கட்டுரை 23 / 50
தன்னை வெல்வான்
He Who Conquers Himself
அச்சுப் பக்கம் 101–102
scan 101 shows no printed numeral
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
“சோதிடம் பொய்யல்ல; சோதிடர்கள்தான் பொய் சொல்லி விடுகிறார்கள்” என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. அந்த வாதத்தை வலுப்படுத்தப் பல எடுத்துக்காட்டுகளும் கூறப்படுகின்றன.
“சோதிடம், ஆரூடம் என்பவைகள் எல்லாம் ஒரு கணக்கே தவிர வேறு ஒன்றுமில்லை. கிரகங்களின் நிலையை வைத்துக் கணிக்கப்படுபவை. அந்தக் கணக்கில் ஓர் இம்மி தவறினாலும் சொல்லுவது பலிக்காமல் போய்விடும். பாருங்கள் பக்கத்துக் கிராமம் மிட்டாதார் இருந்தாரே; பல நூறு ஏக்கரா நிலமும் - பாங்குகளில் ஏராளப் பணமும் - பாட்டன் பூட்டன் காலத்திலேயிருந்து பரம்பரை பரம்பரையாக இருந்த சொத்து; பட்டினத்துக்குக் குடிபோனார் - எப்படித்தான் எல்லா சொத்தும் அழிந்ததோ - இப்போது ஒரு தனியார் கம்பெனியில் குமாஸ்தா வேலை பார்த்து குடும்பம் நடத்துகிறார். இப்படி நடக்குமென்றும் - அவர் சீட்டாட்டம்; குதிரைப் பந்தயம் என்று ஆடி எல்லாவற்றையும் இழப்பார் என்றும் அவர் ஜாதகத்திலேயே முன்கூட்டியே கணிக்கப்பட்டு எழுதியும் வைக்கப் பட்டிருப்பதைத் தன்னிடமே காட்டினார்கள் என்றும், தானே அதைப் படித்துப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனேன் என்றும் நாமும் நம்புகிற அளவுக்கு நம்மிடமே சொல்கிறவர்கள் உண்டு. அந்த மிட்டாதார் வாழ்க்கை ஏட்டில் எதிர்காலப் பயன் என்ற குறுந்தலைப்பில் அத்தகைய நிகழ்வுகளை முன்கூட்டியே சங்கேத வார்த்தைகளில் குறிப்பிடப்பட்டிருக்கவும் கூடும்”
இவ்வளவையும் நான் கண்ணை மூடிக் கொண்டு இல்லையென்று மறுக்கவில்லை, மறுத்தே தீர வேண்டும் என்ற பிடிவாதமில்லாமல், நான் எடுத்துவைக்கும் நியாயமான வாதமெல்லாம்; இப்படி முன்கூட்டி நம் ஜாதகப் பலனைத் தெரிந்து கொள்வதால் என்ன நன்மை என்பதுதான்! “அந்த மிட்டாதார், சூதாட்டங்களில் ஈடுபடாமல் எச்சரிக்கையாக இருந்து விடலாமல்லவா?” என்று கேட்கத் தோன்றும். ஆனால் அது எப்படி முடியும்? அவரது ஜாதகப்படி அவருக்கு சூதாட்ட மோகம் ஏற்படும் என்று இருக்கும்போது; அதனால் பெரும் பொருள் இழப்பு ஏற்படும் என்று அந்த மிட்டாதார் பிறந்த நேரத்து ராசி பலன்கள், கிரக நிலைகள் எல்லாம் அழுத்தமாக வரையப்பட்டு இருக்கும்போது அந்தக் கோடு தாண்டி; அவர் செயல்பட அவரது ஜாதகம் அவரை விட்டு விடுமா?
அவருக்கு ஒரு குறிப்பிட்ட வயதில் சூதாட்ட மோகம் ஏற்படும் - அதனால் பொருள் இழப்பு நேரிடும்; என்பதை முன்கூட்டியே அந்த ஜாதகம் சொல்லியிருக்குமானால் - அந்த ஜாதகப்படி இப்படிப்பட்ட ஓர் எச்சரிக்கை செய்யப்பட்டு; அவர் நல்வழியை மேற்கொண்டு தப்பித்து விடுவார் என்றும் கூறப்பட வேண்டுமல்லவா?
அவ்வாறு தப்பித்து விடுவார் என்று ஜாதகத்திலே இருக்குமானால்; அது தானாகவே நடக்க வேண்டிய ஒன்றுதானே! அது ஆரூடக்காரரால் முன்கூட்டி அறிவிக்கப்படவேண்டிய அவசியம் எதுவும் இல்லையல்லவா? அப்படியானால் ஆரூடக்காரர் முன்கூட்டியே அறிவித்து; அதன்படி அந்த மிட்டாதார் தன்னைக் காப்பாற்றிக் கொள்வார் என்றும் அந்த ஜாதகத்தில் இருக்க வேண்டுமல்லவா? என்ற கேள்விக்கு விளக்கம் கிடைக்காமலே போய்விடுகிறதே!
தன்னை ஜாக்கிரதைப்படுத்திக் கொண்டு, மிட்டாதார், தவறான வழிக்குச் செல்லாமலே இருந்து விடுவாரேயானால் அதுவும் அந்த ஜாதகத்தில் அப்படியே இடம் பெற்றிருக்க வேண்டும். இடம்பெறாதபட்சத்தில் ஜாதகம் பற்றிய நம்பகத் தன்மைக்கு ஆதாரமில்லாமலேதானே ஆகிவிடுகிறது.
நடப்பதும்; நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விடுவதும் - நடப்பதைத் தடுப்பதும் - தடுத்தால் நடக்காமல் இருப்பதும்;
ஜாதகப்படியேதான் என்றால்; பிராயச்சித்த வேண்டுதல்களும், ‘தோஷம்’ கழித்தல்களும் விழலுக்கிறைத்த நீராக வீணாகி விடத்தானே செய்யும்! அதற்காக யாரும் அலட்டிக்கொள்ளத் தேவையில்லையே!
அலட்டிக் கொள்வோமா; மாட்டோமா என்பதையும், ஜாதகம் தானே சொல்லும். அது சொல்வதற்கு மாறாக நிகழ்ச்சிகள் நடந்தால் பிறகேன் ஜாதக நம்பிக்கை?
அதே மிட்டாதார் இன்னும் ஓராண்டு மட்டுமே உயிரோடு இருப்பார்; அதற்குள் ஒரு நாள் திடீரென மாரடைப்பால் அவருக்கு மரணம் சம்பவிக்கும் என்று ஜாதகம் கூறிவிடுமானால்; நாள்தோறும், நிமிடந்தோறும் அவர் அதையே நினைத்து நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டுதானே இருப்பார் - நான் முதலில் குறிப்பிட்டிருப்பதுபோல ஜாதகம் நம்பிக்கைக்குரியது என்று ஒருவேளை ஏற்றுக் கொண்டாலும்; அதைக் கேட்டு முன்கூட்டியே தெரிந்துகொள்வதும், அதே கவலையால் உண்மையில் உடல் நலிவு ஏற்படுவதும் தேவையா? என்ற கேள்வி இப்போது விசுவரூபம் எடுக்கிறதா இல்லையா?
எனவே நான், நட்சத்திரம், ராகு காலம், குளிகை காலம் என்றும்; அமிர்தயோகம் - மரண யோகம் என்றும்; எந்த வீட்டில் குரு இருக்கிறான் - எந்த வீட்டில் சந்திரன் இருக்கிறான் - எந்த வீட்டில் சூரியன், சுக்கிரன் இருக்கிறான் என்றெல்லாம் - மூளையைக் குழப்பிக் கொண்டு ஆயுட் காலத்தில் இடையிலேயே ஒரு பகுதியை வீணாக்காமல்; சோதிடம், ஜாதகம் என்ற நம்பிக்கைகளில் ஆழ்ந்து தேவையற்ற உணர்வு அலைகளால் இரத்த அழுத்தம் மாறுபட்டு பிரச்சினையாகாமல்; மூளையிருப்பது உலகில் புதுமைகளைப் படைப்பதற்காக எனவும், அதற்கேற்ப உடல் நலமும், சூழ்நிலை வளமும் அமைந்திடவேண்டுமெனவும், அந்த முறையில் தன்னை வெல்வானுக்கு, தரணியையே வெல்லும் அறிவும் ஆற்றலும் கூடிவருமெனவும் நிறைந்த நம்பிக்கையோடு வாழ்பவர்கள், ஆரூடம் ஜோதிடம் போன்றவற்றைக் கட்டிக் கொண்டு அழமாட்டார்கள்!
11 - 8 - 2005
★★★
கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்