது.

❖ 2010-2011இல் மத்திய அரசு 1391 ரூபாய் என அறிவித்த நிலையில் கழக அரசு டன் ஒன்றுக்கு 2000 ரூபாய் என உயர்த்தி வழங்கி வருகிறது.

❖ ஆதிதிராவிட விவசாயிகள் ‘தாட்கோ’ நிறுவனத்தின் மூலம் 31.3.2006 வரை பெற்ற கடன் தொகை, வட்டியுட்பட 5 கோடியே 25 இலட்சம் ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

❖ 2001-2006 அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வறட்சி காரணமாக உயிரிழந்த 19 விவசாயிகள் குடும்பங்களுக்கு 2006ஆம் ஆண்டு சுதந்திரத்

திருநாள் விழாவின்போது தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

❖ தந்தை பெரியாரின் பிறந்த நாளான 17.9.2006 அன்று திருவள்ளூரில் தொடங்கப்பட்ட நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச நிலம் வழங்கும் திட்டத்தின்கீழ் 1 இலட்சத்து 78 ஆயிரத்து 796 நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயிகள் குடும்பங்களுக்கு 2 இலட்சத்து 12 ஆயிரத்து 853 ஏக்கர் நிலம் பண்படுத்தப்பட்டு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது;

❖ 7 இலட்சத்து 74 ஆயிரத்து 386 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன;

❖ தமிழகம் தென்னை வளர்ப்பில் முதல் நிலையில் உள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் அதிக அளவில் பயிர் செய்யப்பட்டிருக்கும் ஆயுள் காலப் பயிரான தென்னையைப் பயிரிடும் விவசாயிகளின் நலனுக்காக, “தென்னை விவசாயிகள் நல வாரியம்” 27.8.2010 அன்று திரு ச. ராஜ்குமார் மன்றாடியார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

❖ உழவரும், நுகர்வோரும் பெரும்பயன் அடைந்திட 1999இல் அறிமுகப்படுத்தப்பட்ட உழவர் சந்தைத் திட்டத்தின்கீழ் 2001 மே வரை 103 உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டு மக்களின் பாராட்டுகளை ஈர்த்தன; அதன்பின் வந்த அ.தி.மு.க. அரசு உழவர் சந்தைத் திட்டத்தைச் சீரழித்திட; 2006இல் இந்த அரசு மீண்டும் பொறுப்பேற்றபின் அவற்றுக்குப் புதுப்பொலிவூட்டி நடைமுறைப்படுத்தியதுடன் புதிதாக மேலும் 50 உழவர் சந்தைகள் திறக்கப்பட்டு, தற்போது மொத்தம் 153 உழவர் சந்தைகள் சிறப்பாக இயங்கி வருகின்றன; விவசாயிகளும், பொதுமக்களும் பயனடைகின்றனர்.

❖ விவசாயிகளைச் சுயஉதவிக் குழுக்களாக ஒருங்கிணைத்து சுழல் நிதி வழங்கும் திட்டம் 2008இல் அறிமுகப்படுத்தப்பட்டு, இதுவரை 2 இலட்சத்து 7 ஆயிரம் விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்ட

35 ஆயிரத்து 924 குழுக்கள் அமைக்கப்பட்டு 30 கோடி ரூபாய் அளவிற்கு சுழல்நிதியாக வழங்கப்பட்டதுடன், 442 கோடியே 32 இலட்ச ரூபாய் பயிர்க் கடனாகவும் அளிக்கப்பட்டுள்ளது.

❖ விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில், மின்சாரம் விரயமாவதைத் தடுத்திட, சிறுகுறு விவசாயிகளுக்கு பழைய மின் மோட்டார்களுக்குப் பதிலாக இலவசமாக புதிய மின்மோட்டார்களும்; பெரிய விவசாயிகளின் பம்பு செட்டுகளில் உள்ள பழைய மின் மோட்டார்களுக்குப் பதிலாக 50 சதவீத மானியத்தில் புதிய மின் மோட்டார்களும், 5 ஆண்டுகளில் மாற்றி அமைக்கப்படும் என்றும் கடந்த சுதந்திர தின நாள் விழாவில் அறிவிக்கப் பட்டதை விரைந்து நிறைவேற்றிட ஆயத்தப்பணிகள் நடைபெறுகின்றன.

❖ ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வரும் பழைய பம்பு செட்டுகளுக்கு பதிலாக 50 சதவீத மானியத்தில் புதிய பம்பு செட்டுகள் வழங்கும் திட்டத்தில் 2006 ஆம் ஆண்டு முதல் 62 ஆயிரத்து 772 பழைய பம்பு செட்டுகளுக்கு பதிலாக புதிய பம்பு செட்டுகள் வாங்க 39 கோடியே 57 இலட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

❖ தோட்டக் கலைப் பயிர்களின் உற்பத்தித் திறனை அதிகரித்து பயிரிடும் விவசாயிகளுக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கத்தக்க வகையில் 2007-2008ஆம் ஆண்டு முதல் துல்லிய பண்ணையத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 57 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின்மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்தத் துல்லிய பண்ணையத் திட்டம் 2010-2011 ஆம் ஆண்டில் 12,500 ஏக்கர் நிலப்பரப்பில் 38 கோடியே 25 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க 65 சதவீத மானியமும், நீரில்

கரையும் உரம் எக்டருக்கு ரூ.15000 வீதமும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இத்திட்டத்திற்கான பயிற்சிகளைப் பெற ஒரு விவசாயிக்கு ரூ.1000மும் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம்

2007-2008 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் நெல் உற்பத்தியை உயர்த்தவும், திருவள்ளூர், நாகை, திருவாரூர், கடலூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, நாமக்கல், கோவை, ஈரோடு, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 12 மாவட்டங்களில் பயறுவகைகள் உற்பத்தியை உயர்த்தவும் 47 கோடியே 82 இலட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் பணிகள் நடைபெறுகின்றன. இத்திட்டத்தின் கீழ் தரமானச் சான்று விதைகள், நுண்ணூட்ட உரங்கள், பயிர்ப் பாதுகாப்புக் கருவிகள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

விதை மற்றும் உர விநியோகம்

❖ கடந்த 2006 முதல், பிப்ரவரி 2010 வரை இத்திட்டத்தில் 106 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் விவசாயிகளுக்கு 70 ஆயிரத்து 175 மெட்ரிக் டன் நெல் விதைகளும், 1493 மெட்ரிக் டன் சிறுதானிய விதைகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், எண்ணெய் வித்துக்கள் 11 ஆயிரத்து 362 மெட்ரிக் டன்கள் ஐசோபாம் திட்டத்தில் 11 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவிலும், பயறுவிதைகள் 6 ஆயிரத்து 629 மெட்ரிக் டன்கள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டு, பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.

உர விநியோகம்

2006-2007 முதல் 2009-2010 முடிய நான்காண்டுகளில் சராசரியாக 9.88 இலட்சம் மெட்ரிக் டன் யூரியா, 3.43 இலட்சம் மெட்ரிக் டன் டிஏபி, 4.99 இலட்சம் மெட்ரிக்

டன் பொட்டாஷ் மற்றும் 3.90 இலட்சம் மெட்ரிக் டன் காம்ப்ளெக்ஸ் உரமும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

❖ 2010-2011ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் வரை யூரியா 6.63 இலட்சம் மெட்ரிக் டன்னும், டிஏபி 2.172 இலட்சம் மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 3.111 இலட்சம் மெட்ரிக் டன்னும் மற்றும் காம்ப்ளெக்ஸ் 4.284 இலட்சம் மெட்ரிக் டன்னும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2007-2008ஆம் ஆண்டில் தேசிய அளவில் டிஏபி உரத் தட்டுப்பாடு நிலவிய போது, இந்தியாவிலேயே தமிழக அரசு மட்டும்தான், முதன்முதலாக டான்பெட் நிறுவனத்தினை மாநில முகமை நிறுவனமாக நியமித்து, வட்டியில்லா முன்பணமாக, டான்பெட் நிறுவனத்திற்கு வழங்கிய 30 கோடி ரூபாய் நிதியினைக் கொண்டு 2007- 2008ஆம் ஆண்டில் 1.04 இலட்சம் மெட்ரிக் டன் டிஏபி உரமும், 2008-2009ஆம் ஆண்டில் 40 கோடி ரூபாய் நிதியினைக் கொண்டு 3.13 இலட்சம் மெட்ரிக் டன் டிஏபி உரம் கொள்முதல் செய்யப்பட்டு தடையின்றி விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

❖ 2009-2010ஆம் ஆண்டிலும் டான்பெட் நிறுவனம் மூலம் 90 கோடி ரூபாய் நிதியினைக் கொண்டு இதுவரை 2.83 இலட்சம் மெட்ரிக் டன் டிஏபி உரம் கொள்முதல் செய்யப்பட்டு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் தட்டுப்பாடு இன்றி விநியோகம் செய்யப்பட்டது.

❖ 2010-2011ஆம் ஆண்டிலும் டான்பெட் நிறுவனம் மூலம் 90 கோடி ரூபாய் நிதியினைக் கொண்டு இதுவரை 2.17 இலட்சம் மெட்ரிக் டன் டிஏபி உரம் கொள்முதல் செய்யப்பட்டு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் தட்டுப்பாடு இன்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இராஜராஜன் 1000 சாகுபடி

❖ தஞ்சையில் இராஜராஜனின் 1000வது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடிய போது, அதிக மகசூல் தரக்கூடிய புதிய நெல் தொழில் நுட்பத்திற்கு அந்த

மாமன்னன் நினைவாக “இராஜராஜன் 1000” என என்னால் பெயர் சூட்டப்பட்டது.

❖ 2006-2007 ஆம் ஆண்டில் 4 ஆயிரத்து 688 ஏக்கரில் செயல்படுத்தப்பட்ட இராஜராஜன் 1000 தொழில்நுட்ப சாகுபடி முறை நீர்ப்பயன் பாட்டைக் குறைத்து நெல் உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது என கண்டறியப்பட்டதால் 2007-2008ஆம் ஆண்டில் 10 இலட்சத்து 52 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இத்தொழில்நுட்பம் கடைப்பிடிக்கப்பட்டது.

2007ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நிலவிய வறட்சி மற்றும் டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவும், 2008ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளத்தாலும், 5 இலட்சத்து 95 ஆயிரம் ஏக்கர் நெற்பரப்பு பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக தேசிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 282 கோடியே 63 இலட்சம் ரூபாய் இழப்பீடாகவும், தேசிய பேரிடர் நிவாரண நிதியின்கீழ் 213 கோடியே 80 இலட்சம் ரூபாய் நிவாரணமாகவும், ஆக மொத்தம் 496 கோடியே 43 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

2008-2009 ஆம் ஆண்டில், 13 இலட்சத்து 45 ஆயிரம் ஏக்கர் பரப்பில் இத்தொழில் நுட்பம் கடைப்பிடிக்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட நிஷா புயலினால், நிகழ்ந்த வெள்ள பாதிப்பால் 20 மாவட்டங்களில் 11 இலட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நெல் பரப்பு பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, தேசிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 651 கோடியே 66 இலட்சம் ரூபாய் இழப்பீடாகவும், தேசிய பேரிடர் நிவாரண நிதியின்கீழ் 375 கோடியே 48 இலட்சம் ரூபாய் நிவாரணமாகவும் ஆக மொத்தம் 1027 கோடியே 14 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இருப்பினும், கடந்த ஆண்டை விட 2008-2009ஆம் ஆண்டில் கூடுதலாக 2 இலட்சத்து 93 ஆயிரம் ஏக்கரில் இராஜராஜன் 1000 தொழில்நுட்பத்தைப் பின்பற்றிய காரணத்தால் அரிசி உற்பத்தியில் பின்னடைவு ஏதுமில்லாமல் 51 இலட்சத்து 83 ஆயிரம் மெட்ரிக் டன்

பெற முடிந்தது. இயற்கை சீற்றத்தினால் கூடுதலான பரப்பு பாதிப்புக்கு உள்ளானபோதும் உற்பத்தி அதிகமாக பெற முடிந்தது.

❖ இராஜராஜன் 1000 தொழில்நுட்பத்தினால் 30 முதல் 40 சதவீதம் மகசூல் அதிகரித்துள்ளதை உலக வங்கி நிதியின்கீழ் செயல்படுத்தப்படும் நீர்வள, நிலவளத் திட்டத்தின் குழு ஆய்வு அறிக்கை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

❖ இராஜராஜன் 1000 திட்டத்தின்கீழ், இதுவரை 3 இலட்சத்து 63 ஆயிரம் கோனோகளையெடுக்கும் கருவிகளும், 2 இலட்சத்து 43 ஆயிரம் மார்க்கர்களும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

(தொடர்ச்சி - நாளை) அன்புள்ள, மு.க. 4-03-2011

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 44 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065830_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_44.pdf; PDF பக்கம் 338–349. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 44-இல் மேலும் கடிதங்கள்