பொருளடக்கம்

27. தியானம்???

கட்டுரை 27 / 50

தியானம்???

Meditation???

அச்சுப் பக்கம் 117–121

scan 117 shows no printed numeral

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

சுயமரியாதை இயக்கத்தின் துவக்க காலத்திலேயே சமுதாயத்தைச் சீரழிக்கும் மூட நம்பிக்கைகளைச் சுட்டிக்காட்டி அவற்றை வேரறுக்கும் விளக்கக் கட்டுரைகள் பலவற்றைத் தாங்கி வெளிவந்த ஏடுகளில் ஒன்றாக “பகுத்தறிவு” ஏடு திகழ்ந்தது. சுவாமி கைவல்யம், சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் போன்ற முற்போக்குச் சிந்தனையாளர்களின் எரிமலை எழுத்துகள், கனல் தெறிக்கும் கட்டுரைகளாக அந்த ஏட்டில் இடம்பெறும். தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுச் சிந்தனைகளைத் தாங்கிய அந்தப் “பகுத்தறிவு” இதழ் போலவே, இப்பொழுது ஆருயிர் இளவல் திரு. வீரமணி அவர்களை ஆசிரியராகக் கொண்ட “உண்மை” என்ற அறிவுக் களஞ்சியம் நம்மிடையே உலவிக் கொண்டிருக்கிறது.

பணிகள் பல இடையறாது எனக்கிருப்பினும் “உண்மை” இதழைப் படிப்பதில் எனக்குத் தனி ஆர்வம் உண்டு.

தெளிவுற்ற நீரோடை எனத் தக்க கருத்துக்களை வழங்கிக் கொண்டிருக்கும் “உண்மை” இதழில் செப்டம்பர் 1 அன்றைய தேதியிட்டு வெளிவந்த ஒரு கட்டுரையில் இடையிடையே காணப்படும் சில கருத்துக்கள் நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்துவனவாக அமைந்து விட்டதை எடுத்துக்காட்டுவது என் கடமையெனக் கொண்டு அவற்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

“சாமியார்கள் சொல்லித் தருவது தியானமா?” என்ற தலைப்பில் “உண்மை” இதழில் இடம் பெற்றுள்ள அந்தக் கட்டுரையின் தலைப்பே “தியானத்தை ஒப்புக் கொண்டது போலவும் - அதனைச் சாமியார்கள் சொல்லித் தருவதால் “மக்கள் தியானம் என்ற பெயரில் செய்து கொண்டிருக்கிற முறைகள் தவறு” என்று கூறிவிட்டு; “உண்மையிலேயே தியானத்தைச் சரியான முறையில் செய்திருந்தால் நமது நாடு கொஞ்சமாவது எல்லா வகையிலும் முன்னேறியிருக்க வேண்டும். உற்பத்தி பெருகி வருமானம் அதிகரித்திருக்க வேண்டும். பஞ்சம், பசி போயிருக்க வேண்டும்” என்று அந்தக் கட்டுரையாளர் திரு. எம். மனோகரன் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

தியானமோ - உடற்பயிற்சியோ - எதுவாயினும் ஒருவனின் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்ததே தவிர; கட்டுரையாளர் கூறுவதுபோல்; அதற்கும் நாட்டின் வருமானம் - பஞ்சம், பசி போன்ற பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படித் தொடர்புபடுத்தவும் இயலாது.

தியானத்தைச் சரியான முறையில் செய்ய வேண்டும் என்று கூறுகிற கட்டுரையாளர், “தியானம் என்று சொல்லி சாமியார்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள்” என்கிறார்.

சாமியார்கள் ஓரிருவரைத் தவிர மிகப் பலர் மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். மக்களில் சிலரும் ஏமாந்து கொண்டுதானிருக்கிறார்கள். தியானத்தின் பெயரைச் சொல்லி மட்டுமல்ல; தெய்வத்தின் பெயரைச் சொல்லியும் ஏமாற்றியும் ஏமாந்துகொண்டுந்தானிருக்கிறார்கள். எனவே; கட்டுரையாளர் “தியானம்” என்பதையே மறுக்கவில்லை என்பதற்கு அடையாளமாக அவரே தனது கட்டுரையில் ஓரிடத்தில் “சிலம்புப் பயிற்சியில் தியானம் உள்ளது” என்று குறிப்பிடுகிறார்.

“தியானம் என்றால் மனத்தை ஒருநிலைப்படுத்துவது என்பதுதான்” என்கிறார்கள். “அதற்காக ஒரு கடவுளை

நினையுங்கள் அல்லது ஒரு புள்ளியை உற்று நோக்கினால் மனம் ஒருநிலைப்படும்” என்று சாமியார்கள் சொல்கிறார்கள்.

இதுவும் அந்தக் கட்டுரையாளர் எடுத்துரைத்துள்ள கருத்துதான் - மனத்தை ஒருநிலைப்படுத்துவது என்பதைக் கட்டுரையாளர் ஏற்றுக் கொள்கிறாரா இல்லையா என்பதற்கான விடையை; இதோ அவரே அளிக்கிறார்.

“வீரக் கலைப்பயிற்சியில் - சிலம்பாட்டக் கம்புகளின் அசைவுகளின் மீது கவனம் செலுத்தினால், மனம் அதில் ஒருநிலைப்படும்”

மனத்தை எப்படி நிலைப்படுத்த முடியும் என்ற முறைகளில்தான் கட்டுரையாளர் வேறுபாடு காண்கிறாரே தவிர, மனத்தை நிலைப்படுத்துவது என்பதை அவர் மறுக்கவில்லை.

“ஒரு புள்ளியை உற்று நோக்கினால் மனம் ஒருநிலைப்படும் என்கிறார்கள். அப்படி செய்தால் சலிப்புதான் ஏற்படும், மனம் ஒருநிலைப்படாது. ஒரு புள்ளியை ஒரு நாள் அல்லது இரண்டு நாள் அல்லது சில நாட்கள் பார்த்துக் கொண்டிருக்கலாம். ஆண்டு முழுக்க முழுக்க அதையே பார்த்துக் கொண்டிருந்தால் பைத்தியம்தான் பிடிக்கும்”

என்று கட்டுரையாளர் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். தியானம் பற்றிக் கூறுகிற பயிற்சியாளர்கள் யாரும் ஆண்டு முழுவதுமோ அல்லது ஆயுள் முழுவதுமோ ஒரே புள்ளியைப் பார்த்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்திருக்க வேண்டுமென்று சொல்லவில்லை. அதனால் யாருக்கும் பைத்தியம் பிடிக்கும் என்ற பிரச்சினையே எழாது.

“மனம் நிலைப்பட உடலுக்கு அறிவுபூர்வமான வேலை கொடுக்க வேண்டும்.”
“உடலுக்கு வேலை தராமல் சம்மணம் போட்டு உட்காருங்கள் என்று கூறினால், பல எண்ணங்கள் மனதில் அலையாயுமே தவிர, கண்டிப்பாக மனம் ஒருநிலைப்படாது”

இந்தக் கருத்துகளும் கட்டுரையாளருடையதே ஆகும் - இதிலிருந்து மனத்தை ஒருநிலைப்படுத்தும் வழிமுறையில்தான் அவர் வேறுபடுகிறாரே தவிர, மனத்தை நிலைப்படுத்துதல் என்ற பயிற்சியை அவர் மறுக்கவில்லை என்பது தெளிவாகிறது.

இதுபற்றிய விளக்கத்தை “தியானப் பயிற்சி” யாளரும் “யோகா” ஆசிரியருமான ஒரு நிபுணரிடம் நான் கேட்டபோது அந்த நிபுணர் (நிச்சயம் சாமியாரல்ல) விளக்கியது வருமாறு :-

“மனம் ஒருநிலைப்படச் செய்யும் தியானப் பயிற்சிகள் பல வகைப்படும். இது ஒவ்வொருவரின் வயது, உடல் நிலை, மனநிலை, குறிக்கோள், நம்பிக்கையைப் பொறுத்து மாற்றி அமைக்கப்படுவதுண்டு. எந்த வகை பயிற்சியை செய்தாலும் இறுதியில் மனம் அமைதி அடைந்து ஒருநிலையில் நிற்கும்”

தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் அவர்கள் எனக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னால் வலியுறுத்தி வழங்கிய யோசனையை ஏற்று அது முதல் யோகா பயிற்சியும், மனத்தை ஒருநிலைப்படுத்தும் தியானப் பயிற்சியும் செய்து வருகிறேன். இடையிடையே சில ஆண்டுகள் அப்பயிற்சியில் தொய்வு ஏற்பட்டிருக்கலாம்; எனினும் அனுபவ ரீதியாக பயன் தெரியத்தான் செய்கிறது இப்போதும்!

நடைப் பயிற்சியும் நீண்ட காலமாக உண்டு எனக்கு. ஆனால் “உண்மை” இதழின் கட்டுரையாளர், நடைப்பயிற்சியைப் பற்றி என்ன கூறுகிறார்?

“நடைப்பயிற்சி என்பது உடற்பயிற்சியே அல்ல. அது அன்றாடம் ஒவ்வொருநாளும் செய்ய வேண்டிய வேலை. இதனை உடற்பயிற்சி என்பது அறியாமை”

கட்டுரையாளரின் இந்தக் கூற்றுக்கு செவிசாய்த்து நடைப் பயிற்சியை ஒதுக்கி விடக் கூடாது. உடலில் எடை கூடினால் இதயக் கோளாறு - இரத்த அழுத்தம் வரக்கூடும். அதற்கு நடைப் பயிற்சியை மேற்கொண்டு உடல் கனத்தைக் குறைக்கச் சொல்லி பிரபல டாக்டர்கள் எல்லாம் அறிவுரை கூறிக்

கொண்டிருக்கிறார்கள். அதனால் நடைப்பயிற்சியை ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் காற்றோட்டமான பெருவெளியில் மேற்கொள்ள வேண்டும்.

“கராத்தே, குங்ஃபூ, குத்துவரிசை, சிலம்பம் ஆகிய எல்லா விளையாட்டுக்களுமே வீரக்கலைதான்” என்று கூறிடும் கட்டுரையாளர், “யோகா” என்பது அ.ஆ. படிப்பு மாதிரிதான். அது மனிதனுக்குப் போதாது என்றுரைக்கிறார். கட்டுரையாளரின் இந்தக் கருத்துக்கு நான் மாறுபட்டவனல்லன். அவர் கருத்து ஏற்கக் கூடியதே என்பது போலவே நானும் யோகா, தியானம் போன்றவை அனைவருக்கும் பயன்படக் கூடியவை என்று கருதமாட்டேனா?

வயது, சூழ்நிலை, உடல்நிலை ஆகியவற்றையும் கணக்கிட்டுக் கொண்டுதான் வீரக்கலை பயில வேண்டும் - “யோகா என்பது வீரக் கலையின் அடித்தளம்” என்று திட்டவட்டமாகக் குறிப்பிடுகிற கட்டுரை ஆசிரியர், “அதை கற்றுக் கொள்வதால் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியமே இல்லை” என்று வீரக் கலைப் பயிற்சியை சிலாகித்துப் பேசுவதை தடையின்றி ஏற்றுக் கொள்ளலாம். அதைப் போலவே தியானம், யோகா போன்றவைகளும் உடல்நலத்துக்கு சிறந்த பயிற்சிகள் என்பதை ஒப்புக்கொள்கிறோம். தியானம், யோகாக்களில் இருப்பது போலவே வீரக்கலையிலும் மூச்சுப் பயிற்சி இருக்கிறது என்பதை கட்டுரையாளர் ஒத்துக் கொண்டுள்ளார். மூச்சுப் பயிற்சி சுவாசப்பைகளை விரிவடையச் செய்து தூய்மையாக்கவும் பயன்படுகிறது.

“வீரக்கலை பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் 100 வயது வரை ஆரோக்கியமாக வாழலாம்” என்று கட்டுரையாளர் கூறுகிறார்.

தியானப் பயிற்சி செய்தாலும் அவர்கள் தீர்க்காயுசாக வாழ்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

வீரக்கலையில் வல்லவரான “காமா” என்ற பிரபல பயில்வான் - பார்ப்பதற்கு மலை போல இருப்பார் - அவருக்கு

எலும்புருக்கி நோய் பாதித்து உடல் துரும்பாக இளைத்து மடிந்தார் என்பதும்; தியானக் கலை பயிற்சி பெற்ற இரமண முனிவர் கொடிய ‘பிளவை’ நோயால் மரணமடைந்தார் என்பதும் விதிவிலக்குகளாக இருந்தாலும்; மூச்சுப் பயிற்சியை அடிப்படையாகக் கொண்ட தியானப் பயிற்சியும்; யோகாவை அடிப்படையாகக் கொண்ட வீரக்கலைப் பயிற்சியும் - இரண்டுமே ஒருவரின் வயது, உடல்நிலை, மனநிலை, குறிக்கோள், நம்பிக்கையைப் பொறுத்து - அவருக்குப் பயன்தரக் கூடியதே ஆகும்.

வயது, உடல்நிலை, மனநிலை, குறிக்கோள், நம்பிக்கை இவற்றின் அடிப்படையில் அவரவர் சக்திக்கேற்ப இரண்டில் ஒரு பயிற்சியைத் தேர்வு செய்து கொள்ளலாம். எது உயர்ந்தது என்ற மோதுதல் தேவையில்லை. வயது மற்ற நிலைமைகளைப் பொறுத்து அந்தப் பயிற்சியைத் தேர்வு செய்து கொள்ளலாம். பயிற்சி அளிப்பவர் சாமியாராகக்கூட இருக்கலாம். ஆனால் போலிச்சாமியாராக இருக்கக் கூடாது. இவற்றைத் தவிர கட்டுரையாளரின் மற்ற கருத்துக்கள் ஏற்கக் கூடியவைகளேயாகும்.

3 - 9 - 2005

★★★

கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்