கட்டுரை 28 / 50
விபத்து
Accident
அச்சுப் பக்கம் 123–124
scan 123 shows no printed numeral
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
விபத்துகள் நாள்தோறும் நடைபெறுகின்றன. இதனை அரசியலாக்க விரும்பவில்லை. விரும்பவும் கூடாது. எனினும் அறவே தவிர்க்க முடியாவிட்டாலும், ஓரளவு விபத்துக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காவது அரசுத் துறைகளும், அதிகாரிகளும் அக்கறை எடுத்துக் கொள்ளலாம்.
பெரும்பாலான விபத்துகள்; பயணங்களில்தான் ஏற்படுகின்றன. அவற்றுக்குக் காரணங்களாக அமைபவை; பயணம் செய்யும் வாகனங்களை இயக்கிடும் நபர்களின் முன் எச்சரிக்கை இல்லாமையும், தேவையற்ற அவசரமும் என்பதைத் தெளிவாகவே அறிய முடிகிறது.
கட்சிகளின் மாநாடுகள், விழாக்கள் கூட்டங்களுக்குச் செல்லவோரும் - கடவுளரை வணங்கிடவும், பிரார்த்தனைகளை நிறைவேற்றவும் கோயில் குளங்கள் திருவிழாக்களுக்குப் போவோரும் அல்லது மணவிழாவுக்கெனப் பயணம் செய்யும் மணமக்கள் - அவர்களுடன் குதித்து விளையாடிக்கொண்டு குதூகலமாகச் சென்றிடும் குழந்தைகளும்; ஒரேநொடியில்; ஆமாம், ஒரேஒரு நொடியில் விபத்துக்கு ஆளாகிப் பிணங்களாக அடுக்கி வைக்கப்படுகிற காட்சிகளைப் படமெடுத்துக் காட்டுகிற பத்திரிகைகளை - தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை காணும்போது நம்மையறியாமல் கண்களை மூடிக் கொள்கிறோம். கலங்குகிறோம்.
“என்னதான் எச்சரிக்கையுடன் சென்று என்ன பயன் ? விதி அப்படியிருக்கும்போது அதை மாற்ற முடியுமா?” இதுபோன்ற பழகிப்போன பழைய காலத்து சமாதானங்கள்
சனாதன முலாம் பூசிக் கொண்டு ஒவ்வொரு விபத்தின் பின்னணியிலும் ஒளித்திடத் தவறுவதில்லைத்தான்!
விழிப்புடன் இருந்து, விழிப்புடன் செயல்பட்டு, விபத்துக்களைத் தவிர்ப்பதற்கு வழிகள் இருக்கும்போது அவற்றை அலட்சியப்படுத்தியோ, புறக்கணித்தோ, நம்மை நாமே பாதிப்புக்கு உள்ளாக்கிக் கொள்வது எந்த வகையில் அறிவுடைமையாக இருக்க முடியும்?
பெரும் பகுதி விபத்துகள் இரவு நேரங்களில் - லாரிகளில் நெருக்கியடித்து உட்கார்ந்து கொண்டு செல்லும் ஏழை எளிய விவசாயிகள், பாட்டாளி மக்கள் பாதிக்கப்படுகிற அளவுக்கு நடைபெறுகின்றன.
பேருந்துகளில் பயணிக்கும் நடுத்தர மக்கள், அந்த வாகனங்களை ஓட்டிச் செல்லும் ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்திற்கு பலியாகிறார்கள்.
நாளைந்து பேர் அமர்ந்து செல்லும் கார்கள்கூட கவிழ்ந்தோ அல்லது மோதி நொறுங்கியோ அவர்களின் ஆவியைப் போக்கிவிடுகின்றன. இதை நான் எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில்கூட நாளேட்டிலும், தொலைக்காட்சியிலும் சொல்லப்படுகிற செய்தி; கோவை தொழிலதிபர் அருள்ராஜ் குடும்பத்தினர் இளம் வயதினர் இரண்டு குழந்தைகளுடன் முறையே 4 வயது, 8 மாதம், அந்தக் குடும்பமே வேளாங்கண்ணி கோவிலுக்குச் சென்று திரும்பும்போது திருச்சிக்கு அருகில் நின்று கொண்டிருந்த லாரி மீது இரவு சுமார் ஒரு மணியளவில் பயங்கரமாக மோதி 4 வயது பையனைத் தவிர காரில் இருந்தோர்க்கு அதுவே கடைசிப் பயணமாகிவிட்டது என்பதாகும்.
விபத்து; இரவு ஒரு மணிக்கு நடைபெறுகிறது - வெளியூருக்கு காரில் பயணப்படுகிற யாராயிருந்தாலும் என்னிடம் விடைபெற்றுக்கொள்ள வருகிறவர்களிடம் “தயவுசெய்து” விடிந்த பிறகு புறப்படுங்கள் என்றுதான் கனிவுடனும் சொல்லுவேன், கண்டிப்பாகவும் சொல்லுவேன்.
உணவருந்திவிட்டு ஓட்டுநர் பணியில் ஈடுபடுவதும்; உற்சாகபானம் அருந்திவிட்டு உல்லாசமாகக் கார் ஓட்ட முனைவதும் காரை ஓட்டுகிறவர்கள் என்னதான் எச்சரிக்கையாகச் சென்றாலும், எதிரே வருகிற பேருந்துகளும், லாரிகளும் தங்களை யானைகளாகவும், எதிர்வரும் கார்களைப் பூனைகளாகவும் கருதிக் கொண்டு எந்தப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நெறிகளையும் பற்றிக் கவலைப்படாமல் வரக்கூடும் என்பதையும் மறந்துவிடக் கூடாது.
தொலைவுப் பயணங்கள் பகலில் என்றாலும்கூட மாற்று ஓட்டுநர் ஒருவர் உள்ளிட்ட இரண்டு ஓட்டுநர்கள் இருக்க வேண்டும்.
வெளிநாடுகளில் போக்குவரத்துப் போலீசார் சாலையோரங்களில் மிகுந்த கண்காணிப்புடன் இருப்பர். போதுமான அளவுக்கு இருப்பர். எங்கோ சாலையில் ஒரு விபத்து என்றால் அடுத்து சில விநாடிகளில் விபத்து நடந்த இடத்துக்கு “ஆம்புலன்ஸ்” வந்து நிற்கும்.
அங்கு வாகனங்களை வேகமாக ஓட்டி விபத்துக்களைத் தவிர்க்கும் முறை - இங்கு வாகனங்கள் மெல்லச் சென்றால்தான் விபத்துக்களைத் தவிர்க்கக் கூடிய நிலை.
இப்போதுதான் மெல்ல மெல்ல நாலு வழிச் சாலைகள், ஆறு வழிச் சாலைகள் அமையத் தொடங்குகின்றன.
அவற்றை அரசுத் துறை கவனிக்கும் - அதற்கிடையே விபத்துக்களில் இருந்து நம்மை மீட்டுக்கொள்ள நாம்தான் விழிப்போடிருக்க வேண்டும்.
விவேகத்துடன் செயல்படுவது விபத்தைத் தவிர்க்க இருக்கின்ற வழிகளில் மிக முக்கியமான வழி.
6 - 9 - 2005
★★★
கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்