பொருளடக்கம்

21. வியாதிக்கு விருந்தா?

கட்டுரை 21 / 50

வியாதிக்கு விருந்தா?

A Feast for Disease?

அச்சுப் பக்கம் 94–96

scan 94 shows no printed numeral

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

சிலரால் சில பழக்கங்களை நிறுத்த முடியாது. புத்தகம் படிக்கும்போது, அதன் பக்கத்தைப் புரட்டி அடுத்த பக்கம் படிப்பதற்கு புத்தகத்தின் தாளை வெறுமனே புரட்டாமல் விரலை நாவிலோ அல்லது உதட்டிலோ தோய்த்து அந்த உமிழ்நீர் ஈரத்தின் உதவி கொண்டேதான் தாளில் விரலைத் தோய்த்து பக்கத்தைப் புரட்டுவார்கள்.

வாசிப்பதற்காக அந்தப் புத்தகத்தை எடுப்பதற்கு முன்பு அது நூல் நிலையத்திலோ அல்லது வீட்டு அலமாரியிலோ தூசிப் படலத்தின் நடுவே இருந்திருக்கக் கூடும்.

எனவே தூசி படிந்திருப்பது; கண்ணுக்குப் புலப்படாமலேயிருக்கிற அந்தப் பக்கத்தில் படுகிற ஈரமான விரலில் அந்தத் தூசி பற்றிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

அப்படிப் பற்றிக் கொண்ட தூசு; மீண்டும் அந்த விரல், அடுத்த பக்கத்தைப் புரட்டும்போது, அந்தத் தாளில் ஒட்டிக் கொள்ளக் கூடும். அப்படி ஒட்டும் பகுதி, தொற்று நோய்க் கிருமி சுலபமாக ஏறிச் சவாரி செய்கின்ற அளவுக்கு வாகன வசதிகளை வழங்கக் கூடியதாக ஆகிவிடவும் கூடும். கண்ணுக்குத் தெரியாமல் கருத்துக்குப் புலப்படாமல் ஏதோ ஒன்று அரிப்பாகத் தினவெடுத்து; மெல்ல மெல்லத் தொல்லை கொடுத்து, மருத்துவர்கள் பின்னர் அந்த நோய்க்குப் பெயரும் சூட்டுவார்கள்.

தாளைப் புரட்ட விரலில் தண்ணீரைத் தொட்டுக் கொள்ள அலுப்பு - விரைந்து விரலால் நாக்கில் உமிழ்நீரைத் தொட்டுக்

கொள்ள சுலபமாக முடிகிறது. ஆனால் அது தீமையில் முடிந்தால் திண்டாட வேண்டியிருக்கிறது.

வேறு சிலரோ விரலையோ அல்லது விரல்களையோ அக்குளில் வைத்து அழுக்கைத் திரட்டுவார்கள். அப்படிச் செய்வது; ஆழ்ந்த தூக்கத்தில் செய்வது போல மெய்மறந்த நிலையில் இருக்கும். அக்குளில் திரட்டப்பட்ட அழுக்கை இரு விரல்களால் உருட்டுவார்கள். அப்போதும் மெய்மறந்த இன்பத் தோற்றம்தான்! உருட்டப்பட்ட அந்த அழுக்கை மூக்கின் முன்னே கொண்டு போய் அதன் வாசனையை நுகர்வார்கள். பிறகு அந்த அழுக்கு உருண்டையை எப்போது கீழே போடுவதென்பது அவர்களது விருப்பத்தைப் பொறுத்தது.

நினைவிருக்கட்டும், அதே அழுக்குத் தோய்ந்த விரல்களைக் கொண்டுதான் நாவையும் தடவி அந்த எச்சிலைப் பயன்படுத்தி, புத்தகத்தில் லேசாக ஒட்டிக் கொண்டிருக்கிற பக்கங்களைப் பிரித்துப் படிப்பார்கள் என்கிறபோது; வியாதிக் கிருமிகளை விருந்துக்கு அழைத்தது போன்ற விபரீதம் ஏற்படுவது இயற்கைதானே!

புத்தகத் தாள்களை, உமிழ் நீரில் விரல்களை நனைத்துப் புரட்டுவதை விடத் தீமை பயப்பது என்னவெனில் - சில நேரங்களில் விழா ஒன்றுக்கான அழைப்புகளோ அல்லது மணவிழா மடல்களோ - அல்லது வார நாளிதழ்களோ அஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கப்படுவதற்கு அத்தனை தபால் தலைகளையும் - அதன் பின்புறத்தில் உள்ள பசையை நொடியளவே நாவினால் நக்கி நனைத்து ஈரமாக்கி அவற்றை அவற்றுக்கான உறைகளில் அப்படியே பதிய வைப்பதுதான். அதைவிட நச்சுத் தன்மை வாய்ந்த ‘தொற்று’ வேறு என்ன இருக்க முடியும்!

நூற்றுக்கணக்கான அஞ்சல் தலைகளின் பசை தோய்ந்த மறு பக்கத்தை நாக்கினால் தடவி ஈரமாக்கிக் கொள்வதால் எத்தகைய நச்சு நோயும் தொற்றிக் கொள்ளும் நிலை தாராளமாக ஏற்படும். தபால் தலைகளின் பின்புறப் பசையை மட்டும் அல்லாமல்; தபால் உறைகளின் ஒட்டுகிற பகுதியைச் சிலர்

மிகுந்த ஆர்வத்துடன் நாவினால் ஈரமாக்குவதைக் கவனித்தால் ‘மோர்சிங்’ வாத்தியம் வாசிப்பது போலக் கூட இருக்கும்.

இவ்வளவுக்கும் காரணம் என்ன ? தூய்மையாக இருக்க வேண்டும் என்ற அக்கறை இருந்தாலும்கூட; அஞ்சல் தலையில் ஈரம் சேர்க்கத் தண்ணீர் கொண்டு வர வேண்டுமே - அதற்கு ஒரு குவளை வேண்டுமே - அதற்காகத் தண்ணீர் இருக்குமிடம் செல்ல வேண்டுமே - இந்த நினைவினால் ஏற்படும் சோம்பல்தான் முக்கியமான காரணம் -

நம்முடைய உடம்புதான் - அதற்காக அக்குளில் விரல்களை வைத்துத் தேய்த்துத் தேய்த்து உருட்டியெடுக்கும் அழுக்கைத் திரட்டியெடுத்து அன்னை பார்வதி தேவியார், விநாயகர் உருவம் ஒன்றைச் செய்து அதைக் காவல் தெய்வமாகத் தனது அரை வாசலில் அமர்த்தியதுபோல் நாமும் அமர்த்த முடியுமா ? ‘தெய்வீக’ அழுக்கிற்கும் மனித அழுக்கிற்கும் உள்ள வித்தியாசத்தை உணர வேண்டாமா ? மனித அழுக்கு, துர்நாற்றம் மூக்கைத் துளைக்கிறது! இந்த அழுக்கு, உமிழ் நீரோடு - உதட்டோடு - நாக்கோடு கலந்தால்; உயிருக்கே ஊனம் விளைகிற அளவுக்கு (Infection) தொற்றுக் கிருமிகள் தொற்றிக் கொள்ளாதா எனக் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். ‘தெய்வீக’ அழுக்கைப் பற்றி தெளிவான கணிப்பு எதுவும் கிடையாது. நாம் இப்பொழுது மனித நலம் பற்றியே கவலைப்படுவதால்; அவர்களுக்குத் தேவையானதை - தக்கதை மட்டும் சொல்ல வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.

அக்குளில் விரல் கொண்டு தேய்ப்பது மட்டுமல்ல; ஏதாவது ஓர் அங்க சேட்டை மனிதருக்கு இருக்கும் - சிலர் உதட்டை அடிக்கடி கடிப்பார்கள் - சிலரது கண்கள் இமைத்துக் கொண்டேயிருக்கும்; அளவுக்கு அதிகமாக! அடிக்கடி! அவரெல்லாம் அவசியம் மருத்துவர் ஆலோசனைகளைப் பெறவேண்டும்.

சிலர், தொண்டையில் காறிய சளியை ஒரு ஓரமாக உடனே தூப்பி விடாமல், வாயில் வைத்துக் குதப்பிக் கொண்டே பிறருடன் பேசிக் கொண்டிருப்பார்கள். அதைக் கேட்போர் முகத்தில்

விளக்கெண்ணெய் வடிவும் - விரைவில் அவர் விடைபெற்றுக் கொள்ளமாட்டாரா என்று ஏங்கித் தவிப்பார்கள் சிக்கிக் கொண்டவர்கள். சிலரது அங்கசேட்டைகள்; ரசிக்கும்படியாகக்கூட இருக்கும் - ஆனால்; அக்குளில் தொடங்குவது அழுக்குச் சேமிப்பு ஆலையாக உருவெடுக்கிறபோதுதான் ஆபத்து தொடங்குகிறது என நாம் அறிவுறுத்த வேண்டியிருக்கிறது.

7 - 8 - 2005

★★★

கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்