கட்டுரை 20 / 50
தேனில் குழைத்துக் கொடுத்தாலும்...!
Even If Mixed with Honey...!
அச்சுப் பக்கம் 90–92
scan 90 shows no printed numeral
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
உலக நாடுகளில் ஒரு நாட்டின் பெருமையை அந்த நாட்டின் பழமையும் பண்பாடும் பறைசாற்றிக் கொண்டிருப்பதுண்டு. ஓவியர்கள், சிற்பிகள், கவிஞர்கள் ஒரு நாட்டின் புகழுக்குக் காரணமாயிருப்பதுண்டு. இலக்கியங்களால் கீர்த்தி பெற்ற நாடுகள் உண்டு. வரலாறுகள் ஒரு நாட்டின் சிறப்புக்குக் கட்டியம் கூறிக் கொண்டிருக்கின்றன.
நட்பு நாடுகளாகப் பலவற்றைப் பெற்றுள்ள பெரிய நாடுகளும் உண்டு.
படை பலத்தால் பல நாடுகளைத் தன் பக்கமாக்கிக் கொண்டுள்ள வலிமை வாய்ந்த நாடுகள் -
வாணிபத்தால் பல நாடுகளை வளைத்துப் போட்டுக் கொண்டு முதல் வரிசை நாடுகளில் ஒன்றாகத் திகழ்கின்ற முதலையனைய நாடுகள் -
பொருளாதாரத் துறையில் வலிமை பெற்ற நாடுகள்-
விஞ்ஞான முன்னேற்றத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் வெற்றி பெற்ற நாடுகள் -
அந்த வெற்றி நோக்கி விரைந்து போய்க் கொண்டிருக்கிற நாடுகள் -
என இப்படிப் பல்வேறு நிலைகளில் செல்வாக்குடன் விளங்கும் எந்தவொரு நாட்டைப் பற்றியும் நூல் நிலையங்களில் அடுக்கப்பட்டுள்ள புத்தகங்களை எடுத்துப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். இன்றைய கணினி யுகத்தில் “இண்டர்நெட்” வாயிலாக எளிதாக அறிந்து கொள்ளவும் முடிகிறது.
இப்படி நல்லவைகளாலும் அல்லது அல்லவைகளாலும் முறையே; சரியாகவோ தவறாகவோ பாதிக்கப்படும் நாடுகளின் எண்ணிக்கை, தற்காலம் கூடி வருவதை ஆழ்ந்த கவலையுடன் உலகம் நோக்கிய வண்ணமிருக்கிறது.
நான் நாடு என்று குறிப்பிடுவதையோ, உலகம் என்று குறிப்பிடுவதையோ; யாரும் பூகோள ரீதியாக நிலப்பரப்பு என்று மட்டும் எடுத்துக் கொள்ளாமல் மக்கள் வாழும் பகுதிகளாக - இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமேயானால்; மக்கள் திரளைக் குறிப்பிடுவதாகவே கருதிக் கொள்ள வேண்டும்.
இட்லருடைய செயல்களும், முசோலினியின் சேட்டைகளும், ஜார் மன்னன், ரஸ்புடின் போன்றோரின் அடாவடிகளும், ஓராபி மன்னர்கள் நடத்திய கொடுமைகளும் இன்னமும் அந்த நாடுகளில் ஏற்பட்ட சீழ்பிடித்த புண்களின் வடுக்களாகவே இருக்கின்றன. அந்த வடுக்களைச் சுற்றித்தான் வரலாறுகள்; வருங்கால சந்ததியினருக்குப் புத்தி புகட்டிடும்வண்ணம் உருவாகியிருக்கின்றன.
நான் குறிப்பிட்டுள்ள இந்தக் கொடுங்கோலர்களைப் போலப் படைகளைத் திரட்டிக் கொள்ளாமல், விண்ணிலும் மண்ணிலும் சேனைகளை அணிவகுத்துக் காட்டாமல்; திடீர் திடீர் எனத் திகைப்பூட்டும் அளவுக்கு; முதலில் ஓரிரு நாடுகள் என ஆரம்பித்து, இப்போது வேகவேகமாக வெகு நாடுகளில் அந்த வெங்கொடுமை, கால் பதிக்கத் தொடங்கியுள்ளது.
அதற்குப் பெயர்தான் “பயங்கரவாதம்;” அதனை “தீவிரவாதம்” என்று நளினமாகச் சொல்வோரும் உண்டு. இரண்டுமே ஏற்படுத்துவது ஒரே விளைவுதான்.
பாம்பைப் பிடித்துக் கொள்ள, அது பதுங்கியிருக்கும் நந்தவனத்துப் புற்றுகள் நாலைந்தில்; குறிப்பாக எதுவெனத் தெரியாமல் எல்லாப் புற்றுக்களையும் அழித்திட நந்தவனத்தையே மொத்தமாக நாசமாக்குதல் போல; நடத்தப்படும் தீய திருவிளையாடல்தான் தீவிரவாதத் தாக்குதல் - எதிர்காலத்தில் எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு தீவிரவாதமானாலும், பயங்கரவாதமானாலும் அறவே ஒழிக்கப்பட்டுவிடக்கூடும்.
அப்போது இதை எழுதியோனும், திக்கெட்டும் தீவிரவாதச் செயல்பற்றிய செய்திகள் கேட்டு இன்று திகைத்துக் கிடப்போரும் அந்த அமைதியான நல்ல நாட்களில் வாழ்வோமோ இல்லையோ; நலனும் அமைதியும் வாய்த்திடவும் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடவுமான அந்த நாட்களுக்கு அடித்தளம் அமைக்கும் பணிக்கு இந்தக் கற்களும் பயன்பட்டும் என்பதே என் பேரவா!
மூல காரணம் என்ன; தீவிரவாதத்திற்கு ?
முக்கியமாக மதப் பூசல்களேதான்!
எல்லைப் பிரச்சினைகளேதான் !
அந்தப் பூசலே ரயிலைக் கொளுத்துகிறது; ஏன்; ஊரையே கொளுத்தி மகிழ்கிறது! உயர்ந்த மணிமாடங்கள் தீவிரவாதிகளின் தீப்பந்தங்களில் சாம்பலாகிச் சுருள்கின்றன; சுக்கு நூறாகின்றன!
குடும்பம், குடும்பமாகத் தீவிரவாதிகளின் தாக்குதலால் மரணக் குழிக்குப் போகிறார்களே! குழந்தைகள் என்ன; இஸ்லாமியர் வீட்டுப் பிள்ளை ஓர் இந்துவை இழித்துரைத்ததா? ஓர் இந்து வீட்டுக் குழந்தைதான் இஸ்லாமியர் வீட்டு மழலையைக் கேவலப்படுத்தியதா? பின் எதற்காக ? தீவிரவாதிகள் நடத்தும் தாக்குதலில் பாவம்; அந்தக் குழந்தைகளை; பச்சைக் கிளிகளின் கழுத்தை முறித்துப் போடுவது போல் போட்டுவிடுகிறார்கள் ?
பாவமோரிடம் பழியோரிடம் என்பதற்கு இந்தப் பயங்கரவாதிகள் நடத்தும் வெடிகுண்டுச் சம்பவங்கள், பிரதான எடுத்துக்காட்டுகள் அல்லவா ?
நாடி தளர்ந்து நரம்புகள் தேய்ந்து தசையும் தோலும் வற்றியும் சுருங்கியும் முனகிக் கொண்டு கிடக்கும் முதியோர் என்ன; முரட்டு ஆயுதங்கள் தூக்கி வந்தனரா; பயங்கரவாதிகள் பயந்து நடுங்க ?
பிறகேன்; தீவிரவாதம் என்ற பெயரால் சகட்டு மேனிக்கு சகலமானவர்களும்; தீவிரவாதிகளின் பயங்கர சதிச் செயல்களுக்குப் பலியாக வேண்டும் ?
இதனால் மதப்பூசலைத் தீர்த்து விட முடியுமா ? குண்டுகளுக்குப் பதிலாக இரு சாராரும் பூச்செண்டுகளை கைமாற்றி வழங்கிக் கொண்டு; வாய்மையுடன் வாதிட்டு; இந்து என்ன; இஸ்லாமியர் என்ன; கிறித்துவமென்ன; பெளத்தமென்ன; சமணமென்ன ? எம்மதமும் சம்மதமே என்ற நிலை பிறக்கவும் - எல்லைத் தகராறுகள்; உன் நாடு, என் நாடு என்ற உரிமைப் போரில் உடன்பாடு கண்டிடவும் - ஓர் அரிய நிலை உருவாகும் வரையில் அதற்கான ஆயத்தங்களைத் தீவிரவாதத்தினால்தான் செய்திட வேண்டும் என நம்புவதும் அதற்கேற்ப நடைமுறை வகுப்பதும்; நுனிக் கிளையில் அமர்ந்து அடிக் கிளையை வெட்டுவதற்குத்தானே சமமாக முடியும்.
எந்தக் குறிக்கோளை அடையவும் - அது குவிந்து கிடக்கும் பொருள் வளமாயினும், நிலவளமாயினும், அதிகாரமாயினும், மதச்சார்பின்மையாயினும் ஒவ்வொன்றையும் அல்லது அனைத்தையுமே அதிரடித் தீவிரச் செயல்களால்தான் வென்றெடுக்க முடியும் என்ற வேண்டாத நினைப்பை விட்டொழிப்பதுதான் மனித சமுதாயத்திற்கு; சற்றுத் தாமதமாயினும் - நன்மை பயக்கக் கூடிய சாத்வீக மார்க்க நன்னெறியாகும்.
“இல்லை; இல்லை! மூட்டைப் பூச்சியை விரட்ட, வீட்டைத்தான் கொளுத்துவேன்” என்பது விதண்டாவாதமாகும். அதன்படிச் செயல்படுவதும்; விபரீதச் செயல் மட்டுமல்ல; விபரம் புரியாதோர் நடத்தும் வேதனைச் செயலுமாகும்! எனவே தீவிரவாதத் தீப்பந்தத்தைக் கீழே போட்டுவிட்டு; மூட்டைப் பூச்சியை விரட்டி வீட்டைக் காத்திட; தக்க மருந்து அடிப்போம்; தவறாமல் அகந்தூய்மை, புறந்தூய்மையைக் கடைப்பிடிப்போம்! தேனில் குழைத்துக் கொடுத்தாலும் ‘தீவிரவாதம்’ என்பது மருந்தாகி விடாது. தீராத விஷமேயாகும்.
5 - 8 - 2005
★★★
கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்