கட்டுரை 29 / 50
சின்னத்திரை “செல்வி”
The Small-Screen “Selvi”
அச்சுப் பக்கம் 126–128
scan 126 shows no printed numeral
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(1) “தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்”
(2) “சிறைகாக்கும் காப்புவென் செய்யும் ? மகளிர் நிறைகாக்குங் காப்பே தலை”
(3) “தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை”
(4) “பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு”
“வாழ்க்கைத் துணை நலம்” எனும் அதிகாரத்தில் அய்யன் வள்ளுவர் வழங்கிடும் மேற்கண்ட நான்கு குறட்பாக்களுக்கும் முறையே பின்வருமாறு உரை எழுதியவன் என்ற நிலையில் இன்றைய “சிந்தனையும் செயலும்” சித்திரத்தைத் தீட்டுகிறேன்.
முதலில் நான்கு குறட்பாக்களுக்கான உரையைக் காண்போம்.
(1) கற்பு நெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்.
(2) தம்மைத் தாமே காத்துக் கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.
(3) கணவன் வாக்கினை கடவுள் வாக்கு எனக் கருதி, அவனையே தொழுதிடும் மனைவி; பெய் என்று ஆணையிட்டவுடன் பெய்யும் மழையைப்போல தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்.
(4) நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ்சிறப்பாக அமையும்.
பெருமான் வள்ளுவர்; பெண்களை அடிமைகளாகக் குறள் வாயிலாக வடித்துள்ளார் என்ற ஒரு குற்றச்சாட்டுக்கு; விளக்கம் தரும் விடையாகத்தான் இந்த உரை எழுதப்பட்டு, “திருக்குறள் கலைஞர் உரை” நூல் தமிழ்ப் பேரறிஞர் அ.சா. ஞானசம்பந்தனார் முன்னிலையில் விழா எடுத்து அவரது பாராட்டுரையுடன் வெளியிடப்பட்டது.
எனவே ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே காதல் கசிந்துருகலாம் - நட்பு மலரலாம் - இல்லற மணம் கமழலாம் - ஆனால் அங்கே “ஆணுக்குப் பெண் அடிமை” என்ற ஆணாதிக்க முனைப்புக்கு இடமில்லை - இடமிருக்கக் கூடாது என எண்ணுகிறவன் என்ற காரணத்தால் - அவ்வாறு எண்ணிடும் இயக்கத்தில் இளமைப் பருவம் முதல் என்னை ஒப்படைத்துக் கொண்டவன் என்ற நிலையில் இதனை எழுதும் தகுதி படைத்தவனாகிறேன்.
எனக்கிருக்கும் கவலையும் ஐயப்பாடும் மகளிர் சிந்தித்துப் பார்ப்பதற்காக வெளியிட்டுத் தீர வேண்டியவையாகும். ஆணாதிக்கத்தை அறவே வெறுத்துப் பேசும், எழுதும் பெண்கள்; அவர்தம் கணவர்க்கு அடங்கிப் போகும் ஆமைகளாக ஆகிவிடுகிறார்களே - ஏன் ? எப்படி ? எதற்காக ?
சின்னத்திரைக் காட்சியொன்று; கலையரசி ராதிகாவின் “செல்வி” என்ற குடும்பச் சித்திரம் - அதில், தன்னையே அழிக்க முனைந்த ஒருத்தியை மன்னித்து, தண்டனையிலிருந்து விடுவிக்க முனையும் “செல்வி”யை அவளது கணவன் கண்டித்துத் தடுக்கிறான். கணவன் மனைவிக்கிடையே
கடமையின் சூடு உயர்ந்து; கணவன் மனைவியைப் பார்த்து தங்கள் குடும்ப உறவே முறிந்து விடும் என்பதைப்போல அச்சுறுத்தும்போது; அதிர்ச்சியுற்ற செல்வி; நின்று, நிதானித்து, வார்த்தைகளை அளந்தெடுத்து, “என் மனச்சாட்சிப்படி நான் இரக்கம் காட்டி நடந்து கொள்வதை யாரும் தடுக்க முடியாது” எனும் கருத்தமைந்த பதிலைத் தரும்போது, ஆணாதிக்கம் அவசரப்பட்டு அள்ளித் தெளித்துவிட்ட அனல் சொற்களை; அறவழி நாடும் ஒரு பெண்மணி எப்படி அறைகூவல் விடுத்து நனைத்து விடுகிறாள் என்பதை நினைத்து வியந்து போனேன்.
நாடகத்தில், காவியத்தில், திரை ஓவியத்தில் மட்டுமின்றி நாட்டிலும், வீட்டிலும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஆண் பெண் தூயஉறவில் இருபாலாரின் உரிமை நிலைநாட்டப்படல் வேண்டும்.
விசித்திரம் என்னவென்றால், மகளிர் உரிமைகள் தேவைக்கேற்ப வாய்ப்பதற்கு இயலாமல் மகளிரே தடையாக இருப்பதுதான் - மகளிரே தயக்கம் காட்டுவதுதான்!
உடலமைப்பு ஒன்றைத் தவிர, ஆணும் பெண்ணும் சமம்தான் என்ற உண்மையை மறத்திடத்தக்க வலுவான வாதம்தான் என்ன இருக்கிறது ?
மிருக சாதியில் ஆண் சிங்கம் சோம்பேறி - இரை தேடக் கூட எழாது - பிடரி மயிர்ப் பெருமையோடு சரி!
பெண் சிங்கம்தான், வேட்டையாடி விலங்குகளை உணவாக்கிடக் கூடிய வலிவுமிக்கது! பிடரிமயிர் இல்லாதது!
பறவை இனத்தில் ஆண் மயிலுக்குத்தான் அழகான தோகையுண்டு.
பெண் மயில் தோகையில்லாதது; தோற்றத்தில் அழகும் இல்லாதது!
ஒரு வேடிக்கை; நாம் ஒரு பெண்ணை பெண் மயில் என்று வர்ணிக்கின்றோம் - அதேபோல் ஒருவனை “ஆண் சிங்கமே!”
என வாழ்த்தி வரவேற்கின்றோம்! இரண்டு ஒப்புமையிலும் எத்துணை முரண்பாடு!
அங்கு அமைப்பு வேற்றுமை எனினும்
உரிமை சமமே மிருக சாதியில்! பறவை சாதியில்!
ஆனால்
மனித சாதியில், உறுப்பு வேறுபாடும் உண்டு
சம உரிமை இல்லாத சங்கடமும் உண்டு!
அதனால்தான்
மகளிர்; தமது உரிமைக்காக உரத்த குரல் எழுப்புகிறார்கள் -
அவர்கள் மட்டுமல்ல; அவர்களுக்காக அண்ணா வழிவந்தவர்களான நாமும் அவையத்தில் குரல் எழுப்புகிறோம்!
*
விலங்குகள் பறவைகள் நம்மைவிட மேல் என்று ஆகலாமா ?
வீணாக மகளிர் மனம் வெந்து நோகலாமா ?
7 - 9 - 2005
★★★
கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்