பொருளடக்கம்

22. விளையாட்டு

கட்டுரை 22 / 50

விளையாட்டு

Sport

அச்சுப் பக்கம் 98–99

scan 98 shows no printed numeral

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

விளையாட்டாகக் கருதிக் கொண்டு இராமன், தனது இளமைப்பிராயத்தில் அயோத்தி அரண்மனைப் பூங்காவில் கூனியின் முதுகில் களிமண் உருண்டைகளைக் கொண்டு அடித்தான். அது கூனிக்கு வலித்ததோ இல்லையோ அவளுக்கு இராமன் மீது ஏற்பட்ட ஆத்திரம்தான் அவனது பட்டாபிஷேகத்தையே கைகேயி மூலமாகத் தடுப்பதற்குக் காரணமாயிற்று என்று கதை சொல்வார்கள், கதை முடிவில், “விளையாட்டு வினையாகும்” என்பது இராமன் விஷயத்தில் எவ்வளவு உண்மையாகிவிட்டது பாருங்கள் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்குவார்கள்.

அதாவது இராமாயணத்தில் விளையாட்டுத்தனமான செயலுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட அந்தப் பழமொழி; இந்திய நாட்டின் எல்லாக் கிராமங்களிலுமுள்ள இளைஞர்களைப் பயமுறுத்தும் மொழியாகி; நமது விளையாட்டுக் குழு எதுவாயினும் அது, வெளிநாடு ஒன்றில் வெற்றி பெற்றது - விருது பெற்றது - என்றோ; அல்லது வெளிநாட்டு விளையாட்டு அணியொன்று இங்கே தோல்வியுற்றுத் திரும்பியது என்றோ; செய்தி வருவதென்பது குதிரைக் கொம்பாகவே ஆகிவிட்டது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் ஒலிம்பிக் பந்தய விளையாட்டுப் போட்டிகளில், இருபது பதக்கங்களை, முப்பது பதக்கங்களை அள்ளிச் செல்வதைக் கண்டு அந்த மகிழ்ச்சிகரமான நிலை, இந்திய நாட்டில் எப்போது வாய்க்கும் என்று ஏக்கப்பெருமூச்சல்லவா விட்டுக் கொண்டிருக்கிறோம்.

கால்பந்து, கைப்பந்து, டென்னிஸ், ஹாக்கி என எந்தவொரு ஆட்டமாயினும் அல்லது தொலைவுக் கணக்கு ஓட்டமாயினும்

‘ஒலிம்பிக்’கில் சேர்க்கப்படாத ‘கிரிக்கெட்’ ஆட்டம் தவிர்த்த உலகத் தரம் வாய்ந்த விளையாட்டுப் போட்டிகளில்கூட, நாம் பெறும் வெற்றிகளின் அளவு, நம்மை உற்சாகப் படுத்துவதாயில்லை. ஒவ்வொரு போட்டிகளையும் போட்டி முடிவுகளையும் வேடிக்கை பார்ப்பதற்கு அரங்குகளில் இந்திய தேசியக் கொடிகளுடன் குவிந்திருக்கும் நாட்டுப் பற்று மிகுந்த இளைஞர்கள்; நமது தேசத்து விளையாட்டு அணிகள் தோல்வியுற்றுத் திரும்பும்போது தங்களின் முகங்களையும் கொடிகளையும் தொங்கப் போட்டுக் கொண்டு, பார்வையாளர் பகுதிகளிலிருந்து வெளியேறும்போது, அதைத் தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருக்கும் நம்மை வெட்கம் பிடுங்கித் தின்பதையும், வேதனை, நம் இதயத்தைப் பிராண்டி இரத்தம் கசிவதையும் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் அல்லவா துடித்துப்போக வேண்டியுள்ளது.

ஏதன்ஸ் நகரில் - “நவீன ஒலிம்பிக்” ஆரம்பமான 1896 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் நாம் நமது கை விரல்கள் அனைத்தையும் விட்டு எண்ணக் கூடிய அளவுக்கு தங்கமோ, வெள்ளியோ, அல்லது தரத்தில் அவற்றுக்கும் குறைந்ததான எந்தப் பதக்கங்களையோ; பெற்றிருக்கிறோம் எனப் பெருமிதம் கொள்ள முடிந்திருக்கிறதா ?

பத்து கோடிக்கும் குறைவான - இரண்டு கோடிக்கும் குறைவான - அவ்வளவு ஏன்; சில இலட்சங்கள்தான் எனப்படும் - மக்கள் தொகை கொண்ட நாடுகள் எல்லாம்கூட வெளிநாட்டில் ஆயினாலும் - உள்நாட்டிலேயே வெளிநாட்டு விளையாட்டுக் குழுவினரை எதிர்கொண்டாலும் நிச்சய வெற்றிக்கு உத்திரவாதம் என்று உறுதி கூறி விட்டு அதனைச் செயலிலும் காட்டும்போது; நம் நாட்டு விளையாட்டுக் குழுவினர் மட்டும் வெளி நாட்டாருக்கு அறைகூவல் விடுப்பதிலும் குறைவில்லை; முடிவில் அறைக்குள் உட்கார்ந்தபடி அழுது தீர்ப்பதிலும் குறைவில்லை என்கிற பரிதாப நிலைக்கு ஆளாகிறார்கள் என்றால்; நூறு கோடி மக்கள் தொகை கொண்ட இந்தப் பெரிய நாட்டில் வலிவும் திறனும் கொண்ட விதவிதமான விளையாட்டுக் குழுக்களை கடலிலிருந்து முத்தும் பவளமும் எடுப்பது போலத் தேர்வு செய்து எடுத்திட முடியாதா ?

இன்றைக்கு முடியுமா ? நாளைக்கு முடியுமா ? இந்த ஆண்டுக்குள் முடியுமா ? என்றெல்லாம் மலைத்து நிற்காமல்; என்றைக்கோ ஒருநாள் முடிந்தே தீர வேண்டும் - என்ற முனைப்புடன் செயல்பட்டால் எதுவுமே முடியக்கூடியதுதான்! தேவையான ‘நல்லது’ என்றால் முடிய வேண்டியதுதான்!

நம் வீட்டுப் பிள்ளையை வளர்த்து, பள்ளிக்கு, அனுப்பி வைப்பதுடன் கடமை முடிந்துவிட்டதாகப் பெற்றோர் கருதாமல்; நல்ல கல்வியாளர்களை மட்டுமல்லாது; வல்லவர்களான விளையாட்டு வீரர்களையும் தயாரித்து நாட்டுக்கு வழங்கிட முன்வர வேண்டும். அந்த வீரர்களைத் தேர்வு செய்து குழுக்களை அமைக்கும்போது; நாட்டின் ஒரு பகுதிக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்காமல்; எல்லாப் பகுதிகளுக்கும் அந்த வாய்ப்பு பகிர்ந்தளிக்கப்படுதல் வேண்டும். இதில் பொறுப்பேற்றிருப்பவர்களுக்கோ, பொறுப்புக் குழுக்களுக்கோ நாட்டுப்பற்று ஒன்றுதான்; நெஞ்சில் நிறுத்தப்பட்டு நாலாதிசையும் ஒளி பரப்புகிற கலங்கரை விளக்கமாக அமைய வேண்டுமே தவிர; தன்னை மட்டும் உயர்த்திக் கொண்டால் போதுமென்ற குறுகிய பார்வை கொண்ட குடத்து விளக்குகளால் பயனேதும் விளையாது!

அரசு அலுவலர்களாக ஆசிரியப் பெருமக்களாக இருக்கும் பெற்றோர்கள்; முதலில் இதில் கவனம் செலுத்தி தங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் கிராமங்களின் தெருவில் மற்றும் திடலில் விளையாடுவதென்றாலும், நகரங்களில் மைதானங்களில் விளையாடுவதென்றாலும்; அவற்றில் தூய்மைக்கும் உரிய இடம் அளித்திடவும் - ஏனைய பெற்றோர்களும் இவர்களைப் பின்பற்றித் தொடர ஊக்கம் வழங்கிடவும் - ஊரில் பெரியவர்களும், நகரப் பிரமுகர்களும், அதற்கான சகல வசதிகளும் செய்து கொடுக்கவும் முணுமுணுப்பின்றி முன்வந்தால்; விளையாட்டுத் துறையில் நம்நாடும் வெற்றிகளை ஈட்டியவாறு முன்னுக்கு வரும் என்பதில் ஐயமில்லை!

9 - 8 - 2005

★★★

கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்