கட்டுரை 24 / 50

இட்லர்

Hitler

அச்சுப் பக்கம் 104–107

scan 104 shows no printed numeral

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

பொதுவாக ஏதேச்சாதிகாரிகளைப் பற்றியும், சர்வாதிகாரிகளைப் பற்றியும் வர்ணிக்கப்படும் பொழுது அவர்களைப் பற்றிய குரூர சித்திரங்கள் மட்டுமே தீட்டப்படுவது வழக்கம். 1889ல் பிறந்தவனும், 1920 ஆம் ஆண்டு ‘நாஜி’ கட்சியிலே இணைந்து 1935ல் சர்வாதிகாரியாகி, 1945ஆம் ஆண்டு வரை உலகத்தையே நடுங்க வைத்த யுத்த வெறியன் என்று பட்டம் சூட்டப்பட்டவனுமான இட்லரின் வரலாற்றுப் பக்கங்களும் நடுங்கத்தக்க வகையிலேதான் இருக்கக் கூடுமென்று கருதுவது இயல்பேயாகும். அதற்கு மாறாக கொடியோன் என்று இந்தக் குவலயமே தூற்றும் இட்லருடைய வாழ்வின் மறுபக்கம் அமைந்திருப்பதை “ஹிட்லர் - முதல் உலகப் போர்” எனும் புத்தகத்தைப் படிக்கிறபோது தெரிந்து கொள்ள முடிகிறது.

“ஜாமனி எங்கே? ஹிட்லருக்குப் பின்னாலே சென்று கொண்டிருக்கிறது. ஹிட்லர் எங்கே? ஜாமனிக்கு முன்னாலே மிடுக்காகப் போய்க் கொண்டிருக்கிறான்”

என்ற புகழ்வரிகளுக்கு, கம்பீரமான சொந்தக்காரனாக ஒருகாலத்தில் விளங்கிய அடால்ப் இட்லரைப் பற்றி நான் அந்தப் புத்தகத்தில் படித்தறிந்ததை எல்லோரும் அறிய வேண்டும் என்பதற்காக அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் திரு. வெ. சாமிநாத சர்மா அவர்களின் வார்த்தைகளின் வடிவத்திலேயே குறிப்பிடுகிறேன்.

“அடால்ப் இட்லர் குழந்தைகளிடத்தில் அவை யாருடைய குழந்தையாயிருந்தாலும் மிக அன்பாகப் பேசுவான்; அவைகளோடு வேடிக்கை செய்வான்; ஓடி விளையாடுவான். குழந்தைகளிடத்தில் இவன் வைத்திருக்கும் அபாரமான பிரீதியைக் கண்டே, தேச மக்கள், இவனுடைய 47வது பிறந்த தினக் கொண்டாட்டத்தின்போது, (20-4-1936) சுமார் ஆயிரம் தொட்டில்கள் வாங்கிக் கொடுத்தனர். இவையனைத்தையும் இவன் ஏழைக்குழந்தைகளின் உபயோகத்திற்குக் கொடுத்துவிடுமாறு உத்தரவு செய்தான்.

ஹிட்லர் ஒழுக்கத்தில் சிறந்தவன். அதனாலேயே இவனிடத்தில் தன்னம்பிக்கையும், கண்டிப்பும் நிரம்பியிருக்கின்றன. இவன் சிகரெட் முதலியன உபயோகிப்பதில்லை; மதுபானம் அருந்துவதில்லை; மாமிசத்தைக் கையினால் தொடுவதுமில்லை. இவன் உண்ணும் மாத்திரி ஆகாரமும் சாதாரண குடியானவர்களின் ஆகாரவகை போலவே இருக்கும். பல தினுசுகள் இரா. ரொட்டி, பழம், பால், பருப்பு தினுசில் ஒன்று ஆகிய இவற்றோடு இவன் திருப்தியடைந்துவிடுவான். இந்த எளிய உணவையும் இவன் தனியாக உட்கார்ந்து சாப்பிட மாட்டான். யாராவது இரண்டொரு நண்பர்களை விருந்தினர்களாக வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவான்.

பெண்களிடத்தில் மிக அன்பாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்வான். தாய்மைக்குச் சட்டப்பூர்வமான ஒரு கெளரவ ஸ்தானம் கொடுத்திருப்பதைக் கொண்டே இவன் பெண் உலகத்தின்மீது காட்டும் பக்தி புலனாகும்.

சங்கீதம், ஓவியம் முதலிய உயர் தரக் கலைகளில், தன் மனத்தை அப்படியே ஒப்புக் கொடுத்துவிடுவான். நாடகங்கள் பார்ப்பதிலே இவனுக்கு அதிக ஆசையுண்டு. வாக்னர்; பீத்தோவன் முதலியோரின் பாடல்களிலே

இவனுக்கு அதிக பிரேமை உண்டு. அவற்றை யார் பாடினாலும் மெய்மறந்து கேட்பான். அச்சமயத்தில் தன் பதவி கெளரவத்தையும் கவனிக்கமாட்டான். பாட்டு முடிந்தவுடன், பாடியவரைக் கட்டித் தழுவிக் கொள்வான்.

ஹிட்லர், பிறருடைய தயவுக்காகவோ, தாட்சண்யத்திற்காகவோ எதையும் செய்யமாட்டான். சிறப்பாக, பொதுப் பணத்தைக் கையாளும் விஷயத்தில் மிகவும் சிக்கனமாகவும் கண்டிப்பாகவும் இருப்பான். 1923ஆம் வருஷத்து நவம்பர் புரட்சியின்போது, இவனோடு மாறுபட்ட வான்கார் என்பவனே, “நான் ஹிட்லரோடு எல்லா விஷயங்களிலும் ஒற்றுமையான அபிப்பிராயங் கொள்ளவில்லை. ஆனாலும் அவன் மிகவும் நாணயஸ்தன் என்பதை நான் மறுக்க முடியாது” என்று கூறுகிறான்.

அரசாங்க தோரணையிலோ, தனி முறையிலோ, ஹிட்லருடன் யாராவது பேச வருவார்களானால் அவர்களை எழுந்து நின்றே வரவேற்பான். அவர்கள் விடைபெற்றுச் செல்லும்போது, கூடவே தொடர்ந்து சிறிது தூரம் வந்து வழிவிடுவான்; தலை வணங்கி வந்தனம் கூறுவான். இவனுடைய உடை, பாவனை ஆகிய இரண்டையும் பார்த்தால், சாதாரண ஒரு கடைநிலை உத்தியோகஸ்தனுக்கும் இவனுக்கும் எவ்வித வேற்றுமையும் காணப்பட மாட்டாது. மற்றெல்லா வகையிலும் போலவே, உடையிலும் இவன் ஆடம்பரமில்லாதவனே.

இவனைத் தரிசிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் பல தூரப் பிரதேசங்களிலிருந்து, ஆண், பெண், சிறுவர், வயோதிகர் பலரும் நூற்றுக்கணக்காக வந்து கூடுவார்கள். ஹிட்லர் எந்தச் சமயம் வெளியே வந்து காட்சி கொடுப்பான் என்று மணிக்கணக்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள். பனி, வெயிலையும் பார்க்கமாட்டார்கள். ஹிட்லர், அடிக்கடி வெளியே வந்து, இவர்களுக்கு முன்னால் தோன்றுவான்; சிலபேரோடு கலந்து பேசுவான்; சிலரைக் கைகுலுக்கிப் பெருமைப்படுத்துவான்.

ஹிட்லர் எதையும் கூர்ந்து கவனிப்பான்; ஆழ்ந்து படிப்பான்; படித்தவற்றுள் முக்கியமானவற்றை அவ்வப்பொழுது குறித்துக் கொள்வான். முசோலினியைப்போல் இவன் பெரிய படிப்பாளி என்று சொல்ல முடியாது. ஆனால் அனுபவஞானம் இவனுக்கு நிரம்ப உண்டு. இவன் ஜனங்களின் மனிதன். பாமர ஜனங்களை வசியப்படுத்தும் ஆற்றல் இவனுக்கு இருப்பதைப்போல் வேறெவருக்கும் இல்லையென்று சொல்லப்படுகிறது.

ஜார் பிரதேசம், ஜர்மனியிடம் ஒப்புக் கொடுக்கப்பட்ட தினத்தன்று (1-3-1935) இவன் ஜார்ப்ரூகெனுக்குத் திடீரென்று வந்தானல்லவா? அன்று நல்ல மழை. ஆனால் ஹிட்லரைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலினால், லட்சக்கணக்கான ஜனங்கள், வீதிகளில் மழையில் நனைந்தவண்ணம் நின்றுகொண்டிருந்தார்கள். ஹிட்லர், ஒரு மோட்டார் வண்டியின் மீது நின்றுகொண்டு ஜனங்களுக்குக் காட்சி தந்தான். இவன் எதிரே, துருப்புக்கள் அணிவகுத்துச் சென்றன. அப்பொழுது ஹிட்லர் ‘மழைக்கோட்’ ஒன்று மேலே போட்டுக் கொண்டிருந்தான். இத்தனை ஜனங்களும் மழையிலே நனையும்போது, நமக்கு மட்டும் இந்தப் பாதுகாப்பு எதற்கு என்று சொல்லி, ‘மழைக் கோட்டை’ கழற்றி எறிந்துவிட்டான். தானும் மழையிலே நனைந்தான். சுமார் ஒருமணி நேரத்திற்குமேல் நின்ற இடத்திலேயே, ஜனங்களுக்கும் துருப்புகளுக்கும் பதில் மரியாதை செய்தான். இதனால் இவனுக்கு ஜலதோஷம் பிடித்தது. ஆனால் இது ஜனங்களை எவ்வளவு தூரம் வசீகரப்படுத்திவிட்டது?

எல்லாச் சரித்திர புருஷர்களையும் போல ஹிட்லர் சாதாரண ஒரு குடியானவனாகவே இருந்துவிட விரும்புகிறான். எளிய வாழ்க்கை நடத்துவதிலே திருப்தியடைகிறான். இதனாலேயே இவன் ஏழை மக்களிடத்திலும், விவசாயிகளிடத்திலும் அதிக விசுவாசமாயிருக்கிறான்.

அவர்களுடைய பிரீதியைச் சம்பாதிக்க வேண்டுமென்பதில் ஆவலுள்ளவனாகவும் இருக்கிறான்.

குழந்தைகளிடத்திலே இவனுக்கு எவ்வளவு பிரீதியுண்டோ அதைவிட அதிகமாக இவன் இளைஞர்களை நேசிக்கிறான். ஏனென்றால் அவர்கள், ஜர்மனியின் ‘வருங்காலத்துச் சேனாபலம்’ அல்லவா? இவன் சுற்றுப் பிரயாணம் செய்யும்போது இளைஞர்களைச் சந்தித்து அவர்கள் என்னென்ன படிக்கிறார்கள் என்பவற்றைப் பற்றிக் கேட்பான். அவர்கள் முதுகைத் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்துவான்.”

*

கொடுமைக்காரனாகச் சித்திரிக்கப்பட்டவனிடமே இத்தனை குணநலன்கள் குடிகொண்டிருந்தன என்கிறபோது; உத்தமர்கள் என்று உலகில் புகழப்படுவோரிடம் எவ்வளவு குணநலன்கள் குவிந்திருக்கக் கூடும் எனக் கணக்கிட்டுவிடக் கூடாது. அவ்வாறு புகழப்பட்டவர்கள் போலிகளாகவும், நல்லவர்களாக நடித்தவர்களாகவும் இருந்திருக்கவோ; அல்லது இருக்கவோ கூடுமல்லவா?

இந்த ஐயப்பாட்டுக்கான அடிப்படையை அமைக்கின்றன; “இட்லரின் இன்னொரு பக்கம்” பற்றிய இந்தத் தகவல்கள்!

13 - 8 - 2005

★★★

கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்