பொருளடக்கம்

26. மகளிர் இட ஒதுக்கீடு!

கட்டுரை 26 / 50

மகளிர் இட ஒதுக்கீடு!

Women's Reservation!

அச்சுப் பக்கம் 112–115

scan 112 shows no printed numeral

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

அரசியல் இயக்கங்களில் இருப்பவர்களில் ஓர் இயக்கத்திலிருப்போருக்கும் இன்னொரு இயக்கத்திலிருப்போருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் - கருத்து மோதுதல்கள் இருப்பினும்; சமுதாய சமத்துவம், சமுதாய முற்போக்கு, சமதர்மக் கொள்கை என்பனவற்றில் ஒருமித்த உடன்பாடான நிலை உருவாக வேண்டும் என்பதை அவரவர் பின்பற்றும் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டே அணுகித் தீர்வு காண வேண்டும். இதனை விருப்பு வெறுப்புக்கு இடம் தராத திறந்த மனத்தினர் ஏற்றுக் கொள்வர்.

சமுதாயப் பிரச்சினைகளை முன்னிறுத்திச் செயல்படும் அரசியல் இயக்கமான நமது இயக்கம்; எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே 1929 ஆம் ஆண்டில் செங்கற்பட்டு சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியார் முன்னிலையில் பெண்களுக்குச் சொத்தில் சம உரிமையை உறுதிப்படுத்துகிற சட்டம் கொண்டுவர வேண்டுமென்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்தத் தீர்மானத்தை 60 ஆண்டு கழித்து தமிழகச் சட்டப்பேரவையில் 1989 ஆம் ஆண்டு நான் முதலமைச்சராக இருந்தபோது சட்டமாக நிறைவேற்றி, நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளோம்.

மக்களாட்சி முறையில் ஓர் ஆட்சியில் எல்லா மக்களும் எல்லா உரிமைகளும் பெற்றவர்களாக விளங்க வேண்டும் என்பதிலும் - பல்லாண்டு காலமாக ஏற்படுத்தப்பட்ட பின்னடைவு

காரணமாகப் பள்ளத்தில் கிடப்போரையும் கை தூக்கிவிட்டு, தேவையான உரிய சலுகைகளை வழங்கி, கரைசேர்க்க வேண்டுமென்பதிலும் - மக்கள் என்றாலே ஆண் - பெண் இருபாலாரையும் குறிப்பிடும் சொல்தான் என்ற அடிப்படையில் ஆணுக்குள்ள உரிமைகளைப் பெண்ணுக்கு மறுக்கக்கூடாது என்பதிலும் சமுதாய அக்கறை கொண்டோர் ஆர்வங்காட்டியே செயல்படுவார்கள் - செயல்பட்டும் செய்கிறார்கள்.

மத்திய ஆட்சி அளவில் மகளிருக்கான உரிமைகள் பற்றி விதிமுறைகள், சட்டங்கள் வருகிறபடி வரட்டும்; மாநில அளவில் உள்ள அதிகார எல்லைக்குள் மகளிருக்கு உள்ளாட்சி மன்றங்களில், மற்றும் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு தருவோம் என அறிவித்து, அதனை அமல்படுத்தியுள்ளதும் நமது ஆட்சிப் பொறுப்பில் தமிழ்நாடு இருந்தபோதுதான் என்பது எவரும் மறுக்க இயலாத உண்மையாகும்.

மகளிர் உரிமையுடன் அவர்தம் நல்வாழ்வு போற்றும் தொடர் சாதனைகளில் ஒன்றுதான் 1989ல் நமது ஆட்சியில் தர்மபுரி மாவட்டத்தில் என்னால் தொடங்கி வைக்கப்பட்ட “மகளிர் சுய உதவிக் குழு” என்பதுமாகும்.

இன்றைக்கு இந்தியத் திருநாட்டின் மூலை முடுக்கெல்லாம் முழங்கப்படுகிற கொள்கை முரசமாக - நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிர்க்கு 33 சதவீத இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்ற ஒலியையே கேட்க முடிகிறது.

ஏன்; தனியாக மகளிர்க்கு இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வர வேண்டும்? இப்போது மகளிர் அந்தப் பொறுப்புகளுக்கு போட்டியிட முடியாதா? சட்டம் ஏதாவது தடுக்கிறதா?

சட்டம் தடுக்கவில்லை! சட்டமன்ற வேட்பாளராகவோ, நாடாளுமன்ற வேட்பாளராகவோ; தேர்தலில் ஒரு ஆண் போட்டியிடுவதைப்போல; இப்போது ஒரு பெண்ணும் போட்டியிடலாம்; அரசியல் சட்டம் அதைத் தடுக்கவில்லை. ஆனால் ஆணாதிக்கம் அவர்களைப் போட்டியிட அனுமதிக்கவில்லை. ஆணாதிக்கத்தின் இந்தச் சனாதனச்

சம்பிரதாயத்துடன் எவ்வளவு காலத்துக்குச் சண்டை போட்டுக் கொண்டிருக்க முடியும்; அதனால்தான் மகளிர்க்கு இத்தனை இடம் என்று ஒதுக்கீடு செய்து, அந்தச் சட்டப்படி அந்த இடங்களில் மகளிர் மட்டும்தான் போட்டியிட முடியும் என்று செய்துவிட்டால்; அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைக்கான அடிக்கல் நாட்டும் திருப்பணி நிறைவேறத் தொடங்கிவிடும்.

ஏற்கெனவே தலித் எனப்படும் தாழ்த்தப்பட்ட பெருங்குடி மக்களை; இந்த உரிமைகளைப் பெறக் கூடியவர்களாகக் கைதூக்கி விட இருக்கின்ற தனித் தொகுதி முறை எல்லா மட்டத்திலும் அரசியல் சட்ட ரீதியாக அமைக்கப்பட்டிருப்பதை “மாதிரி”யாகக் கொண்டு; அந்தப் பழைய நிலைக்குப் பங்கமேதும் நேராமல்; இப்போது கோரிக்கையாக வைக்கப்படுகிற மகளிர் இடஒதுக்கீட்டை ஏற்றுக் கொண்டு அதற்கான துவக்கத்தை நடத்த சமூகப் பிரக்ஞையுள்ள, உரிமைகள் வழங்கப்படுவதில் உள்ள நியாயங்களை நிலைநாட்டுவதற்கு நினைத்திடும் இயக்கங்கள் முன்வரவேண்டும்.

பொதுக்கருத்து உருவாக வேண்டும் என்று பொறுமையுடன் காத்திருப்பது பொறுப்புடையோர் செயல் எனினும்; கோரிக்கையைத் தள்ளிப் போடுவதற்காகக் 'காத்திருப்பு' என்பது ஏற்க இயலாத ஒன்றாகி விடும்.

சட்டம் நிறைவேற்றிட தேவையான வாக்குகள் கிடைக்கா விட்டால்கூட இந்த மசோதாவுக்கு ஆதரவு தராதவர்களை மகளிர் சமுதாயத்துக்கு அடையாளம் காட்டலாம் அல்லவா?

பொதுக்கருத்து பற்றி பிரெஞ்சு நாட்டுப் பேரறிஞரும் - பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து; பிரெஞ்சுப் புரட்சிக்கான எழுச்சிப் பாதையை தனது எழுத்து மூலம் வகுத்துக் கொடுத்தவர்களில் ஒருவரும், “வால்டேர்” காலத்தவருமான “ரூசோ” என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

“புதிதாக ஒன்றைச் செயல்படுத்த எடுத்துக் கொள்ளும்போது அதற்கான பொதுக் கருத்து

அறிவதற்குத் தேவையான ஒப்பந்தம் ஏற்பட்டதான் எல்லோருடைய கருத்தும் ஒரே வகையாக இருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பிறகு எல்லா நிலைகளிலும் அந்தப் பொதுக் கருத்து, எல்லோருடைய விருப்பம்போல அமைந்திட முடியாது. அவ்வாறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது, பெரும்பான்மையோர் கருத்து எதுவோ, அதைத்தான் பொதுக் கருத்து எனக் கொள்ள வேண்டும்”

ரூசோவின் இந்தக் கருத்தையும்; மகளிருக்கான இடஒதுக்கீடு சட்டம் கொண்டுவர, ஆர்வமுடையோர் சிந்தித்துச் செயல்பட முன்வரவேண்டும்.

இப்போது 500க்கு மேற்பட்ட நாடாளுமன்ற இடங்களில் குறிப்பிட்ட தொகுதிகளை இரட்டை உறுப்பினர் தொகுதிகளாக்கி; உறுப்பினர்களின் எண்ணிக்கையை கூடுதலாக்கி, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடம் ஒதுக்கலாம் என்றால்; ஆண்கள் இப்போது இருக்கும் இடங்களைப் பெண்களுடன் பகிர்ந்து கொண்டு 33 சதவீத இடங்களை இழக்கத் தயாராக இல்லை என்றுதான் ஆகிறது; எனவே மகளிர்க்கென தனி இடம் தர இடங்களை மேலும் அதிகமாக்குங்கள் என்பது மறைமுகமாக தம்மையறியாமல் அந்த மசோதாவுக்கு வைக்கப்படும் தடைக்கல்லாகி விடுகிறதல்லவா?

அங்கனமாயின் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு வேண்டாமா?

இதற்கு ஒரே பதில்; முதலில் இந்திய சுதந்திரம் - அடுத்து மொழிவழி மாநிலம் என்றுதானே வாதாடிப் போராடி வாகை சூடினோம்; என்பதுதான்!

இப்போது நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களுக்கான தொகுதிகளில் (தனித்தொகுதிகள் இருப்பவை தவிர) ஆண்களுக்கு மட்டும் என்று எந்தத் தொகுதியும் இல்லை; ஆண்களில் பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று தொகுதிகள் வகுக்கப்படவுமில்லை - இந்த நிலையில்

மகளிர்க்குக் கேட்கப்படும் இட ஒதுக்கீடு என்பது; இப்போது இருப்பதில் 33 சதவிகிதம்தான்.

எனவேதான் முதலில் மகளிர்க்கு 33 சதவிகிதம் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதையும்; பின்னர் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் என்று படிப்படியாக “உள் ஒதுக்கீடு” செய்து கொள்வதையும்; நெஞ்சார வரவேற்போம்!

முதலில் விருந்துக்கான அழைப்பையேற்று வீட்டுக்குள் செல்வோம்.

பின்னர் விருந்தில் படைக்கப்படும் பண்டங்களில் நம் உடலுக்கு ஒத்துக்கொள்ளக்கூடியது எது; ஒவ்வாதது எது என்பதைச் சொல்லி அதற்கேற்பப் பரிமாறச் செய்வோம்.

26 - 8 - 2005

★★★

குறிப்பு :- “மகளிர் இடஒதுக்கீடு” கோரிக்கை; ஒரு சமுதாயப் புரட்சியென்பதால் “சிந்தனையும் செயலும்” பகுதியில் இடம் பெறுவது முற்றிலும் பொருத்தமான ஒன்றாகும்.

மு.க.

கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்