கட்டுரை 25 / 50
இங்கர்சால்
Ingersoll
அச்சுப் பக்கம் 109–110
scan 109 shows no printed numeral
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
அறிவுச் சுடராக - ஆற்றலின் ஊற்றாக விளங்கிய - பழுத்த நாத்திகர் - இங்கர்சால் அமெரிக்காவில் நியூயார்க் மாநிலத்தில் திரிஸ்டன் எனும் கிராமத்தில் 1833 ஆம் ஆண்டு ஆகஸ்டு 11ஆம் நாள் பிறந்தவர்.
இங்கர்சாலின் தந்தை; மகனைச் சிறந்த கல்வியாளராகவும், மத சிரேஷ்டராகவும் உயர்த்திடப் பெரிதும் பாடுபட்டவர். இரவுநேரத்தில் ஒரு நீளமான மெழுகுவர்த்தியைக் கொளுத்தி வைத்து விட்டு; அது முழுவதும் எரிந்து அணைந்து போகும் வரையில் அந்த வெளிச்சத்தில் மகனைப் படிக்கச் சொல்லி வற்புறுத்துவாராம். தந்தையின் கட்டளைப்படி இளைஞன் இங்கர்சால், அந்த மெழுகுவர்த்தி எரிந்து அணைந்த பிறகுகூட வெளிச்சத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தந்தை வழங்கிய அந்த மத நூல்களைப் படித்துக் கொண்டேயிருப்பது வழக்கமாம்.
அப்படிப் படித்துக் கொண்டிருந்த அந்த இளைஞன் உள்ளத்தில், மத சம்பந்தமான கருத்துக்கள் பதிவாகவில்லை; மாறாகப் புரட்சிகரமான பகுத்தறிவுக் கருத்துக்களே ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின.
ஆரம்பத்தில் மகன் இங்கர்சால் குறித்து மனவேதனை அடைந்திருந்த தந்தை; அவரது இறுதி நாட்களில் மகன் வழியே தன் மனத்திற்கும் உகந்த வழியென்று மறுமலர்ச்சி பெற்றார் என்பது வரலாறு!
படித்துக் கொண்டே அந்தப் பருவத்திலேயே பகுத்தறிவு வாதங்களின் மூலம் பலரைத் தன் பக்கம் ஈர்த்த இங்கர்சால் முதலில் ஆசிரியராகப் பணியேற்றார். அவரது முற்போக்குச் சிந்தனைகளும், அறிவுப் பிரச்சாரமும், அவருக்குச் சிலரைப் பகைவராக்கிய காரணத்தால் ஆசிரியர் பணியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டவே; அதனால் அவர் மனங்கலங்காமல் சட்டம் பயிலத் தொடங்கினார். திறமைமிக்க வழக்கறிஞராக விளங்கி, குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஓரிரு பெரிய வழக்கறிஞர்களில் ஒருவர் எனப் புகழ் பெற்றார்.
ஒரு நீக்ரோ மீது; பசுவைத் திருடினான் என்று ஒரு வழக்கு - அந்த நீக்ரோவுக்காக வாதாடுவதற்கு யாருமில்லை எனக் கேள்வியுற்று; இங்கர்சால் அவனுக்காகத் தானே வாதாடினார். வாதங்கள், எதிர்வாதங்கள் எல்லாம் முடிந்தன. தீர்ப்பு கூறப்பட்டது. நீக்ரோ விடுதலையானான். இங்கர்சால் அவனை அணைத்து ரகசியமாகக் கேட்டார்.
“இப்போதுதான் நீ விடுதலையாகி விட்டாயே; இப்போதாவது உண்மையைச் சொல் என்னிடம்! நீ பசுவைத் திருடியது உண்மைதானே?”
“ஆமாம் - நான் திருடியது உண்மைதான்! ஆனால் ஒன்று; இந்த வழக்கின் துவக்கத்தில் நான் குற்றவாளிதான். பிறகு; நீங்கள் ஆதாரங்களை அள்ளி வீசி வாதம் நடத்த - வாதம் நடந்த - நான் திருடினேனா என்று எனக்கே சந்தேகமாகிவிட்டது”
நீக்ரோ பசு திருடிய வழக்கு ஒன்றே, இங்கர்சாலின் திறமைக்குச் சான்றாகத் திகழ்கிறது அல்லவா!
நீதிமன்றத்தில் மட்டுமல்லாது - நெஞ்சு வலி நோயையும் பொருட்படுத்தாமல் சுற்றிச் சுழன்று தனது 66வது வயதில் கண்மூடும் வரையில் பகுத்தறிவுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கட்டணம் அளித்து அவரது உரை கேட்க மக்கள் அலைமோதி வருவார்கள். பேசுவதற்கும் அவர் தொகை பெறுவதில் கண்டிப்பானவர். ஆனால் கருத்துக்கள் மக்களிடம் பரவினால் போதும்; தொகை பெரிதல்ல என்று அவர் நினைத்து அவ்வாறே
நடந்து கொண்டதற்கும் அவர் பொதுவாழ்வில் தக்க சான்றுகளாக சில நிகழ்ச்சிகள் உண்டு.
உதாரணமாக கிளரிமண்ட் என்ற ஓர் ஊரைச் சேர்ந்த அறிவியக்கப் பற்று கொண்ட சில இளைஞர்கள் அவரை ஒரு கூட்டத்துக்கு அழைத்தனர். முன்னூறு டாலர்கள் கொடுப்பதாயின் வருகிறேன் என்றார். ஒப்புக்கொண்டு அவரை இளைஞர்கள் அழைத்துப் போனார்கள். ஊர் மக்கள் பலரும் அந்தக் கூட்டத்திற்கு வரப் பயந்த காரணத்தால் கட்டணமாக 28 டாலர்கள் மட்டுமே வசூலாயிற்று. இளைஞர்கள் அதை இங்கர்சாலிடம் சொல்லாமல், அவரிடம் பேசியபடியே அவருக்கு 300 டாலர்களைக் கொடுத்துவிட்டனர். இங்கர்சால் துருவித் துருவி அந்த இளைஞர்களைக் கேள்வி கேட்டு, உண்மையான வசூலைத் தெரிந்து கொண்டார். உடனே அந்த இளைஞர்களை அருகே கூப்பிட்டு; “உங்கள் அன்புக்கு நன்றி - ஆர்வத்துக்குப் பாராட்டு - நாணயமான செயலுக்கு வாழ்த்து - இதோ நீங்கள் எனக்குத் தந்த 300 டாலர்களில் 272 டாலர்களை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் - என் பேச்சுக் கேட்க வந்தவர்கள் அளித்த கட்டணத் தொகை 28 டாலர்கள் மட்டும் எனக்குப் போதும்” என்று கூறிவிட்டு விடைபெற்றுப் போனார்.
“அடேயப்பா; இவர் எவ்வளவு பெரிய மனித நேயம் கொண்டவர் - பொருளீட்டுவதற்காகப் பேசும் சொற்பொழிவாளராக இல்லாமல்; கொள்கை பரவுவதற்காகப் பாடுபடுபவர் என்பதால்தான்; அவருக்கு நாம் இந்தக் கூட்டம் நடத்த பட்ட பாடு புரிகிறது”
என்று அந்த இளைஞர்கள் இங்கர்சாலுக்குப் புகழாரம் சூட்டியிருப்பார்கள் அல்லவா?
24 - 8 - 2005
★★★
கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்